பகுதி 3: வரலாறு உணர்த்தும் பாடம்

1913-ல், ஆல்பர்ட் ஸ்வைட்சர் (Albert Schweitzer) எனும் கிறிஸ்துவ மதப் பிரசாரகர் ஆப்பிரிக்காவுக்குச் சென்றார்.

1913-ல், ஆல்பர்ட் ஸ்வைட்சர் (Albert Schweitzer) எனும் கிறிஸ்துவ மதப் பிரசாரகர் ஆப்பிரிக்காவுக்குச் சென்றார். மருத்துவரான அவர் சிறந்த தத்துவஞானியும், சேவகரும் ஆவார். மேற்கு ஆப்பிரிக்காவின் குக்கிராமம் ஒன்றில் மருத்துவமனை ஒன்றைக் கட்டினார். ஒரு வருடத்தில் இரண்டாயிரம் பேரின் வியாதிகளைக் குணமாக்கினார்.

41 ஆண்டுகளுக்குப் பிறகு, குடல்வால் பிரச்னையுடன் ஒரு ஆப்பிரிக்கப் பழங்குடி ஸ்வைட்சரிடம் சிகிச்சைக்கு வந்தார். இதைப் பற்றி ஸ்வைட்சர் எழுதும்போது, ‘இந்த 41 ஆண்டுகளில் புற்றுநோய் உள்ள ஒரு ஆப்பிரிக்கனையும் நான் சந்தித்ததில்லை’ என்று வியப்பை வெளிப்படுத்துகிறார். ஆனால் அவர் மேலும் பல ஆண்டுகள் அங்கே மருத்துவம் பார்த்ததில் பல புற்று நோயாளிகளைச் சந்தித்துள்ளார். ‘கருப்பர்கள் வெள்ளையர்களைபோல சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்’ என்று பதிவு செய்கிறார் ஸ்வைட்சர்.

யோசித்துப் பார்க்கவும். 41 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்தவர், அந்தக் காலகட்டத்தில் புற்றுநோய், சர்க்கரை நோய், குடல்வால் பிரச்னை, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளைக் கொண்டவர்களைச் சந்திக்கவே இல்லை என்றால் அவை எல்லாம் நாகரிக மனிதனின் வியாதிகள் என்பது உறுதியாகிறது அல்லவா?

இவர் மட்டுமல்ல, பழங்குடிகளை ஆராய்ந்த பல ஆய்வாளர்கள் ‘புற்றுநோய் ஒரு நாகரிக மனிதனின் வியாதி’ என்றே கூறுகிறார்கள். ஆப்பிரிக்கா முதல் அண்டார்டிகா வரை, வட துருவம் முதல் தென் துருவம் வரை தேங்காய், மான், நண்டுகள், கடல்மீன், திமிங்கலம் போன்ற இயற்கை உணவுகளைச் சாப்பிட்டு வரும் எந்தப் பூர்வகுடி மனிதரிடமும் புற்றுநோய் பாதிப்பு கிடையாது.

வட துருவப் பகுதியில் வசிக்கும் எஸ்கிமோ மக்களை ஆராய, 1903-ம் வருடம் அங்கே சென்றார், வில்ஜாமுர் ஸ்டெபன்சன் (Vilhjalmur Stefansson) எனும் ஆய்வாளர். அங்கே ஐந்து வருடம் தங்கி ஆய்வை மேற்கொண்டார்.

இந்தக் காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் புற்றுநோய் பரவ ஆரம்பித்திருந்தது. 1898-ம் ஆண்டு வெளிவந்த லான்செட் (Lancet) எனும் நூலில் ‘லண்டனில் புற்றுநோய் பரவி வருகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு, லட்சத்தில் பதினேழு பேருக்குப் புற்றுநோய் இருந்தது. இன்று லட்சத்தில் 88 பேருக்குப் புற்றுநோய் உள்ளது" என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்கிமோக்கள் வாழும் பகுதி, புல், பூண்டு கூட விளையாத பூமியாகும். பனியில், தீ மூட்ட விறகுகள் இன்றி, பல சமயம் பச்சை இறைச்சியை உண்ணும் நிலைக்கு எஸ்கிமோக்கள் தள்ளப்படுவார்கள். அவர்களின் உணவு என்பது கடல் நாய் (seal), கடற்பசு (walrus), திமிங்கலம், பனிக்கரடி முதலான கொழுப்பு நிரம்பிய மிருகங்களே. என்றாவது அபூர்வமாக சில பறவை முட்டைகள் கிடைக்கும். கோடையில் ஒரே ஒரு மாதம் அதிசயமாக புல், பூண்டு துளிர்விடும். அந்தச் சமயத்தில் கசப்பான சில காய்கள் கிடைக்கும். அக்காய்களைக்கூட அவர்கள் திமிங்கிலக் கொழுப்பில் முக்கி எடுத்து தான் உண்பார்கள். ஆக, வருடத்தில் 11 மாதம் வரை இவர்கள் உண்பது முழுக்க, முழுக்க கொழுப்பு நிரம்பிய இறைச்சி உணவுகளே.

காய்கறியை உண்ணாமல் இவர்களால் எப்படி உயிர்வாழ முடிகிறது என்பதே விஞ்ஞானிகளுக்கு அன்று புரியாத புதிராக இருந்தது. அன்று வைட்டமின் சி பற்றி விஞ்ஞானிகள் அறிந்திருக்கவில்லை. ஆனால் நீண்டதூரம் கடலில் பயணிக்கும் மாலுமிகள் ஒரு மூன்றுமாதம் காய்கறிகளை உண்ணவில்லை எனில் ஸ்கர்வி எனும் நோயால் (பற்களில் துவாரம் ஏற்படுதல்) பாதிக்கப்படுவதை விஞ்ஞானிகள் அறிந்திருந்தார்கள். அதை எலுமிச்சைச்சாறு குணப்படுத்துவதையும் அறிந்திருந்தார்கள். ஆனால், வருடம் முழுக்க காய்கறிகளை உண்ணாத எஸ்கிமோக்களுக்கு ஏன் ஸ்கர்வி வருவதில்லை என்பது விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராக இருந்தது.

எஸ்கிமோக்களுடன் ஐந்து வருடம் தங்கிய ஸ்டெபன்சன், அவர்கள் உண்ட உணவையே உண்டார். அவரது உணவுமுறை:

...இரவில் பிடிக்கப்பட்ட மீனை காலையில் என் வீட்டுக்குக் கொண்டுவருவாள் ஒரு பெண். மீன் பனியில் உறைந்து கல்லைப்போல கெட்டியாக இருக்கும். அது இளகும்வரை காத்திருக்கவேண்டும். ஓரிரு மணிநேரங்களில் அது இளகியபின் சமையல் தொடங்கும்.

முதலில் மீன் தலையை வெட்டி எடுத்து, அதை பிள்ளைகளுக்காகத் தனியே  வைத்துவிடுவார்கள் எஸ்கிமோக்கள். இருப்பதிலேயே சத்தான உணவை தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுப்பார்கள். மீனின் உறுப்புகளிலேயே மீன் தலை தான் மிகச்சத்தான பொருள். அதன்பின் வாழைப்பழத்தை உரிப்பது போல மீனை உரிப்பார்கள். உரித்தபிறகு மீனின் பகுதிகள் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுக்கப்படும். பச்சையாக மீனை அனைவரும் சாப்பிடுவோம். அதன்பின் மீன் பிடிக்கச் சென்றுவிடுவோம். மதிய உணவுக்காக வீட்டுக்குத்  திரும்புவோம். உறைந்த, கொழுப்பு நிரம்பிய பெரிய மீன் ஒன்று உரிக்கப்பட்டு மீண்டும் உணவாக வழங்கப்படும். அதன்பின் மாலையில் வீட்டுக்குத் திரும்பி வெந்நீரில் கொதிக்க வைக்கப்பட்ட மீனை உண்போம். உணவில் காய்கறி, மசாலா என எதுவும் இருக்காது.

இப்படித் தினமும் மூன்று வேளை பச்சை மீனையும், வேக வைத்த மீனையும் சாப்பிட்டுச் சாப்பிட்டு எனக்கு வேறு எந்த உணவும் பிடிக்காமல் போய்விட்டது. வெந்நீரில் கொதிக்க வைக்கப்பட்ட மீன் சுவையாக இருக்கிறது. மீனின் உறுப்புக்களில் தலைதான் சுவையான பகுதி. இதில் திமிங்கிலக் கொழுப்பை ஊற்றிச் சாப்பிட்டால், சாலடில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி உண்பது போல சுவையாக இருக்கும்... 

என்று ரசனையுடன் எழுதுகிறார் ஸ்டெபன்சன்.

ஆனால் எஸ்கிமோ உணவில் ஸ்டெபன்சனுக்கு இரு மனக்குறைகள்.

‘…உணவில் உப்பு இல்லை’ என எழுதுகிறார். ‘கோடையில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பிடிக்கப்படும் மீன்களைக் குளிரான வெப்பத்தில் பாதுகாக்க முடியாததால் அவை விரைவில் கெட்டுவிடுகின்றன. கெட்டுப்போன மீன்களை எஸ்கிமோக்கள் மிக உயர்வான ஒயின் அல்லது பழைய பாலடைக்கட்டி போல நினைத்து ஆசையுடன் உண்கிறார்கள். நாள்பட்ட பழைய பாலடைக்கட்டிகளைப் பரிமாறுவது இங்கிலாந்தில் உயர்வானதாகக் கருதப்படும். அதுபோல நினைத்து நானும் கெட்டுப்போன மீன்களை உண்டேன்’ என எழுதுகிறார் ஸ்டெபன்சன்.

ஐந்து வருடங்களில் ஒரே ஒரு நாள், நாய்வண்டியில் (Sled) அங்கு வந்த இன்னொரு வெள்ளையரிடம் கெஞ்சிக்கேட்டு கொஞ்சம் உப்பை வாங்கியுள்ளார். அதை மீனில் போட்டுச் சாப்பிட்ட ஸ்டெபன்சன், மீதமிருந்த உப்பை அடுத்தவேளை உணவில் சேர்க்கவில்லை. உப்பில்லாமலேயே அந்த உணவு நன்றாக இருப்பதுதான் காரணம் என்கிறார். இந்த ஐந்து வருடங்களில், தான் அடைந்த உடல்நலமும், ஆரோக்கியமும் தன் ஆயுளில் வேறு எந்தக் காலகட்டத்திலும் அடைந்ததில்லை என்றும் அவர் கூறுகிறார்.

ஐந்து வருடமாக ஒரே உணவை உண்பது போரடிக்கவே இல்லை, மீனை மட்டுமே உண்ட தனக்கும், எஸ்கிமோக்களுக்கும் ஸ்கர்வி வரவே இல்லை என்றும் ஐந்து வருடமும் தான் வெறும் மீன் மற்றும் நீரை உட்கொண்டே வாழ்ந்ததாகவும் நூலில் எழுதியுள்ளார் ஸ்டெபன்சன்.

எஸ்கிமோக்களின் உடல்நலனைப் பற்றி எழுதுகையில்…

ஐந்து வருடத்தில் ஆயிரக்கணக்கான எஸ்கிமோக்களைச் சந்தித்தேன். அவர்களில் ஒருவருக்குக் கூட புற்றுநோய் இல்லை. எஸ்கிமோ பெண்கள் சாதாரணமாக ஏழெட்டுக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வார்கள். எஸ்கிமோக்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனை ஒன்று இருக்கும். எந்தப் பெண்ணுக்காவது பிரசவ வலி ஏற்பட்டால் உடனே மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்கப்படும். பெரும்பாலான சமயங்களில் மருத்துவர் வீட்டுக்கு வருவதற்குள் அப்பெண்ணுக்கு இயற்கையாகவே பிரசவம் ஆகிவிடும். பிரசவம் பார்க்க வீட்டுக்கு வந்த மருத்துவரை, சில நிமிடங்களுக்கு முன்பு குழந்தையைப் பெற்ற பெண்ணே எழுந்துவந்து உபசரிப்பார். சிசேரியன், நீண்டநேர பிரசவ வலி, பிரசவ சமயம் மரணம் என எதுவும் அவர்களுக்கு நேர்வதில்லை. பத்துப்பிள்ளைகளைப் பெற்றும் எஸ்கிமோ பெண்கள் மிக ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்கள்.

என்று வியக்கிறார் ஸ்டெபன்சன்.

இந்த வரலாறுகள் நமக்குக் கதையாக மட்டுமல்ல, பாடங்களாகவும் உள்ளன.

கொழுப்பு அதிகமுள்ள உணவுப் பொருள்களை (இறைச்சி, நெய், முட்டை, தேங்காய் போன்றவை) மனிதன் உண்பதால் குண்டாவதில்லை, மாறாக நல்ல ஆரோக்கியம் பெறுகிறான், ஒல்லியான தோற்றம் கிடைக்கிறது. 

அரிசி, கோதுமை, பழங்கள், இனிப்புகள், சர்க்கரை போன்றவற்றில் கொழுப்பு இல்லை. ஆனால் சர்ச்சரைச் சத்துகள் உள்ளன. இவற்றால் நாம் ஒல்லியாவதில்லை; மாறாக குண்டாகிறோம்.

இது ஏன் நிகழ்கிறது என்பதை இனி ஆராய்வோம்.

உடல் பருமனை முன்வைத்து மருத்துவ உலகம் ‘கலோரிச் சமன்பாடு’ எனும் கோட்பாட்டை உருவாக்கியது. இதன் அடிப்படை என்னவெனில், நாம் உண்ணும் உணவில் இருக்கும் கலோரி, நாம் செலவு செய்யும் கலோரியை விட அதிகமாக இருந்தால் குண்டாகி விடுவோம். செலவு செய்யும் கலோரியை விட குறைவான கலோரியை உட்கொண்டால் நாம் ஒல்லியாவோம்.

இந்த கலோரிச் சமன்பாட்டுக் கோட்பாட்டில் உள்ள குறைகள் சில:

1) நாம் எத்தனை கலோரியை எரிக்கிறோம் எனும் கணக்கு யாருக்கும் தெரியாது. ஆக, எத்தனை கலோரியை எரிக்கிறோம் என்பது தெரியாமல், இந்தக் கணக்கீடு அடிப்படையில் பயனற்றதாக மாறிவிடுகிறது.

2) நாம் எத்தனை கலோரியை உண்கிறோம் என்பதிலும் பல சிக்கல்கள், குழப்பங்கள் உள்ளன. கலோரிகளின் அளவை அறிய நாம் உண்ணும் உணவை மிகச்சரியாக அளந்து, எடைபோட்டு, கலோரிக் கணக்கு போடவேண்டும். அப்படிப் பார்த்து யாருமே சாப்பிடுவது கிடையாது. ஆக, உள்ளே எத்தனை கலோரி போகிறது, உடலில் எத்தனை கலோரி எரிக்கப்படுகிறது என்பது தெரியாமல் இந்தச் சமன்பாட்டை எப்படிப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது?

3) இதைவிட முக்கியமாக, உணவுப்பொருள்களை கலோரியை வைத்து மதிப்பிடுவதால், ஒரு முட்டையை விட ஒரு சாக்லெட்டில் குறைவான கலோரியே உள்ளது, ஆக முட்டையை விட சாக்லெட்டை உண்பது நல்லது என பலரும் நினைக்க ஆரம்பித்தார்கள். இன்றும் பல டயட் முறைகளில் உணவுகளுக்கு பாயிண்ட் முறை வழங்கப்படுகிறது. அதன்படி சாக்லட், ஐஸ்க்ரீம் எல்லாம் சாப்பிடலாம். ஆனால் அளவாகச் சாப்பிடவேண்டும் என்பார்கள். இது மிகவும் பிழையான கணக்கீடு ஆகும்.

சரி, கலோரிச் சமன்பாடு தவறெனில் நாம் எப்படிக் குண்டாகிறோம்?

சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை உண்ணும்போது நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. உடனடியாக சர்க்கரையைக் கட்டுக்குள் கொண்டுவர நம் கணையம் (pancreas), இன்சுலின் எனும் ஹார்மோனைச் சுரக்கிறது. இன்சுலின் சுரந்ததும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை சேகரிக்கப்பட்டு நம் ஈரலுக்கு அனுப்பப்படுகிறது. ஈரல் அந்தச் சர்க்கரையைக் கொழுப்பாக மாற்றி நம் தொப்பைக்கு அனுப்பிச் சேமிக்கிறது. ஆக, நாம் குண்டாக இன்சுலினும், சர்க்கரை அதிகமுள்ள உணவுகளுமே காரணம்.

தவிரவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இன்சுலின் குறைத்துவிடுகிறது என்பதையும் கண்டோம். இதனால் நமக்குப் பசி எடுக்கிறது. உடல் நம்மை மேலும் உண்ண கட்டளையிடுகிறது. அப்போதும் நாம் என்ன செய்கிறோம்? பஜ்ஜி, போண்டா, டீ என மீண்டும் சர்க்கரை உள்ள உணவுகளையே உண்கிறோம். இதனால் மீண்டும் இன்சுலின் சுரந்து மீண்டும் உடலில் கொழுப்பு சேர்கிறது.

தவிர இப்படித் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் சர்க்கரை அளவுகள் உடலில் ஏறி இறங்கி, தினமும் இன்சுலின் பலமுறை தொடர்ந்து சுரந்துகொண்டே இருந்தால் ஒருகட்டத்தில் கணையத்தின் பீட்டா செல்கள் பழுதடைந்துவிடும். கூடவே இன்சுலினின் உற்பத்தியும் குறைந்துவிடும். இதன்பின் நம் உடலில் சர்க்கரை அளவுகள் அதிகரித்து நமக்குச் சர்க்கரை வியாதியும் வந்துவிடுகிறது.

கொழுப்பு அதிகமாக உள்ள இறைச்சியை நாம் உண்டால் நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. காரணம், இறைச்சியில் சர்க்கரை துளியும் இல்லை. இதனால் நம் உடலில் இன்சுலினும் சுரக்காது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் புலால் உணவை மட்டுமே உண்டால் அவர்கள் உடலில் சர்க்கரை அளவுகள் அதிகரிக்காது. உடலும் குண்டாகாது.

இன்சுலினுக்கும் உடல் பருமனுக்கும் இடையே உள்ள உறவை அறிவியல் உலகம் அறிந்திருந்தாலும், விந்தையிலும் விந்தையாக அந்த அறிவியல் தற்கால டயட்டுகளில் பயன்படுத்தப்படுவதில்லை. விளைவாக இன்சுலின் என்றால் ஏதோ சர்க்கரை வியாதி வந்தவர்களுக்கு மாத்திரமே தேவையான விஷயம் என்ற அளவில்தான் பலரும் இன்சுலினைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

இன்சுலினை உடல் சுரப்பது ஒரு அபாயத்திலிருந்து நம்மைக் காக்க. அதாவது ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவுகளில் இருந்து நம்மைக் காக்க. கணையத்தில் இன்சுலின் சுரந்ததும் அது உடலின் செல்களுக்குப் பலவிதமான கட்டளைகளைப் பிறப்பிக்கிறது. உடலை கொழுப்பை எரிக்கும் பணியிலிருந்து விடுவித்து, கொழுப்பைச் சேகரிக்கும் பணிக்கு இன்சுலின் தூண்டுகிறது. காரணம், நம் உடலில் அதிகரித்த சர்க்கரை அளவைக் குறைக்க அதைக் கொழுப்பாக மாற்ற வேண்டியது அவசியம் அல்லவா? இதனால், உடலின் செல்களும் கொழுப்பை எரிப்பதை நிறுத்தி கொழுப்பை சேமிக்கும் பணியில் ஈடுபடுகின்றன.

நாம் குறைந்த கலோரி அளவே உணவை உண்டாலும், நாம் குண்டாகக் காரணம் – இன்சுலின்.

இன்சுலின் உடலில் உள்காயத்தை ஏற்படுத்தி மாரடைப்பு, அல்சர், உடல் பருமன் போன்ற பல வியாதிகளுக்கு காரணியாகிறது. அதனால் அதை வில்லனாகவும் பார்க்கவேண்டியதில்லை. இன்சுலின் சுரக்கவில்லையெனில் நாம் மரணமடைந்து விடுவோம். உடலின் சர்க்கரை அளவுகளைக் கட்டுக்குள் வைக்க இன்சுலின் அவசியம். ஆனால், அதிக அளவிலான இன்சுலினைச் சுரக்கவைக்கும் அளவுக்கு நாம் சர்க்கரைச்சத்து உள்ள உணவை உண்பதே உடல்பருமனுக்கும் வியாதிகளுக்கும் காரணம்.

இன்சுலினைக் கட்டுக்குள் வைக்காத டயட் முறைகள் தோல்வி அடைகின்றன. காலையில் ஐந்து இட்லி சாப்பிடுவதற்கும் அதற்குப் பதிலாக நாலு முட்டை உண்பதற்கும் பெரிய வித்தியாசங்கள் உள்ளன.

காலையில் ஐந்து இட்லியைச் சாப்பிட்டுவிட்டு, உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பதாகப் பலர் நினைக்கிறார்கள். இட்லியை ஆரோக்கிய உணவு என்று எண்ணுகிறார்கள். ஐந்து இட்லிக்குச் சமமான அளவில் வெள்ளைச் சர்க்கரையைச் சாப்பிடச் சொன்னால் பதறுவோம் அல்லவா! ‘இத்தனை சர்க்கரையைச் சாப்பிட்டால் உடம்புக்கு என்ன ஆகும்?’ என்று கேட்போம். ஆனால், வெள்ளைச் சர்க்கரைக்கு நிகராக அரிசியும் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவுகளை அதிகரிக்கவே செய்கிறது. இந்த நிலையில், சர்க்கரைக்குச் சமமான அளவில் தீமைகளை விளைவிக்கும் அரிசியை ஆரோக்கிய உணவு என்று தினமும் சாப்பிடுவது சரியா? 

ஐந்து இட்லி உண்டால் என்ன ஆகும் என்பது இப்போது புரிந்துவிட்டது இல்லையா? 

ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் ஜிவ் என ஏறும். உடனடியாக நம் கணையம் இன்சுலினைச் சுரக்கும். இன்சுலின் உடலை கொழுப்பைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையை ரவுண்டு கட்டி நம் ஈரலுக்கு அனுப்பும். ஈரல் அந்தச் சர்க்கரையை ட்ரைகிளிசரைடு எனும் கொழுப்பாக மாற்றி நம் தொப்பையில் சேமிப்புக்கு அனுப்பும். நம் தொப்பை வளரும்.

அத்துடன் நிற்கிறதா என்றால் இல்லை. இன்சுலினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது எனக் கண்டோம். இதனால் நமக்குச் சர்க்கரை அளவுகள் குறையும். உடனடியாக நம் மூளை பசி எனும் சிக்னலை அனுப்பும். சர்க்கரை அளவு குறைவது ஆபத்து என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதனால்தான் காலையில் எட்டு மணிக்கு சாப்பிட்டுவிட்டு அலுவலகம் சென்ற நாம், பத்துமணிவாக்கில் அலுவலக கேண்டினை எட்டிப்பார்த்து ‘ரெண்டு வடையும், ஒரு டீயும் கொடு" என்று கேட்கிறோம்.

இதே காலை உணவாக இட்லிக்குப் பதில் நாலு முட்டை ஆம்லெட் சாப்பிட்டால் என்னவாகும்?

முட்டையில் துளி சர்க்கரை கிடையாது. அதனால் முட்டை நம் சர்க்கரை அளவை அதிகரிக்காது. இரவு முழுக்க உண்ணாமல் காலையில்தான் காலை உணவை உண்கிறோம். ஆக, உடல் தனக்குத் தேவையான எரிசக்தியை அடைய நேராக நம் தொப்பையில் உள்ள கொழுப்பை எடுத்து எரிக்கத் தொடங்கும். இதனால் நம் தொப்பை கரையும். நம் உடல், கொழுப்பை எரிக்கும் பணியில் இருப்பதால் முட்டையில் உள்ள கொழுப்பும் (dietary fat) சேர்த்தே எரிக்கப்படும். அது உடல்கொழுப்பாக (body fat) மாறி நம் உடலில் சேமித்துவைக்கப்படாது. 

காலை உணவாக நாலு இட்லிக்குப் பதில் நாலு முட்டை சாப்பிட்டால் உங்களுக்குப் பலமணிநேரம் பசிக்காது. நொறுக்குத்தீனிக்கும் மனசு ஏங்காது. உடல் கொழுப்பு எரிக்கப்படும். இன்சுலினால் ஏற்படும் உள்காயம், மாரடைப்பு, அல்சர் போன்ற பலவகை வியாதிகள் வரும் வாய்ப்பு பெருமளவில் குறையும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com