19. எழுபத்தி நான்கிற்கு எழுபத்திமூன்று

ஜப்பான். அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட முப்பத்திநான்கு நாடுகள் ஒன்றிணைந்து ORGANISATION FOR ECONOMIC COOPERATION AND DEVELOPMENT என்றொரு அமைப்பினை தங்களுக்குள் உருவாக்கியுள்ளன.

ஜப்பான். அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட முப்பத்திநான்கு நாடுகள் ஒன்றிணைந்து ORGANISATION FOR ECONOMIC COOPERATION AND DEVELOPMENT என்றொரு அமைப்பினை தங்களுக்குள் உருவாக்கியுள்ளன. OCED என்று இந்த அமைப்பு சுருக்கமாக அழைக்கப்படுகிறது. அந்த அமைப்பின் முப்பத்தி நான்கு உறுப்பு நாடுகளும் OCED நாடுகள் என்றழைக்கப்படுகின்றன.

இந்த நாடுகள் தங்களது மாணவர்களின் கல்வித் தரத்தை சுய மதிப்பீடு செய்து கொள்வதன் மூலம் தங்களது குழந்தைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த முடியும் என்பதை உணர்ந்தன. பதினைந்து வயதுள்ள தங்களது பள்ளிக் குழந்தைகளின் கல்வித் தரத்தை மதிப்பீடு செய்ய PROGRAMME FOR INTERNATIONAL STUDENT ASSESSMENT என்றொரு அமைப்பை இதற்காக அவை உருவாக்கின. சுருக்கமாக இந்த அமைப்பு PISA (பிசா) என்று அழைக்கப்படுகிறது.

பாரிசை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘பிசா’ இந்த முப்பத்துநான்கு நாடுகளைத் தவிர எந்த ஒரு நாட்டையும் தனக்குள் இணைத்துக் கொள்வதில்லை. ஆனால் தனது நாட்டுக் குழந்தைகளின் கல்வித் தரத்தை மதிப்பீடு செய்து தருமாறு எந்த ஒரு நாடு கோரினாலும் அந்தப் பணியை பிசா செய்து தருகிறது.

வாசித்தல், கணிதம், அறிவியல் ஆகிய மூன்று தளங்களிலும் பிசா மாணவர்களை ஆய்விற்கு உட்படுத்துகிறது. உள்வாங்குதல், உள்வாங்கியதை நடைமுறைக்கு பயன் படுத்துதல் (adaption and application) என்பதையே கற்றலின் சாரமாக, அறிவாக பிசா கருதுகிறது.

நிறைய நாடுகளுக்கு பிசாவின் மதிப்பீடு பிடித்துப் போகவே அவை தங்களது குழந்தைகளின் கல்வித் தரத்தையும் மதிப்பீடு செய்து தருமாறு பிசாவைக் கோரின. 2009 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவும் பிசாவை அணுகியது.

இந்த வகையில் இந்தியாவையும் சேர்த்து எழுபத்தி நான்கு நாடுகளை 2009 ஆம் ஆண்டு ஆய்வு செய்தது. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்நாடு மற்றும் இமாசலப் பிரதேசத்தை சேர்ந்த மாணவர்களை மட்டுமே அது ஆய்விற்கு எடுத்துக் கொண்டது.

நமது நாட்டைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் மட்டுமே பிசா தனது ஆய்வை நடத்தியது.

நமது நாட்டைப் பொறுத்தவரை எழுத்துக்கூட்டி வாசித்தலும் ஏறத்தாழ பதினைந்து வளைவுகளுடன் இந்த மூலையில் தொடங்கி அந்த மூலை வரைக்கும் கந்தசாமி என்ற தனது பெயரை காந்தசமி என்று எழுதத் தெரிந்தவரும் எழுத்தறிவு பெற்றவரே. ஆனால் எழுத்துகூட்டி வாசிப்பதையோ மனனம் செய்து ஒப்பிப்பதையோ எழுத்தறிவு என்று பிசா ஏற்பதில்லை. மாறாக செய்திகளையோ தகவல்களையோ வாசித்துப் புரிந்து கொள்வதும், வாசித்துப் புரிந்து கொண்டதை பிறர் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்து சொல்வதுமே எழுத்தறிவு ஆகும் என்று பிசா கருதுவதாக ‘ஏ! கல்வியில் தாழ்ந்த தமிழகமே’ எனும் தனது நூலில் கூறுகிறார் தோழர் நலங்கிள்ளி.

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள். சுயநிதிப் பள்ளிகள் என்று பரந்த தளத்திலிருந்து மாணவர்களை தனது ஆய்விற்காக பிசா தெரிவு செய்தது. இரண்டு மணி நேரம் அது தனது தேர்வை நடத்தியது.

சில செய்தித் துணுக்குகளை அது மாணவர்களுக்கு வழங்கியது. அதற்கு கீழே சில கேள்விகள் கொடுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கேள்விக்கு கீழும் நான்கு விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் இருந்து சரியானதொரு விடையை தேர்ந்தெடுத்து மாணவர்கள் எழுத வேண்டும்.

ஒரு சம்பவமோ அல்லது கதையோ கொடுக்கப்பட்டிருக்கும். பிறகு அதன் சாரம் மாறாமல் ஆனால் வரிசை மாற்றப்பட்டு நான்கைந்து வாக்கியங்கள் கொடுக்கப் பட்டிருக்கும். அவற்றை சரியான வரிசையில் மாணவர்கள் எடுத்து எழுத வேண்டும்.

மிக எளிதான இந்தத் தேர்வில் நாம் எழுபத்தி மூன்றாவது இடத்தில் இருக்கிறோம். அதாவது பிசா ஆய்வு செய்த எழுபத்திநான்கு நாடுகளில் உள்ள பள்ளிக் குழந்தைகளின் கல்வித் தரப் பட்டியலில் நாம் எழுபத்திமூன்றாவது இடத்தில் இருக்கிறோம். அதாவது எழுபத்திநான்கிற்கு எழுபத்தி மூன்று.

புரிந்து கொள்வதும், விவாதித்து தெளிவு பெறுவதும் அதன் மூலம் சமூகச் சிக்கல்களைத் தீர்க்க பயன்படுத்துவதும்தான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக எப்படியேனும் தேர்ச்சி பெறுவதும் மதிப்பெண் பெறுவதுமே நம் நாட்டில் கல்வியின் நோக்கமாகிப் போனது. அதன் விளைவாகத்தான் எழுபத்திநான்கிற்கு எழுபத்திமூன்று என்ற இடத்தில் நாம் இருக்கிறோம்.

கல்வி சிறந்த தமிழ்நாடு என்றான் பாரதி. பிசா அறிக்கையை முன்னிறுத்தி கல்வியில் தாழ்ந்த தமிழகம் என்கிறார் நலங்கிள்ளி.

தோழர் நலங்கிள்ளிக்கு தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்விமீது அப்படி என்ன கோவம்? வேறொன்றும் இல்லை, பாரதி காலத்தில் மாணவனை சான்றோனாக்க முயற்சித்த கல்வி கட்டமைப்பு இன்று அவனை மனனம் செய்யும் எந்திரமாக மாற்றி வைத்திருக்கிறது.

மாணவனுக்கு புரிய வைக்க வேண்டும், அவன் தெளிவு பெறும் வரை திரும்பத் திரும்ப நடத்த வேண்டும் என்பதில் அக்கறையோடிருந்த கல்விக் கட்டமைப்பு இன்று காணாமல் போனது. அப்படியே மனப்பாடம் செய்யாத, புரிந்து படி என்று ஆசிரியர்கள் மாணவர்களை நெறிப்படுத்திய காலம் மாறி புரியுதோ புரியலையோ மனப்பாடம் செய் என்று குழந்தைகளை எந்திரமாக மாற்றியிருக்கிறோம்.

அதுவும்கூட ப்ளூபிரிண்ட் (BLUE PRINT) நகலை அட்டையில் ஒட்டி வகுப்பறைச் சுவர்களில் மாட்டி வைத்திருக்கிறோம். பிள்ளைகள் அதையும் பிசிறு இல்லாமல் மனப்பாடம் செய்து விடுகிறார்கள். இப்போது எந்தப் பாடம் வாழ்க்கைக்கு முக்கியமானது என்பது பற்றியெல்லாம் மாணவர்களுக்கு தெரிவதில்லை. தெரிவதில்லை என்பதுகூட அல்ல, அக்கறை இல்லை என்பதே உண்மை. எந்த பாடத்திற்கு எவ்வளவு மதிப்பெண் என்பதைத்தான் பிள்ளை பாடங்களை படிக்கும் முன்பு படித்து தெளிவு பெறுகிறான். மதிப்பெண்கள் இல்லாத அல்லது மதிப்பெண்கள் குறைவாக உள்ள பாடத்தை அது வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியமானதாக இருந்தாலும் படிக்காமல் கடந்துவிடுகிறான்.

மனனம் செய்து மதிப்பெண் குவிக்கும் குழந்தைகளுக்கு புரிந்து கொள்ளும் ஞானம் இல்லாமல் போகிறது. பிசா வைத்த மிக எளிய தேர்வுகளில்கூட நம் குழந்தைகளால் தேர்ச்சிபெற இயலாமல் போகிறது. எழுபத்திநான்கு நாடுகளில் எழுபத்திமூன்றாவது இடத்திற்கு நாடு வந்திருக்கிறது.

அவர்கள் வைத்த தேர்வில் ஒன்றைப் பார்ப்போம். குருதிக்கொடையின் அவசியம் குறித்த விளம்பரம் ஒன்றினைக் கொடுக்கிறார்கள். அந்த விளம்பரத்தின் இறுதியில் பதினெட்டு வயது முதல் அறுபது வயதுவரை உள்ளவர்கள் குருதியைக் கொடையளிக்கலாம் என்றும் ஒருவர் எட்டுவார இடைவெளியில் எத்தனைமுறை வேண்டுமானாலும் குருதியைக் கொடை அளிக்கலாம் என்றும் இருக்கிறது. இப்போது கீழே உள்ளவாறு ஒரு கேள்வியை அவர்கள் கேட்கிறார்கள்,

பத்தொன்பது வயது பெண் ஒருவர் கடந்த பன்னிரெண்டு மாதங்களில் இரண்டுமுறை குருதியைக் கொடையளித்திருக்கிறார். இப்போது மீண்டும் கொடை அளிக்க ஆசைப் படுகிறார். அவருக்கு நீங்கள் என்ன ஆலோசனை கூறுவீர்கள் என்பதே கேள்வி.

மிகவும் எளிதான கேள்வி. நம்மிடம் ஆலோசனைக்காக வந்துள்ள பெண்ணிடம் ஒரு வருடத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் குருதியை கொடை அளிக்கலாம். அனால் ஒரு முறைக்கும் மறு முறைக்கும் இடையே குறைந்தது எட்டு வாரங்களேனும் இடைவெளி இருக்க வேண்டும். அவள் குருதி கொடையளித்து எட்டு வாரங்கள் கடந்திருக்கும் எனில் தாராளமாக இப்போதும் தரலாம் என்று ஆலோசனை தர வேண்டும்.

இந்த எளிய வினாவிற்கான விடையைத் தருவதில் தமிழத்து மாணவர்கள் தடுமாறியிருக்கிறார்கள். முப்பத்தி ஐந்து விழுக்காடு மாணவர்களே இதில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

இதுதான் தோழர் நலங்கிள்ளியை கவலைப்படுத்தியிருக்கிறது. ‘கவியில் தாழ்ந்த தமிழகமே’ என்ற அவரது குரல் கவலை தோய்ந்த குரல். அக்கறை கசியும் குரல்.

பூச்சியத்திற்கே மதிப்பைக் கொடுத்த தமிழ் மண்ணில், கட்டிடத் தொழில் நுட்ப அறிவிற்கு சான்றாக பல்வேறு ஆலயங்களை அணைகளை கொண்டிருக்கும் நாட்டில் இதுமாதிரி எளிய வினாக்களுக்குக்கூட நம் குழந்தைகள் தடுமாறுகிற நிலை ஏன் வந்தது?

இதற்கான ஆகப் பெரிய காரணங்களுள் ஒன்று தேர்ச்சி விழுக்காட்டிலும் மதிப்பெண் குவிப்பதிலும் நாம் காட்டிய கவனத்தை நாம் அறிவைக் கொடுப்பதில் நாம் செலுத்தவில்லை. ஆசிரியர்கள் குழந்தைகளிடம் ‘பார்த்து, கவனமா நினைவில் வைடா. குறைந்த பட்சம் தேர்வு நாள் வரைக்குமாவது எப்படியாவது நினைவில் வைத்திரு. தேர்வு அறையை விட்டு வெளியே வந்ததும் மறந்துடு’ என்பது மாதிரி கெஞ்சுகிற சூழல்தான் தமிழகத்தில் இருக்கிறது.

மனனம் ஒழிந்தால்தான் கல்வியின் தரம் உயரும். மனனம் ஒழிய வேண்டுமெனில் தேர்வுமுறை மாற வேண்டும். கேரளா பள்ளிக் கல்வித் துறை நடத்தும் தேர்வுகள் நம் கவனத்தை ஈர்க்க வேண்டும். ஒருமுறை கேரளாவில் இருந்து ஏழாம் வகுப்பிற்கான சமூக அறிவியல் கேள்வித்தால் கிடைத்தது.

அதில் பகத்சிங் இந்தியப் பாராளுமன்றத்தில் குண்டுவீசிய சம்பவம் விரிவாக, அடிக்கோடிட்டு வாசியுங்கள் விரிவாக கொடுக்கப்பட்டிருந்தது. அது குறித்து நேரு, காந்தி, படேல் ஆகியோர் வெளியிட்ட அறிக்கைகளின் சுறுக்கமும் பகத்தின் வாக்குமூலமும் கொடுக்கப் பட்டிருந்தது. ஏறத்தாழ வினாத் தாளின் இரண்டு பக்கங்களை இவை நிரப்பி இருந்தன. இப்போது மாணவனிடம் கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

குண்டு வீசிய சம்பவத்தை ஒட்டிய நான்கு தலைவர்களின் கருத்து கொடுக்கப் பட்டிருக்கிறது. அவற்றை கவனமாக வாசித்து யார் கருத்தோடு உனக்கு உடன்பாடு என்பதையும் அதற்கான காரணத்தையும் சுறுக்கமாக கூறு.

இப்போது மாணவன் யார் கருத்தோடு ஒன்றிப் போனாலும் அவனுக்கு மதிப்பெண் உண்டு. கருத்துத் திணிப்பு என்பது தேர்வறையிலும் இல்லை. ஆனால் ஏன் அந்தக் கருத்தோடு ஒன்றிப் போகிறான் என்பதற்கான காரணத்தை அவன் தெளிவு படுத்த வேண்டும்.

எட்டு பாராக்களில் கேள்வி, இரண்டு மூன்றே வாக்கியங்களில் விடை. போக, இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. இந்தத் தேர்வு முறை மாணவனை தேர்வறையிலும் சிந்திக்க வைக்கிறது. இன்னும் சொல்லப் போனால் வினாத் தாளிலும் கற்றுக் கொள்ளும் விஷயமும் இருக்கிறது.

வினாத் தாள்களை விடவும் விடைத் தாள்களின் எடை குறைவாக இருக்கிறது. ஒரு பக்கக் கேள்விக்கு ஒரே வரியில் விடை சொல்ல வேண்டி இருக்கிறது. ஆனால் அதற்கு வினாத் தாளையும் மிகக் கவனமாகப் படிக்க வேண்டியிருக்கிறது.

அதனால்தான் கேரளக் கல்வித் தளம் சிறந்திருக்கிறது.

நமது கல்வித் திட்டம் மாறவேண்டும்

கல்வித் திட்டம் மாற வேண்டுமானால் அதற்குமுன் தேர்வுமுறை மாற வேண்டும்

எப்படி மாற்றுவது என்பதற்கும் அருகிலேயே மாதிரிகள் இருக்கின்றன.

கேள்வி இதுதான்,

எழுபத்தி நான்கிற்கு ஒன்று என்பதை நோக்கி பள்ளிக் கல்வித்துறை நகரப் போகிறதா? இல்லை நூற்றுக்கு நூறு என்ற தேர்ச்சி விழுக்காட்டிலேயே சரிந்து கிடக்கப் போகிறதா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com