Enable Javscript for better performance
பகுதி 19: கேள்வி - பதில்கள்- Dinamani

சுடச்சுட

  

  பேலியோ டயட் குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு நியாண்டர் செல்வன் பதில் அளிக்கிறார்.

  1. பண்டையகால சித்தர்கள் சைவ உணவால் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தது எப்படி?

  - பசுபதி

  பழங்கால ரிஷிகளை எடுத்துக்கொண்டால் அனைவரும் மாமிசம் உண்டவர்களே. சித்தர்களின் தலைவரான அகத்தியர் ஆட்டுக்கறி உண்டு, வாதாபி எனும் அரக்கனை அழித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. காடுகளில் அரிசி, பருப்பு, பால் எதுவும் கிடைக்காது. காய்கறி, பழம் எல்லாமே வருடத்தில் சில மாதங்களே கிடைக்கும். எனவே சித்தர்கள் காடுகளில் இறைச்சி இல்லாமல் எதை உண்டு ஜீவித்திருக்க முடியும்? மான் தோல், புலித்தோலை உடுத்தி வாழ்ந்த முனிவர்களைப் பற்றியும் கேள்விப்பட்டுள்ளோம். சித்தர்களில் சைவர், அசைவர் எனப் பல வகையினர் உண்டு. நகர்ப்புறங்களில், விவசாயச் சமூகங்களில் வாழ்ந்த சித்தர்கள் புலால் உண்ணாமையைக் கடைப்பிடித்திருக்கலாம். ஆனால் அசைவ உணவு உண்ட ரிஷிகள், சித்தர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்து சமயம், புலாலை மறுக்கும் சமயம் அல்ல.

  சித்தர்களில் முக்கியமானவரான சிவவாக்கியர் எழுதிய பாடல் இது:

  புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர்

  புலாலைவிட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே

  புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய்

  புலாலிலே முளைத்தெழுந்த பித்தன்காணும் அத்தனே.

  எனக்கூறி ‘எம்பெருமான் என்று புலாலை விட்டு பிரிந்தான்? சிவனே புலாலில் முளைத்தெழுந்தவனே’ எனப் புலால் மறுப்பைச் சாடுகிறார் சிவவாக்கியர்.

  உதிரமான பால்குடித் தொக்கநீர் வளர்ந்ததும்

  இரதமாய் இருந்ததொன் றிரண்டுபட்ட தென்னலாம்

  மதிரமாக விட்டதேது மாமிசப் புலாலதென்று

  சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே.

  ‘புலால் கெடுதியெனில் பாலே உதிரமே. அதைக் குடித்து வளர்ந்த நீங்கள் மாமிசப் புலாலை மறுப்பதெப்படி?’ எனச் சாடுகிறார் சிவவாக்கியர்.

  மீனிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்

  மீனிருக்கும் நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்

  மானிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர்

  மானுரித்த தோலலோ மார்புநூல் அணிவதும்.

  ‘மான் தோலை விரித்து அமர்ந்துகொண்டு மானிறைச்சி உண்பதில்லை என்பதும், மீனிருக்கும் நீரைக் குடித்தும், மூழ்கியும் விட்டு மீனை உண்ணமாட்டேன் என்பதும் சரிதானா?’ என சிவவாக்கியர் வினவுகிறார்.

  எனவே சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் மனத்தில் புலாலுக்கு உயர்ந்த இடம் உள்ளது. அவர்கள் எல்லாருமே சைவர்கள் என நினைப்பது பிழையானது.

  2. பேலியோ டயட்டைப் பின்பற்றுகிற காலத்தில் கொஞ்சம் தானிய உணவுகளையும் அவ்வப்போது சாப்பிட்டால் என்ன ஆகும்? இரு வேளை பேலியோ, ஒருவேளை தோசை அல்லது சப்பாத்தி என்று சாப்பிட்டால்  பேலியோவின் பலன்கள் கிடைக்க வாய்ப்புண்டா? அல்லது முழுவதும் வீணாகுமா?

  - அர்ஜூன்

  மூன்று வேளையும் தானிய உணவு உண்பதற்குப் பதிலாக இரு வேளை பேலியோ டயட்டைப் பின்பற்றி, மீதமுள்ள ஒரு வேளை தானிய உணவை  எடுத்துக்கொள்வதும் நல்லதே. இரு வேளை பேலியோ உணவு எடுத்துக்கொண்டால் அதிலிருந்து உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் பெருமளவு கிடைக்கும்.

  dosai.jpg 

  அதே சமயம் இந்த உணவுமுறையால் எடைக்குறைப்பு நிகழும் என்றோ, சர்க்கரை வியாதி இருந்தால் அது குணமாகும் என்றோ கூற முடியாது. வியாதிகள் இன்றி ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஒரு வேளை மட்டும் அரிசி, பருப்பு போன்ற பொருள்கள் கொண்ட உணவை உட்கொள்ளலாம். இதனால் பெரிதாகத் தீங்கு ஏற்படாது. அதேசமயம் கோதுமை, சோயா மற்றும் இதர குப்பை உணவுகளை அனைவரும் கட்டாயம் தவிர்க்கவேண்டும்.

  3. இத்தனை ஆண்டுகளாக வழக்கமான உணவை உட்கொண்டதால் உள்காயங்களை அதிக அளவில் வரவழைத்துக்கொண்ட ஒருவர், பேலியோ டயட்டை மேற்கொள்கிறார். எனில், பேலியோ உணவில் இருக்கும் கொழுப்புகள் அந்த உள்காயத்தின் மேல் அதிக அளவில் படிந்து மேலும் அவருக்கு ஆபத்துகள் ஏற்படாதா?

  - ஸ்ரீதரன்

  மாரடைப்புக்கு மட்டுமல்ல, பல வகை வியாதிகளுக்கும் உள்காயமே காரணம். உள்காயம் இதயச் சுவர்களில் மட்டும் வராது அல்லவா? உடல் உறுப்புக்கள் அனைத்திலும் ஏற்படும். நம் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதே உள்காயத்தால்தான், கொலஸ்டிராலால் அல்ல.

  இதய நாளங்களில் உள்காயம் ஏற்பட்டால் அதைக் குணப்படுத்த மேலே பூசப்படும் மருந்தே எல்டிஎல் கொலஸ்டிரால். எல்டிஎல் கொலஸ்டிரால்தான் உள்காயத்தை ஆற வைக்கிறது. ஆனால், அதே இடத்தில் உள்காயம் மேலும் மேலும் ஏற்படும்போது, மேலே அதிக அளவில் எல்டிஎல் படிகிறது. இப்படிக் காயம் ஏற்படுதலும், அதன்மேலே கொலஸ்டிரால் பூசப்படுவதும் தொடர்ந்து நடைபெறுவதால், ஒரு கட்டத்தில் ரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு வருகிறது. இதனால் கொலஸ்டிரால் தவறாகப் புரிந்துகொள்ளப் படுகிறது.

  மனித உடல் தினமும் 2000 முதல் 3000 மி.கி. கொலஸ்டிராலை உற்பத்தி செய்கிறது. நீங்கள் காய்கறிகளை மட்டுமே உண்டுவந்தாலும் உடல் இந்த கொலஸ்டிராலை உற்பத்தி செய்தே தீரும். எனவே நீங்கள் எந்த உணவை உட்கொண்டாலும் உள்காயத்தைக் குணப்படுத்த அதன்மேல் கொலஸ்டிரால் பூசப்படும், ஒரு மருந்தாக. கொலஸ்டிரால் பூசப்படாவிட்டால் உள்காயத்தால் மரணமடைந்துவிடுவோம். அதேசமயம், பூசினாலும் மாரடைப்பு நிகழும் வாய்ப்பு உண்டு.

  இதற்கு ஒரே தீர்வு, பேலியோ டயட்டைப் பின்பற்றுவதுதான். இதனால் உள்காயம் ஏற்படுவதைத் தடுக்கமுடியும். உள்காயம் இல்லாவிட்டால் கொழுப்பைப் பூசவேண்டிய அவசியம் ஏற்படாது.

  4. உலகில் உள்ள எல்லோரும் பேலியோ உணவுமுறைக்கு மாறிவிட்டால் அதன்பின் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்காதா?

  அமெரிக்காவில் என் வீட்டுக்கு அருகே உள்ள பண்ணையில்தான் இறைச்சி, முட்டை வாங்குவேன். அப்பண்ணை உரிமையாளர் 600 ஏக்கர் நிலம் வைத்துள்ளார். மக்காச்சோளத்தை தான் வளர்க்கும் மாடுகளுக்கு உணவாக கொடுத்து மாட்டிறைச்சி, பால் மூலம் பெரும் செல்வம் ஈட்டுகிறார். மிக வசதியான நிலையில் உள்ளார். பேலியோ உணவு முறையால் விவசாயிகள் கோழிப் பண்ணை, மாட்டுப் பண்ணை, பன்றிப் பண்ணை, ஆர்கானிக் காய்கறிகள் என நிறைய வியாபாரம் செய்து அதிகப் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

  5. முட்டை இல்லாத சைவ பேலியோவைப் பின்பற்றலாமா? அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன?

  - செந்தில்

  சைவ உணவுமுறைகளைப் பின்பற்றுபவர்களுக்கு அசைவர்களுக்கு வராத சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால், வழக்கமான தமிழக சைவ உணவை விட சைவ பேலியோ உணவு நன்மை அளிக்கக்கூடியது. சைவ உணவுப் பழக்கத்தால் கீழ்க்கண்ட ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

  வைட்டமின் ஏ: தாவர உணவு எதிலும் வைட்டமின் ஏ கிடையாது. வைட்டமின் ஏ ஏராளமாக இருப்பதாகப் பலராலும் நம்பப்படும் கேரட், கீரை போன்றவற்றில் துளி கூட வைட்டமின் ஏ கிடையாது என்பதே உண்மை. வைட்டமின் ஏ-வில் இருவகை உண்டு. ரெடினால் (Retinol) மற்றும் பீடா காரடின் (Beta carotene). இரண்டில் ரெடினாலே உடலில் சேரும் தன்மை கொண்ட வைட்டமின். இதுவே கண்பார்வைக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் பலன் அளிக்கும் தன்மை கொண்ட வைட்டமின் ஏ ஆகும். காரட்டில் இருப்பது பீடா காரடின். எனவே கேரட், கீரையைச் சாப்பிட்டால் அதில் உள்ள பீடா காரடினை ரெடினால் ஆக மாற்றியபிறகே நம் ஈரலால் அதை வைட்டமின் ஏ-வாகப் பயன்படுத்தி உடலுக்கு நன்மையளிக்க முடியும்.

  ஆனால் துரதிர்ஷ்டவசமாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள், குழந்தைகள், வயதானவர்கள், தைராய்டு சுரப்பியில் பிரச்னை உள்ளவர்கள் போன்றோருக்கு பீடா காரடினை ரெடினாலாக மாற்றுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதனால் அவர்கள் கிலோ கணக்கில் கேரட்டைச் சாப்பிட்டாலும் அவர்களது ஈரலால் அதை ரெடினால் ஆக மாற்ற முடியாது. இதனால் மாலைக்கண் வியாதி, கண்பார்வைக் குறைபாடுகள் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகின்றன.

  பாலில் உள்ள கொழுப்பில் மட்டுமே ரெடினால் உள்ளது. ஆனால் நம் மக்கள் கொழுப்பு இல்லாத பாலை வாங்குவதில்தான் ஆர்வம் செலுத்துகிறார்கள். அதனால் (கொழுப்பு இல்லாத) பால் பருகுவதாலும் நன்மைகள் கிடைப்பதில்லை.

  நெய், வெண்ணெய் போன்ற பேலியோ உணவுகளை அதிகம் உண்ணுவதால் அதில் உள்ள ரெடினாலின் பயனை அடையமுடியும். எனவே சைவ பேலியோவைப் பின்பற்ற எண்ணுபவர்கள் தினமும் அரை லிட்டர் பால் அல்லது பனீரைத் தவறாமல் எடுத்துக்கொள்வதுடன் தினமும் அதிக அளவிலான நெய், வெண்ணெய் போன்றவற்றையும் சமையலில் பயன்படுத்தவேண்டும்.

  புரதம்: புரதக் குறைபாடு இந்தியா முழுவதையும் பாதிக்கும் விஷயம். இந்திய அரசின் விதிமுறைகளின்படி சராசரி ஆண் 60 கிராம் புரதம் எடுக்கவேண்டும். பெண்ணுக்கு 55 கிராம் புரதம் தேவை. அன்றாடத் தேவைகளுக்கான புரதத்தை அன்றாட உணவின் மூலமே அடையவேண்டும். இந்த நிலையில், சைவர்களின் முதல் சவாலே புரதம் என்றுதான் சொல்லவேண்டும்.

  தாவரப் புரதங்கள் முழுமையாக நம் உடலில் சேர்வது கிடையாது. மிருகப் புரதங்களே நம் உடலில் முழுமையாகச் சேர்கின்றன. உதாரணமாக முட்டையில் இருக்கும் புரதம் 100% அளவில் நம் உடலுக்குள் செல்கிறது. ஆனால், கோதுமையில் உள்ள புரதத்தில் 30% அளவே நம் உடலில் சேர்கிறது. பீன்ஸ், பருப்பு போன்ற சைவ உணவுகளில் புரதம் அதிகமாக உள்ளன. ஆனால், அவற்றில் உள்ள அமினோ அமிலங்கள் முழுமையாக இல்லாததால் பாதிக்கும் மேலான பீன்ஸின் புரதங்கள் நம் உடலில் சேராமல் கழிவாக சிறுநீரகத்தால் வெளியேற்றபடுகின்றன.

  சைவர்கள் பேலியோ உணவில் தினமும் 100 கிராம் அளவுக்குப் பாதாம் எடுத்தால் 23 கிராம் புரதம் கிடைக்கும். 500 கிராம் பனீரில் 20 கிராம் புரதம் உள்ளது. இந்த இரண்டையும் சாப்பிட்டால் மொத்தம் 43 கிராம் அளவே புரதம் உடலைச் சேரும். தேங்காய், காய்கறிகளில் உள்ள புரதத்தைக் குத்துமதிப்பாக ஒரு ஏழெட்டு கிராம் என்று வைத்துக்கொண்டாலும் சைவ பேலியோவால் மொத்தம் 50 - 55 கிராம் அளவு புரதத்தைப் பெறமுடியும். இதனால் புரதத் தேவையை ஓரளவு எட்டமுடியும். வழக்கமான தமிழ்நாட்டு உணவில் இதை அடையமுடியாது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். 

  பி12: பி12 வைட்டமின் குறைபாட்டால் நமக்கு மாரடைப்பு, ஆஸ்துமா, மலட்டுத்தன்மை, மன அழுத்தம் போன்ற பலவகை வியாதிகள் ஏற்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக பி12 வைட்டமின் எந்தத் தாவர உணவிலும் இல்லை. பி12 - புலால், மீன், முட்டை, பால் போன்ற மிருகங்களிடமிருந்து கிடைக்கும் உணவுகளிலேயே காணப்படுகிறது. சைவர்கள் பால், பனீர் போன்றவற்றை உண்பதன் மூலம் பி12 தட்டுப்பாடு ஏற்படாமல் காத்துக்கொள்ளமுடியும். அதே சமயம் ஒரு நாளுக்கு தேவையான பி12-ஐ அடையவேண்டும் என்றால் தினமும் ஒன்றே கால் லிட்டர் பாலை அருந்தவேண்டும். இது நம்மால் முடியாது அல்லவா! இதன்படி, பால் மட்டுமே உண்ணும் சைவர்களுக்கு பி12 தட்டுப்பாடு உண்டாகும் வாய்ப்பு மிக அதிகம்.

  இரும்புச்சத்து: ஆண்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளில் 8 மி.கி. இரும்புச்சத்து இருக்கவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 19 – 50 வயதுள்ள பெண்களுக்கு இது இருமடங்கு தேவைப்படுகிறது. அதாவது சுமார் 16 - 18 மி.கி. இரும்புச்சத்து.

  சைவர்கள் உணவின் மூலம் இரும்புச்சத்தை அடைய முயல்வது கடினம். காரணம், சைவ உணவுகள் அனைத்திலும் நான் ஹெமே (Non-heme) வகை இரும்புச்சத்துதான் உள்ளது. இவற்றை உடலால் கிரகிப்பது மிகக் கடினம். உதாரணம் கீரையில் இரும்புச்சத்து அதிகம். ஆனால் கீரையில் உள்ள ஆக்சலேட்டுகள் (Oxalates) இரும்புச்சத்தை உடல் கிரகிப்பதைத் தடுத்துவிடும். கீரையில் உள்ள இரும்புச்சத்து 2% அளவிலாவது உடலில் சேர்ந்தால் அதிசயம்.

  பேரீட்சையில் இரும்புச்சத்து அதிகம் என கிட்டத்தட்ட அனைவருமே நம்புகிறார்கள். ஒருவர் போதுமான அளவு இரும்புச்சத்து கிடைக்க, அவர் நூறுக்கும் மேற்பட்ட பேரீட்சைகளை உண்ணவேண்டும். இது சாத்தியமா? அதிலும் நம் உடல் கிரகிக்கும் இரும்பின் சதவிகிதம் குறைவே. இதனால் சைவப் பெண்களுக்கு ரத்த சோகை வியாதி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

  6. சில செடிகள், மிருகங்களை எடுத்துக்கொண்டால் அவை தம்மைக் காத்துக்கொள்ள பல தற்காப்பு உத்திகளை கையாளுகின்றன (செடிகளுக்கு முள்கள், பீன்ஸ் போன்ற லெக்யூமே வகைக் காய்களுக்கு பைட்டிக் அமிலம்). ஆனால் பேலியோ காய்கறிகள் எனச் சொல்லபடும் காளிஃபிளவர், பிராக்களி, கீரை போன்றவற்றில் உள்ள தற்காப்புத் தன்மைகள் என்ன? அவற்றை ஏன் நாம் உண்கிறோம்?

  - ஸ்ரீதரன்

  காய்கறிகள், கீரைகள், தண்டுகள் போன்ற எதுவுமே இயற்கையாகப் பிராணிகள் உண்ணத் தகுந்தவை அல்ல. சமைக்காமல் எத்தனை காய்களை நம்மால் பச்சையாக உண்ணமுடியும் என யோசியுங்கள். குரங்கிடம் சமைக்காத காளிஃபிளவர், சமைக்காத பிராக்களியைக் கொடுத்தால் காததூரம் ஓடும்.

  நாம் சமைக்காத கீரையை உண்போமா? அமெரிக்க குழந்தைகள் கீரையை வெறுத்ததால் அவற்றை உண்ண வைக்க பாப்பாய் (popeye) எனும் கார்ட்டூன் கதாபாத்திரமே உருவாக்கப்பட்டு கீரைகள் சந்தைப்படுத்தப்பட்டன. பெரும்பாலும் நம் மக்கள் காய்கறிகளை உண்ண விரும்புவதே கிடையாது. பத்திரிகைகளில் காய்கறிகளின் பலன்கள் பற்றிய கட்டுரைகள் அதிகமாக இடம்பெறுவதும் இதனால்தான். 

  vegetables.jpg 

  இயற்கையிலேயே மனிதர்கள், மிருகங்களுக்குக் காய்கறிகளைப் பிடிக்காது என்பதே காய்கறிகளுக்கான தற்காப்புத்தன்மை ஆகும். சமையல் கலையை மட்டும் மனிதன் கற்காமல் இருந்திருந்தால் அவன் காய்கறிகளை உண்ணும் வாய்ப்பே ஏற்பட்டிருக்காது. சுமார் நான்கு, ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் யதேச்சையாக நெருப்பைக் கையாளும் கலையை அறிந்தான். அதற்கு முன்பு அவன் காய்கறிகளை விரும்பிச் சாப்பிட்டிருக்க வாய்ப்பு இல்லை. காட்டில் பல நாள்கள் உணவின்றிப் பட்டினி கிடந்த சமயத்தில் வேண்டுமானால் காய்கறிகளை வேண்டாவெறுப்பாகச் சாப்பிட்டிருக்கமுடியும். இயற்கையில் நாம் விரும்பி உண்ணும் உணவுகள் இரு வகை தான். இனிப்புகள் மற்றும் இறைச்சி.

  செடிகள் மனிதனுக்கு அளிக்கும் லஞ்சம், இனிப்புச்சுவை. பழங்கள் இனிப்பாக இருக்கக் காரணம் அவற்றை மனிதர்கள் உண்டால் மட்டுமே மரங்களுக்கு இனப்பெருக்கம் நடக்கும் என்பதால். மாம்பழம் இனிப்பாக இருப்பதால்தான் மனிதர்கள் அதை உண்டு பிறகு கொட்டையைத் தூர எறிந்து அடுத்த மாமரத்துக்கு வழி வகுக்கிறார்கள்.

  நெருப்பைக் கண்டுபிடிக்கும் முன்பு ஆதிமனிதன் பழங்கள் மற்றும் இறைச்சியை மட்டுமே சாப்பிட்டிருக்கமுடியும். பழங்கள் வருடம் முழுக்க கிடைக்காது. மாம்பழம், தர்பூசணி போன்றவை வருடத்தின் சில மாதங்களில் மட்டுமே கிடைக்கும். ஆக, பச்சையாக சமைக்காமல் இறைச்சியை மட்டுமே அவன் சாப்பிட்டிருக்கமுடியும். இறைச்சியைப் பச்சையாக உண்ணமுடியுமா எனத் திகைக்க வேண்டாம். உலகில் மனிதனைத் தவிர்த்து எல்லா உயிரினங்களும் பச்சை இறைச்சியையே உண்ணுகின்றன. பல பகுதிகளில் பச்சை இறைச்சி மனிதர்களாலும் விரும்பி உண்ணப்படுகிறது. எஸ்கிமோ என்றாலே பச்சையாக மாமிசம் உண்பவர் என்றே பொருள். நெருப்பும், மரங்களும் இல்லாத வடதுருவத்தில் எஸ்கிமோக்கள் பச்சையான இறைச்சியை உண்டே உயிர் வாழ்கிறார்கள். ஜப்பானில் சூஷி எனும் உணவு மிகப் பிரபலம். சூஷி என்பது சமைக்காத பச்சை மீனே.

  மங்கோலிய குதிரைப்படை ஆயிரக்கணக்கான மைல்கள் படையெடுத்து செல்லும்போது சமைப்பதற்காக நடுவழியில் நிற்காது. பச்சை இறைச்சியைக் குதிரை சேணத்துக்கு அடியில் வைத்து, குதிரையை ஓட்டிச் செல்வார்கள். மனிதன் மற்றும் குதிரையின் உடல்சூட்டினால் சூடான பச்சை இறைச்சியை சாப்பிட்டபடி பயணத்தைத் தொடர்வார்கள். பிரான்ஸில், நெதர்லாந்தில் என உலகின் பல பகுதிகளில் சமைக்காத மாட்டிறைச்சி (Steak Tartare) இன்றும் பெரிய உணவகங்களில் மக்களின் விருப்ப உணவாக பரிமாறப்படுகிறது.

  ஆனால், மனிதன் உணவைச் சமைக்க ஆரம்பித்தபின் அவன் உடலமைப்பில் மிகப்பெரும் மாறுதல்கள் நிகழ்ந்தன. சமைத்த இறைச்சி மிக விரைவாக ஜீரணம் ஆகி நம் மூளையின் அளவை அதிகரித்தது. சமைக்க ஆரம்பித்த பிறகு காய்கறிகளின் தற்காப்பு அரணைத் தகர்த்தான் மனிதன். காய்கறிகளின் மனிதனின் உணவாக மாறின. எனவே, சமையல் முறையே விலங்காக இருந்த மனிதனை மனிதனாக ஆக்கியது.

  பேலியோ டயட்டில் பச்சை இறைச்சி. பச்சைக் காய்கறிகளை உண்ண வலியுறுத்துவதில்லை. நம் உடலமைப்பும், மூளை அளவும், ஜீரண உறுப்புக்களும் சமைத்த உணவுக்குப் பழகிவிட்டன. அதனால் சமைத்த இறைச்சி மற்றும் சமைத்த காய்கறிகளையே உண்ண வலியுறுத்துகிறோம். ஹைப்ரிட் முறையால், இன்றைய பழங்களின் அளவும் இனிப்புச்சுவையும் அதிகமாகிவிட்டன. அதில் உள்ள சர்க்கரையால் மனிதனின் உடல் எடை அதிகமாகிறது. அதனால் தான் பழங்களை எடைக்குறைப்புச் சமயத்தில் தவிர்க்கச் சொல்கிறோம்.

  7. ஏற்கெனவே மனிதாபிமான உணர்வுகள் அருகிவரும் சூழலில், எல்லோரும் அசைவ உணவுக்கு மாறினால் என்ன ஆகும்? மிருகத்தனமான குணங்களால் நாட்டில் வன்முறை அதிகரிக்காதா? ‘தக்கது தப்பிப் பிழைக்கும்’ என்கிற கானக விதி குறித்து விவேகானந்தர் பேசவில்லையா? ஆக, எல்லா உயிரினங்களையும் வாழவைக்கும் சைவ உணவை ஆதரிப்பதுதானே மனிதாபிமான முறையில் சரியானது?

  அறிவியல் ரீதியில் இதற்குப் பதில் அளிக்க முடியும். ஆன்மிக ரீதியில் கேட்டதால் அதே முறையில் பதில் அளிக்கிறேன். விவேகானந்தரைப் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். அவர் அசைவ உணவை பற்றி என்ன பேசினார் என்பதை முதலில் காண்போம்.

  ‘இந்தியர்களிடையே போர்க்குணம் இருந்திருந்தால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே இருந்த ஆங்கிலேயரால் நம்மை ஆண்டிருக்க முடியுமா? மக்களிடையே போர்க்குணம் வளர மாமிசம் உண்ணச் சொல்லி இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக நான் பிரச்சாரம் செய்வேன்.’

  ‘புலால் உணவு உண்ணும் தேசங்கள் அனைத்தும் உயர்குணம் கொண்டவையாக, சிந்தனையாளர்களாலும் வீரர்களாலும் நிரம்பி உள்ளன. யாகப்புகை இந்தியாவின் விண்ணை நிரப்பி, இந்திய மக்கள் மாமிச உணவுகளை உண்ட நாள்களில் மிகப்பெரிய ஞானிகளும் வீரர்களும் இந்தியாவில் தோன்றினார்கள். இன்றைய வைணவர்களின் நிலை மிக பரிதாபமானது. ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் ராமனும், கண்ணனும் மாமிசம் உண்ட நிகழ்வுகள் ஏராளம். சீதை கங்கை ஆற்றுக்கு மாமிசம் படைத்து வழிபடுவதாக கூறுகிறார்…’

  ‘கடவுள் தன் எல்லையற்ற கருணையை நீ ஒரு துளி மாமிசம் சாப்பிட்டதற்காக நிறுத்திவிடுவாரா? அப்படிச் செய்தால் அவர் கடவுளே அல்லர். வெறும் கேக்குக்கு மாத்திரம் சமானமானவர் ஆவார்.’

  ‘ஒரு மெலிந்த ஏழை என்னிடம் வந்து ‘ஸ்வாமி எனக்கு அறிவுரை கூறுங்கள்’ என்றான். ‘நீ திருடுவாயா, மாமிசம் உண்பாயா? இதை எல்லாம் செய்யவில்லை எனில் செய். செய்து உன் உடல்நலனை மேம்படுத்திக்கொள் என்றேன்.’ ‘ஸ்வாமி இது என்ன அறிவுரை?’ என அவன் என்னிடம் அதிர்ச்சியுடன் கேட்டான். ‘சுவர் தான் திருடாது, மாமிசம் உண்ணாது. நீ சுவராக இருந்தால் இதை எல்லாம் செய்யாதே. மனிதனாக இருந்தால் செய்’ என்றேன்.

  இவை அனைத்தும் விவேகானந்தர் சொன்னவை. இனி என் பதில்.

  தமிழ் இலக்கியங்களை எடுத்துக்கொண்டால் வேதகால பாரதம் மற்றும் சங்ககால தமிழகத்தின் தெய்வங்கள், புலவர்கள், ரிஷிகள், சித்தர்கள் எல்லாருமே மாமிசத்தை விரும்பி உண்டதையே அறிகிறோம். அவ்வையாருக்கு அதியமான் கறிச்சோற்றில் இருந்த கறித்துண்டுகளை அன்போடு எடுத்துப் பரிமாறியதாக புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. சங்கப் புலவரும், பிராமணருமான கபிலர், தான் மாமிச உணவை விரும்பி உண்டதாகப் பாடுகிறார். அக்கால இந்து மதத்தில் புலால் உணவு தெய்வங்களின் உணவு.

  உணவைச் சமைப்பவர் கெட்ட நடத்தை உள்ளவராக இருந்தால் அல்லது பாவப்பட்ட வழியில் வந்து சேர்ந்த உணவாக இருந்தால் அதுவே மனிதனின் குணநலனைப் பாதிக்கும் என்றே அன்று கருதப்பட்டது. அது புலால் உணவா, சைவ உணவா என்பது ஒரு பிரச்னையாக இருந்தது இல்லை. எண்ணிப்பார்த்தால் அனைத்து வகை உணவும் ஒருவகை வன்முறையான பின்புலத்தைக் கொண்டே நம்முடைய தட்டில் உணவாக வந்து சேர்கிறது. அரிசி விளைவிக்க நிலத்தை நாசம் செய்கிறோம். வயலில் பூச்சி மருந்தடித்து பூச்சிகளைக் கொல்கிறோம். அரிசியை உண்ணவரும் எலிகளைக் கொல்கிறோம். உழவுமாடுகளைச் சாட்டையால் அடித்துத் துன்புறுத்தியே பயிர்களை விளைவிக்கிறோம். மிருகங்களைத் திருப்பலி கொடுக்கும் வழக்கம் இல்லாத மதங்கள் வெகு குறைவே, ஆக, நாம் உண்ணும் உணவு எதுவாக இருந்தாலும் அது வன்முறையின் மூலம் விளைந்ததே.

  இதனால்தான் உலகின் அனைத்து மதங்களிலும் உணவுக்கு முன்பு பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளது. பிரார்த்தனை செய்து கடவுளுக்குப் படைக்கப்பட்ட எந்த உணவும் பிரசாதமே.

  (கேள்விகளை அனுப்பிய வாசகர்களுக்கு நன்றி. வாசகர்கள் பலரும் தனிப்பட்ட முறையில் அவர்களுடைய நோய்களைக் குறிப்பிட்டு டயட் கேட்டுள்ளார்கள். அவர்களை, ஆரோக்கியம் & நல்வாழ்வு ஃபேஸ்புக் குழுமத்தில் இணையும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.)

  (தொடரும்) 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai