8. அக்னிப் பரீட்சைகள்

ஜப்பானியர்கள் மகா திறமைசாலிகள். கடும் உழைப்பாளிகள். கட்டுப்பாடு மிக்கவர்கள். ஆனால், 1940 கால கட்டங்களில் சீனா, மலாயா, சிங்கப்பூர் ஆகிய


ப்பானியர்கள் மகா திறமைசாலிகள். கடும் உழைப்பாளிகள். கட்டுப்பாடு மிக்கவர்கள். ஆனால், 1940 கால கட்டங்களில் சீனா, மலாயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஜப்பான் காட்டியது இன்னொரு முகம், ஈவு இரக்கமற்ற கொடூர முகம். உலகத்தைக் கட்டியாளும் ஆதிக்க ஆசை வந்தால், அந்த வெறி மனிதர்களையும் அரக்கர்களாக்கிவிடும் – ஜப்பான் நிரூபித்தது.

பிரிட்டிஷ் படைகள் சரணடைந்தவுடன், சில நாட்களுக்கு நாட்டின் கடிவாளம் யார் கையிலும் இருக்கவில்லை. இங்கிலாந்து ராணுவ வீரர்கள் ஜப்பானியருக்குப் பயந்து பதுங்கிவிட்டார்கள். காவல்துறையினரில் உயர் அதிகாரிகள் பிரிட்டிஷார். பிறர் சீன, மலாய், இந்தியர்கள். தம்மையும் பிரிட்டிஷ் அரசின் அடையாளங்களாக ஜப்பான் நினைத்துக் கூறு போட்டுவிடும் என்று பயந்த போலீசார் காணாமல் போனார்கள்.

ஜப்பான் வீரர்கள் கடைகளையும், வீடுகளையும் சூறையாடினார்கள். போலீஸ் இல்லாததால், உள்ளூர் ரவுடிகளுக்கும் துளிர் விட்டது. இவர்களும் எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயமாக, கண்பட்ட இடங்களிலெல்லாம் கை வைத்தார்கள். பணம், நகைகள், உடைகள், எலெக்ட்ரிக் சாமான்கள், ரேடியோக்கள், சைக்கிள்கள் என அகப்பட்டதையெல்லாம் சுருட்டினார்கள். ஏகதேசக் கடைகள் காலி.

சில நாட்களில், ஜப்பான் ராணுவம் கடும் நடவடிக்கைகள் தொடங்கியது. சில கொள்ளைக்காரர்களைச் சுட்டு வீழ்த்தியது: இன்னும் சிலர் கழுத்தை வெட்டியது. மக்கள் நடமாட்டம் அதிகமான பாலங்களிலும், போக்குவரத்துச் சந்திப்புக்களிலும் ரத்தக் களறியான கழுத்துக்களைக் கொம்புகளில் மாட்டி வைத்தது. சூறையாடல்கள் குறைந்தன. இனிமேல் அமைதி நிலவும், சகஜ வாழ்க்கை திரும்பும் என்று சிலர் நினைத்தார்கள். நம்பிக்கை பகல் கனவானது.

ஜப்பானின் ஆட்டம் தொடங்கியது – பேயாட்டம். போர்க்கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்தவேண்டும் என்பது எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட யுத்த நெறி. ஜப்பான் யுத்த நெறிகளை மட்டுமல்ல, அடிப்படை நாகரிக எல்லைகளையே மீறியது. சிங்கப்பூரிலிருந்த போர்க்கைதிகள் நகரத்தைச் சுத்தப்படுத்துதல், ரோடுகளில் குவிந்துகிடந்த பிணங்களை அகற்றுதல், அவற்றை எரித்தல் போன்ற பணிகள் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

நாட்டு மக்கள் எல்லோரிடமும், ஜப்பான் ஈரமற்று நடந்துகொண்டது. ஆனால்,  ஏதோ தேர்ந்தெடுத்துப் பழி வாங்குவதுபோல், கொடூர நடவடிக்கைகள்

நாட்டு மக்கள் எல்லோரிடமும், ஜப்பான் ஈரமற்று நடந்துகொண்டது. ஆனால்,  ஏதோ தேர்ந்தெடுத்துப் பழி வாங்குவதுபோல், கொடூர நடவடிக்கைகள் சீனர்கள்மீதுதான். 18 முதல் 50 வயது வரையிலான சீன ஆண்கள் கடும் சோதனைகள் செய்யப்பட்டார்கள். இதில் தேறி, எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படாதவர்களைச் சோதிக்கப்பட்டவர்கள் (Examined) என்று அவர்கள் சட்டைகளில் சதுரவடிவ முத்திரை குத்தி அனுப்பினார்கள். மற்றவர்கள்மேல் சந்தேகத்துக்கு உரியவர்கள் (Suspects) என்பதற்கு அடையாளமான முக்கோண முத்திரை குத்தப்பட்டது. இரண்டுமே, சீனர்களாகப் பிறந்த ஒரே ”குற்றத்துக்காக” அவர்கள் சுமந்த அவமான முத்திரைகள். பாவிகள்,  அப்பாவிகள் ஆகிய அத்தனை சீனர்களையும் இவற்றைச் சுமக்கவைத்தது ஜப்பானின் கைங்கரியம். 

சிங்கப்பூரிலும், மலாயாவிலும் இருந்த சீனர்கள், வெளிநாடு வாழ் சீனர்கள் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இவர்கள் வேலை? 80 மில்லியன் டாலர் பணம் சேர்த்து ஜப்பானியப் போர் நிதிக்குத் தரவேண்டும்.

தாங்கள்தாம் நாட்டு ராஜாக்கள் என்று காட்ட ஜப்பான் நடத்திய நாடகங்கள் ஏராளம். சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்தார்கள். மக்களை வேலிகளுக்கு அடியே ஊர்ந்துபோகவைத்து கெக்கலி கொட்டுவார்கள். சிலரைக் கொளுத்தும் வெயிலில் மண்டியிட்டு உட்காரச் சொல்லுவார்கள். தலையில் பெரிய பாறாங்கற்களை ஏற்றுவார்கள். கைகள் தளர்ந்து, கல் கீழே விழும்வரை இந்த விளையாட்டு தொடரும். அப்புறம், ஜப்பானிய வீரர்களைப் பார்க்கும்போது, சிங்கப்பூரியர்கள் தலை குனிந்து வணக்கம் செலுத்தவேண்டும். மீறினால், அடிகள், உதைகள்.

ஜப்பானின் ரகசிய போலீஸ் அமைப்பு கெம்பெய்டாய் (Kempeitai). நாட்டு மக்களை உளவு பார்த்தது. தங்களுக்காக வேவு பார்த்துத் தகவல்கள் சொல்லும் சிங்கப்பூரியர்களுக்குச் சன்மானம் தந்தது. சந்தேகத்துக்கு உரியவர்களை விசாரணைகள் இல்லாமல் தண்டித்தது. இதனால், உங்களுக்கு யார் மீதாவது முன்விரோதமா, அவரைப்பற்றிக் கெம்படாய்க்குச் சொல்லுங்கள். அவர் தொலைந்தார். இதனால், யாரை நம்புவது என்றே தெரியாமல் ஒவ்வொருவரும் அடுத்தவரைச் சந்தேகக் கண்களோடு பார்த்தார்கள்.

அடுத்து ஆரம்பம் பிஞ்சு நெஞ்சுகளில் நஞ்சு விதைக்கும் முயற்சி. கல்வி நிலையங்களில் போதனாமொழியாக இருந்த ஆங்கிலம் அகற்றப்பட்டது. ஜப்பான் மொழி அந்த இடத்தைப் பிடித்தது. காலையில் பள்ளிக்கு வந்தவுடன் ஜப்பான் இருக்கும் திசை நோக்கி வணங்கவேண்டும். ‘சக்கரவர்த்தியே, உங்கள் ஆட்சி ஆயிரம், இல்லை, எட்டாயிரம் தலைமுறைகள் நீடிக்கட்டும். சின்னக் கூழாங்கற்கள் பெரும் பாறைகளாகி, பாசியால் மூடப்படும் வெகுநெடுங்காலம் வரை தொடரட்டும்’ என்னும் ஜப்பானிய தேசியகீதம் பாடவேண்டும். ஜப்பானியரின் அடிமைகள் நீங்கள் என்னும் சேதியை இளம் மனங்களில் பதியவைக்கும் வக்கிர மனோதத்துவ முயற்சி.

திரையரங்குகளில் ஆங்கிலத் திரைப்படங்களுக்குத் தடை விதித்தார்கள். ஆங்கிலேயர்களைக் கேலி செய்யும் ஜப்பானியப் படங்கள் வெளியாயின. சிங்கப்பூரியர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் முயற்சி. ஊடகங்களில் தணிக்கை தலைவிரித்தாடியது. நாளிதழ்கள், பத்திரிகைகள், வானொலி ஆகிய அனைத்திலும் ஜப்பான் அதிகாரிகள் தந்ததுதான் செய்தி. நிஜ உலக நடப்புகள் இருட்டடிக்கப்பட்டன. சிங்கப்பூர் மக்கள் வாழ்ந்தது ஜப்பான் உருவாக்கிய பொய் உலகத்தில்.

அன்றாட வாழ்க்கை, கூடிவாழும் குணம், கல்வி, கலாச்சாரம் போன்ற நாட்டின் அடிப்படைகள் அத்தனையையும் தகர்த்து, சிங்கப்பூரை முதுகெலும்பிலாத நாடாக மாற்றும் அத்தனை நடவடிக்கைகளும் வாடிக்கையாயின. உலகமும் கண்களை மூடிக்கொண்டிருந்தது. இவை அத்தனைக்கும் சிகரமாக வந்தது மரண ரெயில்வே (Death Railway).

பர்மா என்று அழைக்கப்பட்டுவந்த மயன்மாருக்குள் புகுந்து, இந்தியாவைப் பிடிக்க ஜப்பான் திட்டமிட்டது. பர்மாவைக் கைப்பற்றி, தங்கள் கைவசமிருந்த தாய்லாந்தோடு இணைத்துவிட்டால், வீரர்கள், தளவாடங்கள் போக்குவரத்து எளிதாகிவிடும். தாய்லாந்தின் தின் பான் பாங் (Ban Pong), பர்மாவின்  தான்பையுஜயாத் (Thanbyuzayat) ஆகிய இரு இடங்களையும் இணைக்கும் 415 கிலோமீட்டர் ரயில் பாதை போட ஜப்பான் முடிவு செய்தார்கள். இந்தத் திட்டத்தை நிறைவேற்றக் குறைந்த பட்சம் ஐந்து வருடங்களாகும் என்று ஜப்பானியப் பொறியியல் வல்லுநர்கள் கணித்தார்கள். ஒரே வருடத்தில் முடிக்கவேண்டும் என்று ஜப்பானியத் தளபதிகள் முடிவு செய்தார்கள். வழி, குறுக்கு வழி, குரூர வழி.

போர்க்கைதிகள், ஆசிய நாடுகளைச் சேர்ந்த அடிமைகள் எனப் பல லட்சம் பேரைப் பணியில் அமர்த்தினால், ஒரு வருடத்துக்குள் பாதை போட்டு முடித்துவிடலாம் என ராணுவத் தளபதிகள் கணக்குப்போட்டார்கள். 60,000 போர்க் கைதிகளும், 1,80,000 ஆசிய அடிமைகளும் சுற்றி வளைக்கப்பட்டு, மந்தைகளாய், பணியிடத்துக்கு அனுப்பப்பட்டார்கள். 1942 - ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வேலை தொடங்கியது.

கரடு முரடான மலைப்பகுதி. எந்த வசதியும் கிடையாது. தினமும் பதினான்கு மணி நேர உடலை ஒடிக்கும் வேலை. மிகக் குறைந்த அளவு உணவு. காயம் பட்டால், மயங்கி விழுந்தால், மருந்துகளோ, எந்த மருத்துவ வசதிகளோ கிடையாது. கொஞ்ச நாட்களிலேயே சுமார் பத்தாயிரம் பேர் இறந்தார்கள். ஜப்பான் திட்டமிட்டபடியே, பதின்மூன்று மாதங்களில் ரெயில்பாதை தயார். ஆனால், இந்தப் பாதை காவு வாங்கிய உயிர்கள் எத்தனை தெரியுமா? 98,052 பேர். இதனால், பர்மா ரெயில்வே என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த ரயில் மார்க்கத்துக்கு உலகம் வைத்த காரணப் பெயர் – மரண ரெயில்வே.

*****
பிற சிங்கப்பூரியர்கள் போலவே, லீயும் ஜப்பானிய அடக்குமுறைகளையும், அராஜகங்களையும் சந்தித்தான். அவனுடைய முதல் சந்திப்பு துப்பாக்கி முனையில். இங்கிலாந்து சரணடைந்த சில நாட்களில். லீ தெருவில் தனியாக நடந்துபோய்க் கொண்டிருந்தான. வழியில் கும்பலாக ஜப்பானிய வீரர்கள். அவர்கள் கண்களில் படாமல் நழுவ முயற்சித்தான். எங்கே ‘இரை’ கிடைக்கும் என்று துடிக்கும் ஓநாய்கள் விடுவார்களா? ஒருவன் லீயை நிறுத்தினான். தன் துப்பாக்கி முனையால் லீ தொப்பியில் தட்டினான். தொப்பி கீழே விழுந்தது. கன்னத்தில் ‘பளார்’ , ‘பளார்’ கொடுத்தான். தரையில் மண்டியிடச் சொன்னான்.  ஷூ அணிந்த காலால் எட்டி உதைத்தான். தடுமாறி விழுந்த லீயை எழுந்திருக்கச் சைகை காட்டினான். அவனுக்குத்தான் ஆங்கிலமோ, சீன மொழியோ தெரியாதே? வன்முறைக்கு பாஷை எதற்கு? ‘வந்த வழியிலேயே திரும்பிப் போ’ என்று உடல்மொழியால் தெரிவித்தான்.

இன்னொரு நாள். லீ போகும் வழி. ஒரு ஜப்பானியச் சிப்பாய் கை ரிக்  ஷாவிலிருந்து இறங்குவதைப் பார்த்தான். ரிக்‌ஷாக்காரன் கொஞ்சம் போட்டுக் கொடுக்குமாறு கெஞ்சினான். ராணுவ வீரன் அவனை ஒற்றைக் கையால் தூக்கினான். ஜூடோ ஸ்டைலில் தரையில் வீசினான. அவன் வலியால் கதறிக்கொண்டிருநதான். எதுவும் நடக்காததுபோல் வீரன் (?) நடையைக் கட்டினான். இங்கு நடப்பதென்ன, காட்டுமிராண்டிகள் ஆட்சியா? லீ மனம் பதறியது.

இன்னொரு நாள். வீதியில் பெரிய கூட்டமாக ஆட்கள் நின்றார்கள். லீ வேடிக்கை பார்க்கப்போனான். அங்கே, ஒரு மூங்கில் கம்பின் உச்சியில் மனிதத் தலை. ஆமாம், ரத்தம் உறைந்த சீன ஆணின் தலை! கம்பின் அடிப்பாகத்தில் ஒரு போஸ்டர். அதில் சீன மொழியில் கொட்டை எழுத்துக்களில் ஏதோ அறிவிப்பு. ஆங்கிலத்தில் மட்டுமே பள்ளியிலும், கல்லூரியிலும் படித்த லீக்குச் சீன மொழி வாசிக்கத் தெரியாது. சுற்றி நின்றவர்களிடம் கேட்டான். அவர்கள் சொன்னார்கள், அந்தப் போஸ்டர் ஒரு எச்சரிக்கை – ‘இந்த மனிதன் கடையைச் சூறையாடும்போது பிடிபட்டான். யார் திருடினாலும் இதுதான் தண்டனை.’ லீக்கு வயிற்றைக் குமட்டியது. ஜப்பானியர்கள்மீது வந்தது வெறுப்பா அல்லது அருவருப்பா? அவனுக்கே தெரியவில்லை. 

சில நாட்கள் ஓடின. அராஜகம் லீ வீட்டுக்குள்ளே தலை காட்டியது. லீ, அவன் தம்பிகள், தங்கை ஆகியோரைப் பள்ளியில் கொண்டுவிட, தியாங் கூ (Teong Koo) என்னும் ரிக்‌ஷாக்காரரை அமர்த்தியிருந்தார்கள். அவரோடு லீயை விட்டுவிட்டு எல்லோரும் வெளியே போயிருந்தார்கள். அப்போது உள்ளே வந்தார் ஒரு ஜப்பானிய ராணுவ ஆபீசர். அவரோடு சில சிப்பாய்கள். இருவரும் ஏதோ அவர்கள் சொந்த வீடுபோல் உள்ளே வந்தார்கள். லீ, தியாங் கூ இருவரையும் ஈ, எறும்பு போல் துச்சமாகப் பார்த்தார்கள். லீயை மிரட்டினார்கள். அவனையும், தியாங் கூவையும் வெறி பிடித்தவர்கள்போல் அறைந்தார்கள். பயத்தில் நடுங்கியபடி லீ தூங்கிப்போனான்.  

படையினர் ஒவ்வொரு அறையாகப் பார்வையிட்டார்கள். தங்கள் வீரர்கள் தங்க அந்த வீடு வசதியாக இருக்குமா என்று தங்களுக்குள் விவாதித்தார்கள். அடுக்களையில் புகுந்தார்கள். அகப்பட்டதையெல்லாம் சாப்பிட்டார்கள். இது போதாதென்று, வீட்டில் இருந்த மளிகை சாமான்கள், காய்கறிகள், மாமிசம் ஆகியவற்றை எடுத்தார்கள். காம்பவுண்டில் அடுப்பு ஏற்றினார்கள். சமைத்தார்கள். சாப்பிட்டார்கள். மிச்சச் சாப்பாட்டை  அப்படியே வீசி எறிந்தார்கள். நிலநடுக்கம் வந்ததுபோல் இருந்தது வீடு. நல்ல காலம், அவர்கள் திரும்பி வரவில்லை.

அவனுக்குப் பக்கபலமாக இருந்த தியங் கூ, சில நாட்களில் லீ உயிரையும் காப்பாற்றினார். நகரத்தின் பிரதானப் பகுதியில், ஜப்பானிய ராணுவம் சோதனையகம் அமைத்திருந்தது. அங்கே, ஆயிரக்கணக்கானவர்களைப் பிடித்து வைத்திருந்தார்கள். அவர்களுள் லீயும் ஒருவன். அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துத் தப்பிவிட்டான். ஓடிவந்த அவனுக்கு, தியங் கூ தானும் பிற ரிக்‌ஷாக்காரர்களும் வசிக்கும் பகுதியில் அடைக்கலம் கொடுத்தார். அவனைக் காப்பாற்றியது தெரிந்தால், தன் கதியும், குடும்பத்தின் கதியும் அதோகதியாகிவிடும் என்று சந்தேகமில்லாமல் தெரிந்தும்கூட.
 


லீயோடு மாட்டிக்கொண்ட ஆயிரக்கணக்கானவர்கள் நடுரோட்டில் சுடப்பட்டார்கள். பலர் அநாதைப் பிணங்களாய், நாய்களும், கழுகுகளும் கொத்திக் குதறும் பரிதாப நிலையில் கிடந்தார்கள்: இன்னும் பலர் குத்துயிரும், குலை உயிருமாய். ஆறு நாட்கள் ஓடின. ஏழாம் நாள். சுமார் 50 லாரிகள் இவர்களை அள்ளிக்கொண்டு போய், கடற்கரையில் போட்டார்கள். உடலில் உயிர் இருந்தவர்களை நடக்கச் சொன்னார்கள். தள்ளாடித் தடுமாறி நடக்கும்போது, எந்திரத் துப்பாக்கிகளால் அவர்கள் உடல்களைச் சல்லடையாகச் சலித்தார்கள். அவர்களை அப்படியே விட்டுவிட்டுப் போனார்கள். விலாசம் இல்லாமல், மண்ணோடு மண்ணோடு நுற்றுக்கணக்கான வாழ்க்கைச் சரித்திரங்கள். 

தன்னையும், குடும்பத்தையும் பற்றிக் கவலைப்படாமல், தியங் கூ அடைக்கலம் தந்திருக்காவிட்டால், தன் கடைசி அத்தியாயமும் அன்றே  கடற்கரை மணலில் எழுதப்பட்டிருக்கும் என்பதை லீ மறக்கவேயில்லை. நாட்டின் முதல்வரான பிறகும், அவர் வீட்டுக் கதவுகள் தியங் கூவுக்கு எப்போதும் திறந்தே இருந்தன.

லீயின் கல்லூரியையும்,  தம்பி தங்கைகளின் பள்ளிகளையும் மூடிவிட்டார்கள். வெளியே போக பயம். யாராவது கதவைத் தட்டினால், ஜப்பானியச் சிப்பாய்களோ என்று நடுக்கம். நாளொரு பயமும், பொழுதொரு நடுக்கமுமாக நாட்களை நகர்த்தினார்கள்.

லீ தினமும் வீட்டுக்குளிருந்து வீதியை வேடிக்கை பார்ப்பான். பெரும்பாலும் ஜப்பானிய வீரர்கள்தாம் போவார்கள். வெறுப்பு அவன் மனதை நிறைக்கும். சில வேளைகளில் பிரிட்டீஷ் படைகள் மார்ச் செய்வார்கள். ஸ்காட்லாந்து வீரர்களும், இந்திய கூர்க்கா வீரர்களும் நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையோடு கம்பீரமாக அணிவகுப்பார்கள். ‘லெஃப்ட் ரைட்’,  ‘லெஃப்ட் ரைட்’ எனத் தங்கள் கமாண்டரின் ஆணைக்கு அவர்கள் எடுத்துவைக்கும் அடிகள், அந்த ஷூக்கள் தரையில் அழுத்தமாக மோதும்போது வரும் ஒலி – லீ காதுகளுக்கு இனிய கீதமாக இருந்தது. அவனுக்கு கூர்க்காக்கள் மேல் ஏகப்பட்ட மதிப்பும், மரியாதையும் வந்தது. பிற்காலங்களில், சிங்கப்பூரில் கலவரங்கள் வந்தபோது, அவற்றை அடக்க லீ எப்போதும் அனுப்பியது கூர்க்கா வீரர்களைத்தான்.

நாட்கள் ஓட, ஓட, அடக்குமுறைகள் மக்களுக்குப் பழகிப்போயின. நடைமுறை வாழ்க்கையின் தேவைகளுக்கும், சவால்களுக்கும் பதில் சொல்லவே நேரம் இல்லாத நிலை. சிங்கப்பூரின் பொருளாதாரம் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தது. தொடர்ந்துகொண்டிருந்த இரண்டாம் உலக யுத்தத்தால் உலக வியாபாரம் கணிசமாகப் பாதிக்கப்பட்டது. வணிகத்தில் முன்னணியில் நின்ற இங்கிலாந்தின் கவனம் போரில் இருந்ததால், வியாபாரம் இரண்டாம் இடம் பிடித்தது. இந்தக் குறைவான கப்பல்களும், ஜப்பான் ஆதிக்கத்திலிருந்த  சிங்கப்பூருக்கு வருவதைத் தவிர்த்தன. உள்நாட்டில் உற்பத்தித் தொழிலே கிடையாது. அனைத்துக்கும் அயலாரை நம்பியிருக்கும் கட்டாயம். அத்தோடு, சரக்குக் கப்பல்களின் வரத்துத்தான் வருமான ஜீவநாடி. கப்பல்கள் வரவில்லை. சாமான்கள் வரவில்லை. அப்படியே வந்தாலும், வாங்குவதற்குக் கையில் காசில்லை. விலைவாசிகள் விஷமாக ஏறின.

அப்பா வேலை பார்த்த ஷெல் (Shell) இங்கிலாந்துக் கம்பெனி. அதன் சிங்கப்பூர்க் கிளையை மூடிவிட்டார்கள். அவருக்கு வேலை இல்லை. சமையல் கற்றுக் கொடுத்து வீட்டு கஜானாவுக்குத் தன்னால் முடிந்த பணம் கொண்டுவந்த அம்மாவிடம் பாடம் கற்க யாருமே வரவில்லை. சமையலுக்கு அரிசியும், மளிகையுமே கிடைக்காமல் நாடே பற்றி எரியும்போது, சமையல் படிப்பு எதற்கு? குடும்பத்தில் வருமானம் இல்லை. அடுக்களையில் அடுப்பு எரியவில்லை. வீட்டில் ஏழு வயிறுகள் கொலைப்பசியில். பசி வந்திட மனம், குலம், கல்வி, வன்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காமம் ஆகிய பத்தும் பறந்துபோகும் என்று சொல்வார்கள். லீ குடும்பமும்  ஜப்பானிய எதிர்ப்பைக் காற்றில் பறக்கவிட்டார்கள்.

‘மாட்சிமை தாங்கிய ஜப்பானியப் பேரரசரே, உங்கள் ஆட்சியின் கீழ்ப் பணியாற்றக் காத்திருக்கிறோம். வேலை தாருங்கள்.’

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com