Enable Javscript for better performance
தேவிகா 8. லா பாயிண்ட்...- Dinamani

சுடச்சுட

  


  சிவந்த நிறத்துடன் ஒல்லியாகத் திரையில் மின்னத் தொடங்கியவர் தேவிகா. முதுமையில் பொலிவிழந்து கறுத்து,  காலம் கொடுத்த காயங்களால் கடைசியில் ‘சொர்ணாக்கா’ ரேஞ்சுக்கு மாறிப் போனார்!

  தேவிகாவின் நேற்றைய நினைவுத் தூறல்கள் உங்களுக்காக-

  ‘அப்பா எலட்ரிக்கல் இன்ஜினியர். எங்க சித்தப்பா வாசுதேவ நாயுடு. பார் அட் லா படித்தவர். 1940ல் சென்னை நகர மேயராக பெரும் செல்வாக்குடன் வாழ்ந்தவர். அத்தகையப் பெருமையும் பாரம்பரியமும் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவள் நான்.  

  சினிமாவில் நடிக்கும் ஆசை எப்படி எனக்கு வரும்?

  ஏழைகளுக்கு இலவச வைத்தியம் செய்யற டாக்டரா வரணும். அல்லது நியாயம் கிடைக்காத நலிவுற்ற ஜனங்களுக்காக வாதாடற, இலவச வக்கீலாகணும்ங்கிற சிந்தனை எனக்குள்ள வளர்ந்தது.

  சின்ன வயசிலேயே நான் ரொம்ப முசுடு. புருவத்தைக் கூட எப்பவும் சுருக்கியே வைத்திருப்பேன். ஸ்கூல்ல யாரோடயும் சேர்ந்து பழகினது இல்ல. தனியாவே இருப்பேன். சிநேகிதிகளே கிடையாது.

  நினைவு தெரிஞ்ச  நாள் முதலா அநியாயத்தைக் கண்டு பொறுக்க மாட்டேன்.

  வைக்கோல் போர்ல கன்னுக்குட்டி செஞ்சு, அதை வெச்சு மாட்டை ஏமாத்திப் பால் கறக்கற மனுஷன் என்னை ரொம்ப பாதிச்சிருக்கான். இதென்ன அக்கிரமம்னு உள்ளுக்குள்ளயே குமுறியிருக்கேன்.

  யார் கிட்டே பேசினாலும் லா பாயிண்ட் பேசுவேன்.

  என்னோட லா பாயிண்ட் சுபாவத்தைப் பார்த்து எனக்கு டியூஷன் எடுக்கிற டீச்சரெல்லாம் அதிர்ந்து போயிருக்காங்க. எங்கிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்தைப் பட்டிருக்காங்க.

  ஒரு நாள் அப்பா எங்கிட்ட, ‘என்ன ராணி உன் சித்தப்பா போல அட்வகேட் ஆகப் போறியா’ ன்னு கூட கேட்டிருக்கார்.

  டாக்டருக்கா...? வக்கீலுக்கா...? எதுக்குப் படிக்கலாம்னு முடிவு பண்றதுக்குள்ள குடும்பத்துல சொத்துப் பிரச்சனை வந்துடுச்சி. பங்காளிங்க தகராறுல அப்பா சம்பாதிச்சு வாங்கின நிலங்களை வித்து சாப்பிடற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

  நான் நடிக்க ஆரம்பித்து இரண்டு மூன்று படங்கள் வரையில் சினிமா எனக்கு ஒரு புதிராகத்தான் இருந்தது. முதலாளி வெற்றி பெறாவிட்டால் பழையபடி பள்ளிக்கே திரும்பி விடுவதென்று முடிவு செய்தேன்.

  கடைக்குப் போய்ப் பாடப் புத்தகங்களை வாங்கி வந்தேன். எனக்கு ட்யூஷன் சொல்லித் தர ஒரு மாஸ்டரையும் ஏற்பாடு செய்து தயாராக வைத்திருந்தேன்.

  முதலாளி படத்துக்குக் கிடைத்த அமோக வரவேற்பு என்னை அடியோடு மாற்றியது. படிப்பாவது புத்தகங்களாவது...

  எல்லாவற்றையும் கட்டி பரணில் ஏற்றி வைத்தேன். எனக்குப் பாடம் சொல்லித் தரக் காத்திருந்த ஆசிரியர் பெருந்தகைக்கும் பெரிய கும்பிடாகப் போட்டு வழி அனுப்பினேன்.

  ஆனாலும் என் மனத்தின் ஒரு மூலையில் படித்துப் பட்டம் பெறவில்லையே என்கிற குறை நிரம்பி வழிந்தது.

  படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நாள்களில் வீட்டில் தனியாக இருக்கையில் புத்தகங்களே எனக்குத் துணை. என்னுடையப் புத்தகப் பைத்தியம் பள்ளிக் கூடத்திலிருந்து தொடங்கிய ஒன்று.

  புத்தரைப் பற்றியும் அக்பரைக் குறித்தும் வாசிக்கும் வேளையில் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்துக்கே சென்று மானசீகமாகக் கற்பனைகளில் மூழ்கி எழுவேன்.

  அத்தகைய கற்பனா சக்தி சினிமா நடிகையான எனக்குக் கை கொடுக்கிறது.

  எனக்குத் தரப்படும் வேஷங்களை முன் கூட்டியே இருதயத்தில் இருத்தி, இந்தக் கதாபாத்திரத்தைத் திரையில் இப்படிச் சித்தரிக்க வேண்டும், இன்ன விதத்தில் அலங்கரித்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் எண்ணிச் சிறப்பாக நடிக்க உதவுகிறது.

  நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தைத் தியேட்டரில் ஜனங்களோடு அமர்ந்து பார்த்தேன். என்னையும் அறியாமல் அநேக இடங்களில் அழுது தீர்த்தேன்.   

  அப்பா இருக்கும் வரை என் சினிமா ஒண்ணு கூட பார்த்ததில்லை. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் என் நடிப்பை அப்பா பார்க்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டேன். அதனால் அப்பாவிடம்,

  ‘உங்களுக்காக ஒரு ஸ்பெஷல் ஷோ போடட்டுமான்னு’ கேட்டேன்.

  ‘அப்பாவோ சாதாரணமா  அதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல’ என்றார். விடாம நான் வற்புறுத்தினேன்.  ‘அடப்போம்மா... வர்ற சினிமாக்கள் எல்லாம் ஒண்ணு கல்யாணத்துல முடியும். இல்லேன்னா ஹீரோ- ஹீரோயின் யாராச்சும் செத்துப் போறதா முடிப்பாங்க’ என்று கூறி, என் ஆர்வத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். என் படம் ஒன்றைக் கூட அப்பா பார்க்கவேயில்லை என்கிற வருத்தம் எனக்குள் எப்போதும் உண்டு.

  என் தாயார்! அவரைப் பற்றி நான் ஒன்றுமே சொல்ல மாட்டேன். வீட்டு வேலையே அவருக்குச் சரியாக இருக்கும். படம் பார்க்க நேரம் ஏது? நான் பிரபல நடிகையாகிக் கஷ்டப்பட்டு சம்பாதித்து நாங்கள் இழந்த செல்வத்தையெல்லாம் மீட்டேன்.

  இத்தனைப் புகழ் பெற்ற நடிகையாக இருந்தும் பிளாட்டினம், தங்கம், வைரம், வைடூரியம், வெள்ளி எதிலும் நகை செய்து அழகாக அணிந்து கொள்ளத் தோன்றாது.

  அவ்வளவு ஏன்? கண்ணைப் பறிக்கிற மாதிரி பகட்டாகக் கூட புடவை உடுத்த விரும்பியதில்லை. அப்படி நான் பற்றற்றுப் போனதற்குக் காரணம் என் தாயார்.

  நான் சத்தியத்துக்கு மிகவும் மதிப்பு கொடுப்பவள். 1965ல் எனக்கும்  அம்மாவுக்கும் சண்டை வந்து விட்டது. என் நகைகளையெல்லாம் கழற்றி வீசி விட்டு, இனி நான் அவற்றை மறுபடியும் அணியவே மாட்டேன் என்று சாமி மீது சத்தியம் செய்தேன்.

  அதிலிருந்து இன்று வரை ஒரு பொட்டு நகை கூட நான் போட்டுக் கொள்வது கிடையாது.

  தாலியைக் கூடக் கழுத்தில் அணியாமல் கையில் கட்டியிருந்தேன். என்னைப் பார்த்தவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள்.

  கோயிலுக்குப் போய் பூஜைகள் செய்து விட்டு தாலியை மட்டும் இப்போது அணிந்து இருக்கிறேன்.

  கனகா சின்ன வயசுல கொஞ்சம் பலவீனமா இருந்தா. அதுக்கு முழுக் காரணமும் நானே.

  ஒரு பெண் தாய்மை அடைந்ததும் ஆரோக்யமான உணவு வகைகளைப் பல வீடுகளில் பட்டியல் போட்டு கொடுத்திருவாங்க. என் விஷயமே தனி.

  கர்ப்ப காலத்துலயும் பிஸியா நடிக்க வேண்டி வந்தது. ஒழுங்கா சாப்பிட நேரம் கிடையாது. ஒரு கோழித் துண்டு, கொஞ்சம் காபின்னு வாய்க்குள்ளத்  தள்ளிட்டு ஷூட்டிங் கிளம்பிடுவேன்.

  வயிறு காட்டிக் கொடுத்து உடம்பு உப்பி, படங்களோட கண்டியூனிடி பாதிக்கப்படக் கூடாதுன்னு டயட்ல வேற இருந்தேன். அது கர்ப்பத்துலயிருந்த சிசுவை பாதிச்சு குழந்தை வீக்கா பொறந்துடுச்சு.

  என் கடந்த கால நினைவுகள் தரும் பாடம், பணத்தையே யாரும் நம்பிக் கொண்டு இருக்கக் கூடாது. செல்வம் போய் விட்டால் பிறகு சீமான்களால் வாழவே முடியாது.

  என்னைப் போன்றக் கலைஞர்கள் கற்றத் தொழிலை மட்டும் நம்பி இருக்க வேண்டும். அதுவே வாழ்க்கையில் என்றும் கை கொடுக்கும். என் வாழ்க்கை முழுவதும் முயற்சிகளாகவே இருந்திருக்கிறது. அதுவே எனக்குப் பலன் தந்தது.’ -தேவிகா.
  -----------------
  வெகுளிப்பெண் படத்துக்குப் பின்னர் தேவிகா சொந்தப்படம் எதுவும் தயாரிக்கவுமில்லை. அவரது கணவர் தேவதாஸ் இயக்கவும் இல்லை. இருவரும் பிரிந்து விட்டனர்.   

  ஏனைய கலையரசிகளின் மண வாழ்வு போலவே தேவிகாவின் கல்யாண வசந்தமும் சீக்கிரத்திலேயே முறிந்தது. தேவதாஸ் உடனான தாம்பத்ய வாழ்வின் ஒரே பலன் தேவிகா பெற்றெடுத்த கனகா.

  கனகாவுக்கு அடித்த அதிர்ஷ்டமும் தொடர் வெற்றிகளும்  வேறு ஹீரோயின்களால் கற்பனை செய்து பார்க்க முடியாதது. 1989 கோடையில் கங்கை அமரனின் கரகாட்டக்காரன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

  வருடக் கணக்கில் ஓடி கரகாட்டக்காரன் படைத்த சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அம்மா என்று பேச ஆரம்பித்தத் தமிழகத்தின் மழலைப் பட்டாளம் அடுத்து உச்சரித்த சொற்கள் ‘மாங்குயிலே பூங்குயிலே... ’

  உலகத் தமிழர்களின் நிரந்தரப் பொழுது போக்குப் பெட்டகமாகக்  கரகாட்டக்காரனுக்குத் தனி இடம் என்றும் உண்டு.

  மிகக் குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் கனகாவின் இருப்பு கல்லாபெட்டிகளை நிரப்பியது.

  கமல்  தவிர  நடிகர் திலகத்துடன் ‘முதல் குரல்’ உள்ளிட்ட அநேக சினிமாக்களில், சூப்பர் ஸ்டார் ரஜினி, மம்முட்டி, மோகன்லால் முதலிய அநேக நட்சத்திரங்களும் கனகாவுடன் ஜோடி சேர்ந்தார்கள்.

  ஏவி.எம்., சிவாஜி பிலிம்ஸ், முக்தா பிலிம்ஸ், லட்சுமி ப்ரொடக்ஷன்ஸ் போன்ற பிரபல நிறுவனங்கள் கனகா நாயகியாக நடிக்கப் படம் தயாரித்தன.

  டீரிம் கேர்ள் ஆகி ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் கனகா பற்றிய பரபரப்பு சற்றே தணிந்தது. அத்தகைய சூழலில் பிலிமாலயா ஜனவரி 93 இதழில் கனகாவின் நேர் காணல் வெளியானது.

  ‘இப்போதெல்லாம் உங்கள் படங்கள் நிறைய ரிலிசாவதில்லையே... ஏன்? ’ஓர் இடைவெளி விழுந்த மாதிரி? ’

  ‘நான் எப்பொழுதும் போலவே பிஸியாகவே இருக்கிறேன். ஆனால் நடித்து முடித்த படங்கள் தொடர்ச்சியாக வருவதில்லை. இப்பக் கூட நான் நடிச்ச  சாமுண்டி நல்லாத்தானே போகுது. ’

  ‘உங்களுக்குப் பின் வந்த நடிகையெரல்லாம் கையில் நிறைய படங்களுடன் இருக்கும் போது, உங்களிடம் மட்டும் அவ்வளவு படங்கள் இல்லையே ஏன்? ’

  எத்தனைப் படம் வருதுங்கிறது எனக்கு முக்கியமில்ல. என்ன மாதிரி நடிச்சிருக்கோம், எப்படி படம் ஹிட்டாகுதுங்கறது தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

  வருஷத்துக்கு ஆறு படம் நடிச்சாப் போதும்னு நினைக்கிறேன். ஒரு படத்துக்குக் கால்ஷீட் கொடுத்துட்டா எந்தக் காலத்திலிருந்தும் அதிலிருந்து இன்னொரு கம்பெனிக்கு இங்கே எட்டு நாள் அங்கே ரெண்டு நாள்னு பிய்ச்சிக் கொடுக்கிற பழக்கம் என்னிடம் கிடையாது.

  ‘நீங்கள் நடித்ததில் பெரும்பாலானவை வெற்றிப்படங்கள். ஆனால் ஏன் உங்களால் நம்பர் ஒன் அந்தஸ்துக்குச் செல்ல முடியவில்லை.? ’

  ‘நான் நடிச்சதில் கிட்டத்தட்ட 80% ஹிட்டானவை. கரகாட்டக்காரன் மட்டுமல்ல. மலையாளத்தில் நான் அறிமுகமான ‘காட் ஃபாதர்’ சினிமாவும் ஒரு வருஷம் ஓடியது. இந்த  மாதிரி சூப்பர் டூப்பர் சக்ஸஸ் வேற யாருக்கும் உண்டா? குறுகிய காலத்துல இவ்வளவு ஹிட்ஸ் கொடுத்த ஆர்ட்டிஸ்ட் நானாத்தான் இருக்க முடியும்.

  நம்பர் ஒன் என்றால் என்ன?  அதன் இலக்கணம் என்னன்னு எனக்குப் புரியல. அதிகப்படங்கள்ள நடிக்கிறதா?  சூப்பர் ஹிட்ஸ் மட்டும் அதிகமா கொடுக்கிறதா? ஆடியன்ஸ் மனசுல நிக்கிற மாதிரி நல்ல ரோல்ல மாத்திரம் நடிக்கிறதா? எனக்கு விளங்கல.

  இந்த நம்பர் ஒன் வாதத்தில் எனக்கு நம்பிக்கையுமில்லை. ஆர்வமுமில்லை. ’

  ‘நீங்க எதிர்பார்த்த அளவுக்கு வளரவில்லை. அதற்கு உங்கள் அம்மா தேவிகாவின் கெடுபிடிகளும் ஒரு காரணம் என்று சொல்கிறார்களே...?

  ‘எந்தத் தாயும் தன் மகள் முன்னுக்கு வரக் கூடாதுன்னு நினைக்க மாட்டாங்க. எனக்கு என் அம்மாவை விட்டா வெல்விஷர் யாருங்க இருக்காங்க?

  என் அம்மா எங்கிட்ட காட்டுற அக்கறையையும் அன்பையும் மத்தவங்க எப்படித்  தவறா நினைக்கலாம்? ’-கனகா.
  ---------------
  ஹீரோ - காமெடியன் என்று கலைஞர்களுக்கிடையே  அந்தஸ்த்தில் பேதம் காணத் தெரியாதவர் தேவிகா. தனது நட்சத்திர மகளை விவேக் ஜோடியாக ராம. நாராயணனின் இயக்கத்தில் நடிக்க வைத்தார்.

  அதற்குப் பின்னர் கனகாவை முன்னணி நாயகர்களுடன் காண முடியாமலே போனது.

  ஓர் உதாரணம்.

  இயக்குநர் ஸ்ரீதரின் நெருங்கிய உறவினர் மற்றும்  உதவியாளர் டைரக்டர் சி.வி. ராஜேந்திரன். தேவிகாவை நன்கு அறிந்தவர்.

  மோகன்லால்-கனகா ஜோடியாக நடித்த மலையாள சினிமா ‘காலனி’ கேரளத்தில் வெற்றிகரமாக ஓடியது.

  ‘சங்கிலி’ மூலம் பிரபுவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் சி.வி. ராஜேந்திரன். அவரது தயாரிப்பில் பிரபு நாயகனாக நடிக்க ‘காலனி’- தமிழில் ‘வியட்னாம் காலனி’யாக ரிமேக் ஆனது.

  சிவாஜி - தேவிகா ஜோடி போல அவர்களது வாரிசுகளான பிரபு- கனகா இணைந்து நடித்த கும்பக்கரை தங்கய்யா, தாலாட்டு கேக்குதம்மா, பெரிய குடும்பம் ஆகிய மூன்று படங்களும் 100 நாள்களைக் கடந்து ஓடின. அப்படியிருந்தும் வியட்னாம் காலனி தமிழ்ப்படத்தில் நாயகியாக நடித்தவர் வினிதா.

  இரண்டாம் வரிசை நடிகர்களுடன் இணைந்து கனகா நடித்த, சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றிகரமாக ஓடின. இருந்தும் மீண்டும் அவரை கனவுக்கன்னியாக நோக்க டவுஸர்கள் தயாரில்லை என்றானது.

  படத்துக்குப் படம் மாறுபட்ட வேடங்களை ஏற்று  நடிக்காமல், பாவாடை தாவணியுடன் கிராமத்துப் பெண்ணாகவே கனகா அதிகம் நடித்தது, அவரது மார்க்கெட் விழுந்ததற்கு மிக முக்கிய காரணம் என்றனர் சினிமா நிருபர்கள்.

  கனகாவுக்காகப் பட அதிபர்களிடம் தேவிகா விதித்ததாகச் சொல்லப்பட்ட சில நிபந்தனைகள்-

  1. கதை சரியில்லாம எவ்வளவோ படங்கள் வருது. கனகா செய்யாத கேரக்டரா வரணும்.
  2. அடுத்தவங்க டேட்ஸ்ல கிளாஷ் ஆகக்கூடாது.
  3. இந்த மாசம் பூஜை இன்னும் பதினஞ்சு நாள்ல படத்தை ஆரம்பிச்சுடுவோம்னு சொல்லிட்டு வர்ற புது கம்பெனிகளை நான் கிட்டயே சேர்க்கறதில்ல.
  4. கண்ட கண்ட ரோல்ல நடிச்சு கனகா தன் பெயரை கெடுத்துக்கக் கூடாது.

  கனகாவின் கால்ஷீட் தொடங்கி சகல விஷயங்களிலும், தேவிகாவின் தலையீடு  நிலவியதாகப் பட அதிபர்களால் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது.

  ‘என் பொண்ணு மேலே உள்ள அக்கறையில, ஏற்கனவே சினிமா ஃபீல்டுல ஆர்ட்டிஸ்டா இருந்த அனுபவத்தில,  நான் ஏனோ தானோன்னு இருக்காம கண்ணும் கருத்துமா கூடவே இருந்து,  கண்டிப்பா கனகாவை வழி நடத்தறதை கெடுபிடிகள்னு சொன்னா நான் என்ன சொல்றது? ’- தேவிகா.

  கமல்- ரஜினி  ஜோடியாக நடிக்க  குஷ்பூ-கவுதமி இருவரும், வரிந்து கட்டிக் கொண்டு போட்டி போட்டனர். அதனால் கனகா பல நல்ல வாய்ப்புகளைப் பறி கொடுத்ததாக தேவிகா தனக்கு நெருக்கமானவர்களிடம் குமுறினார்.

  கனகா இழந்த மார்க்கெட்டை திரும்பப் பெற முடியவில்லை. ஒரே செல்ல மகளின் எதிர்காலம் குறித்த கவலை தேவிகாவைத் தின்று தீர்த்தது.

  தேவிகா கத்தோலிக்க கிருத்தவ மதத்தைச் சார்ந்தவர் என்று சினிமா வசனகர்த்தா ஆரூர்தாஸ் குறிப்பிட்டுள்ளார். மகளுக்காகக் கடைசியில் மயிலாப்பூர் கோலவிழி அம்மனைச் சரண் அடைந்தார்.

  இயற்கை எய்துவது என்பது எல்லாருக்குமான பொதுவான விதி. தள்ளாமை வருவதற்கு முன்பாகவே தேவிகா 2002 மே இரண்டாம் தேதி ஆண்டவரது நிழலில் இளைப்பாறினார்.

  அவரது அகால மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்னொரு தேவிகா இனி இல்லை என்று உளமாற வருந்தினர் பொற்காலத் தமிழ் சினிமா ரசிகர்கள்.

  ‘கள்ள மலர்ச் சிரிப்பிலே’ என்கிறப்  பாடலில் நடித்தவரின் உள்ளத்தில் எள் அளவும் கள்ளம் இல்லை என்பதைக்  கடவுள் மாத்திரமே அறிவார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai