பகுதி 4: சாவித்திரியும் இலியானாவும்!

சென்ற வாரப் பதிவின் மூலமாக, நம் உடல் எடை அதிகரிக்க இன்சுலினே காரணம் எனக் கண்டோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எடையைக் குறைக்க.....

சென்ற வாரப் பதிவின் மூலமாக, நம் உடல் எடை அதிகரிக்க இன்சுலினே காரணம் எனக் கண்டோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எடையைக் குறைக்க முயலும் பலரும் இன்சுலின் எனும் வார்த்தையை அறிந்திருக்கக்கூட மாட்டார்கள். அவர்களுக்குச் சொல்லப்படுவதெல்லாம் ‘உடற்பயிற்சி செய்தால் இளைக்கலாம், குறைவாகச் சாப்பிட்டால் இளைக்கலாம்’ என்பது போன்ற கலோரிச் சமன்பாட்டுக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த அறிவுரைகளே.

‘இளைக்கணுமா, உடற்பயிற்சி செய்’ என்பது இன்று பச்சைக் குழந்தைக்கும் தெரியும் அறிவுரையாகிவிட்டது. அதிகாலையில் கடற்கரைகளிலும், பூங்காக்களிலும் நடைப்பயிற்சி மேற்கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சைக்கிளில் அலுவலகத்துக்குச் செல்பவர்களும் இருக்கிறார்கள். புற்றீசல் மாதிரி தெருவுக்குத் தெரு உடற்பயிற்சி மையங்கள் உள்ளன. டிரெட்மில், ஸ்டேஷனரி சைக்கிளிங், யோகா போன்ற உடற்பயிற்சிகளில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள். ஆயிரக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி உடற்பயிற்சிக் கருவிகளை வாங்குகிறார்கள். இது, பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் வணிகமாகிவிட்டது

இதெல்லாம் அடிப்படையில் வீணான செயல், இதனால் எவ்விதப் பயனும் கிடையாது என்பதை மாங்கு, மாங்கென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவோர் அறிந்தால் கடும் அதிர்ச்சி அடைவார்கள். இவ்வகை உடற்பயிற்சிகள் உடலுக்கு ஆபத்தானவை என்றும்கூட கூறலாம்.

ஆதிமனிதன் எவ்வகை உடற்பயிற்சிகளை மேற்கொண்டான்? டிரெட்மில்லில் காட்டுத்தனமாக மணிக்கணக்கில் தலைதெறிக்க ஓடினானா? சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டானா? 300 கிலோ எடையை ஐம்பது முறை தூக்கி, பளுதூக்கும் பயிற்சிகளை மேற்கொண்டானா? சைக்கிளில் ஏறி ஐநூறு கிலோமீட்டரை நாள் முழுக்கச் சுற்றினானா?

இல்லை. இவை எதையும் அவன் செய்யவில்லை. வேகமாக ஓடினால் கை, கால் முறியும். வேகமாக ஓடினால் உடலில் காயம் ஏற்படும் அபாயம் அதிகம். மேலும், மனிதன் வேகமாக ஓடக்கூடிய விலங்கும் அல்ல. துள்ளி ஓடும் மான், முயல் போன்ற மிருகங்களை அவனால் ஓடிப்பிடித்திருக்க முடியாது. தன்னைத் துரத்தும் சிங்கம், புலி ஆகியவற்றின் வேகத்துக்கு அவனால் ஈடு கொடுத்து ஓடியிருக்கவும் முடியாது. வனவிலங்குகளில் மனிதன் மிக மோசமான ஓட்டக்காரன். ஆக, விரைவாக ஓடுதல் என்பது நம் இயல்புக்கு முரணானது.

ஆதிமனிதன் செய்த உடற்பயிற்சி - கையில் கல், ஈட்டியை ஏந்தியபடி காடுகளில், புல்வெளிகளில் மணிக்கணக்கில் இரையைத் தேடி மெதுவாக நடந்ததே. ஆதிகுடிப் பெண்கள் வீட்டுவேலை, நீர் கொண்டுவரும் வேலை, முட்டை, பழங்கள், காய்கறிகளைச் சேகரித்தல் போன்றவற்றைச் செய்தார்கள். இன்னமும் கிராமப் பெண்கள் மைல்கணக்கில் நடந்து சென்று தம் வீடுகளுக்குக் குடிநீர் கொண்டுவருவதைப் பார்க்கிறோம். ஆக, ஆதிமனிதன் உடலைச் சுளுக்க வைக்கும், கடினமான உடற்பயிற்சிகளைச் செய்ததில்லை; காட்டுத்தனமாக ஓடியதில்லை. அவன் செய்த உடற்பயிற்சி என்பது வீட்டு வேலையில் ஈடுபவது, விளையாடுவது போன்றவை மட்டுமே.

அறிவியல், உடற்பயிற்சியைப் பற்றி என்ன கூறுகிறது?

3 கி.மீ. தூரம் நடந்தால் நாம் சுமாராக 150 கலோரிகளை எரிக்கிறோம். அதாவது ஒரு கோகோ கோலா பாட்டிலில் உள்ள கலோரிக்குச் சமமான அளவு அல்லது ஒன்றரை வாழைப்பழத்துக்குச் சமமான கலோரி அளவு. ஆனால் பலரும் உடற்பயிற்சி செய்யும் முன்பு, ஒரு வாழைப்பழம் அல்லது பிஸ்கட்/காப்பி அருந்திவிட்டு உடற்பயிற்சிக்குச் செல்கிறார்கள். உடற்பயிற்சி முடிந்தபின் பசி அதிகரித்து அதிகமாகச் சாப்பிடுகிறார்கள். ஆக, உடற்பயிற்சியால் எரிந்த கலோரிகளை விடவும் உடற்பயிற்சியால் அதிகமான கலோரிகள்தான் அதிகம்.

6 கி.மீ. நடந்தால் 300 கலோரிகள் எரிகின்றன. ஆனால், இப்படி 300 கலோரிகளை எரிப்பதால் நம் எடை பெரிதாகக் குறைந்துவிடாது. உடற்பயிற்சி செய்பவர், செய்யாதவர் ஆகிய இருவரது உடலும் ஒரே அளவு கலோரிகளையே எரிக்கும். தினமும் உங்கள் உடல் 2,000 கலோரிகளை எரிக்கிறது என்றால் நீங்கள் உடற்பயிற்சி செய்தாலும் அதே 2,000 கலோரிகளே எரிக்கப்படும்.

உடற்பயிற்சியால் எடை குறைய வேண்டும் என்றால் தினமும் 90 நிமிடம் கடும் உடற்பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். ஆனால், தினமும் 90 நிமிடம் உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் களைப்படையும், மூட்டுகளில் வலி எடுக்கும். விளையாட்டு வீரர்கள் பலரும் வலி நிவாரணிகள் மற்றும் ஊக்கமருந்து போன்றவற்றின் துணையுடனே விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். அடிக்கடி அவர்களுக்கு உடல்நலன் சரியில்லாமல் போவதையும் காண்கிறோம்.

அதேசமயம், உடற்பயிற்சி வேறுபலவிதங்களில் உடலுக்கு நன்மையளிக்கவும் செய்கிறது. 30 நிமிட மெதுநடை நம் இதயத்துக்கும், ரத்த ஓட்டத்துக்கும் மிகவும் நன்மையளிக்கும். அதனால் உடற்பயிற்சி கட்டாயம் செய்யப்படவேண்டிய ஒன்று. ஆனால், எடைக்குறைப்புக்கு அதை மருந்தாக நினைப்பது வீண்முயற்சி.

உடற்பயிற்சியால் உடல் இளைக்காது என்றால் ஏன் உடற்பயிற்சி பலரால் வலியுறுத்தப்படுகிறது? இதற்கான விடை – அரசியல்.

கோகோ கோலா, பெப்ஸி ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து ‘குளிர்பான மையம் (Beverage Institute)’ என்ற அமைப்பை நிறுவியுள்ளன. மேலை நாடுகளில் அதிகரித்து வரும் உடல் பருமனுக்குக் காரணமாக இவ்விரு நிறுவனங்களின் குளிர்பானங்கள் மீது புகார் கூறப்பட்டதால் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து இந்த மையத்தைத் தொடங்கின. இதன் வழியாக ‘உடற்பயிற்சி செய்தால் இளைக்கலாம்’ என்கிற கருத்தாக்கம் வலுவாக முன்னிறுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு ஐரோப்பாவில் கோகோ கோலா நிறுவனம் ‘நாற்காலிகள் (chairs)’ என்கிற ஒரு விளம்பரத்தை ஒளிபரப்பியது. இதில் ‘வேலை செய்யாமல் அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால்தான் மக்கள் உடல் பருமன் அடைகிறார்கள்’ என அதில் கூறப்பட்டிருந்தது.

கோகோ கோலாவின் நாற்காலிகள் விளம்பரம்

மக்களின் உடல் பருமனுக்குக் காரணம் - அதிகமாக சாப்பிடுவதாலும், குறைவாக உடற்பயிற்சி மேற்கொள்வதாலும்தான்; மற்றபடி, சர்க்கரை நிரம்பிய உணவுகளை உண்பதால் அல்ல என்று இந்த நிறுவனங்களும் பிற உணவு லாபிகளும் பிரசாரம் செய்து வருகின்றன. இதற்கு ஏதுவான முறையில் இவை கலோரிச் சமன்பாட்டுச் சித்தாந்தத்தையும் முன்வைக்கின்றன.

ஒலிம்பிக்ஸ் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை இந்த நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்து ‘உடற்பயிற்சி செய்யுங்கள்’ எனும் செய்தியை மக்களிடம் பரப்புகின்றன. இது தொடர்ந்து வலியுறுத்தப்படுவதால், மக்களும் ‘உடற்பயிற்சி செய்தால் நாம் விரும்பும் அளவு குளிர்ப்பானம் குடிக்கலாம்’ என்றும் ‘உடல்பருமனுக்குக் காரணம் கோகோ கோலாவோ, பெப்ஸியோ, சிப்ஸோ அல்ல; அதிக கலோரிகளை உண்பதே’ என்றும் நம்புகிறார்கள்.

உலக சுகாதார மையம் சில ஆண்டுகளுக்கு முன்பு ‘நம் கலோரிகளில் 10% அளவு சர்க்கரையில் இருந்து வரலாம்’ எனப் பரிந்துரை செய்ய முடிவெடுத்து பிறகு 10 சதவிகிதத்தை 5-ஆக மாற்றவும் முடிவெடுத்தது. இதை ஏற்றுக்கொள்ளாத உணவு லாபிகள் உடனே களத்தில் குதித்தன.

உணவு நிறுவனங்கள் அளிக்கும் தேர்தல் நிதியை அதிக அளவில் பெறும் அமெரிக்க அரசியல்வாதிகள், அமெரிக்க மேல்சபை, கீழ் சபை உறுப்பினர்கள் ஆகியோர் அமெரிக்க அதிபருக்கும், உலக சுகாதார மையத்துக்கும் கடிதம் எழுதினார்கள். இதுபோன்ற பல எதிர்ப்புகளால், உலக சுகாதார மையம் அப்பரிந்துரையை வெளியிடவில்லை.

அப்பரிந்துரை வெளியிடப்பட்டிருந்தால் நாம் உண்ணும் கார்ன்ஃபிளேக்ஸ், குளிர்ப்பானங்கள் போன்றவற்றின் வணிகம் பாதிப்படைந்திருக்கும். இவற்றை உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அறிவுறுத்திருப்பார்கள். இந்த விளைவுகளைத் தடுக்கவே, பன்னாட்டு உணவு நிறுவனங்களின் லாபி, உலக சுகாதார மையத்தின் பரிந்துரைகளைத் தடுத்து நிறுத்திவிட்டது.

உடல் பருமனுக்குக் காரணம் சர்க்கரை என்கிற தேவரகசியம் மக்களுக்குத் தெரிந்துவிட்டால், தங்களின் வர்த்தகம் சரிந்துவிடும் என்பதால், ‘உடல்பருமனுக்குக் காரணம் உடற்பயிற்சியின்மையும், அதிக கலோரிகளை உண்பதுவுமே’ என இந்த நிறுவனங்கள் பிரசாரம் செய்து வருகின்றன.

கலோரிச் சமன்பாட்டுக் கோட்பாட்டில் உள்ள பிழைகள் என்ன?

அது மனிதனின் சிக்கலான உடலியல் வழிமுறையை ஒரு கணிதச்  சமன்பாட்டுக்குள் அடக்கிவிடப் பார்க்கிறது என்பதே. கலோரிச் சமன்பாட்டுக் கோட்பாட்டின்படி அனைத்து கலோரிகளும் ஒன்றே. கலோரிச் சமன்பாட்டுக் கோட்பாட்டின்படி, 2,000 கலோரி அளவுக்குக் கீரை சாப்பிடுபவர், 1,900 கலோரி அளவுக்கு சாக்லட்டையும், அல்வாவையும் சாப்பிடுபவரைவிடக் குண்டாக இருப்பார்! நமக்குப் பசி எடுத்தால், 200 கலோரிகளை வழங்கும் மூன்று முட்டைகளை உண்பதை விட, 150 கலோரிகளைக் கொண்ட கோகோ கோலாவை உண்டால் இளைப்போம்!

மனித உடலின் எரிசக்தித் திறன் (metabolism) பிற மிருகங்களை விடவும் மாறுபட்டது. காரணம், நம் மூளைக்கு மட்டுமே நம் கலோரிகளில் 20% அளவுக்கு மேல் தேவைப்படுகிறது. நாம் நாள் முழுக்கப் படுத்து உறங்கினாலும் நம் உடல் சர்வசாதாரணமாக 1500 முதல் 2000 கலோரிகளை எரிக்கும். நீங்கள் உடற்பயிற்சியில் 500 கலோரிகளை எரித்தால், மீதமுள்ள நேரத்தில் 2000 கலோரிகளை எரிப்பதற்குப் பதில் உடல் 1500 கலோரிகளை எரிக்கும். அதாவது நம் உடற்பயிற்சியால் உடல் கூடுதலான கலோரிகளை எரிப்பது கிடையாது. ஆக, உடற்பயிற்சி செய்பவர், செய்யாதவர் இருவரும் நாள் முழுக்க ஒரே அளவிலான கலோரிகளையே எரிக்கிறார்கள்.

உணவின் அளவைக் குறைத்தாலும் உடல் அதற்கேற்ப கலோரிகளை எரிப்பதைக் குறைக்கும். உதாரணமாக 2000 கலோரிகள் சாப்பிடுவதற்குப் பதில் 1500 கலோரிகளை மட்டும் சாப்பிட்டால் உடல் 2000 கலோரிகளை எரிக்காமல் 1400 கலோரிகளை எரிக்கும். நம் உடல் கொழுப்பைச் சேமித்து நமக்கு எதிராக சதி செய்வது போல தோன்றினாலும் பரிணாமரீதியில் இதற்கான காரணத்தை அறிந்து கொண்டால் நம் உடலின் கொழுப்பு சேமிக்கும் தன்மையைப் புரிந்துகொள்வோம்.

1970-ல் விவசாயப் புரட்சி நடந்து பட்டினிச் சாவுகள் ஒழியும் வரை மனித இனத்தின் வரலாறு என்பது பசியும், பட்டினியும், பஞ்சமும் நிரம்பியதே. ஆதிமனிதன் தினமும் மூன்று வேளை விருந்து சாப்பிட்டுப் பழகியவன் அல்லன். வேட்டை கிடைக்கும் நாளில் விருந்து, கிடைக்காத நாள்களில் பட்டினி என வாழ்ந்து பழகியவன். பஞ்ச காலத்தில் அல்லது உணவு கிடைக்காத குளிர்காலத்தில் நல்ல குண்டாக இருப்பவன் மட்டுமே தப்பி பிழைப்பான். ஒல்லியானவன் இறந்துவிடுவான். உதாரணமாக, இரண்டாம் உலகப்போர் சமயம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பல லட்சம் மக்கள் மடிந்தார்கள். தப்பிப் பிழைத்தவர்கள் யார் என்றால், குண்டாக இருந்தவர்கள் மாத்திரமே. பஞ்சத்தின்போது, குண்டர்கள் தப்பிப் பிழைத்தார்கள்; ஒல்லியானவர்கள் மடிந்துபோனார்கள். அதனால் இப்போது கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பலரும் மரபணு ரீதியாக குண்டாகும் தன்மை உடையவர்களே.

20 லட்சம் ஆண்டு மனித வரலாற்றில் எத்தனை முறை பஞ்சம், பட்டினி, போர்கள் நிகழ்ந்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். பரிணாமரீதியாக, நம் உடல் கொழுப்பைச் சேமிப்பது எதனால் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா? மரபணுரீதியாக, இன்றைய மனிதர்களில் குண்டாக இருப்பவர்கள், பஞ்ச காலத்தில் தப்பி பிழைத்தவர்களின் சந்ததியினரே. உணவு கிடைப்பதைப் பொறுத்து உடல் தன் எரிசக்தித் திறனை குறைத்துக்கொண்டதால்தான் நம் முன்னோர்கள் பஞ்ச காலங்களில் தப்பிப் பிழைத்தார்கள்.

ஒல்லியாக இருப்பதே அழகு என்பது 20-ம் நூற்றாண்டின் கண்ணோட்டம். மனித இன வரலாற்றில், குண்டாக இருப்பதே அழகாகக் கருதப்பட்டது. ‘அவன் கொழுத்த பணக்காரன்’ என்பது போன்ற சொல்வழக்குகள் இருக்கக் காண்கிறோம். பருமனாக இருப்பது அந்தஸ்துக்கும், செல்வத்துக்கும் குறியீடாக இருந்த காலங்கள் உண்டு. முன்பு, சர்க்கரை வியாதி பணக்காரர்களின் வியாதியாகப் பார்க்கப்பட்டது. கவுட்(Gout) என்பது ஒரு வகை மூட்டுவாதம். ரத்தத்தில் யூரிக் அமிலம் (Uric acid) அளவு அதிகரிக்கும்போது கவுட் ஏற்படும். இந்த வியாதி மன்னர்களுக்கு மட்டுமே வரும் வியாதியாகவும் அப்போது கருதப்பட்டது.

1950, 1960-களில் தமிழ்நாட்டின் கனவுக் கன்னிகளாக இருந்த சரோஜா தேவி, கே.ஆர். விஜயா, சாவித்திரி போன்ற நடிகைகளின் உடலமைப்பை இன்றைய கனவுக் கன்னிகளான இலியானா, நயன்தாரா போன்றோருடன் ஒப்பிட்டால், உடலமைப்பு குறித்து எத்தனை பெரிய மனமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது தெரியவரும்.

1950-களில் ஸ்லிம்மான உடலமைப்பைக் கொண்டவர்களை வேறுவிதமாகப் பார்த்தார்கள். ஏதோ வியாதி இருப்பதால்தான் அவர்கள் மெலிந்துள்ளார்கள் எனக் கருதபட்டு உடல் பருமனாவதற்கான மாத்திரைகள் அவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. அது தொடர்பான விளம்பரத்தைப் படத்தில் காணலாம்.

அன்று காதல் மன்னனாக அறியப்பட்ட ஜெமினி கணேசன் போன்றோரும் சிக்ஸ் பேக் எனப்படும் கட்டுடலுடன் இருக்கவில்லை. இன்று புதிதாக நடிக்க வரும் நடிகர்களே சிக்ஸ்பேக்குடன் இருக்கிறார்கள். ஆக, ஒல்லியாக இருப்பதே அழகு, சிக்ஸ்பேக்கும் பூஜ்யம் சைஸுமே (size zero) அழகு போன்ற கருத்தாக்கம் எல்லாம் நவீன உலகமயமாக்கல், பொருளாதாரம் நமக்குக் கற்பித்த சந்தையியலை ஒட்டிய கண்ணோட்டங்கள். பட்டினி கிடந்தும், மருந்துகளை உட்கொண்டும், இயற்கைக்கு முரணான கடும் உடற்பயிற்சிகளை செய்தால் மட்டுமே உலக அழகிப் போட்டியிலும், ஆணழகன் போட்டியிலும் ஜெயிக்க முடியும். ஆணழகன் போட்டியில், ஜெயித்தபின் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரை விட்டவர்கள் உண்டு. உடலில் உள்ள நீரின் அளவைக் குறைக்கும் மருந்துகளை (Diuretics) அவர்கள் உட்கொண்டதுதான் இதற்குக் காரணம்.

இதுவரை, உடல்பருமனுக்குக் காரணம் கலோரிச் சமன்பாட்டுக் கொள்கை அல்ல, இன்சுலினே என்று பார்த்தோம். இன்சுலின், உடல்பருமனுக்கு மட்டும் காரணம் அல்ல, உயர் ரத்த அழுத்தம் (Blood pressure), டைப் 2 சர்க்கரை வியாதி போன்றவற்றுக்கும் காரணம் ஆகிறது.

ஆனால், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களிடம் சர்க்கரை, இன்சுலின் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படுவதில்லை. உணவியல் நிபுணர்களும் (dieticians) தவறான ஒரு காரணத்தை முன்வைக்கிறார்கள் - உப்பு! ஆனால், உப்புக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் கொஞ்சமும் தொடர்பில்லை என்பதுதான் உண்மை.

உணவில் இருக்கும் உப்பு முழுவதையும் அகற்றினாலும் உங்களின் உயர் ரத்த அழுத்தம் குறையாது. வேண்டுமானால் 140/90 என இருக்கும் உயர் ரத்த அழுத்தத்தை 138/87 எனக் குறைக்கலாம். ஆனால், இது பெரிய மாற்றமில்லை. இதனால் நோயாளியின் உயர் ரத்த அழுத்தம் குணமடையாது.

உப்புக்கும், உயர் ரத்த அழுத்தத்துக்கும் தொடர்பில்லை என்றால் ஏன் உப்பின் மேல் குற்றம் சாட்டப்படுகிறது?

தவறான முறையில் புரிந்துகொள்ளப்பட்ட சில ஆய்வுகளே காரணம்.

உப்பால் ரத்த அழுத்தம் அதிகரிப்பது உண்மை. ஆனால், அதனால் சில புள்ளிகளே அதிகரிக்கும். உப்புள்ள உணவு ஜீரணமானவுடன் அடுத்தச் சில மணிநேரங்களில் ரத்த அழுத்தம் அதிகரித்து பிறகு சரியான அளவுக்கு வந்துவிடும். இப்படித் தற்காலிகமாக சில புள்ளிகள் ஏறுவதை வைத்து, ரத்த அழுத்தத்தை உப்பு அதிகரிப்பதால் அதைத் தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்பது தமிழ் மூதுரை.

உப்பில்லாமல் சில நாள்கள் சாப்பிட்டுப் பார்க்கும் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் பலரும் ‘இது என்னால் முடியாது. நான் உப்பு போட்டே சாப்பிட்டுக்கொள்கிறேன். நீங்கள் என்னை மருந்தின் மூலம் காப்பாற்றுங்கள்’ என மருத்துவரிடம் சரணடைந்து விடுகிறார்கள். அதன்பின் ஆயுளுக்கும் மருந்து, மாத்திரைதான். மற்றபடி உப்பு நல்லது அல்ல; அதேசமயம் கெட்டதும் அல்ல. முக்கியமாக உயர் ரத்த அழுத்தத்துக்குக் காரணம் உப்பு அல்ல.

எனில், உயர் ரத்த அழுத்தம் ஏன் வருகிறது?

இன்சுலின்!

காலை உணவாக இரண்டுத் துண்டு ரொட்டி, பழக்கூழ் (ஜாம்) மற்றும் ஒரு ஆரஞ்சு ஜூஸ் குடிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இதில் துளி உப்பு இல்லை. ஆனால், சர்க்கரை ஏராளமாக உள்ளது. இது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கும்.

இன்சுலின் ரத்த அழுத்தத்தை மூன்று விதங்களில் உருவாக்குகிறது. முதலாவதாக இன்சுலின் சிறுநீரகத்துக்கு அதிக அளவில் உப்பை (sodium) தேக்க உத்தரவிடுகிறது. இதனால் தேவையற்ற உப்பை நம் சிறுநீரகம் வெளியேற்ற நினைத்தாலும் அதனால் முடிவது இல்லை. சிறுநீரகத்தில் உப்பு தேங்கினால் அதற்கு ஏற்ப நீரும் தேங்கியே ஆகவேன்டும். ஆக, உடலில் உப்பும், நீரும் தேங்க நம் ரத்த அழுத்தம் வேகமாக அதிகரிக்கிறது.

இரண்டாவதாக இன்சுலின் நம் இதயக் குழாய்கள் விரிவதைத் தடுக்கிறது. காரணம் இன்சுலின் ஒரு வளர்ச்சியளிக்கும் ஹார்மோன் (Growth Hormone). இதயக் குழாய்கள் விரிவது நின்றால் இதயம் அதிக வேகத்துடன் ரத்தத்தை அடிக்க வேண்டும். ஆனால், இன்சுலினால் இதயக் குழாய்கள் விரிவது தடுக்கப்படுவதால் (Cardiac Contractility), இதுவும் உயர் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.

மூன்றாவதாக இன்சுலின், நரம்பு மண்டலத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தி கார்ட்டிசோல் (cortisol) எனும் ரசாயனத்தைச் சுரக்க வைக்கிறது. இது அட்ரினலின் (adrenalin) போன்று மன அழுத்தத்தை அதிகரிக்கும் திரவம். நீங்கள் அதிகம் கோபப்பட்டால், ஆவேசப்பட்டால் அட்ரினலின் சுரக்கும். கோபப்பட்டால் இதயம் அதிக ரத்தத்தை ரத்தக்குழாய்களுக்கு அனுப்பத் தயார் ஆகும். இதுவும் உயர் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

ஆக, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவேண்டும் எனில் நாம் நிறுத்த வேண்டியது உப்பை அல்ல. சர்க்கரை மற்றும் தானியத்தை. சந்தேகம் இருந்தால் உணவில் கொழுப்பை அதிகரித்து தானியத்தையும், சர்க்கரையையும் குறைத்துப் பாருங்கள். உயர் ரத்த அழுத்தம் குறைய ஆரம்பிக்கும். ஒரு சில மாதங்களில் கட்டுக்குள் வந்து இயல்பாகிவிடும். எனவே, பேலியோ உணவுமுறை மூலம் உயர் ரத்த அழுத்தத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியும். இப்படி, பேலியோ மூலமாக உயர் அழுத்தத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்த சிலருடைய அனுபவங்களை அடுத்த வாரப் பதிவில் காண்போம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com