32 .பெண்ணழகி ஆணழகன்

சென்னைச் சங்காத்தமே வேண்டாம் என்று திரும்பிப் பார்க்காமல் கிராமத்திற்குத் வண்டி ஏறினார் நண்பர்.
32 .பெண்ணழகி ஆணழகன்

சென்னைச் சங்காத்தமே வேண்டாம் என்று திரும்பிப் பார்க்காமல் கிராமத்திற்குத் வண்டி ஏறினார் நண்பர். தனது இருக்கைக்குப் பின்னால் இருந்த சிங்காரியைத் திரும்பிப் பார்க்கப்போய் ‘சிங்காரச் சென்னை’யை மீண்டும் திரும்பிப் பார்த்து விட

நேரிடுமோ என்ற அச்சத்தால் என்பதுவரை சென்ற வாரத்தில் பார்த்தோம்!

‘சிங்காரச் சென்னை’ என்று பெயர் வைத்ததில்கூட ஒரு அர்த்தம் இருக்கிறது.

சென்னை பல்வேறு மாநில மக்களைத் தாங்கியிருக்கும் பெருநகரம். எல்லா நாட்டுப் பெண்களும் இங்கு உள்ளார்கள். ‘வந்தாரை வாழவைக்கும் சென்னை’ ‘தர்மமிகு சென்னை’ என்றெல்லாம் சொல்லப்படும் நகர் அல்லவா!

அது இத்தமிழ் மண்ணின் இயல்பு.

கவர்ச்சிக்குக் கேரளப் பெண்களைத்தான் அடையாளம் கூறுவார்கள். ஆனால் சென்னையில் வசித்த கேரளத்தைச் சேர்ந்த இளைஞர்களே ஒப்புக் கொண்டுள்ள ஒரு விஷயம் இதுதான்.

சென்னைப் பெண்கள்தான் உலகிலேயே ஒப்பற்ற அழகுப் பெண்களாம்!

*

பற்பல வருடங்களுக்கு முன்னர்-

சென்னை விடுதியில் தங்கியிருந்தபோது முரளி என்ற உறவுக்காரன் என் அறையில் தங்கியிருந்தான். அவன் பகல் எல்லாம் நாயாக ஓடோடிப் பாடுபட்டுக் களைத்துப்போய் இரவில் திரும்புவான்.

அரை மயக்கத்தோடு முரளி அன்றாடம்  புலம்பும் வார்த்தைகள் இதுதான்:

‘.. .. மச்சான்  மச்சான்.. இன்னிக்குத் தியாகராய நகர்ல ஒரு பொண்ணைப் பார்த்தேன்டா. சத்தியமா அவளை மாதிரி ஒரு பொண்ணை இனிமேல் பார்க்கவே முடியாதுடா மச்சான்’ என்பான்.

மறுநாள் வேலை முடிந்து வரும்போது ‘மச்சான் இன்னிக்கு மைலாப்பூர்ல ஒருத்தியப் பார்த்தேன்டா மச்சான். அடடா .. ..அடடா.. என்னன்னு சொல்லுவேன்டா மச்சன். அந்த மாதிரி ஒரு அழகியை  உலகத்துல எங்க போனாலும் பார்க்கமுடியாதுடா’ என்பான்.

மறுநாள் மிகப் பெரிய ‘ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்’ போனவன் திரும்புவதற்கு நள்ளிரவு ஆகிவிட்டது. காரணம் கேட்டதற்கு, 'அங்க வர்ற பொண்ணுகளைப் பார்த்துக்கிட்டு இருந்தாலே போதும்டா மச்சான் .. ஜென்மத்துக்கும் அந்த மாதிரி அழகிகளை ஒண்ணாவேப் பார்க்க முடியாதுடா' என்பான்.

எவளைப் பார்த்தாலும் அதைத்தாண்டா சொல்றே. உண்மையிலேயே எவதான்டா அழகு, சொல்டா மாப்பிள்ளை என்றேன்.

அப்படியெல்லாம் சொல்ல முடியுமாடா மச்சான்.  ‘இவ அழகியா அவ அழகியா.. .. அவ அழகியா இவ அழகியான்னு சொல்ல முடியாதபடி ‘புதுசு புதுசா’ வர்றாளுங்கடா..  புத்தீசல் போல சும்மா வந்துக்கிட்டே இருக்காளுங்கடா மச்சான் என்றான் முரளி.

அடடா அப்படியா?

'நீயா நானான்னு போட்டி போட்டுக்கிட்டு வர்றாளுகடா மச்சான். சென்னையில மட்டும் பெண்கள் இல்லேன்னா ஒரு பய இருக்க மாட்டான்டா மச்சான்.. உண்மையிலேயே நான் ரொம்பக் குடுத்து வச்சவன்டா. ரொம்பப் பேர் இங்கே காலத்தை ஓட்டறதுக்குக் காரணமே இந்தப் பொண்ணுங்கதான்டா. ஆயிரம் கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் அவளுங்கதாண்டா நமக்கெல்லாம் ஆறுதல்' என்றான் முரளி.

'இதெல்லாம் மாயைடா மாப்பிள்ளை. அவளுகளைப் பார்த்து மனசைக் கெடுத்துக்காதேடா' என்றேன்.

'அதை விடச் செத்துப் போன்னு சொல்லுடா மச்சான், அதனாலதான்  சென்னைய விட்டே போகாம இருந்துட்டு இருக்கேன்டா. அதையும் கெடுத்துடாதேடா' என்றான்.

'அதுக்கில்லடா மாப்பிள்ளை, பெண்ணாசை என்பது தீவினைகளின் ரூபம்ன்னு சொல்லுவாங்க. அழகான பொண்ணு மேல ஆசைப்பட்டு அவளை அடையறதும்,  ‘விட்டில் பூச்சிகள்’ போய் விளக்குல முட்டி விழுந்து சாகறதும் ஒண்ணுதான்டா மாப்பிள்ளை’ என்றேன்.

முரளி யோசித்தான். எரிப்பது போலப் பார்த்தான்.

'மச்சான், பொண்ணுகளைச் சக்தின்னு சொல்லுவாங்க. அது தெரியாம அனாவசியமாப் பேசாதடா.. ஆமாம்..!’ என்று மிரட்டுவது போலச் சொன்னான் முரளி.

நல்ல சக்தி கெட்ட சக்தி

கரெக்ட்டுடா. ஆனா அந்தச் சக்தியிலயும் ரெண்டு சக்திகள் இருக்குடா மாப்பிள்ளை . அது தெரியுமாடா? நான் சொல்றதைக் கேளுடா. பேசாம ஊருக்குப் போயி நல்ல குடும்பத்துப் பொண்ணாப் பார்த்துக் கல்யாணத்தைப் பண்ணிக்கோ. அதுதான் நல்ல சக்தியாகும். அதை விட்டுட்டு அழகான பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு அடம் பிடிச்சா அழிவு சக்தி வேலை செய்யுதுன்னு அர்த்தம்டா ஜாக்கிரதை என்றேன்.

அப்போ அழகான பொண்ணுகள்லாம் அழிவு சக்தியா? என்று ஆவேசமாகக் கத்தினான் முரளி.

அட மக்கு மாப்பிள்ள, சொல்றதை நல்லாப் புரிஞ்சுக்கடா.. யாருமே அழகாப் பொறக்கணும்னு பொறக்குறது இல்ல.. அசிங்கமாப் பொறக்கணும்னும்  பொறக்கறது இல்ல. அவரவர்க்கு அவரவர் வினைகளுக்குத் தக்கபடிதான் அழகும் அழகின்மையும், நிறமும் நிறமின்மையும், உயரமும் குள்ளமும் கொடுக்கப்படுது. அழகு அழகுன்னு சொல்றியே 'இதுதான் அந்த அழகு’  என்னன்னு உன்னால தனியா விளக்கிக் காட்ட முடியுமாடா? என்றேன்.

மாப்பிள்ளை யோசித்தான்.

அதே போல ‘இதுதான் அந்த அசிங்கம்’னு உன்னாலத் தனியா விளக்கிக் காட்ட முடியுமாடா? அழகான பொண்ணைப் பார்க்கும்போது யாருக்குமே இச்சைகள் வரும். அவளை அடையும் போது இச்சைகளும் அடங்கிவிடும். அதன் பிறகு அழகெல்லாம் ஒன்றுமில்லை என்கிற ஞானோதயம் ஏற்படும்டா. இந்த ஞானோதயம் வர அழகான பொண்ணு தேவையில்லைடா. அழகில்லாத பொண்ணா இருந்தாக் கூடப் போதும்டா. 

என்னடா சொல்றே? புரியலையே என்றான் முரளி.

ஆமாண்டா மாப்பிள்ளை. சேர்க்கைக்கு அழகு அழகின்மை என்கிற பேதமெல்லாம் கிடையாதுடா.  அழகுள்ள பொண்ணோ அழகில்லாத பெண்ணோ சேர்க்கை முடிஞ்ச பிறகு ‘சாப்டர்’குளோஸ்டா. எழுதியாச்சு குடுத்தாச்சு. ‘எக்ஸாமினேஷன்’ ஓவர்! சரியா எழுதலைன்னா மறுபடியும் எழுதிப் பாஸ் பண்ணிக்க வேண்டியதுதான், என்ன கெட்டுப் போச்சு!  கஜினி முகம்மது பதினேழு தடவை படை எடுக்கலையா? படுக்கையிலும் கூடப் படை எடுக்கலாம். ஆனா ‘கேப்’ விடணும். அதை மறந்துடாதடா மாப்பிள்ள.

என்னடா என்னன்னமோ சொல்ற?

மாவீரன் அலக்ஸாண்டர் உலகத்தையே வென்றான். கடைசியில வெறும் கையத்தான்  விரிச்சுட்டுப் போனான். நீ உலகத்து அழகிகளை எல்லாம்  வச்சிக்கிட்டாலும், உச்சகட்டம் வந்த பிறகு ஒருத்திகிட்டயும் ஒண்ணுமே காணலையேன்னு  வரப்போறே.  அவன் கைய விரிச்சுட்டுப் போனான். நீ காலை விரிச்சுட்டுப் போகப் போறே அவ்வளவுதான்டா வித்தியாசம்!

இதல்லாம் நிஜமாடா மச்சான்?

எதிர்பார்ப்புகள் எதுவுமே ஏமாற்றத்தில் போய்த்தான்டா முடியும். ஏமாற்றம் சலிப்பை உண்டாக்கும். சலிப்பு வெறுப்பை உண்டாக்கிவிடும்டா மாப்பிள்ளை.

உடல் இன்பம் அழகு பார்த்து வர்றதில்லடா; அது எல்லாப் பெண்களுக்குமே பொதுவானது. ‘கல்லுல சேலை கிடந்தாக் கூட இழுத்துப் பார்க்கறவன்’னு காமுகர்களுக்குப் பழமொழி சொல்லுவாங்க. காமுகன் அழகைப் பார்ப்பானாடா? ஆசை வரும்போது அவனுக்குத் தேவை ஒரு பொம்பளை. அவ்வளவுதாண்டா மாப்பிள்ள. ஆசைப்படற எல்லா ஆண்களுமே ஒருவகையில “காமுகன்”தான்டா

இன்புறுவதற்கு ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு  ஆணும் தேவை. கலவி என்பது உடலின் தேவை. தேவையும் தேவையும் கூடும் போது அங்கே பெருநிறைவு ஏற்படுகிறது. கிராமத்துல யாருமே அழகு பார்த்துக் கல்யாணம்  பண்றதில்லையே. அவங்கள்லாம்  ஒத்துமையாக இல்லையாடா மாப்பிள்ள?

அப்படியா என்று ஏற இறங்கப் பார்த்தான்  மாப்பிள்ளை முரளி.

அழகு பார்த்துச் சேர்ற தம்பதிகள்லாம் அநேகமாக விவகாரத்துக் கேட்கப் போயிடறாங்கடா. அழகுதான் இன்பம்னு  நினைக்கிறது  ஒரு அறியாமை. அது ஒரு முட்டாள்தனம்.

இன்பம்தான் அழகுன்னு நினைக்கறது புத்திசாலித்தனம். அதுதான் அறிவுடைமை.

இன்பத்துலதான்டா அழகு இருக்கு!

புரியும்படியச்  சொல்லுங்க மச்சான்.

அழகின் ஆபத்து

செருப்புக் கடைக்குப் போறீங்க. விதம்விதமான செருப்புகள் இருக்கும். அழகான செருப்பை அணிந்து கொண்டு நடக்கலாம். அதன் விலையோ அதிகம்.

அழகில்லாத செருப்பையும் அணிந்து கொண்டும் நடக்கலாம். அதன் விலையோ குறைவு. ஆனால் நடக்கும் காரியம் ஒன்றுதானேடா மாப்பிள்ளை! அழகான பொண்ணு ‘காஸ்ட்லி’யான செருப்பு மாதிரி. அழகற்ற பொண்ணு ‘சீப்’பான செருப்பு மாதிரி. நடக்கிற வேலை ரெண்டு பேருக்கும் ஒண்ணுதானடா மாப்பிள்ளை. காஸ்ட்லி செருப்புங்கறது வெறும் ‘ஷோ’வுக்கு மட்டும்தான்டா.

பொண்ணுகளை செருப்புக்கு உதாரணமாச் சொல்லிட்டியேடா மச்சான் என்று நொந்து கொண்டான் முரளி.

அழகான பெண்கள் அடிக்கடி சொல்ற வார்த்தை ‘செருப்பால  அடிப்பேன்’ ங்கறதுதானடா! அந்த அழகான பெண்களால எவ்வளவு ஆபத்துகள் இருக்குன்னு தெரியுமாடா?

அழகுங்கறது  ஆபத்தானதா மச்சான்?

‘கலை மானு’க்கு அதனோட கொம்புகள்தான்டா எதிரி. மரக்கிளைகளில் போய் மாட்டிக்கிச் சின்னா தப்பிக்க முடியாது. சிங்கம் புலிகள் பாய்ந்து வரும்போது தப்பித்து ஓடவும் முடியாது.. அவைகளுக்கே அப்படியே இறையாக நேரிடும்டா மாப்பிள்ளை.

சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து சினிமாத் துறை வரைக்கும் அழகான பெண்கள்தான்டா மூலதனம். அந்த அழகாலதான்டா மச்சான் அவங்கள்லாம் சீரழியிறாங்க.

ஓ..அப்படி ஒரு உண்மை இருக்கா மச்சான்?

‘அழகு அழகு’ன்னு புலம்பறதை விட்டுட்டு ஊருக்குப் போய் உருப்படியா ஒரு கிராமத்துப் பொண்ணாப் பார்த்துக் கல்யாணத்தைப் பண்ணிக்கோடா, லேட் பண்ணாதேம்.. ம் கிராமத்துக்குச் சீக்கிரமாக் கிளம்புடா மாப்பிள்ளை.

என்ன மச்சான் அழகான  பொண்ணாக் கேட்டா, பட்டிக்காட்டுப் பொண்ணைப் போய்க் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றியே என்று வருந்தினான் முரளி.

‘கல்யாணம் பண்ணினா பைத்தியம் தெளியும்; பைத்தியம் தெளிஞ்சா கல்யாணம் நடக்கும்’னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. முதல்ல நீ  போய் உன் கல்யாணத்தைப் பண்ணிக்கோ. அப்புறமா உன்னோட ஆசையெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம்னு புரிஞ்சுக்குவேடா மாப்பிள்ளை. 

ஒரு விஷயம்டா மச்சான். .. என்று தயங்கினான்  முரளி.

என்ன சொல்ல வர்ற, சொல்லுடா மாப்பிள்ள. ..

நான் தினமும் ‘எலக்ட்டிரிக் ட்ரெயின்’ல ஒரு அழகான பொண்ணைப் பார்த்துட்டு வர்றேன். வாழ்ந்தா அவ கூடத்தான் வாழணும்னு  ஆசைப்படறேன்டா மச்சான் .. .. இப்ப என்னடா பண்றது?

இதெல்லாம் ஒரு மயக்கம்டா மாப்பிள்ளை. அந்த மயக்கம் போவதற்கு ஒரு வழி சொல்றேன் கேளு. அழகில்லாட்டாலும் ஒரு கிராமத்துப் பெண்ணைப் போய்க் கல்யாணம் பண்ணிக்கோ.

என்னடா இவ்வளவு ஈஸியாச் சொல்லிட்டே?

ஆமான்டா. கேளு.  நீ கிராமத்து மனைவியோட முதலிரவை  முடிச்சிட்டேன்னு வையி.  அந்த சமயம் பார்த்து “ட்ரெயின்”ல பார்த்த அழகி வந்து உன் கூட இருக்க ஆசைப்பட்டா ஒத்துக்குவியா, உன்னால அது முடியுமா?

அப்போ நீங்க சொல்றதைப் பார்த்தா... என்று இழுத்தான் முரளி.

எல்லாருமே பிரியாணிக்குத்தான்டா ஆசைப்படறோம். ஆனா பசி தாங்காமப் பழஞ்சாதமோ, கஞ்சியோ, சாப்பிட்டுடறோம். அப்புறமா சுடச்சுடப் பிரியாணி வந்துட்டா சாப்பிட முடியுமாடா?

மாப்பிள்ளை  எதையோ தீவிரமாக யோசித்தான்.

சரி, டிரெயின்ல பார்த்த அழகான பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வையி. அவளோட ‘முதல் இரவு’ முடிச்ச நேரம் பார்த்து அவளை விட அழகானவ வந்து கையப் பிடிச்சு இழுத்தாப் போயிடுவியாடா?  அந்த சமயத்துல எப்படிப்பட்ட அழகியப் பார்த்தாலும் வெறுப்பாத்தான்டா இருக்கும்!

நிஜமாவா சொல்றீங்க மச்சான்?

இன்னும் கூட ஒரு உதாரணம் சொல்றேன்டா மாப்பிள்ளை. அதுலயும் நீ திருந்தலைன்னா உன்னைக் கடவுளால கூடத் திருத்த முடியாதுடா மாப்பிள்ளை!

சொல்லுங்க மச்சான் திருத்திக்கறேன்.

‘அழகான பொண்ணு அழகில்லாத பொண்ணு’ இரண்டு பேருக்குமே திருநெல்வேலி அல்வாவைக் கொடுக்கிறோம்னு  வைச்சிக்கோ. அந்த அல்வா அழகான பொண்ணுக்கு இனிப்பாகவும், அழகில்லாத பெண்ணுக்கு  இனிப்பில்லாமலுமா இருக்கும்?

மச்சான் இப்பத்தான்டா  நீ ‘பாயிண்ட்’டத் தொட்டுட்டே என்று துள்ளினான் முரளி.

இன்னும் புரியும்படி சொல்லட்டுமாடா?  எத்தனை எத்தனையோ விதமான பெண்கள், எத்தனை எத்தனையோ விதமான உதடுகள்..அதில் எத்தனை எத்தனையோ விதமான சாயங்களைப் பூசியிருக்கிறார்கள். உதடுகள் தாண்டா விதவிதமா இருக்கு. உள்ளிருக்கற நாக்கெல்லாம் ஒரே மாதிரித்தானடா இருக்குது?

முரளி இப்போது தன் கையால் தன் தலையிலேயே  கொட்டிக் கொண்டான்.

நாக்கின் சுவை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒண்ணுதான்டா.

இப்பத்தான்டா எனக்கு அந்த உண்மை தெரிய வருது மச்சான் என்றான் முரளி.

மனசுல முதல்ல அன்பு வேணும்டா மாப்பிள்ளை. நீ அன்போட பார்த்தா எந்தப் பொண்ணுமே அழகாத்தான்டா தெரிவாளுங்க. அழகில்லாட்டாலும் இரக்கத்தோடப் போய் ஒரு ஏழைப் பொண்ணுக்குத்  தாலி கட்டினா அதுதாண்டா ஆண்மை!

அன்னிக்குத்தான்டா நீ ஆணழகன்! உனக்கு வாழ்க்கைப்பட்ட  மனைவிதாண்டா  பெண்ணழகி!

ஞானம் பெருகும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com