சுடச்சுட

  
  Let_Go_and_let_God_how_to_surrender_to_God_2048x

   

  இறைவன் இரக்கமுள்ளவன். அவன் மனிதனுக்கு இறுதியாக ஒரு வாய்ப்பைத் தருகிறான்!

  அதை மனிதனே உணரவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறான்.உணர்ந்தவனுக்கு உய்வு. உணராதவனுக்குத் தொய்வு. அதுதான் சரணாகதி! என்பது வரைச் சென்ற வாரம் பார்த்தோம். 

  சரணாகதி அடைந்தால் இறைவன் நம்மை ஆதரிப்பான், அரவணைப்பான். காத்தருள்வான், உயிரைக் கூட மீட்டுத் தருவான்.

  சரணாகதியா அது என்ன புதுக்கதையாக இருக்கிறது என்போர் இன்றைக்கும் இருக்கிறார்கள். 

  அவர்கள் எதற்கெல்லாம் சரணாகதி  தெரியுமா?

  தனக்கு இன்ன  இன்ன உணவுதான் பிடிக்கும் என்பது ஒரு சரணாகதி!

  எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி கமல், அஜித் விஜய் படங்கள்தான் பிடிக்கும் என்பது சரணாகதி.

  இந்த நடிகைதான் பிடிக்கும் என்று அலைவது சரணாகதி.

  இவனைத்தான் / இவளைத்தான் கல்யாணம் பண்ணுவேன் என்று அடம்பிடிப்பது சரணாகதி.

  திருமணத்திற்குப் பின்னர் மனைவியிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுச் நிம்மதிப் பெருமூச்சு விடுவது சரணாகதி.

  அதற்காக மனைவிக்கே அடிமையாகிப் போவதும் ஒரு சரணாகதி.

  அடிமை என்ற தலைப்பின் கீழ்  எவற்றை எல்லாம் எழுத வேண்டுமோ அவற்றையெல்லாம் எழுதிக்கொள்ளுங்கள்.

  அவை எல்லாமே சரணாகதிதான்.

  அடியார்க்கு அடியார் சிவன் என்பது சைவ நெறி.

  மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே என்ற சுந்தரமூர்த்திகளின் தேவாரப் பாடல் இறைவனுக்கு அவர் அடிமையாக (சரணடைந்த நிலை) இருந்தமையைக் காட்டுகிறது. 

  பரந்துலகு ஏழும் படைத்த பிரானை
  இரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும்
  நிரந்தகமாக நினையும் அடியார்
  இரந்துண்டு தன் கழல் எட்டச்செய்தானே

  ஏழுலகையும் படைத்த சிவனைத் தொழும் 'அடியார்க்கு' (சரணடைந்தார்க்கு) தன் திருவடிகளையும் காட்டக் கூடியவன் இறைவன்.

  அவன்பால் அணுகியே அன்புசெய்வார்கள்
  சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
  அவன்பால் அணுகியே நாடும் அடியார்
  இவன்பால் பெருமை இலயமது ஆமே.

  என்ற பாடலில் சிவனடியார்களுக்கு அன்பு செய்யும் சிவனடியார்களைச் சிவனது அருள் சென்றடையும் என்றும் திருமூலர் அடிமையாதலை (சரணடைதலை)ப் பற்றி விளக்குகிறார்.

  இறைவனை அனுபவித்து இன்புற்றவர்களுக்குத்தான் தெரியும் 'அடிமை’ என்பது என்னவென்று. 

  புத்தம் சரணம் கச்சாமி என்றார் புத்தர்.

  புத்தம் என்றால் புத்தி அறிவு ஞானம். ஒவ்வொருவரும் தத்தமது உள்ளத்தைப் பகுத்து ஆராய்ந்து உய்த்து உணர்ந்து அறிவில் சரண் புக (அடிமையாதல்) வேண்டும் என்பதே புத்தர் சொன்ன தத்துவம்.

  இறைவனைத் தன்னுள் அறிந்துவிட்டால் தனக்கே தான் அடிமைதானே. அதுதானே முழுமையான பக்தி நெறி!

  இறைவனை அறியாமல் 'தான் தனது' என்ற ஆணவத்தினால் உலக இச்சைகளுக்கு அடிமையாகிறான் மனிதன். 

  பொருள் அடிமை வேறு  அருள் அடிமை வேறு.

  நான் எனது என்ற ஆணவங்களையும் ஆசைகளையும் அகற்றி இறைவனை த் தனக்குள்ளே அறிந்து சிவமாதல் வேண்டும்.

  அப்படிப்பட்டவர்களைத்தான் '...அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே என்கிறார் திருமூலர்.

  மார்க்கண்டேயர் வரலாறு

  மிருகண்டு மருத்துவதி தம்பதிகளுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை. திருக்கடையூர் அமிர்த கடேசுவரர் ஆலயம் சென்று பிள்ளை வரம் கேட்கிறார்கள். 

  வினைப்படி அத்தம்பதிகளுக்கு ஒரு நிபந்தனை வைக்கிறார் சிவன். 

  தீயவனாக நீண்ட காலம் வாழும் பிள்ளை வேண்டுமா? ஒழுக்கமாகவும் பக்தியாகவும் பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழக் கூடிய பிள்ளை வேண்டுமா என்று கேட்கிறார்.

  இறைவன் கேட்டதில் தப்பில்லை. 

  ஹோட்டலுக்குப் போகிறோம்.

  அன் லிமிட் மீல்ஸ் இருக்கிறது. நிறைய காய்கறிகள் அயிட்டங்கள் இருக்கும். விலையும் அதிகம்.

  லிமிட்ட் மீல்ஸ் இருக்கிறது. அளவான காய்கறிகள்தான் இருக்கும் விலையும் குறைவு என்கிறார்கள். 

  நீங்கள் எதைத் தேர்ந்து எடுப்பீர்கள்?

  அந்தத் தம்பதிகள் லிமிட்டடு மீல்ஸைத்தான் தேர்ந்தெடுத்தார்கள். கொஞ்சமாய்ச் சாப்பிடுபவர்கள்தான்  நீடு வாழ்கிறார்கள்.

  அடியேன் யோகாவில் இருப்பதால் வயதானவர்களைக் காண நேரிட்டால் தாங்கள் என்னென்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்பது வழக்கம். 

  நான் எடுத்த புள்ளி விவரங்கள் அனைத்துமே பொதுவாகச் சொல்லும் ஒரே சேதி. அளவுச் சாப்பாடுதான் ஆரோக்கியத்தின் அடிநாதம்.

  காலையில் நான்கு இட்லி, அல்லது இரண்டு பூரி, மதியம் ஒரு கப் சாப்பாடு (கால் கிலோ அளவு) காய்கறிகள், இரவு இரண்டே இரண்டு பழம், பால், அவ்வளவுதான். 

  அப்படிச் சொன்னவர்களே தொன்னூறு, நூறு வயதைக் கடந்து வாழ்கிறார்கள்!

  வயிறு புடைக்க உண்போரையும் கண்டு அவர்களது கருத்துக்களை அறிய ஆசைப்பட்டேன். ஆனால் ஒருவருமே என் கண்களுக்கக் கிட்டவில்லை. இதிலிருந்தே புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

  இல்லாதவர்களை எங்கே போய்த் தேடுவது?

  கொஞ்ச நாள் வாழ்ந்தாலும் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்ற கொள்கையுடைய பெற்றோர் தங்களுக்கு பதினாறு வயது வாழ்ந்தாலும் நல்ல பிள்ளையாக வேண்டும் என்றே இறைவனிடம் தெரிவித்தனர்.

  இறைவனும் பதினாறு ஆண்டுகள் மட்டும் வாழக்கூடிய அறிவு, திறமை, அழகுமிக்க ஆண் குழந்தை மார்க்கண்டேயரைக் கொடுத்துவிட்டார்.

  மாதா மாதம் சம்பளம் வாங்கிக் குடும்பம் நடத்துவோருக்கு மாதக் கடைசியானால் வயிற்றைப் பிசையும்.

  அது போல வருடங்கள் ஒவ்வொன்றாகக் கழியக் கழிய பெற்றோருக்கு மகனைப் பற்றிய அச்சம் தலை தூக்க ஆரம்பித்தது. 

  பதினாறாம் ஆண்டும் வந்தது

  பருவக் காளைக்குரிய கம்பீரமும் கட்டுமஸ்தான  மேனியும் அறிவும் அழகும் மார்க்கண்டேயனிடம் நிரம்பி வழிந்தது. அப்படிப்பட்ட மகனை மரணத்துக்கு ஒப்புக் கொடுக்க யாருக்குத்தான் மனம் வரும்?  அந்தப் பெற்றோருக்கு அப்போது எப்படி இருந்திருக்கும்?

  சோகத்தைச் சொல்லி முடியுமா?

  பதினாறாவது பிறந்த நாளைக் கொண்டாடிய நாளிலிருந்தே தினமும் இருவருமே அழுது வடிந்தார்கள். 

  என்னாயிற்று உங்களுக்கு? என்று வினவினான் பிள்ளை மார்க்கண்டேயன்.

  பெற்றோர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தார்கள்.

  இப்போ எனக்கு உண்மையைச் சொல்லப் போகிறீர்களா இல்லையா? என்று மிரட்டினான் மார்க்கண்டேயன்.

  மார்க்கண்டேயா நீ இந்த ஆண்டோடு மரணத்தைத் தழுவிவிடுவாய். அதுதான் உன் விதி. இது இறைவனே விதித்தது .நாங்களும் ஒப்புக் கொண்டுதான் உன்னைப் பெறும் வரம் கேட்டோம் என்றனர்.
   
  முட்டாள்களா இதற்காக அழுகிறீர்கள்? வரம் கேட்டது சிவனிடம்தானே. அவன்தான் ஆபத்பாந்தவன் அனாத ரட்சகனாயிற்றே. உயிரைக் கொடுத்தவனிடமே இப்போது போகிறேன். கவலைப்படாதீர்கள். அழுகையை நிறுத்துங்கள் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான் மார்க்கண்டேயன்.

  அன்றுதான் பதினாறாம் ஆண்டு முடியும் நாள்.

  திருக்கடையூர் அமிர்தகடேசுவர் திருக்கோயிலுக்குச் சென்றான் மார்க்கண்டேயன். 

  எனக்கு மரணத்தைப் பற்றிய பயம்இல்லை. ஆனால் என்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு இந்தச் செய்தி எப்படி இருக்கும்? உனக்குத் தெரியவில்லையா என்று கேட்டபடியே சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்!

  பதினாறாம் வயது முடியும் நாள்.

  மணிகள்  நிமிடங்களாகி, நிமிடங்கள் வினாடிகளாகி விரைந்து அழிந்து கொண்டே வந்தன. கடைசி வினாடியில் மார்க்கண்டேயனின் உயரைக் கவர வந்த எமதூதர்கள் அப்படியே அதிர்ந்து போய் நின்றார்கள்!

  இந்த மார்க்கண்டேயன் சிவனோடு சிவனாக இப்படிப் பின்னிப் பிணைந்து போய்க்  கிடக்கிறானே. இவனை எப்படி அவனிடமிருந்து மீட்பது? இது நம்மால் ஆகாதப்பா என்றவாறு தலையில் அடித்துக் கொண்டே திரும்பினார்கள்.

  பெரிய இடத்துப் பிள்ளை என்று தெரிந்தால் போலீஸ்காரர்கள் கை வைக்கமாட்டார்கள். காரின் நம்பரைப் பார்த்ததுமே இது இன்னார் (வி.வி.வி. ஐ.பி) வண்டி  என்று தெரிந்து கொண்டு சல்யூட் அடித்து அனுப்பிவிடுவார்கள்.

  தர்மசங்கடத்தைத்  தலைவர் எமனிடம் தெரிவித்தார்கள்.

  எத்தனையோ மான்களுக்கு நடுவில் அந்த மான் நிற்கும். குறி வைத்துவிட்டால் புலியின் கண்களுக்கு வேறு மான்கள் தெரியாது.

  கழுகுக்கு ஒரு கோழிக் குஞ்சு மட்டும்தான் கண்களுக்குத் தெரியும். மற்ற குஞ்சுகளோ, கோழியோ எதுவும் கண்களுக்குத் தெரியாது. 

  அது போலத்தான் எமனின் கண்களுக்கு மார்கண்டேயன் மட்டுமே தென்பட்டான். 

  பாசக் கயிற்றைத் தூக்கி வெறியுடன் மார்க்கண்டேயன் மேலே வீசினான் எமன்.

  தாய் குழந்தையைப் பக்கத்தில் போட்டுக் கொண்டு படுத்திருப்பாள். ஆனால் யாராவது வந்து மெல்லக் குழந்தையைக் தூக்கினால் உடனே விழித்துக் கொள்வாள்.

  பசிக்கும் முன்னதாகவே குழந்தையின் பசியை உணர்பவள் அன்னை. உயிரின் அருமையை உணர்ந்திருக்கமாட்டாளா?

  தாயிற் சிறந்த தயாவான தத்துவனா”கிய சிவனையே கட்டிக்கொண்டு கிடக்கும் மார்க்கண்டேயன் மீது விழுந்த பாசக்கயிறு  சிவனின் மேலேயும் அப்போது விழுந்துவிட்டது!

  அவ்வளவுதான்!

  எமனுக்கும் கூட நேரம் சரியில்லை போலும்!

  வாழைப் பழத் தத்துவம்

  'கரகாட்டம்” படத்தில் வரும் வாழைப்பழக் காட்சி இங்கே பொருத்திப் பார்க்கத்தக்கது.  இரண்டு பழங்களை ஒரு பழமாக்கி,  ஒரு பழத்தையே இரண்டு பழங்களாவும் ஆக்கி  கவுண்டமணியை மண்டை குழம்ப வைக்கும்  செந்திலின் நகைச்சுவையில் மிகப்பெரிய ஆன்மீக உண்மை மறைந்துள்ளது. 

  'ஒரு பழம் இங்க இருக்கு, இன்னொரு பழம் எங்கேடா?' என்று கேட்கும்போது அதுதான் இது என்பார்.

  மறுபடியும் கேட்கும்போது அதுதான் இது என்பார். இதுதான் அது என்பார்.

  கவுண்டமணி உட்பட எல்லோருமே பொறுமை இழந்துவிடுவார்கள். 

  கடைசியாக இறங்கி வந்த கவுண்டமணி, இரண்டு பழம் வாங்கச் சொன்னேனோ, ஒன்று இங்க இருக்கு. இன்னொன்னு எங்க இருக்கு? என்று கேட்டபோது பொறுமையிழந்த செந்தில், “அட அதுதாய்யா இது” என்று சொல்லிவிட்டுத் தப்பித்து ஓடுவார்!

  பாசக் கயிறு வீசிய எமனும் மார்க்கண்டேயனிடம் போய், உனக்குத்தானடா கயிறு வீசினேன். என்னடா சிவலிங்கம் தெரியுது? என்று கேட்கிறார். 

  சிவலிங்கம்தான் நானப்பா என்கிறான் மார்க்கண்டேயன்.

  சரி, நீதான் சிவலிங்கம். உன்னையே கட்டிப் பிடித்துக் கொண்டு கிடந்தானே அந்த மார்க்கண்டேயன்,  அவனை எங்கப்பா? என்று கேட்கிறார்.

  அட அவன்தானப்பா இந்தச் சிவலிங்கம் என்கிறான் மார்க்கண்டேயன்

  பொறுமை இழந்த எமன் மேலும் இறங்கி வந்து அட்ரஸ் வெரிஃபிகேஷன் செய்கிறார்.

  நீதானப்பா பதினாறு வயசிலே  சாகவேண்டிய மார்கண்டேயன்? 

  ஆமாம். அவனேதான்.

  உனக்குப் பதினாறு வயசு ஆச்சுதானே?

  ஆமாம். அதுவும் முடிஞ்சே போச்சே, அதுக்கு என்ன இப்போ என்கிறான் மார்க்கண்டேயன்.

  இன்னேரம் நீ செத்துருக்கணுமா இல்லையா?

  ஆமாம், செத்துருக்கணும். 

  உன் மேல்தானே  பாசக் கயித்தை வீசினேன், வேறு யாரு மேலயும் வீசலையே?

  ஆமாம். என் மேலதான் வீசினீங்க. 

  அப்போ மரியாதையா எங்கிட்ட வந்திருக்கணுமா இல்லையா?

  ஆனா கயிறு என் மேல விழுகலையே, சிவலிங்கம் மேலல்ல விழுந்திருக்கு என்கிறான் மார்க்ண்டேயன்.

  யாரை ஏமாத்தப்  பார்க்கறே, சிவலிங்கம் மேல விழுந்தா விட்டுடுவனா என்று கயிறைப் பிடித்து  இழுக்கிறார் எமன். 

  அடுத்த கணம்

  யாரைப்பா இழுக்கறே என்றவாறு வீசியனை இடது காலால் எட்டி உதைக்கிறார் சிவன்.

  ஐயோ பிரபுவே, நீங்களா மார்க்கண்டேயன் இல்லையா நீங்கள்?

  நான்தான் மார்க்கண்டேயன்.

  அப்போ அவன் கட்டிப்பிடித்திருக்கும் சிவன்?

  அதுவும் நான்தான் என்றபோதுதான் எமனுக்குப் புத்தியில் உறைக்கிறது.

  கவுண்டமணி செந்தில் நகைச்சுவை ஒரு கற்பனை. இரண்டு வாழைப்பழங்கள் இறைவனுக்கும் பக்தனுக்கும் உதாரணம்.

  துவிதம் என்றால் இரண்டு என்று பொருள்.

  அத்வைதம் என்றால் இரண்டில்லை, இரண்டும் ஒன்று என்று பொருள்.

  மனிதனும் இறைவனும் வேறுபட்டிருந்தால் அது துவிதம். இருவரும ஒன்றாவிட்டால் அத்வைதம்.

  இதைத்தான் இந்து தர்மத்தைப் போதித்த ஆதி சங்கரர் விளக்கியுள்ளார் 

  ஆனால் மார்க்கண்டேயர் புராணம் ஒரு நிஜம். எமதர்மருக்கும் மார்க்கண்டேயருக்கும் வாக்குவாதமெல்லாம் நடக்கவில்லை.

  ஒரு புரிதலுக்காகச் சொன்னோம்.

  இறை மனிதனாக  மாறியவர்களும் இப்படிப்பட்ட நிலையில்தான் இருப்பார்கள்.

  குழந்தை தனது தாயைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்குகிறது.  தாயும் குழந்தையின் மீது கையைப் போட்டுக் கொண்டு தூங்குகிறாள். குழந்தையின் மீது  ஊர்ந்த பாம்பு தாயின் கையிலும் உரசி விடுகிறது!

  தாய் திடுக்கிட்டுக் கண் விழித்துக் கொள்கிறாள்!

  தூங்கும் குழந்தை மீது துரும்பு விழுந்தால் என்ன, பாம்பு விழுந்தால் என்ன, இரண்டுமே தாய்க்கு ஒன்றுதானே! 

  கோபத்தோடு பாம்பைக் கையால் பிடித்து சுழற்றி வீசுகிறாள் தாய்! 

  பாசக் கயிறு அடியார் மீது விழுந்தால் என்ன, அடியேன் மீது விழுந்தால் என்ன, என்று கடவுளும் எமனுக்கு எதிராக வெகுண்டு எழுகிறார்!

  மீது பாசக் கயிறு வீசிய எமனை இடது காலால் எட்டி உதைக்கிறார் சிவன்.

  வேண்டாம் உங்க சங்காத்தமே! என்று எமலோகத்துக்குத் திரும்புகிறார் எமன்.

  இடது கால் என்ற இரண்டு சொற்களுக்குள் எத்தனையோ ரகசியங்கள் மறைந்துள்ளன.

  அந்த சம்பவத்திற்குப் பிறகுதான் காலசம்ஹார மூர்த்தியாகிறார் அமிர்தகடேசுவர்.

  கால சம்ஹாரமூர்த்தி என்றால் மரணத்தை வெல்பவர் என்று பொருள்.

  அவற்றை எல்லாம் விளக்கினால் ஞானயோகத் தொடர் இந்த ஜென்மத்தில் முடியாது.

  ஒன்று மட்டும் நிச்சயம்! 

  இன்று நீ அன்று நான் ..

  இலது என்றலின் உளது போன்ற அருளாளர்களின் கருத்துக்களைப் பொருத்திப் பார்த்தால் பக்தியின் மகிமை தெரியும். 

  நானென நீயென வேறில்லை நண்ணுதல்
  ஊனென ஊனுயிர் என்ன உடனின்று
  வானென வானவர் நின்று மனிதர்கள்
  தேனென இன்பம் திளைக்கின்ற வாறே

  என்ற திருமந்திரப் பாடலில் நான் என்பதும் நீ என்பதும் நன்கு ஆய்ந்தால் வேறு வேறு இல்லை, இரண்டும் சிவனே என்று  பொருள் கூறுகிறார் திருமூலர்.

  இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம், தன்னிடம் சரணாகதி அடைவோரை இறைவன் கை விடுவதில்லை! எத்தகைய  வினைப் பயன்கள் இருப்பினும் தானே கதி என்று தன்னிடம் அடிமைப்பட்டுக் கிடப்போரை அவன் கை கொடுத்து மீட்பது நிச்சயம், அது சத்தியம்!

  நிறைவுற்றது

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai