6.நாளை நாட்டை ஆளப்போகும் சிறுவன்

சிங்கப்பூர் வழக்கப்படி, ஏழாம் வயதில்தான் படிப்பு தொடங்கும். அப்போதுதான் சிறுவர், சிறுமியர் முதன்முதலாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுவார்கள். லீ க்கு ஆறு வயதானவுடனேயே, அம்மாப் பாட்டி, தன் பேரன் பள்ளிக்கூடம் போயாக வேண்டும்

சி
ங்கப்பூர் வழக்கப்படி, ஏழாம் வயதில்தான் படிப்பு தொடங்கும். அப்போதுதான் சிறுவர், சிறுமியர் முதன்முதலாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுவார்கள். லீ க்கு ஆறு வயதானவுடனேயே, அம்மாப் பாட்டி, தன் பேரன் பள்ளிக்கூடம் போயாக வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆசிரியர் கண்காணிப்பில் அவன் குறும்புகள் அடங்கும் என்கிற நம்பிக்கை. தன் வீட்டுக் குழந்தைகள் சீனப் பாரம்பரியத்தில் வளரவேண்டும், சீன மொழியில்தான் கற்கவேண்டும் என்பது பாட்டியின் ஆசை. அத்தகைய பள்ளிக்கூடம் அவர்கள் வீட்டுக்கு அருகேயே இருந்தது. பள்ளிக்கூடமா அது? களிமண் தரைப் போட்ட குடிசை. இரண்டு அறைகள். ஒன்று வகுப்பறை. இன்னொரு அறை கிளாஸ் டீச்சர் தங்குவதற்காகத் தரப்பட்டிருந்தது. ஆமாம், லீ படித்த முதல் பள்ளிக்கூடம், குடிசைப் பள்ளிக்கூடம்! அங்கே வந்த சக மாணவர்கள், படிப்பில் எந்தவித ஈடுபாடும் இல்லாத மீனவச் சிறுவர்கள்.

சின்ன வயது முதலே, நினைத்ததை முடித்துக்கொள்ளும் பிடிவாதம் லீக்கு உண்டு. ஆங்கிலப் புத்தகங்களைப் படித்து அந்த உலகில் வாழ்ந்த லீக்குச் சீனமொழிப் பள்ளிக்கூடம் அந்நியமாக இருந்தது. வகுப்புக்குப் போகவே பிடிக்கவில்லை. தினமும் அழுது அழிச்சாட்டியம் பண்ணுவான். தொந்தரவு தாங்கமுடியாத அம்மா, பாட்டியிடம் மன்றாடினார். அவரும் சம்மதித்தார்  பள்ளிக்கூடத்தை மாற்றலாம். ஆனால், சீன மொழிக் கல்விதான் படிக்கவேண்டும்.

வீட்டிலிருந்து ஒரு மைல் தூரத்தில் ஜூ சியாட் டெரஸ் (Joo Chiat Terrace) என்னும் இடத்தில் சூன் குவான் பள்ளி (Choon Guan School) இருந்தது. பொடியனை இங்கே சேர்த்தார்கள். முந்தைய இடம்போல் இது குடிசையில்லை. இரண்டு மாடி மரக் கட்டடம். சிமெண்ட் தரை. பத்து வகுப்பறைகள். எல்லா அறைகளிலும், 35 முதல் 40 சிறுவர்களுக்கான பெஞ்ச்கள், டெஸ்க்குள்.

லீ அப்பாத் தாத்தா தாக்கத்தால், வீட்டில் அம்மா, அப்பாவிடம் ஆங்கிலத்தில் பேசினான். அம்மாத் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஆங்கிலம் அதிகம் தெரியாது. ஆகவே, அவர்களோடு பேச்சு வார்த்தைகள், அதிக மலாய், கொஞ்சம் சீனம் கலந்த மணிப்பிரவாளத்தில். மீனவ நண்பர்களோடு மலாய் மொழியில். மொத்தத்தில், சீன மொழி அறிவு மேலெழுந்தவாரியாகவே இருந்தது. ஆகவே, இந்தச் சீனப் பள்ளியில் ஆசிரியர் கற்றுக் கொடுப்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறினான்.

இப்போது பாட்டி, பேரனின் பிரச்சனையைப் புரிந்துகொண்டார். நிலைமையைத் தொடரவிட்டால், அவன் வருங்காலமே கேள்விக்குறியாகிவிடும் அபாயத்தை உணர்ந்தார். ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கச் சம்மதித்தார். தெலோக் குரா ஆரம்பப் பள்ளி (Telok Kurau Elementary School)என்னும் ஆண், பெண் குழந்தைகள் சேர்ந்து படிக்கும் அரசாங்கக் கல்வி நிலையத்தில் லீ சேர்க்கப்பட்டான். 

லீ படிப்பில் ஜொலிக்க வேண்டும் என்பதில் அவன் அம்மா குறியாக இருந்தார். மகனுக்கு விளையாட்டுப் புத்தி. ஆரம்பத்தில் லீ படிப்பில் அதிக ஆர்வம் காட்டவில்லை. அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆகவே, தன் தம்பி கெங் ஹீ (Keng Hee) என்பவரிடம், லீயின் படிப்பைக் கண்காணிக்கும் பொறுப்பைக் கொடுத்தார். வாரம் மூன்று முறை, மாமா சாப்பாட்டுக்கு முன் ஒரு மணி நேரம் லீயோடு உட்காருவார். அப்போது லீ ஹோம் ஒர்க் பண்ணி முடிக்க வேண்டும். முடித்த பின்னால்தான் சாப்பாடு.

தவறுகள் செய்தால் கடுமையாகத் தண்டிக்கும் அப்பா, கல்வியின் மதிப்பை உணர்ந்து வழி காட்டிய குடும்பம் – லீயின் படிப்பில் அபார முன்னேற்றம். இரட்டை ப்ரமோஷன் கிடைத்தது. ஏழு வருட ஆரம்பப் பள்ளிக் கல்வி முடிந்தது. அடுத்து, அரசாங்கத்தின் நடுநிலைப் பள்ளிகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு எழுதவேண்டும். லீ கடுமையாகத் தன்னைத் தயார் செய்துகொண்டான். தெலோக் குரா ஆரம்பப் பள்ளியில் முதல் மாணவனாக வந்தான். ராஃபிள்ஸ் நிறுவனம்  (Raffles Institution) சிங்கப்பூரில் தரத்தில் முதல் இடம் பெறும் கல்வி நிலையம். நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் 150 அதிபுத்திசாலி மாணவர்களுக்கு மட்டுமே இங்கு இடம் கிடைக்கும்,  இங்கே தம் குழந்தைகளைச் சேர்க்க எல்லாப் பெற்றோர்களும் ஆசைப்படுவார்கள். பெருமைக்குரிய இந்தக் கலைமகள் கோயிலில் லீ நுழைவு பெற்றான்.

ராஃபிள்ஸ் கல்வி  நிறுவனம் இங்கிலாந்துக் கல்வி நிலையங்களின் பாணியில் நடத்தப்பட்டது. ஆங்கில மொழி, ஆங்கில இலக்கியம், கணிதம், பிரிட்டீஷ் வரலாறு, பூகோளம், அறிவியல் ஆகியவை முக்கிய பாடங்கள். கல்வி முறை, பாடங்கள் ஆகியவை இங்கிலாந்தின் சிறப்பான  பள்ளிகளுக்கு ஈடுகொடுக்கும் உயர்தரம். இங்கே, ஆங்கிலேயர்கள், சீனர்கள், இந்தியர்கள், மலாய்கள் எனப் பல நாட்டுச் சிறுவர்கள் படித்தார்கள்: இதைப்போல், ஆசிரியர்களும் பல்வேறு நாட்டுக்காரர்கள். தலைமை ஆசிரியர் ஆங்கிலேயர். இதனால் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்னும் பரந்த மனப்பான்மை லீ இளம் மனதில் ஆழப் பதிந்தது. வாழ்க்கை முழுக்கக் கடைப்பிடித்த கொள்கையானது.

கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் லீ தனித்திறமை காட்டினான். சிறப்பான மதிப்பெண்கள் வாங்கினான். டாப் மூன்று மாணவர்களில் ஒருவனாக இருந்தான். காம்ப்போஸ் (Campos) என்னும் இந்தியர் லீயின் வகுப்பாசிரியர். அவன் முன்னேற்ற அறிக்கையில் அவர் எழுதினார், “ஹாரி லீ குவான் யூ வாழ்க்கையில் உயர்ந்த பதவிகளுக்கு வருவான்.” எத்தனை தீர்க்கதரிசனக் கணிப்பு!

வகுப்பு ஆசிரியர் காம்ப்போஸுக்கு மட்டுமல்ல, எல்லா ஆசிரியர்களுக்கும் இந்தத் துறுதுறு பையனைப் பிடித்திருந்தது. கிரீவ் (Grieve) என்னும் ஆங்கிலேய இளைஞர், இங்கிலாந்தின் பிரபல ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகப் பட்டதாரி. மகா திறமைசாலி, திறமைசாலிகளை அடையாளம் கண்டு பட்டை தீட்டுவதில் சாமர்த்தியசாலி. அவர் வழிகாட்டலில், லீயின் ஆங்கிலப் பேச்சு, எழுத்துத் திறமைகள் பரிமளித்தன.

அறிவு வளர்ந்தது, மதிப்பெண்கள் குவிந்தன. ராஃபிள்ஸ் பரிசு, டான் ஜியாக் கிம் உதவித் தொகை (Tom Jiak Kim Scholarship) என்னும் கிரீடங்கள் வந்தன. 350 டாலர்கள் பணம் கையில். தாத்தாக்கள், பாட்டிகள், அம்மா, அப்பா எல்லோரும் அளவிடமுடியாத மகிழ்ச்சியில்.

”உனக்கு என்ன வேண்டும்?” – லீயிடம் கேட்டார்கள்.

”ராலே சைக்கிள்” என்றான்.

இங்கிலாந்திலிருந்து இறக்குமதியாகும் ஸ்டைல் சைக்கிள், விலை 70 டாலர்கள். அதிக விலைதான். ஆனால், தன் அறிவுக்கூர்மையால் பணத்தைச் சம்பாதித்தவன் அவன்தானே? தினமும் பள்ளிக்கூடத்துக்கு ராலேதான். சைக்கிளில் ஏறிச் ”சர்”ரென்று பறப்பான். பெருமையில் அவன் அம்மா, அப்பா மனங்களும் வானில் பறக்கும்.

லீ படிப்பில் மட்டும் சுட்டியல்ல, சகலகலா வல்லவன். சோம்பலே கிடையாது. எப்போதும் சுறுசுறுப்பு. சாதாரணமாக, படிப்பில் முத்திரை பதிக்கும் மாணவர்கள் விளையாட்டுக்களிலும், உடலை வருத்தும் முயற்சிகளிலும் ஈடுபடத் தயங்குவார்கள். லீ வித்தியாசமானவன். சாரணர் இயக்கம், கிரிக்கெட், டென்னிஸ் எனப் பம்பரமாகச் சுழன்றான். நீச்சல் குளம் அவன் மனதுக்குப் பிடித்த ஆடுகளம்: லீ ரசித்து அனுபவித்த இன்னொரு களம், மேடைகள். கம்பீரமாக முழங்குவான். ஆசிரியர்களும், சக மாணவர்களும் உன்னிப்பாய்ப் பேச்சைக் கேட்டு ஆரவாரமாய்க் கை தட்டுவார்கள். பல பரிமாணத் திறமைகள், பழகும் நயம், உள்ளக் கருத்துக்களைத் தெளிவாக, தீர்க்கமாகத் தெரிவிக்கும் வல்லமை – வருங்காலத் தலைமையின் இளவயது அடையாளங்கள்.

ஆனால், அன்று, மாணவத் தலைவர் பதவியைப் பள்ளி அவனுக்குத் தரவில்லை. காரணம், திறமைகள் இருந்த அளவுக்கு அவனிடம் குறும்புத்தனங்களும் கொட்டிக் கிடந்தன. ஆசிரியர் வகுப்பு நடத்தும்போது கவனம் காட்டமாட்டான்: துண்டுக் காகிதங்களில் ஏதேதோ எழுதி, மாணவர்களிடம் சுற்றறிக்கை விடுவான்: சில ஆசிரியர்களின் விநோதப் பேச்சு முறைகளையும், உடல் மொழிகளையும் மிமிக்ரி பண்ணுவான். ஒரு நாள்,  அறிவியல் ஆசிரியரின் வழுக்கைத் தலையைப் படமாக வரைந்தான். உடன் மாணவர்கள் சிரித்தார்கள். மாட்டிக்கொண்டான். நல்ல மதிப்பெண்கள் வாங்கிய புத்திசாலி மாணவனாக இருந்ததால், ஆசிரியர்கள் விஷமங்களைக் கண்டும் காணாமல் கண்களை மூடிக்கொண்டார்கள்.

ராஃபிள்ஸ் கல்வி  நிறுவனத்தில் லீக்கு ஒரு பெரும் பிரச்சனை இருந்தது. அது, நேரத்தில் வகுப்புக்கு வருவது. காலை எட்டு மணிக்குப் பள்ளி துவங்கும். லீ ஆந்தை மாதிரி. இரவு முழுக்கக் கொட்டக் கொட்டத் தூங்காமல் கண் விழித்திருக்க அவனால் முடியும். காலையில் கும்பகர்ணன் கெட்டான். தாமதமாகத்தான் எழுந்திருப்பான். பள்ளியின் விதிமுறைகளின்படி, மாணவர்கள் ஒரு டேர்முக்கு (Term) அதிக பட்சமாக இரண்டு முறைதான் தாமதமாக வரலாம். லீ மூன்றாம் முறை தாமதமாக வந்தான். வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர் மெக்லியாட் (McLeod) அறைக்கு அனுப்பிவைத்தார். மெக்லியாட் மகா கண்டிப்புக்காரர். லீயைக் குனிந்து நிற்கச் சொன்னார். பிரம்பை எடுத்தார். அவன் உடலில் விளாசினார். இதற்குப் பிறகு, காலையில் கொஞ்ச நேரம் அதிகமாகத் தூங்கலாம் என்னும் ஆசை வரும்போதெல்லாம், மக்லியாட் பிரம்பு நினைவுக்கு வரும், தூக்கம் ஓடிப்போகும்.

லீ வயது பதினைந்து ஆனது. விளையாட்டுப் புத்தி குறையத் தொடங்கியது, பொறுப்புணர்வு வளர்ந்தது. குடும்பச் சுமைகளை அப்பாவின் சம்பளத்தால் சமாளிக்க முடியவில்லை. அம்மா மலாய், சீனச் சாப்பாட்டு ஐட்டங்களைச் சுவையாகச் சமைப்பார். தன் கலையைப் பிறருக்குக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். வசூலித்த கட்டணம் பட்ஜெட்டில் துண்டு விழாமல் சமாளிக்க உதவியது. குடும்பத்தின் நிதி நிலை லீக்குப் புரிந்தது. தான், மூன்று தம்பிகள், தங்கை ஆகியோரின் எதிர்காலம் ஒளிமயமானதாக அமையவேண்டுமானால், தானும் குடும்பச் சக்கரத்துக்குத் தோள் தரவேண்டும் என்னும் நிதர்சனம் புரிந்தது.

இலக்கு, போகவேண்டிய பாதை தெளிவாகிவிட்டது. லீ கவனம் இலக்கில் குவிந்தது. படிப்பு, படிப்பு, படிப்பு. சீனியர் கேம்பிரிட்ஜ் பரீட்சையில் ஒட்டுமொத்த மலாயா, சிங்கப்பூரில் அதிக மதிப்பெண்கள் வாங்கி முதலிடம் பிடித்தான். லீ மனம் நிறையக் கனவுகள். லண்டன் போகவேண்டும், சட்டம் படிக்கவேண்டும், கறுப்புக் கோட்டில் கம்பீர நடை போடவேண்டும். நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்.....

லீயின் ஆசை பலூன்களில் ஊசி குத்தியது இரண்டாம் உலகப்போர். 1939 – இல் தொடங்கியது. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய அச்சு நாடுகள் (Axis Powers) ஒரு பக்கம்: இங்கிலாந்து, பிரான்ஸ், போலந்து ஆகிய நேசநாடுகள் (Allied Powers) மறுபக்கம். போர் பல வருடங்கள் நீடிக்கும் நிலை. இந்த வேளையில் இங்கிலாந்துக்குப் படிக்கப்போவது பைத்தியக்காரத்தனம். உள்ளூரிலேயே லீ படிக்கக் குடும்பம் முடிவெடுத்தார்கள்.

நாட்டின் முதல் மாணவன். சிங்கபூரின் ராஃபிள்ஸ் கல்லூரி வரவேற்று இடம் கொடுத்தார்கள். தம் மாணவர்கள் படிப்பில் ஜொலிக்கவேண்டும் என்பதற்காக ராபிள்ஸ் கல்லூரியில் ஒரு நிபந்தனை உண்டு. மாணவர்கள் கட்டாயமாக மாணவர் விடுதியில்தான் தங்கவேண்டும். கல்லூரிக்கு அருகே வீடு இருந்தாலும், விதிவிலக்குக் கிடையவே கிடையாது. ராஃபிள்ஸ் கல்லூரி  லீ-க்குத் தந்தது இடம் மட்டுமல்ல, கணிசமான உதவித் தொகையும். படிப்புக் கட்டணம், புத்தகங்கள், ஹாஸ்டல் செலவு அத்தனையும் போகக் கையில் பணம் மிஞ்சும் அளவு தாராளமான உதவித் தொகை. மிச்சப் பணத்தை அம்மாவிடம் கொடுப்பான். குடும்பச் சுமையைத் தாங்கப் பெற்றோருக்கு அவனால் முடிந்த உதவி செய்ய முடிகிறதே என்னும் திருப்தி.

அப்பா, அம்மா குடும்பத்தை விட்டுத் தனியாக இருப்பது அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. அதிலும், தம்பிகள், தங்கைகள் நினைவுகள், விளையாடிய ஆட்டங்கள், பகிர்ந்துகொண்ட பொம்மைகள், போட்ட குட்டிச் சண்டைகள், சாப்பாட்டு நேரத்துச் சம்பாஷணைகள் அடிக்கடி மனத்திரையில் ஓடும். சந்தோஷமும், சோகமும் கலந்த உணர்வு நெஞ்சை நிறைக்கும்.

இந்தச் சோகத்தை அதிகமாக்கியது கல்லூரியில் சீனியர் மாணவர்கள் செய்த ராகிங். ஜூனியர் மாணவர்களிலேயே, அவன்தான் அதிக மார்க் வாங்கியவன் என்பதால், ஸ்பெஷல் ராகிங். ஐயோ, அநியாயம், அவனைப் பழைய டை கட்டிக்கொள்ளச் சொன்னார்கள். கையில் கிழிசல் கொடியைக் கொடுத்தார்கள். ஜூனியர் மாணவர்களுக்குத் தலைமை வகித்துக் கல்லூரி வளாகத்தில் ஊர்வலம் வரச் செய்தார்கள். இன்னொரு நாள், ஒரு கோலிக்குண்டைத் தரையில் போட்டார்கள். தரையில் தவழ்ந்தபடி, அந்தக் கோலியை மூக்கால் நகர்த்திக்கொண்டே போகவேண்டும். இந்த விபரீத வேடிக்கைகள் செய்யும்போது சீனியர்கள் கூட்டமாக நின்று கேலி செய்தார்கள், கை கொட்டிச் சிரித்தார்கள்.

இவை, சக மாணவர்களை அவமதிக்கும் காட்டுமிராண்டித்தனமான செயல்கள் என்று லீ நினைத்தான். வேறு வழியில்லாமல், சீனியர்கள் சொன்னதைச் செய்தான். ஆனால், இரண்டாம் வருடத்தில் அவன் சீனியரானபோது ஒரு ஜூனியரைக்கூட ராகிங் செய்யவில்லை. தன் சகாக்கள் ராகிங் செய்வதையும், முடிந்தவரை தடுத்தான்.

நாட்கள் ஓடின. புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் நெருக்கம் ஓரளவு ஆறுதல் தந்தது. விரைவிலேயே விடுதி வாழ்க்கைக்குப் பழகிக்கொண்டான்.

கல்லூரியில் ஒவ்வொரு மாணவனும் மூன்று துறைப் பாடங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். லீ எடுத்தவை ஆங்கிலம், பொருளாதாரம், கணிதம். ஒவ்வொரு வருடமும் மூன்று டேர்ம்கள். ஒவ்வொரு டேர்ம் முடிந்தவுடன் தேர்வுகள். லீ நன்றாகப் படித்தான். மூன்று பாடங்களிலும் தனக்குத்தான் முதல் மதிப்பெண் கிடைக்கும் என்று அசைக்கமுடியாத நம்பிக்கை. மதிப்பெண்கள் வந்தன. கணிதத்தில் முதல் மார்க். பொருளாதாரம், கணிதம் இரண்டிலும் இரண்டாம் ராங்க்தான்.

முதல் இடம் பிடித்திருந்தவர் க்வா கியாக் சூ (Kwa Geok Choo) என்னும் பெண். அவள் கணிதம் எடுக்கவில்லை. வரலாறு அவளுக்கு மூன்றாம் பாடம். அதிலும் முதல் மதிப்பெண். அதாவது,. தேர்ந்தெடுத்த அத்தனை பாடங்களிலும் அவள்தான் முதல் மாணவி. ‘நம்மை யாரோ மிஞ்சிவிட்டார்களே?’ என்று லீ மனதில் ஏகப்பட்ட ஏமாற்றம், அதிர்ச்சி. வகுப்பில் ஒரு மாணவனுக்குத்தான் கல்வி உதவித்தொகை கிடைக்கும். நம் ஸ்காலர்ஷிப்பை இவள் தட்டிக்கொண்டு போய்விடுவாளே, குடும்பத்துக்கு உதவ முடியாதே என்னும் பயம். அந்தப் பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம், அவள் அறிவுக்கூர்மை மீது  மதிப்பு வந்தது. அவளிடம் ஆரோக்கியமான பொறாமை எழுந்தது.

போட்டி என்று வந்துவிட்டால் விட்டுக்கொடுக்கவே கூடாது, தோல்விகள் வந்து கீழே விழும்போது, இன்னும் அதிக வீரியத்தோடு எழ வேண்டும் என்பது தன் மீனவ நண்பர்களிடம் லீ கற்றிருந்த பாடம். ஆகவே, இன்னும் கடுமையாக உழைக்கத் தொடங்கினான். 

அப்போது அவனுக்குத் தெரியாது, இன்னும் சில மாதங்களில் அவன் வாழ்விலும், சிங்கப்பூரின் வாழ்விலும் வரப்போகிறது ஒரு சுனாமி என்று.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com