22. இந்த உலகத்தில் நிலையானதென்று எதுவும் இல்லை! ஷிகர் தவன் பேட்டி!

சமீபத்தில் நிகழ்ந்து முடிந்த ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் தொடரில் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தின்
22. இந்த உலகத்தில் நிலையானதென்று எதுவும் இல்லை! ஷிகர் தவன் பேட்டி!

ஆறாவது நாயகன்: ஷிகர் தவன்

சமீபத்தில் நிகழ்ந்து முடிந்த ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் தொடரில் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தின் மூலமாக இந்திய அணி தொடரை வெல்ல காரணமாக இருந்ததோடு, தொடர் நாயகன் விருதையும் பெற்றிருக்கிறார் ஷிகர் தவன். இப்போட்டி தொடரில் அவர் இரண்டு சதங்களை விளாசியிருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் 114 ரன்களை குவித்து அணி வெற்றிப் பெற முக்கிய காரணமாக இருந்தார். மொத்தமாக இந்த தொடரில் மட்டும் அவர் குவித்திருக்கும் ரன்கள் 342. தனது சீரிய ஆட்டத்தால் இந்திய அணிக்கு ஆசிய கோப்பை பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கிறார் ஷிகர் தவன்.

இந்தியா – பாகிஸ்தான் போட்டி முடிவடைந்து ஆட்ட நாயகன் விருது பெறும்போது, ‘எனது விளையாட்டை முழுமையாக நேசிக்கிறேன். நல்ல ஃபார்மில் இருக்கின்றேன். அதனால் கூடுமான வரையில் எனது திறனை முழுமையாக வெளிப்படுத்த விரும்புகிறேன். ஒரு சரியான துவக்கம் அமைந்து களத்தில் நிலைத்துவிட்டால், பிறகு அந்த தொடர்ச்சியை ஆட்டத்தின் இறுதி வரையிலும் வளர்த்தெடுக்க முடியும். நான் இத்தகைய நிலைத்து நிற்கும் திறனை பெற்றிருக்கிறேன் என்பது சந்தோஷம் அளிக்கிறது. இன்னும் சிறப்பாக இனி வரும் காலங்களிலும் விளையாடுவேன்’ என்றார்.

பொதுவாக, ஷிகர் தவன் உலக கோப்பை, ஆசிய கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த போட்டி தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். இடைப்பட்ட காலங்களில் பலமுறை அவரது ஆட்டத்தில் தொய்வுகளும், விரைவில் ஆட்டமிழப்பதும் நிகழ்ந்திருக்கிறது என்றாலும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் தொடர்களில் தன் மீது கவிந்துள்ள நம்பிக்கையை மெய்ப்பிக்க அவர் பெரும்பாலும் தவறுவதில்லை. கடந்த 2015 உலக கோப்பையின் இந்திய அணி சார்பில் அதிக ரன்களை குவித்தவர் ஷிகர் தவன் தான். மிகுதியான கவனத்தை கோரும் போட்டித் தொடர்கள் அவருக்கு அதிக பொறுப்புணர்வை வழங்குகிறது.

’மிகப் பெரிய வெளிச்சத்தை பெற்றிருக்கும் போட்டித் தொடர்களில் எனது ஆட்டத் திறனை வெளிப்படுத்த விரும்புகின்றேன். பலமுறை ஐ.சி.சி முன்னெடுக்கின்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருக்கின்றேன். உலகத்தின் அனைத்தும் முக்கிய போட்டி தொடர்களிலும் சிறப்புற விளையாட விழைகிறேன். அதற்குரிய முழுத் திறனும் தகுதியும் எனக்கு வாய்த்திருக்கிறது என்று திடமாக நம்புகின்றேன். இன்னும் இன்னுமென எனது திறன்களை வளர்த்தெடுக்கவே விரும்புகிறேன்’ என்கிறார் ஷிகர் தவன்.

எந்தவொரு இந்திய கிரிக்கெட் விளையாட்டாளர்களையும் போல் அல்லாது பலவீனமான உடலமைப்பையும், முறுக்கி விடப்பட்ட மீசையுமாக களத்தில் உலவுகின்ற ஷிகர் தவனின் தோற்றம் மற்ற வீரர்களிடத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. திரையில் அவரை பார்க்க நேர்கின்ற தருணங்களில் எல்லாம் சாணக்கியரின் தோற்றம் இயல்பாக என்னுள் வந்துச் செல்லும். பெரும்பாலும் மழுங்க வழிக்கப்பட்ட தலையுடனேயே இருப்பதாலும், கூர்மையான பார்வையை பெற்றிருப்பதாலும் ஷிகர் தவனை பார்க்கையில் சாணக்கியரின் கோட்டுச் சித்திரம் தன்னிச்சையாக வந்துச் செல்லும்.

அதிக ஆர்ப்பாட்டம் செய்யாமல் விளையாட்டை முழுமையாக விளையாட்டாக மட்டுமே அணுகக் கூடிய பண்பு அவரிடத்தில் மிகுதியாக இருக்கிறது. மைதானத்தில் ஷிகர் தவனின் அதிகபட்ச எதிர்வினை என்பது 'கேட்ச்’ பிடிக்க நேர்கின்ற சந்தர்ப்பங்களில் தொடையை ஒருமுறை பலமாக தட்டுவது மட்டும்தான். பிறிதொருவரை தொந்திரவு செய்யாமல், பார்வையாளர்களை பார்த்தே அவ்வாறு தொடையில் தட்டுவார். தனது இருத்தலை உற்சாகமாக வெளிப்படுத்தும் முறையாகவே இதனை செய்து வருகிறார். இதுவும் கூட ஒருவகையில் ஒரு சராசரியான கிராமிய இளைஞரின் செய்கைகளை நினைவுப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கிறது. மற்றைய இந்திய வீரர்களின் சரீரத்துக்கு தொடர்பில்லாமல் கரடுமுரடான தோற்றத்தில் நம் உள்ளூர் விளையாட்டாளர்களை நினைவுப்படுத்துபவராக இருக்கிறார் ஷிகர் தவன்.

அவரது ஆட்ட வெளிப்பாட்டு முறையும் கூட பெரும்பாலும் நேர்த்தியான ஷாட்டுகளாக அமைவதில்லை. அவர் களத்தில் இருக்கின்ற போது தொடர்ச்சியாக ரன்கள் குவியும் என்பது வழக்கம்தான் என்றாலும், உறுதியான பலம் மிகுந்த ஷாட்டுகளாக அவை இருப்பதில்லை. எனினும், சமகாலத்திய இந்திய அணியின் மிக முக்கியமான வீரராக ஷிகர் தவன் கருதப்படுகிறார். தொடக்க நிலையில், ரோஹித் சர்மாவுடன் இணைந்து அவர் அமைத்துக் கொடுக்கின்ற அடித்தளம்தான், மையநிலை ஆட்டக்காரர்கள் சிறப்புற விளையாட முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஒருபுறத்தில் ரோஹித் சர்மா ஒரு நிலைவரை கட்டுறுதியை கடைப்பிடிப்பதும், பின்னர் ராட்சசத்தன்மையில் விலாசுவதும் வழக்கமாக இருக்கிறது என்றால், ஷிகர் தவன் துவக்கத்தில் இருந்தே தன்னால் இயன்ற அளவில் பவுண்டரிகளை குவித்துக் கொண்டிருப்பார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு என்று மிகுந்த விஷேசத்தன்மை கொண்ட வரலாறு இருக்கிறது. ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கரும், சவுரவ் கங்குலியும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார். இந்த இணையை இன்றளவும் பல ரசிகர்கள் வியந்து பேசுகிறார்கள். வலது கை ஆட்டக்காரர் ஒருவர், இடது கை ஆட்டக்காரர் ஒருவர் என்கின்ற முறை இவர்களின் காலத்தில் இருந்து வழக்கமாயிற்று. பல முக்கியத்துவம் வாய்ந்த போட்டித் தொடர்களில் இந்த இணை இந்திய அணியை வெற்றிப் பெற செய்திருக்கிறது. சச்சின் கிரிக்கெட் விளையாட்டின் கடவுளாக கருதப்படுகிறார் என்றால் கங்குலியும் அவரளவில் தன் பங்குக்கு பல முத்திரை இன்னிங்க்ஸ்களை பதித்திருக்கிறார். குறிப்பாக, ஸ்பின் ஓவர்களில் க்ரீஸ் கோட்டுக்கு வெளியே எகிறி வந்து அவர் விளாசுகின்ற சிக்ஸர்கள் பெரும் அதிர்வுகளை அக்கால ரசிகர்களிடத்தில் உருவாக்கியிருந்தன. இன்றளவும் கங்குலிக்கு இணையாக பந்துகளை கையாளக் கூடிய திறன் மிகுந்த இடது கை ஆட்டக்காரர்கள் சர்வதேச அளவில் கூட இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.

அதற்கும் அடுத்த குறிப்பிடத் தகுந்த காலத்தில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியவர்கள் சேவாக்கும் – காம்பீரும். சேவாக் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்கினார் என்றால், காம்பீர் நிலைத்த நிதானமான ஆட்டத்தை ஒருபுறத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார். இவர்களது இணையும் பல போட்டிகளில் நல்லதொரு தொடக்கத்தை இந்திய அணிக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறது. 2011 உலக கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி கோப்பையை வெல்ல காம்பீரின் ஆட்டம் மிகப் பெரியளவில் பங்காற்றியிருந்தது.

வலது கை ஆட்டக்காரர், இடது கை ஆட்டக்காரர் என்கின்ற இணை பவுலர்களை இயல்புடன் இருக்க அனுமதிக்காது என்பதை கடந்து, நல்லதொரு துவக்கத்தை பின்வரும் ஆட்டக்காரர்களுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டுமென்பதே மிக மிக அவசியமானதாகும். அதனை மிகச் சரியாக சேவாக் – கம்பீர் இணை செய்து கொடுத்தது. இவர்களின் காலத்திற்கு பின்னர் ஒரு தெளிவான ஆட்ட வரிசை இந்திய அணியில் உருவாகாமல் இருந்தது. ஒருபுறம் ஷிகர் தவன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்க துவங்கியிருந்தார் என்றாலும், அவருடன் இணைந்து வலுவான நிலைக்கு ரன்களை குவிப்பதற்கு சரியான நபர் கிடைக்க சில காலம் தேவைப்பட்டது. நான்காவது அல்லது ஆறாவது ஆட்டக்காரராக களமிறங்கிக் கொண்டிருந்த ரோஹித் சர்மா அதன் பின்னர்தான் துவக்க ஆட்டக்காரராக இறக்கி விடப்பட்டார். இப்போது அவர் மூன்று இரட்டை சதங்களை குவித்திருக்கும் ஒரே சர்வதேச கிரிக்கெட் விளையாட்டாளராக இருந்துக் கொண்டிருக்கிறார்.

சேவாக் கம்பீர் காலத்தில் ஷீகர் தவானும் மையநிலை ஆட்டக்காரராகதான் இருந்து கொண்டிருந்தார். அது பற்றி தவான் குறிப்பிடுகையில், ‘எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. ஆனால், புதிய பந்தை எதிர் கொள்வது எப்போதுமே உற்சாகமூட்டக் கூடியது. நான் அவர்களின் மாற்றாக ஒருநாள் கருதப்படுவேன் என நினைத்ததில்லை. நாளை எனது இடத்துக்கும் வேறொருவர் வரக்கூடும். இந்த உலகத்தில் நிலையானதென்று எதுவும் இல்லை. அல்லாவா?!’ என்கிறார்.

உண்மையில், பேட்டிங் சார்ந்த சாதனைகளில் முன்னணியில் இருக்கும் பெயர்கள் அனைத்துமே துவக்க ஆட்டக்காரர்களுடையதாகவோ அல்லது ஒரு விக்கெட்டுக்கு பிறகு களமிறங்குபவர்களாகவோ இருப்பதே வழக்கம். நிறைய ஓவர்களில் நின்று நிதானித்து விளையாடும் சூழல் இவர்களுக்கு வாய்த்திருக்கிறது. ஷிகர் தவன் தற்போது வரையில் 15 சர்வதேச ஒருநாள் சதங்களை அடித்திருக்கிறார். இந்திய அணிக்காக அவர் விளையாடி வரும் கடந்த எட்டு ஆண்டுகளில் அவரது இந்த சாதனை போற்றப் படக் கூடியதே. முன்னதாக சவுரவ் கங்குலி 22 சர்வதேச ஒருநாள் சதங்களையும், கம்பீர் 11 சதங்களையும் குவித்திருக்கிறார்கள். இவ்விருவரும் சமகால கிரிக்கெட் விளையாட்டில் இல்லையென்பதால், ஷிகர் தவன் கூடிய விரையில் இச்சாதனைகளை முறியடிப்பதற்கான சாத்தியங்கள் பெரியளவில் இருக்கிறது.

ஆசிய கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்றிருப்பதன் மூலமாக ஷீஷிகர் தவனுக்கு தன் மீது மற்றும் தனது ஆட்டத்திறன் மீதான நம்பிக்கை கூடுதலாக வளர்ச்சியுற்றிருக்கும். எதிர்வரும் உலக கோப்பை உட்பட இனி வரும் காலங்களில் ஷிகர் தவனிடமிருந்து எத்தகைய சாதனைகள் படைக்கபட போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(சிக்ஸர் பறக்கும்…)       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com