Enable Javscript for better performance
டி.ஆர். ராஜகுமாரி: 1.செக்ஸ் அப்பீல்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  டி.ஆர். ராஜகுமாரி: 1.செக்ஸ் அப்பீல்!

  By பா. தீனதயாளன்  |   Published On : 09th January 2016 10:00 AM  |   Last Updated : 11th January 2016 10:41 PM  |  அ+அ அ-  |  

   

  1941. பனிக்காற்றோடு பவனி வரும் தை மாத வெயில். ஆற்றங்கரை மரங்கள் கூடுதல் குளிர்ச்சியை வீசின. அதன் நிழலில் ஆயிழைகளின் மாநாடு.வீட்டுக்குப் போக மனமில்லாமல் ஒன்று கூடி களித்தார்கள். இடையில் குடத்தோடு அசைந்தாடி இளம் சிட்டுகள் மெல்ல நடை பழகினர்.

  ‘நீ என்ன தான் ஒயிலா நடந்தாலும் அவளை மாதிரி இல்லடி. அவ இடுப்புல குடத்தோட எத்தனை அழகு சொட்ட வர்றா தெரியுமோ...! ’

  ‘என்னோட அண்ணா இத்தோட நாற்பது தடவைக்கு மேலே ‘கச்ச தேவயானி’ பார்த்துட்டான்! ’

  ‘என் அண்ணா மட்டும் என்ன குறைச்சலாவா பார்த்துருக்கான்...? படிப்பை மொத்தமா மூட்டை கட்டி வெச்சிட்டான் ... சதா ராஜகுமாரி... ராஜகுமாரிங்கிற ஜெபம் தான். ’

  சென்னை ராஜதானி என்கிற பாரதத்தின் பாதி தேசம் முழுமையும், கையில்லா ரவிக்கையில் (ஸ்லீவ் லெஸ்) கவர்ச்சியாகத் தோன்றிய டி.ஆர். ராஜகுமாரியின் திருநாமம் சொல்லி மகிழ்ந்தது.

  rajkumari.jpg 

  ‘கச்ச தேவயானி’யில் வெகு ஜோராக ‘யானை சவாரியும்’ செய்திருப்பார் டி.ஆர்.ராஜகுமாரி.

  பட்டு மெத்தையில் துயில் கொண்ட பாக்கியவான்கள்... காட்டு பங்களா மைனர்கள்... வயல் வரப்போர கயிற்றுக் கட்டில் மிராசுகள், கட்டாந்தரையில் உடம்பை சாய்த்த கூலிகள்... என ஒருவர் பாக்கி இல்லை. மீசை முளைத்த எல்லாரும் ‘ராஜகுமாரி மோகம்’ கொண்டு திரிந்தனர்.

  அதுவரையில் தமிழர்கள் காணாத திருநாள்! திரை பிம்பங்களாலும் இளமையை வீரிட்டெழச் செய்ய முடியும் என்பதை ஆண்கள் முதன் முதலாக உணர்ந்தார்கள்.

  ராஜகுமாரி பற்றி அறிந்து கொள்வதற்காகவே எழுத்து கூட்டிப் பத்திரிகைகளை வாசித்தனர் படிக்காத பண்ணையார்கள்.

  ‘டி.ஆர். ராஜகுமாரியின் முழு பெயர் ‘தஞ்சாவூர் ரங்கநாயகி’ ராஜகுமாரி. 1922 மே 5 - வெள்ளிக்கிழமை அன்று பிறந்தவர்.

  கலைகளில் கொடி கட்டிப் பறந்த ‘தஞ்சை குஜலாம்பாளின்’ குடும்ப வாரிசு! ரங்கநாயகி - ராஜகுமாரியின் தாயார், மற்றும் தஞ்சை குஜலாம்பாளின் இரண்டாவது மகள்.’

  என்கிறத் தகவல் தெரிந்தவர்கள் உள்ளம் பூரித்துப் போனார்கள்.

  நிராகரிக்கப்பட்டவர்கள் நிகழ்கால வரலாறாவது... கோடியில் ஓரிருவருக்கே கிட்டும் அதிர்ஷ்டம்! டி.ஆர். ராஜகுமாரியும் எடுத்த எடுப்பில் ஏற்கப்படாமல் தூக்கி எறியப்பட்ட ஏந்திழை!

  கே.அமர்நாத் - முதல் ஸ்டண்ட் சினிமா ‘மின்னல் கொடி’யை உருவாக்கியவர். இயக்குநர்களின் யுகத்தைத் தொடங்கி வைத்தவர். அன்றைய நட்சத்திரங்களின் சிம்ம சொப்பனம். அவரிடம் டி.ஆர். ராஜகுமாரி நடிப்பதற்குச் சந்தர்ப்பம் கேட்டுச் சென்றார்.

  உனக்கு அழகும் இல்லை. நடிப்பும் வராது என்று விடை கொடுத்தார் கே. அமர்நாத்.

  டி.ஆர். ராஜகுமாரியின் சித்தி எஸ்.பி. எல். தனலட்சுமி சினிமா ஹீரோயின். ஹாலிவுட் டைரக்டர் எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கிய படம் ‘காளமேகம்’. அதில் நாதஸ்வர மேதை திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளைக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருந்தார்.

  தனலட்சுமி ‘ராஜாயி’யை டங்கனிடம் அறிமுகப்படுத்தி வாய்ப்பு கேட்டார்.

  ‘கருப்பு ரோஜா’ ராஜாயியை காமெடி ரோலில் நடிக்க வைப்பதாகக் கூறினார் டங்கன்.

  ராஜாயியும் தனலட்சுமியும் ஏமாற்றத்தில் அதிர்ந்தார்கள். நாயகி அந்தஸ்தை மாத்திரமே அவர்கள் நாடிச் சென்றிருந்தனர்.

  ‘குமார குலோத்துங்கன்’ படத்தைத் தயாரித்த ‘டெக்கான் சினிடோன்’ ராஜாயியை ஹீரோயின் ஆக்கியது. சி.டி. கண்ணபிரான் - டி.ஆர்.ராஜகுமாரியின் முதல் கதாநாயகன்.

  ‘குமார குலோத்துங்கன்’ படத்தில் நடிக்கும் போது எனக்கு ராஜலட்சுமி என்று பெயர். வீட்டில் செல்லமாக ராஜாயி என்று அழைப்பார்கள். அந்தக் காலத்தில் திருமதி டி.பி. ராஜலட்சுமி பிரபலமாக இருந்தார்.

  எனவே ‘குமார குலோத்துங்கன்’ தயாரிப்பாளர் ராஜாராவ் எனக்கு ராஜகுமாரி என்று பெயர் வைத்தார். அந்தப் பெயரே நிலைத்தது. நல்லதொரு புகழையும் எனக்கு வாங்கிக் கொடுத்தது. குமார குலோத்துங்கன் முதலில் வெளிவரவில்லை என்பதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம்.’- டி.ஆர். ராஜகுமாரி.

  குமார குலோத்துங்கன் நீண்ட காலம் முடங்கிக் கிடந்தது. டி.ஆர். ராஜகுமாரியின் இரண்டாவது டாக்கி ‘மந்திரவாதி’. நேஷனல் மூவிடோன் படைப்பு. மார்க்கோனி என்கிற இத்தாலிய இயக்குநர் டைரக்ட் செய்தார். ராஜகுமாரிக்கு இணை எஸ். டி. சுப்பையா.

  தடங்கல்களின் தாயகத்தில் இருந்தவருக்கு சித்தி மூலம் சொர்க்கத்தின் தாழ்ப்பாள் திறந்தது.

  தனலட்சுமியைத் தனது படத்துக்காக ஒப்பந்தம் செய்யச் சென்றார் கே. சுப்ரமணியம். வாய்ப்பு வாசல் தேடி வந்திருக்கிற பரவசம்! தனலட்சுமியின் குரலில் உற்சாகத்தின் ஆனந்தத் தாண்டவம்!

  ‘அடியே ராஜாயி... சீக்கிரமா காபி கொண்டு வா...’ என்றவர் அக்கால வழக்கப்படி தாம்பூலத்தட்டையும் இயக்குநர் அருகே நகர்த்தினார்.

  காபியை ஏந்தி வந்த காரிகை ராஜாயி - சுப்ரமணியத்தின் கண்களில் சுடர் விட்டுப் பிரகாசித்தார்.

  கே. சுப்ரமணியம் என்கிற கலைச் சிற்பிக்கு மாத்திரமே தெரிந்திருந்தது... அந்தப் பூவிலும் வாசம் உண்டு என்று!

  இனி தனலட்சுமி தேவையில்லை. ‘ராஜாயியே நாயகி’ என்கிற முடிவு டைரக்டரின் நெஞ்சை நிறைத்தது.

  23MP_T_R__RAJAKUMA_1803933g.jpg 

  கிண்டி வேல் பிக்சர்ஸ் ஸ்டுடியோ. அரிதார நிபுணர் ஹரிபாபு. அவரிடம் ராஜாயிக்கு ஒப்பனை செய்ய உத்தரவிட்டார் சுப்ரமணியம்.

  புதுமுகத்தைக் கண்டதும் எகிறினார் ஹரிபாபு. ‘அவளுக்கு என்னால் மேக் அப் போட முடியாது. இது திரைக்கேற்ற முகமே அல்ல. நிச்சயம் தேறாது...’ என்று மனக் கொதிப்பில் பதைபதைத்தார்.

  ‘கே. சுப்ரமணியத்துக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். இல்லாவிடின் தியாகராஜ பாகவதர் போன்ற சூப்பர் ஸ்டார்களை அறிமுகப்படுத்தியவர்... இந்தப் பெண்ணிடம் ஏமாந்து போவாரா..?’

  கே.சுப்ரமணியத்தின் வைராக்கியமே வென்றது. ராஜாயி மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை.

  ‘வேல் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் கச்ச தேவயானி படமாகியது. நன்றாகப் பாடத் தெரிந்த டி.ஆர். ராஜகுமாரியைத் துணிந்து அதில் கதாநாயகியாக நடிக்க வைத்தார் கே.சுப்ரமணியம்.

  டி.ஆர். ராஜகுமாரியின் நடையில் ஒரு விதமான கோணல் அமைந்திருப்பதைக் கவனித்து விட்டு, அவரது இடுப்பில் படம் முழுவதும் தொடர்ந்து இருக்குமாறு ஒரு குடத்தை ஏற்றினார் டைரக்டர்.

  குடமும் இடுப்புமாக டி.ஆர்.ஆர். நடந்து வந்ததில் அவரது கோணல் தெரியாமல் போயிற்று. - கொத்தமங்கலம் சீனு.(கச்ச தேவயானி ஹீரோ)

  டி.ஆர். ராஜகுமாரி கதாநாயகியாக நடித்ததில் கச்ச தேவயானி முதலில் வெளியானது. குமார குலோத்துங்கன், மந்திரவாதி இரண்டும் பின் தங்கின.

  அசுரர்களின் குல குரு சுக்ராச்சாரியார். அவரது அன்பு மகள் கச்ச தேவயானியின் புராணக் கதை திரையில் ஓடியது. டி.ஆர். ராஜகுமாரி தோன்றும் முதல் காட்சி. தன் தேன் குரலில்

  ‘குளிர்ப் பசுஞ்சோலை... ஆனந்த நீரோடை... பார்க்கப் பார்க்கத் திகட்டுவதில்லை’ என்று தித்திக்கத் தித்திக்கப் பாடியவாறு அன்ன நடை நடந்தார்.

  இயற்கையின் எழிலைச் சொல்லும் பாடல். நாயகியின் இளமை அழகையும் உள்ளூர நெய்யாக உருக்கி வார்க்கப்பட்ட வரிகள்.

  ஹீரோயின் இடுப்பில் இருந்த குடத்தில் தண்ணீர் தளும்பியதைப் போல் ரசிகர்களின் நெஞ்சமும் இன்பத்தில் தத்தளித்தது.

  டி.ஆர். ராஜகுமாரியின் அறிமுகப்படலமே வெகு அமர்க்களமாக அமைந்தது.

  ‘மவுத் டாக்’ என்பார்கள் கோலிவுட் பண்டிதர்கள். அடிப்படைக் கல்வி வளர்ச்சி அறவே இல்லாத அடிமைகளின் தேசம்...

  பாமர மக்களின் வாய் வழியாகவே மகுடம் சூட்டப்படாத மகாராணியாக ஓர் இரவில் உயர்ந்து நின்றார் டி.ஆர். ராஜகுமாரி!

  1941 ஜனவரி 9. சென்னை கெயிட்டி தியேட்டரில் திரையிடப்பட்டு வெள்ளிவிழா கொண்டாடியது கச்ச தேவயானி. அங்கு மட்டுமல்ல தென்னாடெங்கும் பல நகரங்களில் நூறு நாள்களை அநாயாசமாகக் கடந்தது.

  ‘கோயில் சிற்பம், ஸ்வப்ன மோகினி, தந்த பொம்மை, ஆடும் மயில், கூவும் குயில்’ என்றெல்லாம் செல்லம் கொஞ்சி எழுதின சஞ்சிகைகள்.

  டி.ஆர்.ராஜகுமாரியை கனவில் மொய்த்தார்கள் யுவன்கள். நேரில் காணவும் தவம் கிடந்தார்கள்.

  ‘செக்ஸ் அப்பீல்’ என்கிற சொல் முதன் முதலாக சபை ஏறியது. நமது கலாசாரம் பண்பாட்டுக்கு ‘இனக்கவர்ச்சியைத் தூண்டும் ஆடைகள்... அங்க அசைவுகள்... முக பாவங்கள்... கொண்ட டாக்கிகள் தேவையா இல்லையா...?’

  என்று நாடு முழுவதிலும் பட்டி மன்றங்கள் நடந்தன.

  எல்லிஸ் ஆர்.டங்கன் முந்திக் கொண்டார். தனது ‘சூர்ய புத்திரி’ படத்தில் டி.ஆர். ராஜகுமாரியைத் தொடர்ந்து நாயகியாக்கி, அவரது ‘திடீர் புகழில்’ நல்ல லாபம் பார்த்தார்.

  சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் இரு படங்களில் ஒப்பந்தம் செய்தது. 1. சதி சுகன்யா. 2. மனோன்மணி

  மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி. ஆர். சுந்தரம். தனது நிறுவனத்தில் கலைஞர்களில் யார் ஒழுங்கீனமாக நடந்தாலும், கட்டி வைத்து சவுக்கால் அடிக்கும் ஆளுமை மிக்கவர்.

  டி.ஆர். சுந்தரத்தின் கீழ் பணியாற்றியவர் எம்.ஏ. வேணு. பின்னாளில் சிவாஜி, என்.டி.ஆர்.- பத்மினி நடித்த ‘சம்பூர்ண இராமாயணம்’ தயாரித்தவர். தனது எம்.ஏ.வி. பிக்சர்ஸில் முக்தா சீனிவாசனை இயக்குநராக ’முதலாளி’ படம் மூலம் அறிமுகப்படுத்தியவர்.

  டி.ஆர். ராஜகுமாரி குறித்து எம்.ஏ. வேணு-

  ‘சதி சுகன்யா’ அவுட்டோர் ஷூட்டிங் தொட்டியத்தில் காவேரி கரையில் நடைபெற்றது. கவர்ச்சியான கச்சைகள் அணிந்து முழு மேக் அப்பில் டி.ஆர். ராஜகுமாரி வருவார்.

  யாருக்கும் எவ்விதமான தொல்லையும் தராதவர். மிகப் பிரபலமாக இருந்தாலும் எல்லாருடனும் பண்புடன் பழகுவார்.

  அது வேண்டும் இது வேண்டும் என்றெல்லாம் தயாரிப்பு நிர்வாகிகளைத் தொந்தரவு கொடுக்க மாட்டார். தண்ணீர் டம்ளர்களைக் கூட வீட்டிலிருந்து தருவித்து வருவார்.

  கம்பெனி தரும் டிபன் மற்றும் சாப்பாட்டை எதிர்பார்க்காமல், சொந்த சமையற்காரரை வைத்து வித விதமான சிற்றுண்டி, மற்றும் மதிய உணவு வகைகளைச் செய்து, பெரிய பெரிய கேரியர்களில் தன்னோடே எடுத்து வருவார்.

  ஏதாவது ஸ்பெஷல் அயிட்டங்கள் கொண்டு வந்தால் யூனிட் முழுமைக்கும் அதனைப் பரிமாறச் சொல்வார்.

  ஒருநாள் காமிராமேனுடன் டி.ஆர்.ராஜகுமாரி, தனது சாப்பாட்டைப் பகிர்ந்து கொண்டார்.

  நான் விளையாட்டாக ஒளிப்பதிவாளரிடம்,

  ‘ என்னய்யா... ஹீரோயின் உங்களுக்கு மட்டும்தான் வீட்டுப் பதார்த்தங்களை சப்ளை செய்வாரா...?

  டி.ஆர். ராஜகுமாரி உங்களை காக்கா பிடிக்கிறார் போலிருக்கிறது... என்றேன்.

  கதை வசனகர்த்தா சாரி, முதலாளியிடம் உடனடியாக அதை வத்தி வைத்து விட்டார்.

  காவிரி நதியில் விளையாடியவாறே முதலாளி டி.ஆர். எஸ். என்னிடம்,

  ‘டேய் வேணு... என்னடா சொன்னாய் டி.ஆர்.ராஜகுமாரியை... என்றவர், கரையோரம் நீளமாக வளர்ந்திருந்த கொடிக் கம்பைப் பிடுங்கி அடி அடியென அடித்து என்னை வெளுத்து வாங்கினார்.’

  -------------

  பல்வேறு பெருமைகளின் கலங்கரை விளக்கம் ‘மனோன்மணி!’

  ‘ பி.யூ. சின்னப்பா - டி.ஆர். ராஜகுமாரி’ இணைந்த முதல் படம். தமிழ்நாட்டுக்குத் தனியார் தொலைக்காட்சிகள் வரும் வரை டூரிங் டாக்கீஸ்களில் இடைவிடாமல் ஓடியது.

  லட்சங்களைத் தாண்டித் தமிழில் மிக அதிக பொருட்செலவில் தயாரான முதல் பிரம்மாண்டச் சித்திரம்!

  ‘லார்டு லிட்டன்’ எழுதிய ரகசிய வழி (‘சீக்ரெட் வே’) பேராசிரியர் சுந்தரம் பிள்ளையால் ‘மனோன்மணி’ என்று தழுவப்பட்டது.

  டி.ஆர். ராஜகுமாரி - பாண்டிய மண்டலத்தின் இளவரசி மனோன்மணி. பி.யூ. சின்னப்பா - நாயகியின் சொப்பனத்தில் தோன்றிய காதலன் - ‘சேர மன்னன் புருஷோத்தமன்’. இருவரும் கனவிலேயே காதலிக்கும் புதுமைக் கதை!

  வில்லன் டி.எஸ். பாலையா - பாண்டிய மந்திரி குடிலன்.

  டி.எஸ். பாலையாவால் ஏற்படும் இடையூறுகளைக் கடந்து பி.யூ. சின்னப்பாவும்- டி.ஆர். ராஜகுமாரியும் கை பிடிப்பது க்ளைமாக்ஸ். மனோன்மணியை மிக்க கவனத்துடன் டி.ஆர். சுந்தரமே இயக்கினார்.

  1942 நவம்பர் 11- தீபாவளி தினத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மனோன்மணி.

  trr.jpg 

  ‘கண்டேன் கண்டேன் என் காதல் கனியைக் கண்டேன்’, ‘மோகன மாமதனா’,

  ‘வானமுதே மான் விழியே உனைக் காண்பேனோ’, ‘உன்றனுக்கோர் இணையாவோர் உலகில் இல்லை’

  என்றெல்லாம் டி.ஆர். ராஜகுமாரி- பி.யூ. சின்னப்பா பாடிய காதல் கீதங்கள் தென்னாடெங்கும் தேன்மழை பொழிந்தன.

  மனோன்மணியின் வரலாறு காணாத வசூலால் ‘தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி’ என்று டி.ஆர். ராஜகுமாரிக்குக் கீரிடம் சூட்டினார்கள் ரசிகர்கள் !

  டி.ஆர். ராஜகுமாரியுடன் இணைந்து நடித்து பி.யூ. சின்னப்பா அடைந்த புகழின் சிகரத்தை, தாமும் கடக்க வேண்டும் என்று எம்.கே. தியாகராஜ பாகவதரும் விரும்பினார்.

  அவரது ஆணையின் பேரில் கோவை பட்சிராஜா ஸ்டுடியோ, டி.ஆர். ராஜகுமாரியைத் தேடிப் பட்டணம் வந்தது.

  டி.ஆர். ராஜகுமாரி பதம் பிடித்து ஆட, எம்.கே. தியாகராஜ பாகவதரின் ‘சிவகவி’ உருவானது. பிரபல இயக்குநர் ராஜா சாண்டோவை நீக்கி விட்டு, பட்சி ராஜா முதலாளி ஸ்ரீராமுலு நாயுடுவே ஆர்வத்துடன் முதன் முதலாக சிவகவியை டைரக்டு செய்தார்.

  டி.ஆர். ராஜகுமாரியை வர்ணித்து இரு பாடல்களைப் பாடினார் ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர்.

  1. ‘வதனமே சந்திர பிம்பமோ... மலர்ந்த சரோஜமோ... ’ என்றைக்குக் கேட்டாலும் தித்திக்கும்.

  2. ‘கவலையைத் தீர்ப்பது நாட்டியக்கலையே... கணிகையர் கண்களே மதன் விடும் கணையே’

  என்ற ‘நாட்டக்குறிஞ்சி’ ராகப் பாடலும் சூப்பர் ஹிட் ஆனது.

  சிவகவியின் மகோன்னத வெற்றி மேலும் டி.ஆர்.ராஜகுமாரியின் மவுஸைக் கூட்டியது.

  டி.ஆர்.ராஜகுமாரியால் தாமும் பெருத்த செல்வம் பெற வேண்டும் என்று ஜூபிடரும் துடிதுடித்தது.

  1943 ஜூலையில் பி.யூ. சின்னப்பா - டி.ஆர். ராஜகுமாரி ஜோடி நடிக்க ‘குபேர குசலா’ பக்திச் சித்திரத்தை வெளியிட்டது.

  ஆர். எஸ். மணி ‘குபேர குசலா’ படத்தை இயக்கினார்.

  குபேர குசலாவில் பி.யூ. சின்னப்பாவும் பாகவதருக்குப் போட்டியாக, டி.ஆர். ராஜகுமாரியைப் போற்றித் தன் பங்குக்குக் கம்பீரக் குரலில்

  ‘நடையலங்காரம் கண்டேன்!

  அன்னப்பேடையும் பின்னடையும்... பொற்கொடி இவள் மலரடி

  நடையலங்காரம் நளின சிங்காரம்’ என்று பாடினார்.

  ‘ராஜகுமாரியின் நாட்டியம் வெகு அழகு. நாயகியின் நடிப்பிலும் நல்ல ‘நகாஸ்’ என்று விசிறிகளின் அபரிதமான ஆதரவு கிடைத்தது. ஜூபிடருக்கும் அபரிதமான ஐஸ்வர்யம்!

   

  (தொடரும்)


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp