பாரதி கண்ட புதுமைப்பெண்

நீங்கள் விழித்துக்கொண்டிருக்கும்போதே கனவு காண்பவரா? நான் பகல் கனவுகளைப் பற்றிச்சொல்லவில்லை. லட்சியங்களைப் பற்றிப் பேசுகிறேன்.


நீங்கள் விழித்துக்கொண்டிருக்கும்போதே கனவு காண்பவரா? நான் பகல் கனவுகளைப் பற்றிச்சொல்லவில்லை. லட்சியங்களைப் பற்றிப் பேசுகிறேன். உங்களுக்குள் ஒரு கனவு எப்போதும் உள்ளதா? விழித்திருக்கும்போதும் உறங்கும்போதும். அப்படியானால் இந்தப் பெண்மணியைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும்.

சிலரைப் பார்த்தவுடனேயே நமக்குப் பிடித்துப் போய்விடும். சிலரைப் பற்றிப் படித்தவுடனேயேகூட இது நிகழலாம். நம் வாழ்வில் நமக்கான உந்துதல்கள் அவ்வப்போது வந்துகொண்டேதான் இருக்கும். என் வாழ்வின் உந்துதல்களில் இவரும் ஒருவர். இவர் ஒரு சாதனைப்பெண். சாதாரண சாதனையல்ல. இதுவரை எந்தப்பெண்ணும் செய்திராத ஒரு சாதனை. ரொம்ப அசத்தலானது. அதைப்பற்றிப்பேசுமுன் மேரியின் – ஆமாம் அதுதான் அவருடைய சுருக்கமான பெயர் - வாழ்க்கையில் நடந்த சில நிகழ்ச்சிகளைப் பார்த்துவிடலாம்.

மேரி அப்போது ஃப்ரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இருந்த சோர்பான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவி. பல்கலைக்கழகத்துக்கு அருகில் இருந்த ஒரு பகுதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். அறை என்றா சொன்னேன்? அறை மாதிரி. ஆமாம். ஒரு மாடியில் இருந்த பரண் போன்ற ஒரு குட்டி அமைப்பு. அதுதான்  மேரியின் அறை.

வெளிச்சம், காற்று இதற்கெல்லாம் இடம் கொடுக்கக்கூடாதென்ற திட்டத்தோடு கட்டப்பட்ட அறை அது. குளிர் மட்டும் இரவில் உறையவைக்கும். அந்தக்குளிரை நம்மால் கற்பனை செய்யக்கூட முடியாது. டெல்லி ஹோட்டல்களில் இரவில் போர்த்திக்கொள்ள ’ரஜாய்’ என்ற பெயரில் ஒரு மெத்தை தருவார்கள்! டெல்லி குளிரைத்தாங்குவதற்கு ரஜாய் இல்லையெனில் நம்முடைய ’ஜாய்’ எல்லாம் அம்போதான்! அப்போ பாரிஸ் குளிர்? ஒரு உதாரணம் சொல்கிறேன். தமிழ்நாட்டில் அதிகபட்ச தட்பவெப்பநிலை 34 டிகிரி செண்டிகிரேட். குறைந்தபட்சம் 24 டிகிரி. ஆனால் பாரிஸில் அதிகபட்ச தட்பவெப்பநிலையே ஜனவரியில் ஏழுதான்! டிசம்பரில் எட்டுக்குப்போகும்! நடுவில் அப்பப்போ 25க்குத் தாவலாம். குறைந்தபட்ச நிலை மூன்று டிகிரி! இருபத்திநாலுக்கே நமக்கு ரஜாய் வேண்டும். அப்போ மூன்றுக்கு?
 

ஆனால் பாவம் ஏழை மேரி. குளிருக்குப் போர்த்திக்கொள்ளப் போர்வை எதுவும் கிடையாது. அப்போ என்ன செய்வார் தெரியுமா? தன் ஆடைகளையெல்லாம் தன்மீது போட்டுக்கொண்டு, முதுகின்மீது மேஜையையும் தூக்கி வைத்துக்கொண்டு தூங்குவார்! கொஞ்சமாவது கதகதப்பாக இருக்கட்டுமே என்று! இவ்வளவு கஷ்டத்தில் ஒரு பெண் படிக்கப் போயிருக்கிறார் என்றால் அவர் மனதில் எவ்வளவு உறுதி இருந்திருக்க வேண்டும்! ஆம், அதுதான் மேரியின் தனித்தன்மை. மனதில் நீங்காத கனவு, இரும்பு இதயம், மிகமிகக் கடினமான உழைப்பு. இவற்றின் மொத்த பெயர்தான் மேரி. அவருடைய கதையைச் சொல்லுமுன் இன்னும் சில நிகழ்ச்சிகளையும்  சொல்லிவிடவேண்டும்.

மேரி எப்போதுமே வகுப்பில் முதல் பெஞ்ச்சில்தான் உட்காருவார். விரிவுரையாளர்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் மனதால் மென்று உள்வாங்கிக்கொள்வார். வகுப்பு முடிந்ததும் நேராக நூலகத்துக்குச் சென்று புத்தகங்களை எடுத்துப் படித்துக் குறிப்புகள் எடுத்துக்கொள்வார். நூலகம் மூடும்வரை அங்கேயே அமர்ந்து படிப்பார். மூடிய பிறகு தன் அறைக்குச் செல்வார். ஆனால் உள்ளே போகுமுன்னேயே மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து படியிலேயே உட்கார்ந்து படிக்க ஆரம்பித்துவிடுவார். எதுவரை? மயக்கம் வந்து விழும்வரை! இப்படி பலமுறை நடந்துள்ளது. ஏன் மயங்கிவிழுந்தார்? உறக்கம் காரணமா? இல்லை. பசிதான் காரணம். பல நேரங்களில் எதுவும் சாப்பிடாமலும், சாப்பிடப் பணமில்லாமலும், சாப்பிட மறந்தும் இருந்துவிடுவார்! வாரத்துக்கு ஒருமுறை அவருக்கு அவரே விருந்துகொடுத்துக்கொள்வார்! அது என்ன தெரியுமா? பர்கர், பீட்சா, பீஃப் பொரியல், பிரியாணி – இப்படி எதுவுமில்லை. ப்ரெட்டோடு ஒரு ஆம்லட். அந்த முட்டைதான் அவருக்கான விருந்து!

இவ்வளவு கஷ்டப்பட்டு படித்த அந்தப்பெண் யார்? எங்கிருந்து வந்தார்? அவருடைய கனவுதான் என்ன? அது நிறைவேறியதா? இதோ சொல்கிறேன்.

அவர் பெயர் மேரி சலோமியா ஸ்கலடோவ்ஸ்கா. மரியா என்றும் மன்யா என்றும் அழைக்கப்பட்டார். 1867ல் போலந்து நாட்டின் வார்சா நகரில் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். அவருடைய பெற்றோர்கள் கல்வியின் முக்கியத்துவம் தெரிந்த ஆசிரியர்கள். தந்தையிடமிருந்து கணிதம், இயற்பியல் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார் மேரி. பள்ளிப்படிப்பில் எப்போதுமே அவர் முதல் ராங்க்தான்! தங்க மெடலெல்லாம் வாங்கியிருக்கிறார். வசதி இல்லாவிட்டாலும் வியத்தகு அறிவிருந்தது.

ஆனால் வசதி இருந்தால்கூடப் பெண்குழந்தைகள் உயர்கல்வி படிக்கமுடியாத சூழ்நிலை இருந்தது அந்த நாட்டில். ஏன்? வார்சா அப்போது ரஷ்யாவின் ஆளுகையில் இரண்டாம் அலக்சாண்டர் என்ற ஜாரின் கீழிருந்தது. பெண்கள் பள்ளிக்கூடம்வரை போகலாம். ஆனால் கல்லூரிப் பக்கமெல்லாம் எட்டிப்பார்க்கக்கூடாது என்பது ஜாரின் உத்தரவு! ஆனால் மரியாவுக்கும் அவர் சகோதரி ப்ரான்யாவுக்கும் உயர்கல்வி படிக்கவேண்டுமென்பது லட்சியம். ப்ரான்யாவுக்கு டாக்டராகவேண்டும். மரியாவுக்கு விஞ்ஞானியாகவேண்டும். ஆனால் மரியாவுக்குப் பத்துப்பதினோறு வயதிருக்கும்போது தாயார் இறந்துபோனார். இப்போது என்ன செய்வது? சகோதரிகள் இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். அது என்ன ஒப்பந்தம்? அது வரலாற்றில் நடந்த ஓர் அரிய நிகழ்வு. சகோதரித்துவத்துக்கு இலக்கணம்போல செயல்பட்டனர்  ப்ரான்யாவும் மரியாவும். அப்படி என்ன செய்தனர்?

ப்ரான்யா முதலில் பாரிஸுக்குச் செல்லவேண்டும். அங்கேதான் ஆண், பெண் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் யார்வேண்டுமானாலும் படிக்கலாம். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் கண்ட புரட்சி நாடாயிற்றே அது! மரியா வார்சாவில் ஆசிரியையாகப் பணியாற்றி ப்ரான்யா பாரிஸ் சென்று படிப்பதற்கான பணத்தை சம்பாதித்து அனுப்பவேண்டும். ப்ரான்யா படித்து மருத்துவரானவுடன், மரியாவை வரவழைத்து படிக்க வைப்பார்! இதுதான் ஒப்பந்தம்! நடைமுறைக்குச் சாத்தியமா என்று சந்தேகம் ஏற்படுத்திய ஒப்பந்தம் அது. ’ட்யூஷன்’ எடுத்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்? ஆனாலும் மரியா மனம் தளறவில்லை. வார்சாவுக்கு அருகிலிருந்த ஊரில் ஆசிரியையாக ஒரு நாளைக்கு எட்டுமணிநேரம் வேலை பார்த்தார். அதோடு அங்கிருந்த தொழிற்சாலை ஊழியர்களின் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுத்தார். ரகசியமாக! ஏனெனில் அப்படிச் சொல்லிக்கொடுப்பதும் ஜாரின் சட்டப்படி குற்றம்!

தன் கனவுகளும் கலைந்துபோகவிடாமல் மரியா இவ்விதம் கஷ்டப்பட்டது ஆறு ஆண்டுகள்! அதன் பிறகு ப்ரான்யாவிடமிருந்து கடிதம் வந்தது. தான் ஒரு மருத்துவராகிவிட்டதாகவும், மரியா பாரிஸுக்கு வரலாம் என்றும் கடிதம் அழைத்தது! எப்பேர்ப்பட்ட உழைப்பு, எப்பேர்ப்பட்ட தியாகம்!

பாரிஸ் மரியாவை வரவேற்றது. ப்ரான்யாவும் அவர் கணவரும்  -- ஆமாம், அவர் அங்கேயே திருமணமும் செய்துகொண்டார் – மிகவும் அன்பாக நடந்துகொண்டனர். ஆனாலும் பல்கலைக்கழக வகுப்பு முடிந்து அவர்கள் இருந்த இடத்துக்குச் செல்வதற்கு இரண்டரை மணிநேரம் மரியா பயணம் செய்யவேண்டியிருந்தது. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்தை வீணடிக்க மரியா விரும்பவில்லை. அதனால் பல்கலைக்கழகத்துக்கு அருகிலிருந்த அறையில் தங்கினார். அப்போது நடந்த நிகழ்வுகள் பற்றித்தான் மேலே பார்த்தோம்.
 

மரியாவுக்கு இப்போது மூன்று பிரச்சனைகள். ஒன்று ஃப்ரெஞ்ச் மொழி அவருக்குத் தெரியாது. இரண்டு, எல்லா பேராசிரியர்களும் அம்மொழியில்தான் பேசினார்கள். அதுவும் வேகவேகமாக. மூன்றாவது, தன் விஞ்ஞான அறிவில் இருந்த இடைவெளிகளை அவர் நிரப்ப வேண்டியிருந்தது. ஆனால் மரியா எதற்கும் கலங்கவில்லை. மூன்று பிரச்சனைகளையும் தாண்டி அவர்தான் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாக வந்தார். அப்போதுதான் அவருக்கு பியர் க்யூரி என்ற இளம் விஞ்ஞானியோடு நட்பு ஏற்பட்டு அது காதலாக மலர்ந்தது. தன்னைத் திருமணம் செய்துகொள்ள பியர்க்யூரி கேட்டார். நீண்ட தயக்கத்துக்குப்பின் மேரி ஒத்துக்கொண்டார். ஏன் தயக்கம்? பியர் ஃப்ரெஞ்சுக்காரர். அவர் கணவரானால் மேரி ஃப்ரான்ஸிலேயே இருக்கவேண்டும். தன் தாய்நாடான போலந்துக்குத் திரும்பிப்போகமுடியாது. அதுதான் தயக்கம். ஆனால் நான் போலந்துக்கு வந்துவிடுகிறேன் என்று பியர் கூறினார். (காதல் அப்படித்தான் பேசவைக்கும்).  அப்படிச் செய்யவேண்டாம், நான் பாரிஸிலேயே இருந்துவிடுகிறேன் என்று கூறிய மேரி கடைசியில் பியரை மணந்துகொண்டார். அன்றிலிருந்து மேரி க்யூரி என்று அவர் அறியப்பட்டார். அந்த தம்பதியரின் விஞ்ஞான வாழ்வு உலகப் பிரசித்திபெற்றது.

விஞ்ஞானியாக வேண்டும் என்பது மேரியின் கனவல்லவா? ஆனால் எந்த துறையில் ஆராய்ச்சி செய்வது என்ற குழப்பம் இருந்தது. அதற்கு விடைகொடுப்பதைப்போல அமைந்தது ஹென்றி பெக்கொரல் செய்த ரேடியோஆக்டிவிட்டி (கதிர்வீச்சு) பற்றிய பரிசோதனைகள். அவர் விட்ட இடத்தை நிரப்புவது என்று மேரி முடிவு செய்தார். அங்குதான் அவருடைய சாதனை வாழ்வு தொடங்கியது.

ஒரு சின்ன சோதனைச்சாலை. ஒரு பள்ளிக்கூட தலைமையாசிரியர் இரக்கப்பட்டு ஒதுக்கிக் கொடுத்தது. ’குதிரை லாயம்போல இருக்கிறது’ என்று வர்ணித்தார் அதைப்பின்னாளில் பார்வையிட்ட ஒரு விஞ்ஞானி! அப்படி ஒரு சோதனைச்சாலையில் இரவு பகல் பாராமல் தங்கள் ஆராய்ச்சிகளைச் செய்தனர் தம்பதியர் இருவரும். பிட்ச்ப்ளெண்டு(pitchblende) என்ற ஒருவகை நிலக்கரி மிச்சத்திலிருந்து ரேடியத்தைப் பிரித்தெடுக்கும் சோதனை.’ரேடியோ ஆக்டிவிட்டி’, ‘பொலோனியம்’, ’ரேடியம்’ ஆகியவை மேரிக்யூரி மூலமாக நமக்குக் கிடைத்த புதிய சொற்களாகும். ஒருநாள் முழுவதும் தன்னைவிடப் பெரிய அகப்பை மாதிரி ஒன்றை வைத்துக்கொண்டு கிண்டிக்கொண்டே இருப்பார் மேரி. மிகவும் களைத்துப்போவார். இந்த ஆராய்ச்சி பல ஆண்டுகள் தொடர்ந்தது.

இறுதியில் அவருடைய உழைப்ப்புக்குப் பலன் கிடைத்தது. கதிரியக்க வீச்சு கொண்ட ஒரு பொருளை பிட்ச்ப்ளெண்டிலிருந்து பிரித்தெடுப்பதில் வெற்றிகண்டார். அதுவரையில் அவ்வகைப்பொருள் யுரேனியம், தோரியம் ஆகிய உலோகங்களிலிலிருந்துதான் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால் முதன்முறையாக பிட்ச்ப்ளெண்டிலிருந்து அதைப் பிரித்தெடுத்தார் மேரி. அதற்கு தன் தாய்நாடான போலந்தை நினைவுறுத்தும் விதமாக ‘பொலோனியம்’ என்று பெயரிட்டார்! விஞ்ஞானத்திலும் மிளிர்ந்தது அவரது நாட்டுப்பற்று!

அவருடைய சோதனைகள், போராட்டங்களின் இறுதியாக அவர் கண்டு பிடித்ததுதான் ரேடியம். 19ம் நூற்றாண்டின் அதி முக்கியமான கண்டுபிடிப்பு அதுதான். புற்றுநோயைக் குணப்படுத்த அது பயன்படுத்தப்பட்டது. எக்ஸ்ரே படங்கள் எடுக்கவும் பயன்படுத்தப்பட்டது. இரவு நேரங்களில் தன் சோதனைச்சாலைக்குள் மேரி நுழைந்தபோதெல்லாம் அங்கிருந்த குழாய்களும் பாத்திரங்களும் ரேடியத்தால் ஒளிர்ந்தன! அந்த அற்புத ஒளிபொருந்திய காட்சியில் மெய்மறந்து நிற்பார் மேரிக்யூரி. முதல் உலகப்போரின்போது நகரும் மருத்துவமனைகளில் எக்ஸ்ரே எடுத்துக்கொடுக்கும் உதவிகளையும் மேரிக்யூரியே  செய்துள்ளார்.

1903. இந்த ஆண்டுதான் மேரிக்யூரி தன் முனைவர் பட்ட ஆய்வுக்கான கட்டுரையைச் சமர்ப்பித்தார். அதுமட்டுமல்ல. இயற்பியலுக்காக மேரிக்யூரி தம்பதியருக்கும் ஹென்றி பெக்கொரலுக்கும் நோபல் பரிசு கிடைத்தது. மேரிக்யூரியும் அவரது கணவரும் அந்த ஒரு நாளில் உலகப்புகழ் பெற்றனர். உலகெங்கிலுமுள்ள வீடுகளில் மேரி க்யூரி என்ற பெயர் பிரபலமானது. ஆனால் அந்தப்பரிசைப் பெறுவதற்காக ஸ்டாக்ஹோமுக்குப் போகக்கூட அவர்களிடம் வசதி இல்லை. இரண்டாண்டுகள் கழித்துத்தான் பியர் சென்று ஏற்புரை நிகழ்த்தினார்!
 


ஆனால் இந்த சாதனைகளுக்காக அவர்கள் கொடுத்த விலை மிகப்பெரியது. ரேடியத்தைத் தொட்டுத்தொட்டு, அதைக்கையிலும் பையிலும் போட்டுப்போட்டு மேரியின் கைகளில் தீக்காயம் பட்ட மாதிரி வடுக்கள் ஏற்பட்டன. பின்னாளில் ரத்தப்புற்று நோயால் அவர் காலமாவதற்கும் ரேடியம் காரணமாக இருந்தது. பியருக்கு கைகளும் கால்களும் நடுங்க ஆரம்பித்தன. ஒருநாள் அவர் சாலையில் போய்க்கொண்டிருந்தபோது கால் நடுங்கி வேகமாகச் சென்றுகொண்டிருந்த குதிரை வண்டிச்சக்கரத்தில் விழுந்து அங்கேயே அவர் உயிர் பிரிந்தது. அதிகமான ரேடியப்புழக்கம் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பது மேரிக்யூரி தம்பதியினருக்குத் தெரியாமலிருந்ததுதான் சோகம்.

மேரிக்யூரி தம்பதியினர் தம் கண்டுபிடிப்புக்கான உரிமம் (patent) பெற்றிருக்கலாம். ஆனால் விஞ்னானக் கண்டுபிடிப்புகள் மனிதகுலத்துக்குச் சொந்தமானவை. அவைகளுக்கு யாரும் உரிமைகொண்டாடக்கூடாது என்று சொல்லி தம்பதியினர் மறுத்துவிட்டனர். பல ஆண்டுகால உழைப்பில் தன் சோதனைச்சாலையில் ஒரு கிராம் ரேடியத்தைச் சேர்த்துவைத்திருந்தார் மேரிக்யூரி. அதன் மதிப்பு ஒரு லட்சம் டாலர்கள் என்று அவருக்குத் தெரியாது! மிஸ்ஸி என்ற அமெரிக்க ஊடகப்பெண்தான் மேரிக்யூரியை பேட்டி எடுத்து அமெரிக்க அதிபர் வாரன் ஹேஸ்டிங்க்ஸ் கையால் இன்னொரு கிராம் ரேடியத்தைப் பெற்றுக்கொள்ளும்படிச் செய்தார். பின்னர் மிஸ்ஸிதான் சில ஆண்டுகள் கழித்து மறுபடியும் இன்னொரு கிராம் ரேடியம் பெற வழிவகுத்தார்.

கணவரின் இறப்புக்குப் பிறகு இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு மேரி சிரமப்பட்டார். ஆனாலும் அவர் ஒரு நல்ல தாயாகவே  இருந்தார். பியரின் இறப்புக்குப் பிறகு தனக்குக் கொடுக்கப்பட்ட பென்ஷனையும் வேண்டாமென்று மறுத்துவிட்டார் மேரி! ஆனால் பல்கலைக்கழகம் அவருக்கு பியர் வகித்த பேராசிரியர் பதவியைக் கொடுத்தது. பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றிய முதல் பெண்மணி மேரிதான். கணவரை இழந்தபோதும் அவரது மன உறுதி குலைந்துவிடவில்லை. 1911-ல் வேதியியல் பங்களிப்புக்காக மீண்டும் நோபல் பரிசு பெற்றார் மேரிக்யூரி! இரண்டு நோபல் விருதுகளை இந்த உலகில் பெற்ற ஒரே பெண் மேரிக்யூரிதான்.

1934ம் ஆண்டு மேரிக்யூரி ரத்தப்புற்று நோயால் மறைந்தார். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு அவரது மகள் ஐரீனும் அவரது கணவரும் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றனர்! குடும்பம் என்றால் இப்படி இருக்கவேண்டும்! ‘உலகப்புகழ் பெற்றபிறகும் அதனால் பாதிக்கப்படாமல் எளிமையாகவே இருந்த பெண் மேரிக்யூரி’ என்று ஐன்ஸ்டைன் சொன்னது சத்தியமான சொற்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com