20. தாவும் மனக் குரங்கு

சிறந்த இறை நெறி சிவநெறிதான் என்பதை அனுபவம்தான் உணர்த்த முடியும் என்று சென்ற இதழில் பார்த்தோம்
20. தாவும் மனக் குரங்கு

சிறந்த இறை நெறி சிவநெறிதான் என்பதை அனுபவம்தான் உணர்த்த முடியும் என்று சென்ற இதழில் பார்த்தோம்.

அனுபவம் இல்லாவிட்டால் அவன் அறிவில்லாதவன். அறிவிருந்தும் அவன் அனுபவங்களை உணரவில்லை என்றால் அவன் ஒரு விலங்கு.

விலங்கிலிருந்து வந்தவன் மனிதன். இடைப்பட்டநிலையில் அவன் தங்கித் தடம் மாறிய பிறவி குரங்குப் பிறவி. அதனால்தான் இரண்டு சொல்லும்  “ங்கு “ங்கு என்று முடிகிறது. குரங்குக்கும் மனிதனுக்கும் ஒற்றுமை உண்டு. இலை தழைகளை எல்லா விலங்குளுமே உண்கின்றன. ஆனால் குரங்கு போல எல்லா விலங்குகளுமே குதித்தாடுவது இல்லையே!

குரங்கானது, மனம் போனபடி எல்லாம் தாவும். இந்தக் கிளையிலிருந்து  அந்தக் கிளைக்கும், அந்தக் கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கும் தாவிக் கொண்டே இருக்கும். மனம் அடங்காதது என்பதற்கு உதாரணம்தான் குரங்கு. குரங்கிலிருந்து வந்த மனிதனுக்குக் “குரங்குக் குணம் இன்னும் போகவில்லை!

சேட்டை மிக்கச் சிறுவர்களை 'வால் மட்டும்தான் இல்லை' என்று சொல்லுவார்கள்.

குழந்தையின் சேட்டையும் குரங்கின் சேட்டையும் வேறு வேறு இல்லை. இங்கும் அங்கும் ஓடித் திரிவதும், குதித்து ஆடுவதும் சின்னப் பிள்ளைகளின் இயல்பு.

குழந்தை வளர வளர உடல் சார்ந்த குதியாட்டங்கள் அடங்கிவிடுகின்றன. ஆனால் மனதுக்குள் அந்த ஆட்டங்கள் மிகுந்து விடுகின்றன.

குரங்கு எப்போதுமே குதித்து ஆடும்.

ஆனால் அடக்கி வைக்கப்பட்டுள்ள மனதோ எப்போதாவது ஒரு சமயம் பீறிட்டு வெளிப்படும். அப்போது குரங்கைவிட அதிகமாகவே குதித்தாடும்!

நெசப்பாக்கம் பகுதி வாடகை வீட்டில் குடியிருந்தேன், மாடியில்.

கீழ்வீட்டில் இருந்த ஒரு பெண்மணி அடக்க ஒடுக்கமாகக் காணப்படுவார். அன்ன நடைபோலத்தான் எட்டு வைத்து நடப்பார்.

ஒருநாள் இரவு எட்டு மணி இருக்கும்.

நான் மாடிப்படியில் உட்கார்ந்திருந்தேன். நான் அமர்ந்திருப்பது அந்த அம்மணிக்குத் தெரியாது.

கீழ்வீட்டு வாசலுக்கு எதிரே சற்றுத் தள்ளி கால்களை அலம்பும் இடம் இருந்தது.

வேலைக்குப் போய்விட்டுத் திரும்பிய அந்தப் பெண்மணி அவ்விடத்தில் கால்களுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்.

வீட்டுக்குள்ளிருந்து அவளது மகள்  அம்மா இன்னிக்குச் “சிக்கன் கொழம்பு!” என்று குரல் கொடுத்ததுதான் தாமதம்.

சேலையை முழங்காலுக்கு மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டு இரண்டே எட்டில் படிகளைத் தாண்டி வீட்டுக்குள் பாய்ந்து மறைந்துவிட்டார்!

சிக்கன் என்றதும்  அச்சம், மடம், நாணம் அடக்கம் ஒடுக்கம் அத்தனையும் காற்றில் பறந்து விட்டது, யாரும் பார்க்காததால்!

நான் உட்கார்ந்திருப்பது தெரிந்திருந்தால் அடக்கி “வாசித்திருப்பார்!

சந்தர்ப்பம் கிடைத்தால் மனிதனின் சுயரூபம் தெரிந்துவிடும்.

ஆனால் சுயரூபங்கள் பக்குவநிலையைப் பொறுத்துத்தான்  தெரியவரும்.

அறிவைப் பிரயோகிக்கும் மனிதனே பக்குவப்படுகிறான்.

அறிவைப் பிரயோகிக்காதவன்  பக்குவமற்றவன்.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்-

சென்னை வந்த புதிதில் ஒரு  புகழ்பெற்ற திரைப்பட நடிகையின் வீட்டில் உதவி மேலாளராகப் பணியாற்றினேன். அவர் தனது பங்களாவை விட்டுவிட்டு அடிக்கடி சொந்த ஊருக்குப் போய்விடுவார்.

அவர் எனக்குச் சமைத்துப் போடுவதற்கென்று பிரத்யேகமாக ஒரு வேலைக்காரப் பெண்மணியை வைத்திருந்தார். அந்த சமையல்காரப் பெண்மணியின் கணவன் ஊரில் இருப்பதாகவும் அவருடன் அவளது மகனும் இருப்பதாகச் சொல்லியிருந்தார்.

அந்த வீட்டைநிர்வாகம் செய்ய வேண்டிய மிகப் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருந்தார் அந்த நடிகை.

வேலைக்காரப் பெண்மணி வசீகரமானத் தோற்றமுடையவர்.

எனக்கும் அது நல்ல பருவம்தான்.

மார்கழிக் குளிர்காலம் அது.

நான் எனது அறையில் படுத்துக் கொள்வேன். இரவில் நான் பங்களாவிற்குள்ளே தாராளமாகச் சென்று வரலாம்.  அந்தச் சமையல்காரப் பெண்மணியோ தனது அறைக் கதவைத் தாழிடாமலேப் படுத்துக் கொண்டு உறங்குவார்.

அந்தச் சந்தர்ப்பம் எப்படிப்பட்ட மனிதனையும் குற்றவாளியாக்கிவிடும்!

அந்தக் காலத்தில் “மொபைல் கிடையாது. எனக்கென்று உள்ள அலுவலக டேபிள் ஃபோன் மட்டும்தான் இருக்கும். அதில்தான் தகவல்கள் வரும்.

மேடம் எப்போது வருவார்கள் என்று தெரிந்து கொள்வதற்காகத் தினமும் அந்த நடிகையின் ஓட்டுனர், மேக்கப் மேன், ஹேர் டிரஸ்ஸர்கள் நடிகையின் வீட்டு அலுவலகத்துக்கு வந்து உட்காருவார்கள். என்னிடம் அவர்கள் மிகவும் நன்றாகப் பழகுவார்கள். மனம் விட்டுப் பேசுவார்கள்.

அப்படி வந்த அனைவருமே என்னிடம் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் தவறாமல் கேட்க ஆரம்பித்தார்கள்.

என்ன மேனேஜர் சார். ராத்திரி எப்படி இருந்தீங்களா? என்று கண்ணடிப்பார்கள்.

எப்படி இருந்தேனா. நிறைய எழுதினேன். நன்றாகத் தூங்கினேன்  என்பேன்.

வேற ஒண்ணும் பண்ணலையா? என்று கேட்பார்கள்.

வேற என்ன பண்ணணும்?  என்று அப்பாவித்தனமாகக் கேட்பேன்.

அப்போது காபி கொண்டு வந்து நீட்டும் சமையல்காரியை ஓரக் கண்ணால் குறும்புடன் பார்ப்பார்கள்.

ஸ்பூனைக் கொண்டு காபியைக் கிண்டியபடியே என் வாயைக் கிண்ட ஆரம்பித்தார்கள்.

அந்தப் பெண்மணி உள்ளே போன பிறகு வெளிப்படையாகவே கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

என்ன சார், தனியா இருக்கீங்க. இவ்வளவு பெரிய பங்களாவையும் பொண்ணையும் ஒங்களுக்காக விட்டுட்டுப் போயிருக்காங்க மேடம்,  அருமையான சான்சு,  மார்கழிக் குளுரு வேற வாட்டி வதைக்குது.  ராத்திரியெல்லாம் ஒரே “ஜாலியா இருக்கலாமே, யார் கேட்கப் போறாங்க? என்று கேட்டார்கள்.

எனக்குத் தூக்கி வாரிப்போட்டது!

சுத்த மோசமானவர்களாக இருக்கிறார்களே, யாரிடம் வந்து என்ன கேட்கிறார்கள் என்று கொதிப்புற்றேன்.

மேடம் என்னை 'அந்தப் பணிக்காக இந்தப் பணியில் வைக்கவில்லை. நான். இந்த உடைமைகளை  எல்லாம் வேலி போல்  நின்று நிர்வாகம் செய்ய வேண்டும். எனக்குச் சமைத்துப் போடுவதற்கென்றுதான் அந்தப் பெண்மணியை வைத்திருக்கிறார்கள். வேறு எதற்காகவும் அல்ல, அதைப் புரிந்து கொள்ளுங்கள் ' என்றேன்.

மறுநாள் வரும்போதும் அது பற்றியே துருவித் துருவிக் கேட்டார்கள்.

பாருங்கள்,  சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டால் மனசாட்சியே என்னை மன்னிக்காது. வயிற்றுப் பிழைப்புக்காக வந்திருக்கும் பெண்மணியைப் தொந்திரவு செய்வது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா? இனிமேலும் இது பற்றியெல்லாம் என்னிடம்  கேட்காதீர்கள். அப்படிக் கேட்டால் மேடம் வரும் போது புகார்  செய்து விடுவேன் என்று கூறினேன்.

நீங்க சுத்த வேஸ்ட்டு சார். யாருக்கு எந்த மாதிரி வேலையக் குடுக்கணும்னு  கடவுளுக்கே தெரியலை சார், எங்களுக்கு மட்டும் இந்த மாதிரிச் சான்சு  கிடைச்சிருந்தா கதைய வேறங்க சார்.  நீங்க இளமையை வீணாக்குறீங்க ச்சே, இப்பத் தெரியாது, பின்னால வருந்துவீங்க என்று எனக்காக வருந்திக் கொண்டே சென்றார்கள்.

இதனை இதனால் இவன் செய்வான் என்றாய்ந்து

அதனை அவன் கண் விடல்

 என்ற திருவள்ளுவரின் குறளின் படிதானே இருந்து கொண்டிருக்கிறேன் என்று எண்ணியபடியே அவர்கள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சந்தர்ப்பம்  வருவதும் தப்பு செய்வதும் சராசரி மனிதனின் இயல்பு.

தண்டனை  கிடைக்கும்போது தவறை உணர்வான்.

சந்தப்பம் வரும்போதுகூடத்  தப்பு செய்யாதவன்  பக்குவப்பட்ட மனிதன்.

நான் பஞ்சும் நெருப்புமான “பருவ வயதிலேயே நிறையப் பக்குவப்பட்டிருந்தேன்.

அதேசமயம், மிகப்பெரிய சந்தர்ப்பங்களும் மனிதனுக்குக் கூடி வரக்கூடும்.

விசுவாமித்திரர் அவ்வளவு பெரிய துறவி. மேனகையின் அழகில் மயங்கியதும் அவளோடு கலந்து சகுந்தலை பிறந்ததும் நடந்தேற வேண்டிய வினைகள்!

புனிதமான பின்னணி ஒன்று அப்புராணக் கதையில் மறைந்திருக்கிறது.

எல்லோருக்கும் அது அமையாது.

நமது ஆசைகள்  பிறர் நலனைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

அப்படிப் பட்ட சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்தததை எண்ணி இன்று பெருமைப்படுகிறேன்!

ஐம்புலன் இன்பம் என்ற வேடர்களின் அம்புகளுக்குப் பலியாகாமல்  தாண்டி வந்திருப்பது ஒரு சாதனைதானே!

இது போன்ற இழப்புக்கள் ஏராளமாக என் இளமைக் காலத்தை நிரப்பியிருக்கிறது.

இழப்புக்களால் நிரப்பப்பட்ட வாழ்க்கைதான் என் வாழ்க்கை.

அது ஒருவகையில் துரதிர்ஷ்டம்.

அந்த இழப்புக்களை எல்லாம் எண்ணிப் பார்த்தால் எனக்கே பெருஞ்சோகமாகிவிடும்!

குரங்கு மனம் இன்னும் நமக்குள் குழி தோண்டிப் புதைக்கப்பட்ட நிலையில்தான் இருக்கிறது.

குரங்காட்டி வித்தை காட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். குதிடா ராமா குதிடா ராமா என்று அவன் சொல்லச் சொல்ல அது பல்டியடிக்கும். அத்தோடு அங்குமிங்கும் ஓடப் பார்க்கும்.

உடனே தனது கையிலிருக்கும் சிறிய கோளால் அதன் தலையில் ஒரு தட்டுத் தட்டுவான். அடிக்குப் பயந்து அப்படியே உட்கார்ந்துவிடும். சாட்டைக்கு வண்டி மாடுகள் கட்டுப்பட்டு இழுப்பது போல இந்தக் குரங்குகளும் குரங்காட்டிக்குக் கட்டுப்பட்டு  நிற்கும்.

அது போல வளர்ந்த மனிதனுக்கும் ஒரு மனக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. அதற்காக ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு குரங்காட்டி வைக்க முடியுமா?

அவனவனுக்குள் ஒரு மனக்கட்டுப்பாடு வேண்டும். அதுதான் மாற்றுச் சிந்தனை.

மாற்றுத் சிந்தனைகள் மனிதனைப் பக்குவப்படுத்தும்.

பேராபத்தான சூழலில் சிக்கிக்  கொண்டிருப்பது போன்ற கனவுகள் வரும். என் வாழ்க்கையில் இப்படி ஒரு பேராபத்து வந்து விட்டதே என்று துடிதுடித்துக் கொண்டிருக்கும்போது “சட்டென்று விழிப்பு வந்துவிடும். வீட்டுக்குள் இருளில் தெரியும் ஜன்னல்களும், திரைச்சீலைகளும். அப்பாடா  நல்ல வேளை கனவுதானா இது என்ற ஆறுதலை ஏற்படுத்தும்.

அவை எல்லாம் எதைக் காட்டுகின்றன என்றால் ஒரு மனிதன் தனக்கு கிடைக்காமல் போனவற்றைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். அப்படிக் கிடைத்திருந்தால் அவற்றால் அவன் பல்வேறு ஆபத்துக்களில் சிக்கிச் சீரழிந்திருப்பான் என்பதைச் சொல்லாமல் சொல்லிச் சுட்டிக் காட்டுகின்றன. காட்டுவிப்பவன் இறைவன்.

உறக்கத்தின் போது உயரமான இடத்திலிருந்து திடீரென்றுக் கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்பட்டுப் பயந்து போய் கண்விழிக்க நேரிடும்..

இதற்குப் பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடுதான் காரணம்.

ஆதி மனிதன் விலங்குகளுக்கு அஞ்சி மரக்கிளைகளில் ஏறிப் படுத்திருந்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது அவனையும் அறியாமல் தவறிக்  கீழே விழ நேரிட்டு விலங்குகளுக்குப் பலியானான்.

ஆழ்மனதில் பதிந்து போன அதிர்ச்சியின் தொடர்ச்சிதான் வெளிப்படுகின்றன  என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

விலங்கினங்கள்  உணவைத் தேடியோ, உயிருக்குப் பயந்தோ குறிப்பிட்ட திசையை நோக்கிப் பாய்ந்து செல்லும். கங்காரு போன்ற விலங்கினங்கள் குதித்தபடியே மணிக்கு  50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

ஆனால் அதற்கு ஒரு இலக்கு இருக்கும்.

ஆனால் குரங்கு மட்டுமே எந்த இலக்குமே இல்லாமல் குதிக்கும்!

மரத்தைவிட்டுக் காரணம் இல்லாமல் இடம் பெயராது. தண்ணீர் இல்லாத காலத்தில் மட்டும் தாகத்தினால்  ஊருக்குள் வந்துவிடும்.

மற்றபடி மரக் கிளையில் உட்கார்ந்திருக்கும்போதே சுழன்று சுழன்றுப் பார்க்கும்.

கிளை விட்டுக் கிளை தாவி மரத்துக்குள்ளேயே தன்னைப் “பந்தாடும்”.

அந்த மரம் ஒன்றுதான் அதற்குப் பூர்வீகம்.  உச்சிக்கொம்பு வரை மேலேறிக் கீழிறங்கும். கிளைகளுக்கு மாறும்.   களைத்தால் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை பார்க்கும்.

மனித மனமும் அப்படிப்பட்டதுதான். மனிதன் தனக்குள்ளே கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டால் அவனுக்கு இறைவனே தேடி வந்து உதவுவான்.

நல்ல மனிதனை இறைவனே சுற்றிச் சுற்றி வந்துப் பாதுகாக்கிறான் என்பது அனுபவ பூர்வமானக் கண்டுபிடிப்பு. ஆனால் இறைவனை மறந்துவிட்டு எவற்றுக்கெல்லாமோ ஆசைப்பட்டு அலைந்து வீணாகிறான் மனிதன்!

ஞானம் பெருகும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com