தியூப்ளே வீதி

ஆறு வருடம் முன்பு தினமணி கதிர் வார இதழில் ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதினேன். பயோஃபிக்‌ஷன் என்ற, வாழ்க்கை வரலாற்று அடிப்படையிலான புனைகதை அல்லது புனைகதையான வரலாறு அது. 1960-களில், தமிழ்நாட்டில் இருக்கும் பெயர் குறிப்பிடப்படாத ஒரு சிறு நகரத்தில் இருந்த ஒரு பத்து வயதுப் பையனின் வாழ்க்கைதான் அந்தத் தொடர். நான்தான் அவன். ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ நூல் வடிவம் பெற்றது. அதன் பகுதிகள் குறும்படமாயின. நானும் அதில் நடித்தேன். வாழ்க்கை 1960-களிலேயே நின்றுவிடவில்லையே. அந்தப் பையன் வளர்ந்து கல்லூரியில் அடி எடுத்து வைத்தான். 1970-களில் அவனுடைய உலகம், அவனைச் சுற்றி இயங்கிய உலகம், பழகிய மனிதர்கள், நடந்த தெருக்கள் இதையெல்லாம் கற்பனை கலந்து பதிவு செய்யும் தொடர்தான் ‘தியூப்ளே வீதி’. தியூப்ளே வீதியும் ரெட்டைத் தெருவும் வெவ்வேறு ஊர்களில் இருந்தவை. இப்போது இரண்டுமே பெயர் மாறி நினைவுகளில் மட்டும் நிலைத்திருக்கின்றன. தியூப்ளே வீதி அழைக்கிறது. எழுபதுகளுக்கு என்னுடன் வாருங்கள்.

இரா.முருகன்

இரா.முருகன்

எண்பதுகளில் தமிழ் இலக்கிய உலகம் பெற்ற நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் இரா.முருகன். இன்னும் எழுதமாட்டாரா என ஏங்கவைக்கும் உரைநடை. இன்னும் எதையாவது மிச்சம் வைத்திருக்கிறாரா என்று ஆராயத் தோன்றும் தகவல் விவரச் சேர்க்கைகள். இதற்குமேல் ஒன்றுமில்லை என்று தீர்மானம் கொள்ளவைக்கிற மனித மன ஊடுருவல் வித்தை. கணையாழி, தீபம் என்று தொடங்கி, கல்கி, விகடன் வரை அணிவகுத்த முருகனின் சிறுகதைகள், அவை வெளியான காலத்தில் வாசகர்கள் மத்தியில் உண்டாக்கிய எதிர்வினைகள் விசேஷமானவை. தேர்ந்த வாசகர்களின் விருப்பத்துக்குரிய எழுத்தாளராக எப்போதும் அவர் இருந்துவந்திருக்கிறார். எழுத்தைச் சங்கீதமாக்குகிற மிகச் சில சாதனையாளர்களுள் அவரும் ஒருவர். ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரியாக பணியாற்றி வரும் முருகன், பெருமைக்குரிய ‘கதா’ விருது பெற்றவர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இதுவரை 28 புத்தகங்கள் எழுதியுள்ளார். சில திரைப்படங்களுக்கு வசனமும் திரைக்கதையும் எழுதியுள்ளார்.

தியூப்ளே வீதி

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை