17. பாபர் அஸாமுக்கு ஆதர்ச கிரிக்கெட் விளையாட்டாளராக இருந்தவர் யார்?

பாபர் அஸாம் மிகச் சிறிய வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட துவங்கி விட்டார்.
17. பாபர் அஸாமுக்கு ஆதர்ச கிரிக்கெட் விளையாட்டாளராக இருந்தவர் யார்?

‘உங்களது கிரிக்கெட் விளையாட்டை எப்போதும் தளர்வடைய அனுமதிக்காதீர்கள். எவ்வளவு நேரம் நீங்கள் களத்தில் நின்றிருக்கிறீர்களோ அதே அளவுக்கு, அணிக்கும் உங்களுக்கும் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. உங்களது உடல் தகுதியிலும் எப்போதும் கவனத்துடன் இருங்கள். உங்களை 100% நீங்கள் செய்யும் பணிக்கு ஒப்புக் கொடுப்பீர்கள் என்றால், அந்த பணியும் உங்களை பல நிலைகளுக்கு உயர்த்திச் செல்லும். எப்போதும் விழிப்புடன் கவனத்துடன் இருங்கள்’ – பாபர் அஸாம்

பாபர் அஸாம் மிகச் சிறிய வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட துவங்கி விட்டார். அவரது குடும்பத்தில் பலரும் கிரிக்கெட் விளையாட்டின் தீவிர ரசிகர்கள். எப்போதும் அவர்களது உரையாடலில் கிரிக்கெட் ஏதேனும் ஒரு வடிவில் வந்து விழுந்துவிடும். சிறுவனான பாபர் அவர்கள் பேசுவதை நுணுக்கத்துடன் அருகில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருப்பான். அவரது தந்தை அவனை கிரிக்கெட் விளையாட வெகுவாக ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார். தெரு கிரிக்கெட்டில் இருந்து கிளப்களில் விளையாடும் சூழல் வரை அவரை மெல்ல மெல்ல தந்தை வளர்த்தெடுத்தார். பாபரை போலவே அவரது தந்தையும் கிரிக்கெட் விளைடாட்டின் மீது வைத்திருந்த ஆழமிக்க நேசிப்பு அவரை சிறுவயதிலிருந்து மிகச் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்த செய்திருக்கிறது. 

பள்ளியில் பயிலும் போதும் அவரது நினைப்பில் எப்போதும் கிரிக்கெட்டே வலம் வந்துக் கொண்டிருக்கும். வெகு துவக்க நிலை கல்வி மட்டுமே பயின்றிருக்கும் பாபர் பள்ளி காலத்தில் கூட காலையிலும், மாலையிலும் தீவிரமாக கிரிக்கெட் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். அவரது முழு கவனமும் கிரிக்கெட் விளையாட்டிலேயே நிலை கொண்டிருந்தது. படிப்பில் அவருக்கு பெரிதளவில் ஆர்வம் வளர்ந்திருக்கவில்லை. தந்தையை தவிர்த்து, அவரது மாமாவும் அவரை கிரிக்கெட் விளையாட அதிகளவில் உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார். எப்போதும் அவரது மாமாவும், பாபரும்தான் சிறு வயதுகளில் ஒன்றாக சுற்றி அலைந்துக் கொண்டிருப்பார்கள். பிற்காலங்களில் நேர்ந்த அவரது உயிரிழப்பு பாபரை வெகுவாக பாதித்திருக்கிறது.

அதே போல, கிளப்களில் பயிற்சி மேற்கொண்டிருந்த நாட்களில், உறவினர்களான அக்மல் சகோதரர்களுடன் (கம்ரான் அக்மல், உமர் அக்மல், ஆத்னன் அக்மல்) சேர்ந்து பேட்டிங் பயிற்சியை பாபர் மேற்கொண்டிருக்கிறார். பாகிஸ்தானில் நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கியிருந்த இந்த சகோதரர்கள் உடனான கிரிக்கெட் சார்ந்த தொடர் விவாதங்களும், உரையாடல்களும் பாபருக்கு பெரிதளவில் உத்வேகமூட்டியிருக்கிறது. அதிலும், கம்ரான் அக்மல் பாபருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்க உதவியிருக்கிறார்.

துவக்க காலத்தில் பாபர் அஸாமுக்கு ஆதர்ச கிரிக்கெட் விளையாட்டாளராக இருந்தவர் ஏபி டிவில்லியர்ஸ். அவரது ஒவ்வொரு ஆட்ட சாதுர்யங்களும் பாபரை மிகப் பெரிய அளவில் கவர்ந்திருந்தன. ஏபி டிவிவ்லியர்ஸ் போலவே தனது ஆட்டத்தை வடிவமைத்துக் கொண்டார். வலை பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது, ஏபி டிவில்லியர்ஸின் புதிது புதிதான ஷாட்டுகளை பயிற்சி செய்துப் பார்ப்பது பாபரின் வழக்கம். ஆனால், பொதுவாக அவரது ஆட்டத்திறன் கோலியுடன்தான் வைத்து பேசப்படுகிறது. பயிற்சியாளர் மிக்கி ஆர்ச்சர் பாபரை கோலியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். எனினும், தன்னடக்கத்துடன் பாபர் அதனை மறுத்தே வருகிறார்.

'அவர் என்னை உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரருடன் ஒப்பிட்டு பேசுகிறார். ஆனால், அதற்கு நான் தகுதியானவன் அல்ல. பயிற்சியாளர் அவ்வகையில் கருதுகிறார். ஏனெனில், எங்கள் இருவரின் ஆரம்ப கால ஆட்டங்களும், வளர்ச்சியும் பெரும்பாலும் ஒன்றுப்போலவே ஒத்துப்போயிருக்கின்றன. ஆனால், கோலி உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன். நானும் பாகிஸ்தான் அணியில் ஒரு நிரந்தமான உறுதியான இடத்தை அடைய தீவிரமாக முயற்சித்து வருகிறேன்’ என்கிறார் பாபர்.

பாபர் அஸாம் பாகிஸ்தான் அணியில் இடம்பெறும் முன்பாக, அண்டர் 19 அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார். அண்டர் 19 அணியில் அவரது சராசரி ரன் விகிதம் மலைக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. அவ்வணியில் இடம் கிடைத்ததுதான் அவரது சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுக்கான நல்லதொரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. அந்த அணியில் இடம் பிடித்திருந்தபோதுதான் மெல்ல மெல்ல தனது பேட்டிங் நுணுக்கங்களை பாபர் மேம்படுத்திக் கொண்டார்.

அண்டர் 19 அணியில் பாபர் விளையாடிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அவ்வணி நியூஸிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் நிறைய போட்டிகள் விளையாடியிருக்கிறது. அந்நிய நிலவெளியில் நிறைய போட்டிகளை விளையாடும் வாய்ப்புகள் கிடைத்தது தனக்கு துவக்க காலத்திலேயே கிடைத்த மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்கிறார் பாபர். பல்வேறு வகையிலான ஷாட்டுகளை அடிப்பதில் வல்லவரான பாபர் அஸாம், ஆஃப் சைடில் பந்துகளை அசால்ட்டாக பேட்டால் தட்டி பவுண்டரிக்கு பந்துகளை விரட்டிவிடும் கலையில் மிகுந்த தேர்ச்சிப் பெற்றவர். அவரது ஷாட்டுகளிலேயே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருப்பது ஆஃப் சைட் ஷாட்டுகள்தான்.

பொதுவாக, கிளாஸிக் கிரிக்கெட் விளையாட்டாளர்கள் அனைவரும், விரைவாக ரன்களை குவிக்க வேண்டுமென்கின்ற நோக்கில், பந்துகளை வலுவுடன் பவுண்டரிக்கு விரட்டும் ஷாட்டுகளை தேர்வு செய்யாது, நிதானமாக பந்துகளை தட்டி ரன்களை குவிப்பதில்தான் அதிக கவனத்தை குவித்திருக்கிறார்கள். சச்சின், ரிக்கி பாண்டிங், சங்ககாரா உள்ளிட்டவர்களின் பெரும் பட்டியலோடு, பாகிஸ்தானின் ஜாம்பவான் பிளேயரான சகித் அன்வர் வரை பலரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். பாபரும் அவ்வரிசையில் இடம்பெறும் தகுதியுடையவர்தான் என்றாலும், காலமும், வாய்ப்புகளும், சூழலும்தான் அதனை தெளிவுற முடிவு செய்ய வேண்டும்.

எப்போதும் களத்தில் நின்றிருக்கும்போது பாபருக்கு, இஜாஸ் அகமத்தின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வரும்.

‘களத்தில் உறுதியுடன் நிலைத்திருக்க வேண்டும். மற்றவையெல்லாம் தாமாக நிகழும்’

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்று சதங்கள் அடித்தது இது நாள் வரையிலான அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இந்த சாதனையை நினைவுக்கூரும் பாபர் அஸாம், ‘முதல் இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக சதம் அடித்ததே எனக்கு பெரிய நம்பிக்கையை உண்டாக்கியது. சமூக வலைதளங்களில், தொடர்ச்சியாக மூன்று சதங்கள் அடிப்பது சாதனையென குறிப்பிடப்பட்டிருந்ததை நான் அறிந்து வைத்திருந்தேன் என்றாலும், எனக்கு மூன்றாவது போட்டியிலும் சதம் அடிப்பேன் என்கின்ற வலுவான எண்ணம் உருவாகமல் இருந்தது. எனினும், நான் இறைவனின் மீது எனது முழு பாரத்தையும் சுமத்திவிட்டு, முதல் இரண்டு போட்டிகளில் எப்படி விலையாடினேனோ அதே யுத்திகளை அந்த போட்டியிலும் வெளிப்படுத்தினேன். சிறிது சிறிதாக ரன்களை சேர்த்து அந்த சாதனையை அடையும்போது, எனக்கே பெரும் ஆச்சர்யமும், மிகுந்த உத்வேகமும் மனதில் உண்டாகியது. இறைவனின் செயல் இது’ என்கிறார்.

குறைந்த வயதுக்குள் மிகுந்த எதிர்பார்ப்புகளை உண்டாக்கியிருக்கும் பாபர் அஸாம், எப்போதும் கிரிக்கெட் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க கூடியவர். அணி வீரர்கள் உடனான பயிற்சியை கடந்தும், சுயமாக மற்ற நேரங்களில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வதும் அவரது வழக்கம். எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டுமென்பதே அவரது தாரக மந்திரமாக இருக்கிறது. கிரிக்கெட் தவிர்த்து எப்போதாவது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகையில், திரைப்படங்கள் பார்ப்பது இவரது வழக்கம். 2007-ல் வெளியான அமெரிக்க அறிவியல் புனைவு திரைப்படமான 300 தான் இவரது எப்போதைக்குமான விருப்ப திரைப்படமாம். 

ஒரு நீண்ட காலத்தை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் செலவிடப் போகும் கிரிக்கெட் விளையாட்டாளராக பாபர் அஸாமை உலக கிரிக்கெட் ஆர்வலர்கள் கணித்திருக்கிறார்கள். பல மூத்த வீரர்களின் ஓய்வுக்கு பின்னர் புதிதாக உருவெடுத்து வருகின்ற பாகிஸ்தான் அணியை பொறுப்புடன் வழி நடத்த வேண்டிய பொறுப்புகள் வளர்ந்து வரும் இளைய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடமே இருக்கிறது. இன்னமும், அணியில் நிலைத்திருக்கும் மொகமத் ஹாசீப், மற்றும் மாலிக் போன்றவர்கள் எந்த நிலையிலும் ஓய்வை அடைந்து விடலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வலுவாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து போன்ற அணிகளுக்கு நிகராக பாகிஸ்தான் அணி உருவாக வேண்டுமென்றால், பல திறன்மிக்க ஆட்டக்காரர்கள் அவ்வணிக்கு அவசியமாகிறார்கள். அவ்வகையில், பாபரின் இருப்பும், பொறுப்பு வாய்ந்த ஆட்டங்களும் பாகிஸ்தான் அணிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.  பாகிஸ்தானின் புதிய நம்பிக்கை நட்சத்திரமான பாபர் அஸாம் தன் மீதுள்ள எதிர்ப்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்றுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.    

(சிக்ஸர் பறக்கும்…)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com