சுடச்சுட

  
  mm8

   

  அழகாய் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இரக்கத்தோடு போய் ஒரு பெண்ணுக்குத்  தாலி கட்டினால் அதுவே சரியான ஆண்மை என்பது வரை சென்ற வாரம் பார்த்தோம்.

  'அழகு அழகு' என்று போற்றுவதும் 'அழகில்லை அழகில்லை' என்று தூற்றுவதும் எது?

  நம்மிடமுள்ள அறியாமையாகிய ஆணவமே!

  பெண் பார்க்கும் படலமோ வரன் பார்க்கும் படலமோ அழகிலிருந்துதான் ஆரம்பமாகிறது. 

  பொதுவாக-

  எல்லா ஆண்களுமே தனக்கு வரப்போகும் பெண் அழகாயிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

  எல்லாப் பெண்களுமே தனக்கு வரப் போகும் ஆண் அழகாயிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

  அசிங்கம் என்றும், அழகு என்றும் யாரும் இல்லை.

  'அழகு படுத்தப்பட்டவர்களும் 'அசிங்கப்படுத்தப்பட்டவர்தான்' இருக்கிறார்கள்!

  அதுமட்டுமல்ல-

  அழகானவர்களும் கூட சமயங்களில் அசிங்கப்படுத்தப்படுகிறார்கள்.

  அழகான பெண்ணோ ஆணோ உடன்படவில்லை என்றால் அவதூறு பேசி அசிங்கப்படுத்தப்படுகிறார்கள்.

  அழகே அவர்களுக்கு ஆபத்தாகிறது.

  அதேசமயம் -

  அசிங்கமானவர்கள் கூட அழகுபடுத்தப்படுகிறார்கள்!

  அசிங்கமானவன் என்று வெறுக்கப்பட்டவன்  பெரிய சாதனையாளனாகும் போது அழகானவன் என்று வர்ணிக்கப்படுகிறான். நடிகன் ஆகிவிட்டால் அவன்தான் பிறகு பேரழகன்! 

  அதனால் அழகானவன் அவமானப்படுத்தப்படுகிறான்.

  நடிகனைப் போன்ற மாப்பிள்ளையை இளம்பெண் கனவு காண்கிறாள்.

  காரணம் சினிமா மயக்கம்.

  பெரிய நடிகரின் சாயல் இருந்து விட்டால் அவனை இளம்பெண்கள் வளையமிடுகிறார்கள்.

  கொஞ்சம் அழகாயிருந்துவிட்டால் அவள் ஒரு நடிகையைப் போலப் ரசிக்கப்படுகிறாள். ஆண்கள் அவளை வளையமிடுகிறார்கள்.

  இதுதான் மாயை.

  அழகில்லை என்று  முத்திரை குத்தப்பட்ட பெண் எங்கும் போய் வரலாம். கண்டு கொள்ளமாட்டார்கள்.

  அழகான பெண் பட்டப் பகலில் கூடத் தனியாகப் போக முடியாது. இரவில் எப்படிப் போக முடியும்?

  சாலையிலே எத்தனையோ பெண்கள் போகிறார்கள்.

  அத்தனை பேருக்கும் மத்தியில் அழகான பெண்ணை மட்டும் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். 

  பருந்து எத்தனை உயரத்தில் பறந்தாலும் கோழிக்குஞ்சு மட்டும் கண்ணில் பட்டுவிட்டால் வேறு எதுவும் அதன் கண்ணுக்குத் தெரியாது. 

  குறிப்பிட்ட மானின் மீது மட்டும் குறி வைத்துவிட்டால்  புலியின் கண்களுக்கு மற்ற மான்கள் தெரியாது.

  அழகானவர்களைக் கண்டு அழகற்றவர்கள் பொறாமைபடுவதுண்டு.

  அதுபோல அழகற்றவர்களைக் கண்டும் அழகானவர்கள் பொறாமைப்படுகிறார்கள்.

  அழகான பெண்களுக்கு ஏற்படும் அவலங்களைச் செய்திகள் முழங்குவதைப் பார்த்திருப்பீர்கள்.  

  ஒருதலைக் காதல், கள்ளக்காதல் செய்திகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருமே பொதுவாக அழகானவர்கள்! கவனித்தால் புரியும்.

  அழகால் ஆபத்துக்குள்ளாகும் பெண்களின்  அவலங்களைச் சொல்லி  முடியாது.

  பெரிய 'கார்ப்பரேட்' நிறுவனங்கள், நடுத்தர நிறுவனங்கள், சின்னச் சின்ன நிறுவனங்களில் கூட அழகான பெண்ணுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அவர்கள்தான் முதலாளிகளுக்கு (அந்தரங்கக்) காரியதரிசிகளாகவும் ஆக்கப்படுகிறார்கள்.

  வரவேற்பு 'கவுண்டர்களில் மூக்கும் முழியுமுள்ள பெண்கள்தான் அமர்த்தப்படுகிறார்கள்.

  'ஷோரூம்' களிலும் அழகான பெண்களே நிறுத்தப்படுகிறார்கள். 

  பெண்ணாசை பிடித்த பண முதலைகள் அழகான பெண்களுக்கு வலை விரிக்கின்றன.
   
  இதை வாசிக்கும் யாராயிருந்தாலும் அவர்கள் திருவடி வேண்டி ஒரு விண்ணப்பம் வைத்துக் கொள்கிறேன்.

  தயவு கூர்ந்து உங்கள் மகனுக்கோ மகளுக்கோ அழகான வாழ்க்கைத் துணை தேடி அலையாதீர்கள். ஆபத்தையாத் தேடி அலைந்தோம் என்று ஒருநாள் வருந்துவீர்கள்!

  வரப்போகும் வாழ்க்கைத் துணையிடம் அழகு வேண்டாம், அமைதி, ஒழுக்கம், அன்பு இருக்கிறதா என்று பாருங்கள்.

  அழகு சலித்துவிடும், புளித்துவிடும், பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திக் கணவன் மனைவியைப் பிரித்துவிடும்!

  அதற்காக அழகானவர்களை ஒதுக்க முடியுமா?

  அவர்களுக்கும் வாழ்க்கைத் துணை அமையும். தெளிந்த அறிவும் தைரியமும் நம்பிக்கையும், பரந்த சிந்தனையும் கொண்டவர்கள்தான் அவர்களுக்குத் துணையாக வர முடியும். எத்தகையச் சோதனைகளையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள்.

  உண்மைக் காதல்

  அழகான பெண்ணுக்கு ஆபத்து இருந்தது அந்தக் காலம். ஆனால் அழகான ஆணுக்கும் இன்றைக்கு  ஆபத்து வந்துவிட்டது!

  பெண்ணுக்கு அழகு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இருக்க வேண்டும் என்று கருதியது அந்தக் காலம்.

  இவை எல்லாவற்றையும் விட கவர்ச்சியான உடல் அமைப்பும், சிவந்த மேனியும்தான்  இருக்க வேண்டும் என்று கருதுவது இந்தக் காலம்.

  ஆணுக்கு அழகு வீர தீரச் செயல், கடின உழைப்பு என்று கருதியது அந்தக் காலம்.

  ஆனால் அவனிடம் சொந்த வீடு, சொத்துக்கள், வசதி வாய்ப்புக்கள், கை நிறயச் சம்பளம் உள்ளதா என்று எதிர்பார்ப்பது இந்தக் காலம்.

  என் காதல்

  அந்தக் காலத்தில் காதல் என்பது குதிரைக் கொம்பு.

  லட்சத்தில் ஒருவருக்குத்தான் காதல் வரும். 

  அந்தக் காதலும் சாமான்யமாக நிறைவேறாது.

  இந்தக் காலத்தில் நண்பர்களாகப் பழகும் ஆணும் பெண்ணும் காமத்தின் பொருட்டு காதல் வயப்படுகிறார்கள்.

  காமம் தீரும்போது கருத்து வேறுபாடுகளுக்கு உள்ளாகிறார்கள்.

  காதல்  புனிதமானது. அது ஆத்மா சம்பந்தப்பட்டது. காதல் உயிரோடு உயிர் கலக்கும் உன்னதமான உணர்வு.

  காதலின்  புனிதத்தைக் காண வேண்டுமென்றால் நம் தமிழ் இலக்கியங்களைப் படிக்க வேண்டும்.

  அல்லது ஐம்பது வருடங்களுக்கு முந்தையத் திரைப்படங்களைக் காணவேண்டும்.

  பழைய திரைப்படங்களில் உண்மைக் காதல் உணர்வுகள், உருக்கும் இசையமைப்பு, அர்த்தமுள்ள பாடல் வரிகள், பாடகர்களின் வசீகரமான குரல், விறுவிறுப்பான காட்சியமைப்புகள், கற்பனையுலகில் மிதக்கச் செய்யும் அரங்க அமைப்புகள், சிந்திக்க வைக்கும் வசனங்கள், கதாபாத்திரங்களாகவே மாறி நடிக்கும் நடிகர் நடிகைகள், அற்புதமான முக பாவனைகள் அனைத்தும்  நம்முள்ளே காதல் ரசத்தை ஊற்றெடுக்கச் செய்தன.  

  அன்றையக் கலைஞர்கள் உயிர் உணர்விலிருந்து காதல் கதைகளை உருவாக்கினார்கள்.

  உயிர் உணர்வே உண்மையாகும்.

  உண்மை உணர்வே அன்பாகும்.

  அன்புதான் காதலின் ஆணிவேர். அதுதான் காதலின் மரம். அதுதான் கிளைகள், காதலின் இலைகள், காதலின் அரும்புகள், அதுதான் காதலின் மலர்கள், மலருக்குள் இருக்கும் மகரந்தங்கள், மதுத்துளிகள், மலரின் நறுமணங்கள்... 

  மகரந்தச் சேர்க்கைகள் பூக்களைத் தோற்றுவித்துப் பிஞ்சுகளாக்கி காய்களாக்கிக் கனிகளாக்கி மனிதர்களுக்கு விருந்தாக்கின.  

  தித்திக்கும் கனிகள் விதைகளைச் சிந்துகின்றன.   

  விதைகள் மீண்டும் முளைவிடுகின்றன.

  இப்படிப் போய்க் கொண்டே இருக்கிறது  'உயிரியல் சக்கரம்'.

  *

  இளமைக் காலத்தில் நண்பர்களுடன் கோயிலுக்குச் செல்லும்போது அம்மன் சிலைகள் உயிர்கொண்டு பேசினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்திருக்கிறேன். 

  ஆனால் நடக்கவில்லை. 

  நான் காதலித்த பெண்ணோ அம்மனே தெருவில் நடந்து வருவது போலக் காணப்பட்டாள்.

  அவளது கால் தடங்களில் அம்மனின் திருவடிகளைக் கவனித்தேன். 

  அவளது நடையில் பட்டாப்பூச்சியின்  அழகைக் கண்டேன்.

  பட்டாம்பூச்சிகள் தோட்டத்துச் செடிகளில் மோதிவிடாதிருக்க வளைந்து வளைந்து பறக்கும்.

  அவளும் கூட எதிரில் வருவோருக்கு வழிவிட்டு இப்படியும் அப்படியுமாக வளைந்து வளைந்து நடந்து சென்றாள்.

  அவளது மூக்குத்தியில் மீனாட்சியின் வைரத்தைக் கண்டேன்..

  அவளது சீருடை மட்டும் அம்மனின் பட்டுப் புடவையாகத் தென்பட்டது எனக்கு!

  கொளுத்தும் வெயில் கூட அவளது நினைவால் குளிர் தென்றலாக வீசியது.  

  இரவும் பகலும் அவளது நினைவு. அதனால் ராப்பகல் அற்ற இறைநிலையில் நானும் இருப்பதாக உணர்ந்தேன்.

  பாம்போடு சண்டையிடும்  கீரிப்பிள்ளை, காட்டுக்குள் ஓடிப் போய் விஷ முறிவு இலைகளை உண்ணுவதுபோல -

  கொடிய சோதனைப் பாம்புகள் என்னைத் தீண்டிய போதெல்லாம் ஓடோடிச் சென்று அவளது வீட்டின் எதிரே காத்துக் கிடந்தேன்!

  அவளது தலை தெரிந்தால் போதும். தலைவரை ஏறிய விஷம் கூடத் தணிந்து இறங்கி என்னை விட்டு விலகி ஓடக் கண்டேன்! 

  எந்த ஊருக்குச் சென்று எத்தனை நாட்கள் தங்கினாலும் எப்போதும் அவளோடுதான்  இருந்து கொண்டிருந்தேன்.

  எங்கும் தெரிந்தாள்.. எதிலும் தெரிந்தாள்...தூணிலும் தெரிந்தாள்.. துரும்பிலும் தெரிந்தாள்.

  'பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரண ஆனந்தமே' என்று இறைவனைப் பாடினார் தாயுமானவர்.

  அப்படித்தான் நானும்  அன்று என் 'இறைவி' யைப் பாடினேன்!

  சகோதர சகோதரிகளுக்கு மணமாகாத காரணத்தால்  என் காதலுக்கு  அணை போட்டு என்னையே நான் தடுத்துக் கொண்டேன்.

  அவள் மகளிர் பக்கமும் நான் ஆண்கள் பக்கமும் பிரிந்து அமர்ந்து படம் பார்த்தோம். படம் பார்த்தபடியே கண்களால் பேசிக் கொண்டோம்.

  இன்று?

  காதல் (காம) ஜோடிகள் கை கோர்த்துக் கொண்டு கடற்கரை, பூங்கா, திரைப்படங்களுக்குச் செல்கின்றன.

  எங்கள்  கிராமங்களில் காதலுக்கு வாய்ப்பில்லை; அதனால் கற்பனைக்கோ பஞ்சமில்லை, வேறு வழியில்லை!

  அவளைக் கல்யாணம் செய்ய நினைத்தவன், 'கட்டில் உறவு’  பற்றிக் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை!

  அம்மன் சிலை, நாட்டியக்காரி சிற்பம், பெண்ணோவியம் இவற்றின் ஆடைக்குள்ளிருப்பவை நம் அறிவுக்கு எட்டுவதில்லை.

  அவளைக் காணும் போதும் எனக்கும் அது போன்ற ஐயப்பாடுகள் ஏற்பட்டதில்லை.

  அப்படி 'நினைப்பதையே’ அநாகரீகமாக நினைத்தவன். 

  நான் அதற்காகவா அவளை நேசித்தேன்?

  நான் என்ன நாயா? இல்லை இல்லை மனிதன்!

  காம சுகம் தேடும் பருவம்தான் என்றாலும் கணப்பொழுது கூட அவளை நான் காமுற்றதில்லை.

  என்னைப் பொறுத்தவரை அவள் ஒரு தேவதை. தேவதைகளுக்குப் பிறப்பு இறப்பு இல்லை, கண்கள் இமைப்பதில்லை, பசி தூக்கமில்லை, அன்ன ஆகாரமில்லை.

  காதலியின் இல்லத்தில் சமையலறை, படுக்கையறை, குளியலறை இருக்கும். அவளுக்கோ அவை எவற்றிலும் சங்காத்தமே இருக்காது என்பதே என் தீர்மானம்! 

  அவள்தான் மனுஷியே இல்லையே!

  இன்றையக் காதலர்கள் 

  இன்றையக் காதலர்களையும் காட்டுகிறேன், வாருங்கள்.

  பூங்காக்களில், செடிகொடி மறைவில் பட்டப்பகலில் கடற்கரைகளில், அலங்கோலமான ஆடையோடு காதலனுடன் கலந்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள்!

  ஆடைகளுக்கு மேலேயே கைகளால் கலவி புரியும் கோலங்கள்!

  பழைய திரைப்படங்களில் காதல் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கன்னியமான காட்சிகள் இருந்தன.

  நிலவே காதலர்களுக்குத் தூதாக அமைந்தது. 

  இன்றைக்கு எத்தனை காதலர்கள் நிலவைப் பார்க்கிறார்கள்?

  நிலவொளி படாத இருட்டுக்குள்  மறைந்துகொண்டு உடல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இழிவர்களாகிவிட்டனர்!

  இன்றையத் திரைப்படங்களில் காதலன் காதலியை உச்சந்தலையிலிருந்து உள்ளங் கால்கள் வரை மோப்பம் பிடித்துக் கொண்டே அலைகிறான். கட்டிக் கட்டித் தழுவிக் கொண்டு கண்களைச் செருகியபடியே காமத்தில் திளைக்கிறான். 

  காதலியின் இடுப்பை பின்பக்கமிருந்து பல்வேறு கோணத்தில் காட்டிக் காட்டிக் காமத்தைத் தூண்டுகிறார்கள்.

  இதுதான் காதலா?

  காமப் பிரதேசங்ளை காபரே நடனக்காரி போல ஆபாசமாக  அசைத்து அசைத்து காட்டுகிறாள் காதலி. 

  இதுதான்  காதல் என்று சொன்னால் நீங்கள் மனிதரே அல்ல!

  'மூச்சோடத் தவ'த்தில் சாட்சி பாவனையாக இருப்பதை யோகத்திற்குள் வந்த பிறகுதான் கற்றுக் கொணடேன். 

  ஆனால் அவளது நினைவாலேயே அப்படி இருந்திருக்கிறேன் என்பதை இன்றைக்கு எண்ணிப் பார்க்கிறேன்.

  'பசு பதி பாசம்' என்ற மூன்று விஷயங்களைக் கற்றுக் கொண்ட பிறகுதான் எனக்கு அவள் மீது இருந்த காதலும் ஒரு 'பொய்' என்று  உணர வந்தேன். 

  பசுவாகிய உயிருக்குள் பாசமாக ஒட்டிக் கொண்டிருந்த அவளது நினைவும் ஒருவகையில் பொய் என்ற ஞானம் பெற்றேன்.

  அவள் இன்று இல்லை!

  ஆனால் இறைவன் இருக்கிறான் பதியாக, அது போதும் நிம்மதியாக!

  இந்த நிலைதான் பிரம்மம் என்று உணர்கிறேன். அது ஒன்று போதும்.

  ஆனாலும் அவளைத்  துதிக்கிறேன், இன்றும்.

  என் படைப்புகளுக்கு  அன்றே ஊட்டமளித்து 'எழுதி எழுதி எழு ..ஓம் சக்தி! யாக மாற்றியவள் என்றால், இன்றும் வாழும் அம்மன் அன்றோ அவள்!

  நினைவுத் தவத்தில் அவளோடு அத்தனை முன்னோர்களும் முன் நின்று என்னை வாழ்த்துகிறார்கள், உண்மை நம்மை!

  (ஞானம் பெருகும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai