எல்லோரும் வல்லவரே…!

2015, சென்னைப் புத்தகக் காட்சியில், ‘நீ அசாதாரணமானவள்/ன்’  என்ற தலைப்பில் பேசினேன். அந்தப் பேச்சின் இறுதியாக நான் சொன்ன தகவலின் தொடர்ச்சியாக, சிலவற்றைப் பற்றி யோசித்தேன். அவற்றைப் பற்றித்தான், ‘எல்லோரும் வல்லவரே’ என்ற இந்தத் தொடரில் எழுத இருக்கிறேன். அங்கே சொன்ன தகவல் என்ன?

வெளிநாட்டில் வேலை கிடைத்துப் போன ஒருவன், விடுப்பில் திரும்பி வந்தபோது, மொத்தம் மூன்று ஸ்மார்ட் போன்கள் வாங்கி வந்தான். ஒன்றை அவன் அம்மாவிடமும், மற்றொன்றை அவனது அப்பாவிடமும் கொடுத்தான். மூன்றாவது மொபைல் போனை பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அவனது தம்பியிடம் கொடுத்தான். பின்பு விடுப்பு முடிந்து கிளம்பிப் போய்விட்டான்.

விலை உயர்ந்த ஸ்மார்ட் போனை மூவரும் பயன்படுத்த ஆரம்பித்தனர். அவனுடைய அம்மாவின் போனில் அழைப்பு வந்தால், அவர் அதை விரலால் 'வழித்துவிட்டு’, வந்த அழைப்பில் பேசுவார். எப்போதும் அதை மட்டுமே செய்தார். அவர் மகன் அடுத்த விடுப்பில் திரும்பி வரும் வரை.

அவனுடைய அப்பா கொஞ்சம் மேல். அம்மா அளவு இல்லை. அழைப்பு வந்தால் எடுப்பார். தவிர, தேவைப்பட்டால் அவரால் அந்த போனின் ‘கான்டாக்ட்ஸ்’ என்ற இடத்தைத் வரவழைத்து, அதிலிருந்து அவர் பேச விரும்பும் நபரின் எண்ணைத் தேடி எடுக்க முடியும். அழைப்பார், பேசுவார். மேலும் வரும் எண்களையும் தேவைப்பட்டால் பதிவு செய்துகொண்டுவிடுவார். ஆக, தன்னுடைய மனைவி பயன்படுத்தியதைக் காட்டிலும், அந்த புதிய விலை உயர்ந்த மொபைல் போனை அவர் சற்றுக் கூடுதலாகப் பயன்படுத்தினார்.

மூன்றாவதாக, பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அவனுடைய தம்பி. அவன் வேண்டியவர்களை போனில் அழைப்பது, வரும் அழைப்பை ஏற்பது, பாட்டு கேட்பது, ஒலிப்பதிவு செய்வது, பதிவுகளைக் கேட்பது, படங்கள் எடுப்பது, வாட்ஸ்ஆப் பயன்படுத்தி படங்கள், வீடியோ மற்றும் செய்திகள் அனுப்புவது - பெறுவது. ஸ்கைப் பயன்படுத்துவது. கூகுள் மேப்ஸ் பார்ப்பது, பேஸ் டைமில் தொடர்புகொள்வது, மின்னஞ்சல்கள் பறிமாற்றம், அலாரம் பயன்படுத்துவது, அப்பாவின் தேவைகளுக்காக நெட் பேங்கிங் செய்வது என்று இப்படியாக அந்த போனில் சுமார் பதினெட்டுக்கும் அதிகமான அம்சங்களைப் பயன்படுத்தினான். அண்ணன் வரும்போது, அந்த போனுக்கும் அடுத்த மாடல் போன் வாங்கி வரும்படி கேட்கிறான்.

மூவருக்கும் கொடுக்கப்பட்டது ஒரே மாதிரியான போன். ஒரே விலை. போன்களில் இருந்த அம்சங்களிலும் வேறுபாடுகள் கிடையாது. மூவருக்குமே அந்த போனை வைத்துகொண்டு எது செய்யவும் வாய்ப்பும் அனுமதியும் இருந்தது. ஆனால், பயன்படுத்திய மூவருக்குள்ளும் பயன்படுத்திய விதங்களிலும், பயனடைந்த அளவுகளிலும் பெரிய வேறுபாடுகள்.

இது யார் குற்றம்? போனின் குற்றமா? கொடுத்தவனின் குற்றமா?

பயன்படுத்துபவரின் குற்றம்தானே தவிர, வேறு யாருடைய  தவறும் இல்லை.

இதேபோலதான், மனிதர்களின் வேறுபாடுகளும். மனிதர்களிடம்  இருக்கும் மூளை என்ற இயந்திரத்தில் எந்த வேறுபாடும் இல்லை. எல்லாம் ஒரே உருவாக்கம் (மேக்)தான். ஆனாலும், செயல்பாடுகளிலும் சாதனைகளிலும் வித்தியாசம் உண்டு. காரணம், அதேதான். மொபைல் போனில் பார்த்ததுதான்.

மூளையைப் பயன்படுத்தும் விதங்களில் வேறுபடுகிறோம். திறன் படைத்திருப்பதில் எவரும் எவருக்கும் குறைந்தவரில்லை. படைத்தவன் ஒரே மாதிரியாகத்தான் படைத்து அனுப்பியிருக்கிறான்.

ஆக, எல்லோரும் ஒன்றுதான். முயன்றால் எல்லோரும் வல்லவர்கள்தான். எப்படி முயல்வது? எங்கே சிலர் தவறவிடுகிறார்கள்? எதனால் சிலர் சாதிக்காதவர்களாகவே போய்விடுகிறார்கள்?

இந்தத் தொடரில் பார்க்கலாம்.

சோம வள்ளியப்பன்

சோம வள்ளியப்பன்

BHEL, பெப்ஸி, வேர்ல்பூல், டாக்டர் ரெட்டீஸ் ஆகிய நிறுவனங்களில் 30 ஆண்டுகள் மனிதவளத் துறையில் பணியாற்றியவர். மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்துவரும் இவர், தமிழில் 50 புத்தகங்களும், ஆங்கிலத்தில் 2 புத்தகங்களும் எழுதியுள்ளார். You Vs You - All you need to know about Emotional Intelligence என்ற புத்தகம் ISTD பரிசு பெற்றது. பங்குச் சந்தை குறித்து இவர் எழுதிய ‘அள்ள அள்ளப் பணம்’ என்ற புத்தகம், ஒன்றே கால் லட்சம் பிரதிகளைக் கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.எமோஷனல் இன்டலிஜென்ஸ் குறித்து ‘இட்லியாக இருங்கள்’, leadership குறித்து ‘ஆளப்பிறந்தவர் நீங்கள்’, கம்யூனிகேஷன் குறித்து ‘உலகம் உன் வசம்’, பொருளதாரம் குறித்து ‘நாட்டுக்கணக்கு’ என்று பல்வேறு மேலாண்மை குறித்த புத்தகங்களை எளிமையாகத் தமிழில் எழுதுபவர். தமிழ்நாடு அரசு பரிசு, ஏர்வாடி ராதாகிருஷ்ணன் பரிசு, நெய்வேலி சிறந்த எழுத்தாளர் உள்ளிட்ட பரிசுகள் பெற்றவர். விகடன், குமுதம், அமுதசுரபி, நமது நம்பிக்கை ஆகிய இதழ்களில் தொடர்கள் மற்றும் தினமணியில் 40-க்கும் மேற்பட்ட நடுப்பக்கக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

எல்லோரும் வல்லவரே

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை