31. சிங்காரச் சென்னையா சிங்காரிச் சென்னையா?

இறை பக்தி எல்லோரிடமும் உள்ளது. இறைஞானம் என்பதோ பக்திக்கும் அப்பாற்பட்டது என்பது வரை சென்றவாரம் பார்த்தோம்.
31. சிங்காரச் சென்னையா சிங்காரிச் சென்னையா?

இறை பக்தி எல்லோரிடமும் உள்ளது. இறைஞானம் என்பதோ பக்திக்கும் அப்பாற்பட்டது என்பது வரை சென்றவாரம் பார்த்தோம்.

சராசரி மனிதன் பக்தியால் இறைவனுக்கு அடுத்து நிற்கிறான்.

‘இறைஞானி’யான பிறகு  அவன் பக்தன் இல்லை.

ஞானி என்றால் இறைவனோடு கலந்து விடுகிறான் என்று பொருள்.

‘கடவுளே இல்லை’ என்று சொன்னாலும் அவனுக்கும் கடவுள் அருள் உண்டு.  கடவுள் எல்லோருக்குள்ளும் உயிர்ப் பொருளாக இருப்பவன். 

‘கடவுளே இல்லை’ என்று நாத்திகம் பேசுபவன் உயிரை இழந்த பிறகுதான் தன்னிடம்  கடவுள் இல்லை என்ற நிலைக்கு ஆளாகிறான்.

அதுவரை, கடவுள் தந்த உயிரை வைத்துக் கொண்டே கடவுளை இல்லை  என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறான்.

கண்ணாடியில் தன்னைப் பார்த்த பிறகு தனக்கு கண், காது, மூக்கு, முகம், கை கால்கள் இருப்பதை உணர்பவன்  ஆத்திகன்.

கண்ணாடியே பார்க்காமல் தனக்கு உருவமே இல்லை என்று பிதற்றுபவன் நாத்திகன்.

நோய் வந்த பிறகுதான் அவன் நோயாளி.

அதுவரை?

அவன் சுகவாசிதானே!

‘சுகம்’ என்பதே முதலில்.

அப்புறம் வந்ததுதான் ‘அசுககம்’ என்பதை மறந்து விடாதீர்கள்!

சௌகரியம்தான் முன்னதாக உள்ளது.

அந்த சௌகரியத்துக்கு வந்த கேடுதான் அசௌகரியம்.

இதை இன்னொரு வகையாகவும் சொல்லலாம்.

ஆரோக்கியம் தன்னுள்ளேயே மறைந்திருப்பதை உணராத போது ‘நோயாளி’ யாகிறான்.

ஆரோக்கியத்தைத் தன்னுள்ளே உணரும்போது குணமாகிவிடுகிறான்.

இதுதான் நோய்க்கும் குணத்திற்கும் இடையிலான மாய உறவு.

பறவைகள், விலங்குகள் நோயினால் பாதிக்கப்படுகின்றன. ஆனால் அதனை அவை உணர்வதில்லை. உணர்ந்திருந்தால் நோயாலேயே மாண்டு போயிருக்கும்!

மனிதன் நோய் வந்துவிட்டதே என்று உணரும் போது நோய்க்கே பழியாகிறான்.

ஏன் வந்தது, வரவேண்டும்? என்று உணரும் போது நோயிலிருந்து குணமடைகிறான். 

தோல்விகள் ஏன் என்று சிந்திக்கும் போதுதான் வெற்றியின் கதவுகள் திறக்கிறது.

வெற்றிக்குத் தோல்விதான் படிக்கட்டு.

நோயற்ற வாழ்வுக்கும் நோய்தான் படிக்கட்டு.

இந்தக் கண்ணோட்டத்தோடு துன்பங்களைப் பார்த்தால் அதிலிருந்து வெளி வர முடியும்.

உடலுக்கும் மனதுக்கும் வருவது மட்டுமல்ல பிணி, ‘வாழ்க்கையே ஒரு பிணி’ என்றனர் முன்னோர்கள்.

வாழ்க்கையை ஏன் ‘பிணி’ என்றார்கள்?

பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளைப் பாதிக்கும் என்பார்கள். அதனால் பாவம் செய்வதற்கு மனிதன் அஞ்சுகிறான்.

தனது அறிவுக்கு அப்பாற்பட்டுத் தன்னை அர்ப்பணிப்பது பிள்ளைப் பாசத்திற்கு மட்டுமே! குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு என்றால் நிலை குலைந்து போகிறான்!

பிள்ளைக்குக் கொடிய நோய்.

தனது உயிரை எடுத்துக் கொண்டாவது பிள்ளையின் உயிரைக் காப்பாற்றுங்கள் என்று மருத்துவரிடம் மன்றாடுகிறான்.

நமக்காக மன்றாட, பெற்றோரால் மட்டுமே முடியும். வேறு யாராலும் முடியாது. எவருமே பெற்றோருக்கு ஈடாக முடியாது.

அந்த அளவுக்குப் பிள்ளைகள் பெற்றோர் மீது பாசம் வைக்க முடியாது.

‘பிள்ளைப் பாசம்’ என்றுதான் சொன்னார்களே தவிர, ‘பெற்றோர் பாசம்’ என்று சொல்வதில்லை.

பெற்றால்தான் பிள்ளையா?

தத்து எடுத்த பிள்ளையின் மீதும் கூட பெரும்பாசம் வைத்துள்ள தம்பதிகள் உண்டு.

பெற்ற பாசத்தை விட ‘வளர்த்த பாசம் பெரிது’!

எல்லாமே  மனதின் மயக்கம்தான்.

பிள்ளைகளில் தொடங்கும் பாச உணர்வுகள்  கணவுன் மனைவி, சகோதரன் சகோதரி, நட்புகள் மற்றும் உறவுகளாக விரிந்துகொண்டே செல்கிறது.

கணவனுக்கு நோய் என்றால் மனைவி மனம் ஒடிகிறாள்.

மனைவிக்கு நோய் என்றால்  கணவனும் மனம் ஒடிகிறான்.

பெற்றோருக்கு நோய் என்றால் பிள்ளைகள் சோர்ந்துபோகிறார்கள்.

தாத்தா பாட்டிக்கோ, பேரன் பேத்திக்கோ நோய் வந்தாலும் துவண்டு போகிறார்கள்.

தங்கள் குடும்பத்தில் யாருக்கும் எந்த நோயும் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் எதிர் வீட்டில் யாருக்காவது முடியவில்லை என்றால் எல்லோருமே  வருத்தமடைகிறார்கள்.

முன்பின் தெரியாதவர்களுக்குச் சாலை விபத்து என்றால்  தங்களுக்கே நேரிட்டது போல அதிர்ச்சியடைகிறார்கள்.

மனிதன், தனது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, தான் வாழும் சமூகத்தைச் சாõந்த யாருக்கு என்ன கேடு வந்தாலும் தனக்கு வந்தது போன்றே கருதி அனுதாபப்படுகிறான். 

வியாபாரம், தொழில்களில் நஷ்டமடைவோரைக் காணும் போதும், சண்டையிடுவோரைக் காணும்போதும், காவல்துறை, நீதிமன்றங்களுக்கு அலைவோரைக் காணும்போதும் அனுதாபப்படுகிறார்கள்.

இதுதான் மனித நேயத்தின் பிரதிபலிப்பு.

மனிதனுக்கு மனிதன் கண்ணுக்குத் தெரியாத அன்பு வலையால் பின்னப்பட்டிருக்கிறான்.

சோதனைகளினால் ஒருவன் துன்புறுவதைக் கண்டு இன்னொருவன் மனம் இரங்குகிறான்.

மறுநாள் இரக்கப்பட்டவனுக்கே  சோதனை வருகிறது.

அதைக் கண்டு இன்னொருவன் அனுதாபப்படுகிறான்.

இப்படி மனிதனுக்கு மனிதன் அனுதாப அலைகள் பாய்ந்துகொண்டே இருக்கிறது.

அதன் அடையாளமாகத்தான் கடலின் அலைகளும் ஓய்வதில்லையோ என்று கருதுகிறேன்!

இரக்கம் என்பது மனிதனின் உயிர்க்குணம்.

உயிரை நாம் அறிய முடியாது. ஆனால் நமக்குள்ளிருந்து எழும் இரக்கத்தை அறிய முடியும்.

ஆனால் இரக்கம் எத்தகையது என்பதை இரக்கத்தைக்கொண்டே உணர முடியும்.

இவ்வுலகில் இரக்கமற்றவர்களும் இருக்கிறார்கள்.

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது.

இரக்கமுள்ளவன் மற்றவர்களின் வேதனைகளைக் காணும் போது நிம்மதியிழக்கிறான், அதனால் உறக்கம் கெடுகிறான்.

வசதி வாய்ப்புகள் இருப்பினும் ஏழைகளைக் காணும் போது வேதனைப்படுகிறான்.

கூண்டுக்கிளி

கூண்டிலே அடைக்கப்பட்ட கிளி கூண்டுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருகிறது.

கூண்டுக்குள் அடைக்கப்படும்  சிங்கங்களுக்கும் வெளியுலகத்தைக் காண வேண்டி கூண்டிற்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருகிறது.

ஆனால் ஒரு துரதிர்ஷடம், கூண்டைத் திறந்துவிட்டாலும் தப்பியோடாத் தெரியாத வண்ணம் மனதின் கால்கள் ஒடிக்கப்பட்டுள்ளன.

ஆனாலும்  அவை கூண்டை விட்டு வெளியேறத் துடிப்பது ஏன்?

அதற்குத் தேவையும்  அதே விடுதலைதான்.

வாழ்க்கைச் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள  நமக்கு வேலிக் கதவுகள் இல்லை.

ஆனாலும் வெளிவரத் துடிக்கிறோம்.

அதாவது பிறவாப் பெருநிலைக்குப் போக வேண்டும் என்று துடிக்கிறோம்.

போதும் இந்த வாழ்க்கை என்று சலிக்காதவன் மனிதனே இல்லை!

எனது கிராமத்து நண்பர் ஒருவர் சென்னையில் இருந்தார். 

அவர் எப்போதும் பசுமையான வயல்வெளி, இயற்கையான குளிர் காற்று, பறவைகளின் இன்னிசை ராகம், சலசலத்தோடும் ஆற்றுப்படுகைகளில் சுற்றிச் சுற்றிப் பழகிப்போனவர்.

படித்த படிப்பை முன்னிட்டுக் கிடைத்த வேலைக்காகச் சென்னையில் வந்து சேர்ந்தார்.

பரபரப்பான  நகர வாழ்க்கை அவரைப்  பயமுறுத்தியது.

அவர் மனநிலையைப் பெரிதும் அது பாதித்தது.

படுக்கையிலிருந்து எழும்போதே ‘திடுக்.. திடுக்’ என்று இதயம் அடித்துக் கொள்வதை உணர்ந்தார்.

பரபரப்போடு பல் துலக்கி, பரபரப்போடு கழிவறைக்குச் சென்று, தண்ணீரை  அள்ளி அள்ளித் தலையில் ஊற்றிக் கொண்டு பதை பதைப்போடு சாமி கும்பிட்டு, வேலைக்கு ஓடிக்கொண்டிருந்தார்.

அலுவலகத்துக்குள் நுழைந்து ‘பை பை’ சொல்லும்போது நரகத்திற்குள் சென்று ‘நரகாசூரர்’களுக்கு வணக்கம் சொல்வது போல உணர்ந்தார்.

பைக்கில் வீடு திரும்பும்போது போக்குவரத்து நெருக்கடிகள் அவரைப் பெரிதும் பாதித்தன.  பகைவர்கள் சூழ்ந்துகொண்டு அவரை வீழ்த்தி மேலேறி நிற்பதைப்போல உணர்ந்தார்.

வந்து படுக்கையில் விழும்போது மனம் பதை பதைத்தது. கண்களில் உறக்கம் வரமறுத்தன.

கிராமத்து ஆற்றுக்கு நடுவே உட்கார்ந்துகொண்டு கைகால்களில் வைக்கோற் புல்லைச் சுருட்டிவைத்துச் சுரண்டிச் சுரண்டிக் குளித்தவர்.  கொதிக்கும் உடல் சூட்டைக் குளிர்ந்த நீரில் கலந்தனுப்பிவிட்டு குளிர்ச்சி பொருந்திய கண்களோடும் கரை ஏறிவந்தவர்.

பகல்  முழுவதும் வயலுக்குள்யே பாடுபட்டு மேனி கருத்துப்போனவர்

வயல்காற்று வீட்டுக்குள் வந்து வெஞ்சாமரை வீச அரை மயக்கத்தோடு ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றவர்...

அதிகாலைப் பொழுதில் ஆரோக்கியத்தோடு கண் விழித்து உற்சாகம் கரைபுரள வயலுக்கு வணக்கம் சொல்லப் புறப்பட்டவர்.

சென்னையில் அவருக்குக் கை நிறையச் சம்பளம் தந்தார்கள்.

ஆனாலும் விவசாயத்தின்  குறை வருமானத்தில்  கிடைத்த மகிழ்ச்சி அதில் இல்லை என்று கண்டார்.

மிகப் பெரியப் தப்பு செய்துவிட்டோமே என்று உணர்ந்தார்.

வாழ்க்கையில் நமக்கு விருப்பு வெறுப்புகள் உள்ளன. ஏற்ற இறக்கங்கள் உள்ளன. வெற்றி தோல்விகள், இன்ப துன்பங்கள், சிரிப்பு அழுகைகள் என்று எல்லாமே இரண்டிரண்டாக உள்ளன.

மனிதன் எப்போதும் விரும்பிய வாழ்க்கையிலேயே திளைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறான்.

ஆனால் அது முடியவில்லை.

முடியவும் முடியாது.

வழக்கம் போலச் சென்னையில் ஒருநாள் அதிகாலை படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தார்.

முதல் நாள் வேலை முடிந்து பைக்கில் மூன்று மணி நேரங்களாக ஊர்ந்து ஊர்ந்து ஓட்டிக்கொண்டு வந்த அலுப்பு அவரை இன்னும் வாட்டி எடுத்தது.

சுவர்க் கடிகாரத்தின் டிக்..டிக்..டிக் ஓசை மட்டும் நண்பரை மேலும் தனிமைப்படுத்தி யோசிக்க வைத்தது.

ஏன் இப்படிப்பட்ட நிலைக்கு உள்ளானேன் என்று யோசித்தார்.

கிராமத்தில் கிடைக்காத விஷயங்களுக்காகத்தானே  நகரத்திற்கு வருகிறோம். கிடைத்த பிறகு கிராமத்திற்குத் திரும்பிவிடுவதுதானே நியாயம்?

கிராமத்தில் கிடைக்காத வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கத்தான் தலைநகரங்களுக்குச் செல்கிறோம். வாங்கிக்கொண்டு அங்கேயா  தங்கிவிடுகிறோம்?

கிராமத்தில் பெரிய கல்லூரிகள் இல்லை. அதனால் சென்னைக்கு வந்து படிக்கிறோம்.

படித்த பிறகும் அங்கேயே வேலையைத் தேடிக்கொண்டு உட்கார்ந்துவிட்டால் என்ன ஆர்த்தம்?

அது நம் கிராமத்தை ஏமாற்றியது போல் ஆகாதா? கிராமத்தை ஏமாற்றினால் நம் பெற்றோரை ஏமாற்றியது ஆகாதா? பெற்றோரை ஏமாற்றுவது தன்னையே ஏமாற்றிக் கொள்வது ஆகாதா?

படுக்கையை விட்டு எழுந்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். ஆகாயத்தையே பார்த்தான்.

தனது கிராமத்தில் அதே காலை மூன்று மணிக்கு எழுந்து ஆகாயத்தைப் பார்த்தால் வெள்ளித் தாம்பாளம் போலப் பிரகாசிக்கும் நிலவும், தெள்ளத் தெளிவாகத் தோன்றும் கருத்த வானமும், வெகுதொலைவில் இருந்தாலும் உற்று உற்றுப் பார்த்துக் கண்ணடிக்கும் நட்சத்திரங்களும், காற்றோடு  கலந்து வரும் நெல்வயலின் நறுமணத் தென்றலும்..ஆஹா..ஹா..!

ஒரு கணம் தன்னை மறந்தான்..

அதே நிலவும் நட்சத்திரங்களும் இன்று சோகத்தில் அழுதுவடிந்து கொண்டிருந்தன. முதல் நாள் நகரத்து வாகனங்கள் கிளப்பிய புகை மண்டலம் ஒட்டு மொத்த வானையே ‘குத்தகை’க்கு எடுத்தாற்போல திரையிட்டு மறைத்துக்கொண்டிருந்தது.

கிளியும் புலியும் கூண்டை விட்டு வெளியே வந்தாலும் திரும்ப உள்ளே சென்று அடைக்கலமாகிவிடும்.

வித்தைக்காரனுக்கு அவை அடிமையாகியுள்ளன.

நான் யாருக்காக அடிமையாக வேண்டும்? எதற்காக ஊருக்குத் திரும்பக்கூடாது, எனக்க என்ன தடை என்று யோசித்தார் கிராமத்து நண்பர்.

‘சென்னை ச் சுகபோகங்களை விட்டுச் செல்பவன் கோழை’ என்று எவனோ ஒருவன் சொன்னது உள்ளுக்குள் எதிரொலித்தது.

சென்னையை விட்டுச் செல்பவன்  கோழையாக இருக்கலாம்.

ஆனால் பேராசைகளையும், பெருவாரியான உழைப்பையும், பேரழுத்தங்களையும், உறக்கத்தையும், நோய்களையும் ஒட்டு மொத்தமாகச் சென்னையோடு விட்டுவிட்டுச் செல்பவனே மாவீரன் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

திரைப்படங்களில் நள்ளிரவில் காதலனைத் தேடி வீட்டை விட்டு வெளியேறும் காதலி போல அவனும் யாருக்கும் சொல்லாமல் புறப்பட்டுவிட்டார்.

அதிகாலைப் ‘பிரம்ம முகூர்த்த’ நேரத்திலேயே துணிமணிகளை அள்ளி மூட்டை கட்டினார்.

காலையில் முதல் வேலையாகச் சென்று வேலையை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தார்.

அன்று மாலையே தனது சொந்த ஊருக்குப் புறப்பட்டார்.

சொந்த ஊரில் போய் இறங்கியதும் மணியைப் பார்க்கவில்லை. ஆகாயத்தை மட்டுமே அன்னார்ந்து பார்த்தார்.

அதே தெளிந்த வானம். . பளபளப்பு மங்காத நிலவு. வா.. வா..என்று மீண்டும் அவனைப் பார்த்துக் கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்!

தாயின் வயிற்றிலிருந்து வந்ததும் பூமிக் காற்றைச் சுவாசிக்கும் புதுக்குழந்தை போல சொந்த ஊரின் வாசத்தை உள்ளிழுத்தார்.

வீட்டிற்குச் சென்றதும் பைகளை மூலையில் தூக்கி வீசிவிட்டு, பேண்ட் சட்டையிலிருந்து வேட்டித் துண்டுக்கு மாறினான்.

வயல் வரப்பில் நடந்து செல்லும்போது அவருக்கு இரவுப் பயணத்தின் நினைவு வந்தது.

தனது இருக்கைக்குப் பின்னால் ஒரு ‘பேரழகி’ உட்கார்ந்திருந்தாள்.

அவள் அவரது கட்டு மஸ்தான உடம்பைக் கண்டு கண்களால் வலை வீசினாள்.

அவரோ கடைசி வரை அவளைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை!

காரணம்,

எங்கே ‘சிங்காரி’யைப் பார்க்கப்போய் ‘சிங்காரச் சென்னை’யினைத்  திரும்பிப் பார்த்துவிடுவோமோ என்ற அச்சமாம்!

(ஞானம் பெருகும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com