24. இந்திய அணியின் புதிய சகாப்தத்தின் துவக்கம் இதுதான்! ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவன் இணை!

இந்திய அணியில் ஷிகர் தவனுக்கு இடமளிக்கப்பட்ட துவக்க காலத்தில் இருந்தே, அவரது ஆட்டத்திறன் குறித்த விமரிசனங்களும், கேள்விகளும் எழ ஆரம்பித்துவிட்டன.
24. இந்திய அணியின் புதிய சகாப்தத்தின் துவக்கம் இதுதான்! ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவன் இணை!

இந்திய அணியில் ஷிகர் தவனுக்கு இடமளிக்கப்பட்ட துவக்க காலத்தில் இருந்தே, அவரது ஆட்டத்திறன் குறித்த விமரிசனங்களும், கேள்விகளும் எழ ஆரம்பித்துவிட்டன. பொதுவாக, ஐ.சி.சி முன்னெடுக்கின்ற முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை ஷிகர் தவன் வெளிப்படுத்தி விடுகிறார் என்றாலும், மற்றைய காலங்களில் அவரது ஆட்டம் தொடர்ச்சியாக நிலையானதாக இருப்பதில்லை. இந்திய கிரிக்கெட் அணி பலத்த போட்டியும், மிகுதியான திறன் கொண்ட ஆட்டக்காரர்களையும் கொண்டிருக்கிறது. ஐ.பி.எல் போன்ற போட்டித் தொடர்கள் பல வளர்ந்து வரும் விளையாட்டாளர்களை அடையாளம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், ஷிகர் தவன் போன்றோருக்கு பலமான சவால்கள் முன்னெழுந்துள்ளன. 2015-க்கு பிறகு, பல சர்வதேச போட்டித் தொடர்களில் ஃபார்ம் இல்லாததால், ஷிகர் தவனுக்கு இடமளிக்கப்படவில்லை.

‘தோல்விகள் நிறைய பாடங்களை உங்களுக்கு புகட்டுகின்றன. நான் அதிலிருந்து நிறைய கற்றிருக்கிறேன் என்பதால் என்னையொரு அதிர்ஷ்டக்காரன் என்றே சொல்ல வேண்டும்’ எனும் ஷிகர் தவன் தன் மீதிருக்கும் அழுத்தங்கள் உணர்ந்தே இருக்கின்றார். கே.எம்.ராகுல், ராஹானே உள்ளிட்ட திறன்மிகுந்த ஆட்டக்காரர்கள் ஷிகர் தவன் இடத்தை அடைய காத்துக்கொண்டிருக்கிறார்கள். ‘உலக கோப்பைக்கு இன்னும் சில காலமே இருக்கிறது. அது வரையில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட பிராயாசைப்படுகிறேன். அதுதான் எனது இப்போதைய இலக்கு. நான் நன்றாக விளையாடவில்லை என்றால், எனது இடத்தை கைப்பற்ற பல திறமைசாலிகள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று தனது நிலை குறித்து ஷிகர் தவன் குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக, தோனியின் தலைமையிலான இந்திய அணியில் ஷிகர் தவனுக்கு 2010-ம் வருடத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டபோது, அதனை அவர் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால், மீண்டும் ஒரு வருட காலம் இந்திய அணியில் இடம்பெற தவம் காத்திருக்க வேண்டியிருந்தது. உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்பதும், அவைகளில் நல்லதொரு ரன்களை குவித்திருந்ததும், தவனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு இந்திய அணியில் இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்திருந்தது.

2011-ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்தத் தொடரிலும் ஷிகர் தவன் குறிப்பிட்டு சொல்லும்படியான பாதிப்புகளை உருவாக்கியிருக்கவில்லை. ஒரேயொரு போட்டியில் மட்டும் அரை சதத்தை கடந்திருந்தார். இந்த நாட்கள் அவருக்கு மிகுந்த மன நெருக்கடியையும், விரைவில் ஏதேனுமொரு முத்திரை இன்னிங்க்ஸை விளையாடி தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்தாக வேண்டும் என்கின்ற இரட்டை சவால்கள் ஷிகர் தவன் மீதிருந்தன.

இந்த சவாலை ஷிகர் தவன் வெற்றி கொண்டது 2013 பிப்ரவரி மாதத்தில். இந்தியா அணி ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டு டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாட இருந்தது. சேவாக் மற்றும் முரளி விஜய்க்கு அடுத்தபடியாக, ஷிகர் தவானின் பெயர் ஒரு மாற்று துவக்க ஆட்டக்காரர் எனும் நிலையில் அணியில் சேர்க்கப்பட்டிருந்தது. முதல் இரண்டு போட்டிகளில் ஷிகருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சேவாக் இத்தொடரின் போது மிக மோசமான ஃபார்மில் இருந்தார். அதனால், மூன்றாவது போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஷிகர் தவன் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளில் எந்தவொரு குறிப்பிட்டுச் சொல்லும்படியான இன்னிங்க்ஸையும் ஆடியிராத ஷிகர் தவனுக்கு இந்த வாய்ப்பு மிகமிக அவசியமாக இருந்தது. தன் மீது தனக்கிருக்கும் நம்பிக்கையையும் மெய்ப்பிக்க வேண்டும், அணியினரிடத்திலும் நல்லதொரு பெயரை உருவாக்க வேண்டும்.

முன்னதாக போட்டித் துவங்கும்போது, தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார் என்பதால், சச்சின் டெண்டுல்கர் அவருக்கு டெஸ்ட் போட்டிக்குரிய வெண்ணிற தொப்பியை அணிவித்தார். ‘முதல் நிலை போட்டிகளில் பல வியப்புக்குரிய ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறாய். உன்னிடமிருந்து நிறைய எதிர்பார்க்கின்றோம். இப்போது உனக்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது. சர்வதேச அளவிலும், உனது திறன்களை வெளிப்படுத்து’ என்று சச்சின் அவரிடத்தில் குறிப்பிட்டிருந்தார்.  ஷிகர் தவனுக்கு மிகப் பெரிய ஆசீர்வாதத்தைப் போல சச்சின் சொற்கள் மனதில் பதிந்துவிட்டன. பெரும் தன்னம்பிக்கையுடன் அந்த போட்டியை எதிர்கொண்டார்.

ஆச்சர்யப்படதக்க வகையில், ஷிகர் தவன் இந்த போட்டியில் உறுதியாக களத்தில் நிலைத்து நின்றுவிட்டார். முதல் நாள் மழையால் போட்டி நடைபெறவில்லை என்பதால், இரண்டாம் தினம்தான், ஆட்டம் துவங்கியிருந்தது. ஒருபுறம் முரளி விஜய் நிதானமாக விளையாடிக் கொண்டிருக்க, மறுபுறத்தில் தனது அத்தனை வருட முதல்நிலை ஆட்ட அனுபவங்களை கொண்டு, அன்றைய தினத்தில் ஷிகர் தவன் சிறப்பாக ரன்களை குவித்துக் கொண்டிருந்தார். இரண்டாம் தினத்தை கடந்து மூன்றாம் தினம் வரையிலும் அவர்களது இணை சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தது.

ஷிகர் தவன் வெறும் 85 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். சர்வதேச அளவில் அவருக்கு இது முதல் சதம் மட்டுமல்ல, அதுவரையிலான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே எந்தவொரு விளையாட்டாளரும் தனது அறிமுக போட்டியில் இத்தனை குறைவான பந்துகளில் சதம் அடித்ததில்லை என்கின்ற சாதனையையும் அவருக்கு ஒருங்கே கிடைத்திருந்தது. மொத்தமாக 187 ரன்களை சேர்த்துவிட்டு, தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார் ஷிகர் தவன். அவர் எதிர்பார்ந்திருந்த முக்கியத்துவம் வாய்ந்த இன்னிங்க்ஸாக இது நிலைப்பெற்றுவிட்டது.

இந்த டெஸ்ட் தொடரின் தொடர்ச்சியாக, இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், ஷிகர் தவன் துவக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவுடன் இணைந்து களமிறங்கினார். ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கமாக கருதப்படுகின்ற இந்த போட்டித் தொடரில் இருந்துதான் சேவாக்- கம்பீர் காலத்திற்கு பிறகான இந்திய அணிக்கு ஒரு நிலையான துவக்க ஆட்டக்காரர்களாக இருவரும் உருவெடுக்க துவங்கியிருந்தார்கள். மீண்டும் ஒரு வலது கை மற்றும் இடது கை ஆட்டக்காரர்கள் இணை என்பதால் பலரும் இந்தப் போட்டித் தொடரில் இவர்களின் பங்களிப்பு என்னவாக இருக்கப் போகிறது என்று எதிர்பார்ந்திருந்தார்கள்.

தங்கள் மீது கவிந்திருந்த எதிர்ப்பார்ப்புகளை ஷிகர் தவானும், ரோஹித் சர்மாவும் பொய்யாக்கவில்லை. இருவரும் போட்டிப் போட்டுக்கொண்டு இத்தொடரை மிகச்சிறப்பாக தங்களுக்கு ஏற்றாற்போல பயன்படுத்திக் கொண்டார்கள். வெறும் ஐந்தே போட்டிகளில் இந்த இணை 540 ரன்களை சேர்ந்திருந்தது. கிரிக்கெட் வாரியமும், இந்திய அணி தலைமையும் துவக்க ஆட்டக்காரர்கள் இல்லையென்கின்ற ஒரு நீண்ட கால கவலையில் இருந்து மீண்டார்கள். ஷிகர் தவன் இந்தப் போட்டித் தொடரில் இரண்டு சதங்கள், ஒரு அரை சதம் உள்பட 363 ரன்களை குவித்திருந்தார். அவரது சராசரி ரன் விகிதம் 90.75. நிச்சயமாக, ஆரம்ப கட்டத்தில் இருக்கும் எந்தவொரு கிரிக்கெட் விளையாட்டு வீரருக்கும் இந்த சாதனை மிகப்பெரிய புத்துணர்ச்சியை உண்டாக்கிவிடும்.

நாட்கள் செல்லச் செல்ல இந்த இணை ஒரு வலுவான இணையாக உருவெடுத்தது. துவக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவனும், ரோஹித்தும் குறிப்பிட்டு சொல்லும்படியான ஓவர்கள் நிலைத்துவிட்டால், நிச்சயமாக இந்திய அணி வெற்றி பெறும் என்பது உறுதி எனும் அளவுக்கு இவர்கள் மிகப்பெரிய தாக்கத்தை சர்வதேச அளவில் உருவாக்கியிருந்தார்கள்.

எனினும், ஷிகர் தவனின் இத்தகைய எழுச்சி அவ்வப்போது பல்வேறு காரணங்களால் பொலிவிழக்கவே செய்து கொண்டிருக்கிறது. ஒருபுறம் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் வெகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதும், பிறகான காலங்களில் சொற்ப எண்ணிக்கையிலான ரன்களில் பெவிலியன் திரும்புவதும் ஷிகரின் வழக்கமாகவே இருக்கிறது. ‘முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எத்தகைய துடிப்புடன் பந்துகளை எதிர்கொண்டேனோ அதே வகையில்தான் ஒவ்வொரு போட்டியையும் அணுகி வருகிறேன். சமயங்களில் எனது ஆட்டம் இந்திய அணிக்கு கைக்கொடுக்கவில்லை என்றாலும், மனதளவில் நான் அன்றைய தினத்தில் என்ன மந்திரத்தை உச்சரிப்பு செய்து கொண்டிருந்தேனோ அதேயேத்தான் இன்னமும் உச்சரித்துக் கொண்டிருக்கிறேன்’ என்கிறார்.

காயங்களினால் அவதியுறுவது, ஃபார்ம் இன்றி தவிப்பது என்பதையெல்லாம் கடந்து இந்திய அணிக்காக சர்வதேச அளவில் ஷிகர் தவன் விளையாடியுள்ள எட்டு வருடங்களில் பல முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளையும் படைக்க ஷிகர் தவன் தவறியதில்லை. குறிப்பாக, 2013 மற்றும் 2017-ம் வருட ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர் ஷிகர் தவன்தான்.

இந்திய அணியின் கேப்டன்களிடம் எப்போதும் நெருக்கமான உறவினை வளர்த்துக் கொண்டிருப்பவர் ஷிகர் தவன். தான் இந்திய அணியில் அறிமுகமான போட்டியில், தலைமை வகித்த தோனி குறித்து, ‘தோனி மிகவும் மென்மையான மனிதர். அவருக்கு கீழ் விளையாட கிடைத்த வாய்ப்பினை மிகப் பெரிய கெளரவமாக கருதுகிறேன். அவர் ஒரு சிறந்த பண்பாளரும் கூட’ என்கிறார். அதே போல, அண்டர் 19 அணியில் ஒன்றாக விளையாடிய காலத்தில் இருந்தே நெருக்கமாக இருந்து வரும் கோலி குறித்து, ‘தோனி அப்படியே நேரெதிரான ஆனால் ஆரோக்கியமான வகையில் அணியை தீவிரமாக வழிநடத்திச் செல்லக் கூடியவர். எங்களைப் போன்றோருக்கு கோலி முன்மாதிரியான மனிதர்’ என்று விவரித்துள்ளார். சமீபத்தில் தோனி மற்றும் கோலிக்காக ஷிகர் தவன் சிறிய விடியோ ஒன்றில் ஹிந்தி பாடல் ஒன்றை பாடி பதிவிட்டிருந்தது வைரலாக பகிரப்பட்டது.

எப்போதும் உற்சாகமான மனநிலையில் இருக்கின்ற, ஐசிசி வழிநடத்துகின்ற அனைத்துப் போட்டிகளிலும் முத்திரைகளை பதிக்கின்றன ஷிகர் தவன் எதிர்வருகின்ற உலக கோப்பை போட்டியையும் தன்வசப்படுத்திக் கொள்வார் என்கின்ற நம்பிக்கை அணியினரிடத்தில் மட்டுமல்ல, இந்திய ரசிகர்களிடத்திலும் இருக்கிறது. அந்த நம்பிக்கையை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பை முறுக்கு மீசைக்காரரும் உணர்ந்தே இருக்கின்றார்.

சிக்ஸர் பறக்கும்…  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com