27. ரோஹித் சர்மாதான் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்! மனம் திறந்து பாராட்டுகிறார் மார்ட்டின் கப்டில்!

‘நியூசிலாந்து அணி பெருமை கொள்ளும் அளவிலான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
27. ரோஹித் சர்மாதான் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்! மனம் திறந்து பாராட்டுகிறார் மார்ட்டின் கப்டில்!

‘நியூசிலாந்து அணி பெருமை கொள்ளும் அளவிலான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். எனது தனிப்பட்ட சாதனைகளை விடவும், அணியின் வெற்றிதான் முதன்மையானது. ஒவ்வொருமுறை களத்தில் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேனாக இறங்கும் போதும், என்னால் இயன்ற அளவில் ரன்களை குவித்து, அணிக்கு மிகுதியான பங்களிப்பை வழங்க வேண்டுமென விரும்புகிறேன். இதுவே எனது முதன்மையான இலக்கு’ – மார்ட்டின் கப்டில்.

இன்றைய காலகட்டத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 ரன்களை கடப்பது அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. 2010-ம் வருடத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் ஒற்றைய போட்டியில் 200 ரன்களை குவிப்பது எனும் சாதனையை நிகழ்த்தியதற்கு பின்னர், ஒருநாள் போட்டியில் 200 ரன்களை சேர்ப்பது என்பது தொடர் நிகழ்வாக இருக்கிறது. ரோஹித் சர்மா இதுவரையிலும் மூன்று முறை 200 ரன்களை ஒருநாள் போட்டியில் கடந்திருக்கிறார். இலங்கை அணிக்கு எதிரான அவரது 264 ரன்கள் தனி நபரால் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரோக நிலைத்திருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் மார்ட்டின் கப்டில் 2015 உலக கோப்பையில் விளாசிய 237* ரன்கள் இருக்கின்றன.

கால் இறுதி போட்டியான அதில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்டிலும், மெக்குலமும் களம் இறங்கினார்கள். முதல் பந்தை கப்டில்தான் எதிர் கொண்டார். அந்த ஓவரில் ஸ்கொயர் லெக் பகுதியில் கப்டில் விளாசிய ஷாட்டை கேட்ச் பிடித்து விட வாய்ப்பிருந்தும் மேற்கிந்திய தீவுகள் வீரரான மார்லன் சாமூவேல்ஸ் தவற விட்டுவிட்டார். நிச்சயமாக அந்த கேட்ச் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சாமூவேல்ஸ் அப்போது உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. கிரிக்கெட் விளையாட்டு குறித்த ஆழமான சிந்தனைகளை கொண்டிருக்கும், அந்த விளையாட்டின் நுணுக்கங்களை நன்கு உணர்ந்திருக்கும் மார்ட்டின் கப்டில் இந்த கணத்தில் இருந்துதான் விழித்துக் கொண்டார்.

மறுபுறத்தில் மெக்குலம் தனது விக்கெட்டை விரைவாக பறி கொடுத்துவிட்டார் என்றாலும், கப்டிலை எதுவொன்றும் தடுமாற செய்யவில்லை. தனது முழுமையான கிரிக்கெட் அறிவையும் அன்றைய தினத்தில் கப்டில் பிரயோகித்தார். தர வரிசை பட்டியலில் முன்னணி வகிக்கின்ற பல திறன் மிக்க வேகப் பந்து வீச்சாளர்கள் மேற்கிந்திய தீவுகள் அணியில் இருக்கிறார்கள் என்றாலும், கப்டிலை எதுவொன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை. அவரது ஆட்டம் மெல்ல மெல்ல பரிணமித்தபடியே இருந்ததே தவிர, ஒருபோதும் தடுமாற்றம் கொள்ளவில்லை. தனது அரை சதத்தை 64 பந்துகளிலும், சதத்தை 111 பந்துகளிலும் கடந்தார் அவர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இன்னிங்க்ஸ் ஒன்றை விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை அப்போதும் கப்டில் உணர்ந்திருக்கவில்லை. பந்துகளை துல்லியமாக அணுகுவதிலும், இயன்றவரையில் அதனை கடினத்தன்மையில் விளாசுவதிலும் மட்டுமே கவனத்துடன் இருந்தார். உலக கோப்பை கால் இறுதி போட்டி என்பதால், அவரது மனம் அவரை விரைவாக ரன் சேர்க்க தூண்டியபடியே இருந்தது. அதற்கு முந்தைய போட்டியில்தான் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 105 ரன்களை குவித்திருந்தார். அந்தப் போட்டியில் அவரது ஆட்டத்திறன் வெகுவாக பாராட்டப்பட்டது. ஆனால், கால் இறுதி போட்டியில் மார்ட்டின் கப்டில் விளையாடிய விதம் முந்தைய போட்டி உண்டாக்கியிருந்த சலனத்தை முற்றிலுமாக துடைத்தழித்துவிட்டது.

மார்ட்டின் கப்டில் 171 ரன்களை கடந்த போது, ஒரு பெரும் சாதனை நிகழ்ந்திருந்தது. உலக கோப்பை போட்டித் தொடர்களில் அதுவரையிலான நியூசிலாந்து வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன்களாக இருந்த 171 முறியடிக்கப்பட்டது. 1975-ல் நடைபெற்ற முதல் உலக கோப்பையில் க்ளென் டர்னல் குவித்திருந்த ஸ்கோர் அது. நாற்பது வருடங்களுக்கு பின்னர், அந்தச் சாதனையை முறியடித்தன் மூலமாக, சர்வதேச தளத்தில் தனக்கென தனித்ததொரு அடையாளத்தை எழுப்பினார் மார்ட்டின் கப்டில். நியூசிலாந்து ரசிகர்களிடத்திலும் அவரது அன்றைய ஆட்டம் பெரும் அதிர்வை உண்டாக்கியிருந்தது. 111 பந்துகளில் சதத்தை கடந்த கப்டில் அடுத்த 42 பந்துகளில் இரட்டை சதத்தையும் கடந்தார். அன்றைய போட்டி நியூசிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதால், அரங்கத்தில் ஆரவாரம் அதிர்ந்தது. உள்ளூர் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடித் தீர்த்தனர். கரகோஷமும், குரலொலிகளும் மைதானம் முழுக்க நிரம்பியிருந்தன.

மார்ட்டின் கப்டிலும் ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் மேலும் தனது அடுத்தடுத்த ஷாட்டுகளின் மூலமாக விஸ்தாரம் செய்தபடியே இருந்தார். இறுதிப் பத்து ஓவர்களில் நியூசிலாந்து அணி மொத்தமாக 153 ரன்களை குவித்திருந்தது. கப்டிலுடன் இணைந்து ரோஸ் டெய்லரும், வில்லியம்சனும் தங்களால் இயன்ற அளவில் பங்களிப்பை ஆற்றினார்கள். ஆனால், தனியொருவராக இறுதி பத்து ஓவர்களில் கப்டில் சேர்ப்பித்திருந்தது மட்டுமே 92 ரன்கள். இறுதி ஓவரில் மைதான கூரையை தாண்டும் அளவிலான ராட்சச சிக்ஸர் ஒன்றையும் விளாசி பெரும் நாயகனாக உருவெடுத்திருந்தார் மார்ட்டின் கப்டில்.

163 பந்துகளில் 24 பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள் உட்பட மொத்தமாக 237 ரன்களை சேர்ந்திருந்தார். அதற்கு சில தினங்களுக்கு முன்புதான் மேற்கிந்திய தீவுகள் அணி வீரரான கிரிஸ் கேயல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக, 215 ரன்கள் குவித்து உலக கோப்பை போட்டித் தொடர்களில் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்திருந்தார். எனினும், கப்டில் தனது 237 ரன்களின் மூலமாக, உலக கோப்பை தொடர்களில் தனியொருவரால் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்பதை நிறுவியதோடு, இறுதி வரையிலும் ஆட்டமிழக்காமல் இத்தகைய இலக்கை அடைந்தது வரலாற்றில் நிலைபெற்றுவிட்டார்.

அன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் மொத்த ரன்களில் 60% மார்ட்டின் கப்டில் குவித்த ரன்கள். இரண்டாவதாக பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி வெறும் 250 ரன்களில் சுருண்டது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிரிஸ் கேயல் 33 பந்துகளில் 61 ரன்களை குவித்துவிட்டு பெவிலியன் திரும்பினார். இதன் மூலமாக, பெரும் வெற்றியை கண்டு அடுத்த சுற்றுக்குள் நுழைந்த நியூசிலாந்து இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் வீழ்ந்தது துரதிர்ஷ்டவசமானதே.

எனினும், மார்ட்டின் கப்டில் கால் இறுதி ஆட்டம் என்றென்றும் ரசிகர்களின் மனங்களில் நிலைபெற்றிருக்கும். வாழ்க்கையில் வெகு அரிதாக மட்டுமே இது போன்ற சாதனைகள் நிகழக்கூடியவை. அன்றைய போட்டியை நினைவுகூரும் மார்ட்டின் கப்டில், ‘அன்றைய போட்டி முடிவடைந்ததற்கு பிறகு, விடுதியில் எனது அறையில் அமர்ந்திருந்ததை நினைத்துக் கொள்கிறேன். எனது கைகளில் இருந்த கோப்பையில் ரெட் ஒயின் மிதந்துக் கொண்டிருந்தது. நான் எனக்குள்ளாக சிரித்துக் கொண்டேன். எனது ஆட்டத்தை நானே நிதானமாக அசை போட்டேன். என்னால் அதனை நம்பவே முடியவில்லை. ஆஹா! இது உண்மையிலேயே நிகழ்ந்திருக்கிறது! கிட்டதட்ட அன்றைய தினம் ஒரு மீயாய யதார்த்தத்தைப் போல எனக்குள்ளாக உறைந்திருக்கிறது!’ என்கிறார்.    

பொதுவாக, மார்ட்டின் கப்டிலை இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோஹித் சர்மாவுடன் ஒப்பிட்டு சிலர் பேசுவதுண்டு. ரோஹித் சர்மாவை போலவே மார்ட்டின் கப்டிலும் அசாத்தியமான கிரிக்கெட் ஷாட்டுகளை விளாசியக் கூடிய தன்மை கொண்டவர். இருவரும் களத்தில் சில ஓவர்கள் நிலைத்து நின்றுவிட்டால் பந்துகள் நாற்புறமும் சிதறி ஓடுவது உறுதி என்பதோடு, பல சாதனைகளும் அன்றைய தினத்தில் நிகழ்ந்துவிடும். எத்தகைய அதிவிரைவான பந்துவீச்சாளர்களையும் வெகு எளிதாக எதிர்கொண்டு, அவர்களது மனதின் சமநிலையை குலைத்துவிடும் திறனை இருவரும் பெற்றிருக்கிறார்கள். ‘நான் பந்துகளை எதிர் கொள்ளும் விதத்தால் பந்து வீச்சாளர்கள் அதீத சோர்வுக்கும், அவநம்பிக்கைக்கும் உள்ளாகி விடுகிறார்கள் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் நான்தான் தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடுவதால் விரைவில் சோர்வடைந்து விடுகிறேன்’ என்கிறார் மார்ட்டின் கப்டில்.

நவீன காலத்தின் மிக கச்சிதமான திறன் மிகுந்த ஒரு நாள் பேட்ஸ்மேன்கள் என ரோஹித் சர்மாவையும், மார்ட்டின் கப்டிலையும் வகைபடுத்துகிறார்கள் கிரிக்கெட் ஆர்வலர்கள். பந்துகளை எதிர் கொள்வதிலும், உறுதி மிக்க ஷாட்டுகளால் அவைகளை மைதானத்துக்கு வெளியே பறக்க விடுவதிலும் இருவரும் கை தேர்ந்தவர்கள். ரோஹித் சர்மா ஸ்கொயர் லெக் பகுதியில் பந்துகளை விளாசுவதில் கில்லாடி என்றால், மார்ட்டின் கப்டில் ஸ்ட்ரெயிட் ட்ரைவ் (Straight Drive) ஆடுவதில் வல்லவர். அவரது பெரும்பாலான சிக்ஸர்கள் தனக்கு நேரெதிரான திசையில் விளாசப்பட்டதே ஆகும். தொடக்க ஆட்டக்காரராக களத்தில் இறங்கி, எதிரணியினரை தனது விளாசல்களால் கலங்கடிக்கின்ற மார்ட்டின் கப்டில் சர்வதேச அளவில் வெகுவாக கொண்டாடப்படக் கூடிய கிரிக்கெட் வீரர்களுள் ஒருவராக இருந்து வருகிறார். எனினும், அவர் வெகுவாக புகழுவது ரோஹித் சர்மாவை தான்.

‘உண்மையில், ரோஹித் சர்மாதான் உலக தரத்தில் விளையாடக் கூடிய சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர். வெகு எளிதாக பந்துகளை அவர் அணுகுகின்ற விதமும், அதனை பவுண்டரிகளாக விளாசுவதும், குறிப்பிட்ட அவரது ஆட்ட வெளிபாடும் பிரமிக்க செய்கிறது’ என்கிறார் மார்டின் கப்டில். இருவருக்கும் உள்ள மற்றொரு ஒற்றுமை என்னவென்றால் ஒருநாள் கிரிக்கெட்டில் வெகு இலகுவாக இரட்டை சதத்தை பூர்த்தி செய்திருக்கும் இவர்கள், இதுவரையில் டெஸ்ட் போட்டிகளில் ஒரு முறை கூட இரட்டை சதத்தை அடைந்திருக்கவில்லை. ஒருநாள் போட்டியில் தன்னால் இயல்பாகவும், மிகுந்த ஊக்கத்துடனும் விளையாட முடிகின்ற அளவு, டெஸ்ட் போட்டியில் விளையாட இயலவில்லை. அங்கு முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது என்று கப்டில் ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார்.  எனினும், மார்ட்டின் கப்டில் போன்ற சிறந்த வீரருக்கு எந்தவொரு சாதனையையும் நிகழ்த்துவதற்கு, காலம் இன்னமும் திறந்தே இருக்கிறது.

(சிக்ஸர் பறக்கும்…)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com