இந்த செல்ஃபி எப்படி?

செல்ஃபி எடுப்பது மோகமா? கலாசாரமா என இன்னும் தீர்மானமாகவில்லை. செல்ஃபிக்களால் பாதிப்பும் உண்டு. 


செல்ஃபி எடுப்பது மோகமா? கலாசாரமா என இன்னும் தீர்மானமாகவில்லை. செல்ஃபிக்களால் பாதிப்பும் உண்டு.  சுயபடம் என புரிந்துகொள்ளக்கூடிய செல்ஃபி  மீதான விமரிசனங்களும் இருக்கின்றன. ஆனால், செல்ஃபிகளை பயன்படுத்தும் விதத்தில்தான் அவற்றின் சிறப்பு இருக்கிறது என்றும் சொல்லத் தோன்றுகிறது.

புகைப்படக் கலைஞரான ஆண்டி டேவிதாஸி (Andy Davidhazy) எடுத்துள்ள செல்ஃபி இதற்கு அழகான உதாரணம். உண்மையில் செல்ஃபி இல்லை; செஃல்பிக்கள்! ஆம், சாகசப்பிரியரான ஆண்டி, மெக்ஸிகோ நாட்டில் இருந்து கனடா வரை 2,600 மைல்களுக்கு பசிபிக் கிரெஸ்ட் டிரையல் எனும் சாகசப்பயணத்தை மேற்கொண்டார். சவால்களும் சிக்கல்களும் நிறைந்த இந்தப் பயணத்தின்போது, ஒவ்வொரு மைல் தொலைவிலும் அவர் தன்னை ஒரு சுயபடம் எடுத்துக்கொண்டார். மொத்தப் பயணமும் முடிந்தபோது 2600 சுய படங்கள் அவரிடம் இருந்தன.

இந்த அத்தனை சுய படங்களை வைத்து, கால ஓட்டத்தை உணர்த்தும் வீடியோவாக உருவாக்கி தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார் ஆண்டி. பயணத்தின் ஆரம்பத்தில் பளிச்சென காணப்படுபவர், கடைசி சுய படத்துக்கு வரும்போது தாடி வளர்ந்த முகத்துடன் காணப்படுகிறார். எடையும் கணிசமாகக் குறைந்திருக்கிறது. அவர் எதிர்கொண்ட சவால்களை இந்தப் படங்களே அழகாக உணர்த்துகின்றன. இந்தப் பயணத்தை மையமாகக் கொண்டு அவர் உருவாக்கியுள்ள ஆவணப்படத்துக்கான முன்னோட்டமாக, இந்த சுய படத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.

ஆனால், செல்ஃபி மோகத்துக்கான மோசமான உதாரணமாகவும் ஒரு செய்தி சமீபத்தில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஈஸ்ட் வில்லேஜ் ஆலையில் நடைபெற்ற வெடிவிபத்தில் 25 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் நடந்த பகுதியில் ஏழு பெண்கள் செல்ஃபி ஸ்டிக் மூலம் தங்களை படம் எடுத்துக்கொண்டுள்ளனர். விபத்து நடந்த பகுதியை அவர்கள் ஏதோ சுற்றுலா இடம்போல் கருதியதும், அந்த இடத்தின் நிலைமையை உணராதவர்களாக அந்தப் புகைப்படத்துக்கு அவர்கள் புன்னகைத்தபடி போஸ் கொடுத்ததும் திகைக்க வைத்துள்ளது.

முதலில் டிவிட்டரில் வெளியாகி, பின்னர் வலைப்பதிவில் வெளியான அந்தப் புகைப்படம், அதன்பிறகு நியூயார்க் போஸ்ட் நாளிதழில் வெளியிடப்பட்டது. இது இதயமில்லாத செயல் என பலரும் விமரிசித்துள்ளனர். ஸ்டேடஸ் அப்டேட்டுக்காக செல்ஃபி எடுக்கலாம் தப்பில்லை, ஆனால் அதற்காக மனிதாபிமானத்தை மறந்துவிடுவதா?

ஆண்டி தேவிதாசியின் செல்ஃபி பயணத்தைப் பார்க்க –  www.lostorfound.org


***

2. இணையத்தை உலுக்கிய புகைப்படம்

இணையத்தை முறிக்கும் முயற்சி  (breaking the internet) என்ற பதம் அடிக்கடி பயன்படுத்தப்படுவதை பார்க்கலாம். இணையத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஒரே நேரத்தில் ஈர்த்து, அதன் உள்கட்டமைப்பு வசதிக்கு சோதனை உண்டாக்கும் அளவுக்கு பரவும் தன்மை கொண்ட விஷயங்கள் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன.

நடிகை கிம் கர்தாஷியான், சில மாதங்களுக்குத் தனது கவர்ச்சி போஸ்கள் மூலம் இதற்கு முயன்று தோற்றுப்போனார்.

ஆனால் சிரியாவில், போருக்கு நடுவே எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தை உலுக்கியிருக்கிறது. பிஞ்சுக் குழந்தை ஒன்று கையைத் தூக்கி சரண் அடைவதுபோல் இருக்கும் புகைப்படம் அது. கண்களில் மிரட்சியுடன் அந்தக் குழந்தை, கேமராவை பார்த்து துப்பாக்கி என நினைத்து பயத்தில் கைகளை உயர்த்தியிருக்கும் அந்தப் புகைப்படம், போரின் பாதிப்பை அழுத்தமாக உணர்த்துகிறது.

இந்தப் படம்தான் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. மத்தியக் கிழக்கில், காஸாவில் வசிக்கும் நாடியா அபு ஹசன் எனும் புகைப்படச் செய்தியாளரால் டிவிட்டரில் பகிர்ந்துகொள்ளப்பட்ட இந்தப் படம், பார்த்தவர் நெஞ்சை உருக்கி, கண்ணீர் விட வைத்தது. இதே உணர்வை வெளிப்படுத்தும் குறிப்புடன் பலரும் இதை தங்கள் சமூக வலைப்பின்னல் பக்கங்களில் பகிர்ந்துகொண்டனர். 11,000 முறைக்கு மேல் ரிடிவீட் ஆன அந்தப் படம், ரெட்டிட் தளத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

இதற்கிடையே,  இந்தப் படம் போலியானது என்றும் சிலர் புகார் தெரிவிக்க, பிபிசி செய்தித் தளம் இதுபற்றி ஆய்வு செய்து, இந்தப் படத்தின் பின்னே உள்ள கதையை வெளியிட்டது. அந்தப் படம் தான் எடுத்தது அல்ல பகிர்ந்துகொண்டது என அபு ஹசன் கூறியுள்ளார்.

உண்மையில், இந்தப் படம் 2012-ல் எடுக்கப்பட்டது. உஸ்மான் சாகிர்லி எனும் துருக்கி பத்திரிகையாளர் இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளார். துருக்கி எல்லை அருகே சிரியாவில் உள்ள அகதிகள் முகாமில் இந்தப் படம் எடுக்கப்பட்டதாகவும், தான் பயன்படுத்திய டெலிபோட்டோ லென்ஸ் காரணமாக, அதை துப்பாக்கி என நினைத்து அந்தக் குழந்தை மிரண்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தப் படத்தை எடுத்த பிறகு அந்தக் குழந்தை மிகவும் பீதியடைந்து காணப்பட்டதாகவும், பொதுவாக குழந்தைகள் கேமராவை கண்டால் வெட்கப்படுவார்கள் அல்லது ஓடிவிடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். பெரியவர்களைவிட குழந்தைகள் அப்பாவித்தனத்துடன் போரின் பாதிப்புகளை உணர்த்திவிடுவதை அகதிகள் முகாம்களில் பார்க்கலாம் என்கிறார் அவர். இந்தப் புகைப்படமே அதற்கு சாட்சி.

***

3. தூய வாசிப்புக்கு ஒரு செயலி

ஸ்மார்ட் போனுக்கான செயலிகளில், புதுமையானவற்றுக்கும் சுவாரஸ்யமானவற்றுக்கும் குறைவே இல்லை. இப்போது இந்த இரண்டும் கலந்த ஒரு செயலி, மின்னூல் பிரியர்களுக்காக அறிமுகம் ஆகியிருக்கிறது.

செயலியின் பெயர், கிளீன் ரீடர். அதன் நோக்கம், எந்தப் புத்தகத்தையும் நல்ல புத்தகமாக்கித் தருவது. அதாவது, புத்தகங்களில் இடம்பெற்றுள்ள ஏற்கத்தகாத (ஆபாசம் என பொருள் கொள்க) வார்த்தைகளை நீக்கி, புத்தகத்தை நெருடல் இல்லாமல் படிக்க வழி செய்கிறது.

சில புத்தகங்களின் உள்ளடக்கம் சிறந்ததாக இருந்தாலும், அவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சில சொற்கள் ஆபாசமானதாக இருப்பதாகப் பலரும் கருதலாம். குறிப்பாக, பெற்றோர்கள் இதுபோன்ற புத்தகங்களை தங்கள் பிள்ளைகள் படிக்க அனுமதிக்க தயங்கலாம்.

இந்தச் சிக்கலுக்குத் தீர்வாகத்தான், கிளீன் ரீடர் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஐபோன், ஆண்ட்ராய்டு இரண்டிலும் செயல்படும் இந்தச் செயலியை டவுன்லோடு செய்து, அதன்மூலம் மின்னூல்களை வாங்கிப் படிக்கலாம்.

வாசிக்கத் துவங்குவதற்கு முன், அதன் உள்ளடக்கத்தை எந்த அளவு தூய்மையாக்குவது என மூன்று வித அளவுகளில் இருந்து தேர்வு செய்துகொண்டால் போதும். தயக்கம் இல்லாமல் வாசிக்கலாம். எங்கெல்லாம் ஆபாசம் அல்லது தகாத வார்த்தைகள் வருகிறதோ, அங்கெல்லாம் அதை மறைத்துவிட்டு மாற்று வார்த்தைகளால் பதிலீடு செய்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜேர்ட் அண்ட் கிறிஸ்டீன் மவுகன் தம்பதி இந்தச் செயலியை உருவாக்கி உள்ளனர்.

ஒருநாள், தனது மகள் தேர்வு செய்த மின்னூலில் மோசமான வார்த்தைகள் இருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்தபோது, இதுபோன்ற வார்த்தைகளை நீக்கி, வாசிக்க உதவும் செயலி இருக்கிறதா என தேடிப் பார்த்ததாகவும், எந்தச் செயலியும் இல்லாததால் தாங்களே இதை உருவாக்கத் தீர்மானித்ததாகவும் கிறிஸ்டன் சொல்கிறார்.

பெற்றோர் நோக்கில் இருந்து பார்த்தால் நல்ல செயலியாகத் தோன்றலாம். ஆனால் இதனால் காப்புரிமை சிக்கல் வராதா? மின்னூலின் மூல வடிவில் எந்த மாற்றமும் செய்யாமல், அது திரையில் வாசிக்கப்படும் முறையில் மட்டுமே இந்தச் செயலி மாற்றம் செய்வதால் காப்புரிமை சிக்கல் இல்லை என்கிறார்.

காப்புரிமை சிக்கல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்தச் செயலி, தணிக்கை பற்றிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எழுத்தாளர்கள் பலர் இப்படி வார்த்தைகளை மாற்றுவதை கடுமையாக விமரிசித்துள்ளனர். எழுதப்பட்ட வார்த்தைகளை - அவற்றில் உங்களுக்குப் பிடிக்காத வார்த்தைகள் இருந்தாலும் - மாற்றுவது என்பது தணிக்கைக்குச் சமம் என்று ஜோனே ஹாரிஸ் எனும் எழுத்தாளர், தனது வலைப்பதிவில் கடுமையாக விமரிசித்துள்ளார்.

ஆங்கில மின்னூல்களுக்கான இந்தத் தூய வாசிப்புச் செயலி பற்றிய தகவல் அறிய -  www.cleanreaderapp.com/

வார்த்தைகளை மாற்றுவதன் விபரீதம் பற்றிய எழுத்தாளரின் கருத்தை அறிய -

http://joannechocolat.tumblr.com/post/114425387366/why-im-saying-fuck-you-to-clean-reader

***

4. இது ஸ்மார்ட் குடை

ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் வரிசையில், குடைகளும் ஸ்மார்ட்டாக மாறத் துவங்கியிருக்கின்றன. உலகின் முதல் ஸ்மார்ட் குடை எனும் அடைமொழியுடன் குரோஷியாவில் இருந்து கிஷா எனும் குடை அறிமுகமாகி இருக்கிறது.

ப்ளூடூத் சிப் மற்றும் இருப்பிடம் உணரும் திறன் கொண்ட சாதனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் குடையில் என்ன விஷேசம் என்றால், மழை பெய்யும்போது இந்தக் குடையை மறக்காமல் எடுத்துச் செல்லலாம் என்பதோடு, வெளியே எடுத்துச்செல்லும் குடையை எங்கும் மறந்து வைத்துவிடாமல், ஞாபகமாக வீட்டுக்கும் எடுத்து வரலாம்.

எப்படித் தெரியுமா? இந்தக் குடை, அதற்கென உரிய செயலியுடன் வருகிறது. ஸ்மார்ட் போனில் செயலியை டவுன்லோடு செய்து, அதை குடையுடன் இணைத்துவிட வேண்டும். அதன்பிறகு, அடுத்த சில நாள்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதா என்பதை செயலியை பார்த்தே தெரிந்துகொள்ளலாம்.

ஆக, மழை பெய்யும் நாள்களில் குடையை வீட்டிலே வைத்துவிட்டு தவிக்க வேண்டாம். அதேபோல், குடையை எடுத்துச்செல்லும்போது மறதியாக எங்கும் வைத்துவிட்டு வரும் அபாயமும் இல்லை. பொது இடங்களில் குடையை மறந்து வைத்துவிட்டுச் செல்லும்போது, இதன் செயலி வழியே இணைப்பு இல்லாமல் போவதை உணர்ந்து, இதுபற்றி ஸ்மார்ட் போனுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பி வைக்கப்படும். அதைப் பார்த்து, குடையை மறக்காமல் எடுத்து வந்துவிடலாம்.

வெய்யில் கொளுத்தும் நாள்களில் இந்த நினைவூட்டும் வசதியை செயலிழக்க வைத்து, மழைக்காலத்தில் மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கொட்டும் மழையில் மட்டுமல்லாமல், வேகமாக வீசும் காற்றையும் தாங்கும் வலுவான குடையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அம்சம் கொண்ட டேவக் அலெர்ட் (Davek Alert) குடை, கிக்ஸ்டார்ட்டரில் அறிமுகமாகி இருக்கிறது.

இந்தக் குடையும், ப்ளூடூத் மற்றும் இருப்பிடம் உணரும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. குடையை விட்டு குறிப்பிட்ட தொலைவு சென்றாலே, இந்தக் குடை தன்னைப் பற்றி ஸ்மார்ட் போனுக்கு நினைவூட்டும். இதில், வானிலை அறியும் வசதி இருக்கிறது.

நம்மூரிலும் இத்தகைய ஸ்மார்ட் குடைகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.

கிஷா குடைக்கான இணையதளம் – www.getkisha.com/

***

5. 360 டிகிரி வீடியோ

இணையத்தில் யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்க, இப்போது கூடுதலாக இன்னொரு காரணம் கிடைத்திருக்கிறது. ஆம், யூடியூப் வீடியோக்களை இனி 360 கோணத்திலும் பார்த்து ரசிக்க முடியும். இதற்கான புதிய வசதியை அறிமுகம் செய்வதாக யூடியூப் அறிவித்துள்ளது.

கூகுளுக்கு சொந்தமான யூடியூப், பிரபலமான வீடியோ பகிர்வு சேவையாக இருக்கிறது. சாமானியர்கள் முதல் திரையுலகப் பிரமுகர்கள் வரை பல தரப்பினரும் தங்கள் வீடியோக்களை பகிர யூடியூப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

சமையல் கலை வீடியோக்களில் துவங்கி வயிறு குலுங்கவைக்கும் காமெடி வரை, விதவிதமான வீடியோக்களை யூடியூப்பில் பார்த்து ரசிக்கலாம்.

இப்போது, வீடியோக்களை 360 கோணத்தில் பார்க்கக்கூடிய புதிய வசதியை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது.

இனி, வீடியோக்களை பகிரும்போது, அதன் உள்ளடக்கம் தவிர, மேடையின் தோற்றம், வானத்தின் நீள நிறம், பக்கவாட்டில் உள்ள காட்சி உள்ளிட்டவற்றை பார்த்து ரசிக்க முடியும். அது மட்டும் அல்ல. புதுமையான முறையில் படம் பிடிப்பது மூலம், ஒவ்வொரு கோணத்துக்கு ஏற்பவும் ஒருவிதமான கதை உருவாகும் வகையில் அமைக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, வீடியோ காட்சிகளை மவுஸ் மூலம் நகர்த்தி வெவ்வேறு கோணத்தில் உள்ள தோற்றத்தைப் பார்த்து ரசிக்கலாம்.

யூடியூப்பின் ஆண்ட்ராய்டு செயலி மற்றும் குரோம் பிரௌசரில், யூடியூப் இணையதளத்தில் இந்த வசதியில் வீடியோக்களை பார்க்கலாம். வெர்ச்சுவல் ரியாலிட்டி என்று சொல்லப்படும் மெய்நிகர் வசதி இணைய உலகில் பிரபலமாகி வரும் நிலையில், இந்த 360 கோணத்தில் வீடியோ பார்க்கும் வசதியை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது.

360 கோணத்தில் வீடியோ காட்சிகள் பார்க்க - http://youtubecreator.blogspot.in/2015/03/a-new-way-to-see-and-share-your-world.html

***

6. அ. சூப்பர் மரியோ கேம் ஆடலாம்

நீங்கள் வீடியோ கேம் பிரியரா? அப்படி என்றால் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும் செய்தியாக, சூப்பர் மரியோ கேமை இப்போது பிரௌசரிலேயே விளையாடலாம்.

சூப்பர் மரியோ 64 வீடியோ கேம், உலகில் பழமையானது மற்றும் பிரபலமானது. ஆனால், இதை விளையாட நிண்டெண்டோ கேம் சாதனம் தேவை. ஆனால், ராய்ச்டன் ராஸ் எனும் புரோகிராமர், இந்த கேமை பிரௌசர் மூலம் கம்ப்யூட்டரிலேயே விளையாட வழி செய்திருக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு – https://roystanross.wordpress.com/super-mario-64-hd/?ref=producthunt

***

ஆ. கூகுள் மோதலுக்கு நீங்கள் தயாரா?

இன்னொரு சுவாரஸ்யமான இணைய விளையாட்டும் அறிமுகமாகி இருக்கிறது. கூகுள் பியட் என்பது விளையாட்டின் பெயர். அதாவது, கூகுள் மோதல் என வைத்துக்கொள்ளலாம். கூகுள் தேடியதிரத்தை பயன்படுத்துபவர்களுக்கு இந்த விளையாட்டு பிடித்துப்போகலாம்.

ஏனெனில், கூகுளில் தேடல் கோரிக்கைகளை சமர்ப்பிக்கும்போது, பாதி வார்த்தையை அடித்ததுமே மீதி என்னவாக இருக்கும் என கூகுள் தானாக யூகித்து, முழு வார்த்தை அல்லது வார்த்தைத் தொடரை முன்வைப்பதை நீங்கள் அடிக்கடி எதிர்கொண்டிருக்கலாம். இது ஆட்டோ கம்ப்ளீட் வசதி என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த வசதி, பல நேரங்களில் பயனுள்ளதாகத் தோன்றும். பல நேரங்களில், நாம் ஒன்று நினைக்க அதன் பரிந்துரை ஒன்றாக இருந்து வெறுப்பேற்றுவதும் உண்டு. பரவலாக, இணையவாசிகளால் தேடப்படும் பதங்களின் அடிப்படையில் இந்தத் தானியங்கி பரிந்துரைகள் அமைவதால் இப்படி!

இனி விளையாட்டுக்கு வருவோம். இந்தத் தானியங்கிப் பரிந்துரையை அப்படியே ஒரு விளையாட்டாக கூகுள் பியட் தளம் மாற்றியிருக்கிறது. இந்தத் தளத்தில், கூகுள் தேடல் கட்டம் போன்ற கட்டமும், அதில் தேடல் பதம் ஒன்றின் முதல் பகுதியும் இருக்கும். கூகுள் பரிந்துரைப்படி, மீதிப் பதம் என்னவாக இருக்கும் என நீங்கள் யூகித்து டைப் செய்ய வேண்டும். உங்கள் பதம் எந்த அளவுக்குப் பொருந்துகிறது என்பதற்கு ஏற்ப மதிப்பெண் உண்டு. பெயர்கள், கலாசாரம், கேள்விகள் மற்றும் மனிதர்கள் என நான்கு பிரிவுகளில் இருந்து தேர்வு செய்துகொள்ளலாம்.

உங்கள் கூகுள் அறிவை சோதித்துப் பார்த்துக்கொள்ள – www.googlefeud.com/

***

7. ஆமைக்கு 3டி பிரிண்டிங்


3டி பிரிண்டிங் பயன்பாடு வியக்கவைக்கக்கூடியதாக இருப்பது பற்றி பல செய்திகளை நீங்கள் படித்திருக்கலாம். சமீபத்திய செய்தி, ஒரு ஆமையின் மேல் ஓட்டினை 3டி பிரிண்டிங் முறையில் உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர்.

அமெரிக்க கொலராடோவில் உள்ள விலங்குப் பாதுகாப்பு மையத்தில் தஞ்சமடைந்த அந்த ஆமைக்கு (அதன் பெயர் கிளியோபாட்ரா), ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மேல் ஓட்டில் பிரமிடு போன்ற செதில்கள் முளைத்திருந்தன. மேலும், அந்த ஓடு பலவீனமாகவும் ஆகியிருந்தது. ஆமைகள் பரஸ்பரம் தொடர்புகொள்ளவும், உறவுகொள்ளவும் ஒன்றன் ஓட்டின் மீது ஏறி நிற்கும் தன்மை கொண்டவை என்பதால், அவற்றுக்கு ஓடு மிகவும் முக்கியமானவை.

இந்த ஆமையின் நிலையை அறிந்த கொலராடோ தொழில்நுட்பப் பள்ளியின் ரோஜர் ஹென்றி எனும் மாணவர், அதன் மேல் ஓட்டை ஸ்கேன் செய்து, அதைவைத்து 3டி பிரிண்டிங் முறையில் புதிய ஓட்டை தயார் செய்து பொருத்தியிருக்கிறார். கிட்டத்தட்ட 600 மணி நேரம் உழைத்து ஆமை மீது கச்சிதமாகப் பொருந்தும் ஓட்டுக்கான சாப்ட்வேரை தயார் செய்து, அதன் உடலுக்கு ஊறுவிளைவிக்காக உயிரி பொருள்களைக் கொண்டு ஓட்டை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

ஆமைக்கான 3டி பிரிண்டிங் பற்றி அறிய -https://www.facebook.com/media/set/?set=a.10153181963777930.1073741878.66392842929&

                                        ***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com