நான் ஈ

‘அம்மா இங்கே வா…வா…ஆசை முத்தம் தா…தா, இலையில் சோறு போட்டு, ஈயைத் தூர ஓட்டு’ எனத் தமிழ் உயிர் எழுத்துக்களை நினைவில் கொள்ள குழந்தைப் பாடல்

‘அ
ம்மா இங்கே வா…வா…ஆசை முத்தம் தா…தா, இலையில் சோறு போட்டு, ஈயைத் தூர ஓட்டு’ எனத் தமிழ் உயிர் எழுத்துக்களை நினைவில் கொள்ள குழந்தைப் பாடல் ஒன்று உண்டு. ஈக்களின் தொல்லை குறித்து அப்போதே குழந்தைகளுக்குச் சொன்னாலும் இன்றுவரை நம்மால் ஈக்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அதைவிட அதிக எண்ணிக்கையில் கொசுக்கள் நம்மை ஆக்கிரமித்து விட்டபடியால் ஈக்களைப் பற்றிச் சற்றே மறந்துதான் போய்விட்டோம். கொசுக்களின் தொல்லை ஈக்களின் கெடுதலைக் குறைத்துக் காட்டுகின்றன. குறைவு போலத் தோன்றினாலும் ஈக்களினால் உண்டாகும் கெடுதல், கொசுக்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை.

சின்னஞ்சிறிய கிராமத்துக் குப்பைமேடும் சாக்கடையும் ஈக்களால் சூழப்பட்டு காணப்படுவது போல, காஸ்மோபாலிட்டன் நகரங்களும் ஈக்களால் சூழப்பட்டுதான் காணப்படுகின்றன. ஈக்கள் என்றாலே மனிதனுக்கு இனம் புரியாத ஒரு அருவருப்பு உண்டாகும். குப்பை, கழிவு, மலம், கெட்டு அழுகி கிடக்குமிடத்தில் எல்லாம் ‘கொய்ங்’ என்ற ரீங்கார ஓசையுடன் ஈக்கள் கூட்டமாக அமர்ந்திருப்பதைக் காண நேரிட்டாலே முகம் சுளிக்கின்றோம். இவ்வாறு கழிவுகளில் உட்கார்ந்து அப்படியே உணவுகளிலும் உட்கார்ந்து நோய்களைப் பரப்பும் ஈக்களினால் பாக்ட்ரீயாக்கள் பரவுகின்றன. இந்த கெடுதல் செய்யும் பாக்ட்ட்ரீயாக்களால் பல இலட்சம் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

ஈக்களை கொஞ்சம் கூர்ந்து பார்ப்போம். ஆறுகால்கள், அத்துடன் உடலில் பல்லாயிரக்கணக்கான உரோமங்கள், கண்ணாடி இறக்கை, உருட்டும் விழி என அங்கலட்சணத்துடன் உள்ள ஈக்களின் ஒவ்வொரு கால்களிலும் வட்டமான பிசின்போன்ற பசைப்பொருள் காணப்படுகின்றன. கழிவுகளில் அமரும்போது அந்த பிசின்களில் பாக்ட்டீரியா ஒட்டிக் கொள்ளும். அது மீண்டும் மனிதன் மீதோ, உணவின் மீதோ உட்காரும் போது அந்த பாக்ட்டீரியாகள் எளிதில் உணவில் இறங்கி மிக எளிதாக மனித உடலுக்குள் சென்று வயிற்றுப்போக்கு, குடற்புழு, உடல் நமைச்சல், தோல் எரிச்சல், வயிற்றுப்புண், டைபாய்டு, தொற்றுக் கிருமிக் காய்ச்சல் எனப் பல்வேறு வகை நோய்களுக்கு வாயில்படியாக உள்ளது.

தமிழகத்தில் கோழிப்பண்ணைகள் நிறைந்த நாமக்கல், ஈரோடு, சேலம், கரூர் பகுதிகளிலும், மீன் சந்தைகள் நிறைந்த கடற்கரையோர ஊர்களிலும் ஈக்களின் ஆட்சி தீவிரமாகச் செயல்படுகின்றது. ஈக்கள் இல்லாத கோழிப்பண்ணைகளோ, ஈ மொய்க்காத மீன் மார்க்கெட்டோ இருக்கவே முடியாது. மாட்டுத் தொழுவத்திலும் ஈக்கள் மொய்க்காமலில்லை. இந்த ஈக்கள் எப்படி இத்தனை விரைவாகப் பல்கிப் பெருகுகின்றது?

ஒரு தாய் ஈ, ஒரு முறை சுமார் 150 முட்டைகள்வரை இடுகின்றது. சில நாட்களிலேயே ஐந்து ஆறுமுறை முட்டைகள் இடும். இது அரிசி போன்ற தோற்றத்தில் காணப்படும். ஒரே நாளில் முட்டைப் பொரிந்து லார்வா எனும் இளம் புழுக்களாக அவை மாறும். ஆறு நாட்கள் இந்தக் கூட்டு புழுவிலிருந்து கால், இறக்கை முளைத்த ஈக்கள் வெளியாகிப் பறக்கும். பறக்கத் துவங்கிய மூன்றாம் நாளே, பெண் ஈக்கள் இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிடும். ஒரு பெண் ஈ வாழ்நாளில் 500 முட்டையிடும். 75 முதல் 150 முறை அவை பொரிக்கும். நாம் கொல்லாவிட்டால் ஈக்களின் ஆயுள் இரண்டு வாரம் முதல் ஒரு மாதம் மட்டுமே. ஈக்கள் இப்படிப் பெருகிக் கொண்டே இருந்தால் இதனைக் கட்டுப்படுத்துவது எப்படி? அதுவும் இயற்கையான முறையில் கட்டுப்படுத்துவது எப்படி என்பதுதான் நம்முன்னே உள்ள வினா!

தனக்கு வேண்டாதவர்களை உணவில் விஷம் வைத்துக் கொல்வது என்பது நடைமுறை. பயிர் பாதுகாப்பு எனும் பெயரில் நிலத்திலும் நஞ்சைத் தெளித்து நல்ல, கெட்ட என எல்லாப் பூச்சிகளையும் கொல்கின்றோம்.

ஈக்கள் தன்னுடைய கூட்டுக் கண்களால் தேடி, தனது நுகரும் தன்மையால் கண்டறிந்து தனக்குத் தேவையான உணவைக் கண்டறிகின்றது. ஈக்கள் திரவ நிலையில் உள்ள உணவுகளைத் தன் வாயில் உள்ள ஸ்பான்ஜ் போன்ற குழாய் அமைப்பைக் கொண்டு உறிஞ்சி உண்கிறது. இதன் உணவு திடப் பொருளாய் இருப்பின், அதன்மேல் தனது உமிழ்நீரைச் செலுத்தி, கரைத்து ஸ்பான்ஜ் மூலம் உறிஞ்சுகின்றது. ஆக, ஈக்களைக் கொல்ல அதன் உணவு மண்டலம்தான் சிறந்த வழி.

மனிதர்களுக்கு இத்தனைத் தீங்குகளைக் கொடுக்கும் ஈக்கள், கால்நடை வளர்ப்பில் எத்தனை இன்னல்களைக் கொடுக்கின்றன என்பது அவற்றை வளர்ப்பவர்களுக்குத்தான் தெரியும். சுமார் 20 வகையான ஈக்கள் கால்நடை வளர்ப்பில் தொல்லையைக் கொடுக்கின்றன. இதில் முக்கியமானது தொழுவ ஈக்கள். இவைகள் வீட்டு ஈக்களைப் போன்றே நிறம், அமைப்பு மற்றும் தோற்றத்தில் காணப்பட்டாலும், இதன் வாயின் அமைப்பு வீட்டு ஈக்களைவிட சற்று மாறுபட்டிருக்கும். இந்த வகை ஈக்களில் பெண் ஈக்களும், ஆண் ஈக்களும் மாடுகளை கடிக்கின்றது. கடிப்பதனால் மாடுகளுக்கு ரத்த இழப்பு உண்டாகிறது. மாடுகளுக்கு இதன் கடிக்கும் வலி தொந்திரவு தரக்கூடியதாக இருப்பதால், அடிக்கடி வாலை வீசியும், முகத்தை ஆட்டியும் ஈக்களை ஓட்டுகின்றன. இந்த ஈக்கள் கடிக்கின்ற ‘கடிவாய்’ வழியே அடைப்பான் நோய், பித்தப்பை நோய் பரப்பும் நோய் காரணிகள் உள்ளே செல்கின்றன.

அடுத்தவகை ஈ குதிரை மற்றும் மான் ஈக்கள். இந்த வகை ஈக்கள் அட்டைப் பூச்சியைப் போல, ரத்தத்தை உறிஞ்சும்போது  ரத்தம் உறையாமலிருக்க ஒரு வகை திரவத்தை உட்செலுத்தி ரத்தத்தை காயத்திலிருந்து வடியும்படி செய்கின்றது. மேலும் இவ்வகை ஈக்கள் திரும்ப, திரும்ப ஒரே இடத்தில் கடிப்பதால் கால்நடைகளுக்கு உடல் எடை இழப்பு ஏற்படுகிறது. ரத்தம் குறைவதால் பால் உற்பத்தியும் குறைகின்றது. ரத்தம் வடிவதால் உண்டாகும் காயங்கள் மூலம் அடைப்பான் நோய், பித்தப்பை நோய், உண்ணி நோய் போன்றவைகள் பரவுகின்றன. பொதுவாகப் பகலில் மட்டுமே கடிக்கின்ற இந்த ஈக்களில், பெண் ஈக்கள் மட்டுமே ரத்தத்தை உறிஞ்சுபவைகள். இந்த ஈக்கள் கடிக்கும் போது உண்டாகும் வலி உணர்வை பொறுக்க இயலாமல் கால் நடைகள் குதிக்கும், ஓடும், ஆவேசமாகும். அமைதி இல்லாமல் இருக்கும்.

மணல் ஈக்கள் எனப்படும் கடிக்கும் ஈக்கள் கால்நடையின் முகப்புரத்தில் வந்து தொந்திரவு கொடுப்பவை. சிறிய அளவிலான இவ்வகை ஈக்கள் நீரில் வளர்பவை. இவை முகப் பகுதியில் தொந்திரவு கொடுப்பதால் கால்நடைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படக்கூடும். இந்த ஈக்களில் ஒருவகை நீலநாக்கு நோயை ஏற்படுத்தும் வைரஸ் கடத்தியாகவும் செயல்படுகின்றன.

கொம்பு ஈ என்பது கால்நடைகளில் உடல் எடை இழப்பு, பால் உற்பத்திக் குறைவு போன்றவைகளை ஏற்படுத்தும் ‘ஈ’ வகையாகும். இந்தக் கொம்பு ஈயானது கால்நடைகளைக் கடிப்பதால் வலி, தொந்திரவு ஏற்படுத்துவதுடன் தீவனம் சாப்பிடுதல், ஓய்வு போன்ற தினசரி நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. இந்தவகை ஈக்கள் கால்நடைகளின் முதுகிலும், பின் பகுதியிலும் கூட்டமாகக் காணப்படுகின்றது. ஒரு எருமை அல்லது பசுமாட்டின் மீது 50 அல்லது கொஞ்சம் அதிகமாக இந்த வகை ஈக்கள் இருக்கலாம். ஆனால் ஆயிரக்கணக்கான இந்த ஈக்கள் இருந்தால் அதிக அளவு ரத்தம் வீணாவதுடன் கால்நடைகள் உயிரிழக்கவும் நேரிடலாம். இந்தவகை கொம்பு ஈக்கள் கால்நடைகளின் சாணத்தில் முட்டை இடுகின்றன. 3-5 நாட்கள் இளம்புழு, கூட்டுப் புழு, பருவத்தைக் கடந்து ஈக்களாக வெளிவந்து 30 நாட்களில் இனச்சேர்க்கை முடிந்து பெண் ஈக்கள் 200 முட்டைகளிடும். அதிலிருந்து 10 நாட்களில் அடுத்த ஈக்கூட்டம் வரும். நூறு ஆயிரமாகி, ஆயிரம் லட்சமாகி, இலட்சம் கோடியாகி பல்கிப் பெருகிவிடும். இந்தப் பெண் ஈக்கள் முட்டையிடும் நேரம் தவிர இதர நேரம் முழுவதும் கால்நடையில் உடலிலிருந்து ரத்தத்தை உறிஞ்சி கொண்டே இருக்கும். இவைகளை அழிக்காவிட்டால் கால்நடை வளர்ப்பால் கணிசமான பொருளாதார சேதம் ஏற்படும்.

கறுப்பு ஈக்கள் கருமை நிறத்தில், அளவில் சிறியவையாக காணப்படும். இந்த கறுப்புப் பெண் ஈக்கள் கால்நடைகளில் ரத்தத்தை உறிஞ்சுபவை. கால்நடையின் மூக்கு, காது, முகம் போன்றவற்றின் அருகில் அடிக்கடி வட்டமிட்டு, தோலைக் கடித்து எரிச்சலை ஏற்படுத்தும். இவை 7-10 கிலோமீட்டர் தூரம் வரையிலும் பறக்கக் கூடிய ஈ வகைகள். பெண் ஈக்கள் திடப்பொருட்கள் மீது முட்டையிடும். இளம் புழுக்கள் தாவரங்களின் மீது ஒட்டிக் கொள்ளும்.

இத்தனை வகை ஈக்கள் கால்நடை வளர்ப்போருக்கு இன்னலையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துகிறது. இந்த ஈக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது? சின்ன ஈக்கள் தானே என்று அலட்சியபப்டுத்த வேண்டாம். பண்ணையின் சுகாதாரத்தையும், பொருளாதாரத்தையும் ஈக்கள் பெரிய அளவு பாதிக்கும். கால்நடை பண்ணை மற்றும் கோழிப் பண்ணையின் ஈக்களின் உற்பத்தி அதிகமாக இருக்க பல்வேறு காரணங்கள் உள்ளன.


ஈக்களுக்கு தேவையான வளரும் சூழ்நிலையும், உணவுப்பொருளும் அதிகமாகக் காணப்படுகின்றது.

கொட்டகையைச் சுற்றி அதிகமாக நீர்த் தேங்கி நிற்பதும், சாக்கடை இருப்பதும் ஒரு காரணம்.

தீவன தொட்டில், அடர் தீவன தொட்டிகள் போன்றவற்றில் எஞ்சியுள்ள தீவனங்கள் ஈக்களுக்கு உணவு கொடுக்கின்றது.

மாடுகளின் சாணம், சிறுநீர் போன்ற கழிவுகள் உடனடியாக அப்புறப்படுத்தப்படாமல் நீண்டநேரம் விட்டுவைத்திருப்பது.

எருக்குழி, கழிவுநீர் சேமிக்கும் இடம் முறையாக அமைக்கப்படாமல் இருப்பது.

ஈக்களின் வாழ்க்கை சுழற்சி முறையைப் பற்றி சரிவர அறிந்து கொள்ளாமலிருப்பது.

முறையான தண்ணீர் வடிகால் வசதி இல்லாமலிருப்பது பண்ணை தாழ்வான பகுதியில் அமைந்திருத்தல்.

இந்த ஈக்களைக் கட்டுப்படுத்துவது என்பது சாதாரண, எளிதான வேலையே இல்லை. ஆகவே ஒருங்கிணைந்த நிர்வாகமே ஈக்களை கட்டுப்படுத்த இயலும். அனைத்து ஈக்களையும் கொன்று ஒழுப்பது என்பது ஒருபோதும் சாத்தியமான விஷயமே இல்லை. சகித்துக் கொள்ளுமளவிற்கு ஈக்களை கட்டுப்படுத்துவதே பெரிய வெற்றி. கடுமையான ‘விஷ பூச்சி கொல்லிகளை’ பயன்படுத்தும்போது அனேக நன்மை தரும் பூச்சிகளையும் கொன்று அழித்து சூழலியல் சமன்பாட்டை உடைக்கின்றோம். ஈக்களுக்கு எனத் தயார் செய்யப்பட்ட நச்சுக் குருணைகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி ஈக்களைக் கொல்லலாம். ஆனால் இறந்த ஈக்களை உண்ணும் கோழிபோன்ற பறவைகள் பெரிய அளவில் இறந்து பொருளாதாரச் சேதத்தை உண்டாக்குகின்றது.

இந்த ஈக்களை கட்டுப்படுத்த முற்றிலும் இயற்கையான, எவ்வித கெடுதலுமின்றி கொன்று ஒழித்துக் கட்டுப்படுத்த ‘Dr.Fly’ எனும் பெயரில் ஒரு தெளிப்பு மருந்தினை திருப்பூர் மகேஷ் விற்பனை செய்துவருகின்றார். சுரைக்காய், அதிமதுரம் போன்றவற்றால் தயார் செய்யப்படும் இந்தக் கலவை ஈக்களைத் தவிர வேறு எதற்கும் எவ்வித சேதத்தையும் உண்டாக்காது. இந்தத் தெளிப்புக் கலவையைக் குடித்தால் கூட மனிதனுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. அதிமதுரமும் சுரைக்காயும் அப்படி என்ன மாற்றத்தை உண்டாக்கி விடப்போகின்றது?

50 மில்லி டாக்டர் ஃப்ளை எனும் இந்த திரவத்துடன் 450 மில்லி தண்ணீரை கலந்து கால்நடைத் தொழுவத்தில் தெளித்தால், ஈக்கள் கொத்துகொத்தாகச் செத்து வீழ்கின்றன. கால்நடையின் மேல் தெளித்தால் கால் நடைகளை ஈக்கள் மொய்ப்பதில்லை. துணிந்து செல்லும் ஈ, உண்ணி, கால்நடைப் பேன் போன்றவைகள் உடனடியாக இறக்கின்றன. கால்நடையின் மேல் இருக்கும் ‘புறத்தொற்று’ இல்லவே இல்லாமலாகி விடுகின்றது.

இரசாயனப் பூச்சிக் கொல்லிகளை கால்நடை மீது தெளிக்கும்போது நாம் அதீத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இரசாயன மருந்துகள் கால்நடை தீவனத்தில் கலந்துவிடும்போது அவற்றின் உணவில் நஞ்சாகி கால்நடை இறக்க நேரிடலாம். ஆனால் இந்த முற்றிலும் இயற்கையான, நம்பகமான மருந்து மனிதன் உட்கொண்டாலே எந்தவித பக்கவிளைவுகளையும் கொடுப்பதில்லை. ஆகவே நம்பி தெளிக்கலாம்.

ஒருமுறை Dr.Fly திரவத்தை தெளித்தால் அதன்பின் ஈக்களே வராதா என்ற கேள்வி நிச்சயம் எழும். ஈக்களின் வாழ்க்கைச் சுழற்சிமுறையை ஏற்கனவே பார்த்தோம். பல்கிப்பெருகும் இதன் அளவிட முடியாத பெருக்கத்தை மட்டுப்படுத்திக் கட்டுப்படுத்தலாமேயன்றி முற்றிலுமாய் ஒழிக்க இயலாது. வாரம் ஒருமுறை தொடர்ந்து 4 அல்லது 5 முறை தெளித்தால் ஈக்களை பெருமளவில் கட்டுப்படுத்தலாம். நாம் சுத்தமாக ஈக்களை ஒழித்து விட்டாலும் எப்படியாவது நமது கால்நடை தொழுவத்திற்கு ஒன்றிரண்டு ஈக்கள் பால்கேன்கள், பால்வண்டி, மாட்டுத்தீவனம் போன்றவற்றால் மீண்டும் வந்து சேர்ந்து விடுகின்றன. சோர்ந்துவிடாமல் மருந்து தெளித்தும், ஈக்கள் தங்கி, வளர்ந்து பெருகுவதற்கான சூழ்நிலையையும் தவிர்த்து போராடினால் ஈக்களை மட்டுப்படுத்தலாம்.

எந்த ஒரு பொருளை வாங்கினாலோ, பயன்படுத்தினாலோ இதைத்தவிர வேறு என்ன பலன் எனக்கேட்பது நமது இயல்பு. இரண்டாம் பலன் இல்லாத பொருளை நாம் ஒருபோதும் விரும்புவதே இல்லை. சாதாரணமாகப் பயன்படுத்தும் பேப்பர் க்ளிப்பை, பேப்பர் இணைக்க பயன்படுத்துவதைக் காட்டிலும் காதுகுடைய, பல்குத்த, நக இடுக்கில் அழுக்கு எடுக்க, என ஆயிரத்தியெட்டுப் பயன்பாட்டிற்கு உள்ளாக்குவது நம் இயல்பு. இதற்கு Dr.Fly மட்டும் விதிவிலக்காக இருக்கக் கூடாதல்லவா?

வீடுகளில் காணப்படும் கரப்பான் போன்ற பூச்சிகளையும், மாடுகளின் வால் ரோமத்தினுள் காணப்படும் பேன்களையும் Dr.Fly கொன்றொழிக்கிறது. இதனைத் தவிர என்ன பயன் என்பதை நாமும் கண்டறியலாம். எளிதில் கிடைக்கும் சுரைக்காயும், அதிமதுரமும் Dr.Fly எனும் பெயரில் இத்தனை பயன்பாட்டை கொடுக்கின்றது. சூழல் மேல் அக்கறையுள்ள மனிதனுக்கு இதுபோன்ற தெளிப்பு மருந்துகள் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஒரு ரசாயனப் பேன் கொல்லி மருந்தை, மாடுகளின் வால் ரோமத்தில் வாழும் பேன்களை கொல்வதற்காகக் கை தெளிப்பான் மூலம் தெளிக்கும்போது அந்தப் புகையை சுவாசித்தவர் தொடர்ந்து நூற்றுக்கணக்கான தும்மல்களைப் போட்டு, முகமும் மூக்கும் சிவந்து, மூக்கு துவாரங்களில் நீர் ஒழுகி, ஆளே அகோரமாகிவிட்டார். உடனே அந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுப் பேசியதில், ‘ஆமாங்க, தெளிக்கும் போது லேசா தும்மல் வரும், அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க ஒவ்வொருத்தருக்குச் சேராது’ எனக் கூலாகச் சொன்னார். அந்தப் பேன், ஈ கொல்லிப் பெயரைக் கேட்டாலே காததூரம் ஓடும் இவர் போன்றவர்களுக்கு 100% இயற்கையும், நம்பகத்தன்மையுமான  Dr.Fly போன்ற இயற்கை பூச்சிக் கொல்லிகள் நிம்மதியையும், சூழலைக் கெடுக்காத சுகத்தையும் கொடுப்பது எத்தனை நல்லது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com