Enable Javscript for better performance
26. சுறுசுறுப்பானந்தா!- Dinamani

சுடச்சுட

  
  jews_-_sivasami

   

  தூரத்திலிருந்து ர்ர்ர்ர்ர்ரிங்கென்று நடுக்கத்துடன் அடிக்கும் மெடாலிக் அலாரம் சத்தம் கேட்டு சிவசாமி துள்ளி எழுந்தான். பஞ்சாமியின் அறையிலிருந்து அந்தச் சத்தம் வர சாத்தியக்கூறுகளே இல்லை என்று திரும்பிப்படுத்தவன், விட்ட இடத்திலிருந்து தூங்கிவிட்டான். அந்தத் தவணை செல்லத் தூக்கம் கொஞ்ச நேரத்தில் முறிய, திடுக்கிட்டு எழுந்தவன் மணியைப் பார்த்தான். அட, நாலே முக்காலா? வாரிச் சுருட்டி எழுந்து, கை கால்களை நீட்டி, மடக்கி, கழுத்தை இடப்புறமாகவும் வலப்புறமாகவும் சுற்றி, பல சொடக்குகள் போட்டு, மற்ற பள்ளி எழுச்சிப் பயிற்சிகள், காலைக் கடன்கள், குளியல்களை முடித்து, சமையல் கட்டையும் முடுக்கிவிட்டு, பூஜை அறையில் படங்களாக எழுந்தருளியிருந்த குல, இஷ்ட தெய்வங்கள் முன்னால் உதடுகள் முணுமுணுக்க சுலோகங்களைச் சொல்லிக்கொண்டிருந்தபோதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

  ‘சிவசாமி! குட் மார்னிங். இப்பதான் எழுந்தியா?’ என்ற குரல் கேட்டது. இரண்டு இஞ்ச் துள்ளி மேலே எழும்பி, திகைப்புடன் சுவற்றைப் பிடித்துக்கொண்டு சரியாமல் நின்றான்.

  பூஜை அறை வாசலில் ஃபிரேம் போட்டதுபோல பஞ்சாமி நின்றுகொண்டிருந்தார். குளித்து முடித்து, மினிஸ்டர் ஒயிட் வேட்டி, கை வைத்த பனியன், தோளில் துண்டு, நெற்றியில் பன்னீர் மணக்கும் மூன்றிழை பழநி விபூதி, நடுவில் சிவப்பு குங்குமப் பொட்டு, கழுத்தில் துளசி மாலை.

  ‘அண்ணா! நீங்கழா? நான் பாக்கழது கனவா? இல்லை நினைவா?’ என்று குழறிய சிவசாமி, தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக்கொண்டான். வலித்தது. அட நெசம்தான்.

  ‘நான்தான்டா. நானேதான். எழுதி வெச்சுக்கோ, இன்னிலேருந்து நான் பழைய தூங்குமூஞ்சி பஞ்சாமி இல்லே. புத்தும் புது பஞ்சாமி. ஏழு, எட்டு மணி வரை தூங்கற பழைய அழுக்கு மூட்டை இல்லே. சரியா? காபி கொண்டு வரயா?’

  ‘அண்ணா இதோ’ என்று துள்ளி ஓடினவன், தடுமாறி விழ இருந்தான்.

  ‘அவசர டபேல்’ என்று பஞ்சாமி ஸ்பூனரிசத்துடன் சொல்லிச் சிரித்தார்.

  அண்ணாவுக்கு என்ன ஆச்சு என்கிற திகைப்புடன் சிவசாமி செயல்பட்டுக்கொண்டிருந்தான். ஒருத்தரிடம் இந்த வகையில் திடீரென்று மாற்றம் வருமா? காலை டிபனுக்காக ரவா உப்புமா செய்வதாக இருந்தான். உலகமே வெறுக்கும் பஞ்சாமிக்கு அந்தச் சிற்றுண்டி என்றால் உயிர். கறிவேப்பிலை போட்டிருக்க வேண்டும். வெங்காயம், இஞ்சி கூடாது.

  உப்புமா வாசனை வாணலியிலிருந்து கிளப்பினபோது, வாசல் மணி அடித்தது. சிவசாமி கதவைத் திறந்தான்.

  ‘குட் மார்னிங்.. குட் மார்னிங்.. குட் மார்னிங். நீங்கதான் சிவசாமியா இருக்கணும். உங்களுக்கும் ஒரு ஸ்பெஷல் குட் மார்னிங். நான்தான் சுறுசுறுப்பானந்தா. உள்ளே வரலாமான்னு கேக்காமலேயே நானே சுறுசுறுப்பா உள்ளே வந்துட்டேன். எப்படி?’

  சிவசாமியை அவ்வளவு சீக்கிரம் யாராலும் அசரவைக்க முடியாது. இருந்தாலும், அவன் சிறிது ஆடிப்போனான்.

  விறுவிறுன்னு உள்ளே நுழைந்தவர் சோபாவில் உட்கார்ந்துகொண்டார். ‘எங்கே? எங்கே பஞ்சாமி சார் எங்கே? சிவசாமி, மசமசன்னு நிக்காம அவரைக் கூப்பிடுங்கோ. ரவா உப்புமா வாசனை தூக்கறது. தொட்டுக்க புளி இஞ்சி இருந்தா அமர்க்களமா இருக்கும். ரெடி ஆயிடுத்தா? இல்லாட்டி நான் நிமிஷத்திலே ரெடி பண்ணிடுவேன். அடே, அடே.. பஞ்சாமி சார் வாங்கோ வாங்கோ. சொன்னபடி வந்துட்டேன் பாருங்கோ. மணி ஆறு முப்பத்துரெண்டு. எனக்கு பாட்ஷா மாதிரி பங்க்ச்சுவாலிடியானந்தான்னு இன்னொரு பெயரும் உண்டு.’

  ‘பஞ்சாமி சார். நான் ஆறு நாப்பத்து ரெண்டுக்கு கிளம்பிடுவேன். உங்க ரெண்டு பேரையும் இப்படிக் குளிச்சு ஃபிரெஷ்ஷா பாக்கிறது சந்தோஷமா இருக்கு. நம்ம நாடு முன்னேறாமலேயே இருக்க முக்கியமா மூணு காரணங்கள் இருக்கு. சிவசாமி, கேட்டுக்கோ. ஒண்ணு சோம்பேறித்தனம், இரண்டு சோம்பேறித்தனம், மூணு சோம்பேறித்தனம்.

  ‘பஞ்சாமி சார். நீங்க முதல் டெஸ்ட்டிலே பாஸ் பண்ணிட்டீங்க. கங்கிராட்ஸ். அப்போ நான் கிளம்பறேன். டிபன், காபி சாப்பிடுங்கோன்னு சொல்ல வேணாம். ரவா உப்புமா, ஃபில்டர் காபி வாசனையே என்னை மயக்கி மானசீகமா சாப்பிட வெச்சுடுத்து. நான் கிளம்பணும்’ என்று வாசலில் நின்று, டைமிங்கோட ரஜினி ஸ்டைலில் வர்ர்ட்டா என்று சொல்லி கிளம்பிப் போய்விட்டார்.

  ‘என்னண்ணா இது? யாரு இந்த சுறுசுறுப்பானந்தா?’ என்று கேட்டான் சிவசாமி.

  ‘என்னோட கிளப் சகா ஜம்பு மூலமா அறிமுகமானவர். ஹாஹா தெரப்பின்னு சொல்லி, பார்க்கிலே கைகளைத் தூக்கித் தூக்கி சிரிச்சு, மரத்து மேலே தேமேன்னு இருக்கிற காக்காய்களை எல்லாம் பயந்து பறக்க வெக்கறாங்களே. பழங்களைத் தின்ன வந்த அணில்களை மிரண்டு ஓட வெக்கறாங்களே. அவங்களை மாதிரி சுறுசுறுப்பானந்தா இன்னோரு பாணியின் அம்பாஸிடர்னு வெச்சுக்கோயேன். சுறுசுறுப்பானந்தா சொல்படி காலையிலே எழுந்து பார்க்குக்கு வந்து ஐஸோமெட்ரிக் எக்சஸைசெல்லாம் பண்ணணும். உடம்பை ஜனகரோட வில்லா வளைக்கணும். இது ஒரு பக்கம்.’

  பஞ்சாமி குஷியுடன் தொடர்ந்தார். ‘சிவசாமி, அது மாத்திரம் இல்லே. சுறுசுறுப்பானந்தாவோட ஸ்கீம்லே இன்னோரு பகுதிகூட இருக்கு. அது என்னதுன்னு தெரியுமா?’

  ‘எனக்கு எப்படித் தெரியும் அண்ணா? நீங்க சொன்னா நெரிஞ்சிக்கிறேன்.’

  ‘ஆமாம், இல்லே. இதோ சொல்றேன். சுறுசுறுப்புங்கிறது சோம்பித் திரியற உடம்புக்கு மாத்திரம் இல்லே, உள்ளத்துக்கும்தானாம். நீ சில பேரைப் பாத்திருப்பே. காலமே எழுந்து ஒரு வேலை வெட்டி செய்யாம, ஷவரம் பண்ணிக்காத உப்புக் கடுதாசி கன்னத்திலே கையை வெச்சுண்டு வெட்டியா உக்காந்து இருப்பாங்க. அவங்களுக்குத் தனி செக்ஷன் இருக்காம். காலமே எழுந்து குளிச்சுட்டு, நெத்திக்கு இட்டுண்டு, பஜனை கிளாஸுக்கு போகணும். ஆனந்தமா நடக்கும். அதிலே ஒரு 90 வயசுக் கிழவர் குதிச்சு குதிச்சுப் பாடி அசத்தராராம். அதோட, ஸ்தோத்திரக் கிளாஸ் இருக்காம். அதிலே சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாமம், ருத்ரம், சமகம், தேவாரம், திருவாசகம், கந்த சஷ்டி கவசம் அப்படீன்னு சொல்லித் தருவாங்க.’

  ‘அண்ணா இதெல்லாம் காலங்கார்த்தாலே வெறும் வயத்திலேயா?’

  ‘பின்னே. வயத்திலே ஆகாரம் போனா, பாதி பேருக்குத் தூக்கம்தான் வரும். மீதிப் பேருக்குக் கெட்ட கொட்டாவிதான் வரும். இப்போ வந்துட்டுப்போன சுறுசுறுப்பானந்தாவைப் பார். கெட்டிக்காரர். ரவா உப்புமாவைச் சாப்பிடாம, வாசனையை மாத்திரம் பிடிச்சுட்டுப் போனார். அதை அவர் சொன்ன மாதிரி புளி இஞ்சியோட ஒரு பிடி பிடிச்சுட்டு, மேலே காபியையும் விட்டுண்டுட்டா, தூக்கம் அபாரமா வரும். நான் நாளைலேருந்து போகப் போறேன். நீயும் வரயாடா சிவசாமி.’ பஞ்சாமி அதீத உற்சாகத்தில் மிதந்துகொண்டிருந்தார்.

  சிவசாமி அடக்கி வாசித்தான்.

  ‘நீங்க கூப்பிட்டா கட்டாயம் வரேன் அண்ணா. ஆனா, ஒரு வாரம் எப்படிப் போறதுன்னு உங்க கிட்டேருந்து கேட்டுண்டு வரேன்.’

  ‘வரமாட்டேங்கிறதை இப்படி பூடகமா சொல்றே, இல்லியா?’

  ‘அண்ணா, பாத்தேளா?’

  *

  சிவசாமியின் நெருங்கிய உறவுக்காரர் ஒருவர் திருக்காட்டுப்பள்ளியில் சிவலோகப் பிராப்தி அடைந்துவிட்டதாக செய்தி வர, அவன் ஊருக்குப் போய் நான்கு நாள் கழித்து வந்தான். ஒரு வாரம் ஆகும் என்று சொல்லிவிட்டுப் போனாலும், நாலு நாளில் திரும்பி வந்துவிட்டான்.

  விடியற்காலை ரதி மீனா பஸ்ஸில் வந்து இறங்கியவன், பஞ்சாமி குளித்து முடிச்சு சுறுசுறுப்பானந்தாவின் உடம்பு அல்லது மனப் பயிற்சிக்குப் போயிருப்பார் என்று எண்ணி, கதவை சாவி போட்டுத் திறந்தான், கதவு திறக்காததால் பெல் அடிச்சான்.

  சுமார் பதினைந்து நிமிடங்களுக்குப் பின் கதவு வழியே பஞ்சாமியின் குரல் வடிகட்டப்பட்டு வெளியே வந்தது.

  ‘யாழு? இந்த அர்த்த ராத்திரியிலே.’

  ‘அண்ணா, நான்தான் சிவசாமி.’

  ‘என்னது? சிவசாமியா? நெஜமாவா? வாடா வா. வந்துட்டியா? எதிலே வந்தே?’

  ‘ஆமாண்ணா. அங்கே என்னாலே நாலு நாளைக்கு மேலே இருக்க முடியலே. அண்ணா, இப்போதான் எழுந்தேளா? மணி ஆறாகப் போறதே? இத்தனை நேரம், எழுந்து குளிச்சு பார்க்குக்குப் போயிருக்கணுமே? போகலியா?’

  வாயைக் கோணி, தாடையை வரக் வரக் என்று மூன்று முறை சொறிந்துகொண்டார் பஞ்சாமி.

  ‘போடா போ. ரெண்டு நாளைக்குப் போனேன். அப்புறம் முடியலே. அதுக்கெல்லாம் தனி லைகிங் வேணும். மன உறுதி வேணும். இந்த வயசிலே இனிமே வராது.’

  ‘கேக்க கஷ்டமா இருக்கு. நீங்க சுறுசுறுப்பானந்தாவோட சீடராகி சும்மா கும்முனு லைவ் ஒயரா, சிவப் பழமா மாறிடுவேள்னு ஊர்லே கனவு கண்டுண்டு இருந்தேன் அண்ணா.’

  ‘போடா பொக்கே. அதெல்லாம் விடுடா. ஒருவேளை, நீ இங்கே இருந்திண்டிருந்து விரட்டி இருந்தா போயிருப்பேனோ என்னவோ, அதுவும் சந்தேகம்தான். இந்த தனுர் மாசத்திலே போர்வையை டைட்டா போத்திண்டு தூங்கற சுகம், எக்ஸசைஸ் பண்றதிலேயும், பஜனை பண்றதிலேயும் வருமா? நாம் இதுவரை செஞ்சதையே செஞ்சுண்டு, சாப்பிட்டதையே தொடர்ந்து சாப்பிட்டுண்டு இருந்தா, உடம்பு அது பாட்டு மக்கர் பண்ணாம ஓடிண்டு இருக்கும்னு தோண்றது.’

  ‘அப்படின்னும் ஒரு சித்தாந்தம் இருக்கு அண்ணா. EXISTENTIALISM-னு சொல்றதுண்டு. ழீன் பால் சாத்ர’ங்கிற பிரெஞ்சுக்காரர் என்ன சொல்றார்னா..’

  ‘எனக்கு இந்த இஸம் எல்லாம் வேண்டாம்டா. சுறுசுறுப்பானந்தாக்குப் போட்டியா மந்தமானந்தான்னு யாரான இருந்தா, அவரைப் பரமார்த்த குருவா பாவிச்சு, அவரோட பிரதம சிஷ்யனாகிடறேன்.’

  ‘அப்படியே செஞ்சுடுங்க அண்ணா. இப்போ பல்லை மாத்திரம் தேச்சுட்டு வந்தா காபி தரேன். அப்புறம்..’

  ‘அப்புறமாவது? விழுப்புரமாவது? காபிக்கு அப்புறம் மறுபடியும் படுக்கை. ஏழரை மணிக்கு முன்னே எழுப்பாதே. அப்படி செஞ்சே, உன்னை மொக்கை கத்தியாலே சாம்பாருக்கு காய் மாதிரி நறுக்கி காக்காய்க்குப் போட்டுடுவேன்.’

  ‘அப்பிடியே செஞ்சுடுங்கோ அண்ணா. ஆனா, நம்மூரில் காக்காய்கள்தான் கூப்பிட்ட குரலுக்கு வராதே..’

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai