Enable Javscript for better performance
உலக நாயகன் - Dinamani

சுடச்சுட

  

  உலக நாயகன்

  By நாகூர் ரூமி  |   Published on : 18th August 2015 01:34 PM  |   அ+அ அ-   |    |  

   

  மே 28, 1633. முகலாயர்களின் தலைநகரான ஆக்ராவில் ஒரு சண்டை நடந்தது. மனிதர்களுக்கு மத்தியில் அல்ல. மிருகங்களுக்கு மத்தியில். நாம் காடைச் சண்டை, சேவல் சண்டை விடுவோமல்லவா? அதைப்போல. ஆனால் கலந்துகொண்டவை காடைகளோ கோழிகளோ அல்ல. யானைகள். பின்னே, சாதாரண மக்கள் ஏற்பாடு செய்து பார்த்துக் களிக்கும் சண்டையா அது? பேரரசர் பார்த்து மகிழ ஏற்பாடு செய்த சண்டையல்லவா?  பாபரில் தொடங்கி இரண்டாம் பகதூர்ஷா வரை முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையும் கட்டி ஆண்ட பேரரசர்கள் அல்லவா? தாஜ்மஹால், மயிலாசனம், செங்கோட்டை, ஃபதேபூர் சிக்ரி, புலந்த் தர்வாஸா போன்ற வியத்தகு அழகுகளையும் ஆச்சரியங்களையும் கொடுத்தவர்கள் அல்லவா?  அவர்களது பொழுதுபோக்கு நம்முடையது போலவா இருக்கும்! நமக்குக் கோழி என்றால் அவர்களுக்கு யானை!

  உப்பரிகையில் இருந்து சண்டையை வேடிக்கை பார்க்க அமர்ந்தார் சக்கரவர்த்தி. கீழே குதிரைகளின்மீது அமர்ந்து வேடிக்கைப் பார்க்க காத்துக் கொண்டிருந்தனர் அவரது நான்கு அருமை மைந்தர்கள். நான்கு இளவரசர்கள். மோதலுக்காக இரண்டு யானைகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஷாலிமார் தோட்டத்தில் அந்த சண்டைகள் நடத்தப்பட்டன என்றும், நாற்பது யானைகளை பேரரசருக்கு வங்காள கவர்னர் பரிசாக அனுப்பியிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. தந்தம் கொண்ட யானையின் பெயர் சுதாகர் என்றும் தந்தமில்லா யானையின் பெயர் சூரத்சுந்தர் என்றும் ‘பாதுஷாநாமா’ நூல் கூறுகிறது. சண்டை தொடங்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால் சூரத்சுந்தர் தப்பித்து ஓட யத்தனித்தது. கொம்பனைத் துரத்திக்கொண்டு சென்ற கும்கி கொம்பனை விட்டுவிட்டு மேலே அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இளவரசன் ஒருவனின் குதிரையை நோக்கிக் கோபமாக வந்தது.

  அவ்வளவுதான், மற்ற மூன்று இளவரசர்களும் குதிரையோட்டம் பிடித்தனர். மாட்டிக்கொண்டதோ ஆகக்கடைசி இளவரசன். ஆனால் அவன் அஞ்சியோடவில்லை. குதிரையையும் ஓடவிடாமல் நிறுத்தினான். ஈட்டியை எடுத்து கும்கியின் நெற்றியைக் குறிபார்த்து எறிந்ததில் யானையின் கோபம் அதிகமானது. வேகமாக வந்த அது இளவரசன் அமர்ந்திருந்த குதிரையைத் தன் தும்பிக்கையால் அல்லது தந்தத்தால் தாக்கியது. குதிரை தூரப்போய் விழுந்தது.

  Aurangzeb facing_a_maddened_elephant_named_Sudhakar.jpg 

  ஆனால் அதற்குள் சுதாரித்துக்கொண்டு குதிரையிலிருந்து குதித்து தரையின் மீது பாதுகாப்பாக இறங்கி நின்ற இளவரசன் மீண்டும் ஈட்டியால் யானையின் நெற்றியைக் குறிபார்த்து எறிந்தான். உப்பரிகையில் நின்றுகொண்டிருந்த சக்கரவர்த்திக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. யானையை நிறுத்தும்படி பதட்டத்துடன் உத்தரவிட்ட அவர் வேகமாகக்கீழே அச்சத்துடன் இறங்கிவந்தார்.

  அதற்குள் யானை எப்படியோ நிறுத்தப்பட்டு, திசை மாற்றப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் வேடிக்கை பார்க்க வந்திருந்த அனைவரும் அந்தக் குட்டி இளவரசனின் துணிச்சலையும் வீரத்தையும் கண்டு மூக்கில் விரல் வைத்தனர். இவ்வளவு சின்ன வயதில் இவ்வளவு மன உறுதியா! மகனைத் தழுவிக்கொண்ட சக்கரவர்த்தி அவனுக்கு ’பகதூர்’ (துணிச்சலானவன்) என்ற கௌரவப் பெயரை அளித்து அவனது எடைக்கு எடை தங்கம் தானமாகக் கொடுத்தார்!

  ஆனால் விஷயம் அத்தோடு முடிந்துவிடவில்லை. அவர் சொன்னார்: ‘ஆண்டவன் காப்பாற்றினான். ஏதாவது எசகுபிசகாக நடந்திருந்தால் நமக்கு அவமானமாக அல்லவா போயிருக்கும்’ என்றார்! யானை தாக்கி மகன் இறந்து போனாலும் வருத்தமில்லை, ஆனால் ராஜகுலத்துக்கு அது அவமானமாகப் போயிருக்கும் என்பதுதான் அவரது கவலையாக இருந்தது! ஆஹா,  கடைசி மகன்மீது அவருக்குத்தான் எவ்வளவு பாசம்!

  ஆனால் மகன் அப்பாவுக்குச் சொன்ன பதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவன் சொன்னான்:

  ‘யானையை எதிர்த்துச் சண்டையிட்டு இறந்துபோவதில் என்ன அவமானம்  இருக்கிறது தந்தையே? எல்லோரும் ஒருநாள் போய்த்தானே ஆகவேண்டும்? ஆனால் என்னைக் காப்பாற்ற நினைக்காமல் என் அண்ணன்கள் தாராவும், ஷுஜாவும் தம்பி முராதும் உயிருக்கு பயந்து தப்பித்து ஓடினார்களே, அதுதான் முகலாயசக்கரவர்த்தியின் வீரபரம்பரைக்கு அவமானமான செயலாகும்!’

  ஆஹா, சொற்களால் செருப்படி என்பது அதுதான்! அப்படி ஒரு பதிலைக்கொடுத்த அந்த வீரமகன் யார்? அவன் பெயர் முஹ்யுத்தீன் முஹம்மது ஔரங்கசீப். அப்பா சக்கரவர்த்தி ஷாஜஹான்! இந்த நிகழ்ச்சி நடந்தபோது ஔரங்கசீபின் வயது பதினான்கு!

  ஷாஜஹானுக்கு பத்து மனைவிகள். அதில் மும்தாஜ் மஹலுக்குப் பிறந்த மூன்றாவது மகன் ஔரங்கசீப் என்கிறார் வரலாற்றாசிரியர் முகில். ஷாஜஹானுக்கு இருபது மனைவிகள் என்கிறது விக்கி. நான் விக்கி சொல்வதையே எடுத்துக்கொள்கிறேன்! அதுதான் ஔரங்கசீபின் மீதான ஷாஜஹானின் வெறுப்புக்கு நியாயம் செய்கிறது. ஷாஜஹான் மீதான என் பொறாமையையும் அதிகப்படுத்துகிறது!

  கடிதமும் பதிலும்

  ஔரங்கசீப் எல்லோரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் பணிவாகவும் நடந்துகொண்டார். ஷாஜஹானால் நியமிக்கப்பட்ட  அதிகாரிகள் அவரது நன்னடத்தையால் கவரப்பட்டு அவரை மிகவும் நேசித்தார்கள். ஆனால் மூத்தவரான தாராஷிகோவின் நடத்தை நேர்மாறாக இருந்தது. அவர் யாரையும் மதிப்பதில்லை. எல்லோரிடமும் திமிராக நடந்துகொண்டார். ஆனால் தனக்குப் பிறகு தாராதான் சக்கரவர்த்தியாகவேண்டும் என்பது ஷாஜஹானின் ஆசை. ஔரங்கசீபை அவர் எப்போதுமே விரும்பியதில்லை. செலவுக்குப் பணம் கொடுக்கும்போதுகூட தாராவுக்குக் கொடுக்கும் பணத்தில் பாதிதான் ஔரங்கசீபுக்குக் கொடுப்பார்! ஔரங்கசீபின் நன்னடத்தையால் அவருக்கு ஆதரவு பெருகிவிடுமோ என்று ஷாஜஹான் கவலைப்பட்டார்! அதனால் அவர் ஔரங்கசீபுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதினார்.

  ‘அன்பு மகனே! நம்மைப் போன்ற சக்கரவர்த்திகளும், சக்கரவர்த்தியின் பிள்ளைகளும் மற்றவர்களைவிட மிகுந்த உயர்வானதொரு நிலையில் இருக்கிறோம். அந்த நிலையை எடுத்துக்காட்டும் விதமாகத்தான் நாம் யாரிடமும் பழகவேண்டும். ஆனால் எல்லோரிடமும் நீ பணிவாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்கிறாய். இது ராஜபரம்பரைக்கு உகந்ததல்ல. இம்மாதிரி நடந்துகொள்வதால் எதிர்காலத்தில் அது உனக்கு உதவாது. நீ நிந்தனைக்கு ஆளாவாய். மாற்றிக்கொள்!' கடித அரசியல் என்பது இதுதான்!  ஆனால் அவர் கடிதத்துக்கு தக்க பதிலைக்கொடுத்தார் ஔரங்கசீப்.

  ‘அன்பு தந்தையே! தனக்குப் பிரியமானவர்களை மட்டுமே கண்ணியப்படுத்துவதாக அல்லாஹ் குர்’ஆனில் கூறுகிறான். எனவே எனக்கு கண்ணியம் கிடைக்கவேண்டும் என்பதற்காக நான் தனியாக எதையும் செய்யவேண்டியதில்லை. ‘யார் ஒருவர் பணிவுடன் நடந்துகொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் கண்ணியம் கொடுக்கிறான்’ என்று நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் அவர்கள் சொன்ன நபிமொழிக்கு ஏற்பவே நான் நடந்துகொள்கிறேன். அடுத்தவர் மனதைப் புண்படுத்துவதைவிட மோசமான பாவம் எதுவுமில்லை என்று நான் நினைக்கிறேன்' என்று பதில் கொடுத்தார் ஷாஜஹானின் மூன்றாவது மகனான ஔரங்கசீப்!

  யுத்தகளத்தில் தொழுகை

  ஔரங்கசீப் சிறு வயதிலிருந்தே ஒரு முஸ்லிமுக்குரிய கடமைகளை ஆர்வத்துடனும் உறுதியான நம்பிக்கையுடனும் நிறைவேற்றக் கூடியவராக இருந்தார். முஸ்லிம்கள் ஐந்து வேளையும் தொழுவார்கள் என்பதை இந்த உலகம் அறியும். ரயில் பயணத்தின்போது கூட தொழுபவர்களை நாம் பார்த்திருக்கலாம். ஆனாலும் அவை அனைத்தும் அமைதிக்காலத் தொழுகைகள். யுத்தகளத்தில், உள்ளேயும் வெளியேயும் கொதித்துக் கொண்டிருக்கும்போது, செய் அல்லது செத்துமடி என்ற சூழ்நிலையில் ஒருவர் தொழமுடியுமா? முடியும் என்பதை நபிகள் நாயகத்தின் வரலாற்றிலிருந்தும் அவர்களைப் பின்பற்றிய தோழர்களின் வரலாற்றிலிருந்தும் நாம் அறிந்துகொள்ள முடியும். ஆனாலும் அப்படிப்பட்ட சூழ்நிலைகள் வெகு அரிதானவையே. அப்படி ஒரு சூழ்நிலையை ஔரங்கசீப்பின் வாழ்விலும் காணமுடிந்தது.

  Equestrian_Aurangzeb.jpg 

  தன் மூதாதையரான தைமூரின் ராஜ்ஜியம் இருந்த உஸ்பெக்கிஸ்தானின் தலைநகரான சாமர்கண்டை தன் ஆட்சியின்கீழ் கொண்டுவரவேண்டும் என்பது ஷாஜஹானின் நெடுநாள் ஆசையாக இருந்தது. கிபி 1645ல் தளபதி அலீமர்தான்கானும் இளவரசர் ஷுஜாவும் இணைந்து ஆப்கனிஸ்தானின் வடக்குப்பகுதியின் புகழ்பெற்ற பல்க் நகரைக் கைப்பற்றினர். கைப்பற்றுவது எளிது ஆனால் அதைக் காப்பாற்றுவதும் பாதுகாப்பதும் கடினம் என்பதை ஷாஜஹான் விரைவிலேயே உணர்ந்துகொண்டார். இப்படி ஏதாவது பிரதேசங்களின் நிர்வாகம் பிரச்சனைக்குரியதாக இருக்குமானால் உடனே அதை ஔரங்கசீபின் பொறுப்பில் விட்டுவிடுவது அவர் வழக்கம்! எப்படியாவது செத்தால் சரி, தனக்குப் பிறகு தாராஷிகோ சக்கரவர்த்தியாவதில் பிரச்சனை ஏதுமிருக்காது என்றே அவர் எப்போதும் தப்புக்கணக்குப் போட்டார்!

  பல்க், பதக்கிஸ்தான் ஆகிய இரு பிரதேசங்களும் ஔரங்கசீபின் ஆளுகையின் கீழ்வந்தன. அவர் பல்க் நோக்கிச் செல்லும்வழியில் உஸ்பெக்கிஸ்தானின் தலைநகரான புகாராவின் மன்னர் அப்துல்அஜீஸ்கானோடு யுத்தம் செய்யவேண்டியிருந்தது. கடுமையான சண்டைக்கு நடுவே ‘ளுஹர்’ (பகல்நேரத்) தொழுகைக்கான நேரம் வந்தது. உடனே யானையிலிருந்து கீழே குதித்த ஔரங்கசீப் முறைப்படி தண்ணீரால் தன்னைச் சுத்தம்செய்தபிறகு தொழுகைப்பாயை விரித்து இந்த உலகை மறந்தவராக தொழ ஆரம்பித்துவிட்டார்.

  அது ரொம்ப ‘ரிஸ்க்’, அப்படிச் செய்யவேண்டாம் என்று அவரது அதிகாரிகளின் எச்சரிக்கையை அவர் பொருட்படுத்தவில்லை. அவரது அசைக்கமுடியாத இறைநம்பிக்கை பொய்க்கவில்லை. யுத்தகளத்தில் அவர் தன்னை மறந்து தொழுவதைப்பார்த்த அப்துல் அஜீஸ்கான் ‘இப்படிப்பட்ட மனிதனோடு போரிடுவது நமக்குத்தான் அழிவைத்தரும்’ என்று உரத்துச் சொல்லியவராக யுத்தத்தை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டார்! இஸ்லாமிய உலகில் ஔரங்கசீபின் புகழ் ஷாஜஹானின் விருப்பத்துக்கு எதிராக கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. ஔரங்கசீபைவிடச் சிறந்த தலைவர் இருக்கமுடியாதென்று முகலாய சாம்ராஜ்ஜிய அதிகாரிகளும் தளபதிகளும் நினைக்க ஆரம்பித்தனர்.

  பதவிச் சண்டை

  1657 செப்டம்பரில் ஷாஹஜானுக்கு ரொம்ப உடம்புக்கு முடியாமல் போனபோது அதைப் பயன்படுத்தி சாம்ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற தாரா எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. ஷாஜஹானின் உடல்நிலை பற்றி மற்ற சகோதரர்களுக்கு எதுவும் தெரிவிக்காமல் ஷாஜஹானின் கையெழுத்தை தாராவே போட்டு உத்தரவுகளைப் பிறப்பித்தார்! ஆக்ராவிலிருந்து வெளியூருக்கு கடிதங்கள் செல்வது தடுக்கப்பட்டது. ஆக்ராவுக்கு வெளியே செல்லும் எல்லா சாலைகளும் மூடப்பட்டன. அரண்மனையிலிருந்த ஔரங்கசீப், ஷுஜா, முராத் ஆகியோருக்கு ஆதரவான அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

  Dara_Shukoh.jpg 

  நானே சக்கரவர்த்திக்கு என்று ஷுஜாவும் முராதும் தங்களை அறிவித்துக்கொண்டனர். தங்கள் பெயர்களின் நாணயங்களையும் வெளியிட்டனர்! ஆனால் ஷுஜாவுக்கு எதிரான போரில் தாரா வென்றார். வங்காள எல்லைக்கு ஓடிய ஷுஜா மெக் பழங்குடியினரால் கொல்லப்பட்டார்.

  இறுதியில் ஆக்ராவுக்கு அருகிலிருந்த சாமுகர் என்ற இடத்தில் தாராவுக்கும் ஔரங்கசீபுக்கும் நடந்த கடுமையான சண்டையில் ஔரங்கசீப் வென்றார். தன்னைக் கொல்ல ஷாஜஹான் மேற்கொண்ட சதியிலிருந்தும் தப்பித்தார்.

  இஸ்லாத்துக்கு எதிரான கோட்பாடுகள் கொண்டிருந்ததற்காக தாராவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. குடிகாரத் தம்பி முராது பக்‌ஷ் போதையில் இருந்தபோது கொல்லப்பட்டார். ஔரங்கசீப் அரியணையேறினார்.

  மரண வாக்குமூலம்

  1707ம் ஆண்டு வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் (அதிகாலை) தொழுகையை நிறைவேற்றிவிட்டு கலிமாவை (இஸ்லாமிய மூலமந்திரம்) உச்சரித்த வண்ணம் ஔரங்கசீபின் உயிர் பிரிந்தது. அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய உயில் காட்டுகிறது:

  நான் என் கையால் செய்து விற்ற தொப்பிகளுக்கான பணம் நான்கு ரூபாய்களும் இரண்டு அனாக்களும் ஆய்பேகா வசம் உள்ளன. அதைக்கொண்டு என் மீது போர்த்தவேண்டிய கஃபன் துணியை வாங்கிக்கொள்ளுங்கள்.

  திருக்குர்’ஆனை என் கையால் பிரதி எடுத்து விற்றதன் மூலம் கிடைத்த முன்னூற்று ஐந்து ரூபாய்கள் என் வசமுள்ளன. நான் இறக்கும் அன்று அந்தப் பணத்தை ஏழைகளுக்கு தானமாகக் கொடுத்துவிடுங்கள்.

  என் தலையை எதைக்கொண்டும் மூடாமல் திறந்து வைத்துவிடுங்கள். இறைவன் எனக்கு கருணை காட்ட அது உதவும்.

  என் உடலை அருகில் உள்ள இடுகாட்டில் ஆடம்பரங்கள் ஏதுமின்றி அடக்கம் செய்யுங்கள்.

  ஔரங்கசீப் சில முக்கிய தகவல்கள்

  கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும்

  தன் கையால் குர்’ஆன் முழுவதையும் எழுதியிருக்கிறார்

  குர்’ஆன் முழுவதையும் மனப்பாடம் செய்திருக்கிறார்

  அவருடைய மகன் காம்பக்‌ஷ் ஒரு கொலை செய்த தன் நண்பரைக் காப்பாற்ற முயற்சித்தபோது தன் மகனையும் நண்பரோடு சிறையிலடைத்தார்.

  பஞ்ச காலத்தில் மக்களுக்கு இலவசமாக உணவு கொடுக்கப்பட்டது.

  இந்துக்கள் கங்கையில் குளிப்பதற்கும் அஸ்தி கரைப்பதற்கும் கொடுக்க வேண்டியிருந்த வரிகள், மீன்பிடிப்பதற்கு, பால் கறந்து விற்பதற்கு, வறட்டி பயன்படுத்துவதற்கெல்லாம் விதிக்கப்பட்டிருந்த வரிகள், இந்து விதவைப் பெண்களை மறுமணம் செய்துகொள்பவர்கள் அரசுக்கு செலுத்தவேண்டிய வரி, சந்தைகள் போடப்படும்போது செலுத்தவேண்டிய வரி – இப்படி பல வரிகள் நீக்கப்பட்டன.

  ‘ஏற்கனவே இருந்த கோயில்களை இடிக்கச் சொல்லி அவர் கட்டளையிட்டது கிடையாது. ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமை ஔரங்கசீப் காலத்தில் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை’. ‘ஔரங்கசீப் காலத்தில்தான் குமரகுருபரர் சைவ சமயத்தைப் பரப்பினார். சைவ மடாலயங்கள் அமைப்பதற்கு நிலங்களும் ஔரங்கசீபால் வழங்கப்பட்டன. பல கோயில்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்ட குறிப்புகளும் இருக்கின்றன'. ‘ஔரங்கசீப் ஆட்சியில் கட்டாய மதமாற்றங்கள் இருந்ததாகக் கூறப்படும் தகவல்களில் உண்மையில்லை. தன்னிடம் சரணடைந்த சிற்றரசர்களை மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தவும் இல்லை' (முகலாயர்கள், நூலாசிரியர் -முகில்,  பக். எண் 307-312).

  மது, சூதாட்டம், இசை, கேளிக்கைகள் இவற்றையெல்லாம் தடைசெய்த ஔரங்கசீப் வீணை வாசிப்பதில் வல்லவர்.

  மூன்று மணி நேரம்தான் உறங்கினார். அரசாங்க வேலையில்லாத நேரங்களிலெல்லாம் சமய நூல்களைப் படிப்பார். தரையில்தான் படுப்பார்.

  தன் சொந்தச் செலவுகளுக்காக கஜானாவை பயன்படுத்தியதே இல்லை.

  எளிமையான உடைகளையே அணிந்தார். வெள்ளிப் பாத்திரங்களைக்கூட பயன்படுத்தியதில்லை.

  உடன்கட்டையேற்றப்படும் கொடிய வழக்கத்தை தடை செய்து உத்தரவிட்டார். 

  போரில் பிடிபட்ட சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி கொல்லப்பட்ட பிறகு அவரது மூன்று மகன்களுக்கும் உயர்பதவிகள் கொடுத்தார். ஔரங்கசீப் இறந்தபிறகு, மராட்டிய தலைவரான சாம்பாஜியின் மூத்த மகன் சாஹு செய்த முதல் வேலையே ஔரங்கசீபின் அடக்கஸ்தலம் சென்று வந்ததுதான்.

  வீரமும், விவேகமும், எளிமையும், ஆழமான மத நம்பிக்கையும் கொண்டவர் ஔரங்கசீப் என்பதுவரை நிச்சயம். ஔரங்கசீபுக்கு ‘ஆலம்கீர்’ ('உலகை வென்றவர்’) என்ற பட்டத்தை  ஷாஜஹான் கொடுத்தார். அவர் பரிசாக அனுப்பிய வாளில் அது எழுதப்பட்டிருந்தது. கனவுத்தொழிற்சாலையில் கதாநாயகிகளுக்கு முத்தம் கொடுக்கும் உலகநாயகன் அல்ல அவர். ஆப்கனிஸ்தானிலிருந்து கன்னியாகுமரிவரை விரிந்து பரவியிருந்தது ஔரங்கசீபின் சாம்ராஜ்ஜியம். உலகை உண்மையிலேயே வென்றவர் உலக நாயகன்தானே?  

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp