21. வாழ்க்கை என்பதொரு கொண்டாட்ட நிகழ்வு! – கிரிஸ் கேயல்

கிரிஸ் கேயல் எந்த அளவுக்கு தனது ஆக்ரோஷமான ஆட்டத்திறனின் காரணமாக உலகம் முழுவதும் புகழப்படுகிறாரோ
21. வாழ்க்கை என்பதொரு கொண்டாட்ட நிகழ்வு! – கிரிஸ் கேயல்

கிரிஸ் கேயல் எந்த அளவுக்கு தனது ஆக்ரோஷமான ஆட்டத்திறனின் காரணமாக உலகம் முழுவதும் புகழப்படுகிறாரோ அதே அளவுக்கு, அவ்வப்போது அவர் குறித்து உருவாகின்ற சில சிக்கல்கள், ஊடக நேர்காணல்களில் அவர் பிரயோகிக்கின்ற சொற்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருடனான தொடர் மோதல் ஆகியவை அனைத்தும் அவருக்கு எதிர்மறையான தோற்றத்தையும் வழங்கத் தவறவில்லை. கிரிஸ் கேயல் ஒரே தருணத்தில் மிகுதியான திறன்கொண்ட சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும், அதிகளவில் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளகூடிய மனிதராகவும் இருந்துக்கொண்டிருக்கிறார். ஊடகங்களை எப்போதும் அவர் சிரித்த முகத்துடன், கேளிக்கை உணர்வு ததும்பும் உடல்மொழியுடனும்தான் அணுகுவது வழக்கம். பலவாறான தருணங்களில் அவர் அளித்த நேர்காணல்கள் பலத்த சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளுக்காகவும் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் விளையாட்டாளரான அயன் சேப்பல், கிரிஸ் கேயலை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முற்றிலுமாக புறக்கணித்து ஒதுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், தனது சுயசரிதை புத்தகத்தில் இதற்கு பதில் அளித்துள்ள கிரிஸ் கேயல், 'அயன் சேப்பல், எப்படி உங்களால் உலகத்தின் மிகப்பெரிய ஆளுமையை புறக்கணிக்க முடியும். அதற்கு நீங்கள் கிரிக்கெட் விளையாட்டையே முழு முற்றாக புறக்கணித்தாக வேண்டும்' என தெரிவித்திருந்தார். இத்தகைய போக்கு கிரிஸ் கேயலை அகந்தை மிக்கவராகவும், தனது திறன்களின் மீது அதீத நம்பிக்கை கொண்ட மனிதராகவுமே எண்ணச் செய்கிறது. அதிலும் சமீப கால அவரது நடவடிக்கைகள் அதிகளவில் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன. சில ஓய்வு பெற்ற மூத்த கிரிக்கெட் விளையாட்டாளர்கள் கிரிஸ் கேயலின் இந்தபோக்கு முற்றிலும் தவறானது. அவர் சிதைவை நோக்கி மெல்ல நகர்ந்துக்கொண்டிருக்கிறார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

கிரிஸ் கேயலின் சர்ச்சைகளில் மிகுதியான கவனம் பெற்றதும், அவர் குறித்த எதிர்மறையான பிம்பத்தை வலுவாக உருவாக்கியதும் என பிக் பாஷ் போட்டியொன்றில் ஊடகவியலாளரான மெல் மெக்லாக்குக்கு அவர் அளித்த பேட்டியை குறிப்பிடலாம். அன்றைய போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சேனல் டென் செய்தியாளர் ஒவ்வொரு கிரிக்கெட்டர்களிடமும் போட்டி குறித்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை நெருங்கிய கிரிஸ் கேயல், 'இன்றைய போட்டியில் வெற்றியடைந்துவிட்டு இரவில் இருவரும் சேர்ந்து மதுவருந்தலாம் பெண்ணே. அதுவரையில் அசடுவழியாமல் இரு! (Don’t Blush)' என்று தெரிவிக்க, மெல் மெக்லாக்குக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அது உருவாக்கிவிட்டது.

உலகெங்கிலும் கிரிக்கெட் ரசிகர்களிடத்தில் கிரிஸ் கேயலின் இந்த கருத்து பலத்த சர்ச்சையை கிளப்பியது. பலர் அவரை கண்டித்து சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்திருந்தார்கள். சர்வதேச கிரிக்கெட் வாரியம் அவருக்கு பெருத்த தொகையை அபராதமாக விதித்தது. பலரும் அவரை கிரிக்கெட் விளையாட்டில் இருந்து நீக்க வேண்டுமென உரக்க குரலெழுப்பினார்கள். அந்த சர்ச்சைக்குரிய கருத்து மிகுதியான கவனத்தை பெற்றதற்கு பிறகு, உலகெங்கிலும் பல ஊடகவியலாளர்கள் கிரிஸ் கேயல் குறித்த தங்களது மோசமான அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்கள். குறிப்பாக பாலியல் சீண்டல்கள் அவரிடத்தில் மிகுதியாகவே பலமுறை வெளிப்பட்டிருக்கிறது என தெரிவித்திருந்தார்கள்.

இந்த 'Blush' சர்ச்சை ஓய்ந்திருந்த சில தினங்களிலேயே, பேர்பேக்ஸ் என்கின்ற ஊடகமொன்று, 2015 உலக கோப்பை போட்டிகளின்போது கிரிஸ் கேயல் மசாஜ் செய்யக்கூடிய பெண்ணொருவரை தவறாக நடத்தினார் என்று குற்றம் சுமத்தியது. வழக்கு ஒன்றின் மூலமாக இந்த குற்றத்தை பொய் என அவர் நிரூபித்துவிட்டார் என்றாலும், இதுப்போல பல குற்றச்சாட்டுகள் இவ்விரு சர்ச்சைகளும் உருவாகிய காலத்திலேயே தொடர்ச்சியாக உருவாகின.

பல வருடங்களாகவே பெண்களை அவர் எதிர்கொள்கின்ற விதம் மிக தவறாக இருப்பதாக இதன்பின்னர் பலரும் வெளிப்படையாக எழுதினார். ஒரு நேர்காணல் ஒன்றில் கிரிஸ் கேயல், 'பெண்கள் தங்களது கணவன்களுக்கு எப்போதும் சேவையாற்றுகிறவர்களாக இருக்க வேண்டும். அவர் வீட்டிற்கு வரும்போது மேசையில் உணவு தயாராக இருக்க வேண்டும். உண்மையாக சொல்கிறேன். ஒரு பெண் தனது கணவருக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துக்கொண்டு, அதற்குரிய வகையில் சமைத்து பரிமாற வேண்டும்' என்றார்.

வாழ்க்கை என்பதை ஒரு கொண்டாட்ட நிகழ்வாக கருதும் கிரிஸ் கேயலின் இத்தகைய பெண் குறித்த புரிதலும், அணுகுமுறையும் மிகமிக பிற்போக்குத்தனமாது என்பதுடன் முற்றிலும் மாற்றி கொள்ள வேண்டியதும்கூட. ஒரு உலகளவில் கொண்டாடப்படுகின்ற கிரிக்கெட் விளையாட்டாளருக்கு இத்தகைய பண்புகள் இருப்பது நிச்சயமாக அவரது எவ்வகையிலான சாதனைகளையும்  ஒருபுள்ளியில் நீர்த்திப்போகத்தான் செய்யும். இன்றைய சமூக ஊடகங்களின் அபரிவிதமான வளர்ச்சியின் காரணமாக, தனிப்பட்ட வாழ்க்கையென்பதே ஒருவருக்கும் இல்லாமலாகிவிட்டது. அதனால், எந்தவொரு சாதனையையும் மிக எளிதாக இத்தகைய நடவடிக்கைகள் குலைத்துவிடும் என்பதில் மாற்று கருத்தில்லை. கூடுதலாக தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மனிதரின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கின்றன என்பதைப் பொருத்தே காலத்தில் அவர் நினைவுக் கூரப்படுவார். கிரிஸ் கேயல் இதனையெல்லாம் உணர்ந்து கொள்ளாவாரா என்பதும் தெரியவில்லை. அவருக்கு கேளிக்கை ஒன்றே பிரதானமாக இருக்கிறது.   

கிரிஸ் கேயல் பொதுவாக இது குறித்தெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை என்பதை நம்மால் உணர முடிகிறது. 'Blush' சர்ச்சையை பற்றி பின்னர் பேசுகையில், 'நான் யாரையும் காயப்படுத்த வேண்டுமென அப்படி நடந்துக்கொள்ளவில்லை. ஒரு நகைச்சுவை உணர்வுடன் சொல்லப்பட்ட வார்த்தைகள் அவை. ஏன் அவை இவ்வளவு பெரிய சர்ச்சையை கிளப்பியது என்றே தெரியவில்லை. திடீரென எல்லோரும் என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள்' என்கிறார். அதோடு மட்டுமல்லாமல், அவருக்கு மகள் பிறந்தபோது அந்த குழந்தைக்கும் அவர் “Blush” என்றே பெயரிட்டிருந்தார். பலரையும் வியப்புள்ளாக்கிய நிகழ்வது. 36 வயதில் தந்தை ஸ்தானத்துக்கு உயர்ந்திருக்கும் கிரிஸ் கேயலுக்கு, குழந்தையின் பிறப்பு கூடுதல் பொறுப்புணர்வை உருவாக்கும் என்றே பலரும் கணித்திருந்த நிலையில், அவரது இத்தகைய செய்கை எல்லோருக்கும் மிகுந்த அதிர்ச்சியை உருவாக்கியது. எனினும், பின்னர் கேயல், “நான் விளையாட்டுக்காக சொன்னேன். எனது மகளின் பெயர் Blush அல்ல, Krisallyna' என்றார்.

தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஆகட்டும் அல்லது விளையாட்டு வீரர்களிடத்தில் ஆகட்டும் ஊடகவியலாளர்கள் ஆகட்டும், அவரது அணுகுமுறை என்பது எப்போதும் பெரும் கேளிக்கை உணர்வு மிகுந்ததாகவே இருந்துக்கொண்டிருக்கிறது. சிறுவயது முதலாக அவரது இயல்பாக இருந்துவரும் இத்தகைய கொண்டாட்ட மனநிலை காலங்களில் வளர்ந்தபடியே இருக்கிறதே தவிர, ஒரு பரிபக்குவ நிலையை நோக்கி நகர்வதாகவே இல்லை. அவரே இத்தகைய பக்குவ நிலையை விரும்புவதில்லை. அவர் யாராக இருக்கிறாரோ அதுவே அவருக்கு விருப்பமானதாகவும் போதுமானதாகவும் இருக்கிறது. அதன் சாதக பாதக விளைவுகள் இரண்டையும் எதிர்கொள்ள அவர் தயாராகவே இருந்துக்கொண்டிருக்கிறார்.

இரண்டு வருடங்கள் முழுமுற்றாக மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து ஒதுங்கியிருந்த கிரிஸ் கேயல், வெகு சமீபத்தில்தான் மீண்டும் அவ்வணியில் இடம்பிடித்திருக்கிறார். இந்த காலங்களில் ஐ.பி.எல் உள்ளிட்ட பல பிரான்சைஸ் கிரிக்கெட் போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக பங்கேற்றபடியே இருந்தார். அக்காலங்களில் அவரது ஆட்டத்திறன் வெகுவாக பரிணமித்தபடியே இருந்ததே ஒழியே, குன்றியிருக்கவில்லை. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இக்காலங்களில்தான் அவரது புகழ் அபரிவிதமாக வளர்ச்சியுற்றது. குறுகிய ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விலாசிய ராட்சச சிக்ஸர்களும், குறைவான பந்துகளில் சதங்கள் குவித்ததும் என அவரது சாதனைகள் வளர்ச்சியுற்றபடியே தானிருக்கிறது. பெரும் செல்வந்தராகவும், இன்றைய நவீன கிரிக்கெட் வடிவத்தின் தவிர்க்கவியலாத ஆளுமையாகவும் இருந்துகொண்டிருக்கும் கிரிஸ் கேயலை அவரது அத்தனை எதிர்மறை பண்புகளையும் கடந்து பெரும்பாலானோர் ரசிக்கவும் ஏற்றுகொள்ளவுமே செய்கிறார்கள். நம்மூரில் அவருக்கு ரசிகர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். இப்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் அவரது ஆட்டத்திறன் மிகவும் அவசியமாகியிருக்கிறது. பலத்த எதிர் கருத்துகளும், மோதல்களும் உருவாகியிருக்கிறது என்றாலும், அவரது ஆட்டமென்பது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அதனால்தான் மேற்கிந்திய தீவுகள் அணியின் நிர்வாக குழுவினர், “அவரை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறது. கிரிஸ் கேயல் இன்னும் எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட்டில் நீடித்திருப்பார் என்கின்ற கேள்வியும் ஒருபக்கம் எழுந்துள்ளது. இருபது வருடத்துக்கும் மேலான தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல நினைவை கிளர்த்தும் தருணங்களை மேற்கிந்திய தீவுகள் அணிக்காகவும், உலக ரசிகர்களுக்காகவும் கிரிஸ் கேயல் உருவாக்கியிருக்கிறார். வருகின்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டி என்பது நிச்சயமாக அவரது வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த போட்டித் தொடராக இருக்கும். நம்மைப்போலவே கிரிஸ் கேயலும் உலக கோப்பையை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி இருக்கிறார்.

“விரைவில் உலக கோப்பை போட்டி தொடர் வருகிறது. அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம். பல இளைஞர்கள் புதிதாக உருவாகி வருகிறார்கள். அணியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதற்கு சிறிது காலம் தேவைப்படும். ஒரே இரவில் அந்த மாற்றம் நிகழ்ந்துவிடாது. நாம் நிறைய அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை இழந்துவிட்டோம் என்றாலும், வாழ்க்கை தொடர்ந்தபடியேதான் இருக்கிறது. எந்தவொரு கிரிக்கெட் வீரரும் தொடர்ச்சியாக வாழ்நாள் முழுவதும் விளையாடிக் கொண்டிருக்க முடியாது. ஏதாவதொரு தருணத்தில் ஓய்வு என்பது நிகழ்ந்தே தீரும். என்னால் இயன்ற காலம்வரையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாட ஆசைப்படுகிறேன்!”

தனது கிரிக்கெட் வாழ்வின் முக்கியத்துவம் வாய்ந்த காலக்கட்டத்தில் இருக்கும் 39 வயது கிரிஸ் கேயல் உலக கோப்பையை மேற்கிந்திய தீவுகள் அணி வெல்ல உதவிகரமாக இருப்பாரா என்பதை பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும். 

(சிக்ஸர் பறக்கும்…)     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com