நெல்சன் மண்டேலா நினைவாக!

கூகுள் ஸ்ட்ரீட்வியூ சேவையை நீங்கள் அறிந்திருக்கலாம். இல்லை என்றால் இப்போது அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் கூகுள் இப்போது மண்டேலா

கூ
குள் ஸ்ட்ரீட்வியூ சேவையை நீங்கள் அறிந்திருக்கலாம். இல்லை என்றால் இப்போது அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் கூகுள் இப்போது மண்டேலா சிறைவாசம் அனுபவித்த ராபென் தீவுகளை ஸ்டிரீட்வியூவுக்குள் கொண்டு வந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இனவெறியை எதிர்த்து நீண்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற மண்டேலா தன் இனத்துக்காக சிறையில் கழித்த 26 ஆண்டுகளில் 18 ஆண்டுகளை ராபென் தீவுச் சிறையில் கழித்தார். ராபென் தீவு இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு வரலாற்று அருங்காட்சியகமாக பாதுகாக்கப்படுவதோடு தென்னாப்பிரிக்காவில் அதிகம் விஜயம் செய்யப்படும் இடமாகவும் இருக்கிறது.


இப்போது தென்னாப்பிரிக்கா செல்லாமல், இந்த தீவுக்குள் சென்று பார்க்க சிறப்பு அனுமதி பெறாமல், இருந்த இடத்தில் இருந்தே மண்டேலா இருந்த சிறைச்சாலையை  கூகுள் ஸ்டிரீட்வியூவில் சுற்றிப்பார்க்கலாம்.

இந்த இடத்தில் ஸ்டீரீட்வீயூ சேவை பற்றி சிறு அறிமுகம். கூகுளின் வரைபட சேவையின் அங்கமான ஸ்டிரீட்வியூ உலக நகரங்களில் உள்ள தெருக் காட்சிகளை 360 டிகிரி கோணத்தில் படம் பிடித்துக் காட்டுகிறது. பிரத்தியேக காமிராவில் சுற்றியுள்ள காட்சிகள் அனைத்து கோணங்களிலும் படமாக்கப்பட்டு பின்னர் ஒன்றாக தைக்கப்பட்டு 360 டிகிரி கோணத்தில் காட்டப்படுகிறது. ஆகவே ஒரு இடத்தை அங்கிருந்து சுற்றிப்பார்க்கும் உணர்வைப் பெறலாம். சுவாரசியமான சேவை தான் என்றாலும் தனியுரிமை மீறல் தொடர்பாக சர்ச்சைக்கு ஆளான சேவையும் கூட.

ஸ்டிரீட்வியூவின் சிறப்பசம் என்ன என்றால் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல இடங்களை நம் டெஸ்க்டாப்பில் இருந்தே பார்க்க வழி செய்வது தான். அமேசான் மழைக்காடுகள் முதல் தாஜ்மஹால் வரை ஸ்ட்ரீட்வியூவில் பார்க்கலாம்.

அந்த வகையில் மண்டேலா கருப்பின மக்கள் உரிமைப் போராட்டத்துக்காக சிறைவாசம் அனுபவித்த ராபென் தீவையும் கூகுள் தனது டிரெக்கர் காமிரா மூலம் படமாக்கி இணையவாசிகள் பார்வைக்கு வைத்துள்ளது.

சிறைச்சாலையை நேரில் சுற்றி பார்ப்பது போல வாயில் பகுதியில் இருந்து ஒவ்வொரு இடமாகப் பார்க்கலாம். மண்டேலாவுடன் சிறையில் இருந்த முன்னாள் அரசியல் கைதியான வுசுமி காங்கோ(Vusumzi Mcongo) ஒரு வழிகாட்டி போல இந்தச் சிறையை சுற்றிக்காண்பிக்கிறார்.

மண்டேலாவின் நெருங்கிய நண்பரும் அவருடன் சிறைவாசம் அனுபவித்தவருமான அகமது கத்ராடா இந்த முயற்சியை மனதார வரவேற்றுள்ளார். " 20 ஆண்டுகளாக குழந்தைகளைப் பார்க்க முடியாமலும் பேச முடியாமலும், தான் ராபென் தீவில் இருந்த காலம் மிகவும் கடினமானது " என்று கூறும் அகமது, இப்போது உலகம் முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகள் ஸ்ட்ரீட்வியூ மூலம் இந்தச் சிறையைச் சுற்றிப்பார்க்க முடிவது கவித்துவமான நீதி என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

கூகுள் கல்ச்சுரல் இன்ஸ்டிடியூட் இணையத்தளத்தில் இந்த உலா பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த தளத்தில் மண்டேலாவின் சிறைவாசம் தொடர்பான டிஜிட்டல் கண்காட்சிகளையும் காணலாம். வரலாற்றின் ஊடே உணர்ச்சியமான பயணத்துக்கு நீங்கள் தயாரா? விஜயம் செய்யுங்கள்:

www.google.com/culturalinstitute/exhibit/robben-island-prison-tour/mQIim-e6wopSJw

***

ஹாகிங் அளித்த ஆறுதல்!


விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங், வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். மோட்டார் நியூரான் பாதிப்பால் அவரது குரலையும், உடல் அசைவுகளையும் தான் முடக்க முடிந்திருக்கிறதே தவிர அவரது சிந்தனையை அல்ல. 70 வயதைக் கடந்த நிலையிலும் அவரது அறிவியில் மூளை சுறுசுறுப்பாக இருக்கிறது. சக்கர நாற்காலியில் வலம் வந்தாலும் சாப்ட்வேர் துணையோடு தனது விஞ்ஞான கருத்துகளை உற்சாகமாக உலகுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் ஹாகிங் ஆஸ்திரேலியாவின் சிட்னி ஓபரா அரங்கில் ஹோலோகிராம் வடிவில் உரை நிகழ்த்தினார். அதாவது பிரிட்டனில் உள்ள அவர் வசிப்பிடத்தில் இரண்டு காமிராக்கள் மூலம் அவர் பேசுவது படமாக்கப்பட்டு, அந்தக் காட்சி சிட்னியில் ஹோலோகிராம் வடிவில் தோன்றியது.


ஹாகிங்கின் மகள் லூசி இந்த உரைக்கான அறிமுகத்தை செய்து வைத்தார். இந்த உரையின் போது அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்குள் நாம் வேற்று கிரகங்களில் வசிப்பதற்கான வாய்ப்பை தேடிக்கொள்ளவிட்டால் மனிதகுலம் அழிந்துவிடும் என்றும் ஹாகிங் எச்சரித்தார்.

பின்னர் ஹாகிங்கிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ஒன்று, இளம் பாடகர் ஜயான் மாலிக், ஒன் டைரக்‌ஷன் குழுவை விட்டு விலகி உலகம் முழுவதும் உள்ள இளம் பெண்களை கண்ணீர் சிந்த வைத்ததன் காஸ்மாலாஜிகல் விளைவு என்னவாக இருக்கும் என்பதாகும்.

விஞ்ஞானியிடம் கேட்க வேண்டிய கேள்வியா இது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், ஹாகிங் இந்தக் கேள்விக்கு அளித்த பதில் தான் இன்னும் சுவாரசியமானது. கடைசியாக ஒருவர் முக்கியமான கேள்வியைக் கேட்டிருக்கிறார் என்று நகைச்சுவையாக குறிப்பிட்ட ஹாகிங், இந்தப் பெண்களுக்கு எனது ஆலோசனை, கோட்பாடு பெளதீகத்தைப் படியுங்கள் என்பதாகும் என்று கூறிவிட்டு, ஏனெனில் என்றாவது ஒரு நாள் இணையான பிரபஞ்சங்கள் இருப்பது நிரூபணமாகும். அப்போது நம்முடைய பிரபஞ்சத்துக்கு வெளியே இன்னொரு பிரபஞ்சம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போகாது. அந்தப் பிரபஞ்சத்தில் ஜயான் மாலிக், ஒன் டைரக்‌ஷனில் இருந்து வெளியேறாமலே இருக்கலாம் என்று அதற்கான காரணத்தையும் விளக்கினார்.

இதைக் கேட்ட பின், ஜயான் மாலிக் பற்றி கூகுளிட தோன்றுகிறதோ இல்லையோ, இணையான பிரபஞ்சங்கள் பற்றி இணையத்தில் தேடிப்பார்க்க தோன்றும் அல்லவா? அதுதான் ஹாகிங்!

இந்த நிகழ்ச்சியில் கவனிக்கத்தக்க விஷயம் இன்னொன்றும் இருக்கிறது. நிகழ்ச்சிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து அரங்கம் நிரம்பி வழிந்தது என்பது தான் அது. நம்மூரில் ஹாகிங் போன்றவர்கள் உரை நிகழ்த்த வந்தால் எப்படி இருக்கும், யோசித்துப்பாருங்கள்?

***

இணைய சுதந்தர கார்ட்டூன்கள்

அசீம் திரிவேதியை நினைவில் இருக்கிறதா? ஊழலுக்கு எதிரான கார்ட்டூன்களை வரைந்து சர்ச்சைக்கும் விமர்சனத்துக்கும் இலக்கானவர். 2011-ல் இவரது இணையத்தளம் மும்பை காவல்துறையால் தடை செய்யப்பட்டு 2012-ல் கைது செய்யப்பட்டார். இவரது கைது, நாடு தழுவிய அளவில் பெரும் எதிர்ப்பையும் விவாத்தையும் ஏற்படுத்தியது.


இணையத் தணிக்கைக்கு எதிராக குரல் கொடுக்கும் சேவ் யுவர் வாய்ஸ் அமைப்பை நடத்தி வரும் திரிவேதி, இணையச் செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார்.

நெட்நியூட்ராலிட்டி எனும் இணையச் சமநிலைக்கான போராட்டமும் விவாதமும் நடைபெற்று வரும் நிலையில் திரிவேதி தனது பேனாவை பேச வைத்திருக்கிறார். ஆம், இணையச் சமநிலையின் முக்கியத்துவத்தை விளக்கும் அருமையான கார்ட்டூன்களை அவர் வரைந்து தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். இணையச் சமநிலையை எவருக்கும் புரியும் வகையில் எளிதாக விளக்குவதுடன் இணையச் சமநிலை இல்லாவிட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் இந்த கார்ட்டூன்கள் பளிச்சென விளக்குகின்றன. மொத்தம் பத்து கார்ட்டூன்கள் இடம்பெற்றுள்ளன. என்ன பெரிய இணையச் சமத்துவம், சின்ன மீன்களை விழுங்குவது தான் எனது பிறப்புரிமை என்று பெரிய மீனாக உருவகப்படுத்தப்பட்டுள்ள இணையச் சேவை நிறுவனங்கள் கூறுவது போன்ற கார்ட்டூன் தான் ஹைலைட்டாக இருக்கிறது.

இன்னொரு கார்ட்டூனோ வேகமான சேவை, வேகமான பொருள் எது தேவை என்றாலும் காசு கொடுங்கள் என இணையச் சேவை நிறுவனங்கள் பிடுங்குவது போல அமைந்துள்ளது.

கார்ட்டூன்களை ரசிக்க, சிந்திக்க:

www.aseemtrivedi.in/2015/04/10-cartoons-on-net-neutrality.html

***

பாஸ்வேர்டை விழுங்கலாம்

எதிர்கால பாஸ்வேர்ட் எப்படி எல்லாம் இருக்கும் என நினைத்தால் வியப்பாக இருக்கிறது.  மாதிரிக்கு ஒன்றை விழுங்கிப் பார்க்கலாமா? ஆமாம், வருங்காலத்தில் பாஸ்வேர்டை விழுங்கிவிடலாம் என்கின்றனர். இந்த ரக பாஸ்வேர்டை எடிபில் பாஸ்வேர்ட் என்கின்றனர். பாஸ்வேர்டை எப்படி விழுங்க முடியும்? மாத்திரை போல தான் என்கிறார்கள் பாஸ்வேர்ட் ஆய்வாளர்கள்!

எழுத்துக்களும் எண்களும் கலந்த பாஸ்வேர்ட் தான் இப்போது பழக்கத்தில் உள்ளது. இந்த வகை பாஸ்வேர்ட்களில் உள்ள போதாமைகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதப்பட்டுவிட்டன. பாஸ்வேர்ட் உருவாக்குவதில் உள்ள பலவீனங்கள் காரணமாக அவை எளிதாக தாக்காளர்கள் கையில் சிக்கக்கூடியதாக இருக்கின்றன. இதற்கு மாற்று மருந்தாக கைரேகையைப் பாஸ்வேர்டாகப் பயன்படுத்தும் பயோமெட்ரிக் முறை உள்ளிட்டவை முன்வைக்கப்பட்டாலும் எல்லாவற்றிலும் ஏதேனும் குறை இருக்கத்தான் செய்கின்றன. அதனால் தான் மனிதர்களின் இதயத்துடிப்பு போன்றவற்றை பாஸ்வேர்டாக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே போலவே ஒருவரது தமணி இயக்கம், சர்க்கரை அளவு ஆகியவற்றை பாஸ்வேர்டாகக் கொள்ளும் ஆய்வுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இவை எல்லாமே ஒருவரது தனிப்பட்ட அடையாளமாக இருக்கும் என்பதால் இவற்றை பாஸ்வேர்டாக கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இந்த இடத்தில் விழுங்கக்கூடிய பாஸ்வேர்ட் வருகிறது. இவை குட்டி கம்ப்யூட்டர் கொண்ட மாத்திரை வடிவில் இருக்கின்றன. இவை வயிற்றுக்குள் போனதும் சர்க்கரை அளவு அல்லது தமணி இயக்கத்தை அளவிட்டு வயர்லெஸ் மூலம் தகவல் அனுப்பும். கம்ப்யூட்டர்களுக்குள் ஏற்கனவே இந்தத் தகவல் சேமிக்கப்பட்டிருக்கும் என்பதால் அவை ஒப்பிடப்பட்டு அனுமதி கிடைக்கும்.

இவற்றை யாரும் போலி செய்ய முடியாது என்பதால் பாஸ்வேர்ட் திருட்டு பற்றிய கவலையில்லை என்கிறார்கள்.

மாத்திரை தவிர உடலில் பொருத்தக்கூடிய சிப்கள் அல்லது டாட்டூ போல ஒட்டக்கூடிய சிப்கள் என்றெல்லாமும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஏற்கனவே மோட்டரோலா நிறுவனம் இதற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

சமீபத்தில் பே பால் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர் பிரிவு தலைவர் லெப்லான்க் என்பவர் மாநாடு ஒன்றில் இந்த வகை பாஸ்வேர்ட் ஆய்வு பற்றி விரிவான உரை நிகழ்த்தினார். பாஸ்வேர்ட்கள் கற்கால சங்கதியாகிவிட்டன, மனித உடலோடு இணைக்கக் கூடிய பாஸ்வேர்டே எதிர்காலத்தில் செல்லுபடியாகும் என்று அவர் உற்சாகமாக கூறியிருக்கிறார்.

நிற்க, கடந்த வாரம் இணையத்தில் ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி பாஸ்வேர்ட் அவசியம் என்றும் அவை தனித்தன்மையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பட்டிருந்தோம்.

பாஸ்வேர்டுக்கு எதற்குத் தனித்தன்மை அவசியம் என்றால் அவை யாராலும் யூகிக்க முடியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். எனவே தான் பரவலாகப் பின்பற்றப்படும் பிறந்த தேதி, மனைவியின் பெயர் போன்றவற்றை எல்லாம் அடிப்படையாகக் கொண்டு பாஸ்வேர்டை அமைக்க வேண்டாம் என்று வல்லுநர்கள் மன்றாடுகிறார்கள். அது போலவே அகராதிகளில் பார்க்கக் கூடிய வார்த்தைகளையும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.

ஆக, நீங்கள் பாஸ்வேர்ட் பொது விதிகளுக்கு உட்படாமல் உங்களுக்கான தனித்தன்மையுடன் இருந்தால் மற்றவர்களாலும், களவாடப் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர்களாலும் யூகிக்க முடியாமல் இருக்கும்.

பாஸ்வேர்ட் குறிப்புகளை தொடர்ந்து பார்க்கலாம்.

***

போட்டோஷாப் விளையாட்டு

இணையத்தில் ஒரு கேள்வியைக் கேட்டால் எத்தனை விதமான பதில்கள் வரும் தெரியுமா? அதிலும் போட்டோஷாப் மூலமான பதில் அளிக்கும் வாய்ப்பு இருந்தால் இணையம் அதன் படைபாற்றலால் வியக்க வைத்துவிடும் தெரியுமா?

சந்தேகம் இருந்தால் டச்சு வலைப்பதிவாளர் சிட் பிரிஸ்ஜஸ் (d Frisjes) அனுபவத்தைக் கேட்டுப்பாருங்கள். சிட் சமீபத்தில் பிரான்சின் பாரீஸ் நகருக்குச் சுற்றுலா சென்று வந்தார். நம்மூரில் ஆக்ரா என்றதும் தாஜ்மஹால் நினைவுக்கு வருவது போல பாரீஸ் என்றால் ஈபிள் கோபுரம் தான். தாஜ்மஹால் மீது கை வைத்துக்கொண்டிருப்பது போல புகைப்படம் எடுத்துக்கொள்வது போல ஈபிள் கோபுரத்தைப் பிடித்திக்கொண்டிருப்பது போல படம் எடுத்துக்கொள்வதும் பலரது வழக்கம்.

சிட் பாரிசுக்குப் போன போது இந்த அலுத்துப்போன பாணியில் படம் எடுத்துக்கொள்ள விரும்பாமல் விலகி நிற்க ஆசைப்பட்டார். எனவே ஈபிள் கோபுரம் முன் தள்ளி நின்றபடி படம் எடுத்துக்கொண்டார். வழக்கமான பாணியில் கோபுரம் மீது கை வைப்பது போல் இருந்தாலும் கோபுரத்தில் கை விலகி இருப்பது போல படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்திலும் இணைய அரட்டைத் தளமுமான 4சேனிலும் பகிர்ந்து கொண்டார்.

ஈபிள் கோபுரம் கொஞ்சம் மிஸ்ஸாகிவிட்டது, இதை போட்டோஷாப் மூலம் சரி செய்து தர முடியுமா? என கோரிக்கை வைத்திருந்தார். கொஞ்சம் லேசான கேலியுடன் கேட்டிருந்தாலும் இணையவாசிகள் பலரும் போட்டோஷாப்பில் தங்கள் கைவண்ணத்தைக் காண்பித்து வியக்க வைத்துவிட்டனர்.

ஒவ்வொருவரும் ஒருவிதமாக போட்டோஷாப் செய்து ஈபிள் கோபுரம் மீது அவரது கையை ஒட்டவைத்திருந்தனர். ஆனால் அதில் ஒரு சின்ன டிவிஸ்ட் கொடுத்து தங்கள் கற்பனை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தனர்.


உதாரணத்துக்கு இணையவாசி ஒருவர் சிட்டின் கைகளை வளைத்து நீட்டி கோபுரம் மீது ஒட்ட வைத்திருந்தார். இன்னொரு இணையவாசி ஒருவர் கோபுரத்தின் ஒரு பகுதியை வெட்டி அவரது கையருகே கொண்டு வந்திருந்தார். இன்னொருவர் கோபுரத்தை அப்படியே படுக்க வைத்து அவரது கை அருகே முனையைக் கொண்டு வந்தார். இன்னொருவரோ அவரது கையை மட்டும் துண்டித்து கோபுரத்தின் மீது கொண்டு வைத்திருந்தார். வேறு ஒருவர் சிட்டை சூப்பர்மேன் போல பறக்க வைத்து கோபுரம் மீது கொண்டு சென்றிருந்தார். இப்படிப் பலரும் பலவிதமாக தங்கள் தீர்வை வழங்கியிருந்தனர்.

எல்லாப் படங்களுமே லேசாகப் புன்னகைக்க வைக்கும் வகையில் இருந்ததோடு போட்டோஷாப்பை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கான எடுத்துக்காட்டாகவும் அமைந்திருந்தன. இதைப்பார்த்து மேலும் பலர் இந்தப் படத்தில் தங்கள் கைவண்ணத்தைக் காண்பிக்க, இது ஒரு இணைய நிகழ்வாக மாறியிருக்கிறது. இந்தப் படங்கள் எல்லாம் பதிவர் சிட்டைப் பகடி செய்வது போல இருந்தாலும் அவர் அதைப்பற்றி கவலைப்படாமல் எல்லாப் படங்களையும் தனது வலைப்பதிவில் இடம்பெற வைத்திருக்கிறார். சும்மாவா என்ன, அவரைத்தேடி இணையப் புகழை அல்லவா இவை கொண்டு வந்துள்ளன.

போட்டோஷாப் படங்களைக் காண: http://www.boredpanda.com/photoshop-eiffel-tower-tourist-photo-sid-frisjes/

***

இணையத்தை அச்சிட்டால் என்னாகும்?

இணையத்தில் எப்போதாவது தேவைப்படும் தகவல்களை இணையப் பக்கங்களாக நீங்கள் அச்சிட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் எப்போதேனும் மொத்த இணையத்தை அச்சிட முயன்றால் எவ்வளவு காகிதங்கள் தேவைப்படும் என நினைத்துப் பார்த்ததுண்டா? பிரிட்டனின் லீஷயர் பலைகலை மாணவர்கள் ஜார்ஜ் ஹார்வுட் மற்றும் இவாஞ்சிலைன் வாக்கர் இந்தக் கேள்வியை கேட்டு அதற்கான பதிலையும் கணக்கிட்டு சொல்லியிருக்கின்றனர்.

வெள்ளிவிழா கண்ட இணையம் (வைய விரிவு வலை) 2014-ம் ஆண்டில் வேகமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன் இணையத்தில் இடம்பெறும் தகவல்களும் அதிகரித்துள்ளன என்று இந்தக் கேள்விக்கு விடை அளிக்கும் ஆய்வுக்கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்த இரண்டும் சேர்ந்துதான், இணையத்தை அச்சிட்டால் என்ன ஆகும் எனும் கேள்வியை உண்டாக்கியதாகவும் தெரிவித்து இதற்கான பதிலை விவரித்துள்ளனர்.

பதில் என்ன தெரியுமா? 136 பில்லயன் காகிதங்கள் தேவைப்படும் என்பதுதான். இந்த எண்ணிக்கையை உருவகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் இந்த எண்ணிக்கை காகிதங்களை உருவாக்க 16 மில்லியன் மரங்கள் தேவைப்படும்.

முதலில் விக்கிபீடியாவின் பக்கங்களை அச்சிட எவ்வளவு பக்கங்கள் தேவைப்படும் என அனுமானித்துக்கொண்டு அதன் பிறகு இணையத்தின் 4.5 பில்லியன் இணையத்தளங்களை அச்சிட எவ்வளவு காகிதங்கள் தேவை என கணக்கிட்டுள்ளனர்.

இந்த கணக்கு பற்றிய ஆய்வுக்கட்டுரை இதோ: http://www.physics.le.ac.uk/jist/index.php/JIST/article/view/100/57

***

எத்தனை இணையத்தளங்கள்

புக்மார்க்: http://www.worldwidewebsize.com/

இதோ இந்த நொடி இணையத்தில் எத்தனை இணையத்தளங்கள் இருக்கின்றன என்று தெரியவேண்டுமா? அதாவது இணையத்தின் அளவு தெரிய வேண்டுமா?
 


http://www.worldwidewebsize.com/ இணையத்தளம் இதற்கான விடையை அளிக்கிறது. ஏப்ரல் 29-ம் தேதி கணக்குப்படி மொத்த இணையத்தளங்களின் எண்ணிக்கை : 4.71 பில்லியன் இணையப் பக்கங்கள்.

கூகுள், பிங் மற்றும் யாஹூ உள்ளிட்ட தேடியந்திரங்களால் பட்டியலிடப்பட்டுள்ள மொத்தப் பக்கங்களின் அடிப்படையில் இணையத்தின் உத்தேச அளவு கணக்கிடப்படுவதாக இந்தத் தளம் தெரிவிக்கிறது. நெதர்லாந்தைச் சேர்ந்த மவுரிஸ் டி குண்டர் என்பவர் இந்த இணையத்தளத்தை நடத்தி வருகிறார்.

இணையத்தை அச்சிடும் கணக்குக்கான விடை தேடிய ஆய்வு மாணவர்கள் இணையத்தின் அளவாகக் கொண்டது, இந்த இணையத்தளம் காட்டும் எண்ணிக்கையின் அடிப்படையில் தான் என்பது கூடுதல் தகவல். இணையம் என்பது இங்கு வைய விரிவு வலையை குறிக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆனால், இது உத்தேச கணக்கு தான். இணையத்தில் உண்மையில் எத்தனை இணையத்தளங்கள் இருக்கின்றன என்பது இணைய ரகசியமாகவே இருக்கிறது.

***

இணைய மொழி

இணையம் என்பது உண்மையில் தங்கச்சுரங்கம் போன்றதுதான். அதாவது, எங்கே தோண்ட வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்திருந்தால்... - யூடியூப் நட்சத்திரம் மிச்சிலி பேன்

***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com