2. மேலோட்டமாகப் பார்ப்பதும் நுணுக்கமாகப் பார்ப்பதும்

பட்டமளிப்பு விழாவை நடத்தவிருந்த அந்தக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர்தான் என்னை ஹோட்டலுக்கு அழைத்துப் போனார்.

 

 

"I want to know God's thoughts;
the rest are details
." 

 

-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

ட்டமளிப்பு விழா நடத்தவிருந்த அந்தக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர்தான் என்னை  ஹோட்டலுக்கு அழைத்துப் போனார். புழுதி பறந்த சாலையில் அந்த ஹோட்டல் மட்டும் எடுப்பாக பெரிதாகப் புதிதாக இருந்தது. வெளிச்சுவர்கள் கூட பழுப்பு நிற கிரைனைட் என்று ஞாபகம்.

உள்ளே போனோம். ரிசப்ஷனில் எவருமில்லை. பின்பு உள்ளிருந்து ஒருவர் வந்தார். அறைக்கு அழைத்துப் போனார். அறை முதல் மாடியில் இருந்தது. அறைக்கு எண்கள் எல்லாம் கிடையாது. அறையில் இண்டர்காம் போனும் இல்லை. கொஞ்சம் பெயிண்ட் வாசனை அடித்தது.  என்னை அழைத்து வந்தவர் வேறு ஏதும் வேண்டுமா சார் என்று கேட்டார். வரும் வழியிலேயே சாப்பிட்டுவிட்டதால், ஏதும் இல்லை என்று சொன்னேன். மறுநாள் காலை எட்டரை மணிக்கு நான் ஆயத்தமாக இருந்தால் போதும் என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார்.

முகம் கழுவிக்கொள்ளலாம் என்று லேசகாத் திறந்தேயிருந்த குளியலறைக் கதவைத் தள்ளிவிட்டு உள்ளே போனேன். கதவைத் தள்ளி மூடினேன். முழுக்கை சட்டையின் கைகளைச் சுருட்டிவிட்டுக்கொண்டு  முகம் கழுவ வாஷ்பேசினின் குழாயைத் திறந்து இரண்டு கைகளையும் விரித்து ஒருசேர  நீட்டினேன். அவ்வளவுதான், கூர்மையான குச்சியைப் போன்ற தண்ணீர் கைகளில் குத்துவது போலப் பாய்ந்தது.

அதைச் சற்றும் எதிர்பாராததால் அதிர்ச்சிடைந்து, சரேலென கைகளை விலக்கிக்கொண்டேன். திறந்திருந்த குழாயில் இருந்து தொடர்ந்து பீய்ச்சிய தண்ணீர் வாஷ்பேஷினில் மோதி என் முகம், சட்டை பேண்ட் எல்லாம் தெரித்து, நனைத்தது. இதுவும் நான் சற்றும் எதிர்பார்க்காதது என்பதால், கொஞ்சம் கலவரமாகி சடாரென விலகினேன்.

பின்பு ஒரு வழியாக சமாளித்து முகம் கழுவிக்கொண்டு குளியலறையை விட்டு வெளியே வர கதவைத் திறந்தேன் . 'அட! என்ன இது எவ்வளவு இழுத்தும் கதவைத் திறக்க முடியவில்லை!’.

கொஞ்சம் நிதானித்துக்கொண்டு, லாவகமாக திறக்க முற்பட்டேன். ஹீ ஹிம் என்ன செய்தும் கதவைத் திறக்க முடியவில்லை. என்னுடைய பல்வேறுவிதமான அண்டசாகசங்களுக்கும்  அது மசிவதாகத்  தெரியவில்லை.  அடுத்த முயற்சியாக  கதவை பலமாகத் தட்டினேன். எவருக்கும் கேட்கும் என்று தோன்றாததால் கொஞ்ச நேரம் தட்டியபின் விட்டுவிட்டேன். 

மணி இரவு ஒன்பது. இருப்பது அதிகம் பேர் இல்லாத ஹோட்டலில், மாடி அறை ஒன்றின் குளியலறையில்.  மொபைல் போனில் அழைக்கலாம் என்றால் அது குளியலறைக்கு வெளியே, அறையில், மேசை மீது. அதெல்லாம் போக, நான் என் அறையின் கதவை உள் தாழ்பாள் போட்டிருக்கிறேன். வேறு எவரும் வந்தாலும் என் அறைக்கதவைத் திறந்து அல்லவா குளியல் அறைக்கதவை திறக்க உதவ முடியும்!

நேரம் ஓடிக்கொண்டிருந்தது. மறுநாள் பல்வேறு பொறியாளர்களுக்கும் பட்டங்கள் வழங்கி, விழா பேருரை ஆற்ற வேண்டியவன்..ஒரு குளியல் அறைக்குள் மாட்டிக்கொண்டு வெளி வரமுடியாமல், தகவலும் தெரிவிக்க முடியாமல்.. நல்ல வேடிக்கை இது என்று நினைத்துக்கொண்டேன்.

வேறு என்ன செய்யலாம் என்று சுற்றிமுற்றும் பார்த்தபோது கண்ணில் பட்டது மேலே இருந்த வெண்டிலேட்டர். அதில் குறுக்கு கம்பிகளும், பக்கவாட்டில் சொருகி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி தகடுகளும். உட்கார்ந்து குளிக்க போட்டிருந்த அதிக உயரமில்லாத ஸ்டூலை சுவற்று ஓரமாக வைத்து, அதன் மீது குளியல் வாளியை கவிழ்த்து, அதன் மீது ஏறி, வெண்டிலேட்டர் வழியாக சத்தம் போட்டு எவரையாவது அழைப்பதுதான்  என்  திட்டம்.

செய்தேன். நல்ல வேளையாக என்னை அழைத்து வந்த பேராசிரியர் கீழே தெருவில் நின்றுகொண்டு எவருடனோ பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவர் பெயரைச் சொல்லி சத்தமாகக் கூப்பிட்டேன்.  அங்கும் இங்கும் பார்த்தவர் மேலே நான் இருக்கும் பக்கம் பார்க்க சற்று நேரமானாலும் பார்த்துவிட்டார்.

விவரம் சொல்லவும், அவர் ஹோட்டல்  நபரை அழைத்து வந்தார். அவர்கள் அனைவருமாக ஹோட்டலுக்கு வெளியில், சாலையில் நின்றபடி அந்த பாத்ரூம் கதவை நான் எப்படித் திறக்கலாம் என்று வழி சொன்னார்கள். கதவின் நிலையில் ஒரு கையை  வைத்து நன்றாக சுவற்றுப்பக்கம் அழுத்தி, அதே நேரம் மறுகையால் கதவின் கைபிடியை மேல் பக்கமாக  உயர்த்தித் தூக்குவது போல தூக்கி, அதே நேரம்  கதவை என் பக்கமாக  வேகமாக இழுக்கவேண்டும் என்பது போல அவர் சொன்னார்.

ஐந்து நிமிடங்கள்  ஆனாலும் இறுதியாக கதவு திறந்துகொண்டுவிட்டது. அப்பாடா என்றிருந்தது.  'இனி காலை வரை கதவைச் சாத்தாதீர்கள்' என்றார் பேராசிரியர். 'கொஞ்சம் புதுசு பாருங்க பிட் ஆக இருக்கு. போக போக சரியாகிவிடும்' என்றார் ஹோட்டல்காரர். அவர்கள் இது ஒன்றுமேயில்லை, ரொம்பச் சாதாரணம் என்பது போலப் பேசியதைக் கேட்டபின், வாஷ்பேசின் பற்றி நான் அவர்களிடம் ஏதும் சொல்லவில்லை.

மறுநாள் காலை மீண்டும் குளியல் அறைப் பிரவேசம். நினைவாக கதவு மூடிக்கொண்டுவிடாமல் இருக்க அறையில் இருந்த குப்பைக் கூடையை அணைவு கொடுத்துவிட்டு அதிக கவனத்துடன் நுழைந்தேன். இந்த முறை என்னுடைய போராட்டம் வெஸ்டர்ன் டாய்லெட்டுடன்.  மேல்நாட்டு பாணிக் கழிப்பறை என்பதால் அருகில் தண்ணீர்க் குழாயோ குவளையோ இல்லை. பேப்பர் ரோல் இருந்தது. தவிர இந்தியர்கள் பயன்படுத்துவதற்காக ஹெல்த் பிஸ்செட் எனப்படும் ஹோஸ் பைப் போன்ற, கையில் எடுத்துப் பயன்படுத்தக்கூடிய குழாய் வைக்கப்பட்டிருந்தது.

இங்கேதான் சிக்கல். கையில் எடுத்துப் பயன்படுத்த வேண்டிய அந்தக் குழாய் எந்தப்பக்கத்து சுவற்றில் இருக்க வேண்டும்?  வைத்தவர், சுலபமாக அல்லது மேலோட்டமாகச் சிந்தித்து, இடது கைதானே  அதற்குப் பயன்படும் என்று  இடது பக்கத்து சுவற்றில் நீளம் போதுமான அளவில் வைத்துவிட்டார். 

இங்கேதான் சென்ற இதழில் பார்த்த  விவரங்கள் (டீடெயில்ஸ்)ளின் முக்கியத்துவம் வருகிறது. கதவும் வாஷ்பேசினும் டாய்லெட்டும் இப்படி இருப்பதற்கு யார் காரணம்?  அல்லது எது காரணம்?

அந்த ஊரில் ஹோட்டல் ஆரம்பித்தவர் வஞ்சகம் செய்யவில்லை. பணத்தில் கருமித்தனம் காட்டவில்லை. கிரைனைட் எல்லாம் பயன்படுத்தியிருப்பதைப் பார்த்தால் அவர் தேவைக்கு அதிகமாகக் கூட செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆக, இந்தச் சிரமங்களுக்கு அந்த ஊரோ, அந்த முதலாளியின் மொத்தச் செலவோ காரணமில்லை.

'வேறு யார் அல்லது எது காரணம்?’
'டீடெயில்ஸ் போதாமைதான். வேறு என்ன?’
'யாரிடம்  டீடெயில்ஸ் போதவில்லை?’

குளியல் அறைக் கதவு வைத்தவர், வாஷ்பேஷினில் பிளம்பிங் வேலை செய்தவர் மற்றும் கழிப்பறைக்குப் பிளம்பிங் வேலை செய்தவர்களுக்குத்தான். நல்ல காய்கறிகளை, மளிகையைப் போட்டு, வெந்தும் வேகாமலும் சமைப்பவர்களைப் போன்றவர்கள்தான் இவர்கள்.

என்ன செய்கிறோம் எதற்காகச் செய்கிறோம் என்று கொஞ்சமும் யோசிக்காதவர்கள். அதில் கவனம் செலுத்தாதவர்கள். அங்கே எனெர்ஜி செலவு செய்யாதவர்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் ரகம்தான்.

'எல்லாம் அதே சட்டைதான். பிராண்டட் சட்டை விலையை பாருங்கள்.. அடேயப்பா! எவ்வளவு கூடுதல்!’ என்று சிலர் வியப்பது உண்டு. துணி, டிசைன் எல்லாம் ஒரே மாதிரிதான் என்பார்கள். அவர்கள் கண்ணில்படுவது அந்த மெட்டீரியல். துணி எனும் பொருள் மட்டும்தான்.

எல்லா  மலிவானவற்றிலும் பொருள் நன்றாக இருக்கும் என்று சொல்லமுடியாது. ஒருகால் ஏதாவது ஒன்றில் பொருள் நன்றாக இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். அப்படியானாலும்  பொருள் மட்டும் நன்றாக இருந்தால் போதுமா?

அந்தத்துணியை என்ன போர்த்திக்கொள்ளவா போகிறோம்? தேவை, பொருத்தமான சட்டை அல்லவா?

காலர் அளவு சரியாக இருக்கிறதா?  தையல் எப்படி?, பயன்படுத்தியிருக்கும் நூலின் தரம் என்ன? பட்டன்கள் எப்படி?, அதை நுழைக்கவேண்டிய துளைகள் பட்டனுக்கு நேராக இருக்கிறதா? அவற்றின் காஜா..தோள்பட்டை அளவு, கையின் நீளம் (கனடா போன்ற நாடுகளில் ரெடிமேட் சட்டைகளுக்கு அளவு சொல்லிக் கேட்கும்போது, காலர் சைஸ் மட்டுமில்லாது கையின் நீள அளவையும் கேட்பார்கள். ஒரே 40 அல்லது 42 என்கிற காலர் அளவுகளுக்கு வெவ்வேறு நீளங்களில் கை (முழுக்கை சட்டைகளில்) இருக்கும்). உடல் சுற்றளவு, இப்படி பலவற்றிலும் அவர்கள் அக்கறை காட்டிச் செய்திருப்பார்கள்.

அக்கறை காட்டுவதென்றால் அதை பற்றி சிந்திப்பது. அந்த சிந்தனையில் நேரம் செலவு செய்வது. அதன் மூலம் மிகச் சரியானவற்றைக் கண்டுபிடித்து அதைப் பயன்படுத்துவது. அதனால்தான் அவை அவ்வளவு ‘ஃபிட்’ ஆகப் பொருத்தமாக, உழைப்பதாக இருக்கும்.

ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்வது என்பார்கள் அல்லவா, அது இதைத்தான்.

மேலோட்டமாகப் பார்த்தால் எல்லாம்  சரிதான், ஒன்று போலத்தான். ஆனால் நுணுகிப் பார்த்தால்..வேறுபாடுகள் தெரியும்.

வேறுபாடுகள் எல்லோருக்கும் தெரியாது. வேறுபாடுகள் தெரிய அதில் நேரம் செலவு செய்யவேண்டும்.

வாஷ் பேசினில் பைப் வைக்கும்போது அதன் கோணம் (ஆங்கிள்), உயரம், அதில் தண்ணீர் வரும்போது அந்தத் தண்ணிர்  விழுந்து மோதக்கூடிய இடம், அதன் வளைவு. இப்படி ஒவ்வொன்றையும்  யோசித்து, அதற்கான  Trial & Error  செய்துப் பார்த்துச் செய்தால், பயன்படுத்தும் வாடிக்கையாளர் அந்த  சிக்கல்களைச் சந்திக்கவேண்டிவராது. மகிழ்வார் அல்லது குறைந்தபட்சம் திருப்தியாவார்.

வெற்றியாளர்கள் செய்வது இதைத்தான். இதைச் செய்ய பெரிய அறிவாளித்தனம் ஏதும் தேவையில்லை. அக்கறையும் கவனமும் போதும்.

இதையெல்லாம் செய்யப் பெரிய அறிவாளித்தனம் தேவையில்லை என்கிறீர்கள்.  எல்லோராலும் முடியும் என்கிறீர்கள். அப்படிபட்ட அந்த 'உன்னத நிலை’ யை அடைய என்ன செய்யவேண்டும்? என்று கேட்கிறீர்களா?

சட்டி சுட்டதடா

கைவிட்டதடா ..

திரைப்பட பாடல் தெரியுமல்லவா? அதில் வரும்  குறிபிட்ட இரண்டு வரிகளைத்தான்  இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லப் பயன்படுத்தப் போகிறோம். 

அவை எந்த வரிகளாக இருக்கும் என்று  யூகிக்க முடிகிறதா?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com