1. இவர் ஒரு சகாப்தம்!

பொழுது விடியும், உதயசூரியன் சூழ்ந்திருக்கும் இருட்டைப் போக்குவான், ஒளி வெள்ளம் பாய்ச்சுவான் என்று எல்லோரும் நம்பிக்கையோடு

மார்ச் 23, 2015

அதிகாலை 3.18.

பொழுது விடியும், உதயசூரியன் சூழ்ந்திருக்கும் இருட்டைப் போக்குவான், ஒளி வெள்ளம் பாய்ச்சுவான் என்று எல்லோரும் நம்பிக்கையோடு காத்திருக்கும் நேரம். ஆனால், உலகத்தை இருட்டு, கும்மிருட்டு கவ்வியது. வரலாற்றில், குறிப்பாகச் சிங்கப்பூர் வரலாற்றில் இது ஒரு கறுப்பு நாள். கண்ணீரால் எழுதப்பட்ட நாள். லீ குவான் யூ, சிங்கப்பூர் அரசு மருத்துவமனையில் மரணமடைந்தார்.

*

மதியம் 1 மணி

லீ உடல் வீட்டுக்குக் கொண்டுவரப்படுகிறது. இரண்டு நாள்கள், குடும்பம், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொள்ளும் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. சொந்த அப்பாவையே இழந்ததுபோல், ஒவ்வொரு சிங்கப்பூரியனும் கண்ணீர்க் கடலில் மிதக்கிறான்.

*

மார்ச் 25

காலை. லீ உடல் சகல மரியாதைகளோடு சவப்பெட்டியில் வைக்கப்படுகிறது. சிவப்பு, வெள்ளை நிறத்தில், பிறைச் சந்திரனும், ஐந்து நட்சத்திரங்களும் கொண்ட இரு வண்ண தேசக்கொடி பெட்டியின் மேல் போர்த்தப்பட்டிருக்கிறது – தன் செல்லப்பிள்ளை தன்னைவிட்டுப் போய்விடக்கூடாதே என்னும் ஆதங்கத்தோடு, சிங்கப்பூர்த் தாய் அவனை இறுகக் கட்டி அணைத்துக்கொண்டிருப்பதைப்போல...

ராணுவ வீரர்கள், சவப்பெட்டியைப் பீரங்கி வண்டியில் ஏற்றுகிறார்கள். ஊர்வலம், பார்லிமென்ட் கட்டடம் நோக்கிப் புறப்படுகிறது. அவருடைய இரு பேரன்களும், கைகளில் தாத்தாவின் உருவப் படத்தை ஏந்தியபடி, பீரங்கி வண்டியின் பின்னால் நடந்து வருகிறார்கள்.

சிங்கப்பூர் போலீஸின் அங்கமான கூர்க்கா படை வீரர் ஒருவர், Auld Lang Syne என்னும் ஸ்காட்லாந்து நாட்டின் பாரம்பரியப் பாடலை தன் பைப் (Pipe) இசைக்கருவியில் வாசிக்கிறார்.

பழைய நாட்களின் தொடர்புகளை மறக்கலாமா?

அவற்றை நினைக்காமலே இருக்கலாமா?

கடந்துவிட்ட நாட்களை நினைப்போம்,

கருணை என்னும் கோப்பையைக் கைகளில் எடுப்போம்.

பிரிவு உபசாரப் பாடலின் இசை, பசுமை நிறைந்த நினைவுகளை அசைபோட வைக்கிறது. கண்கள் பனிக்கின்றன, இதயங்கள் கனக்கின்றன.

ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பீரங்கி வண்டி ஊர்வலத்தைப் பார்க்கக் காத்திருக்கிறார்கள். நாங்கள் உன்னை நேசிக்கிறோம், Wǒmen ài nǐ, Kita suka anda, We love you என்று தமிழ், சீனம், மலாய், ஆங்கிலம் என்னும் பல்வேறு மொழிகளில் கோஷங்கள், பதாகைகள். டாலியா டான் என்னும் ஐந்து வயதுச் சிறுமி, அப்பாவோடு வந்திருக்கிறாள். We will miss you. Lee Kuan Yew. bye bye என்று தன் பிஞ்சுக் கைகளால் எழுதி, லீ படத்தையும் வரைந்து, சோகத்துக்கு வடிகால் தேடுகிறாள்.


சுமார் மூவாயிரம் கிலோமீட்டர்கள் தூரத்தில், திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் உள்ள உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, ஆலங்கோட்டை, கண்டிதம்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, திருமக்கோட்டை, மேலத் திருப்பாலக்குடி உள்ளிட்ட பல கிராமங்களிலும், மன்னார்குடி நகரிலும் நூற்றுக்கணக்கான பதாகைகள் லீக்கு வணக்கம் சொல்கின்றன.

‘மண் வீட்டில் வாழ்ந்த எங்களை மாடி வீட்டில் வாழவைத்த தெய்வமே’ என்று நன்றியுடன் பதாகையில் தெரிவிக்கிறார்கள், கூப்பாச்சிக்கோட்டை குமார், ராஜராஜன் இருவரும். இன்னொரு பதாகை சொல்கிறது, ‘லீ இமயமலை போன்றவர். ஏராளமான தமிழ்க் குடும்பங்களின் வறுமையை ஒழித்த மாபெரும் தலைவர். அவருக்கு எங்கள் இதயமார்ந்த அஞ்சலி’.

லீ நினைவாக மன்னார்குடியில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மணிமண்டபம் எழுப்ப உள்ளூர் மக்கள் திட்டமிட்டுள்ளார்கள். ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு நினைவு மண்டபம்!  இந்த அதிசயம், தமிழகம் அன்போடு, பாசத்தோடு, மரியாதையோடு செய்யும் வணக்கம்.

மார்ச் 26, 27, 28

லீ உடல், பார்லிமென்ட் இல்லத்தில் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கிறது. சுமார் ஏழு கிலோமீட்டர் நீள வரிசை. பத்து மணி நேரம் காத்திருக்க வேண்டும். பொறுமையோடு நிற்கிறார்கள். 4,54,687 பேர் இறுதி மரியாதை செலுத்திவிட்டார்கள். அதாவது, ஒரு நிமிடத்துக்கு 108 பேர். 

அரசாங்கம், நிர்வாகத் திறமையோடு, மனித நேயத்தோடு செயல்படுகிறது. கூட்டத்தைச் சமாளிக்க, பார்லிமென்ட் இல்லத்தில் பார்வை நேரம் 24 மணி நேரங்களாக்கப்படுகிறது. மக்கள் வந்துபோக வசதியாக மெட்ரோ ரெயில் இரவும் பகலும், 24 மணி நேரம் இயங்குகிறது. வரிசை தொடரும் இடங்களில் குடிநீர் வசதிகள், நடமாடும் கழிப்பறைகள், நடு நடுவே இளைப்பாறும் இடங்கள். மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்குத் தனி வரிசை.    

லீ கண் விழித்தால் பெருமைப்படுவார். இடி தாக்கிய இந்த வேளையிலும், பொது மக்களிடமும், அரசு அதிகாரிகளிடமும், அவர் உருவாக்கிய ஒழுங்கு, கட்டுப்பாடு.

*

மார்ச் 29

பல்லாயிரக்கணக்கான மக்கள், இறுதி ஊர்வலம் பயணிக்கும் பாதையில் காத்திருக்கிறார்கள். காலையிலிருந்து மழை கொட்டுகிறது. மக்களோடு இயற்கையும் சேர்ந்து அழுகிறது.   

மதியம் மணி 12.30. ராணுவத்தையும், காவல் துறையையும் சேர்ந்த எட்டுப் பேர், லீ பூத உடல் அடங்கிய, தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட பெட்டியை, பார்லிமென்ட் இல்லத்திலிருந்து எடுத்துக்கொண்டு வருகிறார்கள். பீரங்கி வண்டியில் ஏற்றுகிறார்கள். பீரங்கி 21 முறை முழங்குகிறது.   

நான்கு ராணுவ ஜெட் விமானங்கள், பீரங்கி வண்டியின் மேல் வட்டமிட்டு இறுதி வணக்கம் சொல்கின்றன. கறுப்புக் கொடி கட்டிய இரண்டு படைக் கப்பல்கள், கரையை நோக்கிப் பயணித்து வருகின்றன. Sail-by salute என்னும் இந்த மரியாதை முறை, பண்டைய கிரேக்க, ரோம் சாம்ராஜ்ஜியக் காலங்களில் இருந்தே பின்பற்றப்படும் ஒரு பாரம்பரியம்.

தொழிலாளர் யூனியன் அலுவலகம், லஞ்ச விசாரணை பீரோ, சிங்கப்பூர் பாலிடெக்னிக், தேசியப் பல்கலைக் கழகம், பொது மருத்துவமனை போன்ற லீ  வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புகொண்ட இடங்கள் வழியாக, பதினைந்து கிலோ மீட்டர் தூரம் ஊர்வலம் தொடர்கிறது. வழி நெடுக, கொட்டும் மழையில் நனைந்தபடி பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள். கண்ணீர், அழுகைகள், தேம்பல்கள், நாங்கள் சிங்கப்பூர் (We are Singapore) என்னும் சோகக் கோஷங்கள்.   

இதோ வந்துவிட்டது, இறுதிச் சடங்குகள் நடக்கப்போகும் தேசிய பல்கலைக் கழக கலாசசார மையம். ராணுவத்தினர், மரண இசை (Death March) என்னும் சோக கீதம் வாசிக்கிறார்கள். சவப்பெட்டி மெள்ள இறக்கப்பட்டு, கலாசார மையத்தினுள் வைக்கப்படுகிறது. அரங்கத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, சீனக் குடியரசின் உதவித் தலைவர் லீ யுவான்ச்செள, தென்கொரிய அதிபர் பார்க் ஹுன் ஹே,  ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடாடோ, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் இன்னும் பலர். சிங்கப்பூரின் பல தலைவர்களின் பேச்சு, அஞ்சலி, புகழாரம். அதைத் தொடர்ந்து, நாடு முழுக்க ஒரு நிமிட மெளனம். தேசிய கீதம்.

இனிமேல், வெளி உலகத்துக்கு இடமில்லை. குடும்பமும், மிகவும் நெருங்கியவர்களுக்கும் மட்டுமே அனுமதி. உடலை, மண்டாய் தகனச் சாலைக்கு எடுத்துப்போகிறார்கள். அங்கே அவருடைய இரண்டு மகன்கள் லீ ஹிஷியன் லூங் , ஹிஷியன் யாங்,  மகள் வே லின், அவர்கள் குடும்பங்கள், உறவுகள், நண்பர்கள் காத்திருக்கிறார்கள். சுமார் ஆறரை மணியளவில், சிங்கப்பூரின் மாபெரும் சகாப்தம் சாம்பலாகிவிட்டார்.         

77 வயதான தமிழ்ச்செல்வி சொல்கிறார், ‘லீ எங்களுக்காக எத்தனையோ செய்திருக்கிறார். நாங்கள் ஸெம்பாவாங் (Sembawang) பகுதியில் புறம்போக்கு நிலத்தில் வறுமையில் வாழ்ந்தோம். என் கணவர் பஸ் டிரைவர் வேலை பார்த்தார். இன்று என் மூன்று மகன்களும் நல்ல வேலை பார்க்கிறார்கள். வசதியான வீடுகளில் வசிக்கிறார்கள். என் பேரக் குழந்தைகள் நல்ல பள்ளிக்கூடங்களுக்குப் போகிறார்கள். லீ இல்லாவிட்டால் நாங்கள் என்ன செய்திருப்போமோ, எப்படி இருந்திருப்போமோ?’

ஷாரன் லீ என்னும் 58 வயதுப் பெண்மணி பேசத் தொடங்குகிறார். துக்கம் தொண்டையை அடைக்கிறது. ‘எனக்கு ஆறு வயதாகும்போது என் அப்பா இறந்துவிட்டார். அம்மா, நான்கு உடன் பிறந்தவர்கள். குடிசை வீடு. நாய்களும் பன்றிகளும் வீட்டைச் சுற்றி ஓடும். சில சமயங்களில் வீட்டுக்குள்ளும். அரசாங்க உதவியில்தான் நாங்கள் படித்தோம், லீ மட்டும் இருந்திருக்காவிட்டால், எங்கள் வறுமை நிலை மாறியே இருக்காது’.   

உலகத் தலைவர்கள் சூட்டிய புகழாரங்கள் -

‘லீ தொலைநோக்கு கொண்ட அரசியல் மேதை. உலகத் தலைவர்களுக்குள் அவர் ஒரு சிங்கம்’ - நரேந்திர மோடி, பாரதப் பிரதமர்.

‘அவர் வரலாற்றின் மாமனிதர். நவீன சிங்கப்பூரின் தந்தை. ஆசியாவின் மாபெரும் ராஜதந்திரி. இனி வரப்போகும் எண்ணற்ற சந்ததிகள் அவரை நினைவில் வைத்திருப்பார்கள் - பராக் ஒபாமா, அமெரிக்க அதிபர்.

‘லீ குவான் யூ மறைவு சிங்கப்பூருக்கும், அகில உலகத்துக்கும் மாபெரும் இழப்பு’ - ஷீ ஜின் பிங், சீன அதிபர்.  

‘இதுவரை ஆசியா உருவாக்கியுள்ள மாபெரும் தலைவர்களுள் மாண்புக்குரிய லீ குவான் யூ ஒருவர். ஒப்பிடமுடியாத நுண்ணறிவும், தலைமைக் குணங்களும் கொண்டவர். சிங்கப்பூரின் அற்புதமான பொருளாதார வளர்ச்சி, ஆசியப் பசிஃபிக் நாடுகளின் அமைதிக்கும் ஐம்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக அயராது உழைத்தவர்’ - அபே ஷின்ஸோ, ஜப்பான் பிரதமர்.

‘ஒரு சிலருக்குத்தான் தங்கள் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களிலும் மிகச் சிலருக்கே, நாட்டை உருவாக்கி, நாடு கட்டும் நாயகர்களாகும் பாக்கியம் கிடைக்கும். லீ குவான் யூ அப்படிப்பட்ட மனிதர். சுதந்தரம் கிடைத்த நாள் முதல், எத்தனையோ சோதனைகளுக்கும், அக்னிப் பரீட்சைகளுக்கும் நடுவே, அவர் சிங்கப்பூரை வழி நடத்தினார். இன்றைய சிங்கப்பூர் உலக அரங்கில் நிமிர்ந்து நிற்பதற்கு அவருடைய ஆண்டாண்டு காலத் தியாகங்கள், ஆற்றல், கடும் உழைப்பு, மனஉறுதி, தொலைநோக்குப் பார்வை ஆகியவை காரணங்கள்’ - டேவிட் காமெரான், இங்கிலாந்துப் பிரதமர்.

உலகத் தலைவர்களிருந்து சாமானியத் தமிழ்ச் செல்வியும், ஷாரன் லீயும், கூப்பாச்சிக்கோட்டை குமார், ராஜராஜனும் இவர் மேல் பாசமும் மரியாதையும் காட்டுவது ஏன்? 

1959-ல், சிங்கப்பூர் பிரதமராக லீ பதவி ஏற்றார். அன்று சிங்கப்பூர் எப்படி இருந்தது தெரியுமா? அது நாடே இல்லை. வெறும் நகரம். மும்பையைவிடச் சற்றே பெரியது: சென்னையைவிட ஒன்றரை மடங்கு அதிகம். தமிழ்நாட்டின் சிறிய மாவட்டமான கன்னியாகுமரியின் பாதி சைஸ்! (சிங்கப்பூரின் பரப்பளவு 716 சதுர கிலோ மீட்டர். சென்னை 426 கிலோ மீட்டர். மும்பை 603 கிலோ மீட்டர். கன்னியாகுமரி மாவட்டம் 1672 கிலோ மீட்டர்).

மக்கள் தொகை 16 லட்சம். மலாய், சீனர்கள், தமிழர்கள் என்று மூன்று வகை வம்சாவளியினர். இவர்கள் யாருமே தங்களைச் சிங்கப்பூரியர்கள் என்று நினைக்கவில்லை. மூன்று தீவுகளாக வாழ்ந்தார்கள்.

இயற்கை வளங்கள் இல்லாத நாடு. குடிக்கும் தண்ணீரையே அண்டைய நாடான மலேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யும் நிலை. நாட்டின் பல பகுதிகளில் குடிசைகள். சுகாதார உணர்வே இல்லாத மக்கள். தெருவெங்கும் கொட்டிக் கிடக்கும் குப்பைகள்.

வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடியது. சும்மா இருப்பவர்களின்  மனம் சாத்தானின் இருப்பிடம். இதனால், ஏகப்பட்ட திருட்டுகள், குற்றங்கள். அதேசமயம், மக்கள் திறமைசாலிகளாக இல்லை. அர்ப்பணிப்போடு உழைக்கும் மனப்பாங்கும் கிடையாது. ஆகவே, தொழிற்சாலைகள் நிறுவவும், கட்டுமானப் பணிகள் செய்யவும் வெளிநாட்டுத் தொழிலாளிகளை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்க வேண்டும்.

பிரதமராகப் பொறுப்பேற்றபோது லீக்கு வயது 36. இயற்கை வளங்கள் இல்லை, உழைக்கும் மக்கள் இல்லை, தேசப்பற்று இல்லை, தலைமை தாங்கும் பிரதமருக்கு அனுபவம் இல்லை - சிங்கப்பூர் ஜெயிக்கும் என்றே யாருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இல்லை. எத்தனை மாதங்களில் இந்த நாடு கவிழப்போகிறதோ என்று எல்லோரும் கெடு வைத்தார்கள்.

சிங்கப்பூரின் எதிர்காலம் பற்றி ஆயிரம் ஆயிரம் ? ? ? ? ?.

56 வருடங்கள் ஓடிவிட்டன. ஒரு நாட்டில் தயாராகும் மொத்தப் பொருள்கள், சேவைகள் ஆகியவற்றின் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product) என்று அழைக்கப்படுகிறது. இதை மொத்த மக்கள் தொகையால் வகுத்தால், வருவது தனிமனித மொத்த உள்நாட்டு உற்பத்தி (Percapita Gross Domestic Product). நாட்டின் பொருளாதாரத்தை எடைபோடும் சிறந்த அளவியாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான பன்னாட்டு நாணய நிதியம் (International Monetary Fund) ஒவ்வொரு வருடமும் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைத் தனிமனித மொத்த உள்நாட்டு உற்பத்தி மூலம் ஒப்பிடுகிறது, வரிசைப்படுத்திப் பட்டியலிடுகிறது. இதன்படி, முதலிடம் பிடிப்பது, மேற்கு ஐரோப்பாவில் இருக்கும் லக்ஸம்பர்க் (Luxembourg). இரண்டாம் இடம் சிங்கப்பூர்!

உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum), ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் தனிப்பட்ட அமைப்பு. அரசியல், பிசினஸ், கல்வி ஆகிய பல்வேறு துறை அறிஞர்கள் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு, சர்வதேச முன்னேற்றத்துக்குப் பாடுபடும் மன்றம். எல்லா நாடுகளையும் சீர்தூக்கி இவர்கள் ஒவ்வொரு வருடமும் வெளியிடும் அகில உலகப் போட்டித்திறன் அறிக்கை (Global Competitiveness Report)  அனைத்து நாடுகளும் மதிக்கும், எதிர்பார்க்கும் அறிக்கை. இந்த அறிக்கையின்படி, நம்பர் 1 ஸ்விட்சர்லாந்து; நம்பர் 2 சிங்கப்பூர்!

இதுமட்டுமா? பொருளாதார சுதந்தரம், லஞ்ச ஒழிப்பு, வேலையில்லாதோர் சதவிகிதம், கட்டமைப்பு, வீட்டு வசதிகள், தொழில்நுட்ப முன்னேற்றம் போன்ற பல்வேறு அம்சங்களில், உலகின் மொத்த 196 நாடுகளில், சிங்கப்பூர் பிடித்திருக்கும் இடம் டாப் 10-க்குள்.

இன்று சிங்கப்பூர் என்றால், உலக மூலைகள் அனைத்திலும் ! ! ! ! !.

கேள்விக்குறிகளை ஆச்சரியக்குறிகளாக்கிய சரித்திர நாயகர் - லீ குவான் யூ!

(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com