செவ்வாய் கிரகத்தில் குடியேற்றம்

மனிதகுலத்தின் எதிர்காலமே வேற்று கிரகங்களுக்குச் சென்று குடிபெயரும் ஆற்றலில் தான் இருக்கிறது என விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் முதல் கொண்டு நாசா

 

னிதகுலத்தின் எதிர்காலமே வேற்று கிரகங்களுக்குச் சென்று குடிபெயரும் ஆற்றலில் தான் இருக்கிறது என விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் முதல் கொண்டு நாசா விஞ்ஞானிகள் வரை பலரும் தீவிரமாக நம்புகிறார்கள். எனவே செவ்வாய் கிரகத்துக்கு எப்போது செல்வோம் எனும் கேள்விக்கான விடை காண்பதிலும் பலருக்கு ஆர்வம் இருக்கிறது.

சமீபத்தில் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இந்தக் கேள்விக்கான விடையை விவாதிப்பதற்காக என்றே செவ்வாயில் மனிதர்கள் (http://h2m.exploremars.org/ ) எனும் தலைப்பில் ஒரு மாநாடு நடந்திருக்கிறது. 2030-ம் ஆண்டு வாக்கில் செவ்வாய்க்கு விண்வெளி வீரரை அனுப்புவது சாத்தியமாகலாம் என்று கூறி மாநாட்டை நாசா தலைவர் சார்லெஸ் போல்டன் தொடங்கி வைத்தாலும், ஆண்டி வெயரின் பதில் தான் அனைவரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட்டது. ஸ்கைப் சேவை மூலம் பேசிய வெய்ர், என்னைக் கேட்டால் 2050-ம் ஆண்டில்தான் செவ்வாய்க்குச் செல்ல முடியும் என சொல்வேன் என்று தெரிவித்தார்.

என்னடா இது செவ்வாயில் குடியேறும் நாள் வரும் என்று ஆர்வத்துடன் இருந்தால் வெயரே இப்படிச் சொல்லிவிட்டாரே என்று மாநாட்டுப் பிரதிநிதிகள் முகம் வாடிவிட்டது.

யார் இந்த வெயர், செவ்வாய் கிரகம் பற்றி அவரது கணிப்புக்கு என்ன அத்தனை முக்கியம் என்று கேட்கலாம்.

வெயர் வேறு யாருமில்லை, செவ்வாய் கிரகத்தில் குடியேறிய மனிதகுலம், புதிய வரலாறு படைப்பது பற்றிய தி மார்ஷியன் நாவலை எழுதியவர். இணையத்தை இந்த நாவல் கலக்கியதுடன் ஹாலிவுட் திரைப்படமாகவும் வெளியாகி பாராட்டு பெற்றது.

செவ்வாயில் வசிப்பது பற்றி பிரமாதமாக கற்பனை செய்து தொலைநோக்குடன் எழுதினாலும் இதற்கான நடைமுறை சாத்தியம் பற்றி கேட்கப்பட்டபோது வெயர் இவ்வாறு கூறியது ஏமாற்றம் அளிக்கவே செய்யும்.

செவ்வாய்க்கு செல்வதற்கான தொழில்நுட்பம் மற்றும் அதற்கான செலவு இரண்டுமே சவாலானது என அவர் கூறியுள்ளார். ஆனால் ஒன்று, செவ்வாயில் மனிதர்கள் குடியேற வேண்டும் என்கிற கருத்தை மனதார ஆதரிப்பதாக கூறினார். சரி, நீங்கள் இதில் எந்தப் பக்கம்?

ஆண்டி வெயர் பற்றி அறிய: http://www.andyweirauthor.com/

***

இமெயில் கடன் இனிதே தீர்ந்தது!

நீங்கள் இமெயில் கடன்பட்டிருக்கிறீர்களா? என யாரேனும் கேட்டால் கோபிக்க வேண்டாம். கேட்கும் நபர் இமெயில் கடன் மன்னிப்பு தினம் பற்றி அறிந்திருக்கிறார் என்று பொருள்!

அதென்ன இமெயில் கடன் மன்னிப்பு தினம்? புதிதாக இருக்கிறதே என குழம்ப வேண்டாம். இமெயில் சுமை குறைப்பதற்காக இணையத்தில் முன் வைக்கப்பட்டுள்ள யோசனை தான் இது.

அதாவது நீண்ட நாட்களாக பதில் அளிக்காமல் வைத்திருக்கும் மெயில்களுக்கு, அவற்றை இதுவரை கவனிக்காமல் இருந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வு இல்லாமல் பதில் மெயில் அனுப்பி வைப்பதற்கு என்று இந்த தினத்தை தேர்வு செய்துள்ளனர். இணையத்தில் ரிப்ளை ஆல் எனும் பாட்காஸ்டிங் நிகழ்ச்சியை வழங்கி வரும் கிம்லெட்மீடியா (http://gimletmedia.com/2015/04/email-debt-forgiveness-day/ ) இணையத்தளம், ஏப்ரல் 30-ம் தேதியை இவ்வாறு இமெயில் கடன் மன்னிப்பு தினமாக அறிவித்துள்ளது.

உங்கள் முகவரிப் பெட்டியில் பழைய மெயில்கள் இருந்தால் அதற்குத் தயக்கம் இல்லாமல் பதில் அளியுங்கள் என்றும் ஊக்குவித்திருந்தது. இப்படித் தாமதமாக பதில் அனுப்புவதற்கான விளக்கம் அளிக்க வேண்டிய கவலையும் வேண்டாம், எங்களுக்கு இணைப்பு கொடுங்கள் போதும் என்றும் தெரிவித்திருந்தது.

இமெயில் பெட்டியைத் தூசி தட்டி சுத்தமாக்க நல்ல வழி தான் இல்லையா? சரி, உங்கள் மெயில் பெட்டியில் எத்தனை மெயில்கள் தேங்கிக் கிடக்கின்றன என்று ஒரு பார்வை பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த தகவல் சுவாரசியமாக இருப்பதாக நினைக்கிறீர்களா? அப்படி எனில் இமெயில் திவால் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

பலர் தங்கள் இணைய வாழ்க்கையை மேம்படுத்த இமெயில் திவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர் என்பதும் தெரியுமா? இவை பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

***

ஃபேஸ்புக் நேசக்கரம்

உலகில் எந்த மூலையில் பேரிடர் உலுக்கினாலும் சரி, தேடியந்திரமான கூகுள் அந்தப் பகுதியில், பர்சன் ஃபைண்டர் சேவையை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது. எளிமையான இந்த தளம் பேரிடர் பாதிப்பில் இருந்து தப்பியவர்கள் மற்றும் மீட்கப்பட்டவர்கள் பற்றிய தகவல் தெரிவிக்கவும், அதே போல பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்களின் பாதுகாப்பு பற்றிய தகவலைக் கோரவும் உதவுகிறது.

நேபாளத்தைப் பூகம்பம் உலுக்கிய போதும் கூகுள் அந்நாட்டுக்காக பர்சன் பைண்டர் இணையத்தளத்தை அமைத்துக் கொடுத்தது. ஹைத்தியை உலுக்கிய பூகம்பத்தில் இருந்து கூகுள் இந்தச் சேவையை பேரிடர் காலங்களில் வழங்கி வருகிறது. சமீபகாலங்களில் சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக்கும் இதே போல பேரிடர் பகுதிகளில் நேசக்கரம் நீட்டி வருகிறது.

நேபாள பூகம்ப பாதிப்பின்போது, ஃபேஸ்புக் சேஃப்டி செக் எனும் வசதியை அறிமுகம் செய்தது. அடிப்படையில் இது நான் நலமாக இருக்கிறேன் என்று தெரிவிப்பதற்கான நிலைத்தகவல் வசதி. பேரிடர் காலங்களில் நெருக்கமானவர்கள் என்ன ஆயிற்றோ என்று நெஞ்சம் துடிக்கும் அல்லவா? அதேபோல நலமாக இருப்பவர்கள் அந்த தகவலை தங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளவும் துடிப்பார்கள் அல்லவா? இதை எளிதாக பகிர்ந்து கொள்ள ஃபேஸ்புக் இந்தச் சேவை மூலம் வழி செய்கிறது.

நீங்கள் பூகம்பம் (பேரிடர்) பாதித்த பகுதியில் இருப்பதாக அறிகிறோம், உங்கள் நலனை பகிர்ந்து கொள்ளுங்கள் எனும் வாசகம் பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதியில் உள்ள ஃபேஸ்புக் பக்கத்தில் தோன்றும். அதை கிளிக் செய்து பாதுகாப்பாக இருப்பதை மற்றவர்களுக்கு உறுதி செய்து கொள்ளலாம்.

நேபாள பூகம்பத்தின்போது 70 லட்சம் பேர் இந்தச் சேவையைப் பயன்படுத்தி தாங்கள் நலமாக இருப்பதை நண்பர்களுக்கு உறுதி செய்ததாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

இதுதவிர ஃபேஸ்புக் நிதி திரட்ட உதவும் பட்டன் மூலம் பயனாளிகளை நிதி அளிக்க வைத்து அதற்கு ஈடாக தானும் நேபாளத்துக்கு நிதி திரட்டிக்கொடுத்துள்ளது.

பேரிடர் காலங்களில் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பதற்கு இவை எளிய உதாரணங்கள்!


***

புரோகிராமிங் தெரிந்த பிரதமர்!

ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகப் பயன்பாட்டில் பின்னி எடுக்கும் தேசத்தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். (இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட!) ஆனால், புரோகிராமிங் தெரிந்த தலைவர் எனும் அடைமொழி சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்-குக்கு (Lee Hsien Loong) மட்டும்தான் பொருந்தும். சந்தேகம் இருந்தால் லீயின் ஃபேஸ்புக் பக்கத்துக்குச் சென்று பாருங்கள். சமீபத்தில் லீ இந்தப் பக்கத்தில், தான் உருவாக்கிய புரோகிராமிங்குக்கான நிரல்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார். சுடோகு விளையாட்டுக்கான தீர்வை அளிக்கும் புரோகிராம் அது.

சமீபத்தில் ஐடி நிறுவன தலைவர்கள் மாநாட்டில் உரை நிகழ்த்தியபோது பிரதமர் லீ, தான் கடைசியாக எழுதிய புரோமிகிராம் சி ஷார்ப் மொழியில் அமைந்தது என போகிற போக்கில் குறிப்பிட்டார். அதோடு தனது மகன்களில் ஒருவர் ஹெஸ்கல் புரோகிராமிங் மொழிப் புத்தகத்தைக் கொடுத்து வாசிக்க சொன்னதாகவும் ஓய்வு பெற்ற பிறகு அதை படிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த உரையை கேட்ட பலரும் அட, புரோகிராமிங் தெரிந்த பிரதமரா? என வியந்து பாராட்டியதுடன், அந்த புரோகிராமின் விவரங்களையும் கேட்டிருந்தனர். இதனையடுத்து பிரதமர் லீ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த புரோகிராமிங் தொடர்பான முழு விவரத்தையும் பகிர்ந்து கொண்டார். இதில் ஏதேனும் குறைகள்(பக்) இருந்தால் சொல்லவும் என்றும் கூலாக குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் லீயின் ஃபேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/leehsienloong/photos/a.344710778924968.83425.125845680811480/905828379479869/

நட்சத்திரத் தடை இணையத்தளம்

அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியன் எத்தனை படங்களில் நடித்திருக்கிறார், என்ன சாதித்திருக்கிறார் என்பது பற்றி எல்லாம் தெரியாது. ஆனால், இணையத்தில் எங்குப் பார்த்தாலும் கிம் தான் நிறைந்திருக்கிறார். செய்தித் தளங்களில் ஆரம்பித்து ஃபேஸ்புக் டைம்லைன் வரை கவர்ச்சியாக சிரிக்கும் கிம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். கிம்மின் ராசி அப்படி என்பதோடு அவர் செய்திகளில் இடம்பிடிக்கும் கலையையும் கச்சிதமாக தெரிந்து வைத்திருக்கிறார். என்னதான் கவர்ச்சியானவராக இருந்தாலும் கூட எப்போதும் கிம் பற்றிய செய்திகளைப் படித்துக்கொண்டிருக்க முடியுமா என்ன?

இப்படி நினைக்க கூடியவர்களுக்கு கைகொடுப்பதற்காக என்றே கிம்முக்கு இணையத்தில் தடை விதிக்க உதவும் ஒரு இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இணையத்தில் யாருக்கும் தடை விதிப்பது சாத்தியம் இல்லைதான். ஆனால் இந்த தளம் என்ன செய்கிறது என்றால் உங்கள் இணையப் பார்வையில் இருந்து கிம் தொடர்பான செய்திகளை மறையச் செய்துவிடுகிறது. இதற்கான ஒரு பிரவுசர் நீட்டிப்புச் சேவையை உருவாக்க உள்ளனர். அந்த நீட்டிப்பைப் பயன்படுத்தினால் போதும், இணையத்தில் உலாவும்போது, கிம் தொடர்பான எந்தச் செய்தியும் கண்ணில் படாது. அவற்றை இந்த நீட்டிப்பு மறையச் செய்துவிடும். கிம் மட்டும் அல்ல, அவரது காதல் கணவர் ,சகோதரி என கிம் படை முழுவதையும் இந்த நீட்டிப்பு உங்கள் இணைய உலகில் வராமல் பார்த்துக்கொள்கிறது.

கிம் தொடர்பான தேவையில்லாத செய்திகளை படிக்கும் நேரத்தில் உலகின் முக்கிய பிரச்னைகள் பற்றி கவனம் செலுத்தலாமே என்கிறது கார்ட்பிளாக் (http://www.kardblock.com/ ) எனும் இந்த இணையத்தளம்!.

***

ஆன்லைன் மதிப்பில் கவனம்!

யாரை சந்தித்தாலும் பேச்சின் நடுவே உங்களுக்கு ஃபேஸ்புக் பக்கம் இருக்கிறதா? என கேட்டுத் தெரிந்துகொள்ளும் காலம் இது. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தள முகவரிகளைத் தெரிந்து கொள்வது நட்பு வளர்த்துக்கொள்ள மட்டும் அல்ல; இந்தப் பக்கங்கள் ஒருவர் பற்றிய மதிப்பையும் தீர்மானிக்க உதவுகின்றன என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். ஆம், இந்தியர்களில் தொழில்முறை வல்லுநர்களில் பெரும்பாலானோர், இணைய விவரங்களைக் (ஆன்லைன் புரொஃபைல்) கொண்டே மற்றவர்கள் பற்றிய முதல் அபிப்ராயத்தை உருவாக்கிக் கொள்வதாக தெரிய வந்துள்ளது. தொழில்முறை வல்லுநர்களுக்கான வலைப்பின்னல் சேவையான லிங்க்டு.இன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ள தகவல் இது.

அதேபோல பலரும் தங்கள் இணைய விவரப் பக்கத்தில் உள்ள புகைப்படத்தை அவ்வப்போது அப்டேட் செய்வதையும் முக்கியமாக கருதுவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆக, உங்கள் ஆன்லைன் விவரங்கள் நீங்கள் யார் என்பதைச் சரியாகப் படம்பிடித்து காட்டுகின்றனவா என்பதை ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்! தேவை எனில் மேலும் பட்டைத் தீட்டுங்கள்.
 

***

புக்மார்க்: டைனோசர் வரைபடம் – (http://dinomap.com/)

தகவல்களைப் பட்டியலிடுவதை விட வரைபடத்தில் சுட்டிக்காட்டுவது ஆர்வத்தை தூண்டக்கூடியது தெரியுமா? இதற்கு அழகான உதாரணம், டைனோமேப் இணையத்தளம்.

ஸ்பீல்பெர்க் பிரபலமாக்கிய அந்தக்கால உயிரினமான டைனோசர் ஆய்வு தொடர்பான விவரங்களை அளிக்கிறது, இந்த இணையத்தளம். டைனோசர் படிமங்கள் உலகில் எங்கெல்லாம் கண்டெடுக்கப்பட்டன என்பது, பூமி வரைபடத்தின் மீது குட்டிப் பலூன்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன. இந்தப் பலூனை கிளிக் செய்தால் மேலும் பல விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். டைனோசர் படிமங்கள் மட்டும் அல்லாமல் தாவரங்கள், பூச்சிகள், ஊர்வன என இன்னும் பல வகையான ஆய்வுகள் குறித்த தகவல்களை அளிக்கிறது. கூகுள் வரைபடச் சேவையை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையத்தளம் பார்க்கும்போதே ஆர்வத்தைத் தூண்டுகிறது. ரோஜர் என்பவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சேர்ந்து உருவாக்கிய தளம் என்பது இன்னும் சுவாரசியமான தகவல்.

***

இணைய மொழி

இணையம் எப்படி நாம் தகவல்களைப் பயன்படுத்தும் விதத்தை மாற்றியமைத்ததோ அதேபோல சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை போன்றவை நாம் எரிசக்தியை பயன்படுத்தும் விதத்தை மாற்றி அமைக்க உள்ளன. மின்சக்தியை சேமித்து வைக்கும் ஆற்றல் இந்த மாற்றத்தில் முக்கியமானது.

வீடுகளில் பயன்படுத்தக்கூடிய சூரிய மின்சக்தியைச் சேமித்து வைக்கும் பேட்டரியை டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்திருப்பது தொடர்பாக மறுசுழற்சி எரிசக்தி வல்லுநர் அலஸ்டயர் காமரூன் (Alasdair Cameron).

                                   ***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com