பகுதி 2: இடைவேளையில் நுழைந்த வில்லன்!

மனித இனத்தின் வரலாறு, பரிணாம அடிப்படையில் 26 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது.

னித இனத்தின் வரலாறு, பரிணாம அடிப்படையில் 26 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது. மனிதன் விவசாயம் செய்ய ஆரம்பித்து அரிசி, பருப்பு, பீன்ஸ், கோதுமையைச் சாப்பிட ஆரம்பித்தது 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே.

இது குறித்து ஆராயும் பரிணாமவியல் விஞ்ஞானிகள் கூறுவது - மனிதனின் 99.99% ஜீன்கள் நாம் விவசாயம் செய்வதற்கு முன்பே உருவாகிவிட்டன என்பதே. விவசாயம் பிறந்தபின் கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் நம் ஜீன்களில் வெறும் 0.01% மாற்றமே நிகழ்ந்துள்ளது. இன்று நாம் உண்ணும் பரோட்டா, நூடுல்ஸ், கார்ன்ஃபிளேக்ஸ், கோக், பெப்ஸி, பீட்சா, பர்கர் என்றால் என்னவென்றே நம் ஜீன்களுக்குத் தெரியாது. நம் ஜீன்களுக்குப் பழக்கமாகி, பரிச்சமயமாகியுள்ள உணவுகள் - இறைச்சியும் காய்கறி பழங்களுமே.

பரிணாமரீதியில் எத்தனை பின்னோக்கிப் போனாலும், கிடைத்துள்ள அத்தனை தடயங்களும் மனிதனின் முதன்மை உணவு இறைச்சியே என்று நிரூபிக்கின்றன. 32 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த லூஸி எனும் புனைப்பெயருள்ள எலும்புக்கூட்டின் அருகே கிடைத்த மிருகங்களின் எலும்புகளை ஆராய்ந்ததில் அவற்றை லூஸியும், அவரது கூட்டத்தாரும் கற்களால் துருவி எடுத்து இறைச்சியை உண்டதற்கான சுவடுகள் உள்ளன. நம்மிடம் கிடைத்துள்ள கற்காலக் கருவிகள் 26 லட்சம் ஆண்டு பழமையானவை. அப்போது ஹோமோ எனும் வகை மனித இனமே உலகில் தோன்றவில்லை. ஹோமோ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் ஹோமோசேபியன்ஸ் எனும் நாகரிக மனிதர்களான நாம். நமக்கு மூதாதை ஹோமோ எரெக்டஸ். இத்தனை தொன்மையான ஹோமோ குடும்ப வகை மனித இனம் தோன்றுவதற்கு முன்பிருந்த ஆஸ்திரிலொபிதிகஸ் வகை மனித இனம் (லூசியின் இனம்) இறைச்சி உண்டதற்கான தடயங்கள் நமக்கு கிடைத்துள்ளன.

லூஸியின் உணவாக பரிணாமவியல் விஞ்ஞானிகள் கூறும் உணவு, செட் தோசையும், கெட்டிச் சட்டினியும் அல்ல; பழங்கள், விதைகள், பூச்சிகள் மற்றும் சிறுமிருகங்களையே. அந்தக் காலகட்ட மனிதன் அப்போது மான், யானை போன்ற பெரிய மிருகங்களை வேட்டையாட ஆரம்பிக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பே இறைச்சி அவன் உணவில் இருந்திருக்கிறது.

அதன்பின் பல லட்சம் ஆண்டுகளாகப் பரிணாமரீதியாக வளர்ந்து மாற்றம் அடைந்து வந்த மனிதன் செய்த ஒரு விஷயம், அவனை மற்ற மிருகங்களில் இருந்து பரிணாமரீதியாக வித்தியாசப்படுத்தி, தன்னை உலகின் தலைவன் ஆக்கியது. அது என்ன மாற்றம்? சமைத்த மாமிசம் உணவை அவன் உண்ணத் தொடங்கியதே.

உணவுச்சங்கிலியில் சிங்கம், புலி போன்ற மிருகங்களைத் தாண்டி நாம் புலிப்பாய்ச்சலில் முன்னேறக் காரணம் - சமைத்த மாமிச உணவை உண்ணத் தொடங்கியதே என பரிணாமவியல் ஆய்வாளர்கள் விளக்குகிறார்கள். பச்சை இறைச்சி ஜீரணமாக ரொம்ப நேரம் பிடிக்கும். ஆனால் சுட்ட மாமிசம் எளிதில் ஜீரணமாவதுடன், அதிக அளவில் மாமிசத்தை உண்ணவும் முடியும். இதனால் நம் மூளைக்கு திடீரென அதிக கலோரிகளும், அதிக அளவில் புரதமும் வைட்டமின், மினரல் முதலான ஊட்டச்சத்துகளும் கிடைத்தன. இதை ஆராயும் பரிணாமவியலாளர்கள் மனித மூளையின் ஆற்றல் அதன்பின்னர் பெருமளவில் அதிகரித்ததாக கூறுகிறார்கள். மூளையின் ஆற்றல் அதிகரிக்க, அதிகரிக்கச் சிந்திக்கும் திறன் வளர்ந்து உலகின் மற்ற எந்த மிருகங்களையும் விடவும் பரிணாமரீதியில் மனிதன் முன்னேறிவிட்டான். ஆக, சமைத்த மாமிச உணவை உண்ணும்முன் மனிதனும் மற்ற மிருகங்களைப்போன்ற இன்னொரு மிருகமே; சமைத்த மாமிச  உணவே நம்மை மற்ற மிருகங்களிடம் இருந்து வேறுபடுத்தி மனிதனாக மாற்றியது.

ஏதோ ஒரே ஒரு உணவை மட்டுமே உண்டு மனிதனால் உயிர்வாழமுடியும் எனில் அது, மாமிச உணவு மட்டுமே. கீரை, அரிசி, பருப்பு, கோதுமை, தேங்காய், வாழைப்பழம் என உலகின் எந்தச் சத்துமிகுந்த உணவையும் எடுத்துக்கொள்ளுங்கள். அதை மட்டுமே ஒரு மனிதனுக்கு கொடுத்து வாருங்கள். உதாரணமாக தினமும் கீரை மட்டுமே சாப்பிடலாம் என்றால் சில மாதங்களில் ஊட்டசத்துக் குறைபாடு வந்து மனிதன் இறந்துவிடுவான். அவ்வளவு ஏன்? மனிதனுக்கு மிகப் பரிச்சயமான ஓர் உணவு, தாய்ப்பால். ஆனால், வளர்ந்த மனிதனுக்குத் தினமும் தாய்ப்பாலை மட்டுமே உணவாகக் கொடுத்து வந்தாலும் அவனும் சில மாதங்களில் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துவிடுவான். ஆனால், தினமும் இறைச்சியுணவை மட்டுமே ஒரு மனிதனுக்குக்குக் கொடுத்து வந்தால் அவன் இறந்துவிட மாட்டான். மாறாக அவன் உடல் ஆரோக்கியமடையும்; உடல்நலக் கோளாறுகள் நீங்கும். ஆம், தாய்ப்பாலில் கூட இல்லாத ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய உணவு, புலால் உணவே. ஒரு மனிதனுக்குத் தேவையான அனைத்து வகை வைட்டமின்களையும், மினரல்களையும், புரதங்களையும், கொழுப்புகளையும் பிற மூலச்சத்துகளையும் கொண்ட ஒரே உணவு அது.

ஆக, குரங்காக இருந்தவனை மனிதனாக்கி நம் ஜீன்களை வடிவமைத்து அதனுள் இருக்கும் டி.என்.ஏவைத் தீர்மானித்து மனித இனத்தைக் கட்டமைத்த உணவு - இறைச்சியுணவு. அதைக் கெடுதலானது எனக் கூறும் எந்த ஒரு டயட் முறையும் எப்படிச் சரியானதாக இருக்கமுடியும்?

எனவே, பேலியோ டயட் என்பது ஏதோ இன்றைய டயட்டிசியனோ, விஞ்ஞானியோ கண்டுபிடித்த புதிய உணவுமுறை அல்ல. நம்மை மனிதனாக்கி, மனித சமுதாயத்தைக் கட்டமைத்த ஆதிகால உணவுமுறை. நவீன உலகின் தொன்மையான டயட் இதுவே.

வாருங்கள், நாம் நவீன உலகின் முதல் பேலியோ டயட்டரைச் சந்திக்க காலச்சக்கரத்தில் ஏறி 1862-ம் ஆண்டுக்குப் பயணிக்கலாம்.

அப்போது டயட்டிங், ஜிம், ட்ரெட்மில் போன்ற எந்த வார்த்தைகளும் புழக்கத்தில் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்தில் வில்லியம் பாண்டிங் (William Banting) எனும் சமையற்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவர் பிரபுக்களுக்கும், மன்னர்களுக்கும் சமைப்பவர். அவர்களது உணவை உண்டு, உண்டு இவரும் குண்டானார். தன் 30 வயதில் குனிந்து ஷூ லேசைக் கூட கட்ட முடியாத நிலை வந்ததும் வெறுத்துப்போய் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டார். அவரும் ‘உடல்பயிற்சி செய்’ என்ற வழக்கமான ஆலோசனையைக் கொடுத்தார். வீட்டுக்கு அருகே இருக்கும் ஏரியில் படகு வலித்துக் கடும் உடற்பயிற்சி மேற்கொண்டார் பாண்டிங். தினமும் இரண்டுமணிநேரம் படகு வலிப்பார். அதன்பின் கடும்பசி எடுக்கும். அதைப்போக்க மேலும் அதிகமாக உண்பார். உடல் மேலும் குண்டாகும்.

வெறுத்து போன பாண்டிங்கிடம் ‘குறைவான கலோரிகளைச் சாப்பிடு’ எனும் அறிவுரை கூறப்பட்டது.  ஒரு கட்டத்தில் வெறும் காய்கறிகளை மட்டும் சாப்பிட்டு வந்தார் பாண்டிங். கடும் உடற்பயிற்சியும், உணவில்லா நிலையும் அவரை மயக்க நிலைக்குத் தள்ளின. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு வருடம் இப்படிப் பட்டினி கிடந்து, உடற்பயிற்சி செய்து, நீச்சல், ஸ்பா, குதிரை ஏற்றம் என பலவற்றை முயற்சித்தும் எடையில் வெறும் 3 கிலோ மட்டுமே இறங்கியது. இதனிடையே பாண்டிங்குக்குக் காதுகேட்கும் திறனும் குறைந்துகொண்டே வந்தது.

இந்தச் சூழலில் பாண்டிங் 1862-ல், வில்லியம் ஹார்வி எனும் மருத்துவரைச் சந்தித்தார். அப்போது க்ளுகோஸ் சுகர் என ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதுதான் எடை அதிகரிப்புக்குக் காரணம் என்கிற  ஒரு தியரி உலா வந்தது. ஹார்வியும் பாண்டிங்கிடம்  ‘உன் எடை அதிகரிப்பு மற்றும் காது கேட்காதது போன்ற பிரச்னைகளுக்குக் காரணம் சர்க்கரையே’ என்றார். அதன்பின் ஹார்வி, பாண்டிங்குக்கு ஓர் எளிய ஆலோசனை சொன்னார்.

‘சர்க்கரைச் சத்து எதில் இருக்கிறது? அரிசி, பருப்பு, கோதுமை, ரொட்டி, பழங்கள், பீன்ஸ், பால் அனைத்திலும் இருக்கிறது. ஆக இதை எல்லாம் சாப்பிடக்கூடாது.’

‘பின் எதைச் சாப்பிடவேண்டும்?’

‘இறைச்சி, முட்டை மற்றும் சீஸ் போன்ற சர்க்கரை சுத்தமாக இல்லாத உணவாகச் சாப்பிடு!’

இப்படி ஒரு ஆலோசனையை முதல்முறையாகக் கேட்கிறார் பாண்டிங்.

‘இதில் எப்படி எடை இறங்கும்? முட்டையையும், இறைச்சியையும் தின்றால் எடை ஏறத்தானே செய்யும்?’ (சாஸ்வதம் பெற்ற கேள்வி இது!)  

‘குண்டாக இருக்கும் சிங்கத்தையோ, புலியையோ, ஓநாயையையோ யாரும் பார்த்ததுண்டா? இவை எல்லாம் இறைச்சியை மட்டுமே சாப்பிடுகின்றன. குண்டாக இருப்பவை எல்லாம் முழுக்க முழுக்க தாவர உணவு மட்டும் உண்ணும் யானை, காண்டாமிருகம், நீர்யானை போன்ற மிருகங்களே’ என்றார் ஹார்வி.

வீடு திரும்பிய பாண்டிங், ஹார்வி சொன்னபடி உணவுமுறையை முற்றிலும் மாற்றினார். தினம் மூன்று வேளை வெறும் மாமிசம், மீன், முட்டை ஆகியவற்றை மட்டும் உண்டார். மாலையில் ஒரு டீயுடன், கொஞ்சம் பழம் சாப்பிடுவார். ரொட்டி, பால், இனிப்பு, உருளைக்கிழங்கு அனைத்தையும் தவிர்த்தார். கலோரிகளுக்கு எந்தக் கட்டுபாடும் இல்லை. இஷ்டத்துக்கு சாப்பிட்டார். 2 வருடங்களில் அதிசயத்தக்க முறையில் முப்பது கிலோவை இழந்து முழுமையான உடல் ஆரோக்கியம் பெற்றார். காதுகளின் கேட்கும் திறனும் அதிகரித்து நாளடைவில் முழுக்கச் சரியாகிவிட்டது.

இதில் மிகவும் உற்சாகமானார் பாண்டிங். தன்னைப் போல அனைவரும் இந்த உணவுமுறையால் பயனடையவேண்டும் என்று தன் டயட் அனுபவங்களை 1863-ம் ஆண்டு ஒரு நூலாக எழுதினார். வித்தியாசமான உணவுமுறைகள், புதிய கருத்தாக்கம் என்பதால் அந்த நூல் மிகப் பிரபலம் அடைந்தது.

இப்போது, உணவுக் கட்டுப்பாடுக்கு ‘டயட்டிங்’ என சொல்வது போல் அந்தக் காலத்தில் ‘பாண்டிங்’ என்று சொல்லப்பட்டது. அப்போது  ‘நான் டயட்டில் இருக்கிறேன்’ என யாரும் கூறமாட்டார்கள். ‘நான் பாண்டிங்கில் இருக்கிறேன்’ எனக் கூறுவார்கள்.

அன்று மக்காச்சோளம், ஓட்ஸ், பால், முட்டை எல்லாம் இருந்தன. ஆனால் கார்ன்ஃபிளேக்ஸ் எனப்படும் புராசஸ் செய்யப்பட்ட சோளம், ஓட்மீல் என அழைக்கப்படும் சர்க்கரை/செயற்கை வைட்டமின் சேர்த்த ஓட்ஸ், கொழுப்பெடுத்த பால், முட்டையின் வெள்ளைக்கரு மட்டுமே உண்பது போன்ற வழக்கங்கள் அன்று இல்லை. இன்று இவை இல்லாமல் அமெரிக்காவில் யாரும் டயட் செய்வதே இல்லை.

ஆக, நவீன உலகின் முதல் டயட், பேலியோ டயட் தான். அதாவது பாண்டிங் டயட் என்று சொல்லப்பட்ட டயட்.

பாண்டிங் டயட் பிரபலமானதால் அதுகுறித்த சர்ச்சைகளும் வர ஆரம்பித்தன. பாண்டிங் எளிய சமையல்காரர் என்பதைக் கண்டோம். அதனால் அவரது நூலைப் படித்த மருத்துவர்கள் அனைவரும் ‘இந்த டயட்டின் அறிவியல் அடிப்படை என்ன? இது எப்படி வேலை செய்கிறது?’ என்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பாண்டிங்கிடம் பதில் இல்லை. அதனால் அன்றைய மருத்துவர்களால் எள்ளிநகையாடப்பட்டார்

பாண்டிங். மேலும், ‘அறிவியல் அடிப்படையற்ற நூல்’ என அவருடைய நூலைக் குறைகூறி சுத்தமாக ஒதுக்கி வைத்தார்கள். ஆனால் மக்களின் எதிர்வினை வேறுவிதமாக இருந்தது. பாண்டிங் டயட்டை முழுமையாக நம்பினார்கள். இதனால் பயன் உள்ளது என்று அனைவரும் இந்த டயட் முறையை ஏற்றுக்கொண்டார்கள். பாண்டிங்கின் நூலை வாங்கிப் படித்து அதன் டயட் முறையைப் பின்பற்றியவர்களின் எடை நன்கு இறங்கியது; பல்வேறு வகையான உபாதைகளும் குணமாகின. ஆனாலும் மருத்துவர்கள் அந்த டயட்முறையை ஏற்றுக்கொள்ளவேயில்லை.

அமெரிக்காவில் பம்பிள்தேனி என்கிற ஒரு வகை தேனி உண்டு. அதன் உடலமைப்பை ஆராயும் எந்த ஏரோநாட்டிக்கல் எஞ்சினியரும் ‘இந்த உடலமைப்பைக் கொண்டுள்ள ஒரு பூச்சியால் பறக்க இயலாது’ எனத் துண்டைத்தாண்டி சத்தியம் செய்வார்கள். காரணம், அதன் உடலமைப்பு ஏரோநாட்டிக்கல் துறையின் சித்தாந்தங்களுக்கு எதிரானது. ஆனால், பம்பிள்தேனி காலகாலமாகப் பறந்துகொண்டுதான் இருக்கிறது. அதுபோன்ற ஒரு பம்பிள்தேனி தான் பாண்டிங் டயட்டும். அறிவியல் ஒரு விஷயம் சாத்தியமில்லை என்கிறது. ஆனால் நடைமுறை அதற்கு எதிரானதாக இருக்கிறது. இந்தச் சூழல் அறிவியலுக்குப் புதிதல்ல. நடைமுறைக்குத் தக்கபடி தன்னை மாற்றிக்கொள்வதே அறிவியலின் சாதனை. அவ்வகையில் பாண்டிங் டயட்டை ஆராய மேலும் சில மருத்துவர்கள் முன்வந்தார்கள்.

1890களில் ஹெலென் டென்ஸ்மோர் எனும் அமெரிக்க மருத்துவர் தன்னிடம் சிகிச்சை பெற வந்தவர்களிடம் பாண்டிங் டயட்டைப் பரிந்துரைக்க ஆரம்பித்தார். டயட் மிக எளிமையானது. ‘தினம் அரைகிலோ இறைச்சியும், சில காய்கறிகளும் சாப்பிடு. கிழங்குகள், சர்க்கரை, ரொட்டியைத் தவிர்.’

அவர் சொன்னதை அப்படியே பின்பற்றியவர்களுக்கு எடை மள மளவென இறங்கியது. டென்ஸ்மோரின் பரிந்துரை பேலியோ டயட்டுக்குப் பெரிய திருப்பமாக அமைந்தது. இந்தத் தகவல் வெளியே பரவியபிறகு அதன் வீச்சு மேலும் அதிகமானது. அதன்பின் அன்றைய ஐரோப்பா, அமெரிக்காவின் அனைத்து மருத்துவர்களும் பாண்டிங் டயட்டை ஏற்றுக்கொண்டார்கள். சர்க்கரை வியாதி நோயாளிகளுக்கு மருத்துவர்கள் அதைப் பரிந்துரைத்தது மட்டுமில்லாமல், சர்க்கரை வியாதி தொடர்புடைய நூல்களும் பாண்டிங் டயட்டையே வலியுறுத்தின. 1863-ல் இருந்து 1950 வரை, அதாவது 87 வருடங்கள், பாண்டிங் டயட் மட்டுமே உலகின் மிகப் பிரபலமான, மருத்துவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிகாரபூர்வ டயட்டாக இருந்தது.

இதை எல்லாம் இப்போது படிக்கையில்‘ பிறகு எப்படி இந்தக் குறைகொழுப்பு டயட்டுகள் பிரபலமாகின? ஏன் இறைச்சியும், நெய்யும் குண்டாக்கும் உணவுகள் என மக்களும், மருத்துவர்களும் நம்ப ஆரம்பித்தார்கள்?’ என்கிற சந்தேகம் தோன்றும்! திரைப்படத்தில், ஒரு ஹீரோ இடைவேளை வரை கதாநாயகியைக் காதலித்து குடும்பப்பாட்டு பாடி, மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில், இடைவேளை சமயத்தில் திடீரென ஒரு வில்லன் தோன்றி கதையில் திருப்பத்தை ஏற்படுத்தினால் எப்படி இருக்கும்! 1956-ல் அப்படி ஒரு வில்லன் தோன்றினார். அவர் பெயர் நம்மில் யாருக்கும் பரிச்சயமாக இருக்காது. எனினும், அவர்தான் இன்றைய குறைந்தகொழுப்பு டயட்டுகளின் தந்தை - ஆன்சல் கீஸ் (Ancel Keys).

உயிரியல் விஞ்ஞானியான கீஸ், இரண்டாம் உலகப் போரின்போது உணவு ரேஷன்களை ஆராயத் தொடங்கினார். பலநாடுகளுக்கும் சென்று உணவுக்கும், உடல்நலனுக்கும் இருக்கும் தொடர்பை ஆராய்ந்தார். 22 நாடுகளுக்குச் சென்று ஆராய்ந்த கீஸ், அதில் வெறும் ஏழே ஏழு நாடுகளின் புள்ளிவிவரத்தை எடுத்து ‘ஏழுநாடுகளின் ஆராய்ச்சி’ எனப்படும் ஆய்வை 1956-ல் பதிப்பித்தார். அந்த ஆய்வில் இந்த ஏழுநாடுகளிலும் உணவில் கொழுப்பின் சதவிகிதம் அதிகரிக்க, அதிகரிக்க இதயநோய்களால் மரணவிகிதங்கள் அதிகரிப்பதாக உலகுக்கு அறிவித்தார் கீஸ். ஆனால் கீஸ் 22 நாடுகளிலும் எடுத்த குறிப்புகளைப் பலவருடம் கழித்து ஆராய்ந்தார்கள் விஞ்ஞானிகள். அதன்படி, கீஸ் சொன்னதுபோல இதயநோய்க்கும், கொழுப்புக்கும் எத்தொடர்பும் இல்லை என்பதைக் கண்டறிந்தார்கள். முழுமையான 22 நாடுகளின் புள்ளிவிவரங்களையும் ஆராய்ச்சி செய்யாமல் வெறும் ஏழே நாடுகளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்தார், பிற 15 நாடுகளை ஏன் ஆய்வில் சேர்க்கவில்லை என்பதற்கான எந்த விளக்கத்தையும் கீஸ் சாகும்வரை தெரிவிக்கவில்லை.

கீஸின் ஆய்வு தவறானது என்று பின்னாளைய விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டாலும் அன்று கீஸிடம் யாரும் ஒரு கேள்வி எழுப்பவில்லை. அவர் அமெரிக்க அரசின் மதிப்பு மிகுந்த விஞ்ஞானி. அவரது ஆய்வு பதிப்பிக்கபட்ட பிறகு, உலகப்புகழ் பெற்ற பத்திரிகைகளான டைம், ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்றவை ‘முட்டையும், நெய்யும், இறைச்சியும் மாரடைப்பை வரவழைப்பவை’ எனத் தலையங்கம் எழுதின. இதைப் படித்த மக்கள் பேரதிர்ச்சி அடைந்தார்கள்.

இந்தச் சூழலில் 1950-களில் கெல்லாக்ஸ் சகோதரர்கள் மக்காச்சோளத்தில் இருந்து கார்ன்ஃபிளேக்ஸ் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருந்தார்கள். காலை உணவாக சீரியலையும், பாலையும் குடிக்கலாம் என சீரியல் கம்பனிகள் விளம்பரம் செய்துவந்தபோதும் அன்றைய அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் அதைச் சட்டை செய்யவில்லை. அன்றைய காலை உணவு என்பது முட்டையும், பன்றி இறைச்சியுமே. ஆனால், கீஸின் ஆய்வு வெளிவந்ததும் மக்கள் முட்டையையும், பன்றி இறைச்சியையும் கைவிட்டுவிட்டு சீரியலுக்கு மாறினார்கள்.

இதன்பின் சில விந்தைகள் நிகழ்ந்தன. கார்ன்ஃபிளேக்ஸும், கொழுப்பெடுத்த பாலும் ஆரோக்கிய உணவுகளாக டிவியில் விளம்பரம் செய்யப்பட்டன. முட்டை, இறைச்சி விற்கும் சிறுபண்ணையாளர்களுக்கு அம்மாதிரி விளம்பரம் செய்யத்தெரியாததால் போட்டியில் பின்தங்கிப் போனார்கள்.

இச்சூழலில் கொழுப்பு நல்லதா, கெட்டதா என பெரிய சர்ச்சை விஞ்ஞானிகளிடையே தொடங்கியது. 1970-களில் இதைத் தீர்க்க அமெரிக்க அரசின் ஒரு கமிட்டி செனட்டர் ஜார்ஜ் மெக்கவர்ன் தலைமையில் அமைக்கப்பட்டது.

மெக்கவர்ன், மக்காச்சோளம் அதிகமாக விளையும் விவசாய மாநிலத்தைச் சேர்ந்தவர். ப்ரிட்கின் டயட் எனப்படும் குறைகொழுப்பு, சைவ டயட்டைப் பின்பற்றியவர். அவருக்கு உணவியல், அறிவியல் குறித்து எந்தத் தெளிவும் கிடையாது. இரு தரப்பு விஞ்ஞானிகளிடமும் கருத்து கேட்டார். அதன்பின் தன் இஷ்டத்துக்கு ஒரு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தார். அதில் ‘இறைச்சி, முட்டை, கொழுப்பு ஆகியவை உடலுக்குக் கெடுதல். கொழுப்பு குறைவான உணவே உடலுக்கு நல்லது’ எனப் பரிந்துரைத்தார்.

அவ்வளவுதான். அதையே அமெரிக்க அரசு அதிகாரபூர்வமான அறிக்கையாக ஏற்றுக்கொண்டது. அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன், அமெரிக்க டயாபடிஸ் அசோசியேஷன் முதலான அமைப்புகள் அதையே அதிகாரபூர்வமான டயட்டாக அறிவித்தன. இந்த அமைப்புகளுக்கு சீரியல், ஓட்மீல், பிஸ்கட், குக்கி, மருந்து  கம்பனிகளின் ஸ்பான்சர் பணம் வெள்ளமெனப் பாய்ந்தது. இந்தப் புதிய உணவுமுறையை முன்வைத்து மருத்துவ நூல்களும், மருத்துவக் கல்லூரிப் பாடத்திட்டங்களும், டயட் முறைகளும் உருவாக்கப்பட்டன.

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் எது அறிவியலோ அதுதான் உலகின் அறிவியல். அமெரிக்க மக்கள் கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்தால் ஏனென்று யோசிக்காமல் நாமும் குதிப்போம்தானே! அமெரிக்க மக்கள் சாப்பிடுகிறார்கள் எனும் ஒரே காரணத்தால் தானே நாமும் பீட்சாவையும், பர்கரையும் உண்ண ஆரம்பித்தோம்? அவர்களைப் பார்த்து புகைப்பிடிக்கக் கற்றுக்கொண்டோம். பிறகு, டயட்டில் மட்டும் புதிய பாதையிலா பயணிப்போம்? அமெரிக்காவின் டயட்டே ஆசிய நாடுகளின் டயட்டாகவும் மாறிப்போனது. முட்டையும், இறைச்சியும் உணவுமேஜைகளில் இருந்து ஒழிக்கப்பட்டன. அவற்றின் இடத்தை கார்ன்ஃபிளேக்ஸும், கொழுப்பெடுத்த பாலும் பிடித்துக்கொண்டன.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com