Enable Javscript for better performance
குவியத்தின் எதிரிகள் - 13. உறுதிப்படுத்தும் சாய்வு- Dinamani

சுடச்சுட

  

  குவியத்தின் எதிரிகள் - 13. உறுதிப்படுத்தும் சாய்வு

  By சுதாகர் கஸ்தூரி.  |   Published on : 24th March 2018 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  டாக்டர் மணிவண்ணன், ஏழு குழந்தைகளில் நாலாவதாகப் பிறந்தவர். தந்தை, கை வண்டி இழுத்தார். தாய், பல வீடுகளில் வேலைக்காரியாக வேலை பார்த்தவர். பெங்களூரின் புறநகர்ப் பகுதியில் வாழ்ந்த தமிழ்க் குடும்பம் அவர்களது.

  ஒரு கலவரத்தில் வீடு எரிந்துபோக, தமிழ்நாட்டுக்குக் குடிபெயர்ந்தார்கள். தந்தைக்கு ஒரு விபத்தில் இடது கை போனது. தந்தையோடு வண்டிக்குள் நுழைந்து அவரும், அவர் சகோதரரும் சேர்ந்து வண்டியிழுத்திருக்கிறார்கள். மணிவண்ணனுக்குப் படிப்பு எளிதில் வரவில்லை. ‘நீ வண்டி தள்ளத்தான் லாயக்கு’ என்ற சொற்களை அனுதினமும் பள்ளியில் கேட்டிருக்கிறார் அவர்.

  வண்டி இழு என்று தந்தை சொன்னபோது, மாலையில் வண்டி இழுத்து, ரெண்டு பைசாவுக்கு நாலு குடம் என்று தண்ணீர் இறைத்துக் கொடுத்து, காலையில் பள்ளிக்குப்போனவர், மெல்லமெல்ல உயர்ந்து, ஓட்டலில் வேலைபார்த்து, கிடைத்த பணத்தில் கல்லூரியில் சேர்ந்தார். அதன்பின் அரசு வேலை, முதுகலைப் பட்டம், வேலை ராஜினாமா, முனைவர் பட்டம், வெளிநாடு.

  இதெல்லாம் அவரது நண்பர் ஒருவர் சொல்லிக் கேட்டது. ஒருமுறை மணிவண்ணனிடம் பேசும்போது, ‘ஆமா, வண்டி இழுத்தேன், என்ன இப்போ?’ என்றார் இயல்பாக. ‘அது அன்னிக்கு, இது இன்னிக்கு. நாளைக்கு என்னதோ அப்படி இருக்கும். நம்ம வேலையைக் கவனிப்போம்.

  ‘ஆசிரியர் என்னை ஒரு முட்டாள்னு சொன்னார். அன்னிக்கு அது சரிதான். அன்னிக்கு நான் முட்டாப்பயதான். இன்னிக்கு அவர் ‘உன்னைப்பாத்தா பெருமையா இருக்கு’ன்னா, அது இன்னிக்கான உண்மை. இதுல உணர்ச்சிவசப்பட என்ன இருக்கு?’.

  அவரது வாழ்க்கையை அப்படியே எழுதினால் பலருக்கு ஊக்குவிப்பதாக இருக்கும் என்றேன். அவர் மறுத்தார். ‘இதெல்லாம் ஒரு விஷயம்னு பேசிகிட்டு? எல்லாம் நாம நினைக்கறதுல இருக்கு. அவங்க சொன்ன திட்டும், வாழ்த்தும் எனக்கு உள்ளயே போகலை. நான் என்ன செய்யணும்னு நினைச்சேனோ, அதுல குறியா இருந்தேன். அதுல உவப்பா இருந்தேன். கிடைச்சதும் மகிழ்ந்து நின்றுவிடவில்லை. அடுத்த உவப்பு எதுன்னு முதல்லயே தீர்மானிச்சிருந்தேன். அதுல என் கவனத்தையும், சிந்திப்பையும் செலுத்தினேன். அவ்வளவுதான்’.

  நேரா யோசி என்பதை இதைவிட பொட்டில் அறைந்தாற்போல் எனக்கு இதுவரை யாரும் சொல்லிவிடவில்லை.

  எவர் சொல்வதும், நமது நம்பிக்கைக்குள் நுழைந்துவிட்டால் அப்படியே எடுத்துக்கொண்டுவிடுகிறோம். நமது மனச்சித்திரங்களை அந்த நிறங்கள் குலைத்துவிடுகின்றன. Ice Age படம் பார்த்தவர்கள், அந்தப் பெண் சடையானை எல்லி, தன்னுடன் வளர்ந்த possum விலங்குகள்போல தானும் மரக்கிளையிலிருந்து தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும். ‘நீ ஒரு சடையானை, எல்லி’ என்பதை ஹீரோ யானை வலியுறுத்தியும் அதனால் நம்ப முடியாது. ‘பாரு, என்னால் எளிதாகத் தலைகீழாகத் தொங்கமுடியும்’ என்று எல்லி சொல்லும். இது உறுதிப்படுத்தும் சாய்வு. Confirmation bias.

  நாம் ஒன்றை சிந்திக்கிறோம். அதற்கு எதிராகவோ, சாதகமாவோ ஒரு வலிய கருத்து முன்வைக்கப்படுமாயின், அதன் தாக்கம் தருக்க அளவில் மட்டுமே இருக்கும்வரை, அதனைப் புரிந்துகொள்ள முயற்சி எடுப்பதில் தவறல்ல. அது உணர்ச்சியைத் தாக்குமாயின், தருக்கம்/விவாதத்தில் ஈடுபடாமல் விலகுவது நல்லது. எல்லோராலும், தருக்க அளவில் ஒரு பொருளைக் குறித்து விவாதிக்க முடியாது. தேவையும் இல்லை. குறிப்பாக, சமூக அரசியல் நிகழ்வுகளைக் குறித்து நம் கருத்துகள் சாய்வு தாக்கியதாகவே இருக்கும். அதனை எதிர்த்து ஒருவர் சொல்வாரானால், அதனை அதிகம் சிந்திக்காமல், எதிர்விவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இது இருவகையில் பயன்படும். ஒன்று, நமது சாய்வு நிலையை வெளிக்காட்டாது. இரண்டு, பிறரது சாய்வுநிலை நம்மைப் பாதிக்காது. இதனை, பிறரது மதம், சாதி, நிறம், பொதுவில் பழகும் பண்பு, நட்பு, நம்பகத்தன்மை, அறிவுத்திறன் என்பதைக் குறித்த நமது அனுமானமாகவும் கொள்ளலாம். இவை அனைத்தும் நம் உறுதிப்படுத்தும் சாய்வு சார்ந்தவைதாம்.

  இந்த உறுதிப்படுத்தல் மிக ஆழத்தில் செயல்படுகிறது; இருக்கும் பிறழ்வுகளிலேயே மிக மோசமானது இதுதான் என்கிறார் ரால்ஃப் டோப்லி. நமது கருத்தில் ஒரு கிருமியாக நுழைந்து, அக்கருத்து தேவைப்படும் ஒவ்வொரு நிகழ்விலும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் சாய்வு இது. அனிச்சை நிலையான பழக்கமாக, தருக்கத்தின் வெளிப்பாடாகத் தோன்றுவதால், இதனை ஒரு சாய்வாக நாம் அவதானிப்பது கடினம்.

  படம் ரால்ஃப் டோப்லி

  சிறுவயதில் திக்குவாய் பாதிப்பு இருந்த ஒருவர், இப்போது நண்பர்கள் மத்தியில் இயல்பாகப் பேசினாலும், சற்றே முக்கியமான விஷயத்தைப் பேசும்போது திக்கி நிற்பதைப் பார்க்கலாம். சிறுவயதில் பள்ளியில் பேசச் சொன்னபோது ஒரு டென்ஷனில் திக்கியவரை, ‘ஏன் திக்கறே? ஒழுங்கா பேச முடியாதா’ என்று திட்டிய டீச்சரின் சொல் ஆழப் பதிந்திருக்கும். ‘என்னால் முக்கியமான நேரத்தில் பேச முடியாது’ என்ற முடிவு உள்ளேற, அது, எப்போது முக்கியமான பேச்சிலும், திணறும்போது ‘சொன்னேன்ல? உன்னால திக்குவாயாத்தான் பேசமுடியும்’ என்று மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

  இதை எப்படித் தடுப்பது?

  பழைய பதிவுகளை மீண்டும் கண்டெடுத்தல். எதில் நாம் திணறுகிறோம்?, எது தடுக்கிறது? என்பதை நம் எண்ண ஓட்டத்தில் பிரக்ஞையுடன் கவனிக்க வேண்டும். நாளை பரீட்சை என்றால், ‘நமக்கு நல்ல மார்க் வராது, பெரிய வெற்றி வந்துவிடாது’ என்று இன்று தோன்றுமானால், அது உறுதிப்படுத்தும் சாய்வு. நேர்மறையான வார்த்தைகளை அடிக்கடி சொல்லிப்பார்த்து, சொல்வதை நம்புவது முதல்படி வெற்றியைத் தரும்.

  புதிதாக தவறான எண்ணங்கள் உள்ளே பதிவதைத் தடுப்பது. இதன் காரணிகள் ஊடகங்கள், செய்தி, உரையாடல், சமூக வலைத்தளங்கள். எதிர்மறையான கருத்துகளை வாசிக்காது விலகலாம். உரையாடல்கள், விவாதங்கள் வருமானால், நம்முள் அக்கருத்துகளை ஊன்றுமளவு கவனிப்பதைத் தடுக்க வேண்டும்.

  எதையும் ஒழுங்காகக் கவனிக்காது உரையாடுவது தவறானதுதான். ஆனால், எல்லாவற்றையும் உள்வாங்குவது நல்லதல்ல. கவனத்துடன் ஒரு விஷயத்தை அவதானிப்பது என்பதும், உள்வாங்கிக்கொள்வது என்பதும் வெவ்வேறானவை. உள்வாங்குவது உணர்வு, நம்பகத்தன்மை சார்ந்தது. கவனம் என்பது கவனிக்கப்படும் பொருளின் உண்மைத்தன்மை சார்ந்தது.

  சாய்வைக் கண்டுபிடிப்பதே ஒரு வெற்றிதான். நேராக யோசிப்பதன் பெருவெற்றி அது.

  (யோசிப்போம்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai