Enable Javscript for better performance
இணைய போராட்டம்- Dinamani

சுடச்சுட

  

  ணையம் முழுவதும் இப்போது நெட் நியூட்ராலிட்டி பற்றிதான் பேச்சாக இருக்கிறது. இணைய சுதந்தரத்தை காக்கும் வகையில், நெட் நியூட்ராலிட்டி நீடிக்க வேண்டும் என்று இணையவாசிகள் ஒன்று திரண்டு குரல் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தொலைத்தொடர்பு ஆணையமான டிராய்க்கும் லட்சகணக்கில் இமெயில்கள் போயிருக்கின்றன. இதற்கு முன்னர் இந்தியாவில் இத்தனை தீவிரமாக இணைய போராட்டம் நடைபெற்றதில்லை என்றும் சொல்லலாம்.

  இணையதளங்களையோ, இணைய சேவைகளையோ தரம் பிரிக்கக்கூடாது, அவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற உரிமை எப்போதும் இணையவாசிகளிடமே இருக்க வேண்டும் என்பதுதான் இந்தப் பிரச்னையின் அடிப்படை. இதை சாத்தியமாக நெட் நியூட்ராலிட்டி அவசியம். அதாவது, குறிப்பிட்ட இணையதளங்களை முடக்கும் அல்லது அவற்றை பயன்படுத்த தனியே கட்டணம் வசூலிக்கும் உரிமையை இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கக்கூடாது என வலியுறுத்தப்படுகிறது. இணையத்தின் ஆதார அம்சமாக்கிய அதன் திறந்தவெளித்தன்மைக்கும் இது அவசியம் என்று வாதிடப்படுகிறது.

  நெட் நியூட்ராலிட்டி விவகாரம், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்கெனவே சூடாகி விவாதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு மாபெரும் இணைய போராட்டமும் நடைபெற்றது. நெட் நியூட்ராலிட்டி வந்தால் என்ன ஆகும் என காண்பிப்பதற்காக, இணைய பக்கங்கள் லோட் ஆக தாமதமாகும் லோகாவை பல முன்னணி இணையதளங்கள் தங்கள் முகப்புப் பக்கத்தில் இடம்பெற வைத்திருந்தன. இப்போது இந்திய இணையவாசிகள் போராடும் முறை.
   

  vote_1.png
   

  நெட் நியூட்ராலிட்டி உண்மையில் சிக்கலான விஷயம். அதை எளிதாகப் புரிய வைத்ததில், ஏஐபி யூடியூப் வீடியோவுக்கு கணிசமான பங்கு இருக்கிறது. இது தொடர்பாக டிராய் அமைப்புக்கு எளிதாக இமெயில் அனுப்புவதற்காக சேவ் தி இன்டெர்நெட் (www.savetheinternet.in) இணையதளமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனை பற்றி விரிவாகப் புரியவைக்க, நெட்நியூட்ராலிட்டி (http://www.netneutrality.in/) இணையதளமும் அமைக்கப்பட்டுள்ளது. இது வையம் தழுவிய பிரச்னை என்பதால், இதன் அடிப்படைகளை புரிந்துகொள்ள ஓபன் தி இன்டெர்நெட் (http://www.theopeninter.net/) இணையதளத்தையும் நாடலாம்.

  இந்த விஷயத்தில் ஒடிஷா எம்பி தத்தகட்டா சத்பதியையும் (Tathagata Satpathy) பாராட்ட வேண்டும். டிராய் இந்த விஷயம் தொடர்பாக கருத்து கேட்கும் அறிக்கையை வெளியிட்டவுடேனேயே, மனிதர் இணைய சேவைகளில் சமநிலை அற்ற தன்மையைக் கொண்டுவந்து இணையவாசிகளின் உரிமை பறிக்கும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இமெயில் அனுப்பினார். இணையத்தை தினசரி பயன்படுத்தும் சராசரி இணையவாசியாக இந்த மெயிலை எழுதுவதாகக் கூறியிருந்தவர், தனது இணைய செயல்பாடுகளை டிராய் உத்தேசித்துள்ள மாற்றங்கள் பாதிக்கும் என தெரிவித்திருந்தார்.

  நெட் நியூட்ராலிட்டியை பாதிக்கும் டிராயின் கருத்துகளை எதிர்பார்ப்பதாகக் கூறியவர், இணையம் என்பது கம்ப்யூட்டர்களின் வலைப்பின்னல் மட்டும் அல்ல சமூக, பொருளாதார மற்றும் பிராந்திய இடைவெளியை இணைக்கும் சமூக பாலம் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். சத்பதி, இணையத்தையும் இணைய பயன்பாட்டையும் நன்கு அறிந்தவர் என்பதற்கு இந்த மெயிலே சான்று. அவர் ஏற்கெனவே ரெட்டிட் கேள்வி பதில் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இணையவாசிகளின் கைத்தட்டல்களை பெற்றவர்.

  இந்த இணைய எம்பி பற்றி மேலும் அறிந்துகொள்ள -

  http://www.tathagatasatpathy.com/web/

  ***

  இவர் இணைய முன்னோடி

  ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸை இணைய முன்னோடி என்று சொன்னால் நம்பமுடிகிறதா? இணையத்துக்காக லோபஸ் எதுவும் செய்யவில்லை என்றாலும், இணையத்தின் பிரபலமான சேவைகளில் ஒன்றின் துவக்கப் புள்ளியாக அவர் இருப்பதுதான் விஷேசம். லோபஸ் என்பதைவிட, அவரது புகைப்படம் என்பதுதான் சரியாக இருக்கும்.

  2.jpg 

  2000-வது ஆண்டில் இது நிகழ்ந்தது. தேடியந்திரமாக கூகுள் செல்வாக்கு பெறத் துவங்கிய காலம். அப்போது, கூகுளில் புகைப்பட தேடல் வசதி கிடையாது. அந்த ஆண்டு கிராமி விருது வழங்கும் விழாவில், நடிகையும் பாடகியுமான ஹெனிபர் லோபஸ் பச்சை வண்ணத்தில் படு கவர்ச்சியான ஆடை அணிந்துவந்தார். அவரது இந்தக் கவர்ச்சி ஆடை பற்றியே பேச்சாக இருந்து, இணைய வெளியிலும் இது எதிரொலித்தது. பல்லாயிரக்கணக்கானோர், கூகுள் தேடியந்திரத்தில் இந்த ஆடையை குறிப்பிட்டு படங்களை தேடியுள்ளனர். அந்தத் தருணத்தில்தான், கூகுள் நிர்வாகத்துக்கு இணையவாசிகள் தகவல்களை மட்டும் அல்ல புகைப்படங்களை தேடுவதிலும் ஆர்வம் கொண்டிருக்கின்றனர் என புரிந்தது. இந்த ஆர்வத்துக்கு தீனி போடத்தான், கூகுள் இமேஜ் சர்ச் தேடலும் அறிமுகமானது.

  கூகுள் நிறுவன சிஇஓ எரிக் ஸ்கிமிட், சமீபத்தில் கூகுள் வலைப்பதிவில் இந்த சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். இந்தத் தகவல் வெளியானதுமே, லோபஸ் உற்சாகத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தப் புகைப்படத்துடன் இந்தச் செய்தியை பகிர்ந்துகொண்டார். இந்த ஆடைக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. விக்கிபீடியாவில் ஆடைக்கு என தனி கட்டுரை பக்கம் உருவாக்கப்பட்டது இந்த ஆடையின் பெயரில்தான்.

  என்ன செய்வது இணையம் கொஞ்சம் ஜனரஞ்சகமானதும்தான்!

  ***

  மைக்ரோசாப்ட் 40!

  சாப்ட்வேர் மகாராஜாவான மைக்ரோசாப்டுக்கு 40 வயதாகிவிட்டது. இதன் 40-வது பிறந்த நாளை முன்னிட்டு, நிறுவனர் பில்கேட்ஸ், ஊழியர்கள் அனைவருக்கும் அனுப்பிய இமெயிலில், பால் ஆலனுடன் நிறுவனத்தை துவக்கிய காலத்தை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்திருந்தார். எனினும், கடந்த கால சாதனைகளைவிட எதிர்காலத்தில் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம் என்று கூறியிருந்தவர், நிறுவனத்தின் எதிர்காலம் தகுதியானவர் கைகளில் இருப்பதாக சி.இ.ஓ. சத்யா நாதெள்ளாவுக்கும் பாராட்டு தெரிவித்திருந்தார்.

  3.jpg 

  மைக்ரோசாப்ட் பற்றி மற்றொரு செய்தி – நிறுவனம், ஆட்டிசம் பாதிப்பு கொண்டவர்களை பணிக்கு அமர்த்திக்கொள்ளும் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இத்துறையில் செயல்பட்டு வரும் ஒரு அமைப்புடன் இணைந்து இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது. முதல்கட்டமாக, ஆட்டிசம் பாதிப்பு கொண்ட பத்து பேர் பணியில் அமர்த்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகள் துணைத் தலைவரான மேரி எல்லன் ஸ்மித், இதற்கான அறிவிப்பை வலைப்பதிவு மூலம் வெளியிட்டிருந்தார். அவருக்கு ஆட்டிசம் பாதிப்பு கொண்ட 19 வயது மகன் இருப்பதால், இந்தத் திட்டம் பற்றி நெகிழ்ச்சியாகவே குறிப்பிட்டிருந்தார்.

  ***

  உயிர் காத்த செல்ஃபி

  செல்ஃபி எனப்படும் சுயபடங்களால் என்ன பயன் என்று கேட்கலாம். இதற்கான பதில், சுயபடங்கள் எடுக்கப்படும் நோக்கத்தை பொறுத்தது. ஆனால், ஜேக்கி நிக்கல்சனை கேட்டுப்பாருங்கள், செல்ஃபிதான் என் உயிரைக் காத்தது என்று நன்றியோடு சொல்கிறார்.

  பிரிட்டனை சேர்ந்த ஜேக்கி இப்படி சொல்லக் காரணம் இல்லாமல் இல்லை. செல்ஃபி எடுத்து வெளியிட்டபோதுதான் தனக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதை அவர் தெரிந்துகொண்டார். அதன்பிறகு சிகிச்சை எடுத்துக்கொண்டு நோயில் இருந்து மீண்டார். செல்ஃபி எடுத்திருக்காவிட்டால், நோயின் பாதிப்பு தனக்குத் தெரியாமலே இருந்திருக்கும் என்கிறார் அவர்.

  4.jpg 

  சரி, செல்ஃபியால் எப்படி புற்றுநோய் பாதிப்பு தெரிய வந்தது?

  கடந்த ஆண்டு ஐஸ் பக்கெட் சேலஞ்ச் எனும் இணைய நிகழ்வு, பேஸ்புக் உலகை உலுக்கியது நினைவில் இருக்கிறதா? சேவை அமைப்பு ஒன்றுக்காக எல்லோரும் தங்கள் தலையில் ஜில் தண்ணீரை கொட்டிக்கொண்டு, மற்றவர்களுக்கும் பரிந்துரைத்தனர். இதேபோலவே, நோ மேக்கப் செல்ஃபி எனும் நிகழ்வும் பேஸ்புக்கை ஒரு வலம் வந்தது. அதாவது, பெண்கள் மேக்கப் இல்லாமல் படம் எடுத்துக்கொண்டு, அதை பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டனர். ஹாலிவுட் நடிகை கிம் நோவாக், ஆஸ்கர் விழாவுக்கு துணிந்து மேக்கப் இல்லாமல் வந்து அப்லாஸ் வாங்கியதை அடுத்து, இணையத்தில் பல பெண்கள் அவரைப்போலவே மேக்கப் இல்லாமல் செல்ஃபிக்களை வெளியிட்டனர்.

  இந்த நிகழ்வை, பிரிட்டனின் புற்றுநோய் ஆய்வு அமைப்பு புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படுத்திக்கொண்டது. இதில் பங்கேற்ற பெண்கள், மேக்கப் இல்லாத போஸ்களை பகிர்ந்துகொண்டதோடு, தங்கள் தோழிகளுக்கும் இதை பரிந்துரைத்தனர். இப்படி தனது தோழியால் பரிந்துரைக்கப்பட்ட ஜேக்கி, தொடர்புடைய புகைப்படத்தை கிளிக் செய்தபோது, புற்றுநோய் சோதனைக்கான விழிப்புணர்வு வீடியோவை பார்த்திருக்கிறார்.

  வீடியோவில் உள்ளதுபோல பரிசோதனை செய்தபோதுதான், மார்பகத்தில் கட்டி இருப்பதை தெரிந்துகொண்டார். அதன்பிறகு அது புற்றுநோய்க்கட்டிதான் என உறுதியாகி, அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டு உயிர் பிழைத்திருக்கிறார்.

  தான் சிகிச்சையில் இருந்தபோதுகூட அவர் செல்ஃபிக்களை வெளியிட்டிருக்கிறார். புற்றுநோய் அபாயம் எந்த வயதிலும் தாக்கும் அபாயம் இருப்பதை உணர்த்தவே இந்தப் படங்கள் என்கிறார்.


  ***

  பாஸ்வேர்டு ஆலோசனை!

  எட்வர்ட் ஸ்நோடன், தனிஉரிமை காவலர்களின் நாயகனாகப் பார்க்கப்படுகிறார். ஆனால், அமெரிக்க அவரை வில்லனாகப் பார்க்கிறது. அமெரிக்க அரசின் இணைய கண்காணிப்பு நடவடிக்கைகளை அவர் அம்பலப்படுத்தியதுதான், இரண்டுக்குமே காரணம்.

  அமெரிக்க அரசு கண்களில் மண்ணை தூவிவிட்டு ரஷ்யாவில் தஞ்சம் அடைந்திருக்கும் ஸ்நோடனை சந்திப்பது என்பது குதிரைக்கொம்பாக இருக்கும் நிலையில், அவ்வப்போது அவரது பேட்டி வெளியாகிக்கொண்டுதான் இருக்கிறது.

  5.jpg

  சமீபத்தில், ஜான் ஆலிவர் எனும் தொலைக்காட்சி பத்திரிகையாளர், ரஷ்யாவுக்குப் பறந்து சென்று ஸ்னோடனிடம் ரகசிய பேட்டி எடுத்தார். இந்தப் பேட்டியிலும், அமெரிக்க கண்காணிப்பு பற்றி வெளியிட, ஸ்நோடனிடம் புதிய தகவல்கள் இருக்கவே செய்தன. திடுக்கிட வைக்கும் இந்த விவரங்கள் தவிர, ஸ்நோடன் இந்தப் பேட்டியில் பாதுகாப்பான பாஸ்வேர்டு பற்றி எளிதான ஆலோசனையும் கூறினார்.

  வழக்கமான பாஸ்வேர்டுகளுக்குப் பதில் எழுத்துகளும் எண்களும் கொண்ட பாஸ்பிரேஸ்களை பயன்படுத்துங்கள் என்பதுதான் அது. பொதுவாக, வல்லுநர்கள் சொல்லி வரும் ஆலோசனைதான் இது என்றாலும், இமெயில் ஹேக் செய்யப்படுவது பற்றி எல்லாம் நன்கறிந்த ஸ்நோடன் சொல்லும்போது, இதற்கு கூடுதல் மவுஸ் வருகிறது இல்லையா!

  சரி, அதென்ன பாஸ்பிரேஸ் என்று கேட்கலாம்? உங்களுக்குப் பிடித்தமான ஒரு வாசகம் அல்லது வரியை தேர்வுசெய்து, அதன் வார்த்தைகளின் முதல் எழுத்துகளை மட்டும் எண்களுடன் சேர்த்து பாஸ்வேர்டை உருவாக்கும் எளிய வழியைத்தான் இப்படி சொல்கின்றனர்!

  ***

  பேஸ்புக் விவாகரத்து

  விவாகரத்து நோட்டீசை அனுப்பிவைக்க நினைக்கும்போது, அதை பெற வேண்டியவர், ஓரிடத்தில் இல்லாமல் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தால் என்ன செய்வது? பேசாமல் பேஸ்புக் மூலம் விவாகரத்து நோட்டிசை வழங்க வேண்டியதுதான்!

  அமெரிக்காவில், பெண்மணி ஒருவருக்கு நீதிமன்றம் இப்படி உத்தரவிட்டு ஆசுவாசம் அளித்துள்ளது. எல்லனோரா பயடு எனும் அந்தப் பெண்மணி, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி நியூயார்க் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். பிரச்னை என்னவென்றால், கணவர் எங்கிருக்கிறார் என்று அவருக்குத் தெரியாது. மனிதர் தனக்கென நிரந்தர முகவரி இல்லாமல், அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருக்கிறார். தொலைபேசி அல்லது பேஸ்புக் மூலம் மட்டுமே அவ்வப்போது மனைவியை தொடர்புகொண்டு வந்திருக்கிறார். இப்படி இருக்க, அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் எப்படி அனுப்புவது? சிக்கல்தான் இல்லையா?

  6.jpg 

  அதனால்தான் அவரது வழக்கறிஞர், மாற்று வழிகளில் அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பு அனுமதி கேட்டிருக்கிறார். அதாவது, அவர் தொடர்புகொள்ள பயன்படுத்தும் பேஸ்புக் மூலம் விவாகரத்து நொட்டீசை அனுப்ப அனுமதி கேட்க, வழக்கை விசாரித்த மேத்யூ கூப்பர் எனும் நீதிபதி, இதற்குப் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். ஆனால் அதற்குமுன், பேஸ்புக் பக்கம் கணவருடையதுதான் என்பதையும், அவர் அடிக்கடி அதை பயன்படுத்துகிறார் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று மட்டும் நீதிபதி கூறியிருக்கிறார். பேஸ்புக் எப்படி எல்லாம் பயன்படுகிறது என்பதற்கு இன்னொரு அழகான உதாரணம்!

  ***

  புக்மார்க்!

  பொன்மொழி பிரியரா நீங்கள்? எனில், ‘கோட்ஸ் ஃபார் ஆல்’ (http://quotes4all.net/) தளத்தை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். பொன்மொழிகளுக்கான இந்தத் தளத்தின் முகப்புப் பக்கம், வரிசையாக பொன்மொழிகளுடன் வரவேற்கிறது. அந்தப் பொன்மொழிகளை படித்து ரசித்த பின், கீழ்ப் பகுதியில் கிளிக் செய்தாலும் சரி அல்லது மேலே உள்ள பகுதிக்குச் சென்றாலும் சரி, பொன்மொழிகளின் உலகம் அகல விரிகிறது.

  7.jpg 

  கீழ்ப் பகுதியில், இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக உள்ள பொன்மொழி வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை கிளிக் செய்து பார்க்கலாம். அதற்கும் கீழே, மேலும் பொன்மொழிகளுக்கான வாயில் ஒரு கிளிக்கில் திறக்கிறது. தளத்தின் மேல் பகுதியில் பார்த்தால், ஆங்கில எழுத்துகளின் அகர வரிசை, கண்களை உறுத்தாத வகையில் தரப்பட்டுள்ளது. எந்த எழுத்தை கிளிக் செய்தாலும், அந்த எழுத்தியில் துவங்கும் பொன்மொழிகளைக் காணலாம். பொன்மொழிகளை மதிப்பீடு செய்யும் வசதியும் இருக்கிறது. எளிமையான அமைப்பை மீறி, இந்தத் தளங்களில் இருக்கக்கூடிய செழுமை வியப்பானது.

  தினம் தினம் விஜயம் செய்ய வேண்டிய தளங்கள் இவை. காலையில் ஒரு சில நிமிடங்களையாவது செலவிடுங்கள். இல்லை, அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது சென்றுப்பாருங்கள். உங்கள் வாழ்க்கை ஊக்கம் பெறட்டும்.


  ***

  இணைய மொழி

  8.jpg 

  ‘எங்கே பார்க்க வேண்டும் என்று நமக்குத் தெரியும். எப்படிப் பார்க்க வேண்டும் என்று நமக்குத் தெரியும். நம்மிடம் அதற்கான தொழில்நுட்பமும் இருக்கிறது. அதை பயன்படுத்துவதற்கான பாதையிலும் செல்கிறோம். ஆகவே, நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம் என நம்புகிறேன்’.

  அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளுக்குள், வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதை கண்டுபிடிக்கும் வாய்ப்பு இருப்பதாக நம்பும் நாசா தலைமை விஞ்ஞானி எல்லென் ஸ்டோபன் (Ellen Stofan).

                                   ***

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai