அழகிய மரம்

ஆரியப் படையெடுப்பு தொடர்பான பொய்யுரைகளுக்கு அடுத்ததாக இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், அதிக செல்வாக்குடன் திகழும் இன்னொரு கட்டுக்கதை என்னவென்றால், இரண்டாயிரம் ஆண்டுகளாக எங்களைப் (பிராமணர் அல்லாதவர்களை) படிக்கவே விடவில்லை என்பதுதான். திராவிடக் கழகத்தினரால் முன்னெடுக்கப்பட்டு, பல்வேறு அரசியல் குழுவினர் இன்றும் நம்பும் அல்லது நம்ப விரும்பும் கற்பிதம் அது. காந்தியவாதியும் வரலாற்று ஆய்வாளருமான தரம்பால், இந்தியக் கல்வி பற்றி ‘அழகிய மரம்’ இந்தப் புத்தகத்தில் முன்வைக்கும் ஆதாரங்களைப் படிப்பவர்கள், ஒன்று தங்களுடைய அந்தப் பிழையான தீர்மானத்தை மாற்றிக்கொள்வார்கள். அல்லது கைவந்த கலையைப் பயன்படுத்தி, புதிய வெறுப்புரைகளைக் கண்டடைவார்கள். (பிழையான அரசியல் கருதுகோளை மாற்றிக்கொள்ளும் நேர்மையெல்லாம் எல்லோருக்கும் எளிதில் வாய்த்துவிடுவதில்லையே). 

1931-ல், லண்டனில் மகாத்மா காந்திஜி ஓர் உரை நிகழ்த்தினார். அதில், அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த கல்வியின் நிலையைவிட, ஐம்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியாவில் கல்வி நிலை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷார் அமல்படுத்திய நிர்வாக நடைமுறைகள், இந்தியப் பாரம்பரியக் கல்வி என்ற அழகிய மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது என்று சொன்னார். காந்திஜியின் அந்தக் கூற்று, 18-19-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கல்வி தொடர்பான மிகப்பெரிய விவாதக் கதவுகளைத் திறந்துவிட்டது. அந்த விவாதங்கள் மற்றும் அது தொடர்பான தரவுகளின் முழுமையான தொகுப்பே இந்தப் புத்தகம். அப்படியாக, பிரிட்டிஷாரின் ஆவணங்களின் அடிப்படையில், இந்தியக் கல்வியின் வரலாற்றை இந்தப் புத்தகம் முன்வைக்கிறது.

உலகில் எல்லா நாடுகளிலுமே, 18-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கான கல்வி என்ற லட்சியம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, தொழில் புரட்சிக்குப் பிறகு. உலகில் பொதுவாக, கல்வியானது மத நிறுவனங்களின் பொறுப்பிலேயே விடப்பட்டிருக்கிறது. உலகின் பிற பகுதிகளில் இருந்ததைவிட இந்தியாவில் அடிப்படைக் கல்வியானது அனைத்து சாதியினருக்கும் தரப்பட்டிருக்கிறது. தொழில்கல்வி, எல்லா நாடுகளையும்போலவே தொழில் குழுமங்களுக்குள்ளாகவே கைமாற்றித் தரப்பட்டு வந்திருக்கிறது. ஆசிரியர்கள், மன்னர்கள், வணிகர்கள், நில உடமையாளர்கள், எளிய மக்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்துகொடுத்து, பாரம்பரியக் கல்வி மரத்தை நீரூற்றி, உரமிட்டு, வேலியிட்டுப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். 

பிரிட்டிஷார் இந்தியாவை ஆக்கிரமித்ததும், வரி வசூலை அதிகரிக்க என்ன வழி என்று ஆராய்ந்திருக்கிறார்கள். ஏற்கெனவே இருந்த நிலங்களில் கணிசமான பங்கு இந்துப் பள்ளிகள், மதரஸாக்கள் போன்றவற்றின் பராமரிப்புக்காக மானியமாகத் தரப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறார்கள். அந்த நிலத்தில் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு வரி கிடைக்க என்ன வழி என்று பார்த்து, அதற்கான சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறார்கள். அப்படியாக, அரசுக்கு வரி தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதும், அதுவரை பள்ளிக்குச் செலவிடப்பட்ட தொகை குறைந்தது. கூடவே பிரிட்டிஷார் பெரிய கட்டடங்கள், முறையான அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்கள், திறமையான ஆசிரியர்கள், தேர்வுகள் என நவீன கல்வியை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்கள். (பிரிட்டனிலும் அது அப்போதுதான் அறிமுகமாகியிருந்தது). அவையெல்லாம் இல்லாத பள்ளிகளை, தயவு தாட்சணியமின்றி மூடினார்கள். அதற்கு முன்பு வரை, பெரிதும் இலவசமாகத் தரப்பட்ட கல்வியானது, பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகு கட்டணம் கட்டிப் படிக்கவேண்டி ஒன்றாக ஆனது. இதனால், கடைநிலை சாதிகளைச் சேர்ந்தவர்கள், கல்வியில் இருந்து அந்நியப்படவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அம்பேத்கர் போன்ற பல கடைநிலைச் சாதியினர், உயர் கல்வி பெறக் காரணமாக இருந்த அதே பிரிட்டிஷ் நிர்வாகம்தான், பெரும்பாலான எளிய கடைநிலைச் சாதியினர் கல்வியில் இருந்து அந்நியப்படவும் காரணமாக இருந்தது, வரலாற்றின் முரண்நகையே. 

இதுபோன்ற பல உண்மைகளை ஆதாரபூர்வமாக முன்வைக்கும் இந்த நூல், ஆங்கிலத்தில் அதர் இந்தியா பிரஸ் (Other India Press, Goa) சார்பில், தி ப்யூட்டிஃபுல் ட்ரீ (The Beautiful Tree) என்ற தலைப்பில் வெளியானது. அதன் அதிகாரபூர்வ மொழியாக்கம் இது. ‘‘இந்தப் புத்தகத்தில் மறு பிரசுரம் செய்யப்பட்டிருக்கும் ஆவணங்கள், பெருமளவுக்கு ‘மதராஸ் பிரஸிடென்ஸி இண்டிஜினஸ் எஜுகேஷன் சர்வே’யில் இருந்து எடுக்கப்பட்டவையே. 1966-ல்தான் இதை முதலில் பார்த்தேன். 1831-32-லேயே, ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் ஆவணங்களில் இந்த ஆய்வறிக்கைகளின் சுருக்கம் இடம்பெற்றிருக்கிறது. ஏராளமான ஆய்வாளர்கள், மதராஸ் பிரஸிடென்ஸி மாவட்ட ஆவணங்களிலும், பிரஸிடென்ஸி வருவாய்த் துறை ஆவணங்களிலும் (பிந்தைய அறிக்கைகள் மதராஸிலும் இருக்கின்றன; லண்டனிலும் இருக்கின்றன) இருக்கும் இந்த விரிவான ஆய்வறிக்கைகளைப் பார்த்திருக்கக்கூடும். எனினும், இனம்புரியாத காரணங்களினால் அவை அறிவுப்புலப் பார்வையில் இருந்து தப்பிவிட்டிருக்கின்றன’’ என்று முன்னுரையில் தரப்பால் தெரிவித்திருக்கிறார். இனம் புரியாத காரணங்கள் என்று அவர் நாசூக்காகச் சொல்லியிருக்கிறார். உண்மையில், கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனமே அதற்கான காரணம் என்பதை இந்தத் தொடரைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும். 

சுமார் 430 பக்கங்கள் கொண்ட ஆங்கில நூலின் சாராம்சத்தை, தரம்பால் அதே நூலில் அறிமுக உரையாக சுமார் 80 பக்கங்களில் சுருக்கித் தந்திருக்கிறார். இந்தத் தொடரில், அந்த அறிமுக உரை மட்டுமே இடம்பெற இருக்கிறது. மூல நூலில், அது ஒரே தொடர்ச்சியான உரையாகவே வெளியாகியிருக்கிறது. வாசகர்களின் வசதிக்கு ஏற்ப பல அத்தியாயங்களாக இங்கு பிரித்துத் தரப்படுகிறது.

அழகிய மரம்

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை