3. ஊடகங்கள் சிலவற்றை மிகைப்படுத்தின என்றாலும், என் தவறுகளை ஒப்புகொள்கிறேன்! விராட் கோலி

நான் விராட் கோலியின் ஆட்டத்தை மிகவும் ரசித்துப் பார்க்கிறேன். எனது அந்தரங்க பிரதிப்போல
3. ஊடகங்கள் சிலவற்றை மிகைப்படுத்தின என்றாலும், என் தவறுகளை ஒப்புகொள்கிறேன்! விராட் கோலி

முதல் நாயகன் – விராட் கோலி - 3

‘நான் விராட் கோலியின் ஆட்டத்தை மிகவும் ரசித்துப் பார்க்கிறேன். எனது அந்தரங்க பிரதிப்போல அவர் எனககு காட்சி அளிக்கிறார். சீறும் குணம், அணியை வெற்றியை நோக்கி நகர்த்திச் செல்லும் விடாப்பிடியான ஆற்றல் என நான் கொண்டிருந்த இயல்புகளையே அவரும் பெற்றிருக்கிறார். கோலியை பார்க்கும்போது, நானே மீண்டும் விளையாடிக் கொண்டிருப்பதாக எனக்குள் எண்ணம் எழுகிறது’ - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் (முன்னாள் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்)

2008-ம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டிதான், இந்திய அணிக்காக கோலி விளையாடிய முதல் போட்டி. அப்போது கோலிக்கு வயது 19. துவக்க ஆட்டக்காரர்களான சச்சினும், சேவாக்கும் காயங்களின் காரணமாக அந்த தொடரில் பங்கேற்காததால், கோலிக்கு அந்த போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. 12 ரன்களை தனது பங்களிப்பாக முதல் போட்டியில் கோலி சேர்ப்பித்தார். இந்த தொடரின் நான்காவது போட்டியில் தனது முதல் அரை சதத்தை அடித்து, இந்தியாவை வெற்றிப் பெற செய்த கோலி மற்ற போட்டிகளில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

அதன் பிறகு, மீண்டும் தனது வாய்ப்புக்காக கோலி சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. அவ்வப்போது ஷீகர் தவான், ரெய்னா போன்றவர்கள் விளையாட முடியாமல் போகும் தருணங்களில் மட்டுமே கோலிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் கோலி பங்கேற்றார். மிக அதிக பணமும், ஊடக கவர்ச்சியும் மிகுதியாக இருக்கும் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்றவுடன் கோலியின் ஆட்டத் திறன் புகழப்படுகிறது. புகழ் போதை கோலியை ஆட்டுவிக்கிறது. விளையாட்டுக்கு பின்பான இரவு பார்ட்டிகளில் அதிகளவில் பங்கெடுத்துக் கொள்கிறார். அணியினரிடத்தில் தனது அதிகாரத்தை செலுத்தியதால், கோலிக்கு எதிர்மறையான பிம்பம் உருவாகிறது. இதன் காரணமாகவே கிட்டதட்ட ஓராண்டு காலம் இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை புறக்கணித்திருந்தது.

'சிலவற்றை ஊடகங்கள் மிகைப் படுத்தி இருக்கின்றன என்றாலும், என் மீதுள்ள தவறுகளை நான் ஒப்புகொள்கிறேன்’ என கோலி தெரிவித்திருக்கிறார்.

2009-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கான போட்டித் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு கோலிக்கு கிடைக்கிறது. தனது வாழ்க்கையின் திருப்புனை என இத்தொடரை வர்ணிக்கும் கோலி, இந்த தொடரில் மொத்தம் 398 ரன்களை எடுத்திருந்தார். அதில் ஒரு சதமும் அடக்கம். அவரது ஆட்டத்திறன் வெகுவாக கவனிக்கப்படுகிறது. கிரிக்கெட் வாரியத்திற்கு கோலியின் மீது நம்பிக்கை உண்டாகிறது.

2009 டிசம்பரில் இலங்கைக்கு எதிரான நான்காவது போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கபெற்றதும், அதனை கோலி மிக சரியாக பயன்படுத்திக்கொண்டார். இந்த போட்டியில் கம்பீருடன் இணைந்து 224 ரன்களை இருவருமாக இந்திய அணிக்கு சேர்த்தனர். இந்த போட்டியில்தான் கோலி தனது முதல் சதத்தை அடித்தார்.

காம்பீர் இந்த போட்டியில் 150 ரன்கள் குவித்ததால், அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்படுகிறது. 'இந்த போட்டியில் கோலியின் பங்களிப்பு மகத்தானது, அதனால் ஆட்ட நாயகன் விருதினை கோலியுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்’ என கோலியை பாராட்டி தனது பரிசு தொகையினை கோலியுடன் பகிர்ந்துக் கொண்டார் கவுதம் காம்பீர்.

சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லஷ்மண், விரேந்திர சேவாக் என பல முக்கிய இந்திய கிரிக்கெட் ஆளுமைகளுடன் இணைந்து விளையாடும் சந்தர்ப்பம் கோலிக்கு வாய்க்கிறது. தனது துவக்க காலத்தில் இத்தகைய அனுபவமிக்க ஆட்டக்காரர்களுடன் விளையாட நேர்ந்த அனுபவம் தனது கிரிக்கெட் வாழ்க்கையை கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் என கோலி குறிப்பிடுகிறார்.

சச்சின் டெண்டுல்லர் கோலியிடம், 'எந்த வகையான பவுலிங்கையும் கண்டு பயம் கொள்ள வேண்டாம். ஸ்பின் பவுலிங்கையும், பாஸ்ட் பவுலிங்கையும் சரி நிகராக எடுத்துகொள்ள பழக வேண்டும். உன்னை நோக்கி எறியப்படுகின்ற பந்து மட்டுமே உன் கண்ணுக்கு தெரிய வேண்டும். அதனை நீ மிக துல்லியமாக நெருங்கிச் செல்ல வேண்டும். அப்போதுதான் பந்து உன்னை வெற்றிக் கொள்வதை உன்னால் தவிர்க்க முடியும்’ என சச்சின் தன்னிடம் கூறிய அறிவுரை தனக்கு மிகவும் உபயோகமாக இருந்ததாக கோலி தெரிவித்திருக்கிறார்.

ஒவ்வொரு சீனியர் பிளேயர்களும் கோலிக்கு வழக்காட்டியாக இருந்திருக்கிறார்கள். ஒரு இக்கட்டான சூழ்நிலையை எவ்விதம் எதிர்கொள்ள வேண்டுமென்று அவர்கள் தங்களது அனுபவத்தின் வாயிலாக கோலியிடம் விவரித்திருக்கிறார்கள். கோலி இந்த அனுபவங்களை தனக்குள் சேகரித்துக் கொண்டாலும், உண்மையில் நாம் களத்தில் அத்தகைய சிக்கல்களை எதிர்கொள்ள நேர்கையில் நாம் எவ்வாறு அதனை வெற்றிக் கொள்கிறோம் என்பதில்தான் நமக்கான சுய பாடம் இருக்கிறது என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். இந்திய அணியில் நெடுங்காலம் நிலைத்திருக்க போகிற அவரது ஆட்டத்திறனை இந்திய அணியின் மூத்த வீரர்கள் கணக்கிட்டிருந்தார்கள். 

2010-ல் வங்க தேசத்துக்கு எதிராக தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்ததன் பின்பாக, 22 வயதுக்குள் இரண்டு சதங்களை அடித்திருக்கும் மூன்றாவது இந்திய வீரர் (முதல் இரண்டு வீரர்கள்: சச்சின் மற்றும் ரெய்னா) என்ற சாதனையை கோலி செய்கிறார். இதன் பிறகே, தோனியின் முழு ஆதரவு கோலிக்கு கிடைக்கிறது. தோனி தொடர்ந்து கோலியை முன்னிலைப்படுத்த துவங்குகிறார்.

தோனியின் ஆட்ட சாதுர்யம் பல மன கணக்குகளை கொண்டது. அதிரடியாக விளையாடி தனது இருப்பை இந்திய அணியில் தக்க வைத்துக்கொண்ட தோனி, தன்னை மிக மிகக் கீழ்நிலையில் ஆட்ட வரிசையில் இறக்கிக் கொண்டார். இதன்மூலம், அவருக்கிருக்கும் அழுத்தங்கள் முன்னால் இருக்கும் வீரர்களிடம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. தோனிக்கு பல போட்டிகளில் விளையாடும் வாய்ப்பே கிடைக்காமல் போகிறது. இதனால், மிக முக்கியமான பொறுப்புகள் அனைத்தையும் கோலி சுமக்க வேண்டியிருந்தது.

தோனி அணியில் இடம்பெறாத சூழல்களில் ரெய்னாவும், கோலியும் இந்திய அணியின் தலைமை பொறுப்புகள் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் துணை கேப்டனாக விளையாடிய கோலி, அந்த தொடரில்தான், மிக குறைந்த போட்டிகளில் விரைவாக 1000 ரன்களை கடந்த கிரிக்கெட் வீரர் எனும் சாதனையை படைக்கிறார். கோலியின் மீது மெல்ல புகழ் வெளிச்சம் படருகிறது. இந்திய இளைஞர்கள் அவரை நம்பிக்கை நாயகனாக நம்ப தலைபடுகின்றனர். இந்திய அணியில் கோலியின் இடம் நிரந்தமாக உறுத்திப்படுத்தப்படுகிறது.

தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை கோலி வெளிப்படுத்தி வந்ததால், மிக விரைவிலேயே தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் தனக்கான இடத்தை பிடிக்கிறார். சர்வதேச ஊடகங்களின் வெளிச்சமும் அவருக்கு கிடைக்கிறது. இந்திய ஊடகங்கள் அவரது நுணுக்கமான ஆட்டத்திறனை விவாதங்களில் முக்கியத்துவம் அளிக்கிறது. கோலி மிக விரைவாகவே, வளரும் தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னுதாரணமாக நிறுத்தப்படுகிறார். அவரது பேட்டிங் சாதுர்யங்கள் விரிவாக அலசப்படுகின்றன.

ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த கோலி, 2011-ம் ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்து டெஸ்ட் போட்டிகளிலும் அழுத்தமாக காலூன்ற துவங்குகிறார். 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியா கைகளில் கோப்பை ஏந்திய 2011 உலககோப்பை தொடரிலும் கணிசமான பங்களிப்பை வழங்கினார். இந்த போட்டித் தொடரோடு சச்சின் உட்பட பல மூத்த கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணி இளைஞர்களால் கோர்க்கப்பட்டு புத்துயிர்ப்பு பெறுகிறது. கோலி அதன் மைய நாயனாக முன்னிற்கிறார்.

அயல் நாடுகளில் வெளிப்பட்டுள்ள கோலியின் ஆட்டத்திறனும் போற்றதக்கதே. இந்தியாவை போலல்லாமல் பிற நாடுகளின் பிட்ச் பவுலிங்கிற்கு உதவி புரியும்படியாக அமையப் பெற்றிருக்கும். அதனால், பொதுவாகவே இந்திய கிரிக்கெட் அணியினர் வேறு தேசங்களில் சிறப்பாக விளையாடுவதில்லை, சொந்த தேசத்தில் மட்டுமே அவர்களது திறன் பளிக்கிறது என விமரிசனங்கள் முன்வைக்கப்படுகிறது. கோலிக்கும் இத்தகைய அழுத்தங்கள் சவாலாக நிறுத்துப்பட்டது. 2014 இங்கிலாந்து தொடரை எதிர்ப்பார்த்திருந்த கோலி, ஏன் எப்போதும் வெளிநாடுகளில் விளையாடும்போது இது மாதிரியான அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன என கடுமையாக விமரிசகர்களை சாடியிருக்கிறார்.

தென் ஆப்பிரிக்காவில் நடைப்பெற்ற டெஸ்ட் தொடரில் சதம் அடித்ததன் மூலமாக, 1998-க்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவில் சதமடித்த முதல் இந்தியர் என்ற சாதனைக்கும் கோலி சொந்தக்காரர் ஆகிறார்.

தொடர்ந்து சீற்றத்துடன் தனது ஆட்டத்தை வடிவமைத்துக் கொண்டுள்ள கோலி முதல் முதலாக, கிரிக்கெட் விளையாட்டில் உள்ள அபாயத்தை உணர்ந்து கொண்டது, ஆஸ்திரேலேய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹுக்ஸ் ஆடுகளத்திலேயே உயிரிழந்த போதுதான். வேகப்பந்து வீச்சால் தாக்கப்பட்டு ஹுக்ஸ் உயிரிழந்த சம்பவம் கோலியை வெகுவாக பாதிக்கிறது. ஹுக்ஸ் உயிரிழந்த சில தினங்களிலேயே மிட்சில் ஜான்சன் பந்து வீச்சை எதிர்கொண்டபோது, பந்து அவரது ஹெல்மட்டை தாக்கி சிதைத்தது.

கோலி இந்த சம்பவத்தினால் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். அவரிடமிருந்த கொந்தளிப்பான மனநிலை ஒருகணம் உறைந்துப் போயிருந்தது. ஆனால், விரைவாகவே கோலி அதிலிருந்து மீண்டுவிட்டார். இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறிப்பிடுவதைப்போல, “கோலியை எதுவொன்றும் அசைத்துவிட முடியாது. கண்களில் தீக் கொண்டிருக்கும் கோலி என்றென்றும் அதே எதிர்புணர்வோடு தனது விளையாட்டை தொடர்கிறார்’.

சர்வதேச அளவில் மிக முக்கியமான வீரரென கொண்டாடப்பட்ட சூழலில் அவருக்கு அளிக்கப்படும் மிக முக்கியமான சவாலாக இந்திய அணியின் கேப்டன் பதவியும் அவருக்கு அளிக்கப்படுகிறது.

சிக்ஸர் ப ற க் கு ம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com