10. தனது காதலை வெளிப்படுத்த மிகச் சிறந்த இடமென இந்தியாவை டிவில்லியர்ஸ் தேர்வு செய்தது ஏன் தெரியுமா?

‘நான் அடிப்படையில் ஒரு நம்பிக்கைவாதி. அது எனக்கு இயல்பாக வந்ததா? அல்லது போராட்டத்தின் பயனாக
10. தனது காதலை வெளிப்படுத்த மிகச் சிறந்த இடமென இந்தியாவை டிவில்லியர்ஸ் தேர்வு செய்தது ஏன் தெரியுமா?

‘நான் அடிப்படையில் ஒரு நம்பிக்கைவாதி. அது எனக்கு இயல்பாக வந்ததா? அல்லது போராட்டத்தின் பயனாக வாய்க்கப் பெற்றதா? என தெரியவில்லை. ஆனால், நான் எனது பாதங்களை முன்னால் நகர்த்திக் கொண்டே இருப்பேன். சூரியனை நோக்கி எனது மனம் தன்னியல்பாக நகர்ந்துக் கொண்டே இருக்கும். மனிதத்துவத்தின் மீதான எனது நம்பிக்கையை குலைக்கும் வண்ணம் பலமுறை எனது பாதையில் இருள் சூழ்ந்திருக்கிறது. என்னை தடுமாறச் செய்திருக்கிறது. ஆனால், எந்தவொரு சக்தியாலும் எனது பாதையை குலைக்க முடியாது. ஏனெனில் நான் அடிப்படையில் ஒரு நம்பிக்கைவாதி’

  • நெல்சன் மண்டேலா (தனது சுயசரிதையில்)

நெல்சன் மண்டேலாவின் இந்த கூற்றினை டிவில்லியர்ஸ் தனது மனத்தில் வைத்துக் கொண்டார். அவ்வப்போது அவர் தன்னை பலவீனமானவராக கருதும் போதெல்லாம், இந்தச் சொற்களை மனதில் அசைபோடுவது அவரது வழக்கம். பல நெருக்கடி மிகுந்த தருணங்களில் இந்தச் சொற்கள் டிவில்லியர்ஸுக்கு தன்னம்பிக்கை அளித்திருக்கிறது.  2007-ல் நெல்சன் மண்டேலாவை அவரது வீட்டில் வைத்து சக கிரிக்கெட் அணியினருடன் சந்தித்தது அவரது வாழ்க்கையில் மகத்தான தருணங்களில் ஒன்று.

டிவில்லியர்ஸ் அதே போல ஜெஃபரி ஆர்ச்சரின் புதினங்களுக்கும் மிகப் பெரிய ரசிகர். ஒவ்வொருமுறை அவரது புதிய புத்தகம் வெளியாகும் போது, டிவில்லியர்ஸுக்கு ஒரு பிரதி அனுப்பி வைத்து விடுவார்கள். போட்டிகளின் இடையிலோ அல்லது பயணங்களின் போதே ஜெஃபரி ஆர்ச்சர் அவரது கைகளில் தவழ்ந்து கொண்டிருப்பார்.

டிவில்லியர்ஸ் நம்ப முடியாத வகையில் அதீதமான கடவுள் நம்பிக்கைக் கொண்டவர். கிருஸ்துவ மதத்தை சேர்ந்த அவர், தனது வாழ்க்கையில் தான் நிகழ்த்திய சாதனைகள் அனைத்துமே கடவுள் உண்டாக்கிய அற்புதங்களே என குறிப்பிடுகிறார். அதோடு, இரண்டு முறை தனது வாழ்க்கையில் அவர் கடவுளின் அண்மையை துல்லியமாக உணர்ந்ததாகவும் நெகிழ்வுடன் சொல்கிறார்.

முதல் தருணம், மிகச் சிறிய வயதில் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு உண்டானது. பின் சீட்டில் அமர்ந்திருந்த அவரின் பார்வையில் சூரிய வெளிச்சம் படுகிறது. ஆவுயுருக்களை போல ஆங்காரத்துடன் வானத்தில் இருந்து தரை நோக்கி வீழும் அந்த ஒளிச் சிதறல் அவருக்கு சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் பாதையாகவே தெரிகிறது. உடல் சில்லிட அப்படியே முகத்தை மறைத்துக் கொண்டு தனக்குள்ளாக அழுகிறார்.

இரண்டாவது தருணம் பல வருடங்களுக்கு பிறகு, அவரது 24-வது வயதில் நிகழ்ந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, சில தென் ஆப்பிரிக்க வீரர்கள் படகு சவாரி போனார்கள்.

டிவில்லியர்ஸுக்கு இந்த பயணத்தில் அதிக விருப்பமில்லை என்றாலும், அணியினரை ஏமாற்றமடைய செய்ய வேண்டாம் என அவர்களுடன் செல்கிறார். எல்லோரும் கப்பலின் கீழ்த் தளத்தில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், டிவில்லியர்ஸ் மட்டும் மேல்தளத்தில் சூரிய கதிர்களை நேரடியாக எதிர் கொள்ளும் வகையில் படுத்திருந்தார். அந்த ஆழ்ந்த அமைதியும், கடல் அலைகளின் இரைச்சலும் அவருக்கு ஏராளமான எண்ணங்களை கிளர்த்தி விடுகிறது.

தன்னை அவர் முற்றிலும் மனிதர்கள் அற்ற வெளியில் சஞ்சாரம் செய்துக் கொண்டிருப்பதாக உணர்கிறார். அவரது உதடுகள் சுயமாக உச்சரிப்பு செய்கிறது.

‘இந்த பூமியில் நீ என்ன செய்துக் கொண்டிருப்பதாக நினைக்கிறாய்? இந்த பூமியில் உன்னை யாரென்று நீ கருதுகிறாய்? சில விளையாட்டு போட்டிகளில் ரன்களை குவித்து விட்டதாலும், பல சாதனைகளை நிகழ்த்தி விட்டதாலும் உன்னை அதி முக்கியத்துவம் வாய்ந்த உயிரென்று கருதுகிறாயா? நீ அமைதியாக இருக்க வேண்டும். உனக்கு மிக மிக நெருக்கமான மனிதர்களுடன் நீ உனது நேரத்தை அதிகளவில் செலவிட வேண்டும். அதோடு, உனக்கு என்ன அருளப்பட்டிருக்கிறதோ அதற்காக நீ நன்றியுடன் இருக்க வேண்டும்’

அன்றைய தினத்தில் கரை திரும்பியதும், டிவில்லியர்ஸ் உடனடியாக தனது பெற்றோருக்கு போன் செய்து, மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி செலுத்தியபடியே இருந்தார்.

உலகத்தின் எந்தவொரு எல்லைக்கு சென்றிருந்தாலும், டிவில்லியர்ஸுக்கு அவரது வசிப்பிடமே அதிக முக்கியமானதாக இருந்தது. பெற்றோரிடம் நேரத்தை செலவிட முடியாத தனது நிலையை குறித்து பலமுறை டிவில்லியர்ஸ் மனம் வருந்தியிருக்கிறார். அதே போல, எப்போதும் சில நண்பர்களால் சூழ்ந்திருக்க வேண்டுமென்பதும் டிவில்லியர்ஸின் விருப்பம். அவரது வீடு இசையும், கேளிக்கையாலும் நிரம்பியிருக்கும். அவரது பெற்றோர் பழைய பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருப்பார்கள். டிவில்லியர்ஸ் அவர்களை மகிழ்ச்சி அடைய செய்ய வேண்டுமென்று இரண்டு வருடங்கள் கிடார் பயிற்சிக்கு சென்று, அந்த இசையை வீட்டில் அவ்வப்போது வாசித்துக் கொண்டிருப்பார்.

2010ல் தனது நீண்ட கால நண்பரும், அதிகத் திறமை வாய்ந்த இசை அமைப்பாளருமான அம்பீ டூ ப்ரீஸுடன் இணைந்து இசை ஆல்பம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.  

தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்ததால், பெற்றோரை சந்திக்க முடியாமல் இருப்பது குறித்த வருத்தத்தில் ஆழ்ந்திருந்த டிவில்லியர்ஸுக்கு சமீப காலங்களில் அதிகம் வலி தரக் கூடியதாக இருந்தது  அவரது காதல் மனைவியான டேனிலியை சந்திக்க முடியாமல் இருந்ததுதான். அவரது மனைவியை பிரிந்திருப்பது அவருக்கு மிகுந்த வலி தரக் கூடியதாக இருந்தது.

கேரி கிரிஸ்டன் இந்த சிக்கலுக்கு ஒருமுறை டிவில்லியர்ஸிடம் ஆலோசனை ஒன்றை வழங்கினார். அவரும் அவரது மனைவியும் 21 தினங்களுக்கு ஒருமுறை உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், சந்தித்து விடுவதென தீர்மானித்திருந்ததாகவும், அதையே நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

டிவில்லியர்ஸுக்கு இந்த யோசனை பிடித்துவிட்டது. என்றாலும், டிவில்லியர்ஸும் டேனிலியும் 10 தினங்களுக்கு ஒருமுறை சந்தித்துக் கொள்வதென முடிவு எடுத்திருந்தார்கள். 2007-ல் தற்செயலான ஒரு நிகழ்வில் டேனிலியை பார்த்த டிவில்லியர்ஸுக்கு முதல் சந்திப்பிலேயே அவரைப் பிடித்துப் போனது. டேனிலியின் பெற்றோரிடம் முறைப்படி டிவில்லியர்ஸ் பேசினார். அவர்களுக்கும் இந்த திருமணத்தில் மிகப் பெரிய விருப்பமிருந்தது. ஆனால், டேனிலியிடம் டிவில்லியர்ஸ் தனது காதலை அவரது பெற்றோரிடம் பேசும் வரையிலும் கூட வெளிப்படுத்தியிருக்கவில்லை. டிவில்லியர்ஸிடம் விஷேசமான திட்டம் ஒன்றிருந்தது.

இந்தியாவின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றான தாஜ் மஹால் டிவில்லியர்ஸை வெகுவாக கவர்ந்திருந்தது. ஷாஜஹான் – மும்தாஜ் வரலாற்றையும் அறிந்து கொண்டதன் பின்பு, தாஜ் மஹாலின் மீது டிவில்லியர்ஸுக்கு வியப்பு அதிகரித்தது. தீராக் காதலின் நினைவுச் சின்னமாக போற்றப்படும் தாஜ் மஹாலில் வைத்து டேனிலியிடம் தனது காதலை வெளிப்படுத்த வேண்டுமென டிவில்லியர்ஸ் தீர்மானித்தார்.

ஐ.பி.எல் போட்டித் தொடரின்போது டேனிலியை இந்தியாவுக்கு அழைத்திருந்த டிவில்லியர்ஸ், ஒரு நாள் அவரை கூட்டிக் கொண்டு தாஜ் மஹாலுக்கு செல்கிறார். உடன் வந்த இரண்டு புகைப்படக்காரர்களை தனது பாதுகாவலர்கள் என அறிமுகம் செய்து வைத்தார். பிரமாண்டமான அந்த கட்டிடத்தை இருவரும் வியப்பு மேலிட நிதானமாக சுற்றிப் பார்க்கிறார்கள். வெண்ணிறத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தாஜ் மஹால் மகத்தான காதலின் அடையாளங்களில் ஒன்று என டிவில்லியர்ஸ் டேனிலியிடம் தான் அறிந்து வைத்திருக்கும் கதையை பகிர்ந்து கொள்கிறார்.

பின் சட்டென்று டேனிலி எதிர்பாராத தருணத்தில், தரையில் முழங்காலிட்டு, ‘டேனிலி உன்னுடன்தான் நான் என்றென்றும் வாழ வேண்டுமென்று விரும்புகின்றேன். என்னை திருமணம் செய்து  கொள்வாயா?’ எனக் கேட்கிறார். டேனிலி உணர்ச்சிவசப்பட்டு டிவில்லியர்ஸை நெருங்கி அவரை அணைத்துக் கொள்கிறார். டேனிலியின் கண்களில் கண்ணீர் திரண்டு ஒழுகுகிறது. நீண்ட அமைதிக்கு பின்னர், ‘நிச்சயமாக’ என டிவில்லியர்ஸின் காதலை ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு, இருவரும் ஒருவரை ஒருவர் மேலும் ஆழமாக நேசிக்கத் துவங்கினர். நீண்ட காலம் டேனிலியை பார்க்காமல் டிவில்லியர்ஸால் இருக்க முடியாது என்கின்ற நிலை உண்டாகிறது. மகன் பிறந்ததும் இவர்களது காதல் மேலும் தீவிரமடைகிறது.

தனது காதலை வெளிப்படுத்த மிகச் சிறந்த இடமென இந்தியாவை டிவில்லியர்ஸ் தேர்வு செய்தது தற்செயலாக நிகழ்ந்ததல்ல. பல வருடங்களாகவே டிவில்லியர்ஸுக்கு இந்தியாவின் மீது ஆழமான நேசிப்பு இருந்தது. முதல் முறையாக இந்தியாவுக்கு வந்த போதே, மோர்னே மோர்குல் உடன் இணைந்து கொண்டு பல பகுதிகளில் சுற்றித் திரிந்திருக்கிறார். இந்தியாவில் நிலைப் பெற்றிருக்கும் வண்ணமயமான கலாச்சார அடையாளங்களை அவர் வியப்புடன் பார்த்து ரசித்தார். இந்தியா என்பது அவர் வாழ விரும்புகின்ற கனவுப் பிரதேசம் போலவே ஆகிவிட்டிருந்தது. இந்திய மக்களும் அவருக்கு மிகுதியான அன்பையும், அரவணைப்பையும் கொடுத்திருக்கிறார்கள்.

ஒருமுறை இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையில் ஒருநாள் போட்டி ஒன்று நடந்துக் கொண்டிருந்தது. தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்த அந்தப் போட்டியில் டிவில்லியர்ஸ் மிக விரைவாக 98 ரன்களை அடித்திருந்தார். பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்து  கொண்டிருந்த தருணம் அது. அரங்கில் கூடியிருந்த 33,000 ரசிகர்களும் எதிர்பாராத விதமாக, ஒருங்கே, ‘ஏ – பி - டி ஏ – பி – டி’ என உரக்க குரலெழுப்புகிறார்கள். ஐபிஎல் தொடருக்கு கிடைத்த ஆரவாரத்தை ஏற்றுக் கொண்டிருந்த டிவில்லியர்ஸ் இந்தத் தருணத்தில் மிகவும் எமொஷனலாக தன்னை உணர்ந்தார். இந்தியாவுக்கு எதிராக, இந்தியாவில் நிகழும் அந்த போட்டியில், டிவில்லியர்ஸின் ஆட்டத்திற்கு பெருத்த ஆராவாரம் எழுந்தருளியிருந்தது. சதத்தை எட்டியதும், மேலும் மேலும் இந்திய ரசிகர்களின் குரல்கள் அதிகரித்தபடியே இருந்தது.

ஏ – பி – டி! ஏ – பி – டி! ஏ – பி – டி! ஏ – பி – டி! ஏ – பி – டி! ஏ – பி – டி!  ஏ – பி – டி!

டிவில்லியஸால் அந்தத் தருணத்தை நம்பவே முடியவில்லை. ஒட்டுமொத்த அரங்கமும் அவரது பெயரைஆக்ரோஷத்துடன் மீண்டும் மீண்டும் ஜெபம்போல உச்சரித்துக் கொண்டிருக்கிறது. மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அந்த மக்களின் நடுவில் டிவில்லியர்ஸ் நின்றிருந்தார்.

அதனாலேயே, தனது ஒட்டுமொத்தமான சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை இந்தியாவில் விளையாடிய போட்டியோடு அவர் நிறைவு செய்துக் கொண்டார். ஐ.பி.எல்லுக்கு முன்னதாகவும் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிராகத்தான் விளையாடி இருந்தது.

டிவில்லியர்ஸின் ஓய்வு முடிவு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டிற்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தன்னால் இயன்ற அளவுக்கு அனைத்துவிதமான சிறப்பான பங்களிப்பையும் தென் ஆப்பிரிக்கா அணிக்காக அவர் அளித்துவிட்டார். துடிப்புமிக்க இளைஞராக, ரன்களை விரைவாக சேர்க்கக் கூடியவராக, விக்கெட் கீப்பராக, கேப்டனாக எனப் பல தளங்களில் டிவில்லியர்ஸின் ஆற்றல் சர்வதேச அரங்கில் வெளிப்பட்டிருக்கிறது.

கிரிக்கெட் போன்ற கூட்டு விளையாட்டில் தங்களது இருப்பை சாத்தியப்படுத்தும் ஊக்கத்துடன் நாளும் பல இளைஞர்கள் தங்களது தினத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அதனால், கிரிக்கெட்டில் வெற்றிடம் என்று ஒன்று கிடையவே கிடையாது. கிரிக்கெட்டில் அவரது இடத்தை நிரப்பக் கூடிய ஆட்டக்காரர் உருவாவது விரைவில் நிகழத்தான் போகிறது. ஆனால், டிவில்லியர்ஸ் தனது அசாத்தியமான ஆட்டத்திறன் காரணமாக, உலக கிரிக்கெட் ரசிகர்களின் நினைவுகளில் என்றென்றும் நிலைப்பெற்றிருப்பார் என்பது உறுதி. தொடர்ச்சியாக பல வருடங்களாக கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வரும் டிவில்லியர்ஸ் அவரது குடும்பத்துக்காக நேரம் செலவிட வேண்டியது அனைத்தை விடவும்  முக்கியமானது. டிவில்லியர்ஸும், டேனிலியும், ஜூனியர் டிவில்லியர்ஸும் எவ்வித புற உலக இடையூறும் இல்லாமல், தங்களது பிரத்யேக உலகத்தில் நிம்மதியாக வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள்.

‘இந்த பூமியில் நீ என்ன செய்துக் கொண்டிருப்பதாக நினைக்கிறாய்? இந்த பூமியில் உன்னை யாரென்று நீ கருதுகிறாய்? சில விளையாட்டு போட்டிகளில் ரன்களை குவித்துவிட்டதாலும், பல சாதனைகளை நிகழ்த்தி விட்டதாலும் உன்னை அதி முக்கியத்துவம் வாய்ந்த உயிரென்று கருதுகிறாயா? நீ அமைதியாக இருக்க வேண்டும். உனக்கு மிக மிக நெருக்கமான மனிதர்களுடன் நீ உனது நேரத்தை அதிகளவில் செலவிட வேண்டும். அதோடு, உனக்கு என்ன அருளப்பட்டிருக்கிறதோ அதற்காக நீ நன்றியுடன் இருக்க வேண்டும்’

டிவில்லியர்ஸ் இப்போது கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்!

சிக்ஸர் பறக்கும்……

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com