சமவெளியிலும் வளரும் முட்டைக்கோசு

நாலு பேர் கூட வீட்டிற்கு வந்து விட்டாலோ, பெரியக் கூட்டத்திற்கு சமைக்க வேண்டும் என்றாலோ விரைவில், எளிதில் ஆகும் பொரியலோ, கூட்டோ எது என்றால் முதலில் நினைவுக்கு வந்து நிற்கும் ‘காய்’ முட்டைக்கோசு தான்.

நா
லு பேர் கூட வீட்டிற்கு வந்து விட்டாலோ, பெரியக் கூட்டத்திற்கு சமைக்க வேண்டும் என்றாலோ விரைவில், எளிதில் ஆகும் பொரியலோ, கூட்டோ எது என்றால் முதலில் நினைவுக்கு வந்து நிற்கும் ‘காய்’ முட்டைக்கோசு தான். விரைவில் நறுக்கி அதிவிரைவில் சமைத்துப் பரிமாற ஏற்றக் காய் ‘முட்டைகோசு’. சத்துள்ள, மருத்துவ குணமுடைய முட்டைக்கோசு கீரை வகைத் தாவிரம்தான். எந்த பந்தியிலும் விருந்திலும், வீட்டிலும் தவறாமல் இடம் பிடிக்கும் முட்டைக் கோசு ஏனோ உணவு சுவைஞர்களின் மனதில் இரண்டாம் தர இடத்திலேயே இருந்து வருகின்றது. அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, அதன் குறைந்த விலை. முட்டைக்கோசு எப்போதும் நிதானமான விலையிலேயே விற்பனையாகி வரும் காய். ஒருபோதும் விலை உயர்ந்த காய்களின் வரிசையில் இருப்பதில்லை. இரண்டாவது முட்டைக்கோசுவிலிருந்து வருகின்றன ஒருவிதமான மணம். இந்த மணத்தையும் பெரும்பாலோர் விரும்புவதில்லை.

ஆனாலும் கூட உற்பத்தியிலும் விற்பனையிலும் சக்கைப் போடு போடும் காய் முட்டை கோசுதான் என்பதில் இரண்டாம் கருத்து இல்லை. ’பிராசிகாசியா’ என்கின்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்த முட்டைக்கோசு ஆரம்ப காலத்தில் ’பிராசிகா ஒலிரேசியா’ என்கின்ற காட்டுவகைத் தாவரமாக இருந்தது. அதை உண்ணலாம் எனக் கண்டறிந்து கொத்தான இலைகளின் வடிவத்திலிருந்ததை ஆய்ந்து, முட்டை அல்லது தலை போன்ற அமைப்புடைய கெட்டியான முட்டைக்கோசு 11-ம் நூற்றாண்டில் தான் பயனுக்கு வந்தது. சுமார் 4000 ஆண்டிற்கு முன்னரே மத்திய தரைக் கடல் பகுதியில் காட்டுத் தாவரமாக இருந்து ஐரோப்பாவின் அட்லாண்டிக் கரையை ஒட்டிய பகுதியில் பரவி, வட ஐரோப்பாவில் முதலில் பயிரிடப்பட்டிருக்கிறதாக முட்டைக்கோசுவின் மூதாதையரைப் பற்றிய வரலாற்று ஆய்வுகள் சொல்லுகின்றன.


                   முட்டைக்கோசு

மனித இனக் குழுக்களின் இடப்பெயர்வு நடைபெறும் போது அவர்களுக்குத் தேவையான உணவின் விதைகளும் இடம் பெயர்ந்திருக்கின்றன. ஐரோப்பாவை விட்டு புறப்பட முட்டை கோசு கொஞ்சம் கொஞ்சமாய் இன்று உலகம் முழுவதும் பரவிவிட்டது. பூர்வீகம்தான் ஐரோப்பா. ஆனால் இன்றைய புள்ளி விபரங்கள்படி சீனாதான் உலகில் உற்பத்தி ஆகும் முடைக்கோசுவில் சற்று ஏறக்குறைய 47% அளவு உற்பத்தி செய்கின்றது என்பது வியப்பான செய்திதான். வழக்கம் போல 12% உற்பத்தி செய்து நமது இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கின்றது.

முட்டைக்கோசு பயிரை வளமான எல்லா மண்ணிலும் பயிரிடலாம். இதற்கு வடிகால் வசதி மிகவும் அவசியம். வண்டல், செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். மண்ணின் கார அமிலத்தன்மை ph 5.5 முதல் 6.5 வரை உள்ள நிலங்கள் மிகவும் ஏற்றவை. பொதுவாக இதுபோன்ற பனி மூட்டம் மலைப் பகுதியிலும் கிடைக்கும். தமிழகத்தின் மலையிலும் சமவெளிப் பகுதியிலும் குளிர் மாதங்களில் முட்டைக்கோசுவை பயிர் செய்யலாம். அடுக்கடுக்காக பெரிய இலைகளைக் கொண்டு முட்டை வடிவ அல்லது மனிதத் தலை போன்று இருக்கும் இந்தத் தாவரத்தின் பிரெஞ்சுப் பெயர் Caboche. அதற்கு ’தலை போன்ற’ என்பது பொருள். இதிலிருந்து தான் ஆங்கில வார்த்தையான cabbage எனும் வார்த்தை உருவாகியிருக்கின்றது. முட்டை வடிவத்திலிருந்ததால் தமிழில் இதற்கு முட்டைக்கோசு எனவும் இதைப் போலவே பூக்களாய் இருப்பதால் காலிப்ளவருக்கு பூக்கோசு எனவும் நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது.

இந்த முட்டைக்கோசுவை எப்படி சாகுபடி செய்வது என்பதை தெரிந்து கொள்ளும் முன்னர் முட்டைக்கோசுவில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
 

100 கிராம் எடையுள்ள முட்டைக்கோசு

சக்தி

25 கிலோ கலோரி மட்டுமே
கார்போஹைட்டிரேட்   எனும் மாவுச் சத்து5.8 கிராம்
சர்க்கரை3.2 கிராம்
நார்ச்சத்து2.5 கிராம்
கொழுப்பு0.1 கிராம
புரதம்1.28 கிராம்

வைட்டமின்கள்

 

நுண் சத்துக்கள்

B1

5%

சுண்ணாம்பு4%

B2

3%

இரும்பு4%

B3

2%

மக்னீசியம்3%

B5

4%

மாங்கனீசு8%

B6

10%

பாஸ்பரஸ்4%

B9

11%

 பொட்டாசியம்4%

C

44%

 சோடியம்1%

K

72%

 துத்தநாகம்2%


’காய்’ என்பதைத் தாண்டி சரித்திர காலம் தொட்டே முட்டைக்கோசு ஒரு மருந்து பொருளாகவும் பயன்பட்டு வந்திருக்கின்றது. ரோமானிய படை வீரர்களுக்கு போரில் ஏற்பட்ட காயத்தைச் சுத்தம் செய்து, காயத்தின் மேலே வைத்து கட்ட ஜூலியஸ் சீசர் காலத்திலேயே முட்டைக்கோசு இலை பயன்பட்டிருக்கின்றது. சில வகைக் காளான்களால் ஏற்படும் விஷத்தன்மையைப் போக்க முட்டைக்சு நச்சு முறிவு மருந்தாகவும் பயன்பட்டிருக்கின்றது. அல்சர் போன்ற வயிற்றுப் புண்ணுக்கு முட்டைகோசு நல்ல மருந்து. வயிற்றுக்குள் செல்லும் தேவையற்ற திடப்பொருளான குண்டூசி ஊக்கு போன்றவற்றை அறுவை சிகிச்சையின்றி வெளிக்கொண்டு வர முட்டைக் கோசு ஒரு அருமையான மருந்து. ஆனாலும் சிலருக்கு முட்டை கோசு குடலில் செரிமானத்தின்போது வாயுவை உற்பத்திச் செய்து சிரமத்தையும் கொடுக்கின்றது. முட்டைக்கோசுவை அளவுக்கு அதிகமாக வேக வைக்கும்போது ’ஹைட்ரஜன் சல்பேடு’ எனும் துர்நாற்றமுள்ள வாயு வெளியேறுகின்றது. இதனால்தான் அநேகர் முட்டை கோசு உணவை தவிர்க்கின்றனர்.

முட்டைக்கோசுவின் பச்சைப் பகுதியாக உள்ள இலைகளில் தான் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன. சிறிதளவு முட்டைக்கோசு சாப்பிட்டாலே ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான வைட்டமின் ‘சி’ யில் பாதியளவிற்கு கிடைத்துவிடுகின்றது. முட்டைக்கோசு கலோரி குறைந்த உணவு. அதனால் ‘டயட்டிங்’ இருப்பவர்களுக்கு முட்டைக்கோசு ஒரு நல்ல உணவு. அடிக்கடி முட்டைக்கோசுவை உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். முட்டைக்கோசு அதிக நார்ச்சத்து உள்ள காய் என்பதால் மலச்சிக்கலை நீக்கி மூல நோயின் பாதிப்பைக் குறைக்கின்றது. முட்டைக்கோசுவில் ‘குளுட்டோமைல்’ அதிக அளவில் இருப்பதால் அல்சரை குணப்படுத்தும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுவலியை நீக்க பயன்படுகின்றது. மேலும் உடலில் உள்ள பித்த நீரை சமநிலைப்படுத்துகிறது. பெண்கள் ‘மெனோபாஸ்’ காலத்தில் குறையும் சுண்ணாம்பு, பாஸ்பரஸ் சக்தியின் குறைபாட்டை முட்டைக்கோசுவை உணவில் சேர்த்துக் கொள்வதனால் சரி செய்யலாம்.


இந்தியாவிற்கு முட்டைக்கோசு ஒரு மேல் நாட்டு வரவு. 18-ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் மேற்குக் கடற்கரை வழியே நுழைந்த போர்த்துகீசியர்கள்தான் இந்தியாவிற்கு முட்டைக்கோசுவை கொண்டு வந்தனர். தொடர்ந்து வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவின் மலைப்பகுதியில் முட்டை கோசுவை பயிரிட துவங்கிக் கொஞ்சம் கொஞ்சமாய் இந்தியாவெங்கும் பரப்பினர். முட்டை கோசுவின் பயன்பாடும் தேவையும் அதிகரிக்கவே, சமவெளியில் விளையில் முட்டைக்கோசு ரகங்களிலும் கண்டறியப்பட்டன. செப்டம்பர் எக்லிப்ஸ், பூசா ஒண்டர், பிரைடு ஆஃப் இந்தியா, ஏர்லி ஒண்டர், பூசா ட்ரம்ஹெட் ஓ.எஸ் இராஸ் போன்றவை மலைப் பகுதிக்கான ரகங்கள்.

ஏர்லி ஆட்டம்ன் ஜெயண்ட், லார்ஜ் சாலிட், லேட் ட்ரம் ஹெட், கோல்டன் ஏக்கர், ஜெயின், மகாராணி போன்ற ரகங்கள் ‘சமவெளியில்’ பயிரிட ஏற்றவை. முட்டைக்கோசு பயிரிடச் சிறந்த பொறுக்கு விதைகளைத் தேர்வு செய்து, பருவம் பார்த்து நடவு செய்ய வேண்டும். சமவெளியில் ஆகஸ்ட், செப்டம்பர் காலத்தில் முன் பருவ வகை விதைகளையும், செப்டம்பர் அக்டோபரில் பின் பருவ வகை விதைகளையும் நட வேண்டும். ரகங்களை பருவம் மாற்றி நடவு செய்யக் கூடாது.

ஒரு ஏக்கர் முட்டைக்கோசு நடவு செய்ய 2 ½ செண்ட் அளவிற்கு நாற்றாங்கால் தயார் செய்துக் கொள்ள வேண்டும். இதற்கு 150 கிராம் விதை போதுமானது. நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்தை தேர்வு செய்து நன்கு உழவு செய்து கட்டிகளின்றி பொலபொலவென நிலத்தை தயார் செய்ய வேண்டும். 300 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் 17:17:17 கலப்பு உரம் 10 கிலோ, இவற்றுடன் 10 கிலோ பொடியாக்கப்பட்ட வேப்பம்புண்ணாக்கு கலந்து இட்டு நிலத்தை அரையடி உயரமுள்ள மேட்டுப்பாத்தியாகத் தயார் செய்து அதில் 2 அங்குல இடைவெளியில் கோடுகள் இழுத்து, கோட்டில் ½ அங்குல ஆழத்தில் வரிசையாக விதைத்து, தொழு உரம் கலந்த மண்ணைக் கொண்டு மூடி, பூவாளியில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

தற்போது குழித்தட்டு நாற்றாங்கால் முறை காய்கறி சாகுபடியில் வெகுவாக பிரபலமடைந்து வருகின்றது. இதற்கென உள்ள குழித்தட்டுகளில் தென்னை நார் கழிவு (மக்கியது) கொண்டு நிரப்பி குழி ஒன்றிற்கு ஒரு விதை வீதம் போட்டு பச்சை நிழல் வலை கூடாரத்தினுள் வைத்து தண்ணீர் தெளித்து வந்தால் நாற்றுகள் நல்ல முறையில் வரும். இம்முறையில் நடவு செய்யப்படும் நாற்றுகளை நடவு செய்யும்போது வேர்ப்பகுதி சிதையாமல் இருப்பதால் ‘பாடுவாசி’ இன்றி பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படுகின்றது. 30 நாளிலிருந்து 40 நாள் வயதுள்ள நாற்றுகள் நடவுக்கு ஏற்றவை. நாற்றுகளை பறிப்பதற்கு முன்னர் 4-6 நாட்கள் நாற்றங்காலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்தி நாற்றுகளை கடினப்படுத்த (hardening) வேண்டும். இவ்வாறு கடினப்படுத்தப்பட்ட நாற்றுகள் நன்கு உயிர் பிடித்து வளரும்.

ஏக்கருக்கு 10 டன் அளவிற்கு நன்கு மக்கிய தொழு உரம் இட்டு 3-4 முறை உழவு செய்து நிலத்தை களை நீக்கி நன்கு பண்படுத்த வேண்டும். பயிர் ரகம், பட்டம் போன்றவற்றை அனுசரித்து 1 ¼ X 1 ¼ அடி ; 2 அடி X 1 ½ அடி, 2 அடி X 2 அடி இடைவெளியில் நடவு செய்யலாம். பார் அமைத்து பயிர் செய்வது தண்ணீர் பாசனம் செய்ய இலகுவானது. சொட்டு நீர் பாசன அமைப்பு நிறுவி சொட்டு நீர் குழாய்கள் வழியே தண்ணீர் பாசனம் மேற்கொண்டால் குறைந்த தண்ணீரில் அதிக பரப்பளவு பாசனம் செய்வதுடன் வேலையாள் சிக்கனமும் இருக்கும். செடியின் வேர்ப்பகுதிக்கு அருகில் தண்ணீர் பாய்ச்சப்படுவதால் களை முளைப்பதும் குறையும். முட்டைக்கோசு பயிருக்கு தொடர்ந்து நீர் பாய்ச்ச வேண்டும். ஆனால் நீர் தேங்கக் கூடது. நடவு செய்யும் போது முதல் தண்ணீரும், மூன்றாம் நாள் உயிர் தண்ணீரும் பாய்ச்ச வேண்டும். பின்னர் மண்ணின் தன்மை, பருவகால சூழ்நிலை ஆகியவற்றை அனுசரித்து 7 நாட்கள் முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்யும் முன்னர் தழைச் சத்து 30 கிலோ, மணிச்சத்து 50 கிலோ, சாம்பல் சத்து 10 கிலோ, அசோஸ் பரில்லம், பாஸ்போ பேக்ட்ரீயம் தலா 1 கிலோவை அடியுரமாக இட வேண்டும். தண்ணீரில் கரையும் வகை உரங்களை சொட்டு நீர்ப் பாசனக் குழாய் வழியே மேலுரமாகக் கொடுப்பதனால் மகசூல் நன்கு அதிகரிக்கும். பாத்தி நடவிற்கு நட்ட 30 வது நாளில் 30 கிலோ தழைச்சத்துக் கொடுக்கலாம். முட்டை கோசுவில் தலைகள் உருவாகி முதிர்ச்சிய்டையும் பருவத்தில் நீர்ப் பாசனத்தைத் தற்காலிகமாக நிறுத்திவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் முட்டை கோசுவில் ‘வெடிப்பு’ ஏற்படுவதைத் தவிர்க்கலாம். வறட்சியான கால நிலைக்குப் பின்னர் மிகுதியாக நீர் பாய்ச்சினாலும் தலைப்பாகம் வெடிக்கும். முட்டைக்கோசுவின் தலைப்பாகம் வெடிப்பது என்பது முற்றிலும் நீர்ப் பாசனத்தை மட்டும் குறித்த விஷயம்.

‘களையெடுக்கா வெள்ளாமைகால் வெள்ளாமை’ என்பது கிராமத்துச் சொலவடை. ஆகவே முட்டைக் கோசு தோட்டத்தை களைகளின்றி பராமரிக்க வேண்டும். பாசலின் அல்லது ட்ரை புளுராலின் போன்ற களைக் கொல்லிகளை முளைக்கும் முன்னர் (pre emergence) தெளித்துக் கட்டுப்படுத்தலாம். இரண்டிலிருந்து மூன்று முறை களைக் கொத்துக் கொண்டு முட்டைக்கோசுப் பயிரில் வேருக்குச் சேதம் ஏற்படாமல் களை வெட்டிப் பயிருக்கு மண் அணைத்தல் களைக் கொல்லித் தெளிப்பதை விட நல்ல பயன் கொடுக்கும். ‘இன்லைன் ட்ரிப்பர்’ சொட்டு நீர் அமைப்பு அமைத்து, மல்ச்சிங் ஷீட் கொண்டு நிலத்தை மூடி முட்டை கோசுவை அதி நவீன முறையில் சாகுபடி செய்தால் முட்டுவழிச் செலவு குறைந்து மகசூலும் அதிகரிக்கும்.

இலையில் ஓட்டைகளில்லாத முட்டைக்கோசுவைச் சந்தையில் பார்ப்பது அரிது. இலைகளின் இடுக்குகளில் புழுக்கள் காணப்படுவது முட்டைக்கோசுவில் மிக இயல்பான விஷயம். வைர முதுகு அந்துப்பூச்சி முட்டைக்கோசுவைத் தாக்கும் முக்கிய பூச்சி ஆகும். இந்த அந்துப்பூச்சியின் புழுக்கள் முட்டை கோசுவின் இளம் இலைகளையும், நடுக்குருத்தையும் தாக்குகின்றன. இந்தப் பூச்சியை பல்வேறு விதமாகக் கட்டுப்படுத்தலாம்.

ஏக்கருக்கு 5 இடங்களில் ‘இனக் கவர்ச்சிப் பொறி’ வைப்பதன் மூலம் தாய் அந்துப்பூச்சியைக் கவர்ந்து அழித்துப் புழுக்களின் உற்பத்தியை மட்டுப்படுத்தலாம். விலக்குப் பொறி வைத்தும் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

முட்டைக்கோசு நடவு செய்வதற்கு 10 நாட்களுக்கும் முன்னரே வயல்களின் ஓரங்களில் அடர்த்தியாகக் கடுகுப் பயிரை விதைக்க வேண்டும். செழித்து வளரும் கடுகுப்பயிர் அசுவிணி மற்றும் அந்துப்பூச்சிகளை கவர்ந்து இழுத்துவிடும். இதனால் முட்டைக்கோசுப் பயிரின் சேதாரம் குறையும்.

வைர முகுதுப் புழுக்களின் புழுப் பருவத்தில் தாக்கி அழிக்கின்ற ‘பேசில்லஸ் துரிஞ்சியஸ்’ பேக்ட்ரீயாவைக் கொண்டுத் தயார் செய்யப்பட்ட உயிர் பூச்சிக் கொல்லியை உபயோகிக்கலாம்.

நட்ட 60 நாட்கள் கழித்து ஏக்கருக்கு 20000 என்கின்ற எண்ணிக்கையில் ஒட்டுண்ணிகளை விட வேண்டும்.

கார்டாய் ஹைட்ரோ குளோரைடு ஒரு கிராமை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

முட்டைக்கோசுவை தாக்கும் அசுவிணி பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி வேப்ப எண்ணெய்க் கலந்து அத்துடன் சோப்பாயிலும் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். ஏக்கருக்கு 5 என்ற எண்ணிக்கையில் மஞ்சள் வண்ண ஒட்டும் அட்டை வைத்தும் அசுவிணி தாக்குதலைக் குறைக்கலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி ‘டைமெத்தோயேட்’ ரசாயனப் பூச்சிக் கொல்லிக் கலந்தும் தெளித்து அசுவிணியைக் கட்டுப்படுத்தலாம்.

வேர்ப் புழுவைக் கட்டுப்படுத்த உழவின் போது நன்கு பொடியாக்கப்பட்ட வேப்பம் புண்ணாக்கை கலந்து விடலாம். பாசன நீருடன் ‘கழிவு எஞ்சின் ஆயில்’ கலந்துப் பாசனம் செய்தும் மட்டுப்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி குளோர் பைரிபாஸ் பூச்சி கொல்லி கலந்து மாலை வேளையின் செடியின் அருகில் ஊற்றியும் கட்டுப்படுத்தலாம்,

முட்டைக்கோசுவில் ஏற்படும் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 1 கிராம் கார்பென்டாசிம் கலந்துத் தெளிக்கலாம். கறுப்பு அழுகல் நோய் முட்டைக்கோசுவின் வேர் மற்றும் தண்டுப்பகுதியை தாக்குவதால் செடிகள் அழுகிவிடும். இந்த நோய் வராமலிருக்க விதைகள் விதைக்கும் முன்னர் 100 ppm ஸ்டெப்ரோமைசில் கலவையில் விதைகளை ஊற வைத்து பின்னர் விதைக்கலாம். வேர் வீங்கல் நோயைக் கட்டுப்படுத்த நாற்றுகளை நடவு செய்யும் முன்னர் 1 லிட்டர் தண்ணீரில் 2 கிராம் கார்பெண்டசிம் பூசணக் கொல்லியைக் கரைத்து அந்த தண்ணீரில் நாற்றுகளில் வேர்களை முக்கி பின்னர் நடவு செய்யலாம்.

சமவெளிப் பகுதியில் பருவகாலச் சூழல், தட்பவெட்ப நிலையினை அனுசரித்து முட்டைக்கோசு 120 நாட்களில் அறுவடைக்கு வரும். ஏக்கருக்குச் சுமார் 10 லிருந்து 15 மெட்ரிக் டன் வரை மகசூல் கிடைக்கும். முட்டைக்கோசு பயிரில் கடினமான இலைகள் வளர்த்தால் பயிர் முற்றி அறுவடைக்கு தயார் ஆகிவிட்டதன் அறிகுறியாகும். இரண்டு அல்லது மூன்று முற்றிய இலைகளுடன் கூடிய முட்டைக்கோசுவை அறுவடைச் செய்தார்கள்.

அறுவடை செய்தபின் நிலத்தில் மீதமிருக்கும் இலைகள் ஆடுமாடு போன்ற கால்நடைகளுக்கு, குறிப்பாக முயலுக்கு நல்லதொரு தீவனமாகும்.

பொதுவாக வெளிர் இளம்பச்சை வண்ணத்தில் கிடைக்கும் முட்டைக்கோசுவை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். ஆனால் வயலட் நிறத்திலுள்ள முட்டைக்கோசுவும் நகர்ப் பகுதியில் விற்பனையாகின்றது. உடல் எடையை குறைக்க முயற்சி செய்வோருக்குக் குறைந்த கலோரிகளைக் கொண்ட முட்டைக்கோசு ஒரு நல்ல உணவு. தலைவலி, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு முட்டைக்கோசு ஒரு நல்ல மருந்து. வறட்சியான சருமம் உடையவர்கள் முட்டைக்கோசு இலைகளை நீரில் ஊறப்போட்டு அந்தத் தண்ணீரில் முகம் கழுவினால் முகம் பளபளக்கும்.

அந்நிய தேசத்துப் பயிராக இருந்த போதிலும் இன்று இந்திய அடுக்களையில் இன்னமும் முட்டைக்கோசு தொடர்ந்து தனது ராஜ்ய பரிபாலனத்தைத் தொடரத்தான் செய்கின்றது.

                           ***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com