3. எறும்புத் தோலை உரிக்க முடியுமா?

எறும்புத் தோலை உரித்துப்பார்க்கயானைவந்ததடா –நான்இதயத் தோலை உரித்துப்பார்க்க ஞானம்வந்ததடா.


சட்டி சுட்டதடா, கைவிட்டதடா,

புத்தி கெட்டதடா, நெஞ்சைத்தொட்டதடா

என்ற பாடலில்வரும், நாம் விவாதித்துகொண்டிருக்கிற விவரங்கள் எனும் டீடெயில்ஸ் தொடர்பான வரிகளை சிலர் ஊகித்திருக்கலாம். சரியாக எழுதியவர் திரு ஜெயகுமார் அவர்கள் மட்டுமே. வாழ்த்துகள்.

அந்தவரிகள்..

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்

இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா.

ஆலயமணி திரைப்படத்திற்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்.

இதன்விளக்கம் (ஓரு) எறும்பின் தோலை உரித்துப் பார்த்ததில் அதன் உள் இருந்து யானை வந்ததாம். (அதைப்போல) அவருடைய இதயத்தின் தோலை உரித்துப் பார்த்ததில் அவருக்கு ஞானம் வந்ததாம்.  இது ஒரு தத்துவர்த்தமான வரி. 

‘டீடெயில்ஸ்’ எனப்படும் ’விவரங்கள்’ பற்றி பேசிக் கொண்டிருக்கும் இந்தப் பகுதியில் நான் சொல்லவருவது ‘எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா’  என்ற முதல் வரியை மட்டும்தான்.

இரண்டு வரிகளையும்தொடர்புபடுத்திப் பார்த்தால், அது கண்ணதாசன் சொல்லும் அற்புதமான தத்துவம். நான் இங்கே குறிப்பிட்டு, எடுத்துக்காட்டி, விளக்க முயல்வது அந்த தத்துவத்தை அல்ல. கவனிக்கவும் அதை அல்ல.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை அந்தப்பாடலைக் கேட்டபோது, என்ன காரணத்தாலோ மேலே குறிபிட்டுள்ள அந்த இரண்டுவரிகளில் முதல் வரியை மட்டும் மனதில் வாங்கி, அதற்கு நானாக ஒரு அர்த்தம் செய்து கொண்டேன். தவறான அர்த்தம் அல்ல. ஆனால் முற்றிலும் வேறு ஒரு அர்த்தம்.

‘எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா’ என்ற வரிக்கு நான் செய்து கொண்ட பொருள், ‘எறும்பின் தோலை உரித்துப் பார்ப்பதற்கு ஒரு யானை வந்தது’ என்பதாகும்.

இந்த வரி மிக அற்புதமான  loaded statement  ஆக எனக்குப் பட்டது. அதன் பொருள் எனக்குள் பெருவியப்பை உருவாக்கியது. கவிஞர் சொல்ல வந்தது அதை அல்ல என்றாலும், தனியாக அந்த வரிக்கு அப்படியும் பொருள் சொல்லலாம் இல்லையா! எனக்குத் தோன்றியது அதுதான்.

அப்படி பொருள் உணர்ந்து கொண்டதால், அந்த வரி தந்த ஆச்சரியம் என்னைப் பல நாட்கள் யோசிக்க வைத்தது. பல சிந்தனைகளை உருவாக்கியது.

ஓவியர் டாவின்சி தான் விமானம், மிதிவண்டிபோன்ற பல்வேறு மருத்துவ மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டவர் என்று சொல்வார்கள். காரணம், அவையெல்லாம் கண்டுபிடிக்கப்படுவதற்கு ,உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே அப்படிப்பட்டவற்றை டாவின்சி அவரது ஓவியங்களில் வரைந்திருக்கிறார். அதற்குப் பிந்தைய காலத்தில்தான் அப்படிப்பட்டவை வேறு சிலரால் உருவாக்கப்பட்டன.  அதுவரை இல்லாதனவற்றைக் கற்பனை செய்தது டாவின்சியின் மனம். நம் கவிஞரும் அப்படிக் கற்பனை செய்திருக்கிறார் என்று நினைத்தேன்.

கற்பனை. மனதில் உருவாக்கிப் பார்க்கும்சக்தி.  அறிவை விட கற்பனா சக்தியே முக்கியம் என்கிற பொருளில்True sign of Intelligence is not knowledge but Imagination என்பார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டன். அப்படியாக எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வரும் நிகழ்வை நான் கற்பனை செய்துப் பார்த்தேன். நீங்களும் செய்து பார்க்கலாம்.

எறும்பு எவ்வளவு சிறிய உடல் கொண்டது!  அந்த உடம்பில் ஒரு பகுதி சதை. அந்தச் சதையை போர்த்தியிருப்பது அதன் தோல். உரிக்கப்பட வேண்டியது அந்தத் தோல்தான். அவ்வளவு சிறிய உடம்பில் இருந்து தோலை தனியாக உரிப்பது என்பது சாத்தியமா?

முயன்றால் முடியாததில்லைதான். உரிக்க முடியும் என்றே வைத்துக்கொள்வோம். உரிப்பதற்கு வருகிறவர் யாராம்?

யானையாம். யார் வந்தால் என்ன என்று விடமுடியுமா? நிச்சயம் முடியாது.  காரணம், செய்ய வேண்டிய வேலை அப்படிப்பட்டது. மிகவும் சிக்கலானது, நுட்பமானது. கை விரல்களில் நகம் இல்லாதவர்களால் சாம்பார் வெங்காயத்தை விடுங்கள், பெரிய வெங்காயத்தின் தோலைக் கூட உரிக்கமுடியாது. சிரமப்படுவார்கள்.  ஆனால் இங்கு உரிக்கப்பட வேண்டியதோ எறும்பின் தோல். செய்ய வருவதோ யானை.

நகங்களை விடுங்கள். யானைக்கு கைகளாவது இருக்கிறதா?  நான்கு கால்கள்தான். ஆக, யானை செய்வதென்றால் அந்த வேலையை அதன் கால்களால் தான் செய்தாகவேண்டும்.

காலால் என்றால் காலாலா செய்ய முடியும்? கால் விரல்களைக் கொண்டுதான் செய்ய வேண்டும். யானையின் கால்களில் விரல்கள் உண்டுதான். ஆனால் அவை நீட்டி மடக்கி, வேண்டும் விதம் வளைத்து வேலை செய்யும் அளவு தனித்தனியாகவாக இருக்கும்! மொத்தையாக அது சாப்பிடும் சோற்று உருண்டைப் போல அல்லவா இருக்கும்!

ஆக, இப்படிப்பட்ட யானை, உடல் எது தோல் எது என்று பிரித்து அறிய முடியாத எறும்பின் தோலை உரிக்க வேண்டுமாம். யானையால் எறும்பை நசுக்க வேண்டுமானால் முடியும். அது கூட சந்தேகம்தான்.  குறிப்பிட்ட ஒரு எறும்பை யானையால் கண்டு உணர்ந்து நசுக்க முடியும் என்று உறுதியாக சொல்ல முடியாது.

ஆக, இப்படிப்பட்ட சவாலான வேலையை எப்படிச் செய்வது?  இந்தப் பாடல் வரிக்கும் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் Getting in to details எனும்  ‘விவரங்களைத்தெரிந்துகொள்ளுதல்’ க்கும் என்ன தொடர்பு?

இந்த இரண்டுக் கேள்விகள் இருக்கின்றன. முதல் கேள்வி, இப்படிப்பட்டவேலை சாத்தியமா?  என்பது. அதற்கான பதில், ‘ஏன்முடியாது?  யானையால் முடியாமல் இருக்கலாம். அதற்காக அந்த வேலையே சாத்தியமில்லை என்று சொல்லி விடலாமா?’ என்பதுதான்.

இன்றைய தேதிக்கு இதயமாற்று அறுவைச் சிகிச்சை எல்லாம் சாதாரணம்.  மூளையில் நரம்பு அறுவை சிகிச்சைப் போன்றவையே சாத்தியமாகியிருக்கிறது. அவ்வளவு ஏன், அணுவையேப் பிளாக்கிறார்கள். ஆக, எறும்பின் தோலை உரிப்பது ஒன்றும் முடியாததல்ல. என்ன இதைச் செய்ய சரியான கருவிதேவை. அவ்வளவுதான். சரியான கருவி என்றால் எப்படிப்பட்டக் கருவி?

சிறுவனாக இருந்தபோது, செருப்புப் போடாமல் வெளியில் விளையாடப் போவேன். கிரிக்கெட் மைதானத்தில் நெருஞ்சி போன்ற சில முட்களின் மீது காலை வைக்கப் போய் அது குத்தி, முள்ளின் முனை பாதத்தில் ஏறிவிடும். விளையாட்டில் கவனமாகி தொடர்ந்து ஓடி ஆடி விளையாட, ஏறிய முள்ளின் முனை சின்ன அளவில் முறிந்து உள்ளேயே நின்றுவிடும் . உள்ளே சிக்கிக்கொண்டு விட்ட அந்தப் பகுதியை உடன் இருக்கும் நண்பனோ அல்லது வீட்டுக்கு வந்த பிறகு சகோதரியோ வெளியே எடுப்பார்கள்.

எப்படி? குத்தி எடுக்க ஊக்கைப் (சேப்டிபின் ) பயன்படுத்துவார்கள். நல்ல கூரான ஊக்காக இருந்தால் சரி. ஊக்கு மொக்கையாக இருந்தால் வேலை ஆகாது. எவ்வளவுக்கு எவ்வளவு சிறிய முள்ளோ அவ்வளவுக்கு அவ்வளவு கூரான ஊசி தேவைப்படும்.

அதே போல, மிகச் சிறிய எறும்பின் தோலையும் கூட கூரான ஊசி இருந்தால் உரித்துவிடலாம். அதுசரிதான். ஆனால் எறும்பின் தோலை உரிப்பதற்கும் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் விவரங்கள் என்ற தலைப்பிற்கும் என்ன தொடர்பு என்ற இரண்டாவது கேள்விக்கு என்ன பதில் என்கிறீர்களா?

எதைப் புரிந்து கொள்ளவும், அதில் தொடர் மேம்பாடு செய்யவும் அறிவுக்கூர்மைதேவை. தீட்டத் தீட்ட கத்தி கூர்மையாவது போல, செதுக்கச் செதுக்க ஊசியின் முனை கூர்மையாவது போல ஒரு விஷயத்தைப் பற்றி அதிகம் சிந்திக்க சிந்திக்க, கூடுதலாகப் படிக்க, தொடர்ந்து செய்து பார்க்க பார்க்க எவருக்கும் அதைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும்.

உதாரணத்திற்கு ஒரு புதிய இடத்திற்கு முதல்முறையாகப் போகிறோம். போய்ச் சேர ஒரு குறிப்பிட்ட அளவு நேரமாகும். அதற்கு ஓரளவு செலவும் ஆகும்.  அடுத்த முறை அதே இடத்திற்குப் போக வேண்டிவந்தால் முதல்முறை போனதை விட சுலபமாக இருக்குமா இருக்காதா?  முதல் முறையைக் காட்டிலும் சீக்கிரமாகவும், இயன்றால் பிரயாணச் செலவு சற்றுக் குறைவாகவும் இருக்கும்படியும் நம்மால் செய்யமுடியாதா? 

முடியும். மேலும் அதே இடத்திற்குப் பலமுறை போக நாம் அதில் ‘எக்ஸ்பெர்ட்’டே ஆகிவிடுவோம். பேருந்து நிலையத்திற்கு கடைசி நிமிடத்தில் வந்து சரியாகப் பேருந்தைப் பிடிக்கும் அளவுத் தேர்ச்சி பெற்று விடுவோம். காரணம், அதைத் தொடர்ந்து செய்ததுதான். பரிச்சியம் உண்டாகி, புரிதல் அதிகமாகி சிறப்பாகச் செய்வோம்.

இப்படிப்பட்ட முன்னேற்றம் எல்லாத் துறைகளிலும் ஏற்பட்டிருக்கிறது. எளிய உதாரணம் சொல்லுவதென்றால், அதுவாக விளைந்து தொங்கிய காய்கனிகளையும், கண்ணில் பட்ட விலங்குகளையும் மனிதன் அப்படியே சாப்பிட்டது கற்காலம், ஆரம்ப கட்டம். அதைப் பற்றி மனிதன் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து சிந்தித்ததின் விளைவாக, தனக்கு வேண்டியதைப் பயிர் செய்துக் கொள்வது, விளைந்ததை சேமித்து வைத்துக் கொள்ளுவது, உணவுப் பொருட்களைப் பதப்படுத்தி வைத்துக் கொள்வது, சமைத்துச் சாப்பிடுவது என்று கணிசமான முன்னேற்றம் கண்டான்.

உணவு பற்றிய புரிதலில், மனித இனம் யானையின் கால் விரல்களைப் போலிருந்த அதன் ஆரம்பகட்டத்தில் இருந்து நகர்ந்து நகர்ந்து தற்போது வேண்டியவிதம் விளைவதையே மாற்றிக்கொள்ளும் ‘ஜெனிட்டிகளிமாடிபைடு’ வரை வந்துவிட்டது.

குட்டை தென்னைமரங்கள், மூன்று மாத நெற்பயிர், ஆயுசுக்கும் சேவலைச் சந்திக்காமலே எண்ணற்ற முட்டைகள் போடும் லகான் கோழிகள் போன்றவை அதற்குச் சிறு உதாரணங்கள். கொலெஸ்டிரால் விழிப்புணர்வு காரணமாகப் பலரும் முட்டையில் உள்ள மஞ்சள் கருவைச் சாப்பிடுவதில்லை என்பதால் இப்போது சில நிறுவனங்கள், கோழியின் வயிற்றில் முட்டை உருவாகும் போதே அதன் மஞ்சள் கருவின் அளவை வெகுவாகக் குறைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்களாம். இதுவும் ஜெனிடிக்கல் மாடிபிகேஷன், மரபணு மாற்றம்தான்.

இதெல்லாம் சரியா தவறா? இது எங்கே கொண்டு விடப் போகிறது என்பவை முக்கியமான கேள்விகள். ஆனால், நாம் இப்போது இந்த உதாரணத்தைப் பார்ப்பது வேறு ஒரு நோக்கத்திற்காக என்பதால் அதற்குள் போகவில்லை.

நாம் தொடர்ந்து ஆராயப் போவது, எதைச் செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்வது எப்படி, அதன் மூலம் வல்லவராக ஆகி விடுவது எவ்வாறு என்பதைத்தான்.

எறும்புத் தோலை உரிப்பது போன்ற அளவு நுட்பமாக நம் வேலைகளைப் புரிந்துகொண்டு செய்ய வேண்டும் என்பதும், அதைச் செய்யக் கூடிய அளவு அந்தவேலைப் பற்றிய புரிதலைக் கூர்மையாக்கிக் கொள்ளவேண்டும் என்பதும் இந்த அத்தியாயத்தில் பார்த்ததின் சாரம்.

சிவாஜி கணேசன் நடித்த ஆலயமணி படத்தின் பாடலுடன் இந்த அத்தியாயத்தை ஆரம்பித்தோம். அவருடைய நடிப்புப் பற்றிய ஒரு கேள்வியுடன் இந்த அத்தியாயத்தை முடிப்போம். அந்தக் கேள்வி..

நடிகர் திலகத்தின் நடிப்பு எந்தப்படத்தில் மேன்மையாக இருந்தது? வீரபாண்டிய கட்டபொம்மனிலா அல்லது முதல் மரியாதையிலா?  என்று கேட்டால் அதற்கு எப்படியெல்லாம் பதில் வரும் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது. பதில்,  சொல்பவரின் ரசனை சார்ந்ததாகப் போய்விடும். அதனால் கேள்வியை இப்படி மாற்றிக் கேட்கிறேன்.

வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் முதல் மரியாதை. இந்த இரண்டு படங்களிலும் சிவாஜி கணேசனின் நடிப்பில் நீங்கள் கவனிக்கும் வேறுபாடுகள் என்ன?

யோசித்து வையுங்கள்!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com