Enable Javscript for better performance
குஞ்சாலி மரைக்காயர்கள்- Dinamani

சுடச்சுட

  குஞ்சாலி மரைக்காயர்கள்

  By நாகூர் ரூமி  |   Published on : 09th June 2015 10:40 AM  |   அ+அ அ-   |    |  

  சா
  த்தானுக்குப் பல பெயர்கள் உண்டு. அதில் ஒன்று வாஸ்கோடகாமா. ஆமாம். வாஸ்கோடகாமா போர்ச்சுக்கலில் இருந்து முதன்முறையாக இந்தியாவுக்குக் கடல் மார்க்கத்தைக் கண்டுபிடித்தார், கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் இறங்கினார் – இப்படித்தான் பள்ளிக்கூட சரித்திர நூல்களில் படித்திருக்கிறோம். ஆனால் உண்மையான வரலாறு வேறுவிதமான முகத்தைக் காட்டுகிறது.

  கடல்வழி காணுதல், வாணிபமெல்லாம் அவனுக்கு கொசுறு நோக்கங்கள்தான். நாடு பிடிப்பதும், போர்ச்சுக்கீசிய காலனியாக இந்தியாவை மாற்றுவதும்தான் பிரதான நோக்கங்கள். அதற்காக கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மிருகத்தனமாக மூர்க்கமான வன்முறை என அத்தனை கொடுமைகளையும் அப்பாவி இந்தியர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டு மகிழ்ந்த சாத்தான் அவன் என்று வரலாற்று நூல்கள் கட்டியம் கூறுகின்றன, ஆதாரங்களுடன்.

  அந்த போர்ச்சுக்கீசிய சாத்தான்களோடு போரிட்டு வென்று வரலாறு படைத்து, உயிர்த்தியாகமும் செய்தவர்கள் மூன்று வீரர்கள். அவர்கள் மூவருமே குஞ்சாலி மரைக்காயர்கள் என்ற பட்டப் பெயர்களால் அறியப்படுகிறார்கள். நான்கு பேர் என்றும் கூறப்படுகிறது. (குட்டி அஹ்மது அலி முதல் குஞ்ஞாலி, குட்டி போக்கர் அலி இரண்டாம் குஞ்சாலி, பட்டு குஞ்சாலி  மூன்றாமவர், முஹம்மது அலி என்பவர் நான்காம் குஞ்சாலி என்று விக்கி கூறுகிறது). ‘முதல் சுதந்திரப் போராட்ட வீரர்கள்’ என்று அவர்களை வர்ணிக்கிறார் வரலாற்றாசிரியர் மஹதி.
  Kunjali_Marakkar_Home Kozhikkod.JPG   எல்லா குஞ்சாலிகளுமே தாய்நாட்டுக்காக அந்நியரோடு போரிட்டு உயிர்த்தியாகம் செய்தவர்கள் என்பது மட்டும் நிச்சயம். அதில் ஒருவருக்கு நாகூர் மகான் ஆண்டகை போர்ப்பயிற்சி கொடுத்து தயார் செய்திருக்கிறார்கள். அந்த குஞ்சாலியின் நினைவாக இன்றும் நாகூரில் தர்காவுக்கு அருகிலேயே குஞ்சாலி மரைக்காயர் தெரு உள்ளது. அந்த தியாகிகளின் சுருக்கமான வரலாற்றைப் பார்க்கும் முன் வாஸ்கோடகாமா கோழிக்கோட்டில் (Calicut) வந்திறங்கியபோது என்னென்ன செய்தான் என்று கொஞ்சம் பார்த்துவிடலாம்.

  நான்கு கப்பல்களில் காமா கிளம்பியபோதே ஒவ்வொரு  கப்பலிலும் போர்க்கருவிகளும், இருபது பெரிய பீரங்கிகளும் இருந்தன! ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வழி தெரியாமல் பயணம் செய்துகொண்டிருந்தபோது வழியில் தென்பட்ட முஸ்லிம்களுடைய சரக்குக் கப்பலைக் கொள்ளையடித்து, எதிர்த்தவர்களையெல்லாம் கொன்று, எஞ்சியிருந்த பதினேழு அரேபியர்களயும் ஒரு பெண்ணையும் அடிமைப்படுத்தினான்.

  கிபி 1498, மே 20, ஞாயிறு. கேரளாவின் கோழிக்கோட்டில் ‘கப்பற்கடவு’ என்ற இடத்தில் காமா கரையிறங்கிய நாள் அது. இந்தியாவுக்கு, குறிப்பாக தென்னிந்தியாவுக்கு, போர்ச்சுக்கீசிய சனி பிடித்தது அன்றுதான். கோழிக்கோடு அல்லது கள்ளிக்கோட்டை மன்னர்களை சாமூதிரி என்று அழைப்பர். எகிப்திய ஃபரோவாக்கள், ரஷ்ய ஜார்கள் போல. ஆனால் அவர்களைப்போல சாமூதிரிகள் கொடுங்கோலர்கள் அல்ல. நல்லவராகவோ அல்லது முட்டாளாகவோ இருந்ததுதான் அந்த மன்னர்களின் சாமூதிரி(கா) லட்சணம்!

  அளவிலும் அந்தஸ்திலும் குறைவாக இருந்த காமாவின் அன்பளிப்புகள் மன்னரைக் கவரவில்லை. அவன் கொண்டுவந்த டாம்பீகப் பொருள்கள் இந்தியச் சந்தையில் வாங்கப்படவில்லை. அவன் விரும்பிய நறுமணப் பொருள்களைக் கொள்முதல் செய்ய பணமில்லாமல் போனது. ஒத்துக்கொண்டபடி சுங்கவரியும் செலுத்தாமல் இரவோடிரவாக தப்பித்து கண்ணனூருக்குப் போய்ச் சேர்ந்தான். வாஸ்கோடகாமா செய்த முதல் அயோக்கியத்தனம் அது.

  இரண்டாம் முறையாக அவன் இந்தியாவுக்கு இருபது போர்க்கப்பல்களில் வந்தான். அவற்றில் 800 போர்வீரர்களும் ஆயுதங்களும் பீரங்கிகளும் இருந்தன. கள்ளிக்கோட்டையை நோக்கி அவன் வந்துகொண்டிருந்தபோதுதான் அந்த அக்கிரமம் நிகழ்த்தப்பட்டது. கள்ளிக்கோட்டையைச் சேர்ந்த முஸ்லிம் வணிகருடைய பெரிய கப்பல் எதிர்ப்பட்டது. அதில் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொண்ட 400 ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கப்பலின் சொந்தக்காரர், எகிப்திய சுல்தானின் தூதர் ஜாஃபர்பேக் ஆகியோர் இருந்தனர். அக்கப்பலைக் கொள்ளையடித்து மூழ்கடித்துவிடும்படி தன் ஆட்களுக்கு காமா உத்தரவிட்டான்.

  கப்பலைக் கள்ளிக்கோட்டைக்குப் போக அனுமதித்தால் நிறைய பணமும், பொருளும் தருவதாக கப்பலில் இருந்தவர்கள் கூறினர். ஆனால் காமா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கப்பலில் உள்ள எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள், இன்னும் வேண்டுமெனில் கள்ளிக்கோட்டைக்கு வந்தபின் தருகிறோம், பிரயாணிகளை மட்டும் உயிரோடு விட்டுவிடுங்கள் என்று அவர்கள் கெஞ்சினார்கள்.

  ஆனால் தாய்மார்கள் கதறக் கதற, அவர்கள் கைகளில் இருந்து குழந்தைகள் பிடுங்கப்பட்டு கடலில் உயிரோடு எறியப்பட்டனர். முதியவர்களின் நெஞ்சங்களில் கட்டாரிகள் பாய்ச்சப்பட்டன. பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். எல்லாம் முடிந்த பின் கப்பல் தீக்கிரையாக்கப்பட்டது. தூரமாக நின்றுகொண்டிருந்த தன் கப்பலிலிருந்து தொலைநோக்கியில் அதைப் பார்த்து மகிழ்ந்துகொண்டிருந்தான் வாஸ்கோடகாமா! கப்பலிலிருந்து குதித்து உயிர் தப்பிக்க நீந்தியவர்களை குறிவைத்துச் சுடும்படி உத்தரவிட்டான். ஒருவர்கூட உயிர் தப்பவில்லை. தென்னிந்தியக் கடல் மார்க்கத்தில் அதுவரை நிகழ்ந்திராத கொடூரச்செயல் அது.

  அதுமட்டுமல்ல. கள்ளிக்கோட்டைக்கு வந்த 24 கப்பல்களைச் சூறையாடினான். அதிலிருந்த 800 பேர்களைச் சிறைப்படுத்தி அவர்களின் மூக்குகளை அரிந்தான். அவர்களை ஒருவர்மீது ஒருவராக வைத்துக் கட்டி தீக்கிரையாக்கினான். மன்னர் அனுப்பிய தூதரின் காதுகளையும் மூக்கையும் கைகளையும் வெட்டி ஒரு படகில் போட்டு, ‘இவனைக் கறி சமைத்துச் சாப்பிடுங்கள்’ என்று எழுதி மன்னருக்கு அனுப்பினான்! 

  இப்படியாக அவனது கொடுமைகள் பல ஆண்டுகள் தொடர்ந்தன. ஒருமுறை இப்படி உறுப்புகள் அறுக்கப்பட்டவர்களின் கால்களையும் கட்டி, அவர்கள் முகத்தில் சம்மட்டியால் அடித்து அவர்கள் பற்கள் வயிற்றுக்குள் போகும்படிச் செய்யுங்கள் என்று உத்தரவிட்டான்!

  இக்கொடுமைகள் பற்றி ஓ.கே.நம்பியார், டான்வர், வைட்வே, மஹதி போன்ற வரலாற்று ஆசிரியர்கள் விரிவாக எழுதியுள்ளனர். வாஸ்கோடகாமாவைத் தொடர்ந்துவந்த காப்ரால், அல்புகர்க், ஆல்மீடா போன்ற போர்ச்சுக்கீசிய சாத்தான்களும் இதேவிதமாகத்தான் நடந்துகொண்டன. அவர்கள் கொடுத்த பணத்துக்காகவும், பண்டங்களுக்காகவும், ஆதரவுக்காகவும், அதிகாரத்துக்காகவும் இந்திய மன்னர்கள் விலைபோனதும், நாட்டைத் துண்டாட அனுமதித்ததும்தான் சரித்திரக்கொடுமை. 

  முதலாம் குஞ்சாலி மரைக்காயர்

  குஞ்சாலி மரைக்காயரும் அவரது முன்னோர்களும் சாமூதிரிகளின் கடற்படைத் தளபதிகளாக இருந்தவர்கள். வீரம், விவேகம், கடல் அனுபவம், செல்வம், செல்வாக்கு மிகுந்த குடும்பம் அவர்களது. போர்ச்சுக்கீசியரது அட்டூழியங்கள் அவரைக் கொதிப்படையச் செய்தன. அவர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று தீர்மானித்தார். மன்னரிடம் சென்று கப்பல் கட்டவும், ஆயுதங்கள் சேகரித்துப் போராடவும் அனுமதி கோரினார். அகமகிழ்ந்த மன்னர் அனுமதியளித்தார்.

  புதிய கப்பல்கள் தயாராயின. ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டன. வீரர்கள் பயிற்சி எடுத்துக்கொண்டனர். எல்லாம் ரகசியமாக நடந்தது. நள்ளிரவில் நடுக்கடலின் உள்ளேயே நீந்திச் சென்று போர்ச்சுக்கீசியரின் பெரிய கப்பல்களில் ஓட்டைகள் போடப்பட்டன. திடீர் திடீரென்று தம் கப்பல்கள் நடுக்கடலில் மூழ்குவதன் காரணம் புரியாமல் போர்ச்சுக்கீசியர் திகைத்தனர்.

  குஞ்சாலி மரைக்காயரின் கேந்திரமான பொன்னானியில் நடந்த கடும் சண்டையில் போர்ச்சுக்கீசியருக்குப் பயங்கரத் தோல்வி. கவர்னர் அல்மீடாவின் மகன் அதில் உயிரிழந்தான். ஆப்பிரிக்கா சென்ற அல்மீடாவும் கொல்லப்பட்டான். அதன்பிறகு கவர்னரான அல்புகர்க் கோழிக்கோட்டுக்குப் படையெடுத்துச் சென்றான்.

  குஞ்சாலி அப்போது கொரில்லாப் போர்முறையைப் பயன்படுத்தினார். கப்பல்களை துறைமுகத்தில் விட்டுவிட்டு சிலருடன் மன்னரைப் பார்க்க அல்புகர்க் சென்றபோது எதிர்பாராத தாக்குதலை  நிகழ்த்தினார் குஞ்சாலி. குஞ்சாலியின் அம்பு மழை. பதிலுக்கு போர்ச்சுக்கீசியரின் குண்டு மழை. கடைசியில் காலில் சுடப்பட்டு அல்புகர்க் தூக்கிச் செல்லப்பட்டான். கோழிக்கோட்டைக் கைப்பற்றலாம் என்ற அல்புகர்க்கின் கனவு தகர்ந்தது. கோழிக்கோட்டை அழிவிலிருந்து காப்பாற்றினார் குஞ்சாலி மரைக்காயர்.

  அங்கு ஏற்பட்ட தோல்வியில் எந்த ஊரையாவது வெல்ல வேண்டும் என்ற வெறியில் கோவா சென்று தாக்கினான் அல்புகர்க். அங்கு அவன் நடத்திய வெறியாட்டத்தில் பல ஆண்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். உறுப்புகள் அறுக்கப்பட்டனர். முக்கியமாக முஸ்லிம்கள் தேடித்தேடி கொல்லப்பட்டனர். தன் படையில் ஏராளமான மலையாளிகளையும் அல்புகர்க் வைத்திருந்தான்! ‘நம் நாட்டு மக்களின் வீரம் யாருக்கும் வாடகைக்குக் கிடைக்கக்கூடியதாக இருந்தது’ என்று வருத்தப்படுகிறார் வரலாற்று ஆசிரியர் மஹதி!

  விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சாமூதிரி மன்னரை அடுத்துவந்த மன்னர் அல்புகர்க்குடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். மனம் நொந்தார் குஞ்சாலி. நேரடியாகக் களம் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தார்.

  இருநூறு போர்க்கப்பல்களும் ஏராளமான வீரர்களும் தயாராயினர். இரவு நேரங்களில் எதிர்பாராத தருணத்தில் கொரில்லாப் போர்முறை நிகழ்த்தி, பல போர்ச்சுக்கீசிய கப்பல்களை மூழ்கடித்தார். கள்ளிக்கோட்டையில் இருந்த போர்ச்சுக்கீசியரின் பண்டகசாலையை ஐந்து மாதங்கள் முற்றுகையிட்டு செயலிழக்கச் செய்தார். கொச்சி, பொன்னானி, பர்கூர், செதுவாய் ஆகிய இடங்களிலும் பெரும் போர்கள் நடந்தன. போர்ச்சுக்கீசியருக்குப் பெரும் அவமானமும், தோல்வியும், சேதமும் ஏற்பட்டது.

  ஸ்தம்பித்துப் போயிருந்த இந்தியக் கடல் வாணிபம் மீண்டும் தொடங்கியது. கோழிக்கோட்டிலிருந்து பொன்னானிக்கு வரவே போர்ச்சுக்கீசியர் பயந்தனர். கொச்சி, கோவா ஆகிய ஊர்களிலிலிருந்த போர்ச்சுக்கீசியர்களின் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. குஞ்சாலி மரைக்காயரின் முதல் மாபெரும் வெற்றி அது.

  233px-Marakkar-Navy.JPG   கொழும்பில் குஞ்சாலி மரைக்காயருக்கும் போர்ச்சுக்கீசியருக்கும் நடந்த கப்பல் சண்டையில் குண்டு பட்டு அல்லாஹு அக்பர் என்ற முழக்கத்துடன் உயிர் துறந்தார் குஞ்சாலி மரைக்காயர். இலங்கை மன்னரின் சகோதரரிடம் அடைக்கலம் புகுந்த குஞ்சாலியின் வீரர்களையெல்லாம் போர்ச்சுக்கீசிய உத்தரவின்படி கொன்று அவர்களுடைய தலைகளை மன்னரிடமும் போர்ச்சுக்கீசியரிடமும் காட்ட அனுப்பிவைத்தான் அந்த துரோகி. குஞ்சாலி இல்லாத துணிச்சல் அந்த கொடுமைக்கு வித்திட்டது. 

  இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர்


  இவரும் சாமூதிரியின் கடற்படைத் தளபதியாயிருந்தவர்தான். இவருடைய வீரதீரச் செயல்களினாலும் போர்ச்சுக்கீசியர் பெரும் துன்பத்துக்கு ஆளாயினர். கடைசியில் மன்னருக்குப் பரிசுகள் கொடுத்து அவரைத் தம்பக்கம் இழுத்துக்கொண்டனர். நிலமையை உணர்ந்துகொண்ட இரண்டாம் குஞ்சாலி சாமூதிரியின் அனுமதியுடன் தன்னுடைய நிலத்தில், தன் சொந்தப்பணத்தில் ஒரு பெரும் கோட்டையைக் கட்டினார்.

  ஏழடி அகலமும் உயரமும் கொண்ட, எந்த பீரங்கியாலும் துளைக்கமுடியா உறுதி கொண்ட ஒன்றுக்குப் பின் ஒன்றான இரண்டு சுவர்கள். கடல்வழியாக அதை யாரும் அணுகா வண்ணம் அகழி ஒன்றும் தோண்டப்பட்டது. கோட்டைக்குள் வீரர்களுக்குப் பயிற்சி. கோட்டையைச் சுற்றி பலமான பாதுகாப்பு. தனி ராஜ்ஜியம்போல அது இயங்கியது. கோட்டை கட்டி முடிக்கப்பட்ட கொஞ்ச காலத்தில் குஞ்சாலி இறந்துபோனார். அவரது மகன் மூன்றாம் குஞ்சாலி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

  மூன்றாம் குஞ்சாலி மரைக்காயர்

  இவர் தலைமையில் பொன்னானியில் நடந்த சண்டையில் போர்ச்சுக்கீசிய கப்பல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. அவர்களின் கோட்டைகளை இடித்துத் தரைமட்டமாக்கினார். தங்கள் நிலமை மோசமாகிக்கொண்டே போவதை உணர்ந்த போர்ச்சுக்கீசியர், ஒரு பாதிரியார் உதவியுடன் சதி செய்தனர். மன்னரை ஒழித்துவிட்டு ஆட்சியைப் பிடிக்கவே குஞ்சாலி வலிமையான கோட்டையைக் கட்டியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதை மன்னரும் நம்பினார். விளைவு? கடல் வழியாக போர்ச்சுக்கீசியப் படையும் தரை வழியாக மன்னரின் படையும் குஞ்சாலியின் கோட்டையை முற்றுகையிட்டன! தன் தளபதியின் கோட்டையைத் தானே முற்றுகையிட்ட முட்டாள் மன்னன் சாமூதிரி!

  மூன்று மாத முற்றுகைக்குப்பின் போர் மூண்டது. அதில் குஞ்சாலியே வென்றார். நாற்பது தளபதிகளும், பல உயிர்களும் கப்பல்களும் அழிந்த பிறகு போர்ச்சுக்கீசியர் ஓடிவிட்டனர். மன்னரின் படைகளும் பின்வாங்கின. தன் நாட்டுள்ளேயே தன் பிரஜையைக்கூட வெல்லமுடியாத மன்னனாகிப்போனான் சாமூதிரி. அந்த நிகழ்ச்சி குஞ்சாலியின் புகழைக் கூட்டியது.

  புதிய போர்ச்சுக்கீசிய தளபதியும் சாமூதிரியும் மீண்டும் கூடிப் பேசி சதித்திட்டம் தீட்டினர். மீண்டும் முற்றுகை, மீண்டும் யுத்தம். இந்த முறை குஞ்சாலி முடிந்தவரை போராடினார். கோட்டைக்குள்ளேயே இருக்க நேர்ந்ததால், வெளியிலிருந்து அவருக்கு எந்த உதவியும் கிடைக்க வழியில்லாமல் இருந்தது. உணவும் தண்ணீரும் ஆயுதங்களும் குறைந்துபோயின. பெண்களையும் குழந்தைகளையும் நினைத்து சமாதானக்கொடி ஏற்றினார் குஞ்சாலி. ஆனால் அவரை நம்பவைத்து வெளியில் வரவழைத்து துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவரை கோவாவுக்குக் கொண்டுசென்று மக்கள் முன்னிலையில் அவரது தலையை வெட்டி மகிழ்ந்தனர் போர்ச்சுக்கீசியர்கள்.

  குஞ்சாலி மரைக்காயர்களுக்கு மரியாதை

  Kunhali-Sword.JPG   கொச்சினில் உள்ள பல்கலைக் கழகத்தில் உள்ள ஒரு துறைக்கு ‘குஞ்சாலி மரைக்காயர் ஸ்கூல் ஆஃப் மரைன் எஞ்சினியரிங்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

  மும்பையில் உள்ள இந்திய கடற்படையின் ஒரு பிரிவுக்கு ‘ஐ.என்.எஸ். இரண்டாம் குஞ்சாலி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

  மூன்று ரூபாய்க்கான கலர் ஸ்டாம்ப் ஒன்று கடந்த 2000 டிசம்பர் 17-ம் தேதி குஞ்சாலியின் கடல் படையை நினைவூட்டும் விதமாக வெளியிடப்பட்டது.

  கோழிக்கோட்டில் அவர் குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு வீட்டை குஞ்சாலி நினைவகமாக அரசு வைத்துள்ளது. அதில் அவர் பயன்படுத்திய வாள்கள், போர்க்கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

  1967-ம் 1968-ம்  ‘குஞ்சாலி மரைக்கார்’ என்ற பெயரில் இரண்டு மலையாளப் படங்கள் எடுக்கப்பட்டன.

  இறுதிக் குறிப்பு

  தமிழ்நாட்டின் கடற்கரையோரமாக வாழும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் மரைக்காயர்கள். அந்தக் காலத்தில் மரக்கலத்தில் சென்று வாணிபம் செய்ததால் அவர்கள் ‘மரக்கலராயர்கள்’ என்று அழைக்கப்பட்டு பின்னாளில் ’மரைக்காயர்’ என்று அது சுருங்கியது என்று சொல்வர். அவர்களில் ஒருவர்தான் கேரளா சென்று குடியேறியிருக்க வேண்டும். அதனால்தான் ‘குஞ்சாலி’ என்ற மலையாளப் பெயரோடு ‘மரைக்காயர்’ என்ற பெயரும்  இணைந்துள்ளது என்பது வரலாற்றாசிரியர்களின் கணிப்பு. நாகூரில் இன்றும் குஞ்சாலி மரைக்காயர் தெரு இருப்பது இதன் குறிப்பு.

  இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த நாளையும் நேரத்தையும் நாம் கொண்டாடுகிறோம். ஆனால்  நம் சுதந்திரப் போராட்டத்தின் வேர்கள் நெடுந்தொலைவில், நாடெங்கிலும் பரவி மறைந்துள்ளன. அவற்றினுள் அறியப்படாத, ஆனால் அறியப்பட வேண்டிய குஞ்சாலி மரைக்காயர்கள், அஷ்ஃபாகுல்லாகான்கள், பகத்சிங்குகள், ராம்பிரசாத்துகள் மறைந்துள்ளார்கள். மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட, கிழிக்கப்பட்ட அந்த வரலாற்றின் பக்கங்களை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் படிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

  இக்கட்டுரை எழுத உதவியவை

  1. The Portuguese in India – F.C. Danvers. W.H.Allen & Co. London, 1894.

  2. The Rise of Portuguese Power in India. R.S.Whiteway. Archibald Constable and Co. 1899

  3. முதல் சுதந்திரப் போர் வீரர் குஞ்சாலி மரைக்காயர் – மஹதி. நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, 2005

  4. www.wikipedia.org 

   


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp