13. ரோஹித் சர்மாவின் சோதனை மிகுந்த துவக்க காலங்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் சமீப கால விளையாட்டாளர்களில் ரோஹித் சர்மா அளவுக்கு காயங்களினால் அவதிப்பட்ட வீரர்கள்
13. ரோஹித் சர்மாவின் சோதனை மிகுந்த துவக்க காலங்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் சமீப கால விளையாட்டாளர்களில் ரோஹித் சர்மா அளவுக்கு காயங்களினால் அவதிப்பட்ட வீரர்கள் எவரும் இல்லை. 2007ல் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடத் துவங்கியதிலிருந்து இன்றைய தினம் வரையிலும் அவர் காயத்தினால் அணியில் இடம் பெற இயலாமல் போன சூழல்கள் பல உண்டு. கிட்டதட்ட சரிவர தொடர்ச்சியாக நிலையான ஃபார்ம் இன்றியும், காயங்களினாலும் போட்டிகளை தவற விடுவதிலும் ரோஹித் சர்மாவே தற்கால இந்திய வீரர்களில் முக்கியமானவராக இருக்கிறார். இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு கிடைத்ததிலிருந்து ஏழு வருடங்கள் கடந்த நிலையிலேயே அவரால் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடிந்தது.

ரோஹித் சர்மா இந்திய அணிக்காக முதல் முதலாக தேர்வு செய்யப்பட்ட ஆண்டு 2007. ரோஹித்துக்கு அப்போது வயது 20. அயர்லாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற்ற அப்போட்டித் தொடரில் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கினார். முதல் போட்டியில் அவருக்கு பேட்டிங் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் மனதளவில் ரோஹித் சர்மாவுக்கு மிகுந்த வருத்தம் உண்டானது. தொடர்ச்சியாக அணியில் இடம் கிடைக்கும் தருணங்களிலும் அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் அவருக்கு வாய்த்திருக்கவில்லை.

கிட்டதட்ட மூத்த விளையாட்டு வீரர்கள் அணியில் பங்கு பெற முடியாத சூழல்களில் மட்டுமே ரோஹித் சர்மாவுக்கு அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதுவும், அவருடன் சம நிலையில் அப்போது ரஹானேவும் இருந்துக் கொண்டிருந்தார். ரஹானேவும், ரோஹித் சர்மாவும் மாறி மாறி மூத்த வீரர்களின் மாற்றாக களத்தில் இறங்கினார்கள் என்பதால், அவர்களுக்கான அடையாளத்தை  அப்போது உருவாக்கிக்கொள்ள இயலாமல் இருந்தது. இளைஞரான ரோஹித் சர்மாவுக்கு தனக்கான இடம் அணியில் உருவாகாமல் இருந்தது குறித்து ஏமாற்றமாக இருந்தது.

முன்னதாக, பள்ளி காலங்களில் சிறப்பான ஆட்டத்தை ரோஹித் சர்மா வெளிப்படுத்தி வந்ததன் தொடர்ச்சியாக, அவருக்கு இந்தியாவின் அண்டர் 17 அணியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அப்போது அணித் தேர்வாளரான பிரவீண் ஆம்ரேதான் ரோஹித்தின் ஆட்டத் திறனின் மீதான நம்பிக்கையால் அவருக்கு அந்த வாய்ப்பினை வழங்கியிருந்தார். துடிப்புமிக்க இளைஞராகவும், கடினமான பயிற்சிகளில் அதீத ஈடுபாட்டுடன் தன்னை உட்படுத்திக் கொண்டிருந்தவருமான ரோஹித் சர்மா இந்த சந்தர்ப்பத்தை தனக்கு உகந்த வகையில் பயன்படுத்திக் கொண்டார். மெல்ல மெல்ல அவரது பேட்டிங் திறன் வளர்ந்தபடியே இருந்தது.

2005-ல் குவாலியரில் நடைபெற்ற தியோதர் கோப்பையில், செண்ட்ரல் ஸோன் அணிக்கு எதிராக 123 பந்துகளில் 142 ரன்களை குவித்து ரோஹித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி தேர்வாளர்களை ரோஹித் சர்மாவின் நிதானமான அதே சமயத்தில் அவசியப்படும் தருணத்தில் வெளிப்படும் அதிரடி ஆட்டம் வெகுவாக கவர்ந்திருந்தது. இந்தியாவெங்கும் திறன்மிக்க இளைஞர்களை ஊக்குவித்து அவர்களை முன்னிலைப்படுத்தும் வேலையில் ஈடுப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் வாரியம் அப்போது ரோஹித் சர்மாவுக்கும் வாய்ப்பளிக்க முடிவு செய்திருந்தது. இரண்டு வருடங்களுக்கு பிறகு, அயர்லாந்துக்கு எதிராக அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம்பெற்ற சில மாதங்களிலேயே 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி தொடங்கியது. ரோஹித் சர்மாவின் ஆட்டத்தின் மீது அணியினரிடத்தில் முதல் முதலாக நம்பிக்கையை உண்டாக்கிய போட்டித் தொடர் இருபது ஓவர் உலக கோப்பை தான். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ரோஹித் சர்மா விளாசிய 50 ரன்கள்தான், இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேற மிகப்பெரிய காரணமாக இருந்தது. அரை இறுதியில் மகேந்திர சிங் தோனியுடன் இணைந்து பொறுப்புடன் ரோஹித் சர்மா விளையாடினார். ரோஹித் தோனியுடன் இணையும்போது இந்திய அணி 61 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்திருந்தது. மெல்ல நிதானமாக ஆடிய தோனி – ரோஹித் இணை 85 ரன்களை சேர்ப்பித்திருந்தது. தோனிக்கும் ரோஹித் சர்மாவின் மீது பெரியளவில் மதிப்பு உருவாகிறது.

இதன் பிறகும், ரோஹித் சர்மாவால் தொடர்ச்சியாக இந்திய அணியில் பங்கேற்க முடியவில்லை. ஆட்டவரிசையில் ஒவ்வொரு நிலையிலும் தகுதி வாய்ந்த கிரிக்கெட் வீரர்களால் இந்திய அணி நிரம்பியிருந்தது. ஒருபுறம் சச்சின், சேவாக், காம்பீர் என அனுபவமிக்க ஆட்டக்காரர்கள், மறுபுறம் கோலி, சுரேஷ் ரெய்னா போன்ற வளர்ந்து வரும் திறன்மிக்க இளைய ஆட்டக்காரர்கள் என்ற கட்டமைப்பை கொண்டிருந்த இந்திய அணியில் தனக்கான இடத்தை உருவாக்கிக்கொள்ள ரோஹித் சர்மா கடினமாக போராட வேண்டியிருந்தது. முக்கியமாக, அணியில் இடம்பெறும் சர்ந்தப்பம் கிடைக்கும்போதும் ரோஹித் சர்மா ஏழாவது அல்லது எட்டாவது வீரராகவே களம் இறங்க வேண்டியிருந்தது. அதனால், மன நெருக்கடிகளுக்கும் தனது ஆட்டத்திறனை முழுமையாக வெளிப்படுத்த இயலாத சூழலை அவரை அழுத்திக் கொண்டே இருந்தது. அணியில் இடம் பெறுவதும், விளையாட முடியாமல் போவதும் தொடர்ச்சியாக நிகழ்ந்துக்கொண்டே இருந்தன.

இந்த நாட்களில் மிக கடுமையாக ரோஹித் சர்மா பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். அதோடு, அணியில் பங்கேற்கும் சூழல்களில் மூத்த வீரர்களின் ஆட்ட நுணுக்கங்களை கூர்ந்து அவதானிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். சச்சின், டிராவிட், கும்ப்ளே, விவிஎஸ் லஷ்மணன் ஆகியோர் ஒரே சமயத்தில் மிகப்பெரிய புகழ் அடைந்தவர்களாகவும், தனிப்பட்ட வாழ்க்கையில் கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும், தன்னடகத்தையும் கடை பிடிப்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் தங்களது வாழ்க்கையை கட்டுக்கோப்பாக நகர்த்திச் சென்றதால்தான் அவர்களால் உச்ச நட்சத்திரங்களாக உயர முடிந்தது. அதனால் அவர்களிடம் நாம் பயில வேண்டும். மிக இளைய வயதில் இந்திய அணியில் இடம் கிடைத்தபோது, நான் இவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்துப் பார்த்து வளர்ந்தேன்.  அவர்களுடன் விளையாட கிடைத்த வாய்ப்பை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவமாக கருதுகிறேன். அவர்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன்” என்கிறார். துவக்க காலங்களில் விவிஎஸ் லஷ்மணனுக்கு மாற்றாகவே இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் விளையாடுவது வழக்கம்.  

கிட்டதட்ட ஒருநாள் போட்டித் தொடரில் தனது முதல் சதத்தை நிறைவு செய்ய ரோஹித் சர்மாவுக்கு மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டது. ஜிம்பாவேவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 114 ரன்களை குவித்து தனது முதல் சதத்தை பூர்த்திச் செய்தார். ஆனால், ரோஹித் சர்மாவிடம் முதல் சதத்திற்குரிய பரவசம் இல்லை. வழக்கம்போல மிக அமைதியுடன் பேட்டை உயர்த்தி காண்பித்துவிட்டு, அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாராகிவிட்டார். அந்த போட்டியின் முடிவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, 'நான் எனது சதத்தை கொண்டாடும் மன நிலையில் இல்லை. இந்திய அணியை ஒரு சரியான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற நினைப்பே அத்தருணத்தில் எனக்குள் மேலோங்கி இருந்தது' என்றார். அதே ஆண்டில், இலங்கைக்கு எதிரான போட்டியில் 101 ரன்களை குவித்து தனது இரண்டாவது சதத்தையும் நிறைவு செய்தார். ஒருபுறம் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக  விளையாட துவங்கியிருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவால் பங்கேற்க முடியாமல் போனது.

2010-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டிருந்தார். போட்டி இந்தியாவில் நிகழ்ந்தது. அன்றைய தினத்தின் காலையில் பயிற்சியின்போது ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. அதனால், அவர் உடனடியாக விளையாடும் பதினோரு நபர்களில் இருந்து நீக்கப்பட்டார். இதன் பிறகு, மீண்டும் ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் பங்கேற்க நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

அதே போல், இக்காலங்களில் அவ்வப்போது ரோஹித் சர்மாவின் ஃபார்ம் குறித்து பல விமரிசனங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. ஓரிரு போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதும், மற்றைய போட்டிகளில் விரைவாகவே ஆட்டமிழந்து விடுவதும் இந்திய அணியில் அவரது இடத்தை தொடர்ந்து கேள்விக்குட்படுத்தியபடியே இருந்தது. முன்னதாக, பேட்டிங் வரிசையில் கீழ்நிலையில் களமிறங்கும் ரோஹித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறினார். எனினும், அவரது ஆட்டத்திறன் மீதான விடாப்பிடியான நம்பிக்கையை அவர் ஒருபோதும் தளரவிட்டதேயில்லை.

'இதுதான் எனது இயல்பான ஆட்டம். என் வாழ்நாள் முழுக்க தொடர்ந்து நான் இவ்வகையில் தான் விளையாடுவேன். இதனால் சாதக பாதக விளைவுகள் உண்டாகலாம். ஆனால், இதுதான் எனது இயல்பான ஆட்டம். இதனை நான் தொடர்ந்து விளையாடுவேன்' எனும் ரோஹித் சர்மா எப்போதும் அதிக உறுதியுடன் நம்பிக்கையாக அடுத்தடுத்த போட்டிகளை எதிர்கொள்கிறார். தற்சமயம் வரையிலும் அவரால் தொடர்ச்சியாக சிறப்பான ஃபார்மில் விளையாட இயலாமல் இருக்கிறது என்றாலும், ரோஹித் சர்மா ஒரு நம்பிக்கையை உருவாக்கி வைத்திருக்கிறார். கடந்த சில வருடங்களாக அணியில் துவக்க நிலை ஆட்டக்காரராகவும் விளங்கும் ரோஹித் சர்மா, இந்திய அணி பல்வேறு சாதனை புரியவும் காரணமாக இருக்கிறார். அவர் நிலைத்து நின்றுவிட்டாலே அணியின் ஸ்கோர் 400ஐ தாண்டுவது உறுதி என்கின்ற நிலை தற்போது உருவாகியிருக்கிறது.

ஆனால், இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்று தருணமான 2011 உலக கோப்பை அணியில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை என்பது அவருக்கு கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப் பெரிய இழப்புகளில் ஒன்றாகவே இன்னமும் கருதி வருகிறார். மோசமான ஃபார்ம் மற்றும் விரலில் உண்டான காயம் காரணமாக அவர் இந்திய அணியில் இடம்பெற முடியாமல் போனது. எனினும், ரோஹித் சர்மா மிக விரைவாக மீண்டு வந்தார். ரோஹித் சர்மா தனக்கான நாட்களுக்காக காத்திருக்க துவங்கினார். அவனது மனதில் வலி பெருகியது. உலக கோப்பைக்கு பின்னர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்த ரோஹித் சர்மா அந்த கணத்தில் இருந்து விஸ்வரூபம் எடுக்கத் துவங்கினார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்க்ஸ் இந்த புள்ளியில் இருந்து துவங்கியது.

சிக்ஸர் பறக்கும்……   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com