6. விளையாட்டா...வினைகளின்  ஆட்டமா?

மனிதனிடம் உள்ள ஆணவம் என்ற அறியாமைதான் அத்தனை பிறவிகளுக்கும் காரணம்;
6. விளையாட்டா...வினைகளின்  ஆட்டமா?

                                    
                        
மனிதனிடம் உள்ள ஆணவம் என்ற அறியாமைதான் அத்தனை பிறவிகளுக்கும் காரணம்; அத்தனை விளையாட்டுக்களுக்கும் காரணம். விளையாட்டு வினையாகும்  திருவிளையாட்டுத்தான் வாழ்க்கை. மற்றவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்களை ஆர்வத்தோடு வேடிக்கை பார்ப்பது மனித இயல்பு. தெருவில் இரண்டு பேர் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களது கோபங்களின் வெளிப்பாடுகளைக் கூர்ந்து கவனிப்பது மனித இயல்பு.

சாலை விபத்துக்களில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பார்கள். அவர்களைக் கூர்ந்து வேடிக்கை பார்ப்பதும் மனித இயல்பு. விபத்துக்குள்ளானவருக்கு இறங்கிச் சென்று உதவி புரிவோர் உண்டு. அப்படி உதவி புரிபவர்களைக் கூட வேடிக்கை பார்க்கும் உதவாக்கரைகளும் உண்டு.

இது கூடப் பரவாயில்லை. விபத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது அவர்களது உடைமைகளைக் கவர்ந்து கொண்டு ஓடி மறையும் கொடியவர்களும் உண்டு! அவர்கள் கள்வர்கள் இல்லை. சூழ்நிலை மனிதனை மாற்றி விடுகிறது என்பதற்கு அவர்கள் அடையாளம். ஆனால் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மாறாத  உறுதியுள்ளம் கொண்டவர்களும் உண்டு. நாம் மற்றவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் விபரீதங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். நம்முடைய வாழ்க்கையில் நடப்பவற்றை  மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். 

எதிர்வீட்டுக்காரருக்கு ஒரு சோதனை;  நமக்கு வெறொரு சோதனை. 

ஒரு மனிதனுக்கு வரும் துன்பத்தை இன்னொரு மனிதனால் அப்படியே உணர முடியாது. அனுதாபப்படலாம். ஆனால் அத்துன்பத்தை வாங்கிக் கொள்ளவோ அப்புறப்படுத்தவோ முடியாது. அகலாத துன்பம்தான் அகத்துக்குள் இருந்து மனிதனைப் பக்குவப்படுத்தும்.

ஒரே வீடு.  ஒரே தாய் தகப்பன். இரண்டே ஆண் பிள்ளைகள்.  ஒருவனுக்கு ஒருவன் மாறுபட்டவனாக இருக்கிறான். இவனுக்கும் அவனுக்கும் ஆகாது.  உடன் பிறப்புகளுக்குள்ளே இத்தனை பெரிய வேறுபாடுகள் ஏன்? இத்தனையும் காரணமில்லாமல் வருவதில்லை.

சிலருக்கு ஆபத்தில் உதவப் போனால்கூட உதவ முடியாது. ஏடாகூடமாக ஆபத்தில் சிக்கிக் கொண்டிருப்பார்கள். எத்தனையோ பேர் இருக்க அத்தனை பேருக்கும் இல்லாத ஆபத்து இவர்களுக்கு மட்டும் ஏன் வந்தது? 

அதுதான் வினை! வினை என்ற சொல்லில் னை என்ற சொல்லை எடுத்துவிட்டு, ளை என்ற சொல்லைப்போட்டுப் பாருங்கள். விளை! வினை என்பது விதை. விளை என்பது முளை! தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான்! ஆனால் இந்த வினைகளையும் விளைவுகளையும் நடப்பித்து வேடிக்கை பார்ப்பவன் இறைவன். வேடிக்கை பார்ப்பவன் என்பதற்காக இறைவனை வெறுப்போடு பார்த்து விடாதீர்கள். வேடிக்கை பார்ப்பவன் என்றால் அவன் நடுநாயகமானவன் என்று பொருள். இருவருக்கும் ஆதரவானவன்.  

விளையாட்டுக்களில் இரண்டு அணிகளையும் இரண்டு கண்களாகப் பாவித்து நடுநாயகமாக தீர்ப்புச் சொல்பவர் ஒருவர் நடுவில் இருந்து இரு சாராரையும் கண்காணித்துக் கொண்டிருப்பார். வினைகளோடு போராடுபவன் மனிதன் தெரிந்தே ஏற்படுத்திக் கொள்ளும் ஆபத்தான விளையாட்டுக்களுக்கு இறைவன் பொறுப்பல்ல. அதனால்தான் தண்டனை வரும்போது இறைவன் தள்ளி நின்று கொள்கிறான். ஆனால் அபயக் குரல் கொடுத்தால் அப்போதும் கூட, அவர்களுக்கும் கை கொடுக்கிறான்!

கொடியவனாக இருந்தாலும் கூட சோதனை  என்று வரும் போது தாள முடியாமல் அழுது புரண்டு அழைத்தால் அவனையும் ஆதரித்து அரவணைப்பவன் இறைவன். அவனுக்குத் தேவை மனமாற்றம். மனிதன் தன் தவறுகளை உணர வேண்டும். திருந்த வேண்டும். தெரியாமல் ஏற்படுத்திக் கொள்ளும் ஆபத்தான விளையாட்டுக்களை இறைவன் எள்ளி நகையாடுகிறான். குற்றமிழைப்பவர்கள்  அவர்களையும்  அறியாமல் ஒரு தடயத்தை விட்டு விட்டுப் போவார்கள்.  

தானே அறியாமல் தன் தடயத்தை விட்டு விட்டுப் போகிற குற்றவாளி, ஒரு அடி முட்டாள். அவனே அவன் தடயத்தை அறியாதபடி விட்டுச் செல்ல வைப்பவனோ இறைவன், அதனால் அவன்  அதீதப் புத்திசாலி! குற்றவாளி அறிந்தோ அறியாமலே தடயத்தை விட்டுச் செல்வது உண்மை. அந்த தடயமே அவனைக் கைது செய்து குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டனை வாங்கித் தந்துவிடுவதும் உண்மை. தான் செய்த குற்றம் எவருக்கும் தெரியாது என்று கருதிக் கொண்டிருப்பான் குற்றவாளி. ஆனால் அந்தக் குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனையைத் தேடித்தான் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை அவனே அறியாமல் இருப்பான். இப்படித்தான் இறப்பையும் பிறப்பையும் தேடித் தேடிப் போய்க் கொண்டே இருக்கிறான் மனிதன். முற்பிறப்பும் பிற்பிறப்பும் மனிதன் தன்னைத் தானே பக்குபவப்படுத்திக் கொள்ள வேண்டி தானே ஏற்படுத்திக் கொண்டவை. வாழும் போது நல்லதும் செய்கிறோம்;  கெட்டதும் செய்கிறோம். எப்போதோ நடந்து முடிந்து போன விஷயங்கள் என்று மறந்து போன விஷயங்கள்.  ஆனால் நினைவு தோன்றாத காலத்தில் நடந்ததுகூடக் கணக்கில் பதிவு  செய்யப்பட்டுள்ளன என்ற உண்மை பலருக்குத் தெரியாது. 

மனிதன் செயல்படு பிறவி. அவனால் எதுவும் செய்யாமல் சும்மா இருக்க முடியாது. கடுந்துறவு பூண்டு குகைகளிலும் காடுகளிலும் போய் உட்காருபவன் துறவி.  அவனால் சும்மா இருக்க முடியும். ஆனால் மனிதனால் அப்படி இருக்க முடியாது. அவனது ஐம்புலன்களும்  கண், காது, மூக்கு, நாக்கு, உடல் ஆகிய ஐம்புலன்களும் ஏதாவது ஒன்றைச் செய்யச் சொல்லி மனிதனை இழுத்துக் கொண்டே போகின்றன. மனிதனும் அவற்றின் ஆசைகளுக்குப் பலியாகிறான். சிக்கல் என்று வரும் போதுதான் உணர்கிறான். சிக்க வைத்த புலன்களே நம்மைப் பார்த்துத் திருப்பிக் கேட்கும்.  நான்தான் இழுத்தேன். நீ வந்திருக்கலாமா? என்று நம்மையேத் திருப்பிக் கேட்கும். நம்முடைய கை விரலை இழுத்து நம் கண்களில் கொண்டு போய் நாமே குத்திக் கொண்டதாய் குத்த வைக்கும்! அவசரப்பட்டு விலைமாதிடம் போய் அரை நிமிடத்திற்குள் ஆட்கொள்ளி நோயை வாங்கிக் கொண்டவன் அந்த விலை மாதுவை பயங்கரமாக வசை பாடினான்.

நானே விலைமாது. என்னிடம் நீ வரப் போய்த்தானே? என்று ஒரே வரியில் சொல்லி விட்டு எள்ளி நகையாடினாள். இதெல்லாம் என் வாழ்க்கையில் ஏன் நடக்கிறது. நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன்?  என்று நாம்  புரியாத புதிரோடு மூளையைக் கசக்கிக் கொள்ளும் சம்பவங்கள் நிறைய நிகழும். அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு பின்னணி உண்டு. மொபைல் ஃபோன் இன்றைக்கு அத்துப்படி. அவை அறிமுகமான புதிதில் பலவிதமான குழப்பங்களைத் தோற்றுவித்தது. மொபைல் பயன்படுத்திய அனைவருமே  அவற்றை அறிவார்கள்..

அலைபேசியில் முன்பின் தெரியாதவர்களோடு பேசத் தெரியாமல் பேசிவிடுவார்கள். விளக்கிற் பட்ட விட்டில் பூச்சி போல சட்டத்தின் பிடிக்குள் சிக்கிக் கொண்டு மீண்டவர்கள் ஏராளம். விமலா ஒரு கல்லூரி மாணவி. மிக நல்ல குடும்பத்துப்  பெண். அவளது வீட்டுக்குத் திடீர் என்று போலீஸ்  ஜீப் வந்து நின்றது. காரணம்  இல்லாமல்  போலீஸ்  ஜீப் தெருவுக்குள்ள வராதே. இந்தத் தெருவில் யாராவது தப்புப் பண்ணியிருப்பாங்க. அதனால்தான் போலீஸ் வந்திருக்கு என்று தன் தாயாரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் விமலா. போலீஸ் அவள் வீட்டுக்கே வந்து கதவைத் தட்டியது. கதவைத் திறந்து பார்த்ததும் பேரதிர்ச்சி!

விக்னேஷ்ங்கறது யாரும்மா?

வீட்டில் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். 

என்னாச்சு? படபடக்க வந்து கேட்டாள் அம்மா. வியர்க்க வியர்க்க வந்து நின்றார் அப்பா. விமலா தன் வீட்டு வாசலில் போலீஸ் வந்து நிற்பதைக் கண்டு ஆயிரம் கம்பளிப்பூச்சிகள் தன்மேனியில் ஊர்வதைப் போல உணர்ந்தாள்.

விக்னேஷ் எங்க புள்ளதாங்க. கடைக்குப் போயிருக்கான். ரொம்ப சமத்துப் புள்ள. ஒரு வம்பு தும்புக்கும் போக மாட்டான். நாங்க அந்த மாதிரி அவனை வளாத்திருக்கோம் என்றாள் அம்மா.

என்ன விஷயம்னு சொல்லுங்க.. நீங்க வீடு மாறி வந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.. என்றார் அப்பா.

தான் படித்தவள் என்ற தைரியத்தில் என்ன விஷயம்.. எதற்காக இங்கு வந்தீர்கள்.. என் அண்ணனைப் பத்தி எதுக்காகக் கேட்கறீங்க என்று ஆங்கிலத்தில் துணிச்சலுடன் கேட்டாள் விமலா.

அந்தப் பையன் ஒரு பொண்ணுக்கு அலைபேசியில பேசி டார்ச்சர் கொடுத்திருக்கான்!  வயசுப் பசங்களுக்கு இது பொழுதுபோக்கு. இந்த மாதிரிக் கம்ப்ளைண்டுகள் நிறைய வருது. விசாரிச்சுப் வருமாறு எஸ்.ஐ. அனுப்பிச்சாரும்மா.. என்றார் போலீஸ்காரர்.

தப்புத் தப்பு. நீங்க வீடு மாறித்தான் வந்துட்டீங்க.. என்று தந்தையார் போலீசை எச்சரிப்பது போல ஆட்காட்டி விரலால் சொன்னார்.

இல்லை. இது அவர் நம்பர்தானே பார்த்துச் சொல்லுங்க.. என்று அந்த போலீஸார் நம்பர்களை எழுதிக் காட்டினார்.

வாங்கிப் பார்த்த விமலாவுக்குத் தலை சுற்றியது. தன் தலையிலேயே ஓங்கி அடித்துக் கொண்டாள். 

இந்த நம்பர் மேலதாம்மா,  அந்தப் பொண்ணு ஈவ்- டீஸிங் பண்றாங்கன்னு கம்ப்ளெயிண்ட் பண்ணியிருக்கு.

விக்னேஷை எத்தனை நல்லவன்னு நம்பியிருந்தோம் என்று அந்தக் குடும்பத்தினர் மரம் சாய்ந்தது போல, மனம் சாய்ந்து போய் விழாமல் நின்றார்கள்!

அந்தச் சமயம் பார்த்து விக்னேஷும் வீட்டுக்குள் நுழைந்தான்.

என்னடா காரியம் பண்ணிட்டு வந்து நிக்கற? என்று அம்மா அப்பா அக்கா மூவரும் அவனைப் பார்த்து அக்னி ஜ்வாலைப் பார்வையுடன்  கேட்டார்கள். 

அவனிடம்  போலீஸார் விவரத்தைக் கூறிய போது அவன் யோசித்தான்.

நல்லா யோசிடா யோசி. நீ நல்லவன்னு நெனைச்சிட்டு இருந்தோம். எங்க தலையில மண்ணை அள்ளிப் போட்டுட்டே.த்தூ.. வெட்கமா இல்லை உனக்கு?... அதைவிட ஒழுங்கா ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டுப் போயிருந்திருக்கலாம் ..ச்சே....என்று பொரிந்து தள்ளினாள் அம்மா.

அம்மா, ரொம்பப் பேசாதம்மா...என்ற விக்னேஷ், இந்த நம்பர் என் நம்பர்தான் சார்..  ஆன..  ஆனா.. .. சொல்ல முடியாமல் விக்கித்துப் போனான்  விக்னேஷ்.

இந்த நம்பருக்குரிய சிம்-கார்டு என்கிட்ட இல்ல. என் அக்கா விமலா மொபைல்ல தான்  இருக்கு. ரெண்டு வருஷத்துக்கு முன்னால நான் இந்த சிம்கார்டை உனக்குக் குடுத்ததை மறந்துட்டியா விமலா? நீ யாருக்காவது  கால் பண்ணினியா? என்று கேட்டான் விக்னேஷ்.

இப்போது அப்பா, அம்மா, விக்னேஷின் பார்வை மகளின் பக்கம் காற்றடித்த ஜ்வாலையாகச் திசை மாறியது.  

இம்ப்பாஸிபிள்! இம்ப்பாஸிபிள்! என்று கத்திய விமலா கம்ப்ளெயிண்ட் குடுத்தவங்க நம்பரைச் சொல்லுங்க சார் என்றாள்.

நீ யாருக்காவது  அடிக்கடி ஃபோன் பண்ணினியாம்மா? என்று கேட்டார் அந்த போலீஸ்காரர்.

எல்லோருமே கைகளைப் பிசைந்து கொண்டு நின்றார்கள். 

நல்ல குடும்பமாத் தெரியுது. இந்த நம்பரைச் சொல்லக் கூடாதுதான். ஆனாலும் நான் உங்களுக்காகச் சொல்றேன். கம்ப்ளெயிண்ட்  குடுத்தது  ஒரு பொண்ணு. பேரு சியாமளா.

விமலாவுக்கு இதயத் துடிப்பு திக் திடீரென்று நின்று போனது. பின்னர் புன்னகையோடு மெல்லத் துடிக்கத் தொடங்கியது. 

அப்போதும்  அவள் வாயிலிருந்து வார்த்தைகளும் வரத் தொடங்கியது.

கரெக்ட் சார்,  சியாமளா,  சைதாப்பேட்டையிலிருக்கா, சென்னைக்குப் புதுசா வந்திருக்கற  பொண்ணுதானே?  அவ ஒரு அக்கவுண்ட் ஆபீஸ்ல ஒர்க் பண்ணிட்டிருக்கா, சரிதானா?

எல்லாம் சரிதான். இந்தப் பொண்ணை உனக்குத் தெரியுமாம்மா?

என்னோட உயிர்த் தோழி சார் இவ. இப்பத்தான் மதுரையில இருந்து சென்னைக்கு  குடும்பத்தோட குடி மாறி வந்திருக்கான்னு கேள்விப்பட்டேன். அவளை ஃபோன்ல கூப்பிட்டுக் கொஞ்சம் கலாய்க்கலாம்னுதான் கால் பண்ணினேன்.  அவ குரலைக் கேட்கணும்னு ஆசை. அதனாலதான் கூப்பிட்டுக் கூப்பிட்டு கட் பண்ணினேன். அவ யாரு யாருன்னு கேட்டுக் கேட்டுத் தவிக்கறதை  மனக் கண்ணால பார்த்து ரொம்ப ரசிச்சேன் சார். சாயங்காலமா வெளிப்படையாப்  பேசிடலாம்னு இருந்தேன். அதுக்குள்ள அவசரப்பட்டு அவளே போலீஸ்ல  கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டா சார். விளையாட்டு வினையாகும்னு தெரியலை சார்.. அவசரத்துல தப்பு நடந்து போச்சு. என்னை மன்னிச்சிடுங்க சார். என்னோட தம்பியோட  சிம்- கார்டை  நான்தான் யூஸ் பண்ணிட்டு இருந்தேன். அதை மறந்துட்டேன்.  அதனால அவன் மேல வீண் பழிவிழப் பார்த்துச்சு. நல்ல வேளை தப்பிச்சோம்... என்று சொல்லி அந்த போலீஸ்காரரிடமே  தனது ஃபோனைக் கொடுத்து பேசச் சொன்னாள்.

சின்னப் பிள்ளைகள் விளையாட்டுக்கு கூட எங்களை  விட்டு வைக்க மாட்டறீங்களேம்மா என்று  சொல்லிவிட்டுச் சிரித்தபடியே விடைபெற்றுக் கொண்டு வெளியேறினார் அந்த போலீஸ்காரர்.

இதுதான் விளையாட்டு வினையான சம்பவம்.

இது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு.

ஆனால் இதைவிடக் கொடுமையான விளையாட்டுக்கள் கூட நிறைய இருக்கிறது. இப்படியும் கூட நடக்குமா? என்று வியப்பின் உச்சத்திற்கு நம்மைக் கொண்டு போகும் விளையாட்டுக்கள் கூட உலகில் இருக்கிறது. விளையாட்டுக்கள் யாவும் வினைகளின், ஆட்சிகள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

ஞானம் பெருகும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com