5. 'நான் சச்சினைப் போல 24 ஆண்டுகள் இந்திய அணியில் விளையாட முடியாமல் போகலாம்!' விராட் கோலி

விகாஸ்புரியில் உள்ள தனது வீட்டில் அமைதியாக உட்கார்ந்து, தனது சுய சரிதையை எழுதிக் கொண்டிருக்கிறார் விராட் கோலி.
5. 'நான் சச்சினைப் போல 24 ஆண்டுகள் இந்திய அணியில் விளையாட முடியாமல் போகலாம்!' விராட் கோலி

‘பல விளையாட்டு வீரர்கள் கூறியுள்ளதைப்போல, விளையாட்டு உங்களை மெல்ல மெல்ல நற்பண்புகள் மிக்கவனாக உருவாக்குகிறது. நான் ஒவ்வொரு நாளும் மிகச் சிறந்த மனிதனாக வளர்ந்து கொண்டு இருக்கவே விரும்புகின்றேன். அதுதான் எனது ஒற்றை இலக்கு. நான் ஒவ்வொன்றையும் நிதானமாக, எவ்வித சார்பும் இல்லாமல், சாத்தியமுள்ள வகையில் புரிந்து கொள்ளவும், மக்களின் வாழ்க்கையில் என்னால் இயன்ற மாற்றங்களை நிகழ்த்தவும் விரும்புகின்றேன்’ - விராட் கோலி

விகாஸ்புரியில் உள்ள தனது வீட்டில் அமைதியாக உட்கார்ந்து, தனது சுய சரிதையை எழுதிக் கொண்டிருக்கிறார் விராட் கோலி. மிகக் குறுகிய காலகட்டத்தில் பல சாதனைகளை புரிந்துவிட்ட கோலிக்கு தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பகிர்ந்துகொள்ள ஏராளமான அனுபவங்கள் இருக்கின்றன. விராட் கோலி அதனை மிகவும் சுவாரஸ்யமாக, குறும்புத்தனமான மன நிலையில்தான் எழுதிக் கொண்டிருப்பதாக ஊடக நண்பர் ஒருவரிடத்தில் பகிர்ந்து கொள்கிறார்.

கோலியை பலரும், ‘சிக்கூ’ (Chikoo) என்ற பெயரிலேயே அழைப்பார்கள். (சம்பக் எனும் குழந்தைகள் புத்தகத்தில் வரும் முயல்குட்டியின் பெயர் அதுதான்). அண்டர் 17 போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த போது, தலைமுடியை மிக நெருக்கமாக வெட்டியதாகவும், அதனால் அவரது காது நீண்டு தனியே தெரிந்ததாகவும், அதன்பிறகு அவரது சக அணியினர் சிக்கூ என அழைக்கத் துவங்கிவிட்டார்கள் எனவும் சொல்லும் கோலி, தனது சுய சரிதையை சிக்கூ என்ற பெயர் தனக்கு எப்படி உண்டானது என்பதை குறித்த விரிவான விவரணைகளுடன்தான் அந்த புத்தகத்தை துவங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச விளையாட்டு போட்டி ஒன்றின்போது, தோனி கோலியை சிக்கூ என உரக்கமாக அழைக்க, ஸ்டம்புக்கு அருகில் இருந்த மைக்கில் அது பதிந்துவிட்டதால், கோலிக்கு விளையாட்டு வீரர்களிடத்தில் சீக்கு என்றொரு பெயர் இருப்பது கசிந்துவிடுகிறது. ‘நான் எங்கு சென்றாலும், என்னை எல்லோரும் சிக்கூ என்றே அழைக்கிறார்கள். உண்மையில் எனக்கு அந்த பெயர் துளியும் விருப்பமில்லை’ என்கிறார்.

சிறு வயதுகளில் கோலியிடம் காணப்பட்ட அதே துறுதுறுப்பு இன்னமும் குறைந்தபாடில்லை. இப்போதும் தனக்கு விருப்பமானவற்றை நிறைவேற்றுவதில் விடாப்பிடியாக இருக்கும் பண்பையே தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

அவரது சுயசரிதை புத்தகத்தை படிப்பவர்களை துயரத்தில் ஆழ்த்த அவருக்கு விருப்பமில்லை. அதனால், தான் உடலில் தேள் உருவத்தை பச்சை குத்தியிருப்பது தொடர்பாக விலாவரியாக எழுதப் போவதாக தெரிவிக்கிறார். அவரது புத்தகத்தின் ஒரு அத்தியாயமே ‘டேட்டூஸ்’- களுக்காக அவர் சமர்ப்பணம் செய்யப் போகிறாராம். ‘இதன் மூலம் எனது இயல்பை மக்கள் புரிந்து கொள்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்’ என்று சொல்லும் விராட் கோலி தன்னைப் பற்றி முன்னுக்கு பின் முரணான பல தகவல்கள் பகிரப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

‘ஊடகத் துறையினர் எனது விளையாட்டுத் திறன் குறித்து கவலைக் கொள்வதை விட எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நான் என்ன செய்கிறேன் என்பதைப் பற்றிதான் அதிக கவலையுடன் இருக்கிறார்கள்’. அதிகம் அறியப்பட்ட மனிதராக உருவாதில் எப்போதும் சிக்கல்கள் இருக்கின்றன. கோலியை சுற்றி மீடியாக்களின் செயற்கை ஒளி உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டே இருக்கிறது. அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் மிக அதிக கவனமாக பின் தொடரப்படுகிறது.

இதனை துளியும் விரும்பாத கோலி, தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முடிச்சிடப்படுவதை வெறுத்தபடியே இருந்திருக்கிறார்.

சில காலம் முன்பு, பாலிவுட்டின் மிக பிரபலமான நடிகையான அனுஷ்கா சர்மாவுடன் இணைத்து கோலி கிசுகிசுக்கப்பட்டார். தொடர்ச்சியாக அவர்களின் உறவு குறித்து மீடியாக்களில் கேள்வி எழுப்பப்பட்டது. துவக்கத்தில் வெறும் நட்பு ரீதியிலான உறவு என சொல்லிக் கொண்டாலும், அதன்பின் இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார் என்பதை இருவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அணி விளையாடும் பல போட்டிகளின்போது அனுஷ்கா சர்மா பார்வையாளராக மைதானத்திற்கு வருவது வழக்கமாக இருந்தது. அதன் பின் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர். திருமணத்துக்குப் பின் காதல் மனைவி தொடர்ந்து நடிப்பதற்கு பச்சைக் கொடி காட்டியவர் கோலி.

அனுஷ்கா சர்மா பற்றி கோலி சொல்லும்போது, ‘அனுஷ்கா என் மீது எப்போதும் மிகுந்த அன்பு செலுத்தக் கூடியவராக இருக்கிறார். நாங்கள் ஒருவரை ஒருவர் ஆழமாக புரிந்து வைத்துள்ளோம். கடந்த 3 – 4 ஆண்டுகளில் அனுஷ்கா எனக்கு மிகப் பெரிய உறுதுணையாக இருந்திருக்கிறார். நான் ஒரு சிறந்த மனிதனாக உருவாவதற்கு காரணமாக இருப்பவர் அனுஷ்காதான், ஆனால், எப்போதும் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை எங்களின் சந்திப்புகளின் போது தாமதாக வருவது மட்டும் எனக்கு பிடிக்காது’ என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் கோலி.

மனைவி அனுஷ்கா சர்மா காதலியாக இருந்த சமயத்தில் அனுஷ்காவின் பிறந்த நாளை இருவரும் ஒன்றாக கொண்டாடினார்கள். தங்களது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துக் கொண்டார்கள். அதில் அனுஷ்கா, 'உலகத்தின் அதீத துணிச்சல்காரனான எனது காதலனுக்கு எனது காதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என பதிவிட்டிருந்தார்.

கோலி கிரிக்கெட் விளையாட்டோடு மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார். கிரிக்கெட்டிலிருந்து தான் ஒருநாள் ஓய்வு பெற நேர்ந்தால், நிச்சயமாக அப்போது தனக்கென்று பிசினஸ் செய்ய சில வாய்ப்புகள் இருக்க வேண்டும் என சொல்லும் விராட் கோலி, விளம்பரங்களில் நடிப்பதை மிகுந்த விருப்பத்துடன் மேற்கொண்டு வருகிறார்.

தன்னுடைய உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புகிறவர் கோலி. ஜிம் பயிற்சிகள் மேற்கொள்வதுடன், தினந்தோறும் 8 மணி நேரம் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார். மனம் புத்துணர்வு பெற யோகாசன முறையை பின்பற்றுகிறார். உணவிலும் தனி கவனம் செலுத்து வருகிறார். கோலிக்கு மிகவும் பிடித்தது வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள்தான். அதுவும் அவரது அம்மா சமைக்கும் உணவு வகைகளை மிகவும் விரும்பி உண்பார்.

பேலியோ டயட் முறை போல கோலி மாவுச் சத்துள்ள உணவை அறவே தவிர்த்து புரதச் சத்துள்ள உணவுகளையே சாப்பிடுகிறார். நட்ஸ், உலர் திராட்சை, ப்ளாக் காபி - இவற்றை குறித்த நேரத்தில் சரியான அளவில் எடுத்துக் கொள்வது அவரது வழக்கம். உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், 'இவியன்' என்னும் நிறுவனம் தயாரிக்கும்  குடிநீரை மட்டுமே உபயோகிக்கிறார் கோலி. பிரான்ஸ் நாட்டிலுள்ள மிகவும் தூய்மையான அருவியில் இருந்து இந்தத் தண்ணீரை எடுத்து அதில் உள்ள மினரல் சத்துக்கள் சிறிதும் குறையாமல் இந்த குடிநீரைத் தயாரிக்கின்றனர். 

முன்பொரு காலத்தில், இந்திய அணியின் வலுவை ஒற்றை ஆளாக சச்சின் தாங்கி நின்றிருந்த பொறுப்பு இன்று விராட் கோலியிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. 24 ஆண்டுகள் சச்சின் சுமந்திருந்த கடமையை இன்றைக்கு விராட் கோலி சுமந்துக் கொண்டிருக்கிறார். இந்திய அணி தற்போது முழுக்க முழுக்க இளைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. உலகத்தின் பெரும்பாலான அணிகளும் இக்காலத்தில் இளைஞர்களை கொண்டே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. சோர்வும், ஆசுசையுமாக களத்தில் நகர்ந்துக் கொண்டிருக்கும் வீரர்களை இனி எந்தவொரு கிரிக்கெட் ரசிகனும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.   

இது சிக்ஸர்களின் காலம். இருபது ஓவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் சுருங்கிவிட்டன. அதனால், ஒவ்வொரு வீரரும் தம்மை நிலை நிறுத்திக் கொள்ள அதிக சிரத்தை மேற்கொள்ள வேண்டும். துடிப்புடனும் சுறுசுறுப்பாகவும் இயங்க வேண்டும். கோலி இதனை முழுமையாக உணர்ந்திருக்கிறார். அதனால்தான், சக வீரர்களிடம் அத்தகைய கடுமையை அவர் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனது இடத்தை மேலும் மேலும் உறுதியுடன் நிறுவிக் கொண்டிருக்கும் கோலி, ‘நான் சச்சினைப் போல 24 ஆண்டுகள் இந்திய அணியில் விளையாட முடியாமல் போகலாம். ஆனால், நான் 200 டெஸ்ட் போட்டிகளையும், 100 சர்வதேச சதங்களை அடிக்க வேண்டுமென்று விரும்புகின்றேன். கிரிக்கெட்டை விட்டு விலகி செல்லும் நிலை என்றாவது உருவாகும் என்றால், எனது சாதனையாக நான் இதனை அடைந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்’ என்று உருக்கமாக சொல்கிறார்.

இந்திய அணியில் இடம்பிடித்த பத்தே ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை புரிந்து, கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களில் நம்பிக்கையை ஊன்றியிருக்கும் கோலி, மேலும் மேலும் சாதனைகளை படைப்பார் என்பது உறுதி. இப்போதே ரிக்கி பாண்டிங்குக்கு நிகராக அவரது சாதனைகள் ஒப்பிடப்படுகின்றன. இன்னும் வருங்காலங்களில் தனது தனிப்பட்ட சாதனைகளோடு, அவரது விருப்பப்படியே இந்திய அணியையும் ஆளுமைமிக்கதாக கட்டமைப்பார் என்பதை ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனும் ஆவலோடு நம்பிக் கொண்டிருக்கிறான்.

எதிர்வரும் உலக கோப்பையில் இந்திய அணி கோலியின் தலைமையில் களம் காணவிருக்கிறது. கோலி கேப்டனாக அதுவொரு புது அனுபவமாக இருக்கும். போலவே, இரண்டு உலக கோப்பை போட்டிகளில் விளையாட்டி உள்ள அனுபவம் அவருக்கும் இருக்கிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் விரும்பும் உலக கோப்பை கனவை கோலியின் தலைமையிலான இந்திய அணி இப்போது சுமந்து கொண்டிருக்கிறது. கோலி பல நெருக்கடி தருணங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைப் போலவே உலக கோப்பையிலும் விளையாட வேண்டுமென இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். அசாதாரண திறன் மிக்கவரான கோலி தனது தலைமையை உறுதியுடன் நிலை நாட்டுவார் என்பதில் எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கிறது. அவரது தந்தை பிரேம் கோலியின் ஆன்மாவும், ஆசிகளும், அதனை செயல்படுத்த கோலிக்கு என்றென்றைக்கும் உறுதுணையாக இருக்கும்.

சிக்ஸர் ப ற க் கு ம்......

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com