7. (தடு)மாற்றங்கள்

லீ வயது 17. வீடு என்பது ஒரு கூடு. அங்கே இருக்கும்வரை, பெற்றோர் தம் குழந்தைகளைச் சிறகால் மூடி, கண்ணின் மணிபோல, மணியின் நிழல்போலப்

லீ
 வயது 17. வீடு என்பது ஒரு கூடு. அங்கே இருக்கும்வரை, பெற்றோர் தம் குழந்தைகளைச் சிறகால் மூடி, கண்ணின் மணிபோல, மணியின் நிழல்போலப் பாதுகாப்பாக வளர்ப்பார்கள். வெளி உலகின் நிஜங்களும், சில கொடூர முகங்களும் குழந்தைகளுக்குத் தெரியவே தெரியாது. ஆனால், கல்லூரியில் சேரும்போது, அதுவும் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து சக மாணவர்களோடு விடுதிகளில் வாழும்போது, இந்த நிஜங்கள் இளைஞர்களுக்குத் தெரியும். அதிர்ச்சிகொள்வார்கள். மெள்ள மெள்ள இவற்றை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக்கொள்வார்கள்.

லீ வாழ்விலும் வந்தது இந்த அதிர்ச்சி. கல்லூரிக்கு வரும்வரை, ஜாதி, மதம், இனம், மொழி, தேசம் ஆகிய வேறுபாடுகள் பற்றி அவனுக்குத் தெரியவே தெரியாது. ராஃபிள்ஸ் பள்ளியில் எல்லோரும் ஓரினம், ஓர் குலம். பிரிட்டீஷ் ஆட்சி உருவாக்கியிருந்த சூழல் இது. ராஃபிள்ஸ் கல்லூரி, மலாய், சீனர்கள், இந்தியர்கள், ஆங்கிலேயர்கள், ஐரோப்பியர்கள் எனப் பல்வேறு வகை மாணவர்கள் சங்கமிக்கும் கடலாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு பிரிவினரும் தீவுகளாக வாழ்ந்தார்கள். அதிலும் குறிப்பாக மலாய்கள்.   

மலாய் நாடு, தன் மண்ணின் மைந்தர்களை மற்றவர்களைவிட உயர்ந்தவர்களாக நடத்தியது. உதாரணமாக, ராஃபிள்ஸ் கல்லூரியில், இருபதுக்கும் மேற்பட்ட மலாய் மாணவர்கள் அரசாங்கத்தின் கல்வி உதவித் தொகையில் படித்தார்கள்: பிற இனத்தவர் அத்தனை பேருக்கும் சேர்த்து இருந்த ஸ்காலர்ஷிப்கள் ஐந்தே ஐந்துதான்! இதனால், பிற மாணவர்களுக்குச் சக மலாய்கள் மீது மன வருத்தம், அதே சமயம், சீனர்களும், இந்தியர்களும் படிப்பில் திறமைசாலிகளாக இருந்தார்கள், உயர்ந்த மதிப்பெண்களும், ராங்குகளும் பெற்றார்கள். இதனால், மலாய் மாணவர்களுக்குச் சீன, இந்திய சகாக்கள் மீது பொறாமை.

மலாய் மாணவர்களுக்குள் எக்கச்சக்க ஒற்றுமை இருந்தது. அவர்களுக்குள் யாருக்காவது பிரச்னை வந்தால், அத்தனை பேரும் ஒரே அணியாகக் களத்தில் குதித்தார்கள். சீன, இந்திய மாணவர்களுக்குள் இந்த உணர்வும் ஒத்துழைப்பும் இருக்கவில்லை.    

மாணவர்களிடையே குமுறிக்கொண்டிருந்த மலாய், மற்றவர்கள் என்னும் பிரிவினை உணர்வுகள் ஒருநாள் வெடித்தன. எந்த முயற்சியும் எடுக்காமலே, லீ இந்தப் பிரச்னையின் மையத்துக்கு இழுக்கப்பட்டான்.

ராஃபிள்ஸ் கல்லூரி மாணவர் யூனியன் டின்னர் ஒன்றை ஏற்பாடு செய்தது. இது வருடாந்தர நிகழ்ச்சி. கடந்த நாட்களின் பசுமை நிறைந்த நினைவுகளை அசைபோட்டு, சீனியர் மாணவர்களுக்குப் பிரியாவிடை கொடுத்து, கேலியும், கும்மாளமும், அடிவருடும் சோகமுமாய்ச் செலவிடும் நேரம். மாணவர்கள் மறக்கமுடியாத, மறக்க விரும்பாத நாள். ஆனால், 1940-இல், ராஃபிள்ஸ் கலலூரி மாணவர்கள் மனங்களில் கசப்பான அனுபவங்களாகப் பதிந்துவிட்டது.

இந்த டின்னரை பொறுப்பேற்று நடத்தியவர், யூனியனின் செயலாளர் உங்கு அபீஸ் பின் அப்துல் ஹமீது (Ungu Abiz Bi Abdul Hamid) என்பவர். இவர் மலாய் நாட்டுக்காரர். விருந்தில், மலாயர் தவிர்த்த மற்ற்வர்களை அவமதித்தார். இதுவரை ஒன்று சேராத மற்றவர்களை, இந்தச் செயல் அணிதிரள வைத்தது. அவர் பதவி விலக வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள். இதற்காக, யூனியனின் அவசரப் பொதுக்குழுக் கூட்டம் வேண்டுமென்று உரிமைக்குரல் எழுப்பினார்கள்.

மலாய் மாணவர்கள் ஹமீது ஆதரவாக நின்றார்கள். அவர் பதவியில் தொடர்வார். எக்காரணம் கொண்டும் அவரை நீக்கினால், கலவரங்கள் வெடிக்கும் என்று பயமுறுத்தினார்கள். பொதுக்குழு கூடியது. மலாய் தவிர்த்த மற்றவர்கள் அணி, தங்கள் பிரசார பீரங்கியாக, பேச்சுப் போட்டிகளில் பரிசுகள் வாங்கிக் குவித்துக்கொண்டிருந்த லீயைத் தேர்ந்தெடுத்தார்கள். லீ பொறுப்பை ஏற்றான். அவனுடைய நீண்ட நெடும் தலைமைப் பயணத்தில் இது முதற்படி என்று யாருக்குமே தெரியாது அன்று.

லீ வாதங்களை வரிசைக் கிரமமாக, தர்க்கரீதியாக அடுக்கினான். ஹமீது தங்கள் மீது குவித்த அவமானம், ஒரு தனிமனிதனின் இனத்துவேஷம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மலாய் மக்களின் பிற இன வெறுப்பின் வெளிப்பாடு என்று தெளிவாக்கினான். அத்தனை குற்றச்சாட்டுகளையும் ஹமீது மறுத்தார். மலாய் மாணவர்கள் தங்கள் அணியினர் அனைவரையும் சிரத்தையோடு, சிரமம் பல பட்டு அழைத்து (இழுத்து) வந்திருந்தார்கள். அந்த ஒற்றுமை, லீ அணியினரிடம் இருக்கவில்லை. வோட்டு எடுக்கப்பட்டது. லீ அணி தோற்றது. ஹமீது பதவியில் தொடர்ந்தார்.

லீ அணி தோற்றிருக்கலாம், ஆனால், இந்த அனுபவம் அவனுக்குத் தலைமை, அரசியல் எதிரிகளை எதிர்மோதுதல் ஆகியவற்றில் பாலபாடம் கற்றுகொடுத்தது. அவனுடைய அணித் தோழர்கள் பலர் பின்னாள்களில்  சிங்கப்பூரின், அரசியல், ஆட்சிபீடம், பொதுவாழ்க்கை போன்ற துறைகளில் கொடிகட்டிப் பறந்தார்கள். சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும், லீயின் உயர்வுக்கும் உதவினார்கள்.

அது சரி, அவனுக்கு எதிரணியில் இருந்தவர்களில் பலர் மலாயாவின் ஆட்சிபீடங்களிலும், அரசியலிலும் பலமான சக்திகளாக இருந்தார்களே? அவர்கள் காலப்போக்கில் தங்கள் காழ்ப்புகளை மறந்தார்களா அல்லது வன்மம் காட்டினார்களா? இவற்றைவிட முக்கியமாக, லீ இந்தக் கசப்புகளை மறந்தானா? பதில்களைக் காலம் சொல்லும். அதற்கு முன்னால், அவனையும்,   சிங்கப்பூரையும் எதிர்நோக்கி வந்துகொண்டிருக்கின்றன பல பேரதிர்ச்சிகள்.

லீ வாழ்க்கையில் மட்டுமல்ல, உலக அரங்கிலும் 1940-ல் மிக முக்கியமான நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. 1939-ல் போலந்து நாட்டின் மீது ஜெர்மனி படையெடுத்து இரண்டாம் உல்கப் போரைத் தொடங்கிவைத்தது. ஆனால், இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே, ஜப்பான் உலகப் போருக்கு அச்சாரம் போட்டுவிட்டது. 1937-ல், சீனத் தலநகரான பெய்ஜிங் போகும் மார்க்கோபோலோ பாலத்தை ஜப்பான் தாக்கியது. ஒன்பது ஆண்டுகள் இந்தப் போர் தொடர்ந்தது. ஜப்பானிடம் தரைப்படை, போர்க் கப்பல்கள், படை விமானங்கள் என வகை வகையான ராணுவ பலம். எனவே, சீனா நிச்சயமாகத் தோல்வியைத் தழுவும் என்று எல்லா நாடுகளுக்கும் தெரியும். வீணாகச் சீனாவை ஆதரித்து ஜப்பானின் விரோதத்தைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டாம் என்று கருதி இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் கண்ணை மூடிக்கொண்டன.

ஜப்பான், சீன மண்ணில் முன்னேறத் தொடங்கியது. நாஞ்ஜிங் (Nanjing) நகரத்தைக் கைப்பற்றினார்கள். அப்போது பிடித்தது ஜப்பானுக்கு சனி. நாஞ்ஜிங் நகரத்தில் ஏராளமான அமெரிக்கர்கள் வசித்தார்கள். இவர்களைப் பாதுகாப்புக்காகத் தாயகத்துக்குக் கப்பல் மூலம் அமெரிக்கா அழைத்துச் சென்றுகொண்டிருந்தார்கள். இந்தக் கப்பலின்மேல் ஜப்பான் விமானங்கள் குண்டுகளை வீசின. மூன்று பேர் மரணம். 48 பேர் படுகாயம். அமெரிக்கா கொதித்தது. பழிக்குப் பழி வாங்க முடிவு செய்தது.

இப்போது ஜப்பானின் இன்னொரு வெறியாட்டம். ஜப்பான் ராணுவம், யுத்தம், ராணுவம் ஆகியவற்றோடு தொடர்பே இல்லாத இரண்டு லட்சம் நாஞ்ஜிங் நகரின் சாதாரணக் குடிமக்களைக் கொன்று குவித்தது. இருபதாயிரத்துக்கும் அதிகமான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்கள். இந்தக் கொடுமை, கையைக் கட்டிக்கொண்டிருந்த பல நாடுகளின் கண்களைத் திறந்தது. இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் சீனாவின் உதவிக்கு வந்தன.

இவர்களுக்கு எதிராக ஆசிய நாடுகளை இணைக்கும் ராஜதந்திர வேலைகளில் ஜப்பான் இறங்கியது. பரந்துபட்ட கிழக்காசியச் செழிப்பு உலகம் (Greater Asia Prosperity Sphere) என்னும் கொள்கையை அறிவித்தது. இந்தக் கொள்கையின் முழக்கம், ஆசியா ஆசியருக்கே. இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ்,  ஹாங்காங், மலாயா, சிங்கப்பூர் ஆகிய அத்தனை நாடுகளையும் தன் கொடியின் கீழ் கொண்டுவந்து, சர்வ வல்லமை பொருந்திய ஜப்பானிய சாம்ராஜ்ஜியம் அமைப்பதுதான் குறிக்கோள். 

வெறிபிடித்த மதயானைபோல் ஜப்பானின் நடவடிக்கைகள். டிசம்பர் 6 முதல் மூன்று நாட்கள் பரபரப்பு. ஜப்பானின் செயல்கள் உச்சம் தொடுகின்றன.

டிசம்பர் 6  

அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட், ஜப்பான் பேரரசர் ஹிரோஹிட்டோவுக்கு வேண்டுகோள் விடுத்தார், அமைதியைக் காப்பாற்றுங்கள், இந்தோசீனாவை விட்டு வெளியேறுங்கள்.

டிசம்பர் 7 

ஹிரோஹிட்டோ பதிலடி கொடுத்தார். அது பதில் அல்ல. அமெரிக்காவுக்குப் பளார், பளார். அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் பேர்ள் துறைமுகம் (Pearl Harbour) இருக்கிறது. பசிபிக் கடலில் அமைதி காக்கவும், குறிப்பாகப் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குப் பாதுகாப்புத் தரவும், அமெரிக்கா இங்கே கடற்படைத் தளம் அமைத்திருந்தது. போர் விமானங்கள் ஏந்திய ஜப்பானின் ஆறு போர்க் கப்பல்கள் பேர்ள் துறைமுகத்தை நெருங்கின. 353 போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. எத்தனை மகத்தான உயிரிழப்பு, சேதம் தெரியுமா? நான்கு அமெரிக்கப் போர்க் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. மிச்சமிருந்த நான்கு, சேதப்பட்டன. 188 அமெரிக்கப் போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. 2402 கடற்படை வீரர்கள் உயிரிழந்தார்கள். 1282 பேருக்குக் காயம்.

ஜப்பான், அமெரிக்கச் சிங்கத்தின் குகைக்குள்ளேயே நுழைந்து செய்த அடாவடிச் சேதம், இங்கிலாந்தின் நாடி நரம்புகளில் அச்சத்தை ஓடவிட்டது. அவர்களும், 1939-ல், சிங்கப்பூரில் பிரிட்டீஷ் கப்பற்படைத் தளம் அமைத்திருந்தார்கள். ஜப்பான், சிங்கப்பூரைத் தாக்கிவிட்டால்... இங்கிலாந்தின் இந்த சஸ்பென்ஸ் நீடிக்கவில்லை. கிடைத்தது பதில் சில மணி நேரங்களில். 

டிசம்பர் 8 

அதிகாலை 4 மணி. ஓராயிரம் இடிகள் சேர்ந்து விழுந்ததுபோல் சத்தம். லீயும் பிற மாணவர்களும் திடுக்கிட்டுத் தூக்கம் கலைந்து எழுந்துவருகிறார்கள். அவர்கள் முகங்கள் எல்லாம் அதிர்ச்சி, பயம். ரோடில் மக்கள் ஓடும் சப்தம். அவர்களின் அழுகைகள், ஓலங்கள். சிறிது நேரத்தில் மாணவர்களுக்குச் சேதி தெரிகிறது. சிங்கப்பூர் மீது ஜப்பான் குண்டு வீசிவிட்டது. அந்நிய விமானங்கள் நுழையும்போது, சிங்கப்பூரில் எல்லா விளக்குகளையும் அணைத்திருக்க வேண்டுமே, அபாயச் சங்குகள் அலறியிருக்க வேண்டுமே? ஏன், ஒன்றுமே நடக்கவில்லை? இத்தனை ரகசியமாக, படு சாமர்த்தியமாகத் தாக்கிவிட்டதே ஜப்பான்?  

கல்லூரி பிரின்சிபால், பேராசிரியர்கள் ஆகியோருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்களுக்கு மட்டுமா, அரசு அதிகாரிகளுக்கும்தான். அரசு எந்திரமே ஸ்தம்பித்துவிட்டது. ஒரு சில நாட்களில், மாணவர் விடுதி காலியாகத் தொடங்கியது. வெளியூர் மாணவர்கள் தங்கள் ஊர்களுக்கு ஓட்டம் பிடித்தார்கள். லீ போன்ற உள்ளூர்க்காரர்களும், தங்கள் வீடுகளில் தஞ்சமடைந்தார்கள். சுவர்களுக்கா பாடம் சொல்லிக் கொடுக்கமுடியும்? கல்லூரி, காலவரையறையின்றி மூடப்பட்டது.

போர் முயற்சிகளில் நாட்டுக்கு உதவுவதற்காக, ராஃபிள்ஸ் கல்லூரி மருத்துவ உதவிக் குழு ஒன்று தொடங்கினார்கள். போரில் காயமடையும் மக்களுக்கு மருத்துவ உதவியளிப்பது இந்தக் குழுவின் குறிக்கோள். சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட லீ, இந்தக் குழுவில் சேர்ந்தான்.

ஒவ்வொரு நாளும் வந்துகொண்டிருந்த யுத்தச் செய்திகள், ஒவ்வொரு பகுதியாக சிங்கப்பூர் மண்ணில் ஜப்பான் முன்னேறி வருவதைக் கட்டியம் கூறின. மலேயா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாட்டுப் பகுதிகள் ஜப்பானிய வரைபடத்தில் இணைந்துகொண்டிருந்தன. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் உதவிகள் செய்துகொண்டிருந்த உள்ளூர் மக்கள், உயிருக்குப் பயந்தார்கள். சிங்கப்பூருக்கு ஓடி வந்தார்கள். சிலர் அங்கிருந்து கப்பல்களில் வெளிநாடுகளுக்குப் போனார்கள். சிலர் தங்கள் உறவுகள், நண்பர்கள் வீடுகளில் பதுங்கினார்கள். சிங்கப்பூருக்குள் ஜப்பானியப் படைகள் இன்னும் வரவில்லை. ஆனால், அவர்கள் தினமும் வீசிய குண்டுகள், ‘சிங்கப்பூரே, நாங்கள் உன்னைக் கைப்பற்றும் நாட்களை எண்ணிக்கொள்’ என்று எச்சரித்தன.

பெப்ருவரி 8. சிங்கப்பூரின் தெற்குப் பகுதியான சரிம்பன் (Sarimbun), க்ராஞ்சி (Kranji) இரண்டும் ஜப்பான் கையில். நாட்டின் மையப் பகுதியில் புகிட் திமா (Bukit Thima) பகுதி இருக்கிறது. இந்த இடம்தான், இங்கிலாந்துப் படையினரின் உணவு, ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவற்றின் சேமிப்புக் கிடங்கு. அங்கிருந்த மலைப்பகுதி அணைகட்டுதான் நாட்டின் முக்கிய நீர்ச் சேமிப்பு மையம். புகிட் திமா வீழ்ந்துவிட்டால், தங்கள் கதி அதோகதி என்று உணர்ந்த பிரிட்டீஷார், கடுமையாகப் போரிட்டனர். ஆனால், ஜப்பானிடம் வீரர்கள், விமானங்கள், வெடிகுண்டுகள் என்று கணக்கிலடங்கா மிருகபலம். பெப்ருவரி 11. புகிட் திமா வீழ்ந்தது. இப்போது, நாட்டின் எல்லாக் கதவுகளையும் திறந்துவைத்த மாதிரிதான். எல்லாத் தெருக்களிலும் ஜப்பான் வீரர்கள். 

லீ வீட்டுக்கு அருகே குண்டுகள் வெடிக்கும் சத்தம். மெள்ள வெளியே வந்து பார்த்தான். சாம்பல் நிற யூனிஃபார்ம் அணிந்து, கையில் துப்பாக்கியுடன் இரண்டு பேர் நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். நடையைப் பார்த்தாலே தெரிந்தது, அவர்கள் ராணுவ வீரர்கள். லீ மனத்தில் கேள்வி – இங்கிலாந்து ராணுவ யூனிஃபார்ம் பச்சை நிறமல்லவா? அப்படியானால், இவர்கள் யார்? அவன் மூளை ஒரு விநாடி வேலை செய்ய மறுத்தது. உடனேயே மின்னல் வெட்டியது. இவர்கள் ஜப்பான் வீரர்கள். அப்படியானால்... அப்படியானால்... சிங்கப்பூருக்குள் ஜப்பான் நுழைந்துவிட்டது.

ஜப்பான் முன்னேறி வரும்போது, பிரிட்டீஷ் படைகள் அவர்களை விரைவில் தோற்கடித்துவிடும் என்று லீ நம்பினான். அவன் மட்டுமா, ஒட்டுமொத்த சிங்கப்பூரும் நம்பியது. அந்த நம்பிக்கை பொய்த்துவிட்டதே? ஜப்பானியப் படைகள் ஈவு இரக்கமில்லாமல் சாமானியர்களைச் சித்திரவதை செய்வதாகவும், தூக்கிலிடுவதாகவும், பொதுச் சொத்துகளைச் சூறையாடுவதாகவும், தீயிடுவதாகவும், அவர்கள் அடியெடுத்துவைத்த அத்தனை நாடுகளும் கண்ணீரிலும் ரத்தத்திலும் சோகக் கதைகள் சொல்கிறார்களே? அந்தக் கதி சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருக்கிறதே? ஐயோ, என் குடும்பம் என்னாகுமோ, நாடு என்னாகுமோ, உடல் பதறியது. வீட்டுக்குள் ஓடினான். பயம், நடுக்கம் குடும்பத்துக்கும் பரவியது. வீட்டு ஜன்னல்களை இழுத்து மூடினார்கள். இரவில், அவர்கள் வீட்டில் விளக்குகளே எரியவில்லை. அவன் வீட்டில் மட்டுமல்ல, எல்லா வீடுகளிலும்தான்.

பிரிட்டீஷ் படைகள் பின்வாங்கிக்கொண்டே இருப்பதாகவும், சிங்கப்பூரின் பகுதிகள் ஒவ்வொன்றாக ஜப்பான் ஆதிக்கத்தில் வந்துகொண்டிருப்பதாகவும் சேதிகள் வரத் தொடங்கின. நடப்பது நடக்கட்டும் என்று எது வந்தாலும் ஏற்கும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். 

பெப்ருவரி 15. சீனப் புதுவருடம்.  புத்தாடை உடுத்தி, புது ஷூக்கள் அணிந்து, வகை வகையான பாரம்பரிய உணவுகளும், கேக்களும் சமைத்து, மொத்தக் குடும்பமும் சேர்ந்து சாப்பிட்டு, கோலாகலமாகக் கொண்டாடும் திருநாள். இந்த வருடம் இருண்ட ஆரம்பம், அடுத்த புதுவருடத்தைப் பார்ப்போமா என்னும் பயம் நிறைந்த சந்தேகத் தொடக்கம். புகிட் திமாவில் உள்ள ஃபோர்ட் மோட்டார் கம்பெனி அலுவலத்தில் பிரிட்டீஷ் படையினர், ஜப்பானிடம் சரணடைந்தார்கள். தொடங்கியது ஜப்பானியர் ஆட்சி. சிங்கப்பூர் மக்கள் வாழ்க்கையில் கண்ணீரிலும் ரத்தத்திலும் எழுதப்படப்போகும் நாள்கள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com