14. நல்ல கற்பனை தீய கற்பனை

சென்ற வாரத்தில் தீவினை என்ற சூரனை முருகன் என்ற அறிவு வென்று அடிமைப்படுத்திய சூர சம்ஹாரத்தின் உட்பொருளைக் கண்டோம்.
14. நல்ல கற்பனை தீய கற்பனை

சென்ற வாரத்தில் தீவினை என்ற சூரனை முருகன் என்ற அறிவு வென்று அடிமைப்படுத்திய சூர சம்ஹாரத்தின் உட்பொருளைக் கண்டோம்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எதிர்மறை என்ற எண்ணமாக மறைந்திருக்கிறான் சூரன் என்றும் சொன்னோம்.

ஆக்கல்,காத்தல், அருளல்,மறைத்தல், அழித்தல் என்ற ஐந்தொழில்களைப் புரிபவன் இறைவன். மறைத்தல் தொழில்தான் வாழ்க்கையில் சுவாரஸ்யத்தைக் கொடுப்பது.

பள்ளி காலத்தில் தேர்வுகள் மூலமாக இந்த மறைத்தல் தொழில் தலைகாட்டத் தொடங்குகிறது.

படித்தப் பாடங்களிலிருந்துதான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. பிறகு எதற்காக தேர்வு பற்றிய பயம் எழுகிறது? இருந்தும் மறைந்து போவதால் அது மறத்தல் ஆகிவிடுகிறது.

புத்தகத்தையே புரட்டாதவன் அஞ்சுகிறான், சரி.

கரைத்துக் குடித்தவனும் அஞ்சுகிறானே அது ஏன்?

எல்லாம் படித்திருந்தும் எந்தக் கேள்வி தரப்படுமோ என்ற விஷயத்தில் அஞ்சி விடுகிறான்.

படித்தவர்களுக்கெல்லாம் வேலை கொடுத்தால் நாட்டின் முன்னேற்றம் முடங்கிப் பின்னேற்றம் ஏற்பட்டுவிடும். காரணம் குருட்டு மனப்பாடம்.

நாராயணன் நடுச்சாமத்திலும் கூடப் புத்தகத்தோடு உலவியுலவி உருப்போட்டு முதல் மதிப்பெண்களில்  வெற்றி பெற்றான்.

பெரிய வேலைக்கு மனுச் செய்தான்.

தேர்வாகி அழைப்பும் வந்தது.

நேர்முகத்தேர்வில் போய் நின்ற பிறகுதான் கைகால்கள் உதற ஆரம்பித்தன. தங்கள் துறைக்குத் தகுதியானவனா என்று சோதிப்பதற்காகச் சில கேள்விகளைக் கேட்டார்கள்.

பேந்தப் பேந்த விழித்தான்.

முழித்து முழித்துப் படித்தோமே என்று குமைந்தான்.

படித்த பாடமெல்லாம் ‘மழித்து மழித்துப் போட்ட மயிர்களாகி’ மொட்டைத் தலையோடு நிற்பதாக உணர்ந்தான் நாராயணன்.

தனது மதிப்பெண்களால் இருமாந்துபோயிருந்தவன்.

‘ஏட்டுச் சுரைக்காய்  கரிக்கு உதவாது’ என்று வீட்டுக்கு வந்து தலையில் கை வைத்துக்கொண்டு உணர்ந்தான்.

ஐந்தறிவு உள்ள விலங்கினங்கள் ஐந்தறிவோடுதான் உயிர் துறக்கும்.

சிங்கத்துக்கு இறையாகும் மானுக்கும் ஐந்தறிவுதான்.

மானை வேட்டையாடும் சிங்கத்துக்கும் ஐந்தறிவுதான்.

இரண்டையும் வேட்டையாடும் மனிதனுக்கோ ஆறு அறிவு.

உயிர்களைக் கொல்லக் கூடாது என்று உணரும்போது ஏழாவது அறிவு புலப்படுகிறது.

அதுதான் ஞானம்.

ஏழாவது அறிவை எட்டாமலேயே மாண்டுபோன மனிதச் சரித்திரங்கள் கோடி கோடி!

மாண்டு கொண்டிருப்போரும் கோடி கோடி!

ஏழாவது அறிவா?

அதுதான் நேர்மையா, ஒழுக்கமா, உண்மையா, தானமா, தர்மமா, தியாகமா, சைவமா வேண்டவே வேண்டாம் அந்த ஏழாவது அறிவைக் கொண்டுபோய் எங்காவது கொட்டுங்கள். எங்களுக்கு அது வந்துவிட வேண்டாம்,  வரவும் கூடாது. அதைப் பற்றி எங்களிடம் பேசக் கூட வராதீர்கள் என்று விரட்டியடிப்போர் இன்றைக்கும் உண்டு.

காரணம் ஞானம் என்பது முதிர்ச்சியடைந்த அறிவின் விளக்கம்.

அறிவு அறிவாக இருக்கும் வரை வாழ்க்கை சுகபோகமானதாக இருக்கும். அது முதிரத் தொடங்கிவிட்டால் கஷ்டங்கள் தலைகாட்டும். அறிவு ஞானமாகப் போகிறது என்று அர்த்தம்.

வினைகள்தான் தடைகளாக வந்து குறுக்கே நிற்கின்றன. தடைகளை விலக்குவது அறிவு.

தடைகள் எல்லாவற்றிலும் உண்டு. உணவுப் பண்டமே கிடைக்காது. கிடைத்தாலும் அதை உண்ண முடியாது. இப்படியும்கூட இந்தத் தடைகள் வந்து குறுக்கிடும். எல்லாமே அறிவைப் பக்குவப்படுத்தவே.

புதிய சாதனை படைக்க போராடுவார்கள். அவர்களுக்குத் தடைகளுக்கு மேல் தடைகள் ஏற்படும்.

திருமண முயற்சி எடுப்பார்கள். பெண் அழகாயிருப்பாள். நிறையச் செல்வம் இருக்கும். நல்ல குணவதியாக இருப்பாள். ஆனாலும் அவளுக்கு மாப்பிள்ளை கிடைக்க மாட்டான்!

பையன் நன்றாகப் படித்திருப்பான். நல்ல உத்தியோகத்தில் இருப்பான். சொந்த வீடு வசதிகள் இருக்கும். எந்தக் கெட்ட பழக்க வழக்கமும் இல்லாமல் இருப்பான். ஆனாலும் அவனுக்குப் பெண் கிடைக்காது!

காத்துக் காத்துக் கிடந்து காலம் எல்லாம் கடந்து போய் வீட்டோடு முடங்கிக் கிடக்கும் பெண்களை, ஆண்களைப் பார்த்திருக்கிறேன்.

அடிப்படையாக ‘எட்டுப் பொருத்தம்’ இருந்தால் நல்லது. ஆனால் பதினாறு பொருத்தமும் இருந்து அற்புதமான ஜோடிகளுக்கு மனநிறைவோடு திருமணம் முடித்திருப்பார்கள். இருவருக்கும் ‘ஏழாம் பொருத்தம்’ ஆகி விவாகரத்துக்குப் போய் நிற்பார்கள். 

திருமணமான அன்றே விபத்தைச் சந்திக்கும் மணமக்கள்கூட இருக்கிறார்கள்!

எல்லாம் வினை.

இரண்டு கைகளிலும் தண்ணீரை அள்ளி நிறுத்த முடியாது. எந்த பக்கமாகவது அது ஒழுகிக் கீழே போய்விடும். எவ்வளவு இறுக்கிப் பிடித்தாலும் நில்லாது. அது ஒரு தடை. தண்ணீர் ஒழுகாமல் கைவிரல்களால் போடும் தடை. அந்தத் தடைக்குத் தடை போட்டு விட்டு தண்ணீர் கீழே போய்க்கொண்டிருக்கும். அதுதான் வினைகளின் நுட்பம்!

செய்தித்தாள்களை இப்போதெல்லாம் நான் புரட்டுவதில்லை. புரட்டும் பக்கமெல்லாம் வயிற்றைப் புரட்டும் வன்செய்திகள் தென்படுகின்றன! திரும்பும் திசையெல்லாம் தீய தீயச் செய்திகள்.

மனிதனை மனிதன் வஞ்சிப்பதும், பழி தீர்ப்பதும், வெட்டுவதும், குத்துவதும், கொல்வதும் என்று வன்முறைகள் பல்வேறு பரிமாணங்களில் நடந்து வருகின்றது.

கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பகை வெறியாட்டங்கள், கள்ளக் காதல், திட்டமிட்ட சதி இவற்றை எல்லாம் பக்கம் பக்கமாக விலாவாரியாகச் சொல்லும்  செய்தித்தாளை தொடர்கதை படிப்பது போலப் படிப்பவர்களும் இருக்கிறார்கள்!

அத்தகையச் செய்திகளைப் படிக்கும் போது ஏற்படும் மனக் கலக்கமும், பீதியும் மனிதாபிமானத்தின் வெளிப்பாடுகள்.

இரக்கச் சிந்தனை உள்ளவர்கள் மற்றவர்களுக்கு ஏற்படும் துன்பங்களைத் தமக்கு ஏற்படும் துன்பங்களாகப் பாவித்து அனுதாபப்படுவார்கள்.

மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அச்செய்திகளில் உள்ள வன்முறை உத்திகளைக் குறிப்பெடுத்துக் கொள்வார்கள்.

நாட்டுக்காகப் போராடிய தியாகிகள் வாழ்க்கையைப் படம் எடுத்தால் பார்ப்போர் பக்குவப்படுவார்கள்.

சமூக விரோதிகள், தீவிரவாதிகளின் வாழ்க்கையைப் படம் எடுத்தால் பார்ப்போர்  தீவிரவாதிகளாக மாறிவிடுவார்கள்!

திரைப்படத்தில் வரும் கொலைக் காட்சியைக் பார்த்துவிட்டு அதே முறையில் நிஜமாகவே கொலை செய்தவர்கள் இருக்கிறார்கள்! சினிமாக் காட்சிகள் தோற்றுவித்த கிரிமினல் குற்றவாளிகள் புற்றீசலாகக் வந்து கொண்டிருக்கும் உண்மைகள் நீதிமன்றங்களுக்குத் தெரியும்.

கற்பனைக்கு எல்லை இல்லை.

கற்பனையில் நல்லக் கற்பனைகள் உண்டு; தீயக் கற்பனைகளும் உண்டு.

நல்ல கற்பனைகளின் விளைவு- ஆய கலைகள் அறுபத்தி நான்கு!

தீய கற்பனைகளின் விளைவு- அத்தனைக் குற்றங்களும்!

இரண்டு பேர் சாலையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அதை ஒருவர் விலக்கப் போனார். அவரை இரண்டு சாராரும் சேர்ந்து அடித்துக் காயப்படுத்தி  தலையோட்டை உடைத்துவிட்டார்கள்!

யாரோ எப்படியோ அடிச்சுக்கிட்டுப்போய்த் தொலையட்டுமே, உங்களுக்கு ஏன் இந்த வம்பு? என்று குடும்பத்தினர் அவரை அடிக்காத குறையாகக் கண்டித்தார்கள்.

அவர் என்ன சொல்வார்? விதியே என்று தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்.

பேருந்தில் நடத்துனருக்கும் பயணிக்கும் வாக்குவாதம். சில்லறைத் தகராறு. நடத்துனர் தகாத வார்த்தைகளில் பேசினார். அந்தப் பயணிக்குச் சாதகமாக இன்னொரு பயணியும் நடத்துனரைத் தட்டிக் கேட்டார்.

பேருந்து போலீஸ் ஸ்டேஷன் முன்னால் ஓரங்கட்டியது.

நடத்துனர் அந்தப் பயணியைப் போலீசிடம் ஒப்படைத்தார்.

அத்துடன் அவருக்குக் குரல் கொடுத்த அப்பாவிப் பயணியையும் சேர்த்தே போலீசாரிடம் ஒப்படைத்தார்!

அவரசமாக வெளியூர் போக வேண்டிய சக பயணி, நியாயத்துக்காக் குரல் கொடுத்து போலீசாரால் கொண்டு செல்லப்பட்டார்.

அரசு ஊழியரைத் தாக்க முனைந்ததாக அந்தப் பயணி மீது கொலை முயற்சி வழக்கு. அதற்கு ஆதரவாக நடத்துனரைத்  தட்டிக் கேட்டவர்  மீது கொலைக்கு ஆதரவு காட்டிய வழக்கு!

சம்பந்தமே இல்லாமல் இப்படி ஒரு சோதனை தேவையா என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார் தட்டிக் கேட்டவர்.

சம்பந்தம் இல்லாமல் ‘சம்பந்தம் இல்லாத’ வம்பு வருமா?

சம்பந்தம் உண்டு. அதனால்தான் அப்படி வந்திருக்கிறது.{pagination-pagination}

மதுவிலக்கு அமலில் இருந்த காலம்-

பனை மரத்தடியில் உட்கார்ந்து பால்தான் குடித்துக் கொண்டிந்தான் பால்ராசு.

ஓஹோ என்ன தைரியம் இருந்தால் எங்கள் முன்னாலேயே பனை மரத்துக் கள்ளைக் குடிப்பாய் என்று போலீசார் வம்புக்கு இழுத்தார்கள்.

ஐயோ, பாருங்கள் அதோ வீடு. அங்கிருந்து  சூடான பாலை ஆறட்டும் குடிக்கலாம் என்றுதான் இங்கு கொண்டு வந்து குடித்தேன், இதைப் போய்க் கள் என்கிறீர்களே, என்றான் பால்ராஜ்.

பனை மரத்தடியில் உட்கார்ந்து நீ எதைக் குடித்தாலும் அது கள்தான். வா ஸ்டேஷனுக்கு என்று இழுத்தனர்.

ஐயோ என் மவனை விட்டுடுங்கய்யா. அவன் அப்பாவி அவனுக்கு அந்த மாதிரிப் பழக்கம் எல்லாம் கிடையாது என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டே ஓடிவந்த  அவனது தாயாரைப் பார்த்த பிறகுதான் விட்டுச் சென்றார்கள்.

வீண் பழியால் கம்பி எண்ணினால் அதுவும் சரியே-காரணம் முன்வினையே.

விடுதலையாகி வந்தால்- அதுவும் சரியே! அதுவும் முன்வினை.

சென்னை வந்து வறுமையோடும், ஒழுக்கத்தோடும் போராடிக் கொண்டிருந்த காலத்தில் எனது தமக்கையின் ஊருக்குப் போயிருந்தேன்.

தமக்கை கேட்ட கேள்வி என்னைத் தூக்கி வாரிப்போட்டது!

என்னடா தம்பி மெட்ராஸ் போயி நல்லவனாவேன்னு பார்த்தேன். கெட்டுப் போயிட்டியே, போன சனிக்கிழமை சாயங்காலம் மதுக்கடையில பாட்டில் வாங்கிட்டு இருந்தியாமே, என்னடா இதெல்லாம்? என்று கேட்டார்.

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது!

அக்கா செத்துப் போன அம்மாமேல சத்தியமாச் சொல்றேன். நான் அந்த மாதிரிக் கெட்ட பழக்கத்துக்கெல்லாம் அடிமையாகலக்கா, நம்புக்கா என்றேன்.

போன சனிக்கிழமை தி.நகர்..ஃபைவ் ஸ்டார் ஒயின்ஸ் கடையில சரியா அஞ்சு மணிக்கு நீ பாட்டில் வாங்கினியா இல்லையா? - தலையில் அடித்தாற் போலக்  கேட்டார் தமக்கை.

தமக்கை சொன்ன நாளும், பொழுதும், நேரமும் இடமும் கடையும் சரியாகவே இருந்தது.

அப்போதுதான் நினைவுக்கு வந்தது!

ஆம். வாங்கினேனக்கா. ஆனா பாட்டில் இல்லக்கா. நான் குடியிருந்த வீட்டில் குடிநீர் பிரச்னை. சரி பார்த்துக் கொடுத்த ‘ப்ளம்பரு’க்கு  ஐம்பது ரூபாய் தரணும். சில்லறை இல்லை, நூறு ரூபாயா இருந்துச்சு. அதுக்குத்தான் சில்லறை வாங்கினேன். மதுக்கடையிலயும் பெட்ரோல் பங்குலயும்தான் எப்பக் கேட்டாலும் சில்லறை கிடைக்கும் அக்கா என்றேன்.

பிறகுதான் அக்காவிற்கு நிம்மதி வந்தது.

என்னை அங்கே பார்த்ததாகச் சொன்னது யாரக்கா? என்று கேட்டேன்.

அக்காவின் சின்ன மாமனார் சென்ற வாரம் சென்னை போயிருந்தாராம். சனிக்கிழமை சாயங்காலமா டவுன் பஸ்ல தி.நகர் வழியா மைலாப்பூர் போயிட்டிருந்தாராம். அப்போதுதான் என்னை அந்த ஒயின் ஷாப்புல பார்த்திருக்கிறார். சில்லறை வாங்க நின்னதை, பாட்டில் வாங்க நின்னதாகச் சொல்லிவிட்டார்!

வினைகள் சரியில்லை என்றால் இப்படி எல்லாம் வீண் பழிகள் வரும்.

பனைமரத் தடியில் அமர்ந்து பால் குடித்தால் மட்டுமல்ல, மதுக்கடையில் போய்ச் சில்லறை வாங்கினாலும் அவன் ஒரு குடிகாரன்தான், உலகுக்கு!

இந்த உண்மை தெரிந்துவிட்டால் ஞானம் பிறந்துவிடும்.

இப்பூவுலகில் பிறப்பதற்குக் காரணமே நாம் செய்த முன்வினைகள்தான்.

வினைகள் நம்மைத் தண்டிக்கின்றன. அவற்றைப் புரிந்து கொண்டு நம்மை நாம் திருத்திக் கொண்டுவிட வேண்டும். இதுதான் நாம் செய்ய வேண்டியக் கடமை. நாம் திருந்திவிட்டால்  பட்டத் துன்பத்திற்கு மாறான பரிசுகள் கிடைக்கும்.

என்ன பரிசு என்று கேட்கிறீர்களா? இறைவனைத் தன்னுள்ளே உணர்ந்து இரண்டறக் கலந்து பெரும் பேரின்பம்தான் அந்தப் பரிசு.

நீ எப்படிப்பட்டப் பாவியாக இருந்தாலும் சரி, நீ எப்படிப்பட்ட தண்டனை வாழ்க்கையில் சிக்குண்டிருந்தாலும் சரி, தண்டனை என்பது முடிவான முடிவு அல்ல!

அந்தத் தண்டனையைப் பெறத் தலைவணங்க வேண்டும். தனது குற்றங்களுக்காக மனம் வருந்த வேண்டும்.

அதன் பலனாக  ஆனந்தமான இறையனுபவம்  ஒன்று காத்திருக்கிறது! அந்தப் புண்ணியத்தை  அனுபவிக்கும் தகுதி உள்ளவன்தான் பாவி!

சென்னை மதுக்கடையில் சில்லறை வாங்கப் போய் குடிகாரன் என்ற பெயர் எடுத்தேன் என்பதை மேலே பார்த்தோம். அது ஒரு சோதனை.

அதைவிடக் கொடிய சோதனை ஒன்று வந்தது!

(ஞானம் பெருகும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com