ஸ்மார்ட் போன்களுக்கு எதிரான இயக்கம்!

இது ஸ்மார்ட்போன்களின் காலம் என்பதில் சந்தேகமில்லை. முன்னணி செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு புதிய மாதிரி ஸ்மார்ட்போன்களை

 

து ஸ்மார்ட்போன்களின் காலம் என்பதில் சந்தேகமில்லை. முன்னணி செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு புதிய மாதிரி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கின்றன. இந்தியா போன்ற வேகமாக வளரும் சந்தையை நோக்கி சீனத்து ஜியோனிகளும் மெய்சூக்களும் படையெடுக்கின்றன. ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை மட்டும் பெருகவில்லை. அவற்றின் ஆற்றலும் கணிசமாக அதிகரித்து வருகிறது. 2 ஜிபி கொள்திறன் கொண்ட போன்கள் அறிமுகமாகத் துவங்கி இருக்கின்றன. இன்னொரு பக்கம் 4ஜி அலை வீசத்துவங்கியிருக்கிறது.

எல்லா விலைப்பிரிவுகளிலும் ஸ்மார்ட்போன் இருப்பது கூட செய்தி இல்லை. ஆனால் நுழைவுப் பிரிவு என சொல்லப்படும் ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன்களில் பல நிறுவனங்களும் கவனம் செலுத்தி வருகின்றன. ஸ்மார்ட்போன்களின் அருமை பெருமைகளை கேள்விப்பட்டு தங்களை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் சாதாரண போன் பயனாளிகளைக் குறிவைத்து சில ஆயிரம் விலையிலேயே  ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்க ஆரம்பித்துள்ளன. இத்தகைய முதல்முறை ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்குக் கையைக் கடிக்காத விலையில் ஸ்மார்ட்போன் கிடைக்கவேண்டும் என்பதற்காக மொசில்லா போன்கள் அறிமுகமாயின. நினைவில் இருக்கலாம்.

அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்கள் எந்த அளவுக்கு ஆற்றல் கொண்டவையாக இருக்கும் என தெரியவில்லை. ஆனால், ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையில் இன்னும் தீவிரமாக ஆதிக்கம் செலுத்தும் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல்லலாம்.

ஸ்மார்ட்போனுக்கு எதிராக

ஸ்மார்ட்போன்களின் துணை சாதனமாக ஸ்மார்ட் வாட்ச்களும் பிரபலமாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்மார்ட்போன்களுக்கு எதிரான முயற்சிகளும் நடந்து வருவதுதான் ஆச்சர்யம். இந்தப் போக்குக்கான சமீபத்திய உதாரணம், லைட் போன்.

இந்த லைட் போன் எல்லா விதங்களிலும் ஸ்மார்ட்போனுக்கு எதிரானது என்று சொல்லலாம். ஸ்மார்ட்போன் என்றவுடன் நினைவுக்கு வரும் எந்த விஷயமும் இதில் கிடையாது. அகண்ட திரை இதில் இல்லை. இணையத்தில் உலாவ பிரவுசர் கிடையாது. கேம்கள் ஆட முடியாது. இதில் மெனுவும் கிடையாது. மேலும் கீழும் ஸ்கிரால் செய்வது, ஸ்பீட் டயல் செய்வது ஆகிய வசதிகளும் இதில் சாத்தியமில்லை.

வழக்கமாக ஸ்மார்ட்போன்களில் செய்யும் எதையும் இதில் செய்ய முடியாது.

இந்த போனில் பேசலாம், குறுஞ்செய்தி அனுப்பலாம். அவ்வளவுதான். ஆரம்ப கால செல்போன்கள் எப்படி இருந்தனவோ அப்படித்தான் இந்த போனும் இருக்கிறது. ஆனால் இது வெறும் ‘சாதாரண’ செல்போன் இல்லை.

இதன் வடிவமைப்பில் ஒரு புதுமை இருக்கிறது. ஸ்மார்ட்போனுக்கு எதிரான கருத்தாக்கம்தான் இதன் அடிப்படை.

எல்லாமே எளிமை

இந்த போன் கிரெடிட் கார்டு அளவுக்குத்தான் இருக்கிறது. இரண்டு கிரெடிட் கார்டுகளை சேர்த்து வைத்ததுபோல இருக்கும் இதன் எடை, 36 கிராம் தான். இதில் சின்ன சிம்கார்டை போட்டுக்கொள்ளலாம் அவ்வளவுதான். இன்றைய போன்களில் பளிச்சிடும் பல வண்ண டிஸ்பிளேவுக்கு மாறாக இதில் அந்தக் காலத்து டாட் மேட்ரிக்ஸ் திரை வடிவம்தான். போனை ஆன் செய்தால் கடிகாரமும், டயல் செய்வதற்கான எண்களும் தோன்றும், வேறு எதுவும் இருக்காது. மெனுவும் இல்லை என்பதால் மேற்கொண்டு எந்த வசதியையும் தேடிப்பார்க்க அவசியம் இல்லை.

முன்பே சொன்னது போல, இதன் மூலமாக போன் செய்யலாம், குறுஞ்செய்தி அனுப்பலாம். ஆனால் ஒன்று, இதன் பேட்டரி 20 நாள்களுக்கு தாக்குப்பிடிக்கும்.

ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவதற்காக இந்த போன் என்கின்றனர் இதனை உருவாக்கியுள்ள இளம் நிறுவனர்கள்.

உங்கள் போனில் இருந்து விலகிய போன் என்றே இந்த போனை அவர்கள் முன்வைக்கின்றனர். எப்போதும் நோட்டிபிகேஷன் மூலம் குறுக்கிட்டுக்கொண்டிருக்கும்  ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாக இந்த போனை உருவாக்கியதாக சொல்கின்றனர். அழைப்பு வராத நேரங்களில்கூட அடிக்கடி போனை எடுத்துப் பார்த்துக்கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் பித்தர்களுக்கு இந்த போன் சரியான விடுதலையாக இருக்கும் என்பது நிறுவனர்களின் நம்பிக்கை.

நாங்கள் புதிதாக எந்த தொழில்நுட்பத்தையும் உருவாக்கவில்லை, ஏற்கனவே உள்ள தொழில்நுட்பத்தைப் புதிதாகப் பயன்படுத்தியிருப்பதாக சொல்கின்றனர். எளிமை தான் இதன் சிறப்பு என்கின்றனர்.

கிக்ஸ்டார்ட்டரில்...

இதன் நிறுவனர்கள் ஜோ ஹெல்லர் மற்றும் கைவே டாங் (Joe Hollier and Kaiwei Tang), நியூயார்க்கில் கூகுள் நிறுவனம் நடத்தும் 30 வார இன்குபேட்டர் திட்டத்தில் இந்த போனுக்கான கருத்தாக்கத்தை உருவாக்கினர். இப்போது இதன் உற்பத்திக்காக, கிரவுட்ஃபண்டிங் முறையில் இணையம் மூலம் நிதி திரட்ட கிக்ஸ்டார்ட்டர் தளத்தை நாடியுள்ளனர். அடுத்த ஆண்டு வாக்கில் இந்த போன் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போன் எந்த வகையான வரவேற்பைப் பெறும் என்பது தெரியவில்லை. ஆனால் கருத்தாக்கம் கவனத்தை ஈர்க்கிறது. கவனச்சிதறல்களுக்கு இடம் கொடுக்காமல் அடிப்படையில் போன் எதற்காகவோ அதற்கு மட்டுமே பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்துவதுதான் லைட்போனின் நோக்கம்.

இதற்கு ஸ்மார்ட்போனை வாங்காமல் சாதாரண போனை வாங்கலாமே என்று கேட்கலாம். நல்ல யோசனை தான். ஆனால் ஸ்மார்ட்போன் யுகத்தில் சாதாரண போனை வைத்திருப்பது ஏதோ பின் தங்கி போய்விட்ட உணர்வை ஏற்படுத்தலாம். மாறாக லைட்போன் போன்ற ஸ்மார்ட்போனுக்கு எதிரானதாக உருவாக்கப்பட்ட போனை பயன்படுத்தும்போது, நான் ஸ்மார்ட்போனுக்கு எதிரானவன் என்ற கருத்தை உணர்த்த முடியும். முக்கியமாக நமக்கு நாமே சொல்லிக்கொள்ள முடியும்.

ஆனால், லைட்போன் ஸ்மார்ட்போனுக்கு மாற்று இல்லை. ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைத்துக்கொண்டு இதைப் பயன்படுத்தலாம். அதாவது பேக் அப் போனாக வைத்துக்கொள்ளலாம்.

பிள்ளைகளின் போன்

குறிப்பிட்ட தினங்களில் அல்லது விடுமுறையில் ஸ்மார்ட்போன் சங்கிலியில் இருந்து விடுபட விரும்பினால் அதை வீட்டில் வைத்துவிட்டு லைட்போனை கையில் வைத்துக்கொள்ளலாம். அழைப்புகளைப் பெற மட்டும் இதைப் பயன்படுத்தலாம். இதற்கு வசதியாக இதில் உள்ள ஒரெ செயலி மூலம் ஒருவர் தனது ஸ்மார்ட்போனுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

மற்றபடி பிக்னிக் அல்லது சுற்றுலா செல்லும்போது இதைப் பயன்படுத்தலாம். பிள்ளைகளுக்கு வாங்கி கொடுத்துவிட்டு, ஸ்மார்ட்போனால் கெட்டுப்போவார்களே என்ற கவலை இல்லாமல் இருக்கலாம்.

இன்னும் பலவிதங்களில் இந்த போனின் பயன்பாடு அமையலாம். முக்கியமான விஷயம் என்ன என்றால், ஸ்மார்ட்போன்களும் அதன் எண்ணற்ற செயலிகளும் நம் வாழ்க்கையில் வியாபித்திருக்கும் நிலையில் நமது சுயத்தை மீட்டுக்கொள்ள இது கைகொடுக்கும்.

ஸ்மார்ட்போன் யுகத்தின் முக்கிய சிந்தனை இது. தொழில்நுட்பத்தின் தாக்கமும், வீச்சும் அதிகமாகிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அதில் விடுபட்டு நிற்பதற்கான வழியையும் நாம் தேடியாக வேண்டும் என்னும் கருத்தை இது வலியுறுத்துகிறது.

முன்னோடி போன்கள்:

ஆனால் லைட்போன், ஸ்மார்ட்போனுக்கு எதிரான முதல் போன் அல்ல. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த மோனோம் (Monohm) எனும் நிறுவனம் ஸ்மார்ட்போனுக்கு எதிரான போனுக்கான கருத்தாக்கத்தை அறிமுகம் செய்தது. இதன் அறிமுகமான ரன்சிபில் போன் வழக்கமான செவ்வக போன்களுக்கு நேர்மாறாக வட்ட வடிவமாக இருக்கும். ஸ்மார்ட்போனில் உள்ள பெரும்பாலான வசதிகள் இதில் உண்டு. ஆனால், ஸ்மார்ட்போன் போல ஓயாமல் நோட்டிபிகேஷன் கொடுத்து கவனத்தை சிதறடிக்காது. இந்த போனில் வட்ட வடிவிலான டிஸ்பிளே இருந்தாலும் பட்டன்களோ, ஸ்பீக்கரோ கிடையாது. இந்த போன் மூலம் பேச ஹெட்போன் அல்லது ஸ்பீக்கரை இணைக்கும் சாதனம் தேவை. ஃபயர்பாக்ஸ் இயங்கு தளத்தில் செயல்படும்போது உரிமையாளர்களுக்கு ஏற்ற தனிப்பட்ட சாதனமாக போன் இருக்கும் என்றும் கூறப்பட்டது. இதற்கு முன்பாக நெதர்லாந்து நாட்டில் இருந்து ஜான்ஸ் போன் எனும் பெயரில் ஸ்மார்ட்போனுக்கு எதிரான ஒரு போன் அறிமுகமானது.

நையாண்டி போன்

இதனிடயே நோபோன் எனும் நையாண்டி போனும் அறிமுகமானது. நோபோன் உண்மையான போன் இல்லை. ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தைப் பகடி செய்யும் விதமாக கேமரா இல்லாமல், ப்ளுடூத் இல்லாமல் எளிமையான போன் எனும் வர்ணனையுடன் இது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போனை கையில் வைத்திருந்தால் போன் இருக்கும் உணர்வும் ஏற்படும், அதே நேரத்தில் நீங்கள் இருக்கும் சூழலில், நேரடியாக நெருக்கமான தொடர்பும் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இதன் பொருள், இந்த போனை வைத்துக்கொண்டு பேச முடியாது என்பதால் நண்பர்களோடு நட்பு பாராட்டலாம் என்பதாகும்.

ஸ்மார்ட்போன் பழக்கத்தை விமரிசிக்கும் வகையில் நையாண்டி போனாக கருத்தாக்க அளவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போனை உண்மையிலேயே பலரும் விரும்பியதால் இந்த போனும் கிக்ஸ்டார்ட்டர் மூலம் நிஜ போனாக அவதாரம் எடுத்து விற்பனைக்கும் வந்துள்ளது; https://www.kickstarter.com/projects/nophone-usa/the-new-and-unimproved-nophone

இந்த போன்களை எல்லாம் நீங்கள் வாங்க வேண்டும் என்றில்லை. ஆனால் இதன் கருத்தாக்கங்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.

தொழில்நுட்ப மோகத்துக்கு எதிரானது என்பதோடு இந்த புதுமை போன்களில் கவனிக்க வேண்டிய விஷயம், இவை எல்லாமே தனிமனித முயற்சிகள் என்பதுதான். தொழில்நுட்பம் நல்ல விஷயம்தான். ஆனால், வர்த்தக நிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு புதிய தயாரிப்புகளை நமது கையில் திணித்துக்கொண்டிருக்கும் நிலையில், தொழில்நுட்பம் எந்த அளவுக்கு அவசியம் என யோசிக்க வைக்கிறார்கள். தனிமனிதர்களே ஸ்மார்ட்போனுக்கு எதிரான போன் உள்ளிட்ட முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஒருபோதும் வர்த்தக நிறுவனங்கள் இவற்றை மேற்கொள்ளாது. ஆனால், கிக்ஸ்டார்ட்டர் போன்ற இணைய மேடை இருப்பதால் தனிமனிதர்களால் இந்த புதுமை கருத்தாக்கங்களுக்கு ஆதரவு கோரி அவற்றை நிஜ உலகுக்குக் கொண்டு வர முடிகிறது. அந்த வகையில் கிரவுட்பண்டிங்குக்கு ஜே போட வேண்டும்.

புக்மார்க்:


உங்கள் ஸ்மார்ட்போன் பயன்பாடு அளவுக்கு அதிகமாக இருக்கிறதா என்பதை அறிய விருப்பமா? அதற்காக என்று ஒரு விநாடி வினாவை http://virtual-addiction.com/smartphone-abuse-test/ இணையத்தளம் வழங்குகிறது. இதில் உள்ள கேள்விகளுக்குப் பதில் அளித்து நீங்கள் ஸ்மார்ட்போன் அடிமையா என தீர்மானித்துக்கொள்ளலாம். இணையம் மற்றும் தொழில்நுட்ப மோகத்துக்கு எதிரான அமைப்பு நடத்தி வரும் இணையத்தளம் இது.

இணைய மொழி;

இரவு படுக்கச் செல்லும் முன்பும் காலையில் கண் விழித்த பிறகும் ஸ்மார்ட்போனை எடுத்துப் பார்க்கும் வழக்கம் இருந்தால் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகி விட்டனர் என்று பொருள்’. –  டாக்டர். டேவிட். கிரீன்ஃபீல்டு, தொழில்நுட்ப மோகத்துக்கு எதிரான வல்லுநர்.

                               ***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com