சிறையிலும் சுதந்திரமாக இருந்தவன்

ஒருநாள் மாலை தன் அப்பாவோடும் அவரது நண்பரோடும் ‘வாக்கிங்’ போய்க் கொண்டிருந்தான் அந்த மூன்று வயதுப் பையன். கொஞ்சதூரம் போனதும் மகனின்


ருநாள் மாலை தன் அப்பாவோடும் அவரது நண்பரோடும் ‘வாக்கிங்’ போய்க் கொண்டிருந்தான் அந்த மூன்று வயதுப் பையன். கொஞ்சதூரம் போனதும் மகனின் காலடிச்சப்தம் கேட்கவில்லையே என்று சட்டென்று திரும்பிப் பார்த்தார் அப்பா. பையன் தரையில் அமர்ந்து எதையோ விதைப்பது மாதிரி என்னவோ செய்துகொண்டிருந்தான்.

“அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?”

“துப்பாக்கி வளர்க்கிறேன் அப்பா. கொஞ்ச நாளில் இந்த வயல் பூராவும் துப்பாக்கிகள் முளைத்து வளர்ந்திருக்கும்” என்று கூறினான்!

ஒரு செடியைப்போல துப்பாக்கிகளையும் பெரிய எண்ணிக்கையில் வளர்த்து உருவாக்க முடியும் என்று அந்தச் சின்னப்பையன் எண்ணியது சிறுபிள்ளைத்தனத்தின் விளைவு அல்ல. அது ஒரு புரட்சிக்காரனின் சிந்தனை. A revolutionary in the making. ஆமாம். பிற்காலத்தில் இந்திய விடுதலை வரலாற்றில் மறக்க முடியாத ஆளுமையாக மாறிப்போனவன் அவன்.

நாலாவது படித்துக்கொண்டிருந்தபோது ஒருநாள், ’நீ என்னவாகப் போகிறாய்?’ என்று நண்பர்களிடம் கேட்டான். நான் டாக்டர், நான் எஞ்சினியர், நான் வக்கீல், நான் அரசு அதிகாரி என்று ஒவ்வொருவரும் அவரவர்க்குப் பிடித்த பதிலைச் சொன்னார்கள். ஆனால் நம் கதாநாயகன் என்ன சொன்னான் தெரியுமா?

”நான் பிரிட்டிஷாரை இந்த நாட்டை விட்டு விரட்டப்போகிறேன்”!

இப்படி பதில் சொன்ன அவன் – ஸாரி, அவர் --  யார்? இப்படி பதில் சொன்னவரும், மூன்று வயதில் துப்பாக்கி ’வளர்க்க’ முயன்ற சின்னப்பையனும் அவர்தான். இந்திய விடுதலைப்போரின் நாயகர்களில் ஒருவரான பகத் சிங்தான் அவர்!

பகத்சிங் குடும்பமே நாட்டுக்காக வாழ்வைத் தியாகம் செய்த குடும்பம். சர்தார் கிஷான் சிங்குக்கும் வித்யாவதிக்கும் மகனாகப் பிறந்தவர் பகத் சிங். கிஷான்சிங்கும், அவரது தம்பிகளான அஜித் சிங்கும், ஸ்வரன் சிங்கும்கூட இந்திய விடுதலைக்காகப் போராடி அடிக்கடி சிறை சென்றவர்கள். விடுதலை உணர்வு ரத்தத்தில் ஓடிக்கொண்டிருந்த குடும்பத்தில், மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார் பகத்சிங் (செப்டம்பர் 28, 1907).

அவர் பிறந்த நேரத்தில்தான் அவரது தந்தை கிஷான் சிங்கும் சிற்றப்பா ஸ்வரன் சிங்கும் சிறையிலிருந்து விடுதலையாகியிருந்தனர். மகன் பிறந்த நேரம் நல்ல நேரமாகப் பட்டது குடும்பத்துக்கு. அதனால் குழந்தைக்கு ’அதிர்ஷ்டக்காரன்’ என்று பொருள்படும்படி பகத் சிங் என்று பெயர் வைத்தனர்! பாவம்!

அம்மா வித்யாவதியின் வாழ்க்கை தொடக்கத்திலிருந்தே துயரமானது. நாட்டுக்காக அடிக்கடி கணவரும் குடும்பத்து மற்ற ஆண்களும் அடிக்கடி சிறைசென்றதால் குழந்தைகளை வைத்துத்தான் அவர் தன் வேதனைகளை மறைக்கவும் மறக்கவும் வேண்டியிருந்தது. இப்படி ஒரு சூழ்நிலை இன்று நம் மனைவிமார்களுக்கு அமைவதை நாம் விரும்புவோமா? தேசத்தைப் பற்றி அந்தக் காலத்தில் சிந்தித்தவர்களின் வாழ்க்கையை நெகிழவைக்கிறது.

புரட்சியின் பொறி

1919ல் நடந்த அயோக்கியத்தனமான ஜாலியன் வாலாபாக்  படுகொலைச் சம்பவம் உலகையே உலுக்கியது. அப்போது பகத்சிங்குக்கு பன்னிரண்டு வயது. ஆனாலும் அவர் மனதில் அந்த நிகழ்ச்சி நீங்காத வடுவை ஏற்படுத்தியது. அன்று பள்ளிக்கூடம் போகாமல் பகத்சிங் நேராக படுகொலை நடந்த இடத்துக்குச் சென்றார். சிறுவனாக இருந்ததால் எப்படியோ அங்கிருந்த காவலாளிகள் கண்ணிலிருந்து தப்பித்து உள்ளேபோய் அவர் செய்த காரியம் சிலிர்ப்பூட்டுகிறது. ஒவ்வொரு இந்திய மனதிலும் இருத்த வேண்டிய, நிறுத்த வேண்டிய நெகிழ்வான நிகழ்வு அது. அப்படி என்ன செய்தார்?

செத்துப்போனவர்களின் ரத்தக்கறை படிந்த அந்த ஈரம் காயாத மண்ணை ஒரு பாட்டிலில் நிரப்பிக்கொண்டு வீடுதிரும்பினார்.”இங்கே பாருங்கள். இதுதான் பிரிட்டிஷாரால் கொல்லப்பட்ட நம் மக்களின் ரத்தம்.  இதற்கு மரியாதை செய்யுங்கள்” என்று கூறிவிட்டு, அதை சுவரில் இருந்த மாடக்குழியில் வைத்து பூக்கள் போட்டு மரியாதை செய்தார்! எப்படியாவது வெள்ளைக்காரனை விரட்டிவிடவேண்டும் என்ற எண்ணம் உறுதியாகிக்கொண்டே போனது. நாட்டுக்காக ஏதாவது செய்யவேண்டுமென்று பகத்சிங் முடிவெடுத்தபோது அவர் வயது பதிமூன்றுதான். தன் எண்ணத்தை அப்பாவிடம் கூறி விடுதலை இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற அனுமதி கோரினார். “அதெல்லாம் வேணாம்ப்பா. நீ படிச்சு பெரிய்ய டாக்டராகி, கோடிகோடியா சம்பாதிச்சு என்னையும் அம்மாவையும் கவனி” என்று நம் அப்பாக்களைப்போல கிஷன்சிங் சொல்லவில்லை. அவரே ஒரு போராளியாயிற்றே! மகனுக்கு அனுமதி கொடுத்தார்!

அயர்லாந்து, இத்தாலி, ரஷியா போன்ற நாடுகளில் நடந்த புரட்சிகளைப் பற்றியும், உலகப்போராளிகள் பலரின் வாழ்க்கை வரலாற்றையும் பகத்சிங் ஊன்றிப்படித்தார்.  ஆயுதங்களுடன் போராடுவதுதான் சரி என்ற முடிவுக்கு வந்தார். அந்த எண்ணத்துடன் இருந்த இளைஞர்களை ஒன்றிணைக்கும் காரியத்தில் இறங்கினார். அதற்காக லாகூரில் ’நௌ ஜவான் பாரத் சபா’ (இந்திய இளைஞர் சபை) என்ற இயக்கத்தைத் தொடங்கி அதன் செயலாளராக இருந்தார். பின்னர் ஹிந்துஸ்தான் ப்ரஜ தந்த்ரா சங்கம் (இந்தியக் குடியரசுக் கட்சி) என்ற போராளி அமைப்பைத் தோற்றுவித்தார். ஜதிந்த்ரநாத் தாஸ் என்பவர் மூலமாக குண்டு செய்வது எப்படி என்றும்  தெரிந்துகொண்டார்.

ஆனால் படிப்பை அம்போ என்று விட்டுவிடவில்லை. லாலா லஜ்பதி ராய் போன்றவர்களால் தொடங்கப்பட்ட நேஷனல் கல்லூரியில் சேர்ந்து படித்தார். வரலாறு, அரசியல் ஆகியவற்றில் அவருக்கிருந்த அறிவைக்கண்டு கல்லூரி முதல்வர் வியந்து கல்லூரியில் இடம் கொடுத்தார். பகலில் படிப்பு, மாலையில் இயக்க வேலை எனச் சென்றது அவர் வாழ்வு.

வங்காளத்தில் இருந்த சச்சிந்த்ரநாத் சன்யால் என்ற புரட்சி இயக்கத் தலைவரின் கட்சியில் சேர விரும்பினார். தலைவர் அழைத்தால் உடனே வீட்டை உதறிவிட்டுக்கிளம்பிப் போய்விடவேண்டும் என்ற நிபந்தனைக்கும் பகத்சிங் உடன்பட்டார். அந்த நேரத்தில்தான் பகத்சிங்குக்குப் பெண் பார்த்தார்கள். குறிப்பிட்ட நாளில் நிச்சயம்கூட நடப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு சில நாட்களுக்கு முன் வங்காளப் புரட்சி இயக்கத்தலைவரின் அழைப்பு வந்தது! அதுதான் விதியின் அழைப்பு. உடனே பகத்சிங்கும் கிளம்பிச் சென்றுவிட்டார்! அவர் எங்கு சென்றார் என்று கொஞ்சநாள் குடும்பத்தினர், நண்பர்கள் யாருக்குமே தெரியாது!

“என் வாழ்க்கையின் லட்சியம் இந்திய விடுதலைக்காகப் பாடுபடுவதுதான். இந்த உலக வாழ்வின் சுகங்கள் எனக்கு வேண்டாம். இந்த நாட்டுக்காக நான் தியாகம் செய்வேன் என்று என் உபநயனத்தின்போது என் சிற்றப்பாவுக்கு நான் சத்தியம் செய்துகொடுத்தேன். அதை இப்போது நிறைவேற்றப்போகிறேன்” என்று குடும்பத்தினருக்கு கடிதம் எழுதி வைத்திருந்தார்! பாட்டிக்கு ரொம்ப உடல்நிலை சரியில்லாமல் போனபோதுதான் அவர் மீண்டும் குடும்பத்தினரால் தேடி அழைத்துவரப்பட்டார்.

வீட்டுக்கு வந்த பிறகும் அவரால் சும்மா இருக்கமுடியவில்லை. விடுதலைக்காகப் போராடிய அகாலி தால் என்ற கட்சியினரின் ஊர்வலத்துக்கு உணவோ தண்ணீரோ கொடுக்கக்கூடாது என்ற மாவட்ட ஆட்சியாளரின் உத்தரவை மீறி ரகசியமாக அவர்களுக்கு உணவும் நீரும் கிடைக்க ஏற்பாடு செய்தார்!

காவல் துறையினரின் பார்வை பகத்சிங்மீது விழ ஆரம்பித்தது. அவரது அசைவுகள்கூட கண்காணிக்கப்பட்டன. சந்தேகத்தின்பேரில் அவரை போலீஸ் லாகூரில் கைது செய்து சிறையிலடைத்து சித்திரவதைகள் செய்தது. சாட்டையால் அடித்தனர். ஒரு ஈட்டியை வைத்துக் குத்திப் புண்ணாக்கினர். ஆனால் பகத்சிங் வாய் திறக்கவில்லை. கடைசியில் 60,000 ரூபாய்கள் ஜாமீன் தொகை கட்டினால் விடுதலை செய்யமுடியும் என்று ’நீதிபதி’ கூறினார்! இந்தக் காலத்தில் 200 கோடி ரூபாய் அபராதம்கூட பெரிய தொகையல்ல என்று நமக்குத் தெரியும். ஆனால் அந்தக் காலத்தில் அறுபதாயிரம் ரூபாய் என்பது நினைத்துப்பார்க்க முடியாத பெரிய தொகை. ஆனால் பகத்சிங்குக்காக அதைக் கட்ட துனி சந்த், தௌலத் ராம் என்ற இரண்டு பணக்காரர்கள் முன் வந்தார்கள்! அவர்கள் கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் பகத்சிக் விடுதலை செய்யப்பட்டார்.

ஜாமீனில் இருக்கும் காலத்தில் புரட்சிகரச் செயல்பாடுகளில் பகத் சிங் ஈடுபட்டால் அந்த இருவரும் ஜாமீன் தொகையைக் கட்டவேண்டும். ஆனால் தன் பொருட்டு மற்றவர் கஷ்டப்படுவதை பகத்சிங் விரும்பவில்லை. எனவே அமைதியாக அப்பாவின் உதவியுடன் சிறிய பால்பண்ணையை நடத்த ஆரம்பித்தார். காலை நான்கு மணிக்கு எழுந்து, பசுக்களுக்கு தீவனம் வைத்துவிட்டு, சாணம் அள்ளிவிட்டு, தொழுவத்தைச் சுத்தப்படுத்தினார். பின்பு பால்கறந்து விற்றார். இதை வெகு சிரத்தையாக செய்தார். அந்த பிரச்சனையிலிருந்து மீண்டவுடன் பால் பண்ணையை மூடிவிட்டு மீண்டும் புரட்சியில் ஈடுபட ஆரம்பித்தார். 1928ல் டெல்லிக்குச் சென்ற அவர் அதன் பிறகு வீட்டுக்குத் திரும்பி வரவே இல்லை.

இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய, 1928ல் சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தது. அது லாகூருக்கு வந்தபோது அதை எதிர்த்து நௌ ஜவான் பாரத் சபா சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெரிய ஊர்வலத்தில் வயோதிகரான லாலா லஜ்பத்ராயும் கலந்துகொண்டார். சௌண்டர்ஸ் என்ற காவல்துறை அதிகாரி லஜ்பதிராயின் நெஞ்சில் லத்தியால் ஓங்கி அடித்தார். அந்த பாதிப்பால் ஒருமாதத்தில் லாலா இறந்தே போனார்.

இளம் புரட்சியாளர்கள் கொதித்துப்போயினர். லஜ்பதிராயை அடிப்பதற்கு உத்தரவு பிறப்பித்த ஸ்காட் என்பவனைக் கொல்ல முடிவுசெய்தனர். ஆனால் ஸ்காட்டுக்கு பதிலாக லஜ்பதிராயை நெஞ்சில் அடித்த சௌண்டர்ஸ் சுட்டுக்கொல்லப்பட்டான். இதைச் செய்தது பகத் சிங்கும் அவர் நண்பரும். சௌண்டர்ஸின் மரணம் ஆங்கிலேய அரசை உலுக்கியது.

சட்ட சபையில் வீசப்பட்ட குண்டுகள்

மூன்று மாதங்களாகியும் காவல்துறையினரால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. ஏப்ரல் 1929ல் மத்திய அரசின் சட்டசபை கூடி இந்தியாவுக்குக் கேடு விளைவிக்கும் இரண்டு மசோதாக்களை அமுலாக்க முயன்றது.  அதை எதிர்த்து அரசை அச்சுறுத்த பகத்சிங்கும் கூட்டாளிகளும் முடிவுசெய்தனர். பகத்சிங்கும் படுகேஷ்வரும் டெல்லி சென்று, அங்கே சட்டசபையில் யாருக்கும் தீங்கு விளைவிக்காத குண்டுகளை வீசவேண்டும், பின்னர் கைதாகவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

1929 ஏப்ரல் 8. பகத்சிங்கும் நண்பரும் குண்டுகளை எடுத்துக்கொண்டு சட்டசபைக்குச் சென்று உயரத்தில் அமைக்கப்பட்ட ’விசிட்டர் காலரி’யில் அமர்ந்து கொண்டனர். மன்றத்தின்முன் மசோதாக்கள் அரசால் முன்மொழியப்பட்டன. உறுப்பினர்கள் அதை நிராகரித்தனர். இறுதியில் ஒருவர் எழுந்து தன் பிரத்தியேக அதிகாரத்தின் மூலம் வைஸ்ராய் அம்மசோதாக்களை அமுல்படுத்துவதாக அறிவித்தார்.

அவ்வளவுதான். குண்டுகள் அவர்களை நோக்கி மேலிருந்து கீழாக வீசப்பட்டன. அவை வெடித்து பயங்கர சப்தம் எழுப்பின. அச்சத்தில் மக்கள் இங்குமங்குமாக ஓடினர். சிலர் மயங்கி விழுந்தனர். அதே சமயம் சிவப்பு நிறத்துண்டுப்பிரசுரங்கள் மேலிருந்து வீசப்பட்டன. அதில் பிரஜ தந்த்ர சேனை பற்றிய விபரங்கள் இருந்தன. அரசாங்கம் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. ‘வாழ்க புரட்சி, ஓங்குக புரட்சி’ என்ற கோஷங்கள் சபை முழுவதும் எதிரொலித்தன.

கோஷம் வந்த திசை நோக்கி போலீஸ் விரைந்தது. அங்கே பகத் சிங்கும் பதுகேஷ்வர் மட்டுமே இருந்தனர். அவர்கள் கைகளில் துப்பாக்கி இருந்தது! அதைப்பார்த்ததும் போலீஸ் பின்வாங்கியது. ஆனால் இருவரும் கைத்துப்பாக்கிகளை கீழே போட்டுவிட்டு கைதாயினர்.

சபையில் வீசப்பட்ட குண்டுகளால் நான்கைந்து பேருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவ்வளவுதான். அந்த நிகழ்ச்சி உலகத்தின் கவனத்தை இருவர் மீதும் திருப்பியது. பகத் சிங்கும் அவரது கூட்டாளியும் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மரணமே வருக

தூக்கிலிடப்படுவோம் என்று பகத்சிங்குக்கு நன்றாகவே தெரியும். அதைப்பற்றி அவர் கவலைப்படவே இல்லை. சிறையில் கைதிகள் மோசமாக நடத்தப்பட்டதற்காக சிறைக்குள்ளேயே போராடினார். அவர்களுக்குப் போதிய உணவு கிடைக்கவேண்டும் என்பதற்காக இரண்டு மாதங்கள் உண்ணாவிரதமிருந்தார்.  அதன் பிறகுதான் அவர்கள் கோரிக்கையை கவனிப்பதாக அரசு சொன்னது.

பகத்சிங் வழக்கு நடந்தபோது பார்வையாளர்கள் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப் படவில்லை. கைதிகள் விலங்குகளோடே கொண்டுவரப்பட்டனர். ஆனால் அவர்கள் ‘நீடூழி வாழட்டும் போராட்டம்’ என்று கோஷம் போட்டுக்கொண்டுதான் உள்ளே நுழைந்தனர்.

“செவிடர்களுக்குக் காதில் விழவேண்டுமென்றால் சப்தம் பலமாக இருக்கவேண்டும். நாங்கள் குண்டுகளைப் போட்டது யாரையும் கொல்வதற்கல்ல. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குத்தான் நாங்கள் குண்டு வைத்தோம். அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். இந்தியா விடுதலை பெறவேண்டும்” என்று பகத் சிங் கூறினார்.

அவரைக் காப்பாற்றுங்கள் என்று அரசுக்கு ஆயிரக்கணக்கான முறையீடுகள் அனுப்பப்பட்டன. ஆனால் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

1931ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி பகத்சிங்கும் இரண்டு கூட்டாளிகளும் தூக்கிலிடப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. கைதிகளின் உறவினர்கள்கூட கைதிகளைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பகத்சிங் உள்ளிட்ட மூன்று பேரும், ரகசியமாக, அயோக்கியத்தனமாக, ஒருநாளைக்கு முன்னரே, மார்ச் 23ம் தேதியே தூக்கிலிடப்பட்டனர். அதுமட்டுமல்ல, சுவரை உடைத்து இரவோடு இரவாக சட்லஜ் நதிக்கரையில் அவர்களது உடல்கள் எரிக்கப்பட்டன. 

ஆனால் தூக்கிலிடப்படும் அன்றுகூட பகத்சிங்கும் கூட்டாளிகளும் உற்சாகமாக இருந்தனர். தூக்கு மேடையில் ஏறி கயிற்றை முத்தமிட்டனர். பின் அவர்களே அதை தம் கழுத்தைச் சுற்றிப் போட்டுக்கொண்டனர். ’பாரத மாதா வெற்றி பெறவேண்டும்’ என்ற முழக்கத்துடன் உயிர் துறந்தனர்.

அவர்கள் இறந்த அன்று சிறையில் யாருமே சாப்பிடவில்லை. எல்லோரும் அழுதுகொண்டிருந்தனர். நடந்தது தெரியாமல், மறுநாள் அவர்களைப் பார்க்க உறவினர்கள் வந்தனர். நடந்த அயோக்கியத்தனத்தை சில குறிப்புகளால் உணர்ந்துகொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் அந்த இடத்துக்கு விரைந்தனர். ஆனால் மூன்றுபேரின் சாம்பல்தான் மிஞ்சியிருந்தது.

பகத் சிங் பற்றியும் அவரது தியாகம் பற்றியும் ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதப்பட்டன.  “ஜெயிலில்கூட நான் சுதந்திரமாகத்தான் இருந்தேன்” என்று சொன்ன பகத் சிங் இறந்தபோது அவருடைய வயது இருபத்தி நான்கு! பெயருக்கேற்றவாறு பகத் சிங் அதிருஷ்டக்காரரல்ல. ஆனால் பகத்சிங்கின் இந்தியாவில் பிறந்த நாம்தான் அதிர்ஷ்டக்காரர்கள்.

                       ***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com