Enable Javscript for better performance
2. வாழ்க்கை எப்போதும் மாறும் என்று எவராலும் கணிக்க முடியாது!- Dinamani

சுடச்சுட

  

  23. வாழ்க்கை எப்போது மாறும் என்று எவராலும் கணிக்க முடியாது!

  By ராம் முரளி.  |   Published on : 19th October 2018 12:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Daddy-D

   

  தனது அறிமுக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே மிகக் குறைவான பந்துகளில் சதமடித்து தனது சாதனை கணக்கை துவங்கியிருந்த ஷிகர் தவன், சர்வதேச அளவில் விரைவாக 3000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்கின்ற சிறப்பையும் பெற்றிருக்கிறார். 2013-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்திய 'ஏ’ அணியில் இடம்பெற்று இவர் விளாசிய இன்னிங்க்ஸ் இவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மிக முக்கியமான திருப்புமுனையாக கருதப்படுகிறது. அந்தப் போட்டியில் வெறும் 150 பந்துகளில் 248 ரன்களை ஷிகர் தவன் குவித்திருந்தார். இந்திய ’ஏ’ அணி வீரரால் ஒற்றைய இன்னிங்க்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது. அதுவரையிலும், இந்திய அணியில் குறிப்பிடத் தகுந்த நிலையான இன்னிங்க்ஸை ஷிகர் தவன் விளையாடியிருக்கவில்லை.

  2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகியிருந்த ஷிகர் தவனுக்கு, இந்த போட்டிக்கு பிறகுதான் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிக முக்கியத்துவம் அளிக்கத் துவங்கியது. இந்திய ’ஏ’ அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட் இந்த போட்டியில் ஷிகர் தவனின் ஆட்டத்தை குறிப்பிட்டு, ‘ஒருநாள் கிரிக்கெட்டில் இதை விடவும் சிறப்பான இன்னிங்க்ஸை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. அவர் இன்றைய போட்டியில் பந்துகளை எதிர்கொண்ட அணுகுமுறையை வைத்து 300 ரன்களை தொடப் போகிறார் என்றே நினைத்திருந்தேன். அவரது அனைத்து ஷாட்டுகளும் மிகக் கச்சிதமானவை. அவர் டிரைவ் ஆடினார். பவுண்டரிக்கு பந்துகளை விளாசினார். அனைத்து விதமான கிரிக்கெட் ஷாட்டுகளையும் இன்றைய போட்டியில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். நிச்சயமாக ஒரு கிரிக்கெட் ரசிகருக்கு ஷிகர் தவனின் இன்றைய ஆட்டம் ஒரு விருந்து என்றே சொல்லலாம்’ என்றார்.

  ஷிகர் தவனின் இன்றைய காத்திரமான நிலை உயர்வுக்கு துவக்க காலங்களில் அவருக்கு அமைந்த பயிற்சியாளர் தாராக் சின்ஹாவுக்கு முக்கிய இடமிருக்கிறது. பஞ்சாபி பெற்றோருக்கு 1985-ல் தில்லியில் பிறந்த ஷிகர் தவன், தனது பள்ளி கல்வி காலத்திலேயே தாராக் சின்ஹாவிடம் சரண் புகுந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது வெறும் 12 மட்டுமே. பேட்டிங் உடன் சேர்த்து விக்கெட் கீப்பிங் பயிற்சியையும் ஷிகர் தவன் மேற்கொண்டிருந்தார். 12 வயதுக்குரிய துடுக்குத்தனங்களை எல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு, ஷிகர் தவன் தனது மிகுதியான நேரத்தை அப்போதே பயிற்சிகளில் செலவிட துவங்கியிருந்தார். சோனட் கிளப் அதற்கு சிறப்பான அமைவிடமாக தவானுக்கு அமைந்துவிட்டது.

  தாராக் சின்ஹா தலைமையேற்று நடத்தி வந்த சோனட் கிளப்பில் இருந்து இதுவரையிலும் 12 ஆட்டக்காரர்கள் சர்வதேச இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள். சமீப காலங்களில் சிறப்பாக விளையாடிவரும் ரிஷாப் பேண்ட்டும் இவரின் கீழ் பயிற்சி மேற்கொண்டவரே. தற்போது 68 வயதாகும் தாராக் சின்ஹா கிரிக்கெட்டை ஒருபோதும் விளையாட்டாக பாவித்தவரில்லை. அவரைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் என்பது அவரது வாழ்வின் அங்கமாகவே இருந்து வருகிறது. கிட்டதட்ட 100 முதல் நிலை கிரிக்கெட் விளையாட்டாளர்களை உருவாக்கியிருக்கிறார் சின்ஹா. அவரது சோனட் கிளப் 1969-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. முன்னதாக, மிக மிகப் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்த சின்ஹா, நல்லதொரு இடத்தை இந்திய கிரிக்கெட் அணியில் பெற வேண்டுமென்கின்ற கனவை கொண்டிருந்தவர். அது நிறைவேறவில்லை எனினும், அவரால் பல விளையாட்டாளர்கள் இந்தியாவெங்கும் உருவாகியிருக்கிறார். ஷிகர் தவனும் அவர்களில் ஒருவர்.

  பதினாறு வயதுக்குட்பட்டோருக்கான தில்லி அணியில் இடம் பிடித்து சிறப்பாக விளையாடியதன் தொடர்ச்சியாக ஷிகர் தவனுக்கு இந்தியாவின் அண்டர்-19 அணியில் இடம்பெறும் வாய்ப்பும் கிடைத்திருந்தது. வங்காளதேசத்தில் 2004ம் ஆண்டு நடைபெற்ற அண்டர்-19 உலக கோப்பையில் இந்திய அணியில் விளையாடிய ஷிகர் தவன், மொத்தமாக 505 ரன்களை குவித்து அத்தொடரின் அதிகபட்ச ரன்களை குவித்த வீரர் என்கின்ற சாதனையை செய்திருந்தார். மூன்று சதங்களை இத்தொடரில் குவித்து, தொடர் நாயகன் விருதினையும் பெற்றார்.

  இக்காலத்தில் இன்றைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் அண்டர்-19 அணியில்தான் விளையாடிக் கொண்டிருந்தார். அதனால், இருவருக்கும் அக்காலத்தில் இருந்தே நல்லதொரு புரிந்துணர்வு உருவாகியிருந்தது. விராட் கோலியை பற்றி தவன் குறிப்பிடுகையில், ‘கடந்த சில வருடங்களில் கோலியின் வளர்ச்சி அபாரமாக இருக்கிறது. அண்டர்-19 உலக கோப்பையை தலைமை தாங்கி வென்று கொடுத்திருக்கிறார். தோனி இல்லாத தருணங்களில் இந்திய அணிக்கு கேப்டனாகவும் பொறுப்பேற்கும் கோலி, சிறந்ததொரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் சிறப்பாக செயல்படுகிறார். அவர் ஒரு சிறந்த பண்பாளர். மிகச் சிறந்த விளையாட்டாளர்’ என்கிறார்.

  ஒருபுறம் கோலி வளர்ந்து வரும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் என அடையாளம் காணப்பட, ஷிகர் தவனுக்கு இன்னமும் ஒரு நிலையான துவக்கம் அமையாமல் இருந்தது. இந்திய அணியின் நம்பிக்கை மிகுந்த துவக்க ஆட்டக்காரர்களான சேவாக் மற்றும் கவுதம் கம்பீரின் ஆதிக்கம் வலுப்பெற்றிருந்த காலக்கட்டம் அது. ஷிகர் தவன், இவ்விருவரும் இல்லாத இந்திய அணியை தன்னால் கற்பனைக்கூட செய்ய முடியாமல் இருந்தது என்று குறிப்பிடுகிறார். அவர்கள் இருவரும் கிட்டதட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதனால் ஷிகர் தவன் தனக்கொரு இடம் இந்திய அணியில் கிடைக்கும் என்பதை பற்றி சிந்தித்தது கூட கிடையாது. ஷிகர் ரஞ்சி கோப்பைகளிலும், இன்னபிற கிளப் கிரிக்கெட்களிலும் தனது கவனத்தை குவித்து, விளையாடிக் கொண்டிருந்தார். தனது பயிற்சியாளர்களிடம் நெருக்கமாகப் பழகுவதன் மூலமாக மெல்ல மெல்ல தனது ஆட்டத்தில் உள்ள குறைகளை களைந்தபடியே இருந்தார். வாழ்க்கை எப்போதும் எந்த நேரத்தில் மாறும் என்றும் ஒருவரும் முன்னதாகவே கணிக்க முடியாதல்லவா?

  2010-ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியது. அந்த போட்டித் தொடருக்கான 14 பேர் கொண்ட இந்திய அணியில் ஷிகர் தவனுக்கு முதன் முதலாக வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்திய அணியின் கேப்டன் தோனி முன்னதாகவே ஷிகர் தவனின் ஆட்டத்தை கவனித்திருக்கிறார். அதனால், தவன் மீது அவருக்கு நல்லதொரு நம்பிக்கை உருவாகியிருந்தது. தொடர் துவங்குவதற்கு முன்னதாக ஷிகர் தவனிடம் தோனி, ‘2005-ல் இருவரும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினோம். எனக்கு ஒரு வாய்ப்பு தேசிய அணியில் விளையாட கிடைத்ததன் மூலமாக, என்னால் நல்லதொரு நிலையை அடைய முடிந்தது. பல சறுக்கல்கள் இருந்திருக்கின்றன என்றாலும், நான் தொடர்ச்சியாக எனது பங்களிப்பை இந்திய அணிக்காக அளித்து வருகின்றேன். ஒரு துவக்க ஆட்டக்காரராக, உனக்கு கூடுதல் பொறுப்புணர்வு இருக்கிறது. சச்சின் டெண்டுல்கரும், கம்பீரும், சேவாக்கும் விளையாடிய இடத்தில் நீ விளையாட போகிறாய். ஆனாலும், உனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதில் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. உனது திறன்களை சிறப்பாக பிரயோகித்து இந்திய அணியில் நிலையானதொரு இடத்தை அடைவாய் என நம்புகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

  விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அப்போட்டி தொடரின் இரண்டாவது போட்டியில் அறிமுகமாகும் சந்தர்ப்பம் ஷிகருக்கு வழங்கப்பட்டிருந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஐம்பது ஓவர்களில் 289 ரன்களை சேர்த்திருந்தது. சேஸிங்கில் துவக்க ஆட்டக்காரராக ஷிகர் தவன் தனது முதல் போட்டியில் களமிறக்கப்பட்டார். கிளைண்ட் மெக்கே பந்து வீசுகிறார். முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை. இரண்டாவது பந்து வீசப்படுகிறது. ஷிகர் பந்தை கணிப்பதற்குள் பந்து ஸ்டம்புகளை பதம்பார்த்துவிடுகிறது. தனது முதல் போட்டியில் எவ்வித ரன்னையும் சேர்க்காமல் ஏமாற்றத்துடன் ஷிகர் தவன் பெவிலியன் திரும்பினார்.

  அதற்கு அடுத்தடுத்து ஷிகர் தவனுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளையும் தவன் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. தொடர்ச்சியாக ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழப்பது வாடிக்கையாக இருந்தது. எனினும், சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் தவனுக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்பட்டே வந்தது. தோனி தவன் மீது வைத்திருந்த நம்பிக்கை அவர் அணியில் தொடர்ச்சியாக இடம்பெற காரணமாக இருந்தது.

  ‘தோனி மிகவும் அமைதியான மனிதர். எப்போதும் கூலாகவே இருப்பார். இளைய கிரிக்கெட் வீரர்களை உற்சாகமூட்டுவதையும், தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்கவும் பெரிதளவில் உதவி புரிவார். ஒரு புதிய வீரர் எப்போதும் நிறைய குழப்பங்கள் நிரம்பியவராகவே இருப்பார். தனக்கான வெளியை அணியிடத்தில் உருவாக்கும் வரையில் அவரால் நம்பிக்கையுடன் விளையாட முடியாது. ஒரு வீரர் சோர்வுற்றிருக்கும் போது தோனி அவர்களை தானாக நெருங்கி வந்து நிறைய நம்பிக்கை பெரும் வார்த்தைகளை தெரிவிப்பார். அது என்போன்றோருக்கு மிகப் பெரிய வித்தியாசங்களை எங்களது ஆட்ட வெளிப்பாட்டில் நிகழ்த்தியிருக்கிறது’.  

  (சிக்ஸர் பறக்கும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai