இணையத்தின் முதல் முகவரி

கொஞ்சம் வரலாற்றுடன் துவங்கலாம். சமீபத்தில், சிம்பாலிக்ஸ்.காம் தனது 30-வது பிறந்த நாளை கொண்டாடியது

கொஞ்சம் வரலாற்றுடன் துவங்கலாம். சமீபத்தில், சிம்பாலிக்ஸ்.காம் தனது 30-வது பிறந்த நாளை கொண்டாடியது. சிம்பாலிக்ஸ்.காம் சாதாரண இணையதளம் இல்லை. இணைய வரலாற்றின் மைல்கல் இணையதளங்களில் ஒன்று. இதுதான், இணைய உலகின் பழமையான முகவரி. அதாவது, இணைய உலகின் முதல் டாட்.காம் முகவரி. 1985 மார்ச் மாதத்தில், சிம்பாலிக்ஸ் நிறுவனம் இந்த முகவரியை பதிவு செய்தது. அப்போது வலை (www) இன்னமும் அறிமுகமாகி இருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆம், இமெயிலும் இணையமும் வலையைவிட மூத்த கண்டுபிடிப்புகள். வலை, 1989-ல்தான் உதயமானது.

சிம்பாலிக்ஸ் நிறுவனம், லிஸ்ப் எனும் பெயரில் கம்ப்யூட்டர்களை தயாரித்து வந்தது. இந்த கம்ப்யூட்டருக்கென்று லிஸ்ப் எனும் பெயரில் தனியே புரோகிராமிங் மொழியும் இருந்தது. வர்த்தகப் பயன்பாட்டுக்கான கம்ப்யூட்டர்களில் இதுதான் முன்னோடி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சிம்பாலிக்ஸ் நிறுவனம் 1993-ல் திவாலாகிவிட்டது. சிம்பாலிக்ஸின் கம்ப்யூட்டர்கள் இன்றளவும் சில அமெரிக்க அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகின்றன.


சிம்பாலிக்ஸ்.காம் இணைய முகவரியை பொறுத்தவரை, 2009-ல் அது ஆரோன் பெய்ஸ்டெட் (Aron Meystedt) எனும் இணைய முனைவோரால் வாங்கப்பட்டுவிட்டது. இது போன்ற தனிச் சிறப்பு மிக்க இணைய முகவரிகளை வாங்கி வைத்துக்கொள்வதுதான் ஆரோனின் வேலையாக இருக்கிறது. இணைய வரலாற்றின் இருப்பிடமாக இந்த தளத்தை பராமரிக்கப்போவதாக ஆரோன் கூறியிருந்தாலும், இந்த தளம் பெரிய அளவில் புதுப்பிக்கப்படாமலே இருக்கிறது. ஆனாலும்கூட, இணையத்தின் முதல் முகவரி மறைந்துபோகாமல் பயன்பாட்டில் இருப்பதே நல்ல விஷயம்தான்.

சிம்பாலிக்ஸ் முகவரி: http://symbolics.com/


***

பாடகியின் புத்திசாலித்தனம்!

இணைய முகவரிகள் தொடர்பாக இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. பிரபல பாப் பாடகியும் நடிகையுமான டெய்லர் ஸ்விப்ட், சமீபத்தில் தனது பெயரில் இரண்டு புதிய முகவரிகளை வாங்கியிருக்கிறார். அந்த முகவரிகளின் இறுதிப் பகுதியை தெரிந்துகொண்டால் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். டாட் போர்ன் மற்றும் டாட் சக்ஸ் என முடியும் முகவரிகள்தான் அவை. போர்ன் என்பது ஆபாச உள்ளடக்கத்தை குறிக்கக்கூடியது. டாட் சக்ஸும் அதே ரகம்தான். எதற்கு இந்த முகவரிகள்? இவற்றை ஏன் பாடகி வாங்க வேண்டும்?

இணைய முகவரிகள் என்றாலே டாட் காமும், டாட் நெட், டாட் ஆர்க் போன்று முடியும் வகையில் இருந்ததெல்லாம் ஒரு காலம். இந்த முகவரிகளை நிர்வகிக்கும் ஐகான் அமைப்பு, இணைய வளர்ச்சிக்கு ஏற்ப புதிய டொமைன்களை அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில், புதிதாக நூற்றுக்கணக்கில் முகவரிகள் அறிமுகமாக இருக்கின்றன. நகரங்களின் பெயரில் முடியும் முகவரிகள் எல்லாம் அறிமுகமாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில்தான், டாட் போர்ன் மற்றும் டாட் சக்ஸ்.

முகவரியை பார்த்தாலே உள்ளடக்கத்தை தெரிந்துகொண்டு பாதுகாப்பாக இருக்கலாம் என்று இந்த முகவரிகளுக்கான தேவை பற்றி ஐகான் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. அது சரி, பாடகி ஸ்விப்ட் ஏன் இவற்றை வாங்க வேண்டும்? என்ன இருந்தாலும், டெய்லர்ஸ்விப்ட் டாட் போர்ன் என படிப்பது நன்றாகவா இருக்குகிறது?

நல்ல கேள்விதான், ஸ்விப்ட் இந்த முகவரியை வாங்கிய காரணம், அவரது முன்னெச்சரிக்கைதான். ஒருவேளை வேறு யாரேனும் இணைய கில்லாடிகள் ஸ்விப்டின் பிரபலத்தை பயன்படுத்திக்கொள்வதற்காக இந்த முகவரியை பதிவு செய்து, அதில் ஆபாச தகவல்களைப் போட்டு, இணைய போக்குவரத்தை ஈர்த்து காசு பார்க்கலாம் அல்லவா? அப்படி எதுவும் நடக்காமல் இருக்கத்தான், ஸ்விப்ட் தானே முதலில் அந்த முகவரிகளை வாங்கி முடக்கிவிட்டார்.

இதேபோல பிரபலமானவர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பெயரிலான முகவரிகள் தவறான நோக்கில் பதிவு செய்யப்படுவதை தவிர்க்க, ஐகான் அமைப்பு இவை பொதுச்சந்தையில் அறிமுகமாகும் முன்னரே, இவற்றை பிரபலங்கள் வாங்கிக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. அதைத்தான் ஸ்விப்ட் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் டாட் ஆஃபீஸ் முகவரியை தனது பெயருடன் இணைத்து வாங்கி வைத்திருக்கிறது. ஜூலை மாதம் முதல் இந்தப் புதிய முகவரிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன.

இணைய முகவரி விஷயத்தில் இத்தகைய முன்னெச்சரிக்கை அவசியம் என்பதை நிச்சயம் டெட் க்ருஸ் ஒப்புக்கொள்வார். க்ருஸ், அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் முதலில் களமிறங்கியிருப்பவர். ஆனால், அவரது பெயரிலான டாட் காம் முகவரி அவரது வசம் இல்லை. tedcruz.com எனும் அந்த முகவரி, வேறு ஒருவரால் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு, அந்தத் தளத்தில் பராக் ஒபாமா ஆதரவு கருத்துகள் இடம் பெறச் செய்யப்பட்டுள்ளது. இதனால், டெட் க்ரூஸ் குழு டாட் ஆர்க் முகவரியைப் பயன்படுத்துகிறது.

தேர்தல் பிரசாரத்தில் இணையம் முக்கிய ஆயுதமாக இருக்கும் நிலையில், ஒரு வேட்பாளர் பெயரிலான இணைய முகவரி இப்படி இருந்தால் எப்படி இருக்கும்? டெட் க்ருஸ் இணைய முகவரி: http://www.tedcruz.com/

***

என்ன படம் பார்க்கலாம்?

அடுத்த என்ன திரைப்படம் பார்க்கலாம்? இந்தக் கேள்வி உங்கள் மனத்தில் இருந்து, அதற்கான பதிலை இணையத்தில் தேட விரும்பினால், வாட்ச் திஸ் (http://watchthis-mrlapinou.rhcloud.com/) இணையதளம் உங்களை அழைக்கிறது.

இந்தத் தளத்தில் நுழைந்து இதே கேள்வியை கேட்டால், அதற்கான அழகான பரிந்துரைகளையும் முன் வைக்கிறது. எனக்கான படத்தை சொல் என்று கட்டளையிட்டால் போதும், இந்தத் தளம் பொறுப்பாக ஒரு திரைப்படத்தை பரிந்துரைக்கிறது.

அதற்கு முன், உங்கள் எதிர்பார்ப்பை தெளிவாக உணர்த்துவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. திரைப்படங்களுக்கான ஐஎம்டிபி தளத்தில் அளிப்படும் ரேட்டிங்கில் 1 முதல் 10 வரை பெற்றவற்றில், எந்த ரேட்டிங் பெற்ற படங்கள் தேவை என குறிப்பிடலாம். அடுத்ததாக, எந்த ஆண்டுக் காலத்தில் வெளியான படம் வேண்டும் என்றும் குறிப்பிடலாம். இரண்டுக்குமே நகர்த்தக்கூடிய கர்சர் போன்ற அளவுகோல் இருக்கிறது.

இரண்டையும் தேர்வு செய்த பிறகு, என்ன வகையான திரைப்படம் என்பதையும் தெளிவுபடுத்திவிடலாம். இதற்காக காமெடி, ஆக்ஷன், காதல், அனிமேஷன், சுயசரிதை என திரைப்படங்களின் வகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதிலும் கிளிக் செய்து கோரிக்கையை சமர்ப்பித்தால், உங்களுக்கான திரைப்படம் பரிந்துரைக்கப்படுகிறது.

பரிந்துரையில், திரைப்படம் தொடர்பான சுருக்கமான அறிமுகத்துடன், ஐஎம்டிபி தளத்தில் அந்தப் படம் தொடர்பான தகவல் அடங்கிய இணைய பக்க இணைப்பும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பரிந்துரை பிடிக்கவில்லை அல்லது இன்னும் மேம்பட்ட பரிந்துரை தேவையா? வேறு படத்தை பரிந்துரைக்குமாறு மீண்டும் கோரலாம்.

திரைப்படத் தகவல்களுக்கான அட்சயபாத்திரமாக விளங்கும் ஐஎம்டிபி தளத்தின் விவரங்கள் அடிப்படையில் இந்தத் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருவிதத்தில், ஐஎம்டிபி தளத்தைவிட இது சுவாரஸ்யமாக இருக்கிறது. தெரிந்த படங்களுக்கான விவரங்களைத் தேட ஐஎம்டிபி அருமையான தளம். ஆனால், வாட்ச் திஸ் தளம், திரைப்படம் தொடர்பான பரிந்துரைகளுக்கு ஏற்றதாக இருக்கிறது. திரைப்பட ரசிகர்கள், பார்க்க வேண்டிய படங்களைத் தெரிந்துகொள்வதற்கான நல்ல இணையதளம். ஹாலிவுட் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம். நம்மூர் படங்களும் இது போன்ற இணையதளம் வேண்டும் எனும் ஏக்கமும் ஏற்படலாம்.

***

அசத்தல் ஆப்கள்

இணையதளம் போலவே இப்போது ஆப்ஸ் எனப்படும் செயலிகளும் பிரபலமாக இருக்கின்றன. செயலிகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அவற்றில், உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்துகொள்வது கொஞ்சம் சவாலானதுதான். இதற்கும் எண்ணற்ற வழிகள் இல்லாமல் இல்லை.

அந்தவகையில், உங்கள் செயல்பாட்டை மேம்படுத்திக்கொள்ள உதவும் அருமையான செயலிகளை பட்டியலிட்டு, அழகான வரைபட சித்திரமாக (இன்போகிராபிக்) வெளியிட்டுள்ளது டாப் ஆப்ஸ் இணையதளம். பல முக்கியச் செயலிகள் இந்தப் பட்டியலில் இருக்கின்றன. (http://www.topapps.net/android/productive-app.html/) இதேபோன்ற பட்டியலை, http://www.tomsguide.com/us/pictures-story/588-best-productivity-apps.html தளமும் அளிக்கிறது.

***


கேட்ஸ் நோட்ஸ்

கொஞ்சம் சீரியசான விஷயங்களைப் படிக்கும் ஆர்வம் இருந்தால், கேட்ஸ் நோட்ஸ் வலைப்பதிவை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். கேட்ட பெயராக இருக்கிறதே என நினைத்தால், உங்கள் யூகம் சரி தான். ஆம், இது மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் இணையதளம். உலக மகா கோடீஸ்வரரான கேட்ஸ், மைக்ரோசாஃப்டின் தினசரி பொறுப்பில் இருந்து விடுபட்டு, நன்கொடை மற்றும் சேவைப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

மூன்றாம் உலக நாடுகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு தரக்கூடிய முயற்சிகளை ஆதரிப்பதிலும் ஆர்வம் காட்டி வரும் கேட்ஸ், தான் முக்கியமாக நினைக்கும் விஷயங்கள் குறித்து இந்தத் தளத்தில் அடிக்கடி எழுதி வருகிறார். சமீபத்தில் இந்தத் தளத்தில் கேட்ஸ், முதலீட்டு மகாராஜா வாரன் பஃபட், பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், எல்லோரும் படிக்க வேண்டும் என தான் கருதும் அம்சத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன், கேட்ஸ் இந்தத் தளத்தில், மனிதக் கழிவில் இருந்து தண்ணீரை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை உற்சாகமாக அறிமுகம் செய்திருந்தார். இந்த முறையில் தயாரான தண்ணீரை கேட்ஸ் குடித்துக் காட்டியதுதான் இதன் ஹைலைட்! அந்த வீடியோவை இப்போதும் பார்க்கலாம்.

பில் கேட்ஸ் இணையதளம்: http://www.gatesnotes.com/

***

கேட்ஜெட் புதிது!

வாரா வாரம், புதிய ஸ்மார்ட்போன்களும் டேப்லெட்களும் அறிமுகமாகிக்கொண்டிருக்கிறன. ஆனால், தற்போது புதிதாக அறிமுகமாகியிருக்கும் டேப்லெட் மிகவும் விஷேசமானது மட்டும் அல்ல, லட்சிய நோக்கிலானது. இந்த டேப்லெட்டை, டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் எனும் சர்வதேச மருத்துவ அமைப்புக்காக கூகுள் நிறுவனம் உருவாகிக் கொடுத்துள்ளது.

சோனி எக்ஸ்பீரியா சாதனத்தின் மேல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த டேப்லெட்டை, கிளவுஸ் மாட்டிய கைகளாலும் இயக்கலாம். குளோரின் கலைவையில் தோய்த்து எடுத்தாலும் இதைப் பயன்படுத்த முடியும்.

எபோலா நோயின் பாதிப்பு தீவிரமாக இருக்கும் சியாரா லியோன் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் பணிபுரியும் டாக்டர்கள், நோய்த்தொற்றை தவிர்க்க உடல் முழுவதும் பாதுகாப்புக் கவசம் அணிந்து செயல்படவேண்டி இருக்கிறது. அத்துடன், நோயாளிகள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக்கொள்ள, தொலைவில் இருக்கும் குழுவை நோக்கி உரக்கக் குரல் கொடுக்கும் பழக்கத்தைப் பின்பற்றி வருகின்றனர். குறிப்புக்காக பயன்படுத்தும் காகிதம் மூலம்கூட எபோலா வைரஸ் பரவலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை. ஆனால், இதன் காரணமாக டாக்டர்களின் செயல்பாடு பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பாதுகாப்பான முறையில் தகவல்களைத் திட்டவும், பரிமாறிக்கொள்ளவும் இந்த டேப்லெட் உருவாக்கப்பட்டுள்ளது.

***

இது தான் நோட்புக்

எல்லாவற்றுக்கும் ஸ்மார்ட்போனை பயன்படுத்த பழகிவிட்டோம். குறிப்பு எடுப்பதற்குக்கூட ஸ்மார்ட்போன்களில் ஏகப்பட்ட செயலிகள் இருக்கின்றன. டைப் செய்யாமல் ஸ்டைலஸ் கொண்டும் போன் திரையில் எழுதிக்கொள்ள முடியும். ஆனால் சிலர், என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும், காகிதத்தில் குறித்து வைப்பதுபோல் வராது என நினைக்கலாம். இவர்களுக்கெல்லாம் குறிப்பேடுதான் ஏற்றது. இருந்தாலும், குறிப்பேடுகளில் எழுதியவற்றை டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்து, நினைத்த நேரத்தில் பயன்படுத்த முடியாது என்பது பெரும்குறை. இதற்குத் தீர்வாக, ராக்கெட் புக் எனும் புதிய குறிப்பேடு புத்தகம் அறிமுகமாகி உள்ளது.

இந்தக் குறிப்பேடு, இரு வேறு உலகங்கள் இணைந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. இது, அடிப்படையில் காகிதக் குறிப்பேடு. ஆனால், இதில் குறித்துவைக்கும் விஷயங்களை டிஜிட்டல் வடிவில் இணையத்திலும் சேமித்துக்கொள்ளலாம். புளுடூத் போன்ற எந்த இணைப்பும் இல்லாமல் இந்த மாயத்தை ராக்கெட் புக் சாத்தியமாக்குகிறது.

சாதாரண காகிதக் குறிப்பேடு போலவே இதில் தகவல்களைக் குறித்துவைக்கலாம். எழுதியவுடன், உங்கள் போனின் கேமராவை இதன் மீது காட்டினால் போதும். அந்தப் பக்கம் தானாக ஸ்கேன் செய்யப்பட்டு, உங்களுக்கான டிராப் பாக்ஸ் போன்ற கிளவுட் சேவைகளில் சேமிக்கப்பட்டுவிடும். தேவையான டிஜிட்டல் சேவைகளுக்கான ஐகான்கள் ஒவ்வொரு பக்கத்தின் அடியிலும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் தேவையானதை மை பூசி அடையாளம் காட்டினால் போதும். செயலி எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும். ஆக, காகித நோட்டை பயன்படுத்தியதுபோலவும் இருக்கும், அதே நேரத்தில் அவற்றை டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பாக சேமித்தும் வைத்துக்கொள்ளலாம்.

ராக்கெட்புக் இணைய பக்கம்:

https://www.indiegogo.com/projects/rocketbook-cloud-integrated-microwavable-notebook

***

இப்படியும் எதிர்ப்பு

ஆப்பிளின் ஸ்மார்ட் வாட்ச் விரைவில் விற்பனைக்கு வருகிறது. ஆப்பிள் வாட்ச் எப்படி இருக்கும் என்பது தொடர்பான பல்வேறு கருத்துகள் ஆர்வத்துடன் அலசப்படுவதற்கு மத்தியில், இதன் தங்க மாதிரிக்கு பத்தாயிரம் டாலருக்கு மேல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, கேலிக்கும் விமரிசனத்துக்கும் இலக்காகி உள்ளது.

இந்த விமரிசனத்தை, இணைய கலைஞர் ஒருவர் புதுமையான கலைப் படைப்பு மூலம் வெளிப்படுத்த தீர்மானித்திருக்கிறார் தெரியுமா? அமெரிக்காவில் வசிக்கும் சீனப் பெண்மணியான குவின்மின் லியூ எனும் அந்தக் கலைஞர், ‘நீங்கள் 18 கே ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சை வாங்கியிருந்தால் அல்லது வாங்க இருந்தால், நீங்கள் பணக்காரர் மற்றும் தீங்கானவர்’ என்று கூறியிருக்கிறார்.

இதிலிருந்து தப்பிக்க ஒரு வழி அளிக்கிறோம். எங்களுக்கு அதை நன்கொடையாக வழங்குங்கள். எல்லாவற்றுக்கும் மேல், உலகில் வாட்ச் எதற்கு? என்றும் அவர் கேட்டுள்ளார். அப்படியே, பில் கேட்ஸ் உங்களுக்குப் பழக்கம் என்றால், அவரிடம் சொல்லி ஒரு ஆப்பிள் வாட்சை வாங்கி பரிசளிக்கச் சொல்லுங்கள் என கேட்டிருக்கிறார். கொடையாக அளிக்கப்படும் வாட்ச்களைக் கொண்டு ஒரு நிகழ் கலைப் படைப்பை உருவாக்க இருப்பதாக கூறியுள்ளார். இதற்காக, கூகுள் படிவத்தில் அழகாக ஒரு விண்ணப்பப் படிவத்தையும் அவர் உருவாக்கி இருக்கிறார்.

ஆப்பிள் வாட்சை விமரிசித்து கவனம் தேடும் முயற்சி எனக் கூறப்பட்டாலும் குவின்மின் லியூ இதை மறுக்கிறார். ஒரு கலைஞராக, தொழில்நுட்பம் மற்றும் விலை குறித்து தான் கவலைப்பட்டாக வேண்டும் என்று கூறியுள்ளவர், 2012-ல் ஐபேட் வாங்குவதற்காக சீன வாலிபர் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்றதை குறிப்பிட்டு, இத்தகைய தாக்கத்துக்கு என்ன காரணம் எனக் கேள்வி எழுப்பிருக்கிறார்.

***

இமோஜி போல வருமா?

இணைய வெளியில் சமீப காலமாக ஹிலாரி கிளிண்டன் பெயர்தான் அதிகம் அடிபட்டுக்கொண்டிருக்கிறது. எல்லாம், அவர் அமைச்சராக இருந்த காலத்தில் இமெயில் பயன்படுத்திய விதம் தொடர்பான சர்ச்சையின் பயன்தான். ஹிலாரி, 2004 முதல் 2009 வரை அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்தார். அந்தக் காலத்தில், அவர் அரசு இமெயிலை பயன்படுத்தாமல் தனிப்பட்ட மெயிலை பயன்படுத்தியதை, பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் கண்டறிந்து அம்பலமாக்கியது.

அமைச்சராக இருந்தவர் தனிப்பட்ட மெயிலை பயன்படுத்தியது, தகவல் பரிமாற்ற விவரங்களை ஆவனப்படுத்த வேண்டும் எனும் வலியுறுத்தும் விதிமுறைக்கு விரோதமாக அமைந்திருப்பதால், ஹிலாரி விமரிசனத்துக்கு இலக்கானார். இதனிடையே, ஹிலாரி தனிப்பட்ட மெயிலை பயன்படுத்தியது மட்டும் அல்லாமல், அவரது பெயரிலேயே ஒரு மெயில் சர்வரையும் வைத்திருந்ததை செய்தித் தளம் ஒன்று அம்பலமாக்கியது.

அரசுப் பணிக்காக ஒரு மெயில், தனிப்பட்ட மெயிலுக்காக ஒரு மெயில் என வைத்துக்கொள்ளும் சங்கடத்தை தவிர்க்கவே ஒரே மெயிலாக தனிப்பட்ட மெயிலை பயன்படுத்தினேன் என ஹிலாரி கொடுத்த விளக்கத்தை பலரும் ரசிக்கவில்லை. இந்தச் சர்ச்சையில் இருந்து தப்புவதற்காக, பதவிக் காலத்தில் தான் பெற்ற பணி தொடர்பான மெயில்களை 30,000 பக்கங்களில் ஹிலாரி அச்சிட்டுக் கொடுத்தது தனிக்கதை.

இந்த இமெயில் சர்ச்சை, 2016-ல் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரியின் கனவை பாதிக்குமா என்னும் விவாதம், அமெரிக்காவில் சூடாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், பிரபலமான நியூயார்க்கர் பத்திரிகை இந்த விவகாரம் தொடர்பான முகப்புக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் என்ன விஷேசம் என்றால், இது முழுக்க முழுக்க இமோஜிகளால் அமைக்கப்பட்டிருப்பதுதான். ஐகான்கள் மூலம் கருத்துகளை பரிமாறிக்கொள்ள உதவும் காட்சி மொழியாக இருக்கும் இமோஜிகள், இக்கால தலைமுறை மத்தியில் பிரபலமாக இருப்பது தெரிந்த விஷயம்தான்.

இந்த நிலையில், ஹிலாரியின் முகத்தை பல்வேறு வடிவிலான இமோஜிகளாக வரைந்து, அட்டைப் படமாக நியூயார்க்கர் வெளியிட்டிருந்தது. பார்க்க சுவாரஸ்யமாக இருந்ததோடு, கேலியும் கிண்டலும் கலந்து விமரிசனரீதியாக நச்சென கருத்தும் தெரிவித்திருந்தது.

இந்த அட்டைப் படத்தை உருவாக்கிய கலைஞர் பேரி பிளிட், எழுத்துகளால் எழுதப்பட்டிருப்பதை ஒருவரால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும் எனத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டு, அகர எழுத்துகளுக்காக நான் வருந்துகிறேன் என சற்றே கிண்டலுடன் இமோஜி புகழ் பாடியிருக்கிறார். இமோஜியில் எழுதப்பட இருக்கும் முதல் நாவலுக்காகக் காத்திருப்பதாகவும் கூறியுள்ள அவர், கடைசியாக ஹிலாரி பெயரையும் சேர்த்திருக்கிறார். இந்த அட்டைப் படம் அருமையாக இருப்பதோடு, நியூயார்க்கரின் கடந்த கால இதழ்களில் தொழில்நுட்பப் பாதிப்பு தொடர்பான அட்டைப் படங்களும் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்தனையும் அருமையாக இருக்கிறது.

                                 ***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com