தமிழகத்தின் ஒன்பதாண்டு பொற்காலம்

‘வர்றேன், வர்றேன், வந்துகிட்டேருக்கேன்’. ஒரு இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு போய்க்கொண்டிருந்த ஒருவர்,

‘வ
ர்றேன், வர்றேன், வந்துகிட்டேருக்கேன்’. ஒரு இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு போய்க்கொண்டிருந்த ஒருவர், தன் அலைபேசியில் உதிர்த்துக்கொண்டிருந்த வார்த்தைகள் இவை. கொஞ்ச நேரத்தில் அவருக்கு விபத்து ஏற்பட்டு, அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். அவர் வந்துகொண்டிருக்கிறேன் என்று சொன்னது ஆண்டவனிடம்தான் என்று பிறகுதான் புரிந்தது. இன்றும்கூட பலர் இறைவனிடம் பேசிக்கொண்டேதான் வண்டி ஓட்டுகிறார்கள்! அலைபேசியின் பயன்பாடும் அவசியமும் அப்படி! இந்தக் காலத்தில் அலைபேசி என்றால், தொலைக்காட்சி, அலைபேசியெல்லாம் வருவதற்கு முந்திய அந்தக் காலத்தில் ரேடியோ.

ஆனால் ரேடியோ எந்த ஆபத்துகளும் இல்லாதது. முக்கியமாக செய்திகளுக்கும், பாடல்களுக்கும்தான் அதை நாம் விரும்பிக் கேட்டோம். இப்போதும் பண்பலை சக்கை போடு போட்டுக்கொண்டுதான் இருக்கிறது. வரலாறு காணாத உன்னதத் தலைவர் ஒருவரை அந்த ரேடியோ நமக்கு அடையாளம் காட்டிய வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தினசரிகளோடு விழித்து தினசரிகளோடு மக்கள் உறங்கிய காலம் அது. செய்திகளைச் சொல்லும் தொலைக்காட்சி சேனல்கள் இல்லாத காலமானதால், நாட்டு நடப்புகளையும் உலக நடப்புகளையும் உடனடியாக அறிந்துகொள்ள வானொலி ஒன்றுதான் வழி. பொதுமக்கள் மட்டுமில்லாமல், அரசியல் தலைவர்களையும் வானொலியின் தாக்கம் தொற்றிக்கொண்டிருந்தது. சொல்லப்போனால், பொதுமக்களைவிட, செய்திகளின் அவசியம் அவர்களுக்குத்தான் அதிகமாக இருக்கும் அல்லவா?

நான் சொல்லப்போகின்ற நிகழ்ச்சி நடந்தபோது, வங்கதேசத்தின் விடுதலைக்கான யுத்தம் ஒரு உச்சகட்டத்தை அடைந்துவிட்டிருந்தது. இலங்கையில் நமது அமைதிப்படை இறங்கி ‘அமைதியாக’ காரியங்கள் செய்ததுபோல, வங்காள தேசத்துக்கு ‘உதவி’ செய்வதற்காக இந்திய ராணுவமும் போர்க்களத்தில் இறங்கிவிட்டிருந்தது (அரசாங்கத்தின் உத்தரவின் பேரில்தான்). அது ஒரு பரபரப்பான காலகட்டம்.

அந்த நேரத்தில், அவரும் பரபரப்பாக எதையோ தேடிக்கொண்டிருந்தார். என்ன அது? அது அவ்வளவு முக்கியமானதா? அண்டை நாட்டில் நடந்துகொண்டிருந்த போரைவிட முக்கியமானதா? அது முக்கியமானதா இல்லையா என்பது வங்காள தேசத்துக்குத்தான் வெளிச்சம். ஆனால் நமக்கு இங்கே முக்கியம், அந்த மனிதர் எதையோ தேடிக்கொண்டிருந்ததுதான். அது கொஞ்ச நேரத்தில் கிடைத்துவிட்டதுதான். அது கிடைத்தவுடன் அவர் செய்த காரியம்தான். என்ன பீடிகை பலமாக இருக்கிறதா?

சமுதாய வாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒரு மனிதருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய ஆதாரப்பூர்வமான தகவல்கள் கிடைக்கும்போது, நமக்கு ஒரு பிரமிப்போ அல்லது வெறுப்போ ஏற்படலாம். ஒரு கோடிப் பேரைக் கொன்ற ஹிட்லர், மது குடிக்காத சைவன் என்று தெரியவரும்போது, நமக்கு அவன் மீது மதிப்பு வருமா? வெறுப்புதான் வரும். மது, உடலுக்குத்தான் விஷம். ஆனால், அந்தக் கொடியவனின் மனமும் விஷத்தால் ஆக்கப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆப்ரஹாம் லிங்கன், அமெரிக்கக் கோடீஸ்வரர் ஹென்றி ஃபோர்டு, உலகக் குத்துச் சண்டை வீரர் முஹம்மதலி, நமது முகேஷ் அம்பானி, அனில் அம்பானி போன்றோர் மது குடித்ததில்லை என்று தெரியும்போது, அவர்கள் மீதான மதிப்பு இன்னும் அதிகமாகிறது, அல்லவா?

நான் சொல்லவரும் விஷயமும் இப்படிப்பட்டதுதான். சமூக வாழ்வில் ஈடுபட்டிருந்த ஒரு மனிதர், தனிப்பட்ட வாழ்வில் எப்படி நடந்துகொண்டார் என்று தெரியவரும்போது, அவர் மீதான மதிப்பும் மரியாதையும் சரியலாம் அல்லது உயரலாம். நான் சொல்லவரும் மனிதரின் வாழ்க்கையில் நடந்த அந்த நிகழ்ச்சி, நம் மதிப்பை உயர்த்துகிறதா, தாழ்த்துகிறதா? பார்க்கலாம். 

அவர் ஒருநாள் தன் வீட்டு மாடியில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அது மதிப்பு மிகுந்த ஒரு பொருளல்ல. தன் ரேடியோவைத்தான் அவர் தேடிக்கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்க்க அவருடைய நண்பர் ஒருவர் வந்தார்.

‘வா, வா’ என்று பழக்க தோஷத்தில் வந்தவரை அழைத்துவிட்டு, மீண்டும் தேடுவதில் முனைப்பானார் அவர்.

‘என்ன தேடுறீங்க?’ என்று வந்தவர் கேட்டார்.

‘ஒன்னுமில்லப்பா, ஒரு ரேடியோ. அது பழுதாயிடுச்சுன்னு எங்கெயோ எடுத்து வெச்சேன். எங்கெ போச்சுன்னு தெரியலெ... ஒரு வெளிநாட்டுத் தூதரக அதிகாரி ஒருத்தர் என்னெப் பாக்க வந்தப்ப, அவரோட நாட்டுலெ உற்பத்தியாகும் நவீன ரேடியோன்னு, அதெ எனக்கு அன்பளிப்பா குடுத்துட்டுப் போனாரு... இங்கெதான் இருந்துது... என்னெப் பாக்க வர்றவங்கள்ளாம், அதெ எடுத்து ட்யூன் பண்ணிக்கிட்டிருப்பாங்க... ஒருநாள் அது ரிப்பேர் ஆயிடுச்சு... சரி போகட்டும்னு எங்கெயோ தூக்கிப் போட்டுட்டேன்...

‘இப்ப வங்கதேசப் போர் பத்தி ரேடியோ செய்திகளெக் கேக்க வேண்டியிருக்கு... அதெ சீர்பண்ணி வச்சுகிட்டா, எல்லா நாட்டு செய்திகளெயும் கேக்கலாமுல்ல? அதுக்காகத்தான் தேடுறேன்... காணோம்...’ என்றார் அவர்.

சொல்லிவிட்டு மீண்டும் மும்முரமாகத் தேட ஆரம்பித்தார். ஒவ்வொரு பொருளாக எடுத்து, இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக உதறிப்போட்டுப் பார்த்தார். திடீரென்று அவர் முகத்தில் மகிழ்ச்சி!

‘தோ இருக்குது’ என்று சந்தோஷத்துடன் கூறினார். ஆனால் அடுத்த கணமே, ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவரைப்போலக் காணப்பட்டார். பின் அவரே தொடர்ந்தார்.

‘இது என்னப்பா அதிசயம்? இதுக்குள்ளே போய் குருவி கூடு கட்டியிருக்கு!’ என்றார்.

ஆர்வமாய் அந்த நண்பரும் அருகில் சென்று பார்த்தார். ஆமாம். அந்த ரேடியோ பெட்டியின் திறந்து கிடந்த முதுகில் ஒரு குருவிக்கூடு! வயர்களும் வால்வுகளும் எலக்ட்ரானிக் சமாசாரங்களுமாக இருந்த அந்த சின்னஞ்சிறு கூட்டுக்குள், அந்த அப்பாவித் தாய்க்குருவி தன் குஞ்சுகளை வைத்துக்கொண்டிருந்தது. குஞ்சுகள் தங்கள் வாயைப் பிளந்து பிளந்து மூடியபடி இருந்தன.

‘என்னப்பா இது, இவ்வளவு மறைவான இடத்தில் இந்தக் குருவி எப்படி வந்தது?’ என்று அவர் கேட்டார். அது தனக்குத்தானே அவர் கேட்டுக்கொண்ட கேள்வி. கேள்வி வடிவிலான ஒரு வியப்பு. அவர் அப்படி பேசிக்கொண்டிருக்கையிலேயே அவரைப் பார்க்கச் சென்ற அந்த நண்பர், கையை நீட்டி அந்த ரேடியோவை எடுக்க முயன்றார்.

‘வேண்டாம் வேண்டாம். இப்ப ஒன்னும் அவசரமில்லெ... வெங்கட்ராமன்கிட்ட சொல்லி இதெ வெளியே எடுத்து வைக்கச் சொல்லு. வெளியே வச்சுட்டாலே, குருவி கூட்டெக் காலி செஞ்சுட்டுப் போயிடும். அப்பறமா நாம ரிப்பேர் பண்ணிக்கலாம்’ என்றார்.

வெங்கட்ராமன் என்பது அவரின் அந்தரங்கக் காரியதரிசியின் பெயர். அவர் கட்டளைப்படியே அந்த வானொலிப் பெட்டி இரண்டு நாள்களுக்கு வெளியில் கிடந்தது. அவர் முன்னறிவித்தபடியே, குருவியும் ஜாகையைக் காலி செய்துவிட்டு வேறு எங்கோ போய்விட்டது!

நிகழ்ச்சி இதுதான். இதற்கு சாட்சியாக இருந்து பார்த்த அந்த நண்பர், குன்றக்குடி தங்கவேலர் என்பவர். சரி, அவர் பார்க்கச் சென்ற அந்த மனிதர் யார்? அவர் வேறு யாருமல்ல. முதலமைச்சராக இருந்து ஒன்பது ஆண்டுகள் (1954-1963) தமிழகத்துக்கு ஒரு பொற்காலத்தைக் கொடுத்த காமராஜ் அவர்கள்தான். 

காக்கைக் குருவி எங்கள் ஜாதி என்று பாரதி பாடினான். பாரதியின் பாடல்களை கிராமம் கிராமமாகச் சென்று பாடி விடுதலை உணர்வை மக்களுக்கு ஏற்படுத்திய அவரும் அப்படிப்பட்டவர்தான். கறுப்பு காந்தி என்று சரியாக அழைக்கப்பட்டவர். எண் 8, திருமலைப்பிள்ளை ரோடு, தி.நகரில் இருந்த அவருடைய வாடகை வீட்டில் நடந்த நிகழ்ச்சி இது.  

ஆங்கிலத்தில் It speaks volumes என்று சொல்வார்கள். இந்த நிகழ்ச்சியும் அப்படிப்பட்டதுதான். ஒரு குருவிக் கூட்டைக்கூட கலைக்க விரும்பாத ஒரு மனிதரிடம் ஒரு மாநிலத்தை, ஒரு நாட்டை ஒப்படைத்தால் எப்படிக் காப்பாற்றுவார் என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டியது. தமிழ்நாட்டையும் இந்திய நாட்டையும்கூட கட்டுக்கோப்பாக, கலைக்காமல் வைக்க வேண்டிய ஒரு குருவிக்கூடாகத்தான் அவர் நினைத்து செயல்பட்டார் என்பதை அவரது வாழ்க்கை காட்டுகிறது. அவரை ஒரு மாமனிதராக அடையாளம் காண்பதற்கு இந்த ஒரு நிகழ்ச்சியே போதும்.

சில மனிதர்கள் உயர்ந்தவர்களாகவே பிறக்கிறார்கள். சிலர் தம் முயற்சியால் உயர்வடைகிறார்கள். வேறு சிலர் மீதோ உயர்வு திணிக்கப்படுகிறது என்றார் ஷேக்ஸ்பியர். இதில் காமராஜர் இரண்டாம் நிலையில் இருப்பவர். மரவீட்டிலிருந்து வெள்ளை மாளிகைக்கு உயர்ந்தவர் ஆபிரஹாம் லிங்கன். அதைப்போல், விருதுப்பட்டியிலிருந்து பாரத ரத்னா விருதுவரை உயர்ந்தவர் காமராஜர். தேங்காய் வியாபாரம் செய்துவந்த தந்தைக்குப் பிறந்து, தென்னையைப்போல் வாழ்வில் உயர்ந்த வரலாறு காமராஜருடையது. வறுமை நிலையிலிருந்து பெருமை நிலைக்கு உயர்ந்தது அந்த உன்னத வாழ்க்கை.

‘தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகின்றது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும் நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம் போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூற வேண்டிய நிலையில் உள்ளவன், பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில், நமது நாடு அடைந்துள்ள முன்னேற்றம் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்தில் ஆகட்டும்; அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யப்படவில்லை’.

‘தோழர்களே! நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்படவேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராசரை பயன்படுத்திக்கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது’. இது, தேவகோட்டையில் 9-7-61-ல் நடைபெற்ற ராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் நான்காவது மாநாட்டில் பெரியார் பேசியது. (விடுதலை, 18-07-61).

பெரியார் சொன்னதுதான் எவ்வளவு உண்மை!

(நான் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ‘காமராஜர்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை’ என்ற நூலிலும் இத்தகவல்களைக் காணலாம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com