7. நிலக்கரி- மண்ணெண்ணெய்-கேஸ்

ஒரு கல்லூரி. ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள். போனேன். அது தென் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சிறு நகரம் அல்லது டவுன்.

ஒரு கல்லூரி. ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள். போனேன். அது தென் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சிறு நகரம் அல்லது டவுன்.

தாளாளர், பிரின்சிபல் மற்றும் செயலாளர் எல்லாம் பேசிய பிறகு நான் இறுதியாகப் பேசவேண்டும். கல்லூரிப் படிப்பு  முடித்து வெளியில் செல்லவிருக்கும் மாணவ மாணவியருக்கு   பயன்படும்விதமாகப் அறிவுரை போலில்லாமல் தகவல் சொல்லவேண்டும். அதன்பிறகு மாணவமாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடக்கும். இதுதான் நிகழ்ச்சி நிரல்.

பெரிய மேடை.. ஆனால், அதில் நடக்க இடம் தேட வேண்டும் என்று எண்ணும் அளவு, மேடை முழுக்க மூன்று வரிசைகளில்  நாற்காலிகள். மொத்தம் இருபதிற்கும் மேலிருக்கும். உள்ளூர் பிரமுகர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள், வங்கியாளர், தாளாளரின் மாமன், நிறுவனத்தின் வழக்குறைஞர்  என்பதுபோல மேடை எங்கும் கல்லூரி தாளாளருக்கும் நிர்வாகத்திற்கும் ஏதோ ஒருவிதத்தில் வேண்டியவர்கள்.

வரவேற்புரை ஆற்றத் தொடங்கிய தாளாளர் மேடையில் இருந்த அனைவர் பற்றியும் அறிமுகம் செய்தார், அனைவருக்கும் பொன்னாடை போர்த்தினார். நினைவுப்பரிசுகள் வழங்கினார். போட்டொகிராபர் ‘சரி நகரலாம்’ என்று இடது கையைத் தூக்கி சைகை காட்டும் வரை ஒவ்வொருவருடனும் நின்று நிதானமாகப் போட்டோ எடுத்துக்கொண்டார். . அனைவரையும் ஓரிரு வார்த்தைகள் பேசவும் சொன்னார். அவர்களும் பேசினார்கள். சிலர் மிக அதிக நேரம் எடுத்துக்கொண்டு பேசினார்கள். காலையில் இருந்து அருகிலேயே நின்று கண்காணித்துக் கொண்டிருந்த ஆசிரியர்களின் மேற்பார்வையையும் மீறி  மாணவர்கள்  சிறுசிறு பேச்சுகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.

என்னைப் பேச அழைத்தபோது மதியம் மணி ஒன்றுக்கு மேல். பார்வையாளர் கூட்டம் அசந்தும் கலைந்தும் போயிருந்தது. பசியும் இருக்கும் என்று உணர்ந்தேன். சுருக்கமாக பேசி சீக்கிரமே முடித்தேன். பலமான கைதட்டல். இன்னும் அதிக நேரம் பேசியிருக்கலாமே என்றார் தாளாளர்.

இப்படிப்பட்ட கூட்டங்கள் ஒரு வகை என்றால், கோவையில், கிருஷ்ணா ஸ்வீட்சும் நமது நம்பிக்கை இதழும் இணைந்து நடத்தும், 'வல்லமை தாராயோ’ என்ற தலைப்பில் நடத்தப்படும்  கூட்டங்கள் முற்றிலும் நேர்மாறானவை. அது எப்படி நடக்கும் தெரியுமா? சில முறை பேசியிருக்கிறேன்.

மேடையில் ஒரே ஒரு நாற்காலிதான் போடப்பட்டிருக்கும். அது  அன்றையக் கூட்டத்தின் பேச்சாளருக்கு. அவரை அறிமுகம் செய்பவர் ஒருவர். அவர் மேடைக்கு கீழே பக்கவாட்டில் மேசை போட்டு அமர்ந்திருப்பார். வேறு எவருமே பேசமாட்டார்கள். கூட்டம் சரியாக ஆறுமணிக்குத் தொடங்கும். சரியாக எட்டு மணிக்கு முடிந்துவிடும். ஒவ்வொரு கூட்டமும் இப்படித்தான். பல ஆண்டுகளாக நடக்கிறது.

'மேடை போட்டு விட்டோமே, தெரிந்தவர்கள் வந்திருக்கிறார்களே ஒருவரை அழைத்து மற்றொருவரை விட்டுவிட்டால் தவறாக நினைத்துக்கொள்வார்களே!’ இப்படியெல்லாம் நினைப்பதில்லை. இது வேறுவகை. 

இரண்டும் வெவ்வேறு வகையான கூட்டங்கள் என்றாலும், இரண்டு வகைக் கூட்டங்களும் வெவ்வேறு விதங்களில் நடப்பதை நீங்களும் கவனித்திருக்கலாம்.

கல்லூரியில் நடந்த கூட்டம் , 'கூட்டம் நடத்துவது’ என்கிற விஷயத்தில் 'அ’ என்ற ஆரம்பநிலை. இன்னும் சில ஆண்டுகள் கழித்து அங்கே சென்றால், கூட்டத்தில் இவ்வளவு குழப்பம் இருக்காது. இருக்கக்கூடாது. அவர்கள் ‘வளர்ந்திருப்பார்கள்’. வளர்ந்திருக்க வேண்டும். அப்படி நடக்கிற கல்லூரி ஆண்டு விழாக்களும் உண்டு.

கோவையில் நடக்கும் வல்லமை தாராயோ கூட்டம், 'கூட்டம் நடத்தும் வேலையில் ‘இ’ என்ற உயர்ந்த நிலை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'செயல்களில் எடிட்டிங்’ என்று அமுதசுரபியில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். எந்த செயல்பாட்டிலும்  எது தேவையோ அதை மட்டுமே கொடுக்க வேண்டும். வேண்டாதவற்றை உரியவரே தராமல் தள்ளுவதுதான் வளர்ச்சி. அதுதான் முன்னேற்றம்.

சென்ற அத்தியாயத்தின் இறுதியில் கேட்ட 'மசாலாக் குழம்பு மற்றும் மல்லி ரச’ கேள்விக்கு என்ன பதில்?

ஏகப்பட மசாலாப் பொருட்களைப் போட்டு எப்படி சமைத்தாலும் அதை  ஓரளவுதான் கெடுக்கமுடியும்! ஆனால், குறைந்த பொருட்களைக் கொண்டு செய்யும் ரசம் வைக்கத்தான் கூடுதல் சமையல் அறிவு தேவை. ஆக, மசாலாக் குழம்பு 'அ’ வகை. ரசம் 'இ’ வகை.

காரசாரமான குழம்புதான் ருசியின் ஆரம்ப கட்டம். மெல்லிய மணத்தை கண்டுபிடிப்பது, உணர்வது, ரசிப்பது எல்லாம் நுட்பமான வேலை.  போகப் போகவே அவை புலப்படும்.

அதேபோலத்தான் உடைகளில் வண்ணங்களும். 'அடி’க்கிற கலர்கள் ஆரம்ப நிலை. லேசான கலர்களை ரசிக்க முடிவது முன்னேற்றம். அலங்காரத்திலும் இந்த வகைகளைப் பார்க்கலாம். ஏராளமான நகைகள்,  பெரிய பார்டர் பட்டுப்புடவை அணிந்து அழகாக இருப்பது ஆரம்பநிலை. குறைவான நகைகளுடன், விலை குறைந்த  பருத்தி ஆடைகளிலேயே மிளிர்வது  உயர்நிலை.

நகைச்சுவையிலும் இந்த வேறுபாடுகளைப் பார்க்கமுடியும். அடித்து உதைத்து கீழே தள்ளி, தலையில் மாவு டப்பா கவிழ்ந்து.. சிரிப்பு மூட்டுவது எல்லாம் ஆரம்ப நிலைகள். போகிற போக்கில் ஒரு சின்னப் பார்வையில், சின்ன வாக்கியத்தில் புன்னகையை வரவழைப்பது மேல் நிலை.  'சட்டிலாக’  (Subtle) என்பார்கள் ஆங்கிலத்தில்.

எரிபொருளில் கூட இந்த அமைப்பைப் பார்க்கலாம். நிலக்கரி கனமானது. 'சாலிட்’. ஓரளவு சக்தி பெறவே நிறைய கரி எரிக்க வேண்டும்.  அதற்கு அடுத்த கீழ் நிலையில் திரவம்-'லிக்விட்’. மண்ணெண்ணெய் போல. கரி அளவு அல்ல. அதைவிடக் குறைந்த அளவிலான  மண்ணெண்ணெய், டீசல் போன்றவற்றிலேயே கூடுதல் சக்தி பெற முடியும்.

அவற்றைவிடவும்  எடை குறைவானது  LPG கேஸ். ஆனால் அது லகுவாய், புகை இல்லாமல் கூடுதல் எரிசக்தி தரவல்லது LPG கேஸ். இந்த மூன்றில் அதுதான் உயர் நிலை. அதைக்காட்டிலும் உயர்வகை விமானக்களுக்குப் பயன்படும் பெட்ரோல்.  எல்லாவற்றையும் விட அடர்த்தி குறைவு.

இசையும் விதிவிலக்கல்ல. டாம் டூமில் இருந்து மெல்லிசை. சங்கீதத்தில் ஆலாபனை, சங்கதிகள், கமகங்கள்.. என்று எவ்வளவோ இருக்கின்றன. ஆரம்ப நிலையில் இருப்பவர்களால் அடையாளம் காணமுடியாதவை. ஆனால் அவை இருக்கின்றன.  இசையிலேயே ஊறியவர்களுக்கு வேறுபாடுகள் தெரியவரும்.

இசை, சமையல், கூட்டங்கள் நடத்துவது, நடிப்பு, பேச்சு, எழுத்து, நகைச்சுவை என்று பல்வேறு உதாரணங்களை விலாவாரியாகவே பார்த்தாயிற்று. ஒன்றில் வல்லவராவதற்குத் திறன் பெறுவதற்கு நிறையத் தெரியவேண்டும். ஆனால் கொடுப்பதில் அதிக அளவு கொடுக்க வேண்டாம். தேவையானதை மட்டும் கொடுத்தால் போதும். 

மொத்தத்தில்  நிறைய எடுத்துவந்து வைத்துக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாய் வேண்டாதவற்றைத் தள்ளும் வழிமுறை (பிராசஸ்) தான் முன்னேற்றம்.  அதிகம் உருவாக்கல் அல்ல. வேண்டாதன தொடர்ந்து விலக்குதலே முன்னேற்றம். இதைத் தெளிவுபடுத்தியாயிற்று என்று நினைக்கிறேன்.

வல்லவராவதற்குத் தேவையான மற்றொன்றை இனி 'டீடெயிலாக’ப் பார்க்கலாம்.

ரங்கராஜன் என்பவருக்கு உடல் எடை தொடர்ந்து குறைந்துகொண்டே வந்தது. என்ன சாப்பிட்டாலும் எடை குறைவது மட்டும் நிற்கவில்லை. சென்னையில் இருக்கும் பிரபலமான மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள். அவரைப் பார்த்த மருத்துவர் ரங்கராஜனை அங்கேயே சேர்க்கச் சொல்லிவிட்டார்கள். பத்து நாள் ஆகிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்பெலிஷ்ட்கள் பார்ப்பார்கள். பரிசோதனைகளுக்கு எழுதிகொடுப்பார்கள். இறுதியாக ஒரு மருத்துவர் சொன்னார், 'உங்கள் கணவருக்கு கேன்சர்’

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com