சுட்டெரிக்கும் சூரியன் - கொட்டிக் கொடுக்கும் ஆற்றல்

ஆட்சிக் கட்டிலில் இருக்கும் அரசுகள் மாறிக்கொண்டுதான் வருகின்றன. உன்னால்தான் முடியவில்லை என குறை கூறும் இவர்கள், ஆட்சிக்கு வந்தாலும்


ட்சிக் கட்டிலில் இருக்கும் அரசுகள் மாறிக்கொண்டுதான் வருகின்றன. உன்னால்தான் முடியவில்லை என குறை கூறும் இவர்கள், ஆட்சிக்கு வந்தாலும் இவர்களாலும் முடிவதில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு பல காரணங்கள் இதில் புதைந்து கிடக்கின்றன.

தினசரி பெருகிவரும் மின்சாரத்தின் தேவையை நிச்சயம் எந்த ஆட்சி வந்தாலும் 100 சதவீதம் பூர்த்தி செய்யவே இயலாது என்பது சாதாரண மக்களுக்கும் தெரிந்த விஷயம்தான்.  நீண்ட தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை… வெறும் வாய் வார்த்தைகளும், புள்ளிவிவரங்களும் நிச்சயம் மின்சாரத்தைக் கொடுத்துவிடாது.

ஆக, இன்றைய அடிப்படை தேவைகளைத் தங்கு தடையின்றி செயல்படுத்த மரபுசாரா எரிசக்தி, மாற்று எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என பல்வேறு வகையான பெயர்களில் அழைக்கப்படும் ‘சக்தி’யைப் பயன்படுத்த வேண்டும். பஞ்சபூதங்களால் மட்டும்தான் இந்த மரபு சாரா எரிசக்தியைக் கொடுக்க இயலும். முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் சக்தியை தனிப்பட்டு நாம் பயன்படுத்தினால் மட்டுமே தன்னிறைவடைந்த வாழ்க்கையை நடத்த முடியும்.

வீட்டுக்கும்–வேளாண்மைக்கும் என்னவிதமான சக்திகளைப் பயன்படுத்தலாம்… காற்றின் வேகத்தின் மூலம் கிடைக்கும் சக்தி, சாண எரிவாயு மூலம் கிடைக்கும் சக்தி, வேளாண் கழிவுகளை மூலப்பொருள்களா வைத்து ‘கேஸிபையர்’ மூலம் கிடைக்கும் சக்தி, நிலத்தில் சிற்றோடை சிறு அருவி இருந்தால், சிறு மின் நிலையம் மூலம் கிடைக்கும் சக்தி, எல்லோருக்கும் மிக எளிதில் கிடைக்கும் சூரிய சக்தி இப்படி பல ‘சக்தி’கள் வரிசை கட்டி நிற்கின்றன.

நமது நாட்டில் அளவுக்கு அதிகமாக, அபரிமிதமாக, வற்றாத ஊற்றாக கிடைக்கும் மாபெரும் சக்தி என்றால் அது சூரிய சக்திதான். உலகின் பல நாடுகளில், பருவ நிலையை பனிக்காலம், வசந்த காலம், பருவமழைக் காலம், கோடைக்காலம் எனவும், அதில் முன்பனிக் காலம், பின்பனிக் காலம், முதுவேனில் காலம், இளவேனில் காலம் என உப பிரிவுகளாகவும் பெயரிட்டு அழைக்கின்றனர்.

நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, இன்றைய பருவ காலத்தை, கோடைக் காலம், மிகக் கோடைக்காலம், கடும் கோடைக்காலம் என்றுதான் பிரிக்க வேண்டிய அவல நிலையில் இருக்கிறோம். ஓடும் மேகங்களையும், கொட்டும் மழையையும் இனி ஒளிப்பதிவு செய்துவைத்துப் பார்த்தால்தான் உண்டு. ஆண்டுக்கு 20 மழைநாள்களே மிகப்பெரிய அதிசயம். ஆகவே, நமக்கு எப்போதும் இலவசமாகக் கிடைக்கும் சுட்டெரிக்கும் சூரியன் கொட்டிக் கொடுக்கும் ஆற்றலைப் பயன்படுத்தினால் மட்டுமே வருங்காலத்தில் தப்பிப் பிழைக்க முடியும்.

மின்சாரம் ஷாக் அடிக்கிறதோ இல்லையோ, மின் கட்டணம் ஷாக் அடிக்கிறது. எப்போதும் ஏறுமுகத்தில் இருக்கும் மின் கட்டணத்தைக் குறைக்க நாமே தன்னிறைவாக மாற்று சக்தியை வீட்டுக்குக் கொண்டு வருவது மட்டுமே எளிய தீர்வு. சூரிய சக்தி மூலம் சோலார் வாட்டர் ஹீட்டர் அமைத்து சுடுதண்ணீர் தயாரிக்கும் முறை பரவாலிக்கொண்டே வருகிறது. இம்முறை, சூரிய சக்தியால் நேரடியாகத் தண்ணீரை சூடேற்றி அதை கொள்கலனில் சூடாக சேமித்து வைக்கும் முறை. அடுத்தது, சூரிய சக்தி தகடுகள் மூலம் நேர் மின்சாரத்தை (DC) உற்பத்தி செய்து அதனை மின் கலன்களில் சேமித்து அதனை மாற்று மின் சக்தியாக (AC) மாற்றி வீடுகளுக்குப் பயன்படுத்தும் முறை. வீடுகளைப் பொருத்தமட்டில், இவை இரண்டும்தான் இப்போது வெற்றிகரமாக இயங்குகின்றன.

வீடுகளுக்காவது என்றாவது ஒருநாள் மின் வெட்டு இல்லாமல் நூறு சதவீதம் மின்சாரம் கிடைக்க வாய்ப்பு இருக்கலாம். ஆனால், இலவசமாகத் தருகிறோம் என்ற போர்வையில், விவசாயத்துக்குத் தேவையான மும்முனை மின்சாரம் இருபத்து நான்கு மணி நேரம் எப்போதும் கிடைக்க வாய்ப்பே இல்லை. ‘இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்டா. இவன் ரொம்ப நல்லவன்டா’ என்ற நிலையில்தான் விவசாயி எப்போதும் இருக்கிறான்.

இருக்கிற மின் இணைப்புகளுக்கு ஒழுங்கான முறையில் மின்சாரம் கொடுக்க முடியாதவர்களால் புதிதாக விவசாய மின் இணைப்பு வழங்க இயலுமா? சான்ஸே இல்லை. புதிய விவசாய மின் இணைப்பு வாங்க மனு செய்ய தேவையான ஆவணங்களைத் தயார் செய்வதற்கு முன்னரே விவசாயியின் நிலை உன்பாடு என்பாடு என்றாகிவிடும். அதையும் தாண்டி, புதிய இணைப்புக்கு பதிவு செய்துவைத்தால், உங்களுக்கு விவசாய மின் இணைப்பு கிடைக்க சில தசாப்தங்கள் ஆகிவிடும். அதற்குள் தண்ணீரும், நம் ஆர்வமும் வற்றிவிடும்.

புதிய தலைமுறை இளைஞர்கள் பலர் தங்கள் எதிர்காலத்தை ‘வேளாண்மை’யில் என்பதாக முடிவு செய்து நகரத்தை விட்டு நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிள்ளனர். வண்ண வண்ணக் கனவுகளோடு கழனியில் கால் வைக்கும் அவர்களின் முன் நிற்கும்  பூதாகரமான விஷயமே மின்சாரம்தான். மின் இணைப்புக்காக மின்வாரியத்துடன் போராடியே இவர்களின் இளமை வீணாகிவிடும். இவர்களைப் போன்ற புதிய விவசாயிகளுக்கும், மின்வாரியத்துடன் போராடி ஓய்ந்து சலித்து நிற்கும் பாரம்பரிய விவசாயிகளுக்கும் புதிய மாற்று திட்டம்தான் சூரிய சக்தி மின் மோட்டார்.

சூரிய சக்தியை ஒரு மாற்று சக்தியாப் பயன்படுத்தத் தொடங்கி பல ஆண்டுகள் ஆனாலும், தற்போது அதன் தேவையை உணர்ந்தவர்கள் பெருகிவிட்டனர்.

ஒரு சூரிய சக்தி மின் மோட்டாரை இயக்குவதற்கு மூன்றுவிதமான பொருள்கள் தேவை. சூரிய ஒளியைப் பெற்று மின்சாரமாக மாற்றும் சோலார் பேனல்கள் முதலாவது அமைப்பு. நமது பயன்பாட்டுக்குத் தேவையான அளவு சோலார் பேனல்களை நிறுவ வேண்டும். ஒரு குதிரை சக்தி மின் மோட்டார் 0.75 (KW) கிலோ வாட் மின்சாரத்தைக் கொண்டு இயங்கும். ஆனால், 0.75 KW சோலார் பேனல் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வைத்து ஒரு குதிரை சக்தி மின் மோட்டாரை இயக்க முடியாது. ஸ்டார்ட்டிங் லோடு எனும் கூடுதல் விசை தேவை என்பதால், சுமார் ஒரு கிலோவாட் சோலார் பேனலாவது தேவை. ஆகவே, சோலார் மின்சாரத்தில் ஒரு குதிரை சக்திக்கு ஒரு கிலோவாட் மின்சாரம் என ஒரு ‘தம்ப் ரூல்’ வைத்துக்கொள்ளலாம்.

சூரியன் ஒருபோதும் சரியான கிழக்கு திசையில் உதித்து, சரியான மேற்கு திசையில் மறைவதில்லை. உத்ராயண காலம், தட்சிணாயண காலம் என சூரியன் உதிக்கும் திசையை நமது முன்னோர்களே கணித்து வைத்திருந்தனர். அது அறிவியலும்கூட. வடகிழக்கில் உதித்து தென்மேற்கில் மறைவது உத்ராயணம் எனவும், தென்கிழக்கில் உதித்து வடமேற்கில் மறைவது தட்சிணாயண காலம் எனவும் கூறுவர்.

அதிகப்படியான சூரிய ஒளியை நமது சூரியத் தகடுகள் அறுவடை செய்ய, பேனல்களை தெற்கு நோக்கி வடக்கில் உயர்ந்தும், தெற்கில் சரிவாகவும் வைப்பதே சரியாகும். பேனல்களைத் தாங்கும் இரும்புத் தாங்கிகளை நிலையாக அமைக்காமல், சூரியன் பயணிக்கும் திசையியில் பேனல்களைத் திருப்புவதற்கு வசதியாக ‘டில்ட்டிங்’ முறையில் வைப்பது நல்லது. அத்தகைய முறைதான் இப்போது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில், அதிக நேரம் சூரிய ஒளியை ‘அறுவடை’ செய்ய முடியும்.

சூரிய தகடுகளில் இருந்து நமக்கு கிடைப்பது நேர் மின்சாரம் (Direct Current). பேட்டரி மின்கலனில் இருந்து வருவதைப் போன்றது. இந்த நேர் மின்சாரத்தால் இயங்கும் மின் மோட்டார் பம்புகள் சந்தையில் அரிதாகக் கிடைக்கும். மாற்று மின்சாரம் (Alternative Current) மூலம் இயங்கும் மின் மோட்டார் பம்புகள், எப்போதும் எங்கும் எளிதில் கிடைக்கக்கூடியவை.

ஆகவே, இரண்டாவது முக்கியப் பொருளான மின்மாற்றி (AC Drive) தேவைப்படுகிறது. இது Solar Variable Frequency Driver எனப்படும். இது, சூரிய சக்தியை மாற்றி மாற்று மின்சாரமாகக் கொடுக்கிறது. அத்துடன், சூரிய ஒளியின் தன்மை திடீரென கூடி குறையும் தன்மை கொண்டது. மேகக்கூட்டம் திடீரென வந்து ஒளியின் அளவைக் குறைக்கும். அதற்கேற்ப, மின் அலைகள் குறையும்போது, மின் மோட்டாரின் வேகத்தை அது உடனே குறைத்துவிடும். சூரிய ஒளி திடீரென அதிகரிக்கும்போது உண்டாகும் அதிவேகத்தை மட்டுப்படுத்தி, சரியான சுழற்சியை தொடரச் செய்யும். இந்த டிரைவ்தான், இதயம் போன்ற கருவி. இதுதான், மோட்டாரின் ஸ்டார்ட்டராகவும், கன்ட்ரோலராகவும் செயல்படுகிறது. இதன் பராமரிப்புச் செலவு என எதுவும் இல்லை.

மூன்றாவது முக்கியமான சாதனம், மின்சார மோட்டார் பம்ப் செட்டுகள். சூரிய மின்சாரத்தைக் கொண்டு அனைத்துவிதமான மின்சார மோட்டார் பம்ப் செட்டுகளையும் இயக்கலாம். ஆனாலும், சூரிய மின் சக்தியில் இயங்குவதற்கென, பிரத்யேகமாக சிறப்பான மின் மோட்டார்களை சில நிறுவனங்கள் தரமான வகையில் தயாரிக்கின்றன. மின் மோட்டார்களில், நீர் மூழ்கி மோட்டார்கள், திறந்தவெளி மோட்டார்களும் அடங்கும். நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் மின் மோட்டா, அடிக்கடி மாறும் சுழற்சி வேகத்தைத் தாங்கி ஓட மறுக்கிறது. ஆகவேதான், சூரிய சக்தியில் இயங்குவதற்காக சில குறிப்பிட்ட மூன்று முனை மின் மோட்டார்களையே நாடவேண்டி உள்ளது. இவை இப்போது கோயம்புத்தூரிலேயே உலகத் தரத்தில், நீண்ட கால உத்தரவாதத்துடன் தயார் செய்யப்படுகின்றன.

சூரிய மின் சக்தி மோட்டார் பம்ப் செட்டுகளை அமைக்க இந்த மூன்று மட்டுமே போதுமா? நிச்சயமாகப் போதாது. வழக்கமான மின் மோட்டாரை அமைப்பதற்கு ஆகும் செலவைவிட அதிகப்படியான முதலீடு தேவைப்படுகிறது. ஆனால், ஒருமுறை முதலீடு செய்தால் போதும். தொடர் செலவு ஏதும் இல்லை என்பதுதான் இதன் சிறப்பு. ஒருமுறைக்கு முதலீடு செய்தால், குறைந்தபட்சம் 25 ஆண்டுகளுக்கு எந்தவிதப் பராமரிப்பும் இல்லாமல், செலவின்றி இந்த மோட்டார் பம்ப் செட் இயங்கும். இதன்பின், சூரிய ஒளி தகடுகளின் சக்தி குறையும். அதற்கேற்க புதிய பேனல்களை சேர்த்து மின் உற்பத்தியை குறைவின்று பார்த்துக்கொள்ளலாம்.

சோலார் பேனல்களின் மேற்புறம் கண்ணாடி உள்ளது. இதில் தூசி படிந்தால் ஒளி ஊடுருவும் திறன் குறைந்து மின் உற்பத்தியும் குறையும். ஆகவே, துணியால் சோலார் பேனல்களை அடிக்கடி துடைக்க வேண்டும். இத்தகைய பராமரிப்புதான் தொடர் வேலை.

மாற்று மின் சக்தியை சொந்தமாக உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அரசாங்கம் என்ன கைமாறு செய்கிறது?

வேளாண் பொறியியல் துறை மூலம் 90 சதவீதம் வரை முதலீட்டில் மானியம் வழங்கும் திட்டத்தை, 2014-15 நிதியாண்டுக்கு தமிழக அரசு அமல்படுத்தியது. அதனால், மாவட்டத்துக்கு ஒரு சில விவசாயிகள் மட்டுமே பயனடைந்தனர். வரு நிதியாண்டு முதல் இந்த மானிய அளவு குறைக்கப்பட்டு, பயனாளிகளின் எண்ணிக்கையும் குறையும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் நபார்டு வங்கி, சூரிய மின் மோட்டார் அமைப்பதற்கு 48 சதவீதம் மானியம் வழங்குகிறது. ஒரு குதிரை திறனுக்கு 43,200 ரூபாய் மானியம் கிடைக்கிறது. கடுமையான தரநிர்ணயத் தேர்வில் நபார்டு சில குறிப்பிட்ட நிறுவனங்களை மட்டும் இந்த மானியம் பெற தேர்வு செய்துள்ளது. கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் அமைந்துள்ள சூர்யா பவர் மேஜிக் எனும் நிறுவனம், இந்த நபார்டு மானியத்தை விவசாயிகளுக்குப் பெற்றுத் தருகிறது.

நபார்டு வங்கி, ஒருபோதும் மானியத்தை நிறுவனத்துக்கோ, நேரடியாக பயனாளிக்கோ தருவதில்லை. உண்மையான பயனாளிக்கு மானியம் முழுமையாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறது. அதனால், சூரிய மின் சக்தி மோட்டார் அமைக்க, விவசாயிகள் வங்கிக் கடன் பெற வலியுறுத்தி, 40 சதவீதம் வங்கிக்கடன், 48 சதவீதம் நபார்டு மானியம், மீதமுள்ளதும் வரியும் விவசாயிகளின் பங்கு என்பதாக பங்களிப்பு உள்ளது.

பொதுவாக, வங்கியில் விவசாயிகள் கடன் பெறுவது ‘குதிரைக் கொம்பு’ என்று சொல்வார்கள். அதனால், விவசாயிகளுக்கோ நேர்மையான முறையில் வங்கிக் கடன் பெற்றுத் தர, சூர்யா பவர் மேஜிக் நிறுவனம் தனியாக ஒரு குழுவையே வைத்துள்ளது. அத்துடன் கரூர் வைஸ்யா வங்கியுடன் பண்ணை இயந்திரமயமாக்கல் எனும் பிரிவில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்துள்ளது.

தேவையான ஆவணங்களுடன் வங்கியை அணுகினால், வங்கியின் கள அதிகாரிகள் நமது இடத்தைப் பார்வையிடுவார்கள். ஏற்பாடுகளில் திருப்தி அடைந்தால் நமக்கு கடன் அளிக்கப்படுகிறது.

முதல் புதனன்று, (ஒவ்வொரு மாதமும் புதன்கிழமைதான் எங்கள் வங்கிக் கிளைக்கு கள அதிகாரி வருவார்) தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்தோம். அன்றே கள ஆய்வு நடைபெற்றது. அடுத்த புதன்று வங்கி ஆவணங்களில் கையெடுத்து போட்டதும், கடனை உறுதியாக்கி, நிறுவனத்தின் பெயரில் வரைவோலை வழங்கப்பட்டுவிட்டது.

சூர்யா பவர் மேஜிக் நிறுவனம், மின்னல் வேகத்தில் இயங்கி, மேஜிக்போல் கடன் பெற்றுக் கொடுத்து, அதைவிட மேஜிக்போல் மோட்டாரையும் அமைத்துக்கொடுத்தது. நபார்டு, வங்கி, நிறுவனம், விவசாயி என இந்த நால்வர் அணி நிச்சயம் சாதனை படைக்கும்.

ஸ்விட்சை தட்டினால் மோட்டார் ஓடப்போகிறது. அதற்கு ஏன் இத்தனை முதலீடு என யோசிப்பவர்கள், மேலும் கொஞ்சம் யோசிக்க வேண்டிய கட்டம் இது. மின்வெட்டு, அதுவும் விவசாய மின் உபயோகிப்பாளர்களுக்கு அதிகப்படியான மின் வெட்டு, மூன்று முனை மின்சாரம் எப்போது வரும் என இரவு, பகலாகக் காத்திருந்து நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். நீர்ப்பாசனம் என்பது விவசாயத்துக்கு ஒரு கட்டுதிட்டத்துக்கு அடங்காத நிம்மதியற்ற வேலை. ஆனால், சூரிய மின் சக்தியைப் பயன்படுத்தினால் ஒரு விவசாயி தன்னுடைய இடத்திலேயே மின்சாரத்தையும் உற்பத்தி செய்து, தற்சார்பு உடையவனாகிறான். அதுபோல், தற்சார்பு மின் உற்பத்தியால் அரசாங்கம் கொடுக்கும் இலவச மின்சாரம் சேமிக்கப்படுகிறது. அனல் மின் நிலையம், அணு மின் நிலையம் என அரசு உற்பத்தி செய்யும் மின்சாரத்தால் சுற்றுச்சூழல் மாசுபடும். ஆனால், சூரிய சக்தி மின்சாரத்தால் சுற்றுச்சூழல் மாசு என்ற பேச்சுக்கே இடமில்லை.

சூரிய மின்சக்தி மின் உற்பத்திக்கு ஆரம்ப மூலதனத்தைத் தவிர வேறு செலவு இல்லை என்பதால், மின் உற்பத்திக்கான செலவு மிகவும் குறைவு. மின்சாரமே இல்லாத இடத்திலும், சாலை வசதி இல்லாத இடத்திலும்கூட சூரிய மின் சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். சுமார் 1200 அடி ஆழத்தில் உள்ள தண்ணீரைக்கூட இறைக்கும் திறன் சூரிய மின் சக்திக்கு உண்டு. பகலில் சுமார் ஏழெட்டு மணி நேரம் வரை தொடர்ச்சியாக, குறைந்தது 25 ஆண்டுகள் வரை நிச்சயம் இந்த மோட்டாரை இயக்கலாம்.

இதிலும் சில குறைபாடுகள் உள்ளன. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் போதுமான சூரியக் கதிர்கள் கிடைக்காததால், மின் உற்பத்தி குறையும். அந்த நேரத்தில், நீர்ப்பாசனம் செய்ய இயலாது. மேகம் சூழ்ந்திருக்கும்போதும், மழைக்காலத்திலும், இரவிலும் மோட்டாரை இயக்க முடியாது. இந்த மின் உற்பத்தியை மின்கலத்தில் சேமித்து இரவில் பயன்படுத்த நினைப்பது அறிவீனம். அதற்கான செலவுகளும், தொடர் செலவுகளும் மிக அதிகம். இதற்கான முதலீடும் அதிகம். நபார்டு மானியம் இல்லையென்றால், சாதாரண விவசாயிகளால் இதை நிறுவி இயக்க இயலாது.

இந்த சூரிய மின் சக்தி பேனல்கள் அமைக்க சுமார் ஒன்று முதல் இரண்டு சென்ட் நிலம் தேவை. சத்தியமங்கலம் திருமூர்த்தி சோலார் பேனலின் கீழும் கீரை போன்று சில வகைகக் காய்கறிகளை உற்பத்தி செய்கின்றனர். பேனலில் ஒளி ஊடுருவாவிட்டாலும், பக்கவாட்டில் கிடைக்கும் ஒளி, செடி வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்கிறது.

புதிய தொழில்நுட்பம், புதிய யுத்திகள், புதிய சிந்தனைகளுக்கு தடைபோடும் பழைமையான சிந்தனாவாதிகளை ஒதுக்கிவிட்டு, அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுபவர்கள், வெற்றியின் கோட்டை நிச்சயம் தொட்டுவிட முடியும்.

                          ***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com